Headlines News :
முகப்பு » , » மக்கள் கவிமணி - "சி.வி.வேலுப்பிள்ளை" - சுப்பையா கமலதாசன்

மக்கள் கவிமணி - "சி.வி.வேலுப்பிள்ளை" - சுப்பையா கமலதாசன்

சி.வி.வேலுப்பிள்ளை
கவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கவாதி, பாராளுமன்ற உறுப்பினர் என பல் பரிமாணங்களை கொண்ட வட்டகொடை மடக்கொம்பரை தோட்டத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து 1983 ஆண்டு மறைந்த  சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் 29 வது நினைவு தினம் நவம்பர்  19 அனுஷ்டிக்கப்படுகின்றது.

 ஹட்டன் ஹைலன்டஸ் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியினையும், கொழும்பு நாலந்தாக் கல்லூரியிலும் உயர்கல்வியையும் கற்றதன் பின் நுவரெலியா காமினி வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிய சி.வி அவர்கள், மலையக மக்களை அடக்கி ஒடுக்கிய  மேலதிகார நிர்வாகத்திற்கு எதிராக தனது தொழிற்சங்க பணிகளுக்காக ஆசிரிய தொழிலை கைவிட்டார். முழுநேர தொழிற்சங்கவாதியாக மாறி தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தொழிற்சங்க ரீதியாக தீர்ப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். 
தேயிலைத் தோட்டத்திலே

இவர் இலங்கை இந்திய காங்கிரஸின் (தற்போதைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) இணைச் செயலாளராக கடமையாற்றியுள்ளதோடு அதன் பின்னரான காலகட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக செயலாளராக இணைந்து அமரர் வி.கே.வெள்ளையன் அவர்களுடன் தோளுக்குத்  தோள் துணையாக தொழிற்சங்க பணிகளை மேற்கொண்டவர். 

இலங்கை இந்திய காங்கிரஸின் செயலாளராக இருந்த காலத்தில் ஊழபெசநளள நேறள என்ற தொழிற்சங்க பத்திரிகையின் ஆசிரியராகவும் கடைமையாற்றினார். தொழிலாளர் தேசிய சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் தொழிலாளர் கல்வி மற்றும் தொழிலாளர் பிரச்சினை, தொழிலாளர் இலக்கியம் என்பவற்றை தொகுத்து ‘மாவலி’ எனும் தொழிற்சங்க, இலக்கிய இதழை வெளியிட்ட பெருமைக்குரியவர். இது தவிர தனியே கதைகளை சுமந்து வரும் ‘கதை’ எனும் சிற்றிதழையும் நடாத்தியவர்.

 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தலவாக்கலை தொகுதியில் வெற்றியீட்டி மலையக மக்களின் அவலங்களை பாராளுமன்றத்திலும் ஒலிக்க செய்துள்ளார்.

 இந்திய நாளிதழுக்கு  மலையகத்தின் நாட்டுப் புறப்பாடல்களை “தேயிலை தோட்டப் பாடல்கள்” என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார். இது மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற பெயரில் (1983) நூலுருவும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
சி.வி. சில சிந்தனைகள்
1963 ஆம் ஆண்டில் ஆசிய ஆபிரிக்க கவிதைகளின் முதலாவது தொகுப்பு 70 உலக கவிஞர்களின் கவிதைகளை தேர்ந்து தொகுப்பை வெளியிட்டது. அதில் இலங்கையைச் சேர்ந்த ஆறு கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன. அந்த தொகுப்பில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழ்க்கவிஞன் சி.வி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Tea Plucker எனும் கவிதையினை அந்த நூலுக்காக எழுதியுள்ளார்.

In The Ceylon tea Garden என்ற புகழ் மிக்க கவிதையினை சக்தி.அ.பால ஐயா  அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் மத்தியில் சி.வியினை பிரபல்யப்படுத்தியிருந்தார். இந்த “தேயிலை தோட்டத்திலே என்ற நூல் 1969 இல் கண்டி செய்தி பதிப்பகத்திலும் 2007ஆம் ஆண்டு மல்லியப்பு சந்தி திலகரின் பாக்யா பதிப்பகத்திலும் இரு பிரசுரங்கள் கண்டிருந்தன. 
வீடற்றவன்

இவை தவிர ‘விஸ்மாஜினி’ என்ற கவிதை நாடகத்தினையும், வழிப்போக்கன் (Wayfarer) என்ற வசன கவிதையினையும் “Born to Labour” (உழைக்கப் பிறந்தவர்கள்) என்ற விவரணக் கட்டுரைத் தொகுப்பையும், வீடற்றவன், நாடற்றவர் கதை, இனிப்படமாட்டேன், வாழ்வற்றவாழ்வு போன்ற நூல்களையும் எழுதி மலையக இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். மலையக மக்களின் வாழ்வியலை இலங்கை சுதந்திமடைந்த காலத்திலேயே ஆங்கில மொழிமூலத்தில் எழுதிய பெருமை இவரைச் சாரும்.

இவரது இலக்கியம் மீதான பங்களிப்பைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் முன்னாள் தினகரன் பிரதம ஆசிரியர் திரு.ஆர்.சிவகுருநாதன் தலைமையில் கொழும்பத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த இலக்கிய விழாவில் சி.வி. அவர்களுக்கு பேராசிரியர் கைலாசபதி அவர்கள் வழங்கிய “மக்கள் கவிமணி” என்ற அடைமொழியினூடு கவிஞர் சி.வி வேலுப்பிள்ளை இன்றும் இலக்கிய உலகில் குறித்துரைக்கப்படுவது மலையக இலக்கியத்துக்கு கிடைத்த கௌரவமாகும். 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates