Headlines News :
முகப்பு » , » மலையகத் தியாகிகளை நினைவு கூருவோம்!

மலையகத் தியாகிகளை நினைவு கூருவோம்!இந்நாட்டின் வரலாற்றில் 1866 ஆம் ஆண்டு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கினார் ஜேம்ஸ் டெய்லர் என்ற ஆங்கிலேயர் கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட லூல் கந்துர தோட்டத்தில் முதன் முதலாக தனது காணியின் பத்து ஏக்கரில் தேயிலை பயிர்ச் செய்கையை ஆரம்பித்தார்.

இப் பயிர்ச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்காக இந்தியாவின் அசாமிலிருந்து தேயிலை விதைகளை தருவித்து பயிரிட்டார். இதில் பெரிய வெற்றியையும் கண்டு பெரியதோர் மாற்றத்தையும் கொண்டு வந்தார். ஜேம்ஸ் டெய்லரின் லூல் கந்துர பங்களாவிலேயே சிறிய தொழிற்சாலையையும் உருவாக்கினார். இந்தத் தொழிற்சாலையில் தனது காணியிலிருந்து பெறப்படும் தேயிலைக் கொழுந்தை உலர்த்தி தூளாக்கி லண்டனுக்கு அனுப்பினார். இவரின் தேயிலைத் தூளுக்கு லண்டன் மாநகர வர்த்தக மையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

சிலோன் தேயிலைக்கு பெரும் வரவேற்பும், ஆதாயமும் கிடைப்பதை பலர் தெரிந்து கொண்டனர். இதன் காரணமாக பிரித்தானியர், ஸ்கொட்டிசார் ஐரிஸ்காரர்கள், வெல்ஷ்காரர்கள் உட்பட பெருந் தொகையான ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கினர். இவ்வாறு வந்த இவர்கள் அன்றைய கண்டி, நுவரெலியா பிதேசங்களை பார்வையிட்டனர். பெருங்காடுகளையும், கற்பாறைகளையும் கொண்ட இப்பிரதேசத்தின் காணியில் ஒரு ஏக்கர் ஒரு பவுணுக்கு வெள்ளைக்காரர்களின் ஆட்சி வழங்கியது. இந்த விலைக்கு ஒவ்வொரு வெளிநாட்டு வெள்ளைக்கார கம்பெனிகளும் பல ஏக்கர்களை விலைக்கு வாங்கின. கமம்பெனிகாரர்களுடன், போட்டி போட்டுக்கொண்டு தனியாரும் காணிகளை கொள்முதல் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டினர்.

வெள்ளைக்காரர்கள் காடு நிறைந்த காணிகளை செப்பனிட முதன் முதலில் சிங்களத் தொழிலாளர்களை பயன்படுத்தினர். பெரும் காடுகளில் அட்டைகள், விஷபூச்சிகள், பாம்புகள், மிருகங்கள், தொல்லைகளாலும் கடுங்குளிரினாலும் பெரிதாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் வெள்ளைக்காரர்களிடம் கூலிகளாக வேலை செய்ய மறுத்தனர். அவர்களுடன் முரண்பட்டனர். முக்கியமாக சிங்களவர்களுக்கு ஆங்கிலமும், ஆங்கிலேயர்களுக்கு சிங்களமும் தெரியாதமையினால் மொழிப்பிரச்சினையும் ஏற்பட்டது.

ஏற்கனவே தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்து வந்த பலர் தேயிலைத் தோட்டங்களில் இணைந்தனர். அப்போது கோப்பி மரங்களில் நோய் பரவவே கோப்பித் தொழிலில் மந்தநிலை நிலவியது. இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த சேர் ஹெர்க்குயூலெஸ் ஜோர்ஜ் றோபர்ட் ரொபின்ச (1865- 1873) னின் உதவியோடு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க வெள்ளைக்கார துரைமார்கள் திட்டம் தீட்டினர். இவர்களின் முயற்சிக்கு எற்கனவே இங்கு தென்னிந்தியா விலிருந்து வருகை தந்தோரும் உடந்தையாகினர். துரைமார்களின் திட்டத்துக்கு தேசாதிபதி றோபர்ட் ரொபின்சன் பெரிதும் உதவினார்.
சிவனு லட்சுமணன்
சிவனு லட்சுமணன்
மிகவும் தந்திரவழி வகைகளை கையாண்டு தமிழ் நாட்டிலிருந்து திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்களை பாம்பன் தனுஷ்கோடியினூடே கடல் மார்க்கமாக இலங்கையின் வடபகுதி தலைமன்னாருக்கு அழைத்து வந்து மலையகத்தில் குடியேற்றம் செய்தனர். இவர்கள் கடுமையாக உழைத்தனர். காட்டில் கொடிய மிருகங்களுடன் போராடி அட்டைக் கடிக்கும், கொசுக்கடிக்கும் பயம் கொள்ளாது காடுகளை அழித்து செப்பனிட்டார்கள் எமது முதாதையர்கள். வெள்ளைக்காரர்களால் எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருக்காவிட்டால் இன்று மலையகம் எனப்படும் பிரதேசம் காடாகவும் கற்களாலுமே மூடப்பட்டிருக்கும். எமது மூதாதையர்களே காட்டையும், கற்களையும் வெட்டி ஒதுக்கி வீதிகளையும், பாதைகளையும் அமைத்து பாறை நிலத்தில் தேயிலைச் செடிகளை நாட்டி, தேயிலைச் செடிகளால் மலைகளை மூடி அழகு பார்த்தனர்.

180 வருட வரலாற்றைக் கொண்ட இம் மக்களின் துயரங்கள், அவலங்கள், இன்றும் தீர்ந்ததாக இல்லை. இம் மக்களை மலையகத்து அரசியல் தொழிற் சங்கங்கள் இன்றும் வெள்ளைக்கார துரைமார்களை விட மோசமாக ஏமாற்றி வருகிறது. இன்று மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் வழி நடத்துபவர்களாக அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவாகியுள்ளன.

1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் வரலாறு எத்தனை மலையகத் தலைவர்களுக்குத் தெரியும். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகத் தலைவர்களை நாடாளுமன்ற, மாகாணசபை, நகரசபை, பிரதேச சபைகள் மீது ஆசை ஈர்த்துவிட்டது. அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் நோக்கமாக உள்ளனரே தவிர தங்களை வளர்த்துவிட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.

எதிர்காலத்தில் மலையகத் தலைவர்கள் அம் மக்களாலேயே ஓரங்கட்டப்படுவர் என்பது உண்மையாகும். அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனையே எடுத்தியம்புகின்றன.

இன்று மலையக அரசியல் தொழிற் சங்கங்களின் செயற்பாடு அம் மக்களின் எழுச்சிக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும். அந்த நிலைமை இன்று மலையக அரசியல் தொழிற் சங்க செயற்பாடுகளில் இல்லை. இது தொடருமானால் எதிர்வரும் பொதுத் தேர்தல் பலருக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தரக் கூடியதாக அமையலாம்.

அரசியல் அடக்குமுறைகள், தொழிற்சங்க தலைவர்களின் கெடுபிடிகள், அந்நியப்படுத்தல், எனப் பல அடக்கு முறைகள் இன்றும் இவர்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதலாம் திகதி மேதினம் கொண்டாடப்படுகிறது. இது வரை காலமும் மலையகத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் நீத்த 36 தியாகிகளுக்கு எவ்வித மரியாதையையும் மேதினத்தில் வழங்காமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மே தினத்தன்று மாபெரும் ஊர்வலமும், வெறுமனே கோஷமும், தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதால் எவ்வித பயனும் மக்களை சென்றடையப் போவதில்லை. மலையக மக்களின் உரிமைக்காகப் போராடிய 36 தியாகிகளதும் வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அது முக்கியமாகும். மே தினத்தன்று 36 தியாகிகளும் நினைவு கூரப்பட வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.

 • கோவிந்தன் முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939,
 • வேலாயுதம் கந்தளா தோட்டம், புப்புரஸ்ஸ, 1942
 • வேலுசாமி கந்தனா தோட்டம், புப்புரஸ்ஸ, 19
 • வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950,
 • எட்லின் நோனா, என்கலவல தோட்டம், தெபுவான. 1953,
 • ஆதியப்பன், மல்கொல தோட்டம், நாவலப்பிட்டிய. 1953,
 • வேதன் லின்டல் தோட்டம், நேபொட. 1957,
 • வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957,
 • நடேசன் வெறேயர் தோட்டம், இரத்தினபுரி. 1957,
 • ஏப்ரஹாம் சிங்கோ, ரவுன்பங்களாத் தோட்டம், அக்கரப்பத்தனை. 1958,
 • ஐயாவு, பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவை. 1958,
 • பிரான்சிஸ் பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை. 1958,
 •  கொம்பாண்டி, சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958,
 • பொன்னையா சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958,
 • கருமலை, நல்லதண்ணீர் தோட்டம், மஸ்கெலியா. 1959,
 • முத்துசாமி, காலகார, மாதென்ன தோட்டம், எல்கடுவ. 1959,
 • ஜேம்ஸ் சில்வா, கமாவளை தோட்டம், பசறை. 1959,
 • தங்கவேல், முகலாசேனை தோட்டம், இறக்குவானை. 1959,
 • சிதம்பரம், மல்வான தோட்டம், நிட்டம்புவ. 1960,
 • முனியாண்டி, வெத்திலையூர் தோட்டம், எட்டியாந்தோட்ட. 1960,
 • செல்லையா, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
 • ஆராயி, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
 • மாரியப்பன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
 • நடேசன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
 • விஜயசேன, எல்வதுரை தோட்டம், இங்கிரியா 1961,
 • சோலை, சின்ன கிலாபோக்கு தோட்டம், மடுல்கல. 1961,
 • அழகன், கந்தநுவர தோட்டம், எல்கடுவ. 1969,
 • ரெங்கசாமி கந்தநுரவ தோட்டம், எல்கடுவ. 1969,
 • இராமையா, சீனாக்கள தோட்டம், பதுளை. 1970,
 • அழகர் சாமி சீனாக்கல தோட்டம், பதுளை. 1970,
 • கந்தையா நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
 • பார்வதி நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
 • ஆறுமுகன் நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
 • இராமசாமி, நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
 • லெட்சுமணன் சிவனு யொக்ஸ்போர்ட் தோட்டம் வட்டகொட. 11.05.1977. 
 • பழனிவேல், பல்லேகலத் தோட்டம், கண்டி. 1979.


14-05-2005 இல் தியாகி சிவனு லெட்சுமணின் நினைவு தினத்தையொட்டி தலவாக்கலை மேல் கொத்மலைத் திட்டத்தை கைவிடுமாறு கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தை தலைமைதாங்கி நடத்தியவர் இறுதியில் அதே மின்சார அபிவிருத்தித் திட்டத்தில் உயர் பதவியேற்று வாகனமும் பெற்று சுக போகங்களை அனுபவித்து வருகின்றார்.

கே.பி.பி. புஷ்பராஜா
நன்றி- தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates