Headlines News :
முகப்பு » » நூற்றாண்டு காணும் பேராதனை பல்கலைக்கழக நூலகம் 1921 - 2021 - ஆர். மகேஸ்வரன்

நூற்றாண்டு காணும் பேராதனை பல்கலைக்கழக நூலகம் 1921 - 2021 - ஆர். மகேஸ்வரன்


பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூல் சேர்க்கைக்கு 100 வருடங்கள் ஆகின்றன. இவ் வருடம் இந்நூலகம் நூற்றாண்டினை கொண்டாடுகிறது. 

இதற்கான முதற் கட்டமாக நூலக பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியினை பல்கலைக்க்கழக மூதவை சபை அங்கீகரித்துள்ளது. நூலகக் கண்காட்சி, நூலக விஞ்ஞானத்துறையில் சர்வதேசக் கருத்தரங்கு, பல்கலைக்கழக ஆய்வடங்களை ஒருமுகப்படுத்திய  ஆய்வு நூல் வெளியீடு முதலியனன மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேராதனை நூலக நூற்றாண்டு வரலாறு சுவாரசியமானது. பல பட்டதாரிகள், கலாநிதிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உருவாகுவதற்கு இந்த நூலகம் காரணமாயிருந்துள்ளது. கிட்டத்தட்ட எட்டு லட்சம் நூல்களை கொண்ட இந்நூலகம் தற்போது பிரதான நூலகத்துடன் 8 கிளை நூலகங்களுடன் காணப்படுகிறது. கலைப்பீடத்திற்கும், முகாமைத்துவ பீடத்திற்கும், தொல்லியல், தமிழ், சிங்களம், சட்டம், மானிடவியல் பாடங்களை உள்ளடக்கியதாக நூல்களைக் கொண்டது பிரதான நூலகம். மருத்துவம், மிருகவைத்தியம், பல்மருத்துவம், விவசாயம், விஞ்ஞானம், இணைந்த சுகாதாரம், பொறியியல் ஆகிய ஏழு பீடங்களுக்கான நூலகங்களும் விவசாய பீடத்தின் இரண்டாவது நுலகமும் மகாஇழுப்பள்ளத்தில் அமைந்துள்ளது.

இனி இதன் நூற்றாண்டு வரலாற்றினை நோக்குவோம். ஆரம்பத்தில் பல்கலைக்கழக கல்லூரிக்கான இடமும் கட்டடமும் 1921இல் கொழும்பு ”ரெஜினா வலவ்வ” என்ற இடத்தில் வாங்கப்பட்டது. இக்கட்டடத்துக்கு கொலேஜ் ஹவுஸ் (College House)  என்ற பெயர் சூட்டப்பட்டு இங்கேயே பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பில் 1921 இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்போது குயின்ஸ் வீதியில் ” வில்லா வெனிசியா” (villa venezia) என்ற கட்டிடத்திலேயே நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் பல்கலைக்கழகத்தினை தோற்றுவிக்க பாடுபட்டவர்களுள் சேர். பொன் அருணாசலம், சேர் பொன் இராமநாதன், நீதிபதி அக்பார் மற்றும் ஜயதிலக்க, மார்க்ஸ், ஜேம்ஸ் பீரிஸ், டீ. ஆர் விஜயவர்தன. ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களது பெயரிலேயே பேராதனையில் மாணவர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுள் சேர். பொன்.அருணாசலத்தின் மகன் அருணாசலம் பத்பநாபா இளமையிலேயே இறந்து போக அவரது நூற்சேர்க்கையை சேர் பொன் இராமநாதன் நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தார். அந்நூல் தொகுதியைக் கொண்டே இந் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நூலகத்தின் இலக்கம் 1 தொடக்கம் 1401 வரையான நூல்கள் அருணாசலம் பத்பநாபா பயன்படுத்திய நூல்களாகும்.

இவரைத் தொடர்ந்து பேராசிரியர் எ. டப்ளியு. ஆர் டேவிட்ஸ் சின் நூற் சேர்க்கை, வண ரம்புக்வெல்ல சித்தாந்த தேரர் நூற் சேர்க்கை, ஆகியன நன்கொடையாக வழங்கப்பட்டன. வண. ரம்புக்வெல்ல சித்தாந்தவே முதல் சிங்கள, பாளி, சமஸ்கிருத நூல்களை வழங்கியுள்ளார். இதன் பின் வரலாற்று விரிவுரையாளர் வண. டி மெல் அவரது தந்தை ஹென்றி டி மெல் நினைவாக நூல் சேர்க்கையினை வழங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து பண்டித பட்டுவண்டுதேவ் ஞாபகார்த்த நூற் சேர்க்கையும் நன்றிக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்காலத்தில் இங்கு நூல்கள் மாணவர்களுக்கு இரவல் வழங்கப்பட்டதுடன் மீளக்கொடுக்க தாமதமானால் ஒரு நாளைக்கு அதற்காக 25சதம் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நூலக அங்கத்தவராவதற்கு ரூபா.10 அறவிடப்பட்டுள்ளது.

இதன் பின் 1942ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. (ordinance No 200/1942) இதன் பிரகாரம் ஆளுனரின் அனுமதியுடன் 01 ஜீலை 1942 இலங்கை பல்கலைக்கழகம் என பிரகடனப்படுத்தப்பட்டது. 1870ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி (medical college) மற்றும் 1921ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரி ஆகிய இரண்டையும் இணைத்தே யுனிவசிட்டி ஒப் சிலோன் – (இலங்கை பல்கலைக்கழகம்) ஆரம்பிக்கப்பட்டது. முதலில் லண்டன் பரீட்சைக்கே மாணவர்கள் தோற்றினர். பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது முதல் வருட மாணவர்களாக 150 பேர் பதிவு செய்து கற்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

முதலாவது அதிபராக ஆர். மார்ஸ் கடமையாற்றியுள்ளார். ஐந்து பேராசிரியர்கள் மூன்று விரிவுரையாளர்கள், நான்கு வருகைதரு விரிவுரையாளர்களுடனேயே இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு ”கொலேஜ் ஹவுஸ்” கட்டிடத்தில் ஒரு அறையிலேயே முதலில் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. முதல் வருடம் நூலகத்திற்காக ரூபா. 750 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்தே ”வில்லா வெனிசியா” என்ற இரண்டு மாடி கட்டிடத்திற்கு நூலகம் மாற்றப்பட்டு இயங்க ஆரம்பித்துள்ளது. 1921ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1942 வரை 580 பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். முதல் விடுதியாக (ஹொஸ்டல்) கிரிஸ்டியன் மாணவர் விடுதியும் பின்னர் கத்தோலிக்க மாணவர் விடுதியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1932ஆம் ஆண்டே பெண்கள் விடுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையும் கிரிஸ்டியன் கவுன்சிலே ஆரம்பித்துள்ளது. 1931ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் ஒன்றின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும் எங்கே அமைப்பது என்ற வாக்குவாதம் காரணமாக விஷயம் 1942 வரை இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது. முதலில் அருப்பொலவில் நிலம் வாங்குவதற்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சேர் ஜவர் ஜெனிங்ஸ் பேராதனையை தெரிவு செய்தார். ஏன் பேராதனைக் காணியை தெரிவு செய்தேன் என்பதற்கான காரணங்களை அவர் தனது நூலான கண்டி ரோட் (Kandy Road) என்ற நூலில் விபரமாக குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக்க் காணியினை ”யுனிவசிட்டி பாக்” (பல்கலைக்கழக பூங்கா) என்றே பெயர் சூட்டினார்.

கல்விக்கான சூழல், காலநிலை என்பனவற்றை அவர் கருத்திய எடுத்திருக்கிறார்.

1942இல் இலங்கை பல்கலைக்கழகம் பேராதனையில் ஆரம்பிக்ப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட போதும் போதிய கட்டட வசதிகளோ, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லாததால் பேராதனைக்கு பதிலாகக் கொழும்பிலேயே தற்காலிகமாக அது இயங்கியது. 1942இல் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்ட்டு 1952 லேயே கட்டடங்கள் அமைக்கும். பணிகள் முடிவுற்றன. பேராதனையில் கற்ககைகளும் அதன் பின்னரேயே ஆரம்பிக்கப்பட்டன. இரண்டாம் உலக யுத்தம், பேராதனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியன இக்காலதாமதத்திற்கு காரணமாகின. 1952 ஆம் வருடமே நூலகமும் பேராதனை கலைப்பீடக் கட்டடத்திற்கு கொண்டுவரப்பட்டது. 1960 இல் ஆறுமாடிக் கட்டடம் கட்டி முடிக்கும் வரை கலைபீட அறையிலேயே நூலகம் இயங்கிவந்தது. 1960 இல் நூலகக் கட்டிடத்திற்கு முழு நூலகமும் கொண்டுவரப்பட்டது.

1952ஆம் ஆண்டு நூலகம் கொழும்பிலிருந்து பேராதனைக்கு கொண்டுவரப்பட்ட போது 1921இல் ஏப்பரல் 8ஆம் திகதி ஒன்றில் தொடங்கிய பத்பநாபா சேர்க்கை முதல் வில்லா வெனிசியாவில் இருந்த சகல நூல் தொகுதிகளும் கொண்டுவரப்பட்டன. எனவேதான் 2021 இல் இப்பல்கலைக்கழக நூலகத்துக்கு 100 வருடம் எனக் கொண்டாடப்படுகிறது. 

இந்த 100 வருட வரலாற்றில் தற்போது நூல்கள் மட்டுமன்றி சகல நவீன வசதிகளுடனான சேவைகளும் வழங்கப்படுகின்றன. இணையத்தளங்கள், இணைய நூலகம், டிஜிட்டல் நூலகம் போன்றனவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். புகழ் பூத்த கல்விமான்களைப் பல்வேறு துறைகளிலும் பேராதனைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகம் அதன் ஆய்வு வெளியீடுகளை உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் முன்னணி பல்கலைக்கழக நூலகங்களுடன் இணைந்து நூல் பரிமாற்றத்தினை செய்து வருகிறது. இதன் மூலம் எமது வெளியீடுகள் உயர்தரத்திலான முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்கு கிடைப்பதுடன், அப் பல்கலைக்கழக வெளியீடுகள் எமது மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இதில் 1924ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட் Ceylon journal of science (சிலோன் ஜேர்னல் ஒப் சயன்ஸ்) 1942 இன் பின் University of Ceylon, Peradeniya ( யூனிவசிட்டி ஒப் சிலோன்) பேராதனையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

University of Ceylon Review (யுனிவசிட்டி ஒப் சிலோன் ரிவியூ சஞ்சிகை 1943 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1969ஆம் ஆண்டு தொடக்கம் கலைப்பீடம் மூலம் “Modern Ceylon studies” (மொடரன்  சிலோன் ஸ்டடீஸ்) வருடத்திற்கு இரண்டு அரையாண்டு மலராக வெளியிடப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு முதல் ”Sri lanka Journal of the Humantites”  (ஸ்ரீலங்கா ஜேர்னல் ஒப் தி ஹியுமனிடிஸ்) வெளியிடப்பட்டுள்ளது. இவையே ஆரம்பத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன்  பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இனி இங்கு 100 வருடங்களில் கடமையாற்றிய நூலகர்களை பார்ப்போம். 1925 ஆம் ஆண்டு  பல்கலைக்கழக கல்லூரி காலத்தில் ரெஜினட் ஸ்டீபன் என்ரைட் என்பவர் நியமனம் பெற்றுள்ளார். 1942ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது நூலகராக இவரே கடமையாற்றியுள்ளார். இவர் கண்டி திருத்துவ கல்லூரியில் கல்வி கற்று லண்டனில் பல்வேறு நூலகங்களில் கடமையாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் 1952 வரை நூலகராக கடமையாற்றினார்.  பல்கலைக்கழக நூலகர் பதவி என்பது சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு இணையானது. கல்விசார் உத்தியோகஸ்தர்களில் இப்பதவி. உபவேந்தருக்கு அடுத்தபடியான கௌரவமான பதவியாகும். 1952இல் மொத்த நூல்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாகும். கொழும்பிலிருந்த நூலகம் கண்டி பேராதனைக்கு இட மாற்றப்பட்ட போது அதிக வேலை பளு காரணமாக 14.11.1952 இல் நூலகர் என்ரைட் இறந்து போனார்.  இவரது முதல் ஞாபகார்த்தத் தினத்தில்  பல்கலைக்கழகம் இவரது பெயரில் மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கியது. 1962 இல் இவரது புகைப்படம் பல்கலைக்கழக நூலகத்தில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

ஆர். மகேஸ்வரன்

நூலகர், பேராதனைப் பல்கலைக்கழகம்

நன்றி - வீரகேசரிShare this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates