Headlines News :
முகப்பு » » தமிழர் வரலாறு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் - த.மனோகரன்

தமிழர் வரலாறு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் - த.மனோகரன்


போலி வரலாற்றில் மிதக்கும் தமிழர் அரசியல் என்ற தலைப்பில் எச்.எல்.டி.மஹிந்தபால என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை நமது சிந்தனையைத் தூண்டுவதாயுள்ளது. அத்துடன் கல்வித்துறையில், வரலாற்று ஆய்வுத்துறையில் இதுவரை நாம் விட்ட அல்லது கண்டுகொள்ளாத பலவற்றைச் சுட்டிக்காட்டுவதாயுமுள்ளது. முதலிலே பல்கலைக்கழகங்கள் கற்பிப்பதுடன் ஆய்வுகள் செய்து உண்மையை வெளிக்கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு ஆறிவூட்டவேண்டும் என்ற கருத்துடைய கூற்றைக்கவனிப்போம். ஆனால் பெரும்பாலான பல்கலைக்கழக சமூகத்தினர் அரசியல் கருத்துகளைக்கூறுவதுடன் வரலாற்று உண்மைகளை ஆராய்வதில்லை. அதுமட்டுமல்ல பக்கச்சார்பான கருத்துகளை வெளிப்படுத்தி நாட்டில் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றனர். இந்நாட்டின் சீரழிவுக்கு அதுவே காரணமுமாகின்றது.

தமிழர்களுக்கெதிரான கருத்தை, எதிர் ப்பை முன்னிலைப்படுத்துவது சிங்கள வரலாறாகக் கொள்ளப்படுவது போன்று சிங்களவருக்கெதிரான கூற்றுகள் தமிழர் வரலாறாகவும் கொள்ளப்படுகின்றது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. திருவாளர் மஹிந்தபால அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பின்வரும் பந்தி கவனத்திற்குரியதாகின்றது. அப்பந்தியில் யாழ்ப்பாணத்தின் வரலாற்றை விரிவானதும், அதிகாரபூர்வமானதுமான எவரும் ஒருபோதும் முன்வைத்ததில்லை. ஆனால் அதேவேளை அவர்களால் கண்டுபிடிக்கக் கூடிய அழுக்குகளுக்கான சிங்கள பௌத்தர்களின் வரலாற்றைத் துருவுவதில் மனச்சாட்சியின் உறுத்தலுக்கு உள்ளாவதில்லை. புராண, வரலாற்று காலக்குறிப்புகளில் இலங்கையில் இந்து சமயத்தின் இருப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறுள்ள நிலையில்,1505 இல் போர்த்துக்கேயர் இலங்கைக்குள் புகுந்தபோது இத்தீவில் மூன்று பிரதான இராச்சியங்கள், தனி அரசுகள் இருந்தன என்பது வரலாற்றுக்கூற்று. வடக்கே யாழ்ப்பாண அரசு என்ற தமிழரசு, மத்திய மலைநாட்டில் கண்டி அரசு, மேற்குப்பகுதியில் கோட்டை அரசு என்பன அவை. நாம் பண்டைய வரலாற்றை நோக்கும்முன் போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு இடைப்பட்ட நிலைமைகளை அறிந்துகொள்வோம்.

சிங்கள அரசு என்று கொள்ளப்படும் கோட்டை அரசு அதன் அரசனான தர்மபாலனால்1580 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி போர்த்துக்கேய அரசுக்கு எழுத்துமூலம் கையளிக்கப்பட்டது. அடிமையாக்கப்பட்டது. போர்த்துக்கேயருக்கு அடுத்து ஒல்லாந்தர் இலங்கைக்குள் புகுந்தனர். அதன்பின் 1782 இல் ஆங்கிலேயர் புகுந்தனர். அதற்கிடைப்பட்ட காலத்தில் 1630 அளவில் போர்த்துக்கேயர் பலத்த போராட்டத்தின் பின்னர் யாழ்ப்பாணத் தமிழரசை கைப்பற்றினர்.

1792 இல் நாட்டுக்குள் புகுந்த ஆங்கிலேயர் 1815 இல் கண்டிய சிங்களப் பிரதானிகளின் உதவியுடன் கண்டி அரசைக் கைப்பற்றினர். அதாவது கண்டி அரசுகாட்டிக்கொடுக்கப்பட்டது. இலங்கையின் மூன்று பிரதான அரசுகளும் அந்நியர் வசமாகின. இவற்றில் சிங்கள அரசு எனப்பட்ட இரண்டும் அந்நியருக்குக்காட்டிக்கொடுக்கப்பட்டும், கையளிக்கப்பட்டும் தமது சுதந்திரத்தை தாமே அந்நியருக்கு அடகு வைத்தன. இது வரலாற்றுப்பதிவு. ஆனால், யாழ்ப்பாணத் தமிழரசு அந்நியருக்குப் பணியாது இறுதிவரை போரிட்டது என்பது வரலாறு. அதேபோல் வன்னியிலிருந்த தமிழ்ச்சிற்றரசும் அந்நியருக்கு அடங்காது இறுதிவரை போரிட்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது.

அண்மைய ஐந்து நூற்றாண்டுகளுக்குள் இடம்பெற்ற இலங்கைத்தீவின் வரலாற்றைக்கூட உரியபடி சரியான முறையில் வெளிப்படுத்த எவரும் முன்வரவில்லை. பாடசாலை மாணவ, மாணவியருக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தர வகுப்புவரை வரலாறு ஒரு கட்டாயபாடமாகவும் அதேபோல் குறித்த தரப்பொதுப்பரீட்சைக்கும் உரிய கட்டாய பாடங்கள் ஆறில் ஒன்றாகவும் உள்ளது. ஆனால், அண்மைய அதாவது ஐந்து நூற்றாண்டுகளுக்குட்பட்ட வரலாறு கூட முழுமையாகக் கற்பிக்கப்படுவதில்லை. பாடத்திட்டங்களும் பாடநூல்களும் கல்வி அமைச்சால் தயாரிக்கப்பட்டாலும் அது குறைபாடுடையதாகவேயுள்ளது. யாழ்ப்பாண மற்றும் வன்னித்தமிழ் அரசுகள் பற்றி விபரம் அற்ற வரலாற்றுப்பாடமே இன்று பாடசாலையில் கற்பிக்கப்படும் வரலாறாகவுள்ளது.

இது தொடர்பாக அதாவது பாடப்புத்தகங்களில் தமிழர் வரலாறு மறைக்கப்படுவதாக புறக்கணிக்கப்படுவதாகப் பலமுறை பத்திரிகையூடாகச் சுட்டிகாட்டினேன். வீரகேசரியும் அவற்றைப் பிரசுரித்திருந்தது. இக்குறைபாடு தொடர்பாக யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதன் பலனாகக் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சின் உயர் அதிகாரிகள், தேசிய கல்வி நிறுவன வரலாற்றுப்பாட அதிகாரிகள், கல்வி வெளியீட்டுத் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர் உட்பட நாமும் கலந்துகொண்டோம்.

அக்கூட்ட கலந்துரையாடல்களில் தமிழர் தரப்பு இதுவரை வரலாற்றுப்பாடத்திலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட முன்வரவில்லையென்று குறைகூறப்பட்டது. தமிழர் வரலாறு இடம்பெறாமைக்கு தமிழர் தரப்பே காரணம் என்று கூறப்பட்டது. தமிழ் வரலாற்றுத்துறைசார்ந்தோர் அக்கறை காட்டுவதில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதில் உண்மையில்லாமலுமில்லை. வரலாற்றுப்பாடத்தில் தமிழர் வரலாறு இடம்பெறவேண்டும் என்று அழுத்திக்கூறி அதனை இடம்பெறச்செய்ய வேண்டும் என்ற ஆர்வமோ, துணிவோ அற்றவர்களா நமது தமிழ் வரலாற்றுத்துறையினர் என்று வேதனைப்படவேண்டியுள்ளது.

தமிழர் தரப்பு தமிழர் வரலாற்றை எடுத்துக்கூறத்தயங்கினாலும், திறந்த மனதுடன், நேர்மையாகத் தமிழர் வரலாற்றை வரலாற்றுப்பாடநூலில் இடம்பெற சிங்கள வரலாற்றாசிரியர்களுக்கும் உரிமை உண்டு. அது கல்வி நாகரிகம். தமிழர் வரலாற்றில் இருதரப்பினரும் தவறுவிட்டுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் ஐரோப்பியர் ஆட்சிக்கால நிகழ்வுகளை உரியபடி வெளிப்படுத்த பாடநூல் தயாரிக்கும் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் தயங்குவதற்கு பின்வாங்குவதற்கு மூன்று காரணங்களை முன்வைக்க முடிகின்றது. இதை கல்வியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் எடுத்துரைத்தேன்.

முதலாவது பண்டைய இலங்கையின் எல்லை அநுராதபுரத்திற்கு அப்பால் இருக்கவில்லை என்ற வரலாற்று நம்பிக்கையானதாயிருக்கலாம். நாட்டுக்கு உரித்தற்ற வெளிநாட்டின் வரலாற்றை நமது நாட்டின் வரலாற்றில் எவ்வாறு இணைப்பது என்ற சரியான நோக்காக இருக்கமுடியும்.

இரண்டாவதாக இனவாத சிந்தனை; அதாவது தமிழர்களும் இந்நாட்டை ஆட்சி செய்துள்ளார்கள். பண்டைய இருப்பைக்கொண்டவர்கள், ஒரு நிலப்பரப்பில் இருப்பைக்கொண்டவர்கள். பழைமையான வரலாற்றை, பண்பாட்டைக்கொண்டவர்கள் என்ற உண்மையை வெளியிடக்காட்டும் தயக்கம் உண்மையை வெளிப்படுத்தவுள்ள வெறுப்பு.

மூன்றாவது தாழ்வுச்சிக்கல். சிங்கள அரசு எனப்படும் கோட்டை அரசு அதன் அரசனால் சுயவிருப்பின் பேரில் போர்த்துக்கேயரிடம் கையளிக்கப்பட்டு தானே அந்நியருக்குத்தன்னை அடிமைப்படுத்திக்கொண்டது. கண்டி இராச்சியம் அங்கிருந்த சிங்களப்பிரதானிகளால் ஆங்கிலேயருக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டது. ஒப்பந்தம் மூலம் சரணடைந்தது. இருந்த ஆட்சியைப் பறித்து ஆங்கிலேயரின் காலடியில் வைத்த வரலாறு கொண்டது.

ஆனால், யாழ்ப்பாணத் தமிழ் அரசு அந்நியரான போர்த்துக்கேயரை எதிர்த்து இறுதிவரை போர் செய்தது. இறுதியில் தோல்வியடைந்தாலும் பணியவில்லை. சரணடையவில்லை. அதேபோல் வன்னியின் தமிழ்ச்சிற்றரசும் ஆங்கிலேயருக்கு அடிமைப்படாமல் இறுதிவரை வீரப்போர் செய்தது என்பது வரலாறு. இவ்வாறு தமிழர்கள் அந்நியருக்கு எதிராக இறுதிவரைபோரிட்ட வரலாறு கற்பிக்கப்படுமானால் அது இரு இனங்களின் நாட்டுப்பற்றின் ஏற்றத்தாழ்வுகளை வரலாற்றில் பதித்துவிடும் என்ற தாழ்வுச்சிக்கலால்தான் தமிழர் வரலாறு தவிர்க்கப்படுகின்றதா என்று கேள்வியெழுப்பினேன்.

விடப்பட்ட தவறுகள் திருத்தப்படும். தமிழர் வரலாறு வரலாற்றுப் பேராசிரியர்கள், கல்விமான்களின் உதவியுடன் இடம்பெறச்செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. எதுவும் நடக்கவில்லை. இக்கூட்டங்களுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினாரென்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆர்வம் செலுத்தவேண்டும். கவனம் செலுத்தவேண்டும்.

போர்த்துக்கேயரின் வருகைக்கு முற்பட்ட அதாவது 1505 க்கு முற்பட்டகால இலங்கைத்தீவின் வரலாற்றில் தமிழர் இருப்பு தொடர்பான வரலாற்றுப்பதிவுகள் இடம்பெறவில்லை. அதுவும் வரலாற்றுப்பாடக்குறைபாடாகும். கி.மு. 543 ஆம் ஆண்டில் இலங்கைத்தீவில் விஜயன் ஒதுங்கினான். அவனுடன் எழுநூறு தோழர்களும் வந்தனர். அவர்களில் ஒருவனாகவிருந்த உபதிஸ்ஸன் என்ற பிராமணன் இலங்கையின் நாலாபக்கங்களிலுமிருந்த ஐந்து சிவாலயங்களைச் சென்று வழிபட்டதாக மகாவம்சம் போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளன. அதை சேர்.போல்.ஈ.பீரிஸ் என்ற வரலாற்றாசிரியரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த ஐந்து சிவாலயங்களும் விஜயன் வருகைக்கும் முற்பட்டது. அதாவது 2561 ஆண்டுகளுக்கு முற்பட்டது. விஜயன் வருகைக்கு 236 ஆண்டுகளுக்குப் பின்பே அதாவது 2325 ஆண்டுகளுக்கு முன்பே தேவநம்பியதீசன் காலத்தில் மஹிந்ததேரரினால் பௌத்தசமயம் முதன்முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்த சமயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பே இலங்கையில் இந்து சமயம் சிறப்புற்றிருந்தது என்பதற்கு உபதிஸ்ஸனின் யாத்திரையே சான்று பகர்கின்றது.

குறித்த உபதிஸ்ஸன் என்ற பிராமணன் வடக்கே யாழ்ப்பாணத்திலிருக்கும் நகுலேஸ்வரம், கிழக்கே திருகோணமலையிலுள்ள கோணேஸ்வரம், மேற்கே மன்னாரிலுள்ள கேதீஸ்வரம் மற்றும் சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம் என்பவற்றுடன் இன்று விஷ்ணு கோயிலாக மாற்றமடைந்துள்ள தெவிநுவரவில் உள்ள தொண்டீஸ்வரத்தையும் சென்று வழிபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது இலங்கைத்தீவில் இந்துத்தமிழர்களின் பண்டைய அதாவது விஜயன் இலங்கைத்தீவில் அடியெடுத்துவைத்த போதிருந்த நிலைமையை தெளிவாக வெளிப்படுத்துகின்றதல்லவா?

குறித்த ஐந்து சிவாலயங்களையும் தமிழர்களின் வரலாற்றை உறுதிப்படுத்தும் சான்றுகளாகக் கொள்வதில் ஏன் தயங்க வேண்டும்? ஏழாம் நூற்றாண்டில் திருக்கோணேஷ்வரம் மீதும் திருக்கேதீஸ்வரம்மீதும் பாடப்பட்ட தேவாரத்திருப்பதிகங்கள் பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கையின் இந்துத்தமிழர்களின் வரலாற்று இருப்பை வெளிப்படுத்துகின்றது.

அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.மு. 205 கி.மு.161 வரை ஆட்சி செய்த எல்லாளன் தமிழன் என்று ஏற்றுகொள்ளும்போது அவனின் வரலாற்றை தமிழர் வரலாற்றிலிருந்து ஒதுக்கமுடியுமா? எல்லாளனுக்கு முற்பட்ட பந்துகாபயன், மூத்தசிவன், தேவநம்பியதீசன், உத்திகன், மகாசிவன் போன்றவர்கள் தமிழர்கள் இல்லையா? அண்மையில் பேராசிரியர் புஞ்சிபண்டா ஏக்கநாயக்க என்பவர் சிங்கள மொழி உருவாகி ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளே ஆகின்றன என்று கூறியிருந்தார். அவ்வாறாயின் சிங்களமொழி உருவாவதற்கு முற்பட்ட காலத்தின் இலங்கையரின் மொழி எது என்ற கேள்வி யெழுகின்றது. இதை விதண்டாவாதம் என்று எவரும் கூறமுடியாது. உண்மையை ஆராய வேண்டும்.

ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் தம்பதெனிய இராச்சியத்தை கி.பி.1236 முதல் கி.பி.1273 வரை ஆட்சி செய்த நான்காம் பராக்கிரமபாகுவின் அரசசபையில் தேநுவரப்பெருமாள் என்ற தமிழ்ப்பண்டிதரால் “சரசோதிமாலை” என்ற வெண்பா வடிவிலான தமிழ்நூல் அரசன் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்றைய குருநாகல் மாவட்டத்தில் தமிழ்மொழியும், தமிழர்களும் பெற்றிருந்த சிறப்பு வெளிப்படுவதுடன் அரசனும், அரசசபையிலிருந்தோரும் தமிழ்ப்புலமை பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது வெளிப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தின் தென்பகுதி யில் இரத்மலானை என்ற இடத்தில் திருநந்தீஸ்வரம் என்ற சிவாலயம் உள்ளது. அதன் வரலாறு மேற்கிலங்கையில் தமிழரின் இந்துக்களின் பண்டைய இருப்பை, சிறப்பை பெருமையை, வளத்தைக் கட்டியம்கூறி நிற்கின்றது. கி.பி.1518 இல் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்ட இவ்வாலயம் பற்றி தனது சிங்கள மொழியிலான காவியமான “சலலிஹினி சந்தேசய” என்ற நூலில் தொட்டகமுவே ராகுல தேரர் என்ற பிக்கு இவ்வாலயத்தில் ஈஸ்வரனுக்குச் செய்யப்படும் பூசைகள் பற்றிக்குறிப்பிட்டுள்ளதுடன் மக்கள் விரும்பும் இனிய தமிழ் மொழியில் தோத்திரம் பாடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த காவியநூல் கி.பி.1454 இல் ஆக்கப்பட்டது.

தோண்டத்தோண்டப் புதையல் கிடைப்பதுபோல் இலங்கையின் தமிழர் வரலாற்றை ஆழமாக ஆராயும் போது பல விடயங்கள் வெளிவரும். தமிழர்களின் பண்டைய வரலாறும் உறுதிப்படுத்தப்படும்.

ஆனால், அதற்கான முயற்சியில் வரலாற்றை கற்று பல்கலைக்கழகங்களில் துறைசார் அறிஞர்களாகவுள்ளோர் துணிந்து ஈடுபடாமலிருப்பது வேதனையானது. மஹிந்தபால கூறுவதுபோல் பெரிய வரலாற்று இடைவெளியொன்றை எதிர்நோக்கியுள்ள தமிழ் வரலாற்றியலாளர்கள் தங்களது அகம்பாவமான அரசியலையும், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையும் செல்லுபடியானதாக்குவதற்கு தமிழ் வரலாறு ஒன்று இல்லையென்பது குறித்து மனம் நொந்து கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழருக்கென்று இந்தநாட்டில் தெளிவான இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உள்ளபோது தமிழர் தரப்பினர் மனம் நோவது ஏன்? சிந்திக்கவேண்டும். நம்மை, நமது வரலாற்று இருப்பை, வளத்தை, பெருமையை நாம் வரலாற்று ரீதியாக அறியத்தடையேன்? தயக்கமேன்?

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates