1915இன் வரலாற்றுப் பதிவு என்பது ஒரு மதக் கலவரமாக மட்டும் குறுக்கும் பதிவுகளை நாம் எங்கெங்கும் காண முடியும். ஆனால் வெறும் ஒரு சில நாட்களுக்குள்ளேயே அடங்கிப்போன ஒரு கலவரத்தை மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக ஆக்கியது அதன் பின் வந்த நாட்களில் நடந்தவை தான். கலவரத்துக்கும் அவற்றுக்கும் சம்மந்தமே இருக்கவில்லை. மிகப்பெரிய கலவரம் நடக்கும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிரிட்டிஷார், கலவரம் அடங்கியதன் பின்னர் கலவரத்தை அடக்குவதாகக் கூறிக்கொண்டு மிலேச்சத்தனமான அடக்குமுறையில் இறங்கியிருந்தனர். இராணுவச் சட்டமும், இராணுவ நீதிமன்றமும் அநாவசியமாக உருவாக்கப்பட்டு இலங்கையர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்தார்கள். எழுச்சி பற்றிய கனவு கூட இலங்கையர்களுக்கு உருவாகக் கூடாதவகையில் பாடம் கற்பிக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது.
ஆங்கிலேயர்கள் இதனை ஒரு கலகம் அடக்கும் வழிமுறையாக பாவிக்கவில்லை என்பது வெளிப்படை. அன்றைய சூழலில் உலக நாடுகள் பலவற்றில் தோன்றியிருந்த பதட்ட நிலை ஆங்கிலேயர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருந்ததுடன், முன்னெச்சரிக்கையாக தற்காப்பு நிலை எடுக்கத் தலைப்பட்டனர் என்று குமாரி ஜெயவர்த்தன தனது நூலில் தெளிவுபடுத்துகிறார். அப்போது முதலாவது உலக யுத்தம் தொடங்கி ஒரு வருடம் ஆகியிருந்தது. ரஷ்ய தொழிளார்களின் சோஷலிச புரட்சி ஆரம்பமாகியிருந்தது. அயர்லாந்து, இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளிலும் உள்நாட்டு கிளர்ச்சிகள் வெடிக்கத் தொடங்கியிருந்தன.
வெறும் சீர்திருத்த கோரிக்கைகளோடு மட்டும் மட்டுப்படுத்திக்கொண்டு மிதவாத சமரச அரசியலை மேற்கொண்டிருந்த இலங்கைத் தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அத்தனை பெரிய தலையிடி கொடுக்கவில்லை தான். ஆனால் பௌத்த – கத்தோலிக்க முரண்பாடுகள் ஆங்கிலேய - கத்தோலிக்க - வெள்ளையர்களுக்கு எதிரான மனநிலையை அதிகரிக்க செய்துகொண்டிருந்தது. நேரடியான சுதந்திரம் கோரும் தேசிய இயக்கங்கள் தோற்றம் பெறாவிட்டாலும் மதுவொழிப்பு இயக்கம் போன்ற அமைப்புகள் ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கங்களாக வளரத் தொடங்கியிருந்தன. அதேவேளை சீர்திருத்த கோரிக்கைகள் மெதுவாக வலுக்கத் தொடங்கியிருந்தன. இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய 1915 கலவரத்தை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்றே கூறவேண்டும்.
கலவரம் முற்றிலும் அடங்கிய பின்னர் ஏறத்தாள 100 நாட்களுக்குள் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய பயங்கரவாதம் இதனை வெளிப்படையாக தெளிவுபடுத்துகிறது. (1915 ஜூன் 2 – ஓகஸ்ட் 30 வரை அமுலிலிருந்த இராணுவச் சட்டத்தை ஆர்மண்ட் டி சூசா “100 நாள் இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கை” என்றே அழைக்கின்றார் “Hundred Days in Ceylon under Martial Law : 1915”). கூடவே கலவரத்தில் தொடர்பில்லாதவர்களை தண்டித்த விதமும், மதுவொழிப்பு இயக்கத்தை வழிநடத்திய தேசிய மிதவாதத் தலைவர்களை கைது செய்து சிறையிலடைத்த விதமும் ஆங்கிலேயர்களின் உள்நோக்கத்தை தெளிவுறுத்துகிறது.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கும், சட்ட ஒழுங்கை மீறி அமைதியை குழப்பும் எவரையும் சுட்டுத் தள்ளுவதற்கு ஏற்கெனவே இருந்த சாதாரண சட்டமே ஆங்கிலேயர்களுக்கு அன்று போதுமானதாக இருந்தது. கலவரத்தின் போது அந்த சட்டத்தைக் கூட பயன்படுத்தாது கலவரம் முடிந்ததன் பின்னர் இராணுவச் சட்டத்தின் மூலம் எதனை சாதிக்க நினைத்தது ஆங்கிலேய அரசு.
படையினருக்கு வழங்கப்பட்ட கட்டற்ற அதிகாரம் பலரை கண்ட இடத்தில் காரணமின்றி சுட்டுத்தள்ள வழி சமைத்தது. சந்தேகத்தின் பேரில் கைது செய்வது, காரணமின்றி தடுத்து வைத்திருப்பது, அவர்களின் விசாரணையை இழுத்தடிப்பது, பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது, அதன்பிரகாரம் கடும் தீர்ப்புகளை வழங்குவது, எதிர்த்து வாதிட வாய்ப்பு மறுப்பது, முறையீடுகளை மறுப்பது, வேகமாக தண்டனைகளை நிறைவேற்றுவது என்பன தொடர்ச்சியாகவும், வேகமாகவும் நிகழ்ந்தன. இராணுவ சட்டம்! ஆதலால் எந்த நீதி விசாரணைக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கட்டளை அதிகாரியான கெப்டன் நோர்த்கோட் (L.A.NORTHCOTE, Captain) கொடூரமான கட்டளைகளை பிறப்பித்தவர்களில் முக்கியமானவர். இவரின் உத்தரவின் பேரில் தான் பெருமளவான மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன. அவர் 06.06.1915 அன்று இராணுவச் சட்டத்தின் விதிகள் குறித்து வெளியிட்ட ஆணையில் இருந்தவை இவை.
பிரதேசமொன்றை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தும்போது பிரதேச வாசிகள் அனைவரும் உரிய இடத்தில் வந்து குவிந்துவிடவேண்டும். மாலை 7 முதல் காலை 5 வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தன. மீறுவோரை கண்ட இடத்தில் சுட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இராணுவ வாகனங்கள் இடையூறின்றி பயணிப்பதற்காக வீதிகளும், நடைபாதைகளும் வெறுச்சோடி இருக்கவேண்டும். பாதைகளில் ஒன்று கூட முடியாது. எந்த தாள, இசை வாத்தியங்களும் இசக்கப்படக் கூடாது. விசேட தேவைகளுக்கு பொலிசில் அனுமதி கோரலாம். சீருடை அணிந்தவர்களின் கட்டளைகளை எந்த கேள்வியுமின்றி பின்பற்ற வேண்டும். மீறுவோரை சுட்டுத் தள்ள முடியும். சாட்சி கூற மறுப்பவர்களுக்கும், அவர்களை பாதுகாப்பவர்களுக்கும் மரண தண்டனை. துப்பாக்கி மட்டுமல்ல காயமேற்படுத்தக் கூடிய எந்தவித ஆயுதங்களையும் கையில் வைத்திருப்பவர்களுக்கும் தண்டனை மரணம். சமயலறையில் பயன்படுத்தும் தேங்காய் துருவி வைத்திருந்தவரும் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தது.
அதேவேளை நிலைமை குறித்த கப்டன் நோர்த்கொர்ட் அவ்வப்போது வெளியிட்ட அறிக்கைகளின் பிரகாரம் இராணுவ அராஜகம் ஓங்கியிருந்த காலப்பகுதியில் நிலைமை சீராகவே இருந்தது என்பதையும் வெளிப்படுத்துகிறது. அவரது அறிக்கையிலிருந்து...
யூன் 06
யூன் 5 ஆம் திகதியே முழு நாடும் அமைதிக்கு திரும்பிவிட்டதை அறிய முடிகிறது
யூன் 12
கொழும்பில் இன்லமை அமைதியாக இருக்கிறது. அசம்பாவிதங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
யூன் 21
கடந்த அறிக்கை வெளியிட்டதன் பின்னர் எந்த வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை.
யூலை 07
பெரும்பாலான மாவட்டங்களில் நிலைமை அமைதியாக இருக்கிறது.
அவரது உத்தியோகபூர்வ அறிக்கை இப்படி இருந்தபோதும் அவரது முடிவுகள் குதர்க்கமானதாகவே இருந்தது. ஜூன் 10 அன்று கண்டி அரசாங்க அதிபரும், விசேட ஆணையாளருமான டீ.எஸ்.வாகன் (Mr. Vaughan) படையினருக்கு சுட்டுக்கொல்லும் ஆணையை உத்தியோகபூர்வமாகவே வெளியிட்டார். அவரின் இறுக்கமான முடிவுகளுக்கு ஒரு உதாரணம்.
கண்டி மாநகர சபை உறுப்பினரும், பல காணிகளுக்கு சொந்தக்காரருமான டீ.ஏ.வீரசூரிய என்பவருக்கு பொல்காவலையில் பெரும் தோட்டம் இருந்தது. வெளியிடங்களில் இருந்து தான் தொழிலாளர்கள் அங்கு வேளை செய்ய வருவார்கள். படையினரின் அனுமதி பெற்றே வீடுகளில் இருந்து வெளியே வர முடியும். எனவே வீரசூரிய அனுமதிகோரி கடிதம் எழுதினார். அவருக்கு இப்படி பதில் வந்தது.
பொலிஸ் நிலையம்கண்டி19.06.1915டீ.ஏ.வீரசூரியலோரன்ஸ் வில்லாகண்டிஉங்கள் கோரிக்கைக்கு அனுமதியளிக்க முடியாது என்பதை இத்தால் அறியத்தருகிறேன்.
நடைமுறையிலுள்ள இராணுவச் சட்டத்தின் பிரகாரம், அவர்களின் இல்லங்களை விட்டு வெளியேற முடியாது. இதனை மீற முயற்சித்தால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதுடன் நீங்களும் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுவீர்கள்.
இங்ஙனம்
டீ.எல்.ட்ரான்செல்
பொலிஸ் மேலதிகாரி
(மத்திய மாகாணம்)
மேற்படி கடித பரிமாற்றம் நடந்தபோது கண்டியில் கலவரம் அடங்கி இரண்டு வாரம் கடந்து இருந்தது. அதுபோக பொல்காவலை எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாத பிரதேசம். இத்தனைக்கும் ஆங்கிலேயர்களின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தவர் வீரசூரிய.
சட்ட சபையில் சேர்.பொன் இராமநாதன் கீழ்வருமாறு குறிப்பிட்டார்.
இராணுவச் சட்டத்தை பிறப்பித்து இதற்காகத் தான் பயன்படுத்தினீர்களா
1. சிங்களவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி சாதாரண சிவில் சட்டத்துக்கு அப்பால் சென்று அவர்களை கைது செய்வது,
2. அப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களை சிவில் சட்டத்தினால் வழங்கப்படக் கூடிய தண்டனையை விட அதிகமான தண்டனையை வழங்குவது.
3. முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட நட்டங்களை ஊதிப்பெருப்பித்து சிவில் சட்டங்களுக்கு அப்பால் சென்று நட்ட ஈட்டை கொடுக்கச் செய்வது.
ராமனாதனின் இந்த வாதங்கள் மேற்தோற்றத்தில் சிங்கள சார்பு போல தோன்றினாலும் அவரது முறைப்பாடுகளினதும், கோரிக்கைகளினதும் மையப் புள்ளியாக இருந்தது அப்பாவிகளுக்கெதிரான தண்டனை, மற்றும் ஆங்கிலேயர்களின் அராஜகம் என்பவற்றை வெளிப்படுத்துவதே.
ராமனாதனின் இந்த குற்றச்சாட்டுக்களை சட்டசபையில் இருந்தவர்களோ, அதிகாரிகளோ மறுப்பு தெரிவிக்கவில்லை.
பல அப்பாவிக் குடும்பங்களின் குடும்பத் தலைவர்கள் கொல்லப்பட்டதில் அந்த குடும்பங்கள் அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டன. சில சம்பவங்களை எடுத்துக்காட்டாக பார்ப்போம்.
தொம்பே பகுதியை சேர்ந்த டீ.டீ.சூட்டியா, எச் என்.எபொலோன்வியா ஆகியோர் வழங்கிய சாட்சியத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் இருவரும் சில பொருட்களை பெட்டியொன்றில் அடுக்கிக்கொண்டிருந்தனர். மோட்டார் வாகனத்தில் அங்கு வந்த படையினர் அவர்களை அப்படியே நிற்கச் சொல்லிவிட்டு எந்தவித விசாரணையுமின்றி துப்பாக்கியால் சுட்டனர். சூட்டியா சூட்டுக் காயங்களுடன் விழுந்துவிடவே எபொலோன்சியா ஓடித்தப்ப முயன்றார். துரத்திச் சென்ற வெள்ளையர் அவரையும் சுட்ட பின்னர், விழுந்தவர் இறந்துபோனார் என்று நம்பி வாகனத்தில் ஏறிச் சென்று விட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு எந்த அசம்பாவிதமும் இடம்பெற்று இருக்கவில்லை. ஏன் சுட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஆளுநரின் அறிக்கைகளின் படி இப்படி கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை 106. இராணுவ ஆணையாளரின் அறிக்கையின்படி அவ்வெண்ணிக்கை 116. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்பதை ஆளுநர் பின்னர் ஒப்புக்கொண்டார். இராணுவத்தினரால் மட்டும் 63 பேர் கொல்லப்பட்டனர்.
திவுலபிடியவை சேர்ந்த டீ ப்ரான்சியா எனும் பெண் அந்த பிரதேசத்தில் பலரின் அன்புக்கு பாத்திரமானவர். அவரின் மகன் லியோ பெர்னாண்டோ (22 வயது) கொல்லப்பட்ட விதம் குறித்து சாட்சியம் முக்கியமானது.
அவருக்கு சொந்தமான 25 கடைகளில் 7 கடைகளை முஸ்லிம் வியாபாரிகள் நடத்தி வந்தார்கள். அந்த வாடகைக்காரகளில் மூவர் ஜூன் 1ஆம் திகதி வந்து தமது கடைகளை பாதுகாக்குமாறு கேட்டுகொண்டனர். ஜூன் 2ஆம் திகதி எதிர்பார்த்தபடி கலகக்காரர்கள் கடைகளைத் தாக்க வந்தனர். லியோ பெர்னாண்டோ தனது சகாக்களுடன் சேர்ந்து அவர்களை விரட்டினார். ஜூன் 4 ஆம் திகதி வாடகைக்காரர்களான முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் வந்து சில ஆவணங்களையும், முக்கிய பொருட்களையும் பாதுகாத்து தருமாறு லியோவிடம் கொடுத்து விட்டுசென்றனர். சிங்களவர்கள் தம்மை தாக்கி இவற்றை அபகரிக்கக் கூடும் என்று நினைத்த லியோ தனக்கு பாதுகாப்புக்காக சிலரை ஆயுதங்கள் சகிதம் வைத்துக்கொண்டார். ஜூன் 7 அன்று பஞ்சாப் படையினர் அவரின் வீட்டுக்கு வந்து சோதனையிட்டனர். அங்கிருந்த ஆயுதங்களைக் கண்ட படையினர் லியோவை கைது செய்து தாக்கியபடி நீர்கொழும்புக்கு கொண்டு சென்றனர்.
தாயார் ப்ரான்சியா வழக்கறிஞர்களின் உதவியை நாடினார். 8 ஆம் திகதி லியோவை பஞ்சாப் படையினர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் நீதிமன்றத்தில் அவரை ஒப்படைக்கும்வரை நீர்கொழும்பில் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன்படி இரண்டு நாட்களாக அவர் நீர்கொழும்பிலேயே தங்கியிருந்தார். 9 ஆம் திகதி அந்த தாயாரை வீட்டுக்கு செல்லுமாறு கூறப்பட்டிருக்கிறது. அங்கே அவர் தனது வீட்டுக்கு முன்னாள் தனது மகனின் பிரேதத்தையே கண்டார்.
லியோவை அவரது வீட்டுக்கு பஞ்சாப் படையினர் சகிதம் அழைத்து வந்த நீதவான் (இராணுவ நீதிமன்ற நீதவான்) அங்குள்ள முதலியாரை அழைத்தார். கண்களும், கைகளும் கட்டப்பட்ட லியோவை அவரது வீட்டின் முன்னால் இருந்த அவரது கடைச் சுவரின் அருகில் நிற்குமாறு கட்டளையிட்டார். பின்னர் அருகில் உள்ள மக்களை அங்கு ஒன்று கூட்டுமாறு முதலியாருக்கு கட்டளையிட்டார். கூடியிருந்தவர்களை நோக்கி “இந்த சத்தத்தைதை நீங்கள் எல்லோரும் கேட்க வேண்டும். இந்த பகுதியில் இடம்பெற்ற கலவரங்களுக்கு இவன் தான் தலைவன். அவனுக்கு மோசமான இதயம். எனவே நான் அந்த இதயத்தை நோக்கி சுட உத்தரவிட்டேன் என்றார்.”
லியோ பெர்னாண்டோவின் உறவுக்கார பெண்ணொருவர் (மாமி) முதலியாரின் கால்களில் விழுந்து “நீதிமன்ற விசாரணை முடியும்வரை பொறுத்திருக்க சொல்லுங்கள் என்று கதறி மன்றாடினார். அது எதுவும் சட்டை செய்யப்படவில்லை. லியோ பெர்னாண்டோ அந்த வேளை..
“சத்தியமாக ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்லுகிறேன் நீங்கள் ஆதாரமாக என் வீட்டில் கைப்பற்றியதாகக் கூறிய அந்த பொருட்கள் என்னுடையவை அல்ல. அவை எனது முஸ்லிம் வாடகைக்காரர்களுக்கு சொந்தமானவை. என்னை நம்பி என்னிடம் பாதுகாக்குமாறு தரப்பட்டவை. என்னை கொல்வதற்கு முன் அவர்களிடம் கேட்டறிந்து நான் சொல்வது உண்மையா பொய்யா என்பதை அறியுங்கள்” என்றார்.
எதையும் செவிசாய்க்கும் நிலையில் நீதவான் இருக்கவில்லை. பஞ்சாப் படையினனின் முதல் தோட்டா லியோவின் நெஞ்சில் பாய்ந்தது. அடுத்தது நெற்றியில், அடுத்த இரண்டும் மீண்டும் நெஞ்சில் பாய்ந்தது. நான்கு தோட்டாக்களும் லியோவின் உயிரை உறிஞ்சியது. லியோவின் உடல் தரையில் மெதுவாக விழுந்து இரத்தத்தில் தோய்ந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து ராமனாதனின் நூலிலும், ஆர்மன்ட் டி சூசாவின் நூலிலும் விரிவாக இருக்கிறது. இப்படி குறிப்பிடத்தக்க சம்பவங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.
தொடரும்
நன்றி : தினக்குரல்
உசாத்துணையாக பயன்பட்டவை
- EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi publications - 2015)
- Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
- Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
- “කුලය හා සිංහල අන්තවාදය”- කුසල් පෙරේරා (Ravaya 20.09.2015)
- “Execution of 27-year-old henry pedris 100 years ago in colonial Ceylon” - T.V. Antony Raj
- A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
- The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
- Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
- “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
- “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam, (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
- “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
- ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
- ශ්රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...