Headlines News :
முகப்பு » , » தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள மாடி வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள மாடி வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு


தோட்டத் தொழிலாளருக்கு 50,000 அலகுகளை கொண்ட வீட்டு தொகுதிகளை நிர்மாணிக்கும் யோசனையை முன்மொழிவதாக ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று தனது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்துள்ளார். 

இந்த யோசனைக்கு சபையில் அவ்வேளையில் இருந்த மலையக பிரதிநிதிகள் கரகோஷம் எழுப்பினார்களோ தெரியவில்லை. ஆனால், இது மாடி மேலே மாடி கட்டும் தொடர் மாடி வீட்டு திட்டம் என்பதையும், தோட்ட தொழிலாளருக்கு மகிந்த சிந்தனையில் உறுதியளிக்கப்பட்ட காணி உரிமை இன்னமும் வெகு தூரத்தில் இருப்பதை இது அடையாளப்படுத்துகின்றது என்பதையும் மலையகம் உணர்ந்து கொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

வரவு செலவு திட்ட யோசனைகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, 

பெருந்தோட்ட துறையில் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் முன்னேறியுள்ளதாக வரவு செலவு திட்ட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிசு மரண விகிதம், அதாவது பிறக்கும் 1000 குழந்தைகளில் முதல் மூன்று மாதத்தில் இறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சொல்லப்படுவதை ஏற்றுகொள்ள முடியாது. 

2009ம் வருடம் வரைக்கும் 32 விகிதமாக இருந்த மலையக வறுமை விகிதம் திடீரென குறைந்துவிட்டதாக ஏற்கனவே அரசாங்கம் சொல்லி வருவதை போன்றதான இந்த தரவுகளையும் நாம் ஏற்றுகொள்ள முடியாது. மலையக தோட்ட தொழிலாளர்கள் இந்நாட்டின் ஏனைய பிரிவு மக்களைவிட ஒப்பீட்டளவில் பின்தங்கிய வளர்ச்சி கட்டத்தில் இருக்கின்றார்கள் என்பது அடிப்படை உண்மை. 

காணி நிலம் மற்றும் வீடமைப்பு துறைகளில் அரசு கபட நோக்கத்துடன் நடக்கின்றது. இது தொடர்பாக கடந்த 2005/2010 ஜனாதிபதி தேர்தல் வேளைகளிலில் மகிந்த சிந்தனைகளில் சொல்லப்பட்ட மற்றும் கடைசியாக நடைபெற்ற மாகாணசபை தேர்தல் வரை வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேறவில்லை. 

மாடி வீடுகள் பொதுவாக நிலம் இல்லாத நகரப்பகுதிகளிலேயே கட்டப்படுகின்றன. இதுவே உலக நடைமுறை. கிராம பகுதிகளிலும், குறிப்பாக மலைப்பகுதிகளிலும் தொடர் மாடி வீடுகள் கட்டப்படுவதில்லை. ஆனால், இந்த வரவு செலவு திட்ட யோசனையின்படி அரசாங்கம் மாடி வீட்டு தொகுதிகளை மலையகத்தில் கட்ட போவதாக சொல்கிறது. 

இந்த கட்டுமான பணிகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் நகர அபிவிருத்தி சபையின் மூலம் கட்டப்பட உள்ளன என்ற கருத்தும் வரவிருக்கும் எதிர்காலத்தை பற்றி பூடகமாக அறிவிக்கிறது. இந்த தொடர்மாடி வீடுகள் என்ற நடைமுறை, தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழில் செய்யும் இடத்தில் பணியாளருக்கு வழங்கப்படும் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர்கள் என்ற மனநிலையிலேயே வைத்திருக்கும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றேன். 

இதற்கு தேவைப்படும் சுமார் 750 மில்லியன் டொலர் நிதி சர்வதேச உத்தரவாதத்தின் மூலம் பெறப்பட உள்ளதாகவும் அரசு கூறுகிறது. நாட்டின் ஏனைய பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி பெற்றுகொள்வது தொடர்பில் தெளிவான வழிமுறைகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த பெருந்தோட்ட வீடமைப்புக்கான நிதி பெறுதல் தெளிவில்லாமல் பொதுப்படையாக இருக்கின்றது 

ஆகவே, தோட்ட தொழிலாளருக்கு காணிகள் பகிர்ந்து வழங்கும்படியும், தமது சொந்த நிலங்களில் அவர்கள் தமது வீடுகளை கட்டிக்கொள்ள, அவர்களது சேமலாப நிதியத்தில் இருந்து இலகு தவணை கடன் வழங்கும்படியும், அரசில் உள்ள மலையக பிரதிநிதிகள், தமது அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். இதன் மூலமாகவே சொந்த காணி நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் வாழும் கிராமத்தவர்கள் என்ற மனநிலையை மலையக மக்கள் பெறுவார்கள்.

நன்றி - லங்காவின்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates