Headlines News :
முகப்பு » , » ஜெயபாலன் கைதின் அனைவருக்குமான செய்தி – என்.சரவணன்

ஜெயபாலன் கைதின் அனைவருக்குமான செய்தி – என்.சரவணன்


கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம்.

நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில். 

“...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்....

...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...”

எரிக் சுல்ஹைம் வெளியிட்ட இந்த கருத்து கவனிக்கப்படவேண்டியது மட்டுமல்ல நம் எல்லோருமே கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் கூட.

ஜெயபாலன் கவிஞர் மட்டுமல்ல. தனது இளமைக்காலங்களில் சமூகப்போரட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். ஒரு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இராணுவ புவியியல் (military geography) குறித்த பிரக்ஞையை போராட்ட இயக்கங்களுக்கு முதன்முதலாக வகுப்பு நடத்தியவரும் கூட.

முஸ்லிம் மற்றும் மலையக பிரச்சினைகள்பற்றி கூட பிரக்ஞையுடன் பணியாற்றியவர். முஸ்லிம்கள் குறித்த அவரது ஆய்வு அப்போதைய கால கட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முஸ்லிம் அரசியல் சக்திகள் மத்தியில் மதிப்பு பெற்றவர்.

அதுபோல தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். தென்னிலங்கை இடதுசாரி எழுச்சி குறித்தும் இளைஞர்கள் மீதான படுகொலை பற்றியும் அவர் புனைந்த கவிதைகளை இன்றும் பலர் கொண்டாடுகிறார்கள்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி புலிகளை துணிச்சலாக கண்டித்து வந்த வெகுசிலரில் ஜெயபாலனும் ஒருவர்.

யுத்தம் துரத்திய இலக்கியவாதிகளில்/போராளிகளில் ஜெயபாலனும் ஒருவர். நோர்வேயில் குடியேறினாலும் தனக்கான தளம் இது அல்ல என்கிற விரக்தியில் தமிழ் சூழலை தேடி தமிழகத்தில் குடியேறினார். அங்கு கவிதை இலக்கியத்தோடு மட்டுப்படுத்திக்கொல்லாமல், அரசியல் விமர்சனம், மற்றும் நடிப்புத்துறை வரைக்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

ஆடுகளம் திரைப்படத்துக்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை அடுத்து ஒஸ்லோவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றையும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம்.

பேச்சுவார்த்தை முறிவுற்ற 2006 காலப்பகுதியில் தாயகத்துக்கு திருப்பிய ஜெயபாலன் மீண்டும் இந்த மாதம் தாயகம் செல்வதற்கு முன்னர் நண்பர்களின் கருத்தறிவதற்காக தனது முகநூலில் 8ஆம் திகதியன்று  “2006 பின்னர் முதல் தடவையாக என் மண்ணுக்கு செல்ல திடீரென முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நாளைக் காலை கொழும்பு செல்கிறேன். இப்போ நிலமை சுமூகமாக உள்ளதாக சொல்கிறார்கள்...” என்று நிரல்தகவலிட்டு நம்பிக்கையுடன் தாயகம் சென்றார்.

அதே நாள் தனது பயணத்தின் முக்கியத்துவத்தை இப்படி குறிப்பிடுகிறார். “...இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.”

ஆம். அவர் தனது தாயின் சமாதிக்கு சென்று கண்ணீரால் கழுவிவிட்டு வர நினைத்திருந்தார்.

கூட்டங்களில் கலந்துகொண்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் கூறிய விடயங்கள் இலங்கையின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பவை என்று போலிஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக எங்கும் வெளியாகவில்லை.

அப்படி என்றால் ஏன் இந்த கைது. அவர் கூறியதாக கூறப்படும் கருத்துக்களுக்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறும் போலீசார் ஏன் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும் கைது செய்யவில்லை. புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது ஏன். தாயின் சமாதிக்கு போய் வணக்கத்தை செய்யவிடாத நிலையில் அங்கு வைத்து கைது செய்தது ஏன். இது குடிவரவு சட்ட மீறல் நடவடிக்கையாக இருந்தால் வெள்ளிக்கிழமை முடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அடுத்து வரும் இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என தெரிந்தும் அந்த நாட்களை இந்த சர்ச்சைகளை நீடிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன.

இதற்குள் இருக்கும் அரசியல் உள்நோக்கமும், அரசியல் வழிகாட்டலும் இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது.

10 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் இலங்கை சென்றிருந்த போது நான் கலந்து கொண்ட சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி, புகைப்படங்களை கண்ட குடிவரவு திணைக்களத்தில் இப்போது பணியாற்றும் என் நண்பர் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார். உனக்கு இங்கு திரும்பவும் வந்து போகும் உத்தேசமில்லை என்றால் இப்படி நீ செய்துகொள். இல்லயேல் நல்லபிள்ளையாக வந்த இடத்துக்கு திரும்பிவிடு என்றார். இன்னமும் எனக்கு தெரிந்த பல புகலிட அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பிள்ளைகளாகவே நாடு சென்று திரும்புவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

உல்லாசபயண விசாவில் வந்தவர் உல்லாச பிராணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எதுவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்கிற இந்த விதிகள் இதற்கு முன்னர் இருக்கவில்லையா. இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கை மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாக பின்பற்றத்தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான பரீட்சையை அவர்கள் சென்றவருடம் முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்திடமிருந்து தொடங்கினார்கள். கட்சியின் முதலாவது காங்கிரஸ் கூட்டம் முழு அளவில் ஏற்பாடாகி இருந்த நிலையில், கூடத்திற்கு முதல் நாள் அவரை அதில் கலந்துகொள்ள முடியாதபடி அவரைக் கடத்தியது அரசாங்கம். இறுதியில் பாதுகாப்பு செயலாளர் அவர் வீசா காலாவதியாகியும் இருந்தார் என்பதை சாட்டாக வைத்து நாட்டை வெளியேற்றும் நிலைக்கு தள்ளினர். அரசாங்கத்துக்கு எதிராக வேகமாக வளர்ந்து வந்த அந்த கட்சியை முலையிலேயே கிள்ளியெறிய முற்பட்டனர். 

அரசியல் பழிவாங்களையும் கடும் எச்சரிக்கைகளையும் இப்படியான நடவடிக்கைகளால், எதிர் கருத்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் செய்தார்கள்.

அடுத்ததாக தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த தோழர் நா. சண்முகதாசனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு தோழர் அ.மார்க்ஸ் உரையாற்ற அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு புகுந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சேர்ந்தவர்கள், உல்லாச பிரயாண விசாவில் வந்த அவருக்கு அங்கு பேச்சாளராக கலந்துகொள்ள சட்டப்படி உரிமையில்லை என்று அவரை தடுத்துநிறுத்தி எச்சரித்து சென்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட IFJ - International Federation of Journalists தலைவி ஜாக்குலின் பார்க் மற்றும் ஜென்னி வோர்திங்டன் ஆகியோர் அக்கூட்டத்தில் புகுந்த புலனாய்வுப்பிரிவினர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.

இந்த மாத முற்பகுதியில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டின்போது அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமை கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொக்கி மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரியொன்னன் ஆகியோர் வந்திருந்தார்கள். வடக்கில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில் “விசா நிபந்தனை மீறல்” என்கிற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்கள்.

இலங்கைக்கு உல்லாச பிரயாண விசாவில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்து சுதந்திர பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாக செய்துவரும் அரசாங்கம் இந்த வழியையும் விட்டுவைக்கவில்லை.

அதுவும் சமீபகாலமாக இந்த வடிவத்தினாலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

இதன் மூலம் அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டிலுள்ளவர்களாயினும் எங்களுக்கு எதிராக கருது சொல்லி தப்பிவிட முடியாது என்பதே.

அதைத்தான் எரிக் சுல்ஹைம்மும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டுமல்ல இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீளவும் வீசா விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. பிறந்த மண்ணுக்கு மீள போக முடியாததை எவர் தான் ஜீரணிப்பார்.

இது போன்ற ஒரு உதாரணத்தை இந்திய விடயத்தில் அவதானித்திருபீர்கள். இந்த தூதுவராலயங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்த புலனாய்வு வேலைகளை இலங்கை அரசை விட செய்து வந்திருக்கிறது என்பதே உண்மை. அவர்களிடம் விசா விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்கள் புடுங்குகின்ற வேலைகளையும் அழகாக செய்துவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலருக்கு விசா இரத்தாகியும் இருக்கின்றன.

யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஏன் அதற்கு முன்னரும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல ஆர்ப்பாட்டங்கள் பல தூதரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. சீனா, ரஷ்யா, அமேரிக்கா, ஜப்பான், நோர்வே, இன்னும்... ஆனால் இந்திய தூதரங்களுக்கு முன்னால் எதுவுமே நிகழவில்லை. கடந்த காலங்களில் இலங்கைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த பலருக்கும் இந்தியா ஒன்றே தமது உறவுகளை சந்திக்க இருந்த வாய்ப்பாக கருதி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக கருத்து கூறவோ, ஆர்ப்பாட்டம் செய்வதனூடாகவோ இந்திய விசாவை இழக்க எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முகம் என்ன என்பதும் இறுதி இந்தியாவில் தலையாய பணி என்ன என்பதும் எவருக்கும் தெரியாமலிருக்கவில்லை.

ஆக அப்படிப்பட்ட ஒரு தந்திரோபாயத்தைத்தான் இலங்கை இன்று உருவாக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு.

அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது.

ஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

எனவே அனைவரும் முழு அளவில் இப் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates