Headlines News :
முகப்பு » , , , , » என்.சரவணனின் "அறிந்தவர்களும் அறியாதவையும்" - தெளிவத்தை ஜோசப்

என்.சரவணனின் "அறிந்தவர்களும் அறியாதவையும்" - தெளிவத்தை ஜோசப்

என் சரவணன் என்னும் அந்தப் பெயரிலேயே ஒவ் வொரு வாசகனுடனுமான ஒரு அன்னியோன்ய உறவின் ஊடாட்டம் இருக்கிறது. அவருடைய எல்லா வாசகர்க ளுக்கும் அவர் என் சரவணன் தான். நடராஜா (தந்தை), சரவணன் என்பதில் வருகின்ற என் (N) அது என்பதெல்லாம் அப்புறம்தான் அந்த உறவின் தன்மையை மேலும் தீர்க்க மாக்குகிற வல்லமை இந்த நூலுக்குமிருக்கிறது. முதலில் அறிந்தவர்கள் அடுத்தது அறியாதவைகள் 

அறிந்தவர்கள் ஒரு சிலரைப் பார்ப்போம் ஹியுநெவில் ரொபட்நொக்ஸ், மெயிட்லண்ட் புல்ஜன்ஸ், பெர்கி யூசன், ஒல்கொட் பிரஸ்கேர்டல், ஜேம்ஸ் டெய்லர், நடே சய்யர், ஆர்த்தர் சி.கிளார்க் என்று செல்கிறது. இந்த நூல் கொண்டுள்ள 25 அறிந்தவர்கள். இவர்களை நாம் ஏதோ ஒருவகையில் அறிந்துவைத்துள்ளோம். அவர்களது செயற்பாடுகள் மூலம் வகித்த பதவிகள் மூலம் அல்லது பெயரளவிலாவது ஆனால் இந்த பிரபலங்கள் பற்றி நாம் அறிந்திராத பல விஷயங்கள் பற்றி இந்த நூல் விரிவாகவும் வரலாற்றுணர்வுடனும் பேசுகிறது.

வரலாற்றை அதனுடைய உள்ளோட்டங்களான சமூக, அரசியல் பண்பாட்டுத்தளங்களின் வழியே அறியத்தரும் இந்த நூல் சரவணனின் ஆழமான வாசிப்புக்கும், வரலாற்று ஆய்வுக்கும், சலிப்புறாத தேடுதலுக்கும் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.

"ஏற்கனவே அறியப்பட்ட விடயங்களை மீண்டும் அறியச் செய்வதற்காக என்னை நான் விரயப்படுத்தத் துணிந்ததில்லை. எனது எழுத்துகள் அனைத்துமே எனக்கு அடுத்ததாக வரும் தேடுபவர்களுக்கு தகவல் கருத்து வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கம் என்று குறிக்கும் சரவணன் ஆங்கிலம், மற்றும் சிங்கள மொழியிலிருந்து அறியக்கிடைக்காத அரிய பல தகவல்களை - தமிழுக்கும் புதிதாக தகவல்களை இந்தக் கட்டுரைகள் மூலம் தருகின்றார். வீரகேசரியின் சங்கமம் பகுதியில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
"எழுதி முடிப்பதற்காக நான் திட்டமிட்டிருக்கும் பட்டியல் மிக நீண்டது. அதற்காக என்னை நிர்ப்பந்திக்க ஒரு வழி வேண்டும். சங்கமம் பகுதியின் ஆசிரியர் என் நட் புக்குரிய ஜீவா சதாசிவம், என்னை சங்கமத்துக்கு எழுதக் கோரியபோது இதுவரை பெரிதாக அறியப்படாதவர்கள் பற்றியும் தமிழில் அறியப்படாத தகவல்களைக் கொண்ட ஒரு பத்தியை வாரா வாரம் எழுத முன் வந்தேன். இந்தக் கட்டுரைகளை வாசித்த பல நண்பர்கள் தங்கள் கருத்துகளை எனக்கு எழுதினார்கள் என்மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் எனக்கு ஊக்கியாக இருந்ததுடன் எனது பணியின் அவசியத்தையும் எனக்கு அதிகமாக உணர்த்தியது"
என்று தனதுரையில் பதிக்கின்றார் நூலாசிரியர் சரவணன்.

70 கள் அல்லது 80 களில் தமிழகத்துத் தீபம் இதழ் முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் என்னும் தொடரை வெளியிட்டது. ஒரு மலையாள நூலின் மொழி பெயர்ப்பு இந்தத் தொடர் தகழி பொற்றேக்காட் பொன்குன்னம் போன்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய பரவலாக அறியப்படாத தகவல்கள் நிறைந்த தொடர் இது அண்மையில் வெளிவந்த முருக பூபதியின் சொல்ல மறந்த கதைகளும் இந்த வகையானதுதான் என்றாலும் சரவணனின் இந்த நூல் உச்சம் தொட்டு நிற்கும் ஒரு வரலாற்று ஆவணம். அவரது சிங்கள மொழி ஆற்றல் அவர் எடுத்துக் கொள்ளும் விடயம் தொடர்பான சிங்கள மொழி நூல்களை நுணுகி ஆராயும் சக்தியைத் தருகின்றது. அவரது வரலாற்று ஆய்வாளப்புலமை அதற்கான வழித்துணையாக இணைந்து செயற்பட்டு உச்சம் தொட வைக்கிறது.

இந்த நூல் இறுதிப்பக்கங்களில் வந்திருக்கும் வாசகக் குறிப்புகளின் கடைசிக்குறிப்பான கலாநிதி சி. ஜெயசங்கரின் குறிப்பு இந்த இடத்துக்கு அவசியமாகிறது.
"21ஆம் நூற்றாண்டின் சமூக அரசியல் உருவாக்கத்தில் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிள் சமூக, அரசியல் நிலைமைகள் பற்றி மீள் பார்வைகள் மிகவும் அவசியமானவை. பெருமளவிற்கு வெற்றிடமாக இருந்துவரும் இவ்விடயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து ஆழ்ந்தகன்ற ஆய்வுகளை பொதுமக்களுக்குரிய விதத்தில் கட்டுரைகளாகவும் பத்தி எழுத்துகளாகவும் கொண்டு வரும் சரவணனின் பணி ஒரு நிறுவனப்பணி. இதற்கான ஆற்றலையும் ஆளுமையையும் அவர் எங்கிருந்து எப்படிப் பெற்றார் என்பதனையும் ஏன் இவ்வாறு இயங்குகிறார் என்பதையும் அறிவுலகம் குறிப்பாக உயர்கல்வி சூழல் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்களாகும். படிப்பும் ஆய்வும் பட்டம் பெறுவதற்கும் பதவி உயர்வு பெறுவதற்குமான தாகச் சுருங்கி விட்டுருக்கின்ற உயர்கல்வி ஆய்வறிவுச் சூழலின் சரவணனின் அறிவியல் இயக்கம் முன்மாதிரியானது...."
இந்த நூலின் முதல் கட்டுரை பல்துறை ஆய்வாளர் ஹியுநெவில் பற்றியது. இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் காலனித்துவ ஆங்கிலேயருக்கு பெரும்பங்குண்டு தொல்பொருள் ஆவணப்படுத்தல் என்பவற்றை ஒரு முறையியலுக்கு கொண்டுவந்து அவற்றைப் பேணிகாத்துவைப்பது பற்றிய பிரக்ஞையும் ஏற்பாடுகளையும் ஆரம்பித்துக் கொடுத்ததில் அவரின் வகிபாகம் மறுக்க முடியாதது என்று ஆரம்பித்து இன்று இலங்கையின் வரலாற்றை சிங்கள பெளத்த வரலாறு நிறுவும் இனவாத போக்கிற்கு ஆதாரங்களைக்கூட பொறுக்கி எடுப்பதற்கு ஆங்கிலேயர்கள் தேடிவைத்த ஆதாரங்களில் இருந்துதான் புனைகின்றனர். என்று செல்கிறது. ரொபட் நொக்ஸ், ஹென்றிமார்ஷல் மெயிட்லண்ட் என்று ஒவ் வொன்றும் தோண்டித் தோண்டி காட்டும் சுரங்கங்கள் வைத்து வைத்துப் படிக்க வேண்டிய ஒரு அறிவியல் ஆய்வு நூல் இது இந்த அரிய நூலை பூபாலசிங்கம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள புத்தக சாலைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates