Headlines News :
முகப்பு » , » மலையகத் தமிழரின் : இந்திய அடையாளம் - மல்லியப்புசந்தி திலகர்

மலையகத் தமிழரின் : இந்திய அடையாளம் - மல்லியப்புசந்தி திலகர்


இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்களை 'இந்திய வம்சாவளி தமிழர்'  என அழைத்துக்கொள்வது கூட ஒரு கற்பிதம்தான். ஏனெனில்  இலங்கையின் சட்டத்தின் பார்வையில் அதாவது சனத்தொகைக் கணிப்பீடுகளின்போது இவர்கள் 'இந்தியத் தமிழர்' (இந்தியானு தெமல) என்றே பதிவு செய்யப்படுகின்றனர், அழைக்கப்படுகின்றனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இந்தியர்கள் அவர்களின் உழைப்பைப் பெறும் நோக்கத்தோடு அழைத்துச்செல்ல ப்பட்டபோது தமிழர்களும் அடங்கினர்.

அவர்கள் மலேசியா (சிங்கப்பூர் சேர்ந்த), கயானா உள்ளிட்ட மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா, பர்மா, பிஜித்தீவுகள், மடகஸ்கர், மொறீஷியஸ், பர்மா, கம்போடியா  போன்ற பல நாடுகளுக்கு சென்று நிலைகொண்ட பின்னர் அந்தந்த நாட்டின் பெயரையே அடைமொழியாகக் கொண்டு தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

உதாரணமாக 'மலேசிய தமிழர்கள்' (மலாய தமிழர்கள்), 'பர்மா தமிழர்கள்' போன்றவர்களைச் சுட்டிக்காட்டலாம்.  இருப்பினும்  இலங்கையில் குடியம ர்த்தப்பட்ட இந்தியத் தமிழர்கள் தொடர்ந்தும் இந்தியத் தமிழர்கள் என்றே பதிவு செய்யப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகின்றனர். காரணம், இலங்கையில் ஏற்கனவே 'இலங்கைத் தமிழர்கள்' என்னும் தனியான அடையாளத்துடன் தமிழர்கள் வாழ்ந்துவருவதாகும். இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களுள் ஏனைய நாட்டிற்கு சென்றவர்களில் இருந்து இந்திய அடையாளத்தை தமது இனத்தின் அடைமொழியாக சுமக்கும் தேவை மலையக தமிழர்கள்  மீது இயல்பாகவே சுமத்தப்பட்டுள்ளது. 

 எனினும் இலங்கை வாழ் இந்திய தமிழர்களான தமிழர்கள் தம்மை 'மலையகத் தமிழர்' எனும் தனித்துவமான அடையாளத்துடன் தம்மை பண்பாட்டு ரீதியாக நிறுவிக்கொண்டுள்ளனர். 'மலையகத் தமிழர்' என்னும் இன அடையாளம் இலங்கையில் இன்னும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆயினும் 'மலையகத் தமிழர்' என்னும் பதம் சர்வதேச ரீதியாக இலங்கையில் வாழும் ஒரு இன அடையாளத்துக்கு உரியது எனும் நிலையை அடைந்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.

 மலையகத் தமிழரிடையேயும் தாங்கள் இந்திய தமிழரா? இந்திய வம்சாவளி தமிழரா?  மலையகத் தமிழரா? என்னும் அடையாளம் தொடர்பான வாத விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் 'மலையகத் தமிழர்' எனும் அடையாளம் குறித்த பிரக்ஞையும் வேட்கையும் அதனை சட்டரீதியாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்னும் எதிர்பார்ப்பும் உயர்வாகவே உள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கான புதிய அரசியலமைப்பாக்க செயற்பாட்டு வழிமுறைகளின் ஒரு அம்சமான மக்கள் கருத்தறியும் குழுவிடம் தம்மை 'மலையகத் தமிழர்' என்னும் கோரிக்கையே  பரவலாகவும் அழுத்தமாகவும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம்  கண்டறியப்பட்டுள்ளது. (பி.கௌதமன் - பதுளை, இர.சிவலிங்கம் நினைவுப்பேருரை 2016). எனவே மலையகத் தமிழர் எனும் சொற்பதம் அங்கீகரிக்கப்பட்டதாக மாற்றப்படும் வரை  இலங்கைத் தமிழர்களிடம் இருந்து மலையகத் தமிழர்களை வேறுபடுத்தி அறிவதற்கு இந்திய வம்சாவளி எனும் சொற்பதங்கள் அவசியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 

இந்திய நிலையில், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்தியர்களை அவர்கள் இனத்துவ அடையாளங்களுக்கு அப்பால் இந்தியர்கள் எனும் 'தேசிய' அடையாளத்துடன் நோக்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அரசாங்கத்தால் அவர்கள் தொடர்பான ஒரு அமைச்சும் கூட இயங்கியது. தற்போது வெளிவிவகார அமைச்சே மேற்படி இந்திய வம்சாவளியினரான மக்கள் தொடர்பான விடயங்களையும் கையாண்டு வருகின்றது. 

பாரத தேசத்தின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி இந்த 'இந்திய வம்சாவளி' எண்ணக்கருவினதும்  தந்தையாக பார்க்கப்படுகின்றார். இந்திய சுதந்திர தாகத்துடன் அவர் தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய ஜனவரி 9 ஆம் திகதியை இந்திய அரசாங்கம் 'இந்தியவம்சாவளியினர்' தினமாக அங்கீகரித்து அனுஷ்டித்து வருகிறது. 'புரவாசி பாரதீய திவாஸ்' (PBD) எனும் ஹிந்திச் சொற்களிலான இயக்கம்  அதன் அர்த்தத்தையும் விளக்குவதாக உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் இந்திய தூதரகங்கள் உள்ளநாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுவதோடு அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளைக்கொண்டதான ஒரு மாநாடும் அன்றைய தினம் நடாத்தப்படுவதுண்டு. பெரும்பாலும் அது இந்தியாவில் நடைபெற்றாலும் இந்தியாவுக்கு வெளியேயும் நடத்தப்பட்டுள்ளது.

 இந்த 2018 ஆம் ஆண்டு இன்னுமொரு கட்டத்தை அடைந்ததாக இந்திய வம்சாவளியினரான பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச மாநாடு ஒன்றை முதன் முறையாக டெல்லியில் நடத்தியுள்ளார்கள். சுமார் 24 நாடுகளில் இருந்து 150 க்கு மேற்பட்ட மக்கள் பிரதிதிநிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து கலந்துகொண்டுள்ளனர். இதில் அமைச்சர்கள், உயர்மட்ட தலைவர்கள் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சட்டசபைகள், மாகாணசபைகள் போன்ற கீழ் மட்ட  சபைகளும் அடங்கவில்லை. அவர்களும் சேருமிடத்து இந்த எண்ணிக்கை 300 ஐ தாண்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை அல்லது இந்திய வம்சாவளியினரை இந்திய அரசாங்கம் மூன்றாக வகைப்படுத்தியுள்ளது. ஒன்று, வதிவற்ற இந்தியர்கள் ( Non Resident Indians – -NRI) இரண்டு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (Overseas Citizen of India- –OCI) மூன்றாவது (People of Indian Origin –- PIO)  முதலாம் பகுதியினரான வதிவற்ற இந்தியர்கள் (NRI) முழுக்க முழுக்க இந்திய குடிமக்கள். தொழில் நிமித்தமாகவோ அல்லது கல்வித்தேவைகளுக்காகவோ தற்காலிகமாக வெளிநாடுகளில் தங்கியிருப்போர். இவர்கள் இந்திய வாக்குரிமையுடைய இந்திய பிரஜைகள். இவர்கள் தற்காலிகமாக இந்தியாவுக்கு வெளியே தங்கியிருக்கின்றார்கள் எனும் பொருள்படவே அவர்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். 

இரண்டாவது பகுதியினரான வெளிநாடு வாழ் இந்தியர்கள் (OCI) இவர்கள் இந்தியர்கள் தான். ஆயினும் இந்திய பிரஜைகளாக அல்லாதவர்கள். வெளிநாட்டு பிரஜைகளான இவர்கள் (OCI) எனப்படும் விசா அனுமதியைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக இரட்டை பிரஜாவுரிமைக்கு நிகரான ஓர் அந்தஸ்தினை இந்தியாவில் அனுபவிக்க முடியும். இது இரட்டைக் குடியுரிமையும் இல்லை. வாக்களிக்க முடியாது, விவசாய காணிகளை இவர்கள் கொள்வனவு செய்ய முடியாது. தவிர ஏனைய உரிமைகளை இவர்கள் இந்தியாவில் அனுபவிக்க முடியும். 

இந்த அட்டை (OCI) வைத்திருக்கும் ஒருவர் தனியான விசா அனுமதிகளின்றி இந்தியாவுக்கு சென்று வரமுடியும். இந்த (OCI) அனுமதி அட்டையை  பெறுவதற்கு ஒருவர் தான் அல்லது தனது மூதாதையர் இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை இந்தியாவில் உறுதிப்படுத்த வேண்டும். தான் வாழுகின்ற நாட்டில் உள்ள இந்திய அடையாளங்கள் இதற்கு ஏற்புடையதாகாது. அவரது இந்தியாவுடனான வழிவந்த தலைமுறைத் தொடர்புகள் சொத்துகள் பற்றிய உறுதிப்படுத்தலை இந்திய அரச நிர்வாக மட்டம் உறுதி செய்கின்ற பட்சத்திலேயே இவர்கள் (OCI) அட்டையை அந்தந்த நாட்டு இந்திய உயர்ஸ்தாணிகரங்கள், தூதரகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். 

மூன்றாவது வகைப்படுத்தலான இந்திய வம்சாவளி மக்கள் (PIO)  முழுக்க முழுக்க வெளிநாட்டவர். ஆனால் இந்திய வம்சாவளியினர். இவர்கள் இந்தியாவுக்கு செல்வதற்கு விசா அனுமதி பெறவேண்டும். (OCI) பகுதியினர் பெறும் சலுகைகளை அனுமதிக்க முடியாது. எனினும் வியாபாரநடவடிக்கைகளுக்கோ அல்லது உயர்கல்வி வாய்ப்புகளுக்கோ இந்த (PIO) தகுதி ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும். இதற்கு (PIO) எனும்  அட்டையினை இந்திய அரசாங்கத்திட்டம்  விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். 

இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் இந்திய வம்சாவழியினராக உள்ள போதும் கூட அவர்கள் மேற்கூறிய எந்த வகைப்படுத்தலுக்கும் உள்ளானவர்கள் இல்லை. முதல்  வகைப்படுத்தலில் (NRI)  அவர்கள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இரண்டாவது வகைப்படுத்தலான (NRI) இல் இவர்கள் இடம்பெற வாய்ப்புண்டு. எனினும் தற்போது ஐந்தாவது தலைமுறையினர்களாக வாழும் மலையகப்பெருந்தோட்ட மக்கள் தமது மூதாதையர்  தமிழ்நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை  சமர்பிப்பதும் அந்த OCI அனுமதியைப்பெறுவதற்காக பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டியிருப்பதும் நடைமுறைச்சாத்தியமற்ற விடயமாகவே அமைந்து காணப்படுகின்றது. 

இதனால் இன்றுவரை தமது தலை முறைத்தொடர்புகளைப் பேணிவருகின்ற மேற்தட்டு இந்திய வம்சாவழியினரே OCI அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  சிலர் வியாபார நோக்கத்திற்காகவும் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்திய வம்சாவளி அல்லாதவர்களும் கூட குறுக்குவழியில் OCI அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.   ஆக இலங்கை வாழ் மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும் தம்மை அடக்கிக்கொள்ளக்கூடிய ஒரே வகைப்படுத்தல் PIO எனப்படும். 

'இந்திய வம்சாவளியினரான மக்கள்' என்பதைப் பெறுவதுதான். உண்மையில் அவர்கள் அப்படித்தான் இலங்கையில் பார்க்கப்படுகின்றார்கள், பதியப்படுகின்றார்கள். ஆனால் இந்திய மட்டத்தில் இந்திய வம்சாவளியினராக மலையகத் தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ளும் எந்த ஆவணமும் வழங்கப்படவில்லை.

 சுருங்கச்சொன்னால் மலையகத் தமிழ் மக்கள் இந்திய வம்சாவளியினர் என்பது இலங்கையில் ஏற்றுக்கொள்ளபட்டு இருக்கின்றதே தவிர இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும் 50 புலமைப்பரிசில் வாய்ப்புகளை பெற்று திரும்பியிருந்தால் பத்து வருடங்களில்  இந்திய பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற 500 பட்டதாரிகள் மலையகம் பெற்றுக்கொண்டிருக்கும். அவர்களில் 100 பேர் விஞ்ஞான பட்டதாரிகளாக இருந்திருக்கும் பட்சத்தில் மலையகத்தில் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் கிடைத்திருப்பர். 

இந்திய நிலையில் ஆவண மட்டத்தில் இந்த தடை இருந்ததன் காரணமாக இந்த அரிய வாய்ப்பினை மலையக பெருந்தோட்ட மாணவர்கள் கடந்த காலங்களில் பெற்று க்கொள்ள முடியாதவர்க ளாகவே ஆனார்கள். இதற்கு பதிலாக OCI அட்டை வைத்திருக்கும் குறிப்பிட்ட வட்டத்தினர் இந்த வாய்ப்புகளை அனுபவித்து வருகின்றனர். அவ்வாறு சலுகைகளை அனுபவிப்பவர்கள் மலையகப் பாடசாலைகளில் ஆசிரியர்களாக வரும் அளவுக்கு இறங்கி வரக்கூடியவர்களாகவும் இல்லை. அவர்கள் , உயர்தொழில் செய்வோராக இந்தியாவிலேயே தங்கிவிட்டவர்களாக அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விட்டவர்களாக அல்லது தலைநகரைத் தளமாகக் கொண்டவர்களாகவே இருந்துவிடுவதுண்டு. 

இந்திய அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவத்தில்  முதலாவது கேள்வியாக நீங்கள் எந்த வகையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனும் கேள்வி அமைந்திருக்கும். அதில் NRI , OCI,  PIO எனும் எந்தவொரு தெரிவையும் மேற்கொண்டு அதற்குரிய ஆவணத்தை காட்டும் சந்தர்ப்பம் மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கு இல்லாமல் போக இந்திய அரசாங்கம் இந்திய வம்சாவளியினருக்காக வழங்கும் இந்த அரிய வாய்ப்பினை பெருந்தோட்டப்பகுதி மாணவர்கள் பெற்றுக்கொள்வது மிக மிக அரிதாகவே அமைந்துவிட்டது. 

உண்மையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் காலத்துடன் ஒப்பிடும்போது இந்த விடயம் முறையாக மேலே கொண்டு செல்லப்பட்டிருக்கும் பட்சத்தில்  மலையகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் தேவையான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் இப்போதைய தேவைக்கு போதுமானதாக இருந்திருக்கும். 
இங்கே புலமைப்பரிசில் விடயம் விபரிக்கப்பட்டது, இந்திய வம்சாவளி எனும் அடையாளத்தை இலங்கையில் சட்டரீதியாக சுமக்கும் மலையகத் தமிழ் மக்கள் உண்மையில் அந்த அடையாள சுமப்பினால் இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெறும் நன்மைகள், அடைந்துகொண்டிருக்க வேண்டிய நன்மைகள் என்ன என்பதை தெளிவுபடுத்துவதற்கே. 

இதற்குமப்பால் இவர்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள் 'இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கல்வி நம்பிக்கைப்பொறுப்பு' (Ceylon Estate Workers Education Trust Fund – CEWET)  எனும் நிதியத்தின் ஊடாக இலங்கையில் உயர்தரத்திலும் பல்கலைக்கழகத்தில் கற்கும்போது வழங்கப்படும் சிறு உதவி தொகையாகும். இது இருபது வருடங்களுக்கு  முன்பு மாதாந்தம் 300 ரூபா என்ற நிலையில் இருந்து தற்போது 750 ரூபாவை எட்டியிருப்பதாக அறிய முடிகின்றது. இவை தவிர கலாசார மண்டபங்கள், கலாசார உபகரணங்கள், புத்தகங்கள், பாடசாலை அபிவிருத்தி நிதிகள் எனும் உள்ளார்ந்த விடயங்களுக்கே மலையக மக்களின் இந்திய அடையாளம் பயன்பட்டுவருகின்றது.  

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் அங்கு மக்களின் சாதாரண வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஐம்பதினாயிரம் வீடுகளை இந்திய அரசு நன்கொடையாக வழங்கியபோது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும் அது வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு 6000 வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையிலேயே 4000 வீடுகள் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு என ஒதுக்கப்பட்டன. 

அதனைக் கட்டுமானம் செய்வதில் இலங்கைத் தமிழ், முஸ்லிம் மக்களின் நிலையில் இருந்து வேறுபட்ட ரீதியான காணிப்பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமான மலையகத் தமிழர் சமூகம் நீண்ட இழுபறிகளுக்கு பின்னரே நான்காயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரமுடிந்தது. கடந்த ஆண்டு இந்திய பிரதமர் இலங்கை வந்ததோடு மட்டுமல்லாமல் மலையகத்துக்கும் விஜயம் செய்தமை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.  

தற்போது இந்திய வீடமைப்புத்திட்டத்தின் எண்ணிக்கை பதினான்காயிரமாக உயர்ந்துள்ளது. இவையெல்லாம் மலையக மக்கள் கொண்டிருக்கும் இந்திய அடையாளத்தினால்தான் என்று சொல்லிவிடவும் முடியாது. ஏனெனில் இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வடக்கு,  கிழக்கு , தெற்கு என பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகின்றது. அதில் ஒன்றாகவே இந்த அபிவிருத்தி உதவிகளைக் கருத முடியும்.

 எனவே இந்த அபிவிருத்தி உதவிக நன்கொடைகளுக்கு அப்பால் மலையகத் தமிழ் மக்கள் சுமக்கும் 'இந்திய அடையாளம்' ஒரு அரசியல் பரிமாணத்தை பெறவேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. உலகெங்கும் வாழும் இந்திய வம்சாவளியினர் தமது இந்திய அடையாளத்தை தத்தமது நாடுகளில் தமது இருப்புக்கான அரசியல் பரிமாணத்துடன் கையாள்வதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை மலையகப் பக்கத்தில் இருந்து அந்த பரிமாணம் அடையப்பெற்றிருக்கின்ற பட்சத்தில் மலையகத் தமிழ் மக்களின் இலங்கை இருப்பு என்பது இன்னுமொரு கட்டத்தை அடைந்திருக்கும். இலங்கைத் தமிழர்கள் அறியப்பட்டதன் அளவுக்கு இந்தியாவில் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் அறியப்படவில்லை என்பது பலரும் அறிந்ததே. இலங்கையில் முஸ்லிம் மக்களின் குறிப்பாக முஸ்லிம் ராமங்களின் அபிவிருத்தி விடயங்களில் அவர்கள் முன்னெடுக்கும்அ ரசியல் நகர்வின்  ஊடாக வளைகுடா நாடுகளின் உதவியுடன்  மேற்கொள்ளப் பட்டுவரும் பிவிருத்தியுடன் ஒப்பிடும் போது மலையக மக்கள் அடைந்துகொண்ட அபிவிருத்தி சொற்பமே.

இந்தியாவிடம் இருந்து பாரிய நன் கொடைகளை எதிர்பார்க்க முடியாத போதும்கூட புலமைப் பரி சில் முதலான கல்விசார் விடயங்களில் அதிக கவனத்துடன் ஈடுபட் டிருக்கும் பட்சத்தில் தற்போதைய நிலைமையைவிட கல்விமட் டத்தில் மலையகம் இன்னுமொர் பரிணாம த்தை அடைந் திருக்க முடியும். அதனை வழங்குவதற்கு இந்திய தயாராக இருக்கின்ற நிலையிலும் மலையகம் தன்னை அதற்கு தயார் செய்து கொண்டிருக்காத அரசியல் நிலைமையே இருந்து வந்துள்ளது. 

தற்போது PIB முறைமைக்கு மாறாக OCI முறைமையைக் கடைபிடிக்கவும் நடை முறைகளை தளர்த்தவும்  இந்தியா முன்வந்துள்ள நிலையில் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள், தமது 'மலையகத் தமிழர்' எனும் தனித்துவ, இனத்துவ அடையா ளத்தை இலங்கை அரசியலில் உறுதிபடுத்தமுனையும் அதேவேளை இந்திய வம் சாவளியினர் எனும் சர்வதேச அடை யாளத்தின் ஊடாக தமது அரசியலை சர்வதேசத்தின் பார்வைக்கு முன்கொண்டு செல்ல வேண்டிய காலம் எழுந்துள்ளது.

(நன்றி - வீரகேசரி, 13.01.2018)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates