Headlines News :
முகப்பு » » இலங்கையில் கோவிட்19 தொற்றி இறந்தவர்களை எரிப்பதை எதிர்த்து பெண்கள் சந்திப்பின் அறிக்கை

இலங்கையில் கோவிட்19 தொற்றி இறந்தவர்களை எரிப்பதை எதிர்த்து பெண்கள் சந்திப்பின் அறிக்கை

இலங்கையில் கோவிட்19 தொற்றுதலுக்கு உள்ளாகி இறந்த உடல்களைப் பலவந்தமாக எரிப்பது குறித்து பெண்கள் சந்திப்பின் அறிக்கை

இலங்கையில் சிறுபான்மை மதங்களின் உரிமைகளை மறுத்து, கோவிட்-19 பெருந்தொற்றுக்குள்ளாகி அல்லது தொற்றுக்குள்ளாகியதாகக் கருதப்பட்டு மரணிக்கும்உடல்களை எரிக்கும் பேரினவாத அரசின் மனிதநேயமற்ற செயலை, ‘பெண்கள் சந்திப்பு’வன்மையாகக் கண்டிக்கிறது.

முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை மீறி பலவந்தமாக அவர்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வெள்ளைத்துணிகளைக் கட்டி (கஃபான் (Kafan)) அடையாளப் போராட்டத்தில் நாமும் இணைந்து எமது பூரணஆதரவை வழங்குகிறோம்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குள்ளாகி அல்லது தொற்றுக்குள்ளாகியதாகக் கருதப்பட்டு இறக்கும் மதச்சிறுபான்மையினரின் உடல்கள் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மாறாக, புதைக்கவிடாது பலவந்தமாக எரிக்கப்படுவது, இலங்கை அரசினால் சிறுபான்மை மதங்கள் மீது திட்டமிட்டமுறையில் நடத்தப்படும் மனிதவுரிமை மீறலே. 

இதுவரை இறந்தவர்களின் மொத்தத் தொகையில் எண்பதிற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளன. பிறந்து சிலநாட்களில் மரணமான இரு குழந்தைகளின் உடல்கள் அவர்களின் பெற்றோரின் ஒப்புதலின்றி எரிக்கப்பட்டிருப்பது அம்மக்கள் மத்தியில் பெருந்துயரையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பான WHO மற்றும் சர்வதேசஅமைப்பான Centres for Disease Control and Prevention வெளியிட்டுள்ள வழிகாட்டிகளில் (Standard Operating Procedure in disposing dead bodies) ,கோவிட் தொற்றுக்குள்ளாகி இறக்கும் உடல்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ முடியுமெனஅறிவுறுத்துவதோடு, வரையறுக்கப்பட்டிருக்கும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களின் உறவினர்கள் மரணச் சடங்குகளை மேற்கொள்ளலாமெனவும், இறந்த உடலின் மூலமாக நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும் உறுதிப்படுத்துகின்றன. 

இவற்றை உதாசீனப்படுத்தி எந்தவித விஞ்ஞானபூர்வமான ஆதாரமுமின்றி உடல்கள் எரிக்கப்படுவது, இலங்கைப் பேரினவாத அரசின் முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத அரசியலையே புலப்படுத்துகிறது.

 சர்வதேச மனிதவுரிமை நிறுவனங்களும், ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனத்தின் வதிவிடப் பிரதிநிதியும்(Resident Coordinator ), மதச்சுதந்திரம், கலாசாரம் சார்ந்த விசேட நிபுணர்களும்(special Rapporteur) இலங்கை அரசினால் விஞ்ஞான நம்பகத்தன்மையின்றி பலவந்தமாக உடல்கள் எரியூட்டப்படுவதை, சிறுபான்மையினத்தவருக்கு எதிரான அடிப்படை மனிதவுரிமை மீறலெனச் சுட்டிக்காட்டியுள்ளன. 

இறந்த உடல்களை புதைக்கும் தமது அடிப்படை உரிமையைக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பதினொரு மனுக்களையும் இலங்கை உச்ச நீதிமன்றம் தகுந்த காரணங்களின்றி நிராகரித்துள்ளது. 

இலங்கையில் சமீபகால நடவடிக்கைகளிலிருந்து நோக்கும் போது, நீதித்துறை துரிதமாக அரசியல்மயப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதற்குச் சாட்சியமாக விளங்குகிறது.

இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம்,பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருப்பது போலவே,ஏனைய மதங்களுக்கும் மதிப்பளிக்கவேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், இலங்கை அரசின் இவ்விதமான இனவாதஅரசியற்கொள்கைச் செயற்பாடுகள், பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவிற்குப் பாதகம் விளைவிக்கின்றன. 

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அரசு தனது நாட்டில் வாழும் சிறுபான்மையினத்தவரின் அடிப்படைஉரிமைகளுக்கு மதிப்பளிக்காமல், அவர்களை அநாதரவாகக் கைவிட்டுள்ளது. 

தமது உறவினர்களின் இறப்பிற்குப் பின், தங்களது மதநம்பிக்கைகளுக்கு இணங்க இறுதிக் கடமைகளைச் செய்யமுடியாமல் தவிக்கும் எமது சகோதரர்களின் துயரில் நாமும் பங்கேற்போம்.

• இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவரின் மதச்சடங்குகளுக்கான உரிமைகளை அவர்களுக்கு வழங்கி, இறந்த உடல்களைப் புதைப்பதற்கு அனுமதிக்கும்படி இலங்கை அரசைக்கோருகிறோம்.

• சிறுபான்மை இனமக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் மூலம் அவர்களைப் புறக்கணித்து, தனிமைப்படுத்தாமல் அவர்களின மனிதவுரிமைகளுக்குப் பாரபட்சமின்றி மதிப்பளிக்கும்படி இலங்கை அரசைக் கோருகிறோம். 

சிங்களம், தமிழ், மலையகத்தமிழ்,முஸ்லிம், பறங்கியர், மலே என்ற பல்லின இலங்கையரான நாம் ஒருநாட்டின் குடிமக்களாக ஒருவர் வலியை ஒருவர் உணர்ந்து, ஒற்றுமையாக சக இனத்தவர் மீதானஅடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.

பெண்கள் சந்திப்பு

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates