இலங்கையில் “கள்ளத்தோணி” என்கிற என்கிற கருத்தாக்கம் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பேரினவாதத்தின் பிரபலமான சொல்லாடலாக ஜனரஞ்சகமயப்பட்டிருக்கிறது. அதிகமாக இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு எதிராகவே இந்த சொல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமன்றி இலங்கைவாழ் தமிழர்கள் அனைவருமே கள்ளத்தோணிகள் என்கிற நம்பிக்கை இன்றும் பல சிங்களவர்களிடையே இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராகவும் கூட “மரக்கலயா” என்று அழைக்கப்படுவதன் நேரடி அர்த்தம் “மரக் களங்களில் வந்த அந்நியரே” என்பது தான்.
இலங்கை ஒரு தீவு என்கிற ரீதியில் இந்த கள்ளத் தோணி கருத்தாக்கத்துக்கான வழிகளை திறந்தே வைத்திருகிறது. சிங்கள மொழியைச் சேர்ந்தவர்கள் திட்டுவதற்கும், அவதூறு செய்வதற்கும் பிரபலமாக பயன்படுத்தப்படும் இந்தச் சொல் தமிழ் உச்சரிப்பைக் கொண்டு தான் பிரயோகிக்கப்படுகிறது.
இலங்கை ஒரு தீவு, இங்கு வாணிபம் செய்ய வருபவர்களும், பண்பாட்டு பரிமாற்றங்களுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும், அரசியல் ராஜதந்திரங்களுக்கும் என வந்தவர்கள் விமானம் வருமுன் இந்தத் தீவுக்கு வந்தவர்கள் கடல் மார்க்கமாகத் தான் வந்திறங்கினார்கள். படகுகளிலும், கப்பல்களிலும் தான் வந்து சேர்ந்தார்கள்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய பண்பாட்டு, வாணிப, அரசியல் பரிமாற்றமும் தொடர்பும் கடல்வழியாக தோணிகளாலும், படகுகளாலும் கட்டியெழுப்பப்பட்டது தான்.
இந்தக் கள்ளத்தோணி கருத்தாக்கத்தை வளர்த்தெடுக்கக மூல காரணியாக இருந்த ஜே ஆரின் மூதாதையர் தம்பி முதியான்சேவும், எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் மூதாதையர் நீலப்பெருமாள் பண்டாரனாயகமும் இந்தியக் “கள்ளத்தோணிகள்” தான்.
கள்ளத்தோணியின் பூர்வீகம்
கள்ளத்தோணி என்பது சட்டவிரோத படகு என்பதே தவறான அர்த்தம் கள்ளத்தோணி என்பது ஒரு வகையான படகே. ஆரம்ப காலத்தில் மரங்களை இணைத்துக் கட்டிப் படகு செய்வதில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கியிருந்தார்கள். அதனால் தான் கட்டுமரம் என்ற தமிழ்ச்சொல் பல மொழிகளிலும் அதனை ஒத்த சொற்களிற்கான “மூலமாக” அமைந்தது (Catamaran) இவ்வாறு கட்டுமரமாகத் தோன்றிய படகு கட்டும் தொழில் கடல் வணிகம் விரிவடையும்போது தோணிகளாக மாறியது. அத்தகைய தோணிகளில் ஒரு வகையே கள்ளத்தோணி ஆகும்.
`Origin and Spread of the Tamils` நூலில் இருந்து |
“கள்ளத்தோணியில் இரு முனையிலும் கண் உருவம் செதுக்கப்படுகின்றது; தாய்த்தெய்வ உருவமும், நற்பேற்றுக்காக `உ` என்ற குறியும், குதிரை வடிவமும் அமைக்கப்படுகின்றன. இத்தகைய ஒரு தோணி வகையே கள்ளத்தோணி எனப்படும்.”
மேலே வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் குரிப்புடிகிற 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா குகையில் உள்ள ஓவியம். |
கள்ளத்தோணி என்ற ஒரு வகையான தமிழர்களின் தனித்துவமான படகுவகை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே சட்டத்திற்குப் புறம்பான படகு என்ற பொருளினைப் பெறுகின்றது. ஆங்கிலேயர்கள் தமது நீராவிப்படகு தவிர்ந்த ஏனைய படகுகளை அழிப்பதற்காகச் செய்த செயலே அதுவாகும். ஆங்கிலேயர்கள் உளளூர் படகு கட்டும் தொழிலினை நசுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக மறைந்த வ. உ. சிதம்பரனார் வாழ்க்கை, 1789 இல் இந்திய தொழில்நுட்பவியலாளர் கப்பற்தொழிலில் ஈடுபடத்தடை விதித்து அரசிதழ் (கசற்) வெளியிட்டமை போன்றவற்றைக் கூறலாம். இந்த வரிசையில் நசுக்கப்பட்டதே, தமிழர்களின் கள்ளத்தோணி வகையுமாகும் (இது பற்றிய மேலதிக செய்திகளை கருத்து 3 இல் காண்க). இதன்போதே கள்ளத்தோணிகளின் போக்குவரத்து சட்டத்திற்குப் புறம்பானது என அறிவிக்கப்பட்டது (பொதுவான அற ரீதியான சட்டத்திற்கு புறம்பாக தமிழர் நிலங்களைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், தமிழர்களின் தோணிகளை (Clandestine boards) கள்ளத்தோணிகள் (illegal boards) என மாற்றியமை வேடிக்கையானதே). (கள்ளத்தோணியின் பூர்வீகம் குறித்து எழுத்தாளர் இலங்கநாதன் குகநாதன் வெளியிட்டிருந்த பதிவில் இருந்தும் இந்தக் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.)
அனால் இலங்கையில் கள்ளத்தோணிகள் என்று “திருட்டு குடியேற்றவாசிகளை”த் தான் அழைக்கிறார்கள்.
- “அவர்களா... எங்கேயோ போகிற கள்ளத்தோணிகள்....!” -‘කොහෙද යන කල්ලතෝනියෙක්,
- இவன் கள்ளத்தோணியாக இருக்கவேண்டும்” - මේකා කල්ලතෝනියෙක්ද කොහෙද,
- அவன் கட்டியிருக்கிற பொம்பிள கள்ளதோணியா தெரியல - අර මිනිහා බැඳලා ඉන්න ගෑණි කල්ලතෝනිද මන්දා,
- ஏன் கள்ளத்தோணிகளோட சகவாசம் வைச்சிருக்கிறாய் - මොකට යනවද ඔය කල්ලතෝනිත් එක්ක ගනුදෙනු කරන්න’,
சிங்கள பேச்சு வழக்கில் இப்படியான உரையாடல்களை நிறைய காண முடியும்.
இந்திய வம்சாவளியினரே இலக்கு
ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிலிருந்து ஏராளமான தமிழர்களை தோட்டத் தொழிலுக்காக இறக்குமதி செய்தனர். அவர்களை இந்தியாவிலிருந்து சற்று பெரிய படகுகள் மூலம் தான் இலங்கைக்கு இறக்குமதி செய்தார்கள். அதேவேளை அவர்கள் தனிப்பட்ட தமிழ் முகவர்களின் மூலமும் இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களை தருவித்தார்கள். அப்படி வந்தவர்கள் சிறிய வள்ளங்களிலும் வந்திருக்கிறார்கள்.
தேயிலை, கோப்பி, இறப்பர், போன்ற உற்பத்திகளின் அதிகரிப்புக்காக ஆங்கிலேயர்களுக்கு குறைந்த ஊதியத்தில் கூடிய உழைப்பைப் பெறுவதற்காக மேலும் மேலும் தமிழகத்திலிருந்து கூலி உழைப்பாளர்களை இறக்குமதி செய்தார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு போவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தபோது இலங்கையின் சிங்களத் தலைவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டு துரத்த படாத பாடுபடுத்தினர்.
ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம், இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை என மேற்கொண்டனர். போதாக் குறைக்கு இலங்கையில் வாக்குரிமையைப் பறிப்பது, குடியுரிமையை இல்லாது செய்வது, அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றுவது, சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்வது, அவர்களின் வருமான வழிகளை அடைப்பது என பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தனர். நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்த அவர்களின் அடுத்த தலைமுறைக்கு இந்தியா என்பது அந்நிய நாடாக ஆகியிருந்தது.
இலங்கையில் ஒரு கட்டத்தில் இலங்கை வாழ் தமிழர்களை விட அதிக எண்ணிக்கை இந்திய வம்சாவளியினராக இருந்ததும் அவர்களின் எரிச்சலுக்கு காரணமாயின. அத்தோடு அவர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்ற தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தின. இதனால் கொதிப்படைந்த சிங்களத் தலைமைகள் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை எங்கெங்கும் பரப்பின. அந்த வெறுப்புணர்ச்சியை கட்டியெழுப்ப பயன்படுத்தப்பட்ட கருத்தாக்கமே “கள்ளத்தோணி.
1953 இலங்கை அரச குடித்தொகை புள்ளிவிபரப்படி பத்து லட்சத்துக்கு கிட்டிய இந்திய வம்சாவளியினர் இலங்கை பிரஜையல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். நாடற்றவர்களாக ஆக்கப்பட்டிருந்த மலையக மக்களே அவர்கள் என்பது சொல்லத் தேவையில்லை. இந்தத் தொகை "இலங்கைத் தமிழர்களின்" எண்ணிக்கையை விட அதிகம் என்பதை இந்த புள்ளிவிபரத்தில் காணலாம். 1953 அரச குடித்தொகை மதிப்பீடு இது.
சார்ல்ஸ் கந்தர அறிக்கை
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் “கள்ளத்தோணி”களைக் கட்டுப்படுத்துவதற்கு என்று பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு பகுதியில் கள்ளத்தோணிகள் வருகையைப் பற்றி ஆராய்வதற்காக சார்ல்ஸ் கந்தர என்பவரை நியமித்தது சிறிமா அரசு. சார்ல்ஸ் கந்தர வடக்கில் ஓராண்டு தங்கியிருந்து இரகசியமாக ஆராய்ந்த தகவல்களைக் கொண்டு தயாரித்த அறிக்கையை 19.12.1966 பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவிடம் ஒப்படைத்திருக்கிறார் (திவயின 01.10.2012). ஒரு ரூபாய்க்கு கச்சத்தீவில் கொண்டு போய் விடுவதற்கு தோணிகள் அங்குள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து கடத்தல், சட்டவிரோத குயேற்றம், சட்டவிரோத வணிகம் என கள்ளத்தோணிகள் மூலம் இடம்பெறுவதாக அவர் அவ்வறிக்கையில் வெளியிட்டார். அக்காலத்தில் சிங்கள பத்திரிகைகளில் வெளியான இந்த விபரங்கள் சலசலப்பை உருவாக்கியது. அடுத்த ஆண்டே சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் 525,000 மலையகத்த்வர்களையும் அவர்களுடைய இயற்கையான அதிகரிப்பையும் சேர்த்து, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இலங்கையில் 1968ஆம் ஆண்டின் 31ஆம் இழக்க ஆட்களை பதிவு செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டதும் கூட இந்திய வம்சாவளியினரைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான். இச் சட்டத்தின் மூலம் தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ஆளடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
என்டன் ஜோன்ஸ்
சிங்களத்தில் “கள்ளத்தோணி” பற்றிய பல ஐதீகங்கள், புனைவுகள், புனைகதைகள், பழமொழிகள் என உண்டு. இவை சாதாரண மக்கள் மத்தியில் “கள்ளத்தோணிகள்” பற்றிய வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி நாளடைவில் அவர்களுக்கு எதிரான அரசியலாகவே வேரூன்றிவிட்டது.
இந்த வெறுப்பை ஜனரஞ்சகப்படுத்தி இந்திய வம்சாவளியினருக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு பாடல் சிங்கள சமூகத்தில் 80-90களில் பிரபலமாக இருந்தது. இப்போதும் அப்பாடலுக்கு இருக்கும் மவுசு குறையவில்லை என்றே கூறவேண்டும்.மலையக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி மிகுந்த ஒரு பாடல் இதை விட வரலாற்றில் இருக்க முடியாது.
இந்தப் பாட்டை இயற்றிப் பாடியவர் பிரபல பொப் பாடகர் என்டன் ஜோன். அவரின் பாடல்கள் அத்தனையும் சமூகக் கதைகளைப் பேசும் பாடல்கள் என்பதால் சிங்களப் பாடகர்களில் தனித்த இடம் அவருக்கு உண்டு. லுமும்பா, மனம்பேரி, இந்திரா காந்தி, ஹிட்லர், கொப்பேகடுவ போன்றவர்களைப் பற்றியும் பாடல்கள் பாடியிருக்கிறார்.
அவரின் மேடைகளில் எல்லாம் ஒலித்த; கரகோஷம் பெற்ற புகழ் பெற்ற பாடல் “கள்ளத்தோணி” பாடல். வானொலி, சீடிக்கள், கசட்டுகள் என கலக்கிய பாடல் இது. ஆனால் இதுவரை இதன் உள்ளடக்கம் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டதில்லை. இதைவிட வெறுப்பின் உச்சத்தை உமிழ்ந்த வேறெந்த சிங்கள ஜனரஞ்சக பாடலையும் கேட்டிருக்க முடியாது. இத்தனைக்கும் இதன் சொந்தக்காரர் என்டன் ஜோன் ஒரு பறங்கி இனத்தைச் சேர்ந்தவர். போர்த்துக்கேய வம்சாவளியினரான அவர் தனது மூதாதையரும் இலங்கைக்கு கப்பல்களில் அத்துமீறி வந்து நாட்டை சூறையாடி, கைப்பற்றி அடிமைப்படுத்திய கூட்டத்தைச் சேர்ந்தவர் தான் என்பதை அவரும் மறந்து போனார். சிங்கள பேரினவாத கூட்டு மனநிலையின் நினைவுகளையும் உலுப்பியிருக்காது.
சமீபத்தில் ரோஹீங்கியா அகதிகளை இலங்கையில் இருந்து விரட்டுவதற்காக எடுக்கப்பட்ட இனவாத பிரச்சாரங்களின் போதும் இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. (யூடியுப் சானலில் Allaganna Anton Jones) என்று தேடிப்பாருங்கள் இந்தப் பாடலை கேட்க முடியும். முதலில் பாடலைப் பாருங்கள்.
பிடிச்சுடு - அதோ பாய்ஞ்சு வாறார்கள் கள்ளத்தோணிகள்
பிடிப்பது எப்படி? ஒளிந்திருக்கிறார்கள்!
நல்லதம்பி - மொளகதண்ணி - சாம்பிராணிகள்
நமது எதிர்கால முதலாளிகள்!
தாரா போன்ற வெளிர்நிற கட்டழகானவர்கள்
கடலில் குதித்து வழியைக் கண்டார்கள்
வழியில் போராடி இக்கரைக்கு வந்தவர்கள் - பின்னர்
நாங்களே பிரஜைகளென முரண்டு பிடிப்பவர்கள்!
தின்ன வழியின்றி இந்தியாவில் இருந்த அண்ணன்மார்
தோணிகளில் கள்ளத்தனமாக ஒளிந்து வந்தவர்கள்
இப்போ சுரண்டிவிட்டு
எங்கள் தோளைத் தட்டிப் போகிறார்கள் - இனி
எங்கள் நாட்டில் இருக்கிறார்கள் -ஐயகோ
கள்ளத் தோணிகள்
வரும்போது இரண்டு மூன்று, நான்காக வளைந்து வருகிறார்கள்
போகும்போது எங்கள் காதுகளையும் திருகிவிட்டு போகிறார்கள்
பதவிகளையும், வசதிகளையும் கொடுத்து
அவர்களைக் கெடுத்தது எங்கள் அண்ணன்மார்களே
வெட்கித் தலைகுனிந்து தலையில் பெட்டிகளுடன் வந்தவர்கள்
போத்தல் மூடிகளையும் கடதாசிகளையும் மலிவாக பெற்று - பின்னர்
சாக்கு உரிமையாளர்கள் ஆகிறார்கள் கள்ளத்தோணிகள்
உடுக்கவும் தின்னவும் குறைவாக செலவழிக்கிறார்கள்
எங்கு தங்குவதற்கும் தயார்.
பொழுது போக்கே பணம் சம்பாதித்தல் - இறுதியில்
அவர்கள் பிரஜைகள் - நாங்கள் கள்ளத்தோணிகள்
பெற்றோர், உறவுகள், நட்புகளை கைவிட்டுவிட்டு
லங்காவை பார்த்தபின்னர் அதுவே சொர்க்கம்!
அந்தக் கனாவுடன் - நாட்டைவிட்டு தப்பி
உறுதியுடன் வந்து சேர்கிறார்கள் - இந்த
கள்ளத்தோணிகளால் பெரும் பிரச்சினை
ஜனத்தொகையைப் பெருக்கும் - புதுவகைத் திருடர்கள்
கிடைக்கும் நிவாரணத்தையும் இழக்கும்
எங்களுக்கு பெரும் கவலை
நாட்டை அழிக்கும் கள்ளத்தோணிகள்
நாட்டுக்கு பெரும் சுமை
லங்கா எங்கள் நாடு - இப்படி ஆகலாமா
எவ்வளவு இருக்கிறார்களோ -அத்தனை
கள்ளத்தோணிகளையும் சேர்த்து பிடித்து - பட்டினிபோட்டு
உயரமான ஒரு மலையுச்சிக்கு கொண்டு சென்று
கழுத்தை நெறித்து தள்ளிவிடுவோம்
யாரும் கேட்டால் சொல்வோம்
பாய்ந்து செத்துப் போனார்கள் என்று...!
“கள்ளத்தோணி” பீதி
“...இது சிங்கள பௌத்த நாடு, ஏனையோர் வந்தேறுகுடிகள், தமிழர்கள் நாட்டைத் துண்டாடி அபகரிக்கப் பார்க்கின்றார்கள், தமிழ்நாட்டோடு இணைத்து எதிர்காலத்தில் பரந்த தமிழ்நாடாக முழு இலங்கையையும் ஆக்கப்போகிறார்கள், தமிழர்களுக்கு நாடு உண்டு, சிங்களவர்களுக்கு உலகில் எந்த நாடும் இல்லை. மிச்சமுள்ள இதனை சூறையாட விடக்கூடாது, சிங்களவர்களை சுரண்ட இனியும் அனுமதியோம், இந்திய வம்சாவழி எனும் ”கள்ளத்தோணிகள்” நாட்டின் செல்வத்தை சுரண்டுபவர்கள், அதில் பலர் சிங்களவரை சுரண்டி இந்தியாவுக்கு சொத்துக்களை கொண்டுபோய் குவிப்பவர்கள். இவர்கள் எல்லோரும் கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைகளைப்பெற்று தம்மினத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள், சிங்களவர்கள் மீது திட்டமிட்டு மலட்டுத்தனத்தை உருவாக்குகிறார்கள். சகல அரசாங்க தொழிலையும் கைப்பற்றி இருக்கிறார்கள். இவர்களுக்காக சிங்களவரின் சொத்துக்கள் முழுதும் அரசால் செலவளிக்கப்படுகிறது....”
இப்படி கட்டமைக்கப்பட்டு, பரப்பப்பட்டு, நம்பவைக்கப்பட்டிருக்கிற கருத்தாக்கத்தின் பலத்துடன் தான் “கள்ளத்தோணி” சொல்லாடல் ஜனரஞ்சகப்படுத்தப்பட்டிருக்கிறது.
- இந்திய விஸ்தரிப்புவாத பீதி
- இந்திய வர்த்தகர்களுடனான உள்ளூர் முதலாளிகளின் போட்டியும் எதிர்ப்புணர்வும்
- இந்திய வம்சாவளியினரின் தொகை பற்றிய பீதி
- வருமானத்தை இந்தியாவுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு
- அரசியலில் தாக்கம் செலுத்திய பிரதிநிதித்துவம் குறித்த பயம்
இப்பேர்பட்ட பேரச்ச வெருண்ட உணர்வுவின் (phobia) விளைவாக இந்தியவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்கிற எண்ணம் 1920களில் தலைதூக்கியது. அநகாரிக்க தர்மபால உட்பட, ஏ.ஈ.குணசிங்க அதன் பின்னர் இலங்கையின் தேசியத் தலைவர்கள் என்று அழைக்கப்பட்ட டீ.எஸ்.சேனநாயக்க, டட்லி, கொத்தலாவல, பண்டாரநாயக்க, சிறிமா என தொடர்ச்சியாக பல தலைவர்கள் இந்திய வம்சாவளியினர் இலங்கைக்கு தேவையற்றவர்கள் என்கிற முடிவுக்கு வந்தார்கள். ஆனால் அப்படி அவர்கள் அந்த முடிவுக்கு வந்த வேளை அதற்கு முந்திய ஒரு நூற்றாண்டாக இலங்கைக்கு செல்வத்தைக் குவித்து, இலங்கையை வளப்படுத்த இந்திய வம்சாவளியினரின் உழைப்பே காரணமாக இருந்தது. இலங்கை மக்களுக்கான வாழ்வாதார வளங்களை திரட்டிக் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.
இந்திய வம்சாவளியினர் சிங்களவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கவில்லை. மாறாக வேலைவாய்ப்புக்கான புதிய துறையை உருவாக்கினார்கள். சிங்களவர்கள் பணி புரிய முடியாது என்று புறக்கணித்ததால் தான் இந்தியாவில் இருந்து இந்தியவம்சாவளியினர் இறக்கப்பட்டார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
அதுபோல சிங்களவர்களின் வளங்களை அவர்கள் சுரண்டவில்லை.ஏற்கெனவே பயன்பாடற்று கிடந்த காடுகளைத் தான் தமது கடின உழைப்பின் மூலம் பணமீட்டும் வளங்களாக மாற்றினார்கள். அப்பணப்பயிரே சிங்களவரையும் சேர்த்து வாழவைத்தது.
சிங்களவர்கள் மத்தியில் பலப்படுத்தப்பட்ட “மண்ணின் மைந்தர்கள்” சித்தாந்தத்துக்கு “மற்றவர்களெல்லாம் அந்நியர்” என்கிற கருத்தாக்கத்தை வளர்த்தெடுப்பது அவசியப்பட்டது. சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் மீது பல அடைமொழி கொண்ட சொற்கள் பேச்சு வழக்கில் ஜனரஞ்சகமாக பரப்பப்பட்டிருக்கிறது. பற தெமலா (பிர தமிழன்), தோட்டக்காட்டான், தம்பியா, சோனி, போன்ற வரிசையில் கள்ளத்தோணியும் பிரபலமான ஒன்று. சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இனவெறுப்புணர்ச்சி (ethnophaulisms) பட்டைத் தீட்டப்பட்டு களத்தில் இறக்கப்பட்டமைக்கு “கள்ளத்தோணி”, “பறத் தமிழன்” போன்ற சொல்லாடல்களுக்கு பெரிய பங்குண்டு.
எது அந்நியம்? யார் அந்நியர்?
இதில் உள்ள முரண்நகை என்னவென்றால் இன்றைய நிலையில் இலங்கையில் எதையுமே தமது சுதேசம் என்று கூறிக்கொள்ள முடியாது என்பது தான்.
இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு என்றும் ஏனையோர் வந்தேறு குடிகள், அந்நியர் (பறயா), கள்ளத் தோணிகள் என்றெல்லாம் நிறுவப்பட்டுள்ள ஐதீகத்தை இன்று தர்க்க ரீதியில் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.
அந்நியர்களை “பற தேசீன்” என்று சிங்களத்தில் அழைப்பார்கள். அதே “பற” (பிறர்) என்கிற அடைமொழியுடன் சேர்த்து “சுத்தா” (அந்நிய வெள்ளையர்களே) என்றவர்கள் பின்னர் காலப்போக்கில் "பற தெமலா", "பற ஹம்பயா" என தமிழர்களையும் முஸ்லிம்களையும் பார்த்து வெறுப்புமிழ்வதை கண்டிருக்கிறோம். “பற” என்கிற பதத்தின் பூர்வீகத்துக்கு உண்மையான சொந்தக்காரர்கள் “சிங்கள” + “பௌத்தர்கள்” தான் என்று சிங்கள பௌத்தர்களே தமது புனித வரலாற்றுக் காவியமாக போற்றும் மகாவம்சம் தருகிறது ஆதாரம். அப்படி இருக்க அந்தத் தர்க்கம் உண்மையானால் “பற சிங்களயா” என்று தமக்குத் தாமே சுய அடையாளம் சூட்டவேண்டியவர்கள் அவர்களே. சுய வெறுப்பும் அங்கிருந்து தொடங்க வேண்டும்.
எந்த சிங்கள பௌத்தத்தின் பேரால் ஏனையோரை அந்நியர்கள் என்கிறார்களோ அந்த சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையின் எந்தவித பூர்விகத் தொடர்புமில்லை. பௌத்தமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள மொழியின் உருவாக்கத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பாளி, சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது என்பதை சிங்கள பௌத்த பௌத்த புனித வரலாற்று நூலிகளில் இருந்தே ஆதாரங்களை முன்வைக்க முடியும்.
அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற பிரித்தானியர்கள் எபெர்ஜீன்களை விரட்டிவிட்டு அந்த நாடு அவர்களது என்றார்கள். மெக்சிக்கோவுக்கு சென்று செவ்விந்தியர்களை விரட்டிவிட்ட பிரித்தானியர்கள் கூறினார்கள் அதுவும் பிரித்தனியர்களது தான் என்று.
அந்நியர்களிடம் இருந்தே அத்தனையும்
இன்று சிங்கள பௌத்த பண்பாட்டு அம்சங்கள் என்று சொல்லக்கூடிய அனைத்தும் இலங்கையின் பூர்வீகம் தான்என்றோ, இலங்கையின் பாரம்பரிய முதுசம் தான் என்றோ எவராவது சொல்வாராயின் அது கேலிக்குரிய ஒன்றாகத் தான் எஞ்சும். இலங்கையில் “தூய்மையான சிங்கள பௌத்த பண்பாடு” என்கிற ஒன்று கிடையாது.
நமது நாட்டுக்குள் இந்தியாவில் இருந்து கொண்டு வந்து சேர்த்தது தான் பிரதான மதங்கள், பண்பாடு, கலை, கலாசாரம், உணவு, உடை சடங்கு, சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் அனைத்துமே இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவற்றால் தான் நிறுவப்பட்டிருக்கிறது.
இன்றைய சிங்கள பௌத்தர்கள் பலரின் பெயர்களில் அதிகமாக கலந்திருப்பது போர்த்துக்கேய, ஒல்லாந்துப் பெயர்கள் தான் (பெர்னாண்டோ, பெரேரா, மென்டிஸ், பொன்சேகா, ரொட்ரிகோ, அல்மேதா போன்றவை உதாரணங்கள் ) என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.
விஜயன்: முதல் கள்ளத்தோணி
விஜயன் தொடக்கம் பல்வேறு ஆக்கிரமிப்பாளர்கள் காலத்துக்கு காலம் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அதன் பின் மன்னர்கள் பலர் இந்தியாவில் பெண் எடுத்து, மணம் முடித்து வந்திருக்கிறார்கள். இவற்றின் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பின்னர் காலனித்துவ காலத்திலும் இந்திய வம்சாவழி மக்களின் மூலம் நிறையவே பண்பாட்டு பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்றைய சமகாலத்தை எடுத்துக் கொண்டால், இலங்கைத் தொலைக்காட்சிகளையும், திரைப்பட அரங்குகளையும் ஆக்கிரமித்திருக்கும் திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், விளம்பரங்கள், என்பனவற்றுடன் இந்திய நாட்டு நடப்புகளும், அரசியலும் கூட வந்து கருத்தாதிக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சிங்கள இனம் தோன்றி 2500 வருடங்களை முன்னிட்டு; விஜயன் கரையிறங்கிய போது குவேனியை சந்திப்பதை சித்தரிக்கும் ஓவியத்தைக் கொண்ட மூன்று சத அஞ்சல் முத்திரை, 23/05/1956 இலங்கையில் வெளியிடப்பட்டது. இது ஒரு வகையில் முதலாவது கள்ளத்தோணி என்பதை நிறுவி விடும் என்று நினைத்தார்களே என்னவோ 01/10/1966 அன்று அந்த முத்திரை வாபஸ் பெறப்பட்டு நிறுத்தப்பட்டது.
இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அகதித் தஞ்சம் தேடி இலங்கையில் குடியேறிய "சட்டவிரோத குடியேற்றவாசியாக" விஜயனையும் கூட வந்த குற்றவாளிக் கூட்டாளிகளையும் தான் கூற முடியும். தஞ்சம் கொடுத்த இந்தத் தீவின் ஆதிவாசிகளைக் கொன்று சிம்மாசனம் ஏறிய விஜயன் குவேனியையும் கைவிட்டு தனக்கும் தனது கூட்டாளிகளுக்குமாக பாண்டிய நாட்டிலிருந்து பெண்ணெடுத்து வந்து தளைத்தது தானே சிங்கள இனம். (விஜயனுக்கும் பாண்டிய இளவரசிக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை என்கிறது மகாவம்சம்) ஆக இதில் எங்கே சுதேசியம் இருக்கிறது. மகாவம்சம் தரும் தகவல்களைக் கொண்டு பார்த்தால் இலங்கையின் முதல் கள்ளத் தோணிகள் சிங்களவர் என்றல்லவா தர்கிக்க முடிகிறது.
இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்தவர்கள் அனைவரும் வந்தேறிகள், கள்ளத்தோணிகள் என்றால் தாமே இந்தியாவில் இருந்து வந்த மூத்த கள்ளத்தோணிகள் என்பதை அவர்களின் புனித நூல் மகாவம்சம் சொல்லவில்லையா. விஜயன் முதலாவது சட்டவிரோத கள்ளதோணி இல்லையா? ஒரு தர்க்கத்துக்கு எடுத்துக்கொண்டால் ஒரு வகையில் சிங்களமும் பௌத்தமும் இலங்கை மீதான ஆக்கிரமிப்பின் எச்சங்கள் தான்.
பிற்காலத்தில் இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி நாட்டை விட்டு வெளியேறி வள்ளங்களில் வேறு நாடுகளுக்கு சட்டவிரோத குடியேற்றவசிகளாக நுழைந்தவர்கள் தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் தான். இத்தாலி, அவுஸ்திரேலியா என்று இன்றும் பல வள்ளங்களில் வேறுநாடுகளில் நுழையத் தான் செய்கிறார்கள்.
இன்று தமிழர்களைத் திட்டுவதற்கு “கள்ளத்தோணி” என்கிற பதத்தை அதிகமாக பயன்படுத்திவருபவர் இன்றைய இலங்கையில் முன்னணி இனவாதியாக அறியப்படும் ஞானசார தேரர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட கள்ளத்தோணிகள் அனைவரையும் நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று கர்ஜித்திருந்தார்.
இனத் தூய்மை என்பது இன்றைய உலகில் சாத்தியந்தானா என்கிற கேள்வி வலுவாக இருக்கும் போது இனப் புனிதத்தன்மைக்கு என்ன உத்தரவாதம் எஞ்சியிருக்கிறது.
சிங்களவர்கள் முதல் கள்ளத்தோணிகள் என்றால் இந்தியவம்சாவளித் தமிழர் அவர்களுக்கு பின் வந்த கள்ளத்தோணிகளே. ஆக, கொஞ்சம் முன் பின் வித்தியாசம் மாத்திரமே.
எனவே இந்த கள்ளத்தோணி ஐதீகத்தை தமது இனத்துவ பெருமிதத்துக்காகவும், இனத் தூய்மைக்காகவும் கையிலெடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை “சிங்கள பௌத்தத் தனத்தின் அவசரம்” அறிய விடுவதில்லை.
இலங்கைக்கான பூர்வீக பண்பாட்டு அடையாள மூலங்கள் எங்கே போனது. அவற்றை இல்லாதொழித்தவர் யார்? அந்த முதுசங்களுக்கு அந்நியத்தை பிரதியீடு செய்ய அனுமதித்தது யார்? என்கிற கேள்விகளை விஞ்ஞான பூர்வமாக எழுப்ப ஏதோ தடைசெய்கிறதே. அது எது என்கிற கேள்விக்கே பதில் தேட வேண்டும். அந்த பதிலே இன்றைய சிறந்த மனிதத்துவ பண்பாட்டு எச்சமாக இருக்க முடியும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...