இன்றுடன் நிறைவுக்கு வருகிறது 2017 ஆம் வருடம். நாளை புதுவருடம் 2018 பிறக்கிறது. வழமைபோல் புதுவருடம் நல்லவைகளைக் கொண்டு வரக்கூடியதாக அமைய வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைந்திருப்பது இயல்பு.
பிறக்கும் புதுவருடம் சுபீட்சம் நிறைந்ததாகவும் பிரச்சினைகள், துன்பங்கள் ஒழிந்ததாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பதில் தவறில்லை.
ஒவ்வொரு வருடமும் வருட பிறப்பின் போது இதனையே நினைக்கின்றோம்; பிரர்த்தனை செய்கின்றோம். ஆனால் நாம் நினைத்தபடி பிரச்சினைகள் தீர்ந்ததா? சுபீட்சம் மலர்ந்ததா? என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
சிலர் இவ்விடயத்தில் வெற்றிபெற்றிருக்கக் கூடும். பலர் வெற்றி பெறாமல் போயிருக்கக் கூடும். ஆனால் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்கின்றோம். அந்த நம்பிக்கைதான் மனிதனின் ஆதாரம். அந்த நம்பிக்கையுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இந்த வருடத்தில் நடந்தவைகளையும் பெற்ற வெற்றிகளையும் நினைத்துப் பார்ப்பதுடன் 2018 இல் செயல்படுத்த வேண்டியவற்றைத் திட்டமிட்டு இலக்கை எட்ட நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும்.
2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை ஒரு முக்கிய விடயமாகும். இந்தமுறை நடைபெறப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாக அமையப்போகின்றது.
அரச நிர்வாக அமைப்பின் ஆரம்பப்படி உள்ளூராட்சி சபைகளாகும். ஜனநாயக அமைப்பில் சகல மக்களும் ஆட்சியில் பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். உள்ளூராட்சி சபைகளிலிருந்தே மாகாண சபை, பாராளுமன்றம் என மக்களின் பங்களிப்பு விரிவடைகின்றது. எனவே தான் உள்ளூராட்சி சபைகளில் மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கையில் உள்ளூராட்சி சபைகளின் பங்களிப்பு நீண்ட வரலாற்றைக்கொண்டதாகவும், வளர்ச்சியடைந்தும் காணப்பட்டாலும் அந்த சபைகளில் இந்திய வம்சாவளியினரின் குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பு குறைவாகக் காணப்பட்டதுடன் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் சேவைகளும், வரப்பிரசாதங்களும் குறைவாகவே இருந்தன என்பதை மறுக்க முடியாது.
இதற்குக் காரணங்கள் பல. அதில் முக்கியமானதுதான் உள்ளூராட்சி மன்ற கட்டமைப்புக்குள் தோட்டப் பிரதேசங்கள் உள்ளடக்கப்படாமையாகும். தோட்டங்கள் ஒரு தனியான தீவு போன்ற கட்டமைப்புக்குள் தோட்ட நிர்வாகங்களுக்குக்கீழ் இருந்தன. எதற்கெடுத்தாலும் தோட்ட நிர்வாகி, முகாமையாளர் போன்றவர்களையே நாட வேண்டியதொரு நிலைமை இருந்தது. இதிலிருந்து விடுபடுவதற்கான சட்டவிதிகளும் இருந்திருக்கவில்லை.
இந்த சட்ட விதிகளைத் திருத்துவது பற்றியோ அல்லது மாற்றங்களைக் கொண்டு வருவதுபற்றியோ அப்போதிருந்த அரசியல் தலைமைகள் அக்கறையின்றியே இருந்தன. அதாவது அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அதனை மலையக அரசியல் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.
இதன் காரணமாக உள்ளூராட்சிச் சபைகளின் மூலம் எந்தவொரு சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதுடன் அதில் பிரதிநிதிகளாக இடம்பெறுவதற்கும் போதிய சந்தர்ப்பங்கள் இல்லாமல் போனது. எனினும் கால மாற்றத்திற்கேற்பவும், கற்ற சமூகத்தின் வளர்ச்சிக்கேற்பவும் மலையக மக்களுக்கான உரிமைகளும், அடிப்படைத்தேவைகளும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது.
கல்வியில் இன்று ஒரு வளர்ச்சி நிலை காணப்படுகிறது. அதேபோல் தோட்ட மக்களுக்கான காணி உரிமை, தனி வீடு, அடிப்படை வசதிகள், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மலையக அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது. அதன்படி நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அவை நுவரெலியா, கொட்டகலை, அக்கரப்பத்தனை, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா என்பனவாகும்.
இந்த ஆறு பிரதேச சபைகளிலும் பெரும்பாலும் (இரண்டைத் தவிர) பெருந்தோட்டத் தமிழ் மக்களே அதிகமாக வாழ்கின்றனர். எனவே அனைத்து சபைகளையும் கைப்பற்றக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தப் பிரதேச சபைகளைக் கைப்பற்றுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் வாக்களிக்க வேண்டும்.
இம்முறை போட்டிகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. சகல தேசிய கட்சிகளும் மலையகக் கட்சிகளை பங்காளிகளாக இணைத்துக்கொண்டு தேர்தலில் குதித்துள்ளன. ஒரு சில கட்சிகள் சொந்தச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
அதேவேளை நகர சபைகள் மற்றும் மாநகர சபை என்பனவற்றை தேசிய கட்சிகளுக்கே விட்டுக் கொடுக்கும் உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது
பிரதேச சபைகளை மலையக தமிழ் கட்சிகளுக்கும் நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளை தேசிய கட்சிகளுக்கும் விட்டுக்கொடுக்கும் அடிப்படையில் ஒரு சில மலையகக் கட்சிகள் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் மலையக மக்கள், சிறந்த சேவை செய்யக்கூடிய நேர்மையான, அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய வேட்பாளர்களைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். கடந்தகாலங்களில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பொதுமக்களுக்கு எவ்வாறான சேவை செய்துள்ளார்கள், என்னென்ன நன்மை செய்தார்கள் என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
சிலர் பெரும் சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டவர்களாகவும், காணிகளை கைப்பற்றியவர்களாகவும், ஆடம்பரமாக வாகன வசதிகளுடன் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். சிலர் சுயநலன்களுக்காக கட்சிமாறிகளாகவும் உள்ளனர்.
இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும்.
இவர்களைப் போன்ற சமூக விரோதிகளுக்கு இந்தத் தேர்தலின் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும். அதேவேளை, சேவை செய்யக்கூடிய சமூக சிந்தனையுடைய புதிய யவர்களைத் தெரிவு செய்து சபைகளுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் மலையக மக்களின் ஒற்றுமை வெளிப்படுத்தப்படும் வகையில் வாக்களிக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் மேலும் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து கொண்டு செயல்பட வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...