Headlines News :
முகப்பு » , » ஊடக கார்ப்பரேட்டுகளின் அடிமைகளும், குடிமைகளும் - என்.சரவணன்

ஊடக கார்ப்பரேட்டுகளின் அடிமைகளும், குடிமைகளும் - என்.சரவணன்


ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தெ.ஈஸ்வரன் காலமானார். அது ஒரு செய்தி. நமக்கு அது ஒரு செய்தி மாத்திரமல்ல. இப்போது தமிழ் ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், இலக்கியவாதிகளும் சேர்ந்து கூட்டு ஒப்பாரி வைக்கும் நிகழ்வை இந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் கணிசமான இடத்தை ஆக்கிரமித்திருந்ததைக் கண்டு அயர்ச்சியும், சலிப்பும் தான் எஞ்சுகிறது.

இழப்பு என்பது கொண்டாடத் தக்க ஒன்றில்லைதான். உரிய அனுதாபத்தையும் செலுத்தவேண்டிய ஒன்றும் தான். ஆனால் ஒருவரின் இறப்பின் பாத்திரம் அத்தோடு சுருங்கிவிடக் கூடிய ஒன்றில்லை. குறிப்பாக ஈஸ்வரன் போன்றோரின் இறப்பு.

பெரும் செல்வந்தர்கள், அரசியல் வாதிகள் தமது அக்கிரமம் மிக்க சுரண்டலை மறைக்க ஊடகங்களை தமது கைக்குள் வைத்திருப்பது ஒன்றும் இரகசியமல்ல. அந்த வரிசையில் ஈஸ்வரன் பிரதர்சுக்கு சொந்தமான பல தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் எந்தளவு, சுரண்டலுக்கும், நசுக்குதலுக்கும் பல்லாண்டுகளாக இலக்காகி வருகிறார்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன். நான் இலங்கையில் இருந்த போது எனது அண்ணன் ஒருவர் அங்கு ஒரு சாதாரண தொழிலாளியாக எதிர்கொண்ட பிரச்சினைகளை தினசரி அறிந்து ஆத்திரப்பட்டிருக்கிறேன். ஆமர் வீதியில் உள்ள அவர்களின் தொழிற்சாலையில் தொழிலின் போது கைகளையும், விரல்களையும் மெசினுக்கு பறிகொடுத்து, அவர்கள் இழப்பீடு கூட மறுக்கப்பட்ட சேதியை அறிந்திருக்கிறேன். அங்கு தொழிற்சங்கங்களுக்கு அனுமதி இருக்கவில்லை. தொழிலாளர்கள் தமது சம்பளம், போனஸ், இழப்பீடு, காப்பீடு, தொழிற் காப்புறுதி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் கோர முடியாத அடிமைகளாக பணிபுரிவதை அறிந்த போது நானும் அங்கு ஒரு தொழிலாளியாக உள்ளே நுழைந்து விபரங்களை வெளியே கொணர முயற்சித்திருக்கிறேன். அது சில காரணங்களால் சாத்தியப்படவில்லை.

அப்பேர்பட்ட ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனம் சகல ஊடகங்களிலும் தமது ஆட்களை வைத்திருந்தது. தமது விருந்துகளுக்கு அழைப்பது, பரிசுகளை வழங்குவது, சலுகைகளை வழங்குவது, தமது பொருளாதார அரசியல் செல்வாக்கை இத்தகைய ஊடகர்களுக்கும் பிரயோகிப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. எழுத்தாளர்கள், ஊடகர்கள், இலக்கியவாதிகள் என்போர் தமது நிகழ்வில் இவர்கள் போன்றவர்களை அழைப்பது இப்போது நிகழ்வுகளில் அங்கமாகப் போய்விட்டது. விழாவில் இவர்களுக்கு முன்னுரிமை, அல்லது முதற் பிரதி வழங்குவதன் மூலம் கணிசமான பணவரவும் வைத்துவிடும் என்பதும் இத்தகையவர்களின் எதிர்பார்ப்பு. வசதி குறைந்த படைப்பாளர்கள், இலக்கியவாதிகள் இதற்குள் சிக்கவைக்கப்படுகிறார்கள்.

இத்தகைய கறைபடிந்த முதலாளிகளை புனிதர்களாக வெகுஜன மக்கள் மத்தியில் நிலைநிறுத்தும் பணியை ஊடகங்கள் கச்சிதமாக ஆற்றிவருகின்றன.

ஈஸ்வரன், மகாராஜா போன்ற இன்னோரன்ன பெருமுதலாளிகள் ஊடகங்களால் வள்ளல்களாக ஆக்கப்பட்டுவிடுகிறார்கள். வள்ளல், புரவலர் என்கிற பட்டங்களை வேறு அளித்து விடுகிறார்கள். அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பொன்னாடை போர்த்தல் என்பது சம்பிரதாயமாகவும் கட்டாய சடங்காகவும் ஆக்கப்பட்டுவிட்டன.

ஆக இந்த வள்ளல்களினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பற்றி இதுவரை எந்த ஊடகங்களும் ஒரு..... ஒரேயொரு சம்பவத்தைக் கூட வெளியிட்டது கிடையாது என்பதை அறிவீர்களா? அப்படியான சுரண்டலும், அநீதியும் இழைக்கப்படுவதை அறிந்திருக்கிறீர்களா? அறிய முற்பட்டிருக்கிறீர்களா? கிடையவே கிடையாது.

இலங்கையில் “வெகுசன ஊடகவியல்” என்பது வெகுசனத்துக்கான ஊடகமாக இல்லை. அது முதலாளித்துவ வர்க்க நலன் பேணும் ஊடகமாக பரிணமித்து எவ்வளவோ காலமாகிவிட்டது. குறிப்பாக உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை தேடி ஆராயும் ஊடகவியல் தமிழ்ச் சூழலில் கிடையவே கிடையாது என்பதை அடித்துக் கூற முடியும். தேடி வரும் செய்திகளைத் தாண்டி; செய்திகளைத் தேடிச் செல்லும் ஊடகவியல் செத்துப் போய்விட்டது என்றே கூறவேண்டும். இணைய செய்திகளை தேடித் தேடி வெட்டி ஓட்டும் ஊடகவியல் எங்கெங்கும் ஆக்கிரமித்து விட்டிருக்கிறது என்பதை கவலையோடு சொல்லியாக வேண்டியிருக்கிறது.

ஈஸ்வரனுக்காக கண்ணீர் விடும் ஊடகங்கள் ஈஸ்வரனின் கம்பனியால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீரும் விட முடியாததன் அரசியல் இது தான்.

மலையகத்தில் பல தோட்டங்களையும், இலங்கையில் பல தொழிற்சாலைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஈஸ்வரன்; பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி பெற்ற இலாபத்தின் ஒரு சிறு பகுதியைக் கொண்டு எலும்புத் துண்டுகளாக ஊடகங்களுக்கும், இலக்கிய உலகுக்கும், கோவில்களுக்கும் எறிவதன் மூலம், பொன்னாடைகளையும், வள்ளல் பட்டங்களையும், வெளிநாட்டு தூதுவர் பட்டத்தையும், தேசபந்து பட்டத்தையும் பெற்றுவிட்டார். எப்பேர்பட்ட ஊடகங்களையும், அறிவுசார் செயற்பாட்டாளர்களின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு இந்த அடைவை பெற்றிருக்கிறார் என்பதை நாம் அறியாதபடி செய்த அந்த அரசியல் என்ன என்பதை நேர்மையாக நமக்கு நாம் கேள்வி கேட்போமா நண்பர்களே.

இந்த வர்க்கக் குருட்டுத் தனத்தின் மீது ஒரு சுயவிசாரணையை செய்யும் துணிச்சல் உங்களுக்கு உண்டா ஊடகத் தோழர்களே. நேர்மையுடன் கூறுங்கள்.

தமது மூலதன நிகழ்ச்சிநிரலில் அவர்கள் வெற்றியை ஈட்டிக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் அடிமைச் சேவகர்களான நாம் பகுத்தறிவுக் குருட்டுத்தனத்தில் சிக்கியிருக்கிறோமா இல்லையா? அல்லது நமது ஏழ்மையின் மீது குந்தி நின்று அவர்கள் நடத்தும் நாடகத்தில் இயலாமையால் பீடிக்கப்பட்ட அரங்காடிகளா நாம்?

தமது மூலதனத்தை தற்காத்துக்கொள்ளவும், பெருப்பிக்கவும் கால் நூற்றாண்டுக்கு முன்னரே ஊடக ஆக்கிரமிப்பை செய்த  மகாராஜா நிறுவனம் இன்று ஊடக ஏகபோக நிறுவனமாக பெரு ஆலமரமாக வளர்ந்து விட்டிருக்கிறது. ஊடக ஏகபோகத்தை மட்டுமல்ல, தமது வியாபார ஏக போகத்தையும் பேணிக்கொண்டு அரசியல் அதிகாரத்தை ஆட்டுவிக்கின்ற ஒரு முக்கிய சக்தியாக இன்று இலங்கையில் உருவெடுத்திருப்பது தற்செயல் என்று நினைக்கிறீர்களா?

மகாராஜா நிறுவனம் போன்றவை இலங்கையின் பெரும் ஊடக ஜாம்பவான். பெருமளவு இலங்கை மக்களின் சிந்தனைப் போக்கை தீர்மானிக்கும் முக்கிய சக்தி. வானொலி, தொலைகாட்சி போன்ற முக்கிய இலத்திரன் ஊடகங்களில் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழி ஊடக நுகர்வோரில் கடந்த கால் நூற்றாண்டாக பெருமளவு செல்வாக்கை செலுத்திவரும் பேராபத்து மிக்க சிந்தனைக் கொடுங்கோல் ஜாம்பவான்.

இன்று அரசியல் அதிகார மையத்தை போட்டு ஆட்டுவிக்கின்ற சக்தியாக அது ஆகியிருப்பதை பார்த்து வியக்கின்றோம். அதை எதிர்த்து கருத்து சொல்ல எந்த அரசியல் சக்தியும் தயாரில்லை. அதை விமர்சிக்க எந்த ஆய்வாளர்களும் இல்லை. அதை அம்பலப்படுத்த எந்த ஊடகங்களுக்கும் திராணியில்லை.

இலங்கையில் சுரண்டலின் மூலமும், சட்டவிரோதமாகவும் சேர்த்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக ஆக்குவதற்காகவும் ஊடகத் தொழிலை ஒரு சிறந்த முதலீடாக கருதி பெருமளவு ஊடகங்கள் வெளிக்கிளம்புவதை காண முடிகிறது. இறுதியாக தற்போது மத்திய வங்கி “பணமுறி” விடயத்தில் நேரடியாக தொடர்புபட்ட அர்ஜூன் அலோசியஸ் புதிய பத்திரிகைகளை மும்மொழியிலும் கொணர களம் இறங்கியுள்ளார். ஏற்கெனவே “ஜனயுகய” என்கிற சிங்கள பத்திரிகை தொடங்கியாயிற்று, இந்த மாத இறுதியில் இருந்து தமிழ் பத்திரிகையும் வெளிவர இருக்கிறது. வானொலி மற்றும் தொலைக்காட்சி சானலுக்கான அனுமதிப் பத்திரத்தையும் அவர்கள் ஏற்கெனவே பெற்றுவிட்டார்கள். எனவே வானொலி, தொலைகாட்சி சானல்கள் கூட ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

ஊடகங்கள் எங்கே ஊடகர்களின் கைகளில் இருக்கிறது? ஒட்டுமொத்தமாக பெரும் மூலதன முதலாளிகளிடம் அல்லவா இருக்கிறது. நாம் எல்லோரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் அடிமைச் சேவகர்கள் அல்லவா?

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates