புதிய தேர்தல் மறுசீரமைப்பின் மூலம் நுவரெலியா மாவட்ட மக்கள் குறிப்பாக, இந்திய வம்சாவளியினர் சற்று மன ஆறுதலுடன் உள்ளனர் எனின் தவறில்லை.
மிக நீண்டகாலமாக பேசப்பட்டும், எழுதப்பட்டும், பல சந்தர்ப்பங்களில் செயற்பாடுகளில் ஈடுபட்டும்தான் இன்று இச்சீரமைப்பு வெளிவந்துள்ளது. இவ்விடத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றி கூறவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அமையும் வட்டாரங்கள் மக்களிடம் நெருங்கிச் சேவையாற்றி வழிவகைசெய்யும் எனலாம். இலங்கையில் மொத்தமாக 4486 வட்டாரங்கள் அமையப்பெற்றுள்ளன. நகர, பிரதேச சபைத் தெரிவு உட்பட விகிதாசார தெரிவுடன் மொத்த உறுப்பினர்கள் 8356 பேர் தெரியப்பட உள்ளனர்.
குறித்ததொரு பிரதேச கலாசாரம், இருப்பு, மொழி என்பனகூடப் பாதுகாக்கப்பட இதனால் வழியேற்படலாம்.
பொதுவாக இலங்கையில் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள் இப்புதிய முறைமை பற்றி மிகத்தெளிவு பெற வேண்டியவர்களாகவும், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்களாகவும் உள்ளனர். பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இவ்வட்டார முறைமை பாதகமாதெனக் கூறமுடியாது அதேவேளை சில வட்டாரங்களில் அவர்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்களோ என்றொரு பயம் அவர்களுக்கு உள்ளது.
விருப்பத் தேர்வுக்கு இப்புதிய முறை சாவுமணி அடித்துள்ளமையால் குறிப்பிட்ட ஒரு கட்சியின் அல்லது ஒரு குழுவினரின் பிரதிநிதிக்கு வாக்களித்திட வாய்ப்பேற்பட்டுள்ளது. இதேவேளை விருப்பத் தெரிவில் பலர் போட்டியிட இருந்த வாய்ப்பு கை நழுவி உள்ளமையால் கட்சிக்குள் பலரை சமாதானப்படுத்திட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதேவேளை உள்ளதில் நல்லதை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
கட்சிக் கொள்கை, தனி நபர்கள் என்று பார்க்கும்பொழுது புதிய தேர்தல் மறுமீரமைப்பு கட்சிக்கும் அப்பால் தனி நபர்களைப் பற்றியும், வாக்காளர்களையும் சிந்திக்க வைத்துள்ளது எனலாம்.
எது எவ்வாறெனினும் தனி அங்கத்தவர் வட்டாரம் பல அங்கத்தவர் வட்டாரம் போன்ற அறிமுகமும் சிலரை கட்டாயம் கட்சிகள் தெரிந்திட வழிவகுத்துள்ளது எனலாம்.
அதிமான வாக்குகளை பெற்றவரே வெற்றி பெறுவார். இதுவே ஜனநாயகம் இதுவே இறுதியானதாக இருக்கும். இது ஒருவகையில் சரி. அதாவது ஜனநாயக தர்மப்படி அதிக வாக்குகளை பெற்றவர் வெற்றிபெறுவார். இதேவேளை 1200 வாக்குகளைபெற வேண்டியவர் 1199 வாக்குகளை பெற்று ஒரு வாக்கால் தோல்வி அடைவதென்பது மற்றொரு வகையில் ஜனநாயக கட்டமைப்பில் உள்ள ஒரு பாரிய குறைபாடாகும். ஆனால் சுவிஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில் தோல்வியிலும் "நல்ல தோல்வி"யை இவர் அடைந்ததாக கருதி அவருக்கும் ஓரிடம் கொடுக்கப்பட அரசியல்/ தேர்தல் சீர்திருத்தத்தில் இடம் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஆ.ரமேஷ் குறிப்பிடுகிறார்.
இவ்வட்டார முறையினால் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள் பரவலாக வாழும் இடங்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கான மாற்றொழுங்கு அல்லது பாதுகாப்பு இச்சிறுபான்மை இனத்தவர்களுக்கு புதிய தேர்தல் மறுசீரமைப்பில் ஏதாவது சரத்துகள் உள்ளதாக தெரியவில்லை.
டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தில் காணப்பட்ட 29 ஆவது சிறுபான்மை இனத்தவர்களுக்கான யாப்பு 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் நீக்கப்பட்டமையும் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிலும்கூட தேசிய சிறுபான்மை இனத்தவர்களுக்கு பெரிய அளவில் ஏதும் நடக்கவில்லை. எனவே தென் மாகாணங்களிலும் சப்ரகமுவ பிரதேசங்களிலும் மேலும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குறைவாக காணப்படும் இடங்களிலும் இவ்வட்டார முறைமை பாதிப்பை ஏற்படுத்திட வாய்ப்புள்ளது.
இதேபோன்று ஊவா மாகாணத்திலும் மத்திய மாகாணத்தின் சில பிரதேசங்களிலும்கூட இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாக்குகள் வீணடிக்கப்பட அரசியல் கட்சிகளின் போட்டா போட்டி தேசிய அல்லது மலையகத் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள், சுயேச்சைக் குழுக்களின் பெருக்கம் குறித்ததொரு வட்டாரத்தின் ஒரு சிறுதொகையான வாக்குகளை சிதறடித்திட வாய்ப்புள்ளது.
பெண்களுக்கான 25 வீத கட்டாய ஒதுக்கீடு இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். வேட்பு மனுவில் 25 வீத ஒதுக்கீடு என்பது பெரிதான ஒன்றல்ல என விமர்சனங்கள் இருந்தாலும் எல்லா சமூகங்களிலும் இதனைத் தேடுவதே சிரமமாக உள்ளதாக கட்சிகள் கூறுகின்றன. பெருந்தோட்டத் துறைகளில் மாத்திரமல்ல தேசிய ரீதியாகவே இந்நிலைமை உள்ளது.
இதற்கான பிரதான காரணம் பெண்கள் முன்வந்து அரசியலில் ஈடுபடாமை அல்லது அவ்வாறு ஈடுபட்டாலும் ஆணாதிக்க சமூகத்தில் அவர்களுக்கான “இடத்தை” ஆணோடு சமமாக வழங்காமை, சரியான ஒரு கணிப்பை அவர்களுக்கு வழங்காமை இப்படி பலவற்றைக் கூறலாம். ஆனால் தற்பொழுது தொழிற்றுறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுவது போல அரசியலிலும் ஈடுபடலாம். இதற்கு இன்றைய ஆசிரியர் தொழிலே உதாரணமாகலாம். இவைகளுக்கு காலம் பதில் சொல்லுதல் வேண்டும். பெண்கள் மீதான ஓரங்கட்டலை நீக்கிடவும் சமூகத்தின் அந்தஸ்தில் தனக்கென ஓரிடம் பெறவும் இப் பெண்களுக்கான 25 ஒதுக்கீடு ஒருவகையில் வழிவகை செய்துள்ளது.
எவ்வகையான அரசியல் மறுசீரமைப்புகள் தேர்தல் முறைகளில் வந்தாலும் ஒற்றுமையுடன் வாக்குகளை பயன்படுத்துவதிலேயே அதன் பயன் தங்கி உள்ளது.
செல்வாக்கான கட்சிகள், தொழிற்சங்கங்கள் இதனால் பயன்பெற வாய்ப்புள்ள அதேவேளை சிறுசிறு குழுக்களான சுயேச்சை தரப்பினர் கடும் பிரயத்தனங்களை செய்ய வேண்டிவரும். மறுபுறம் கூறுவதனால் சிறுதொகையினரின் ஜனநாயக பங்கேற்பு, அபேட்சகராகும் எண்ணம், உரிமை இழக்கப்படலாம். எல்லாம் இப்புதிய முறை தேர்தலின் பின்னரே வெளிச்சத்திற்கு வரும் பொறுத்திருப்போம்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...