அ.லோரன்ஸ் |
மலையக அரசியலின் வரலாற்று வளர்ச்சியையும் நகர்த்த வேண்டிய பணிகளையும் பற்றி சில கருத்துக்களைக் கூறலாம் என நினைக்கிறேன்.
நான் மலையக சமூகத்தைச் சேர்ந்தவனல்ல. அதற்கு வெளியில் தனது விடுதலைக்காகப் போராடும் வட-கிழக்கு சமூகத்தைச் சேர்ந்தவன். ஆனால் மலையக மக்கள் தொடர்பாக மிகுந்த அக்கறையுடையவன். முடிந்தவரை அவர்கள் தொடர்பான தேடல்களை மேற்கொண்டு வருபவன். வடக்கில் குடியேறிய மலையக மக்கள் மத்தியில் புனர் நிர்மாண பணிகளை மேற்கொண்டவர்களில் ஒருவன். எனினும் மலையக மக்களின் அபிலாஷைகளை அவர்கள் அனுபவித்து வெளிப்படுத்துவது போல ஒரு அகநிலை நின்று ஆக்கத்தினை கொணர முடியாது. எனவே ஒரு புறநிலையாளன் என்ற வகையிலேயே எனது கருத்துக்களை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துக்கள் எப்பொழுதும் முடிந்த முடிவுகளல்ல. விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உரியவை. கருத்துக்கள் மோதுகின்ற போதுதான் உண்மைகளை தரிசிக்க முடியும். எனவே என்னுடைய கருத்துக்களையும் விவாதத்திற்கும் கலந்துரையாடல்களுக்கும் எடுத்துக் கொள்ளுமாறும் அதேவேளை தவறுகளை மன்னிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
மலையக மக்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒரே தடவையில் வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்கு முறை என்பவற்றை புற ரீதியாக எதிர் நோக்குகின்றனர். அதேவேளை மலையக மக்களில் பெரும்பான்மையினர் சாதி ரீதியான ஒடுக்கு முறை, உள்ளக வர்க்க ஒடுக்கு முறை என்பவற்றிற்கு அக ரீதியாகவும் முகம் கொடுக்கின்றனர். எனவே ஒரே சமயத்தில் இன விடுதலையையும் வர்க்க விடுதலையையும் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதாவது தேச அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவர்கள் அதே தருணத்தில் சமூக மாற்றத்திற்கான அரசியலையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரே நேரத்தில் புற ரீதியான ஒடுக்கு முறைகளுக்கும் அக ரீதியான ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக போராடுகின்ற போது போராட்ட தந்திரோபாயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டியது தேவையாயிருக்கின்றது.
ஆனால் ஒரு தேசப் போராட்டம் என்பது அந்தத் தேசம் புறநிலையிலிருந்து வருகின்ற ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமாகும். இதனால் வர்க்க, சாதி, பிரதேச நிலைகள் கடந்து தேசத்தின் அனைத்துப் பிரிவினரையும் இணைக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது. அதுவும் சிங்கள தேசத்தினால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு தேசம் வெற்றியடைவதற்கு தனது முழு ஐக்கிய பலத்தையும் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.
எனது இந்த உரை அக ஒடுக்குமுறை பற்றி அதிக கவனத்தினை குவிக்கவில்லை. மாறாக புற ரீதியான ஒடுக்குமுறையான இன ஒடுக்கு முறையிலேயே கவனம் செலுத்துகின்றது.
இன ஒடுக்கு முறை தொடர்பான மலையகத்தின் இன்றைய அரசியல் நிலையையும், எதிர்கால பணிகளையும் பற்றி முழுமையாக புரிந்துக் கொள்வதற்கு மலையக அரசியலின் வரலாற்று வளர்ச்சி, அது இன்று வந்தடைந்துள்ள கட்டம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.
மலையக மக்கள் சுமார் 87 வருடங்களாக நீண்ட போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்கள் அமைப்பு ரீதியாக போராட தயாரான ஆண்டாக 1919ம் ஆண்டினைக் குறிப்பிடலாம். இந்த ஆண்டே சேர். பொன்னம்பலம் அருணாசலமும், பெரிசுந்தரமும் இணைந்து தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பினை உருவாக்கி மலையக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பியிருந்தனர். 1919ம் ஆண்டிலிருந்து 1935 வரை மலையக அரசியலின் முதலாவது கட்டம் எனக் கூறலாம். அன்றைய கால கட்டத்தில் கொடூர ஒடுக்கு முறையாக இருந்த துண்டு முறையினை ஒழிப்பதற்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள் எனக் கூறப்படுகின்றது.
ஆனாலும் இக்கால கட்டத்தினை நகர்த்திய பெருமை நடேசையரையே சாரும். A.E குணசிங்கவின் தொழிற் சங்கத்தில் உபதலைவராக இருந்த அவர் குணசிங்கவின் இனவாத நடவடிக்கைகளால் அதிலிருந்து விலகி தோட்டத் தொழிலாளர்களுக்கென தனியான தொழிற் சங்கமாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி செயற்பட்டார். டொனமூரின் அரசாங்க சபையில் ஹட்டன் தொகுதி உறுப்பினராக 1936 தொடக்கம் 1947 வரை கடமையாற்றியும் இருந்தார். தோட்டங்களுக்கு வெளியார் செல்லக் கூடாது என்ற கட்டளையும் மீறிச் சென்று தொழிலாளர்களுக்கு விழிப்பூட்டினார்.
1935 தொடக்கம் 1947 வரை மலையக அரசியலின் இரண்டாவது காலகட்டம் எனக் கூறலாம். இக்காலக்கட்டம் இடதுசாரிக் கட்சிகள் மலையக மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டமாகும். இடதுசாரிகளே மலையகத்தில் வேலை நிறுத்தம் உட்பட பல போராட்டங்களை அறிமுகப்படுத்தியவர்களாவர். இவர்களால் நடாத்தப்பட்ட முல்லோயாப் போராட்டம் புகழ் பூத்த ஒன்றாகும். பிரஸ் கேடில் சம்பவமும் மலையக அரசியலை மையமாக வைத்தே நிகழ்ந்திருக்கின்றது. மலையகத்தின் முதல் போராளி கோவிந்தனும் முல்லோயாப் போராட்டத்திலேயே மரணமானார்.
1940 வரை மலையக அரசியலில் இன ஒடுக்கு முறை பெரியளவில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வர்க்க ஒடுக்கு முறையே பிரதானமாகத் தொழிற்பட்டது. இதனால் நடேசையரும், இடதுசாரிகளும் வர்க்க ஒடுக்கு முறைகளிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்தனர். ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர் கைகளில் இருந்ததினால் இன ஒடுக்கு முறை பெரியளவிற்கு எழுச்சியடையவில்லை. ஆனாலும் கொழும்பு நகரத்தில் இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இனவாதம் 1920களிலேயே ஆரம்பித்து விட்டது.
அநகாரிக தர்மபால இந்திய வர்த்தகர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். A.E குணசிங்க கொழும்பில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். அரச அதிகாரம் அரசாங்கத் தலைவர்களிடம் இல்லாததினால் அது பெரியளவிற்கு நடைமுறைச் செயற்பாட்டில் எழுச்சியடையவில்லை. எனினும் இந்தப் போக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை.
1931இல் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் யாப்புடன் இனவாத சக்திகள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தமது செயற்பாட்டினை முடுக்கிவிட்டனர். தமக்கு கிடைத்த அரைகுறை அதிகாரத்தை வைத்துக் கொண்டே நகரத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவழி அரசாங்க உத்தியோகத்தர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போன்றோரை பதவியிலிருந்து நீக்கினர். இந்நிலையில் இவற்றுக்கு முகம் கொடுப்பதற்காகத்தான் நேருவின் வழிகாட்டலில் இலங்கை-இந்தியர் காங்கிரஸ் 1939இல் உருவாக்கப்பட்டது. 1940இல் இதனுடைய தொழிற் சங்கம் மலையகத்தில் பணியாற்ற ஆரம்பித்தது.
இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இனவாதம் கொழும்பில் ஆரம்பித்தாலும் இக்காலத்தில் மலையகத்தில் முற்று முழுதாக நடைபெறவில்லையெனக் கூற முடியாது. 1937ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உள்ளுராட்சிச் சபைச் சட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும். பண்டாரநாயக்கா உள்ளுராட்சி அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் மூலம் உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மலையக மக்களுக்கு இல்லாமற் செய்யப்பட்டது. இதைவிட அரசாங்க சபைத் தேர்தல்களில் கூட மலையக மக்களின் வாக்கு வீதத்தினைக் குறைப்பதற்காக வாக்குரிமைச் சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் 1936 தேர்தலின் போது கொண்டு வரப்பட்டன.
மூன்றாவது காலகட்டம் 1941ஆம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டுவரை வருகின்றது. 1947 இன் சோல்பரி அரசியல் யாப்பு அதன் பின்னர் 1948ல் வழங்கப்பட்ட சுதந்திரம் என்பனவற்றின் மூலம் இலங்கையின் ஆட்சி அதிகாரம் முழுமையாக சிங்களத் தலைமைகளின் கைகளுக்குச் சென்றது. ஆங்கிலேயர்கள் இலங்கைத் தீவின் பன்முக சமூகத் தன்மை கவனத்திலெடுக்காமல் ஒற்றையாட்சி அரசியலை அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றனர். பல்வேறு இனங்களும் நியாயமான வகையில் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் தன்மை அதிகார கட்டமைப்பில் இருக்கவில்லை.
சிங்கள தலைமை தென் இலங்கையில் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தையே இல்லாமல் செய்யும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. இரு பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமும் வாக்குரிமைச் சட்டத்தின் மூலமும் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை இல்லாமல் செய்தது. மலையக மக்கள் பலவந்தமாக தொழிற்சங்க அரசியலுக்குள் மட்டும் குறுக்கப்பட்டனர். மறுபக்கத்தில் அரசியல் அதிகாரத்தை முழுமையாக சிங்கள மயமாக்கும் முயற்சி நடைபெற்றது.
1950 இல் தேசியக் கொடி, 1956 இல் தனிச் சிங்கள சட்டம் என்பன சிங்கள மயமாக்கல் செயற்பாட்டில் பிரதான விடயங்களாக இருந்தன. ஏனைய இனங்களுக்கு பாதுகாப்பாக சோல்பரி யாப்பில் காணப்பட்ட 29வது பிரிவு, கோமறைக் கழகம் என்பன மலையக மக்கள் விடயத்தில் சிறிதளவு பாதுகாப்பினைக் கூட கொடுக்கவில்லை. பிரஜா உரிமைப் பிரச்சினையில் உலக நீதிக்குப் புகழ்பெற்ற கோமறைக் கழகமும் கையை விரித்திருந்தது.
இந்த அரசியல் அடையாளப் பறிப்பின் உச்சநிலை அம்சமாகவே 1964 இல் கைச்சாத்திடப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் அமைந்தது. மலையக மக்களின் சம்மதமில்லாமலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரைவாசி இந்திய வம்சாவழி மக்கள் நாடு கடத்தப்பட்டனர். 1974ல் கைசாத்திடப்பட்ட ஸ்ரீமா-இந்திரா ஒப்பந்தமும் இந்த நாடுகடத்தலில் பங்காற்றியிருந்தது.
ஏற்கனவே டொனமூர் காலத்தில் நகர்புறங்களில் பணியாற்றியவர்கள் வேலை நீக்கப்பட்டதால் சுயமாக வெளியேறினர். பின்னர் வந்த ஒப்பந்தத்தின் மூலம் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டனர். இந்த இரு வகை வெளியேற்றங்களினால் 1940களில் இரண்டாவது பெரிய இனமாக 13வீதமாக இருந்த இந்திய வம்சாவழியினர் 1981இல் 5.5 வீதமாக மாறினர்.
சுதந்திரம் கிடைத்தவுடனேயே மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை பறித்த ஆட்சியாளர்கள் 1972இன் பின்னர் மலையக மக்களின் கூட்டிருப்பையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக மேற்கொண்ட பிரதான நடவடிக்கையே மண்பறிப்பாகும். 1972 இன் காணி சீர்திருத்தச் சட்டம், 1975 இன் காணி உச்சவரம்புச் சட்டம் என்பன மலையக மக்களை அவர்கள் வளமாக்கிய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தின. அத் தோட்டங்கள், பெருந்தோட்டத் துறையுடன் எந்தவித தொடர்புமற்ற சிங்கள கிராமவாசிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கு எதிரான போராட்டத்திலேயே டெவன் தோட்டப் போராளி சிவனு லட்சுமணன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இலங்கை - இந்திய காங்கிரசும் பின்னர் பெயர் மாற்றப்பட்ட இலங்கைத் தொழிலாளர் கங்கிரசும் இக்கால கட்டத்தினை நகர்த்திய முக்கிய அமைப்பாக இருந்தது. தொண்டமான் பிரதான தலைவராக விளங்கினார். ஏனைய பல தொழில் சங்கங்கள் தொழிற்பட்ட போதும் இன அரசியலை நகர்த்திய அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையே குறிப்பிடலாம். மலையக ஆய்வாளர் காதர் இலங்கை - இந்திய காங்கிரசினையே மலையகத்தின் முதலாவது தேசிய இயக்கமாகக் குறிப்பிடுகின்றார். 1947 தேர்தலில் இவ்வமைப்பின் சார்பில் 6 பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
நான்காவது கால கட்டம் 1977 தொடக்கம் 2000 வரையிலான காலகட்டமாகும். இக்கால கட்டத்தில் மலையக மக்களின் நீண்ட போராட்டத்தின் வாயிலாக மலையக மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்தது. 1977ம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா - மஸ்கெலியா தொகுதியிலிருந்து மூன்றாவது அங்கத்தவராக தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார்.
அதேவேளை இக்கால கட்டத்தில்தான் வட-கிழக்கில் தனிநாட்டுப் போராட்டமும் முனைப்புடன் தொழிற்படத் தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 தேர்தலில் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரச்சாரம் செய்து போட்டியிட்டு வட-கிழக்கிலுள்ள 19 தமிழ்த் தேர்தல் தொகுதிகளில் 18இனைக் கைப்பற்றியது. அதேவேளை 1977, 1983 காலங்களில் இரு இன அழிப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் வட-கிழக்குத் தமிழர்கள் மட்டுமல்ல. மலையகத் தமிழர்களும் அழிக்கப்பட்டனர். 1983ன் பின்னர் வட-கிழக்கில் பாராளுமன்ற அரசியலுக்கு முதன்மையான இடம் இல்லாமல் போனது. விடுதலை இயக்கங்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டன. மலையக இளைஞர்கள் பலரும் இயக்கங்களில் இணைந்து கொண்டனர்.
வட-கிழக்கு நிலைமைகள் மலையகத்திலும் விழப்புணர்வுகளைக் கொண்டு வரத் தொடங்கின. மலையகம், மலையகத் தமிழர் என்ற எண்ணக்கருக்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையக விடுதலையை மையமாக வைத்த தீவிரவாத இயக்கங்களும் மலையகத்தில் தோன்றின. பாராளுமன்ற அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் போட்டிப் போடக் கூடியளவிற்கு மலையக மக்கள் முன்னணியும் எழுச்சியடைந்தது.
1978ல் மலையக அரசியல் வரலாற்றில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியத்துவம் தொழிற்சங்க அரசியலை இன அரசியல் தளத்திற்கு கொண்டு வந்தமையே ஆகும். 1978ல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்கான மலையகப் பிரதிநிதிகளையும் அதிகரிக்கச் செய்தது.
மலையக மக்களையும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடச் செய்தமை, வடகிழக்குப் போராட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைந்து விடுவார்களோ என அஞ்சியமை போன்ற காரணங்கள் மலையக மக்களின் ஒடுக்கு முறைகளில் சிறிய நெகிழ்வுகளை ஏற்படுத்தின. இதன் காரணமாக நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. அம்பேகமுவ, நுவரேலியா பிரதேச சபைகள் மலையக மக்களின் தலைமையில் விடப்பட்டன. கிராம சேவகர், ஆசிரியர்கள் உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டம் மலையக மக்களின் கூட்டிருப்பினை வன்மையாக வெளிப்படுத்தும் மாவட்டமாக வளரத் தொடங்கியது. சிறிபாத கல்விக் கல்லூரி மலையக ஆசிரிய உருவாக்கத்திலும் பெரிய பங்கினை ஆற்றத் தொடங்கியது. ஆசிரிய சமூகம் மலையக சமூகத்தில் முக்கிய சமூக சக்தியாக மாறத் தொடங்கியது.
2000க்குப் பின்னர் மலையக அரசியலின் ஐந்தாவது கட்டம் வருகின்றது. இக்கட்டத்தில் வட-கிழக்குப் போராட்டம் அரசியல் தீர்வினை நோக்கி நகரும் தறுவாயில் இருக்கின்றது. முஸ்லீம் மக்கள் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி இனப்பிரச்சினைத் தீர்வின் போது தங்களுக்கான தீர்வினையும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மலையகத்தைப் பொறுத்தவரை மலையக அரசியற் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வின்போது மலையக மக்களின் தீர்வினையும் வற்புறுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இந்த விடயங்களை முன்னெடுப்பதற்கு மலையகத்தில் ஒரு எதிர்கட்சி அரசியலையும் நகர்த்துவதற்கு தயாராக இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இணைந்திருப்பதால் எதிர்கட்சி அரசியலை நடாத்தக் கூடாது என்றில்லை. ஏற்கனவே தொண்டமானும் முஸ்லீம் காங்கிரஸ் மறைந்த தலைவர் அஸ்ரப்பும் அவ்வாறான ஒரு அரசியலை நடத்தியிருக்கின்றனர்.
மறுபக்கத்தில் இனவாத ஒடுக்குமுறை மலையகத்தில் தற்போது புது வடிவத்தினை எடுக்கத் தொடங்கியுள்ளது. மலையகத்தின் உயிர் மையமாக இருக்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களின் நிலத் தொடர்ச்சியை சிதைக்கும் வகையில் மேல் கொத்மலைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இன்னோர் வகை மண்பறிப்பாகும். இது மலையக மக்களின் கூட்டிருப்பின் ஆதாரத்தையே பலவீனப்படுத்தக் கூடியது. இவ்விவகாரத்தில் மலையக மக்களின் கைகள் பலவீனமடைந்து வருவது ஆரோக்கியமான ஒன்றாக எனக்குத் தெரியவில்லை.
வட கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இந்த நீர்ப்பாசனத் திட்டங்களினால் ஏற்பட்ட சிதைவுகளை சரி செய்ய முடியாமல் தமிழர் தாயகம் இன்றும் திணறிக் கொண்டிருக்கிறது. அந்த நிலை மலையகத்தின் உயிர் மையமாக இருக்கும் நுவரெலியா மாவட்டத்திற்கும் வந்துவிடக் கூடாது என்பதில் மலையகத் தேசிய சக்திகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதேவேளை மலையக மக்கள் ஐதாக இருக்கின்ற இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை மாவட்டங்களில் மலையக மக்களின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்ந்துக் கொண்டேயிருக்கின்றன. நுவரேலியா மாவட்டத்தைப் பாதுகாப்பதன் மூலமே ஐதாக வாழ்கின்ற மக்களின் இருப்பினைப் பாதுகாக்க முடியும் அல்லது மாற்று நடவடிக்கை எதையாவது எடுக்க முடியும்.
இதுவரை மலையக மக்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்த்தோம் இந்த வளர்ச்சிகளுக்கூடாக மலையக மக்கள் புதிய கட்டம் ஒன்றுக்கு வந்திருக்கின்றனர். தங்களுக்கான தேசிய அடையாளத்தை வரையறுப்பதும் அதன் வழி தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான மார்க்கங்களை நாடுவதுமே இக்கட்டத்தில் அவர்களுக்கு முன்னால் உள்ள பணிகளாகும்.
இன அரசியல் பொதுவாக மூன்று கட்டங்களினூடாக வளர்வதே வழக்கமானதாகும். இன அரசியலை உருவாக்கும் கட்டம், இன அரசியலை தேசிய அரசியலாக வளர்க்கும் கட்டம், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் கட்டம் என்பனவே அவ் மூன்று கட்டங்களுமாகும்.
மலையக அரசியல் தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. ஆனால் இரண்டாவது கட்டம் இன்னமும் பூர்த்தியாக்கப்படவில்லை. நான் ஏற்கனவே கூறியது போல தேசிய அடையாளத்தை வரையறுப்பது இக்கட்டத்தில் முக்கியமானதாகும். தேசிய அடையாளத்திற்கான கோரிக்கைகளை தெளிவாக வரையறுத்து அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போதே தேசிய அடையாளம் தெளிவாக வரையறுக்கப்படும். இதற்கான பிரதான வழி எதிர்க்கட்சி அரசியலை தொடர்ச்சியாக முன்னெடுப்பதேயாகும்.
மலையக முன்னணி சக்திகள் முதலில் தமது பிரதேசத்தில் மக்களை அறிவூட்டி அரசியல் மயப்படுத்தி ஒரு சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், புலமையாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் ஆகிய ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தங்கள் தளங்களில் நின்று கொண்டு மலையகத் தேசியத்திற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
மலையக மக்களை ஒரு சக்தியாக உருவாக்கி கொண்டபின் துணை சக்திகளையும் நட்புச் சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு பிரதான துணை சக்தியாக இருக்கப் போகின்றவர்கள் வட-கிழக்கு மக்களே. வட - கிழக்கின் புதிய தலைமுறை மலையக மக்களை மிகவும் அக்கறையோடு நோக்குகின்றது. ஒரு தரப்பினுடைய அரசியல் அபிலாஷைகளை மற்றைய தரப்பு அங்கீகரித்து பரஸ்பர ஒத்துழைப்பினை நல்கின்ற நிலையினை உருவாக்குதல் வேண்டும். வட - கிழக்கில் நீட்சியாக இருக்கின்ற புலம் பெயர் மக்கள் மலையக மக்களின் அபிலாஷைகளை சர்வதேச மயப்படுத்தும் பணியில் பயனுள்ள பங்கினை ஆற்றமுடியும்.
இரண்டாவது துணை சக்தி தமிழக மக்கள். இவர்களுடன் உயிர்த்துடிப்பான தொடர்புகளை ஏற்படுத்த மலையக தேசிய சக்திகள் முன்வர வேண்டும். ஏற்கனவே நாடு கடத்தப்பட்டு இந்தியாவில் வாழும் மலையக வம்சாவழியினர் இது விடயத்தில் பயனுள்ள பங்கினையாற்ற முடியும்.
மூன்றாவது துணைச் சக்தி உலகெங்கும் பரந்து வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள். இன்று தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயஸ், பிஜித் தீவுகள் என பல இடங்களில் இந்தியா வம்சாவழித் தமிழர்கள் வாழ்கின்றனர். இதைவிட பல கல்விமான்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வாழ்கின்றனர். அவர்களுடனும் உயிர்த் துடிப்புள்ள தொடர்புகளை பேணுவது சர்வதேச மயப்படுத்துவதற்கும், பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
இவர்களை விட சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளும், உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் மலையக மக்களுக்கு நல்ல நட்பு சக்திகளாக இருப்பர்.
இவ்வாறு பரந்தளவில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போதே மலையக அரசியலை காத்திரமான நிலைக்கு கொண்டு வர முடியும். இவையெல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது முதலில் மலையக மக்கள் தங்களை சக்தியாக உருவாக்கிக் கொள்வதாகும்.
முடிவுரை
இறுதியாக மலையக அரசியல் தொடர்பாக அடிப்படையான சில கருத்துக்களை நான் முன்வைத்திருக்கின்றேன். மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை மலையக மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆனால் இன ஒடுக்கு முறைக்கு உள்ளான ஒரு சமூகம் ஏதாவது ஒரு வகையில் அரச அதிகார கட்டமைப்பில் சமூகமாக பங்கு பெறாமல் அச்சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பது பொதுவான உண்மையாகும். அதிகார வடிவங்களை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அச்சமூகங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.
மற்றைய சமூகங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒவ்வொரு சமூகமும் தமக்கான அதிகார வடிவங்களை தீர்மானித்துக் கொள்வதற்கு அவற்றிற்கு மறுக்க முடியாத உரிமை உண்டு.
எனவே அந்த உரிமை மலையக மக்களுக்கும் உண்டு என்பதை எவரும் நிராகரிக்க முடியாது.
(அ.லோரன்ஸ் எழுதிய மலையகம் - சமகால அரசியல் - அரசியல் தீர்வு என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றபோது ஆற்றிய உரையின் தொகுப்பு)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...