Headlines News :
முகப்பு » , , , , » இந்திய இராணுவம் : இலங்கை அனுபவம்! (1915 கண்டி கலகம் –30) - என்.சரவணன்

இந்திய இராணுவம் : இலங்கை அனுபவம்! (1915 கண்டி கலகம் –30) - என்.சரவணன்


1915இல் இராணுவ அட்டூழியங்களை நிகழ்த்தியதில் மிகப் பெரிய பாத்திரம் இந்திய இராணுத்திற்கு உண்டு. இலங்கைப் பொலிசாரை விட இந்த விடயத்தில் பிரித்தானிய இராணுவம் தமக்கு உதவியாக இந்திய பஞ்சாப் இராணுவத்தையே பயன்படுத்திக்கொண்டது. இவர்கள் குரூரமான முறையில் ஈவிரக்கமின்றி கொலை செய்வதிலிருந்து, கொள்ளையடிப்பது வரை தமது அட்டகாசங்களை செய்திருந்தனர் என்பது வேவ்வேறு பதிவுகளில் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆளுநர் சாமர்ஸ்  (Governor Robert Chalmers) டெல்லிக்கு தகவல் அனுப்பி போர்க்கள அனுபவமுள்ள அதுவும் குறிப்பாக ஆப்கானிலும் வடமேற்கு எல்லையோர முன்னரங்கிலும் போரிட்டு அனுபவம் பெற்ற “28 வது படையினரை” அனுப்பிவைக்குமாறு கோரி அவசர கடிதம் அனுப்பிவத்த்தார். சாமர்ஸ் இது விடயத்தில் அதீதமாகவே நடந்துகொண்டார் என்று பின்னர் பலர் விமர்சித்தனர்.

“28 வது படையினர்” (28th Punjabis) எனப்படும் படையணியானது 1857 இல் ஆங்கிலேயர் ஆரம்பித்த விசேட படையணி. முதலாவது உலக யுத்த காலப்பகுதியில் இலங்கையில் நிலைகொள்ளத்தக்க வகையில் அவர்களில் ஒரு பிரிவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். 1915 கலவரத்தை அடக்குவதற்கென்று மேலதிகமாக 200 பேரைக் கொண்ட படையினர் அழைக்கப்பட்டார்கள். இதில் ஒரு விசேடத்தன்மை உண்டு.  அது என்னவென்றால் அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் பஞ்சாபிகள். கலவரத்தை “நசுக்குவதற்கு” ஆங்கிலேயர்கள் உள்ளூர் படையைக் கூட பயன்படுத்தவில்லை. இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள். அதுவும் முஸ்லிம் பின்னணியைக் கொண்ட படையை இலங்கைக்குள் இறக்கினார்கள். முஸ்லிம் படைகளைக் கொண்டு சிங்களவர்களை அடக்கினார்கள். உள்ளூர் முஸ்லிம் சிங்கள முறுகலை மேலும் சிக்கலாக்குவதாக இது அமைந்தது.

நூற்றுக்கணக்கான சிங்களவர்களை மிலேச்சத்தனமாக கொலைசெய்யவும், சித்திரவதை செய்யவும் இவர்களை பயன்படுத்துவது இலகுவாக இருந்தது. இதனை ஒரு முஸ்லிம் - சிங்கள கலவரமாக பெருப்பித்து காட்டுவதன் மூலம் பஞ்சாப் படையினரை சிங்கள எதிர்ப்பு படையாகவே வழிநடத்தினர் என்றால் அது மிகையாகாது.

ஆர்மண்ட் டி சூசா, இராமநாதன், ஈ.டபிள்யு பெரேரா போன்றோர் எழுதிய நூல்களில் அதிகமாக இந்த பஞ்சாப் படையினர் பற்றி பேசப்படுகிறது.

கிராமங்களில் வெளித் திண்ணையில் படுத்துறங்கியவர்கள் கூட இவர்களால் சுடப்பட்டிருக்கிறார்கள், இராணுவச் சட்டத்தின் போது பாதையில் காண்பவர்கள், தெரிபவர்கள் கூட சுடப்பட்டிருக்கிறார்கள். தம்மால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சந்தேகநபர்கள் அளித்த பதிலை விளங்கிக்கொள்ளாத காரணத்திற்காகவும் சுடப்பட்டார்கள்.

கொள்ளையடிக்கப்பட்டவற்றை தேடுதல் நடத்துவதும் இவர்களின் பணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால்  ஒரு கட்டத்தில் அவர்களே கொள்ளைகளிலும் ஈடுபட்ட்டதுடன், பெண்களை தொந்தரவு செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள், சில இடங்களில் ஒட்டுமொத்த கிராமத்தவர்களும் கைதுக்குள்ளாகியிருக்கிறார்கள். 

“மாசுலோ” (Martial law) என்று சாதாரண பொதுமக்களால் அறியப்பட்ட ஊரடங்குச் சட்டம் வெளியே சென்றால் கொல்லப்படுவோம் என்று பிற்காலங்களில் பேசப்படுவதற்கும் இந்த அனுபவங்களே காரணமாயின.

ஆரம்பத்தில் கண்டியில் நிகழ்ந்த சம்பவங்களின் போது மக்கள் ஒன்று கூடி சாத்வீகமான எதிர்ப்பை செய்த வேளைகளில் பஞ்சாப் படையினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனை விட முக்கியமான சம்பவம் என்னவெனில், பலராலும் அறியப்பட்ட கண்டி காலதெனிய விகாரையின் பிரதம பஸ்நாயக்க நிலமே வல்கம்பே  (F. B. Walgampahe) பஞ்சாப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவரின் உடல் பிணமாக சிறையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
1915 ஜூன் 3ஆம் திகதியன்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் டவ்பிகின் (H. L. Dowbiggin) ஆயுதம் தாங்கிய பஞ்சாப் படையினரையும் அழைத்துக் கொண்டு கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி ரயிலில் புறப்பட்டு வந்தார். எப்போது மீரிகமைக்கும் வேயங்கோடவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தெருவோரோத்தில் இருந்து குழுமி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி கிராமவாசிகள் மீதி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

உத்தியோகபூர்வமாக அரசாங்கம் எதனையும் இது குறித்து வெளியிடவில்லை. ஆனால் ஜூன் 5 வெளியான சிலோன் மோர்னிங் லீடர் (Ceylon Morning Leader) பத்திரிகையில் ரயிலில் டவ்பிகின்னோடு 28 பஞ்சாப் படையினர் இருந்தார்கள் என்றும் சுற்றிவர கண்மூடித்தனமாக மேகொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 35 அப்பாவி கிராமவாசிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பலர் காயப்பட்டதாகவும் அந்த செய்தியில் இருந்தது. அதுமட்டுமன்றி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிட மேலதிகமாக இருக்கக்கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பஞ்சாப் படையினரால் கைது செய்யப்பட்ட டீ.எஸ். சேனநாயக்க (சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர்) இப்படி குறிப்பிடுகிறார். அப்போது அவருக்கு வயது 32.

“08.06.1915 அன்று கருவாத்தோட்டத்திலுள்ள எனது பங்களாவுக்குள் திடீரென்று புகுந்த பஞ்சாப் படையினர் உள்ளிட்ட இன்ஸ்பெகடர் குழு எனது வீட்டை கடுமையாக பரிசோதனை செய்தது. எதையோ தேடி வந்தவர்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர்கள் திரும்பிவிட்டனர். ஆனால் மீண்டும் 21ஆம் திகதி அதிகாலை  மீண்டும் வந்த பஞ்சாப் படையினர் என்னை கைது செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர். எந்த காரணமும் எனக்கு சொல்லவில்லை. வெலிக்கடைக்கு கொண்டு சென்றபோது அங்கே பல மதிப்புக்குரிய கனவான்கள் என்னைப் போன்றே கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன். குந்தியிருக்க எதுவும் இருக்கவில்லை, மோசமடைந்த உணவை தள்ளிவிட்டுச் செல்வார்கள். இரு நாட்கள் எதுவும் உண்ணவில்லை. அதன் பின்னர் வெளி உணவுகள் அனுமதிக்கப்பட்டன. ஓகஸ்ட் 5 அன்று 46 நாட்களின் பின்னர் நான் விடுவிக்கப்பட்டேன். அதுவும் 10,000 பிணையிலும் 50,000 சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டேன். முஸ்லிம் மக்களோடு எப்போதுமே நல்லுரவை பேணிவந்த என்னை அவர்களுக்கெதிரான வன்முறையை மேற்கொண்டதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.”

14.06.1915 பொன்னம்பலம் இராமநாதனுக்கு டீ.எஸ்.சேனநாயக்கவின் சகோதரரான எப்.ஆர் சேனநாயக்க எழுதிய கடிதத்தில்...

“ஜூன் 1 அதிகாலை 8 மணியளவில் எனது சகோதரன் டீ.எஸ்.சேனநாயக்கவின் வீட்டுக்கு அருகில் வாழும் ஒருமுஸ்லிம் மனிதர் பதட்டத்துடன் டீ.எஸ்.சேனநாயக்கவின் வீட்டுக்கு ஓடி வந்தார். தன்னை அந்த சண்டியர் கும்பலிடமிருந்து பாதுகாக்குமாறு அவர் வேண்டினார். நானும் எனது சகோதரனும் அந்த கும்பலைத் தேடிப்போனோம். அந்த முஸ்லிம் குடும்பத்தை அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்தான் தம்பி டீ.எஸ்.சேனநாயக்க.”

இப்படியாக சாதாரண ஜனநாயக சிவில் சட்டத்தை தலைகீழாக புரட்டி தன்னிச்சையாக விரும்பியபடி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டன. சகல சட்டவிரோத கொலைகளுக்கும் சட்டப்பாதுகாப்பு வழங்கியதும் இந்த இராணுவச் சட்டம் தான்.

1915இல் ஜூன் மாதம் வரவழைக்கப்பட்ட பஞ்சாப் படையினர் 1916 ஜனவரி வரை இலங்கையில் நிலைகொண்டிருந்தனர். இரண்டாம் உலக மகா யுத்த காலமென்பதால் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கு துணைப்படையாக அனுப்பட்டட்டனர்.

இந்திய இராணுவத்தின் பாத்திரம்
இந்திய இராணுவம் என்றாலே பீதியைக் கிளப்பும் வகையில் மக்கள் மத்தியில் ஒரு கருத்துநிலை இருப்பதற்கு பல வரலாற்றுக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஹென்றி பெதிரிசை கைது செய்வதிலிருந்து அவரை சுட்டு மரணதண்டனை நிறைவேற்றியவர்களும் பஞ்சாப் படையினரே. இலங்கையின் முக்கியத் தலைவர்களின் வீடுகளை வீடு வீடாக நுழைந்து பொருட்களை இழுத்துப்போட்டு தேடுதல் நடத்தியதும், அவர்களை பின்னர் கைது செய்து அடித்ததும் இவர்களே. இவை இராணுவ ஆணை என்று வெறுமனே கருதி விடமுடியாது அவர்களின் மிலேச்சதனமான அணுகுமுறைகளைப் பார்க்கும் போது; அவர்கள் அத்தகைய ஆணைக்கும் மேற்படியாகவே நடந்துகொண்டார்கள் என்பதை அனைத்து சம்பவங்களும் மெய்ப்பிக்கின்றன.
1915 நிகழ்வுகளில் போது மட்டுமல்ல, அதன் பின்னர் 1971, 1987 போன்ற காலப்பகுதிகளில் இந்திய இராணுவத்தின் அனுபவக் கொடுமைகளை இலங்கையர்கள் இன்னமும் மறக்கவில்லை.

1971இல் ஜே.வி,பி கிளர்ச்சியின் போது நாடு கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டுவிடும் என்கிற பீதியில் பல உலக நாடுகளின் உதவியைக் கோரியிருந்தார் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க. அதன்படி இந்தியா மட்டுமன்றி, பாகிஸ்தான், சீனா, அமேரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் இருந்து துரித உதவி கிடைத்தன. குறிப்பாக வான், கடல்வெளி ரோந்துச் சேவை, விமானத்தளங்கள், படைத்தளங்கள் என்பவற்றுக்கு பாதுகாப்பளித்தல் போன்றவற்றை அந் நாடுகள் செய்தன.

ஆனால் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உதவியின் பேரில் பெருமளவு இந்தியப் படையினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டதுடன் அவர்களே காடுகளில் கிளர்சியாளர்களைத் தேடி வேட்டையாடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட சிங்கள இளைஞர்களை அவர்கள் சித்திரைவதை செய்து கொன்ற விதம் குறித்து பல்வேறு சிங்கள நூல்களில் பதிவாகியுள்ளன.

அதன் பின்னர் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 80,000 மேற்பட்ட “இந்திய அமைதி காக்கும் படையினர்”  (IPKF) இலங்கையில் நடத்திய அட்டூழியங்களைப் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை விரிவான பெரிய அறிக்கையே வெளியிட்டிருந்தது. பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், படுகொலைகள், ஊர்களையும், கிராமங்களையும் சூறையாடல் என அவர்கள் தமிழர்களின் வெறுப்பையும், ஆத்திரத்தையும் சம்பாதித்துக்கொண்டார்கள். இந்த எதிர்ப்பின் விளைவு : இந்தியப்படயினரில் 1200 பேர் போராளிகளால் கொல்லப்பட்டார்கள். அதுபோல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் அவர்களால் கொல்லப்பட்டார்கள். அதுமட்டுமன்றி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பின்னர் கொல்லப்படவும் இந்த இந்தியப்படை காரணமானது. இலங்கையில் அரசியல் திசைவழியைத் தீர்மானித்ததில் இந்தியப் படைக்கு முக்கிய பாத்திரமுண்டு.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates