எரியும் பனிக்காடு |
இயக்குனர் பாலா படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (அவன் இவன் தவிர). இவருடைய பரதேசி படம் “எரியும் பனிக்காடு” [ஆங்கிலத்தில் "Red Tea"] என்ற நூலைத் தழுவி எடுக்கப்படுவதாக கூறப்பட்டவுடன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. ஆன்லைனில் ஆர்டர் செய்து, நண்பர்களிடம் கூறி பெற்று விட்டேன் icon smile எரியும் பனிக்காடு உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு
புத்தகம் படிக்கும் ஆர்வம் சுத்தமாக குறைந்து விட்டாலும், படிக்க வேண்டும் என்று அமர்ந்தால் முடிக்காமல் விட மாட்டேன். இரண்டே நாளில் மொத்தப் புத்தகத்தையும் படித்து விட்டேன். இதற்கு புத்தகம் படிக்க நன்றாக இருந்ததும், எளிமையான மொழி நடையும் ஒரு காரணம்.
grey எரியும் பனிக்காடு உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு நூலின் ஆசிரியர் பி.எச்.டேனியல் “Red Tea” என்று ஆங்கிலத்தில் எழுதிய நூலை 38 வருடங்களுக்குப் பிறகு தமிழில் இரா.முருகவேள் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. இந்தப்புத்தகத்தை நான் விரும்பிப் படிக்க இன்னொரு முக்கியக் காரணம் உண்டு. நான் உடுமலைப் பேட்டையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள கரட்டு மடம் என்ற கிராமத்தில் உள்ள “காந்தி கலா நிலையம்” என்ற பள்ளியில் இரு வருடம் படித்தேன். இங்கே இருந்ததால், கதையில் வால்பாறை, ஆனை மலை, காடம்பாறை, அட்டகட்டி போன்ற இடங்கள் பற்றி வரும் போது எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது, பழக்கமான இடங்களாகவும் இருந்தது.
இது ஒரு உண்மைச் சம்பவம், உடன் கற்பனையும் சேர்த்து எழுதப்பட்டு இருக்கிறது. 1925 ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கதை [1920 - 1930] துவங்குகிறது. வேலை எதுவுமே கிடைக்காமல் சாப்பிடக் கூட எதுவும் கிடைக்காமல் சிரமத்தில் இருக்கும் கருப்பன், அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாதவன். இவனுடைய மனைவி வள்ளி. தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள். ஒரு வேளை சாப்பிட்டிற்கே நாய் படாத பாடு பட வேண்டிய நிலை, வயிறு நிறைந்து சாப்பிட்டே மாதங்கள் பல ஆகின்றன.
பக்கத்துக்கு சந்தைக்கு சென்று ஏதாவது வேலை கிடைக்குமா என்று கருப்பன் செல்கிறான். அங்கே டீ எஸ்டேட்டில் மேஸ்திரி வேலை பார்க்கும் கங்காணியை சந்திக்க. அவன் இங்கே இருந்து ஏன் கஷ்டப்படுகிறாய் டீ எஸ்டேட் வந்தால் அங்கே அப்படி இப்படி என்று ஆசை காட்டுகிறான்.
“சரிதாண்ணே! எனக்கும் எஸ்டேட்டுக்கு வரணும்னு ஆசயாத் தான் இருக்கு. ஆனா போகவர செலவுக்கு எங்கிட்டே காசே இல்லையே…” கருப்பன் இழுத்தான். அவன் முகத்தில் ஒரே நேரத்தில் வருத்தமும், மேஸ்திரி இதற்கும் ஏதாவது வழி சொல்லுவான் என்ற ஆசையும் ஒருங்கே இருந்தன.“
கங்காணி, கருப்பனுக்கு முன் பணம் 40 ருபாய் (இது அப்போது மிகப்பெரிய பணம் என்பது நீங்கள் அறிந்தது) கொடுத்து இதை நீ எஸ்டேட் வந்தால் சீக்கிரமே கட்டி விடலாம், அதன் பிறகு பெரும் பணம் சம்பாதித்து பணக்காரனாக திரும்பி வரலாம் என்று ஆசை காட்டுகிறான்.
கருப்பனுக்கும் சாப்பாட்டுக்கே வழி இல்லை, வேறு எந்த வேலையும் கிடைக்காததால் வள்ளியிடம் கூறி, இங்கே பசியால் சாவதை விட எஸ்டேட் சென்று கஷ்டமாக இருந்தாலும் ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று கூறுகிறான்.
இவர்கள் இருவரில் வள்ளி இவனை விட புத்திசாலியாக காட்டப்பட்டு இருக்கிறாள். கதை முழுக்க கருப்பன் தவறான முடிவு எடுக்கும் போதெல்லாம் வள்ளியே இவனுக்கு யோசனை கூறுகிறாள்.
“எதுக்கு காசு குடுத்து மலைக்குக் கூட்டிட்டுப் போவனும், அப்புறம் நமக்குப் புடிக்கலைனா ஏன் அவங்க காசுலேயே திருப்பி அனுப்பனும்? ஒண்ணும் புரியலயே?” வள்ளி தந்திரமாகப் பேசினாள்.
“என்னம்மா பேசாம இருக்கே, நீ என்ன சொல்லுத?” வள்ளிக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் கருப்பன் அம்மாவை துணைக்கழைத்தான்.“
இவர்கள் ரயிலையே பார்த்து இராதவர்கள். இவர்கள் வால்பாறை எஸ்டேட் செல்ல இதன் மூலம் செல்லும் போது இதே அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது. அங்கே கங்காணி சொன்ன வசதிகளுக்கும் அங்கே இருக்கும் நிலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதை கண்டு இருவருமே அதிர்ச்சியாகின்றனர்.
உண்மையில் கருப்பனும் வள்ளியும் மட்டுமல்ல படித்த நானும் அதிர்ச்சியாகி விட்டேன். இப்படிக் கூட மோசமான மனிதர்கள் இருந்து இருக்கிறார்களா! என்று நினைக்கும் போதே பயமாக இருக்கிறது. இது போன்ற விசயங்களை எல்லாம் படிக்கும் போது ஈழம் தான் மனக்கண்ணில் வந்து செல்கிறது.
நீங்கள் இதுவரை எந்தப் படத்திலும் பார்த்து இராத அளவிற்கு இதில் மனிதர்களை மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். சுருக்கமாகக் கூறினால் அவர்கள் மனிதர்களை, விலங்குகளை விட மோசமாக நடத்தி இருக்கிறார்கள். யாராவது இறந்தால் கூட அது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த வேலையை பார்க்கச் செல்ல வேண்டும்.
“விருட்டென்று கீழிறங்கிய வொய்ட் கடுங்கோபத்துடன் இளைஞனை கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி தடியால் கண்மூடித்தனமாக விளாச தொடங்கினார். “சக்கிலி நாய் *****, ***** ****, அட்சுரசுத்தமான தமிழில் வசவுகள் துரையின் வாயிலிருந்து மழை போல் பொழிந்தன.
“ஹீ யு” இடையிடையே துரை ஆங்கிலத்திலும் கத்திக்கொண்டிருந்தார். அவர் முகம் கோபத்தில் ரத்த சிவப்பாக மாறி விட்டது.
“எஜமானே எஜமானே” நான் அடிமை ஏழை எஜமான் கிட்டே வேலைக்கு வந்திருக்கேன்” அந்த பாவப்பட்ட இளைஞன் தரையில் ஊர்ந்து கொண்டே ஊளையிட்டான்.
“ப்ளடி பாஸ்டர்ட் செருப்பு காலோட எம்முன்னாடி நிக்கிற அளவுக்கு தைரியம் வந்திருச்சா. என் எஸ்டேட்டை விட்டு ஓடிப்போ” வொய்ட் உச்சஸ்தாயில் அலறினார்
கருப்பன் விக்கித்துப் போனான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சி அவன் பேசும் சக்தியையே பறித்து விட்டு இருந்தது.“
பரதேசி |
ஆங்கிலேயர்கள் அங்கே செய்த கொடுமைகளை படித்த போது வந்த ஆத்திரம் கொஞ்சம் நஞ்சமல்ல. நம் நாட்டில் வந்து நம் மக்களை என்ன பாடு படுத்தி இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வெறுத்துப் போய் விட்டது. என்ன தான் வரலாற்றில் நாம் நிறையப் படித்து இருந்தாலும், இது போல ஒரு புத்தகமாக படிக்கும் போது வரும் உணர்வு வேறு மாதிரி இருக்கிறது. இது போல இன்னும் சில கிராமங்களில் நடந்து கொண்டுள்ளது என்பது இதை விடக் கொடுமையாக உள்ளது, குறிப்பாக வட மாநிலங்களில்.
சுருக்கமாகக் கூறினால் ஆங்கிலேயர்கள் சர்வாதிகார ராஜா [இடி அமீன்] போல இருந்து இருக்கிறார்கள், அது அவர்கள் இருந்தது மிகச் சாதரணமாக பதவியாக இருந்தாலும். இவர்கள் கூறுவதே தீர்ப்பு, இவர்களுக்கு கோபம் வரும் படி யாரும் நடந்தால் அவர்கள் கற்பனையிலும் நினைத்து இராத கொடுமைகள், தண்டனைகள் என்ற பெயரில் கிடைக்கும். துரைகள் என்று அழைக்கப்படும் இவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை மறு பேச்சு பேசாமல் யாராக இருந்தாலும் செய்தாக வேண்டும். மேஸ்திரி கங்காணி உட்பட. கங்காணிக்கே தர்ம அடி விழும் என்றால் புள்ள பூச்சி போல இருக்கும் கருப்பன் போன்றவர்களின் நிலை…!
இதோடு முடிந்து விடவில்லை. டீ இலையைப் பறிக்கும் பெண்களை பாலியல் சில்மிஷமும் துரை செய்வார். இதை அவர்கள் சகித்துக்கொள்ள வேண்டும், மறுத்தால் ஏதாவது காரணம் கூறப்பட்டு அலைக்கழிக்கப்படுவார்கள். துரைக்கு இணங்கினால் பணம் கூடுதலாகக் கிடைக்கும். இதனால் பணத்திற்காக ஒரு சில பெண்கள் இதற்கு இணங்கும் கீழ்த்தரமான வேலைகளில் நடப்பார்கள். இதற்கு சில கணவர்களும் துணையாக இருப்பார்கள்.
இதற்கு சம்மதிக்காத வள்ளி கடும் இன்னலுக்கு ஆளாவாள். இங்கே கடுமையான காலரா மற்றும் பல்வேறு நோய்கள் வரும். இதன் காரணமாக கொத்து கொத்தாக பலர் இறந்தும் போவார்கள். மழை பெய்து கொண்டே இருக்கும், குளிர் உடலை ஊசியாகக் குத்தும். இதனால் மருத்துவத்திற்கு செலவு அதிகம் ஆகும். சேமித்த பணம் கரைந்து கொண்டே இருக்கும், கடனும் ஏறிக்கொண்டு இருக்கும். கடன் கொடுத்தவர்கள் பொய் கணக்கு காட்டி ஏமாற்றுவதும் நடக்கும். கோழி, சாமிக்கு வெட்டினால் இந்த நோய் எல்லாம் வராது என்று பணம் வாங்கி, பூசை செய்கிறேன் என்று இவர்கள் அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
கருப்பனும் வள்ளியும் இங்கே வந்து மாட்டிக்கொண்டோமே என்று நொந்து ஊருக்கே சென்று விடலாம் என்றாலும் முடியாத நிலையில் இருப்பார்கள். இவர்கள் முன்பணமாக வாங்கிய பணத்தை கொடுத்த பிறகே இங்கே இருந்து செல்ல முடியும். இதன் காரணமாகவே இவர்களுக்கு முன்பணம் கொடுத்து சிக்க வைக்கிறார்கள். இவர்கள் வாங்கிய 40 ரூபாயை கொடுக்க மூன்று வருடம் ஆகிறது என்றால், இங்கே அவர்கள் படும் கொடுமையை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். இது கதையாகக் கூறப்பட்டாலும் உண்மைச் சம்பவமே.
கருப்பன் இங்கே கொடுமை தாங்காமல் பக்கத்து எஸ்டேட் ல் வேலைக் கிடைக்குமா என்று ஞாயிறு விடுமுறையில் சென்று பார்த்து ஒரு ஏமாற்றுகாரனிடம் மாட்டிக்கொள்வான். எனக்கு உண்மையிலேயே இதைப் படிக்கும் போது செம பரபரப்பாகி விட்டது. ஐயோ! தயவு செய்து கருப்பனை காப்பாற்றி விடுங்க… என்று நினைக்கும் அளவிற்கு அவன் மீது பரிதாபம் வந்து விட்டது. இவர்களிடம் இருந்து தப்பித்து விடுவானா! என்ன ஆகும் என்று எனக்கு உண்மையில் செம பதட்டம் ஆகி விட்டது. மிகைப் படுத்தவில்லை உண்மையாகவே. இந்த புத்தகத்திலே இந்த பகுதி நான் மிக மிக டென்ஷன் ஆக படித்தேன்.
“திருட்டுபயலே, கழுதைக்குப் பொறந்தவனே, கடைசியா மாட்டிக்கிட்டியா! மூணு வாரமா உன்னைத் தேடிட்டு இருக்கேன். இப்ப இங்கன நிக்க. நான் அட்வான்ஸாக் குடுத்த பணத்தைக் குடுலே.”
கருப்பன் ஒரு வினாடி ஆடிப் போய் வாயடைத்து நின்று விட்டான். “என்ன சொல்லுத உனக்கென்ன பைத்தியமா? நான் எப்ப உங்கிட்ட பணம் வாங்கினேன்? போன ஞாயித்துக் கிழமை தானே உன்ன மொத தடவையாப் பார்த்தேன். என்னை விடு” பின்பு சமாளித்துக்கொண்டு பதிலுக்கு கூச்சலிட்டபடி திமிறினான். ஆனால் கோவிந்தசாமியின் பிடி இரும்புப் பிடியாக இருந்தது.
“திருட்டு நாயே என்னைத் தெரியாத மாதிரியா நடிக்கிற கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை வாயில போட்டுட்டு இல்லைனா சொல்லுதே?”
டீ கடைக்குள்ளிருந்து இன்னும் இரண்டு பேர் ஓடிவந்து கருப்பனை பிடித்துக்கொண்டார்கள்.“
இவர்கள் வாழும் இடம் எல்லாம் நம்மால் கற்பனையில் கூட இருந்து வர முடியாது. மாட்டு தொழுவம் கூட நன்றாக இருக்கும். கங்காணி என்ன சொல்கிறானோ அதை செய்தே ஆக வேண்டும். உடல் நிலை சரியில்லை என்றாலும் வேலைக்கு வந்து தான் ஆகணும். இதை நூலின் ஆசிரியர் தத்ரூபமாக விவரித்து இருக்கிறார். நம் கண் முன்னால் இந்த இடங்கள் இருப்பது போல உள்ளது இவர் கூறுவதைப் படிக்கும் போது.
இங்கே உள்ள ஒரு கம்பவுண்டர் தான் இங்கே மருத்துவர். இவர் என்ன சொல்கிறாரோ தருகிறாரோ அது தான் மருந்து. இவர் கூறுவதே சட்டம்.
இதில் துரை காங்கிரஸ் காரர்களை கண்டபடி திட்டுகிறார். தற்போதும் திட்டிக்கொண்டு தான் இருக்கிறோம் அது வேற விஷயம் icon smile எரியும் பனிக்காடு உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு . காந்தியை எல்லாம் சகட்டு மேனிக்கு திட்டுகிறார். துரை பேசினாலே “ப்ளடி இந்தியன்” என்ற வார்த்தை தான் வருகிறது. பேச ஆரம்பித்து துவக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் சரமாரியாக இந்த வார்த்தை வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்த வார்த்தையை சாதரணமாகவே நம்மைப் பார்த்து கூறிக்கொண்டு இருந்து இருக்கிறார்கள்.
“ப்ளடி இந்தியன்” என்ற வார்த்தையை என்னுடைய சிறிய வயதில் அதிகம் விளையாட்டாக கேட்டு இருக்கிறேன். தற்போது தான் புரிகிறது இது எங்கே இருந்து வந்தது என்று. இவர்கள் இது போலத் தான் நம்மை திட்டிக் கொண்டு இருந்து இருக்கிறார்கள். இது அப்படியே பரவி நாம் விளையாட்டாக கூறும் அளவிற்கு ஊறி விட்டது. தற்போது இவை இல்லை என்றாலும் என் சிறு வயதில் இது அதிகம் கேட்டு இருக்கிறேன். நம் தமிழ் திரைப்படங்களில் கூட இந்த வார்த்தை கிண்டலாக வரும்.
காலரா மற்றும் பல நோய்களின் காரணமாக பலர் இறப்பதால், படித்த ஒரு மருத்துவர் (இந்தியர்) இங்கே வேலைக்கு அழைக்கப்படுகிறார். இதற்கு துரை வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்கிறார். இதற்கு இவர் கூறும் காரணம் “ப்ளடி இந்தியன்கள் செத்தால் என்ன? பிச்சைக்கார பயல்கள். அவர்கள் தான் பன்னி மாதிரி பெத்துப் போடுகிறார்களே! செத்தால் ஒன்றும் ஆகாது. மக்கள் எண்ணிக்கை குறையட்டுமே!” என்பது தான்.
மருத்துவராக வருபவர் தான் இந்த நூலின் ஆசிரியராக இருக்க வேண்டும். இவர் வந்து இங்குள்ள நிலையைப் பார்த்த பிறகு வெறுத்து, தான் இங்கு இருக்கப்போவதில்லை கிளம்பப் போகிறேன் என்று கூறுகிறார். பின்னர் இங்குள்ளவர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். தான் இங்கே இருக்க வேண்டும் என்றால் துரைக்கு சலாம் போட முடியாது (இங்கே மூச்சு முன்னூறு வாட்டி “சரி துரை அவர்களே!” என்று கூற வேண்டும்) அவர் கூறுவது படி எல்லாம் என்னால் நடக்க முடியாது, மருத்துவமனை மிக மோசமான நிலையில் உள்ளது இதை சரி செய்ய வேண்டும். இதெல்லாம் சரி என்றால் நான் தொடர்கிறேன் என்று கூறுவார்.
துரை, வேறு வழியில்லாமல் மருத்துவரின் நிபந்தனைகளுக்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்கிறார். இதற்கு காங்கிரசின் வளர்ச்சியும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்கள் பெரிய ஆளாக இருந்தாலும், காங்கிரஸ் அதில் உள்ள காந்தி மற்றும் பல தலைவர்களின் போராட்டங்கள் எதிர்ப்புகளுக்கு பயந்தே இருந்து இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இங்கு பலர் இறக்கிறார்கள் என்று வெளியே தெரிந்தால் காங்கிரஸ் போராட்டம் செய்யக்கூடும் என்ற பயமே காரணம்.
மருத்துவரின் அன்பான அனுசரணையான கவனிப்பு, அனைவரிடையேயும் அவரை கடவுளைப் போல நினைக்க வைக்கிறது. திட்டுகளையும் அடி உதைகளையும் மட்டுமே பார்த்தவர்களுக்கு ஆதரவான வார்த்தைகள், அன்பான கவனிப்பு எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கும் என்று நான் கூறித் தெரிய வேண்டியதில்லை.
இங்கு வரும் மருத்துவர் அங்குள்ளவர்களுடன் ட்ரக்கிங் செல்வார். இது தேவையே இல்லாத பகுதி. இது படிக்க நன்றாக இருந்தாலும் கதையின் வேகத்தை குறைக்கிறது / போக்கை திசை திருப்புகிறது. இதை ஒரு தனிப்பகுதியாகப் படித்தால் நன்று ஆனால், இதில் பொருத்தமில்லாதது. அதைவிட இந்தப்பகுதி முடிந்து ஒரு சில பக்கங்களிலேயே புத்தகமும் முடிந்து விடுகிறது. இதனால் ஒரு முழு மன நிறைவை இது தடுக்கிறது. இது தவிர புத்தகம் பட்டாசாக இருக்கிறது. அருமையான தமிழ் மொழி பெயர்ப்பு.
மக்களின் ரத்தங்கள் வியர்வையாக இந்த டீ எஸ்டேட்டில் இருப்பதால் தான் Red Tea என்று புத்தகத்திற்கு பெயர் வைத்ததாகக் கூறி இருக்கிறார் ஆசிரியர். இங்கு கஷ்டப்பட்ட மக்களின் நிலை உலகிற்கு தெரியாமல் போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. நீங்கள் குடிக்கும் டீ யில் பல மக்களின் கடுமையான உழைப்பு அடங்கி இருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள் என்று கூறி இருக்கிறார். உண்மை தானே!
பி. எச். டேனியல்
ஆசிரியர் 1941 முதல் 1965 வரை 25 வருடங்கள் தேயிலை தோட்டங்களில் பணி புரிந்து இருக்கிறார். அந்த சமயங்களில் அங்கு பணி புரிந்தவர்கள் கூறிய தகவல்கள், அவர்கள் எழுத்துப் பூர்வமாக தெரிவித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இதில் வரும் கதாப்பாத்திரங்கள் கற்பனை ஆனால் சம்பவங்கள் உண்மை. இது தேயிலை தோட்டத்தில் பணி புரிந்தவர்கள் பற்றிக் கூறினாலும் காபி மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணி புரிந்தவர்களுக்கும் பொருந்தும் என்று கூறி இருக்கிறார்.
இரா. முருகவேள்
ஆசிரியர் பி எச் டேனியல் அவர்களின் மகள் திருமதி பமீலா மோசஸ் மற்றும் அவரது கணவர் மோசஸ் அவர்களிடம் அனுமதி பெற்று இரா முருகவேள் அவர்கள் இதை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். நியாயமாக இந்தப் புத்தகம் தமிழில் எப்போதோ மொழி பெயர்க்கப்பட்டு இருக்க வேண்டும். சம்பவம் நடந்த இடம் நம் தமிழ்நாடு. நாம் இவற்றை நிச்சயம் அறிந்து இருக்க வேண்டும். இதற்கான முயற்சி எடுத்தமைக்காக நான் இவருக்கு நன்றி கூறுகிறேன்.
இந்தப் புத்தக விமர்சனம் கடந்த வாரமே எழுத வேண்டும் என்று நினைத்தேன். நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை. இந்த வாரம் வெள்ளிக் கிழமை “பரதேசி” வெளியாகிறது எனவே அதற்குள் எழுத வேண்டும் என்று எழுதியது. இதை எழுதியதில் எனக்கு முழுத் திருப்தி இல்லை அவசரமாக எழுதியதால் ஆனால், படம் வெளியாகும் முன்பு எழுதினால் நன்றாக இருக்குமே என்று எழுதி விட்டேன்.
புத்தகம் இங்கே வாங்கலாம்.
மொத்தப் பக்கங்கள் 336, கதை 325
விலை 150 ருபாய்
இது போன்ற உண்மைக் கதைகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், இந்தப் புத்தகம் வாங்க உங்களுக்கு தாறுமாறாக பரிந்துரைக்கிறேன். icon smile எரியும் பனிக்காடு உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு . இது ஒரு U/A புத்தகம் என்பது என் கருத்து.
நன்றி - கிரிபுளாக்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...