தேர்தல் ஒன்று வந்தாலே பலருக்கு கொண்டாட்டமாகவும் சிலருக்கு திண்டாட்டமாகவும் இருப்பது வழக்கமாகும். அரசியல் என்பதே சூதாட்டம் நிறைந்த ஒன்றாகும். ''சின்ன மீனைப்போட்டு பெரியமீனைப் பிடிப்பதே'' தலைமைகளின் எண்ணமாக இருக்கும். ஏற்படப்போகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது, எங்கிருந்து பணத்தைத் தேடுவது என்ற கவலையில் தலைமைகள் தூக்கத்தை மறந்துவிடுவார்கள். நாட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குக் கைகொடுக்க பலர் தாமாகவே முன்வருவார்கள். பாரிய வர்த்தகர்கள் இருசாராருக்குமே உதவி வழங்குவார்கள். யார் பதவிக்கு வந்தாலும் தங்கள் லாபம் குறைவடைந்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் இவர்கள்.
சிறிய கட்சிகளே தடுமாற்றங்களை எதிர்நோக்கும். கட்சி ஆதரவாளர்கள் விசுவாசிகள் என்பவர்களை பின்தள்ளி பணம் படைத்தவர்களை வேட்பாளர் பட்டியலை நிரப்பி விடுவார்கள். இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்குத் தாவுவதும், அந்தக் கட்சியில் இருந்து இந்தக் கட்சிக்குத் தாவுவதும் சர்வ சாதாரணமாக இடம்பெறும். நேற்று வரை வேறு ஒரு மேடையில் இருந்து ஒரு தலைவரை வாயில் வந்தபடி திட்டித்தீர்த்தவர்கள் இன்று திட்டப்பட்ட தலைவரிடம் வந்து சேர்ந்து கட்டவுட்டில் சிரிப்பார்கள். அந்தத் தலைவரும் பணத் தேவைக்காக அவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுத்து விடுவார்.
கட்சியை வளர்க்க தியாகம் செய்து சித்திரவதைப்பட்டு சிறைக்கெல்லாம் சென்ற தொண்டன் வீதியில் நிற்க வேண்டியதுதான். பொதுவாக நாட்டில் நடைபெறும் இந்த நிலைமை மலையகத்திலும் சர்வ சாதாரணமாக இடம் பெறுகிறது. 'அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா' என்று ஆறுதலடைய வேண்டியதுதான்.
தலைமைகளுக்கு வேறு வழியில்லை. கொள்கை பேசிக் கொண்டு பரதேசியாகத் திரியும் தொண்டனை அரசியலில் நிறுத்தி வெற்றி பெற வைக்க முடியாது என்பதே நிதர்சனம் என அவர்கள் எண்ணுகிறார்கள். தேர்தல் நேரத்தில் தொண்டர்களின் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க வழி செய்து கொடுத்து ஆதரவை திரட்டிக் கொள்வதிலேயே அவர்களது நாட்டம் இருக்கும்.
தலைமைகள், வாக்காளர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாத காரணத்தால் அடியாட்களாக தொண்டர்களை அமர்த்திக் கொண்டு வெற்றி பெறுகிறார்கள். எதிர்வரும் ஐம்பது நாட்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இந்த வகையில் தேடிக் கொள்வதே பெரிய விசயம் என தொண்டர்களும் மௌனமாக தலைமைகள் சுட்டிக்காட்டுவோருக்கு வாக்குகளை திரட்டுவதில் இறங்கி விடுகிறார்கள். கடந்த தேர்தல்களில் எதிரணியில் இருந்தவர்களுக்கு எல்லாம் இப்போது வேலைசெய்ய வேண்டியதாக இருக்கிறதே என்று நொந்து கொள்வதைத் தவிர கட்சி விசுவாசிகளுக்கு வேறு போக்கில்லை.
ஆதரவாளர்களைத் திரட்டுவது, பிரசாரக் கூட்டங்களை ஒழுங்கு செய்வது, மேடை அமைப்பது, ஊர்வலம் பேரணிகளை ஒழுங்கு செய்வது, போஸ்டர் ஒட்டுவது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, பணப்பட்டுவாடா செய்வது, உணவுப் பொதிகள், சாராய விநியோகம் என அடியாட்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் காத்திருக்கின்றன. கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கும் மாற்று அணியினரோடு அடிதடியில் இறங்குவது, போலிஸுக்கு செல்வது, விபரீதமானால் சிறைக்கு அல்லது மருத்துவமனைக்குப் போவது என பல்வேறு சவால்களையும் இவர்கள் சந்திக்க வேண்டும்.
வாக்குரிமை எமக்கு மறுக்கப்பட்டிருந்த காலத்தில் வெறும் பார்வையாளர்களாகவே தேர்தல் களத்தில் நாம் இருந்தோம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனிப்பெரும் தொழிற்சங்கமாக அன்று இருந்தது. இ.தொ.காவிலிருந்து ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உருவாகிய பின் இரு தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த போட்டி இருந்தது.
இதன் காரணமாக தோட்ட சேவையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொழிலாளர்கள் இரண்டுபடுவதில் சந்தோசமடைந்தனர். தொழிலாளர்களில் ஒரு சாரார் வேலை நிறுத்தத்தில் இறங்கினால் மற்றவர்கள் தொழிலுக்கு செல்வார்கள். 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பதற்கிணங்க தோட்ட நிர்வாகங்கள் பிளவுகளினால் லாபம் கண்டன.
இ.தொ.காவில் மீண்டும் பிளவேற்பட்டு வீ.கே வெ ள்ளையன் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கம் உருவாகியது. பின்னர் மலையக மக்கள் முன்னணி சந்திரசேகரனால் ஆரம்பிக்கப்பட்டது. ம.ம.முன்னணி தலைவர் வடகிழக்கு மற்றும் உலக தமிழர்களோடு தொடர்புகளை பேணி வந்தார். ஓரளவு அரசியல் விழிப்புணர்ச்சி மலையகத்தில் இதனால் ஏற்பட்டது. ஒரு காலகட்டத்தில் சந்திரசேகரனும் அமைச்சரானார். ஈரோஸ் சார்பில் இராமலிங்கம் பாராளுமன்றம் சென்றார். இன்று தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன சார்பில் மூன்று அமைச்சர்களும் இ.தொ.கா சார்பில் மாகாண அமைச்சர் ஒருவரும் எமக்குக் கிடைத்திருக்கின்றார்கள்.
இ.தொ.கா முதற்கொண்டு ஏனைய அத்தனை தலைவர்களும் மலையக மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு தம்மாலான அனைத்தையும் செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கணிசமான மலையகத்தவர்கள் பட்டதாரிகளாகவும், சட்டத்தரணிகளாகவும், மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளார்கள். தோட்டத்துக்கு ஒரு பட்டதாரி, லயத்துக்கு ஒரு ஆசியர், வீட்டுக்கு ஒரு உயர்தர மாணவன் என்ற நிலை இன்று உள்ளது. எனவே, ஏமாற்று அரசியல் இனியும் எடுபடாது. அடிதடியில் இறங்க தமது பெற்றோரை இவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.
மேலும் மலையகத்தின் பிரதான கட்சிகள் ஆளும் அரசின் பங்குதாரிகளாகவே இருக்கின்றன. எவரும் அரசின் செயற்பாடுகளைக் குறை சொல்ல முடியாது. எனவே தனிப்பட்ட முறையில் வசை பாடுவது குழப்பம் ஏற்படுத்துவற்கான நோக்கமாக இருக்கும். நாகரிகமான சமூகம் நாம் என்பதை நிரூபிக்க பல்வேறு தரப்பினரும் சுமுகமான தேர்தலுக்கு வழிகாண வேண்டும். வன்முறைகளை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...