மலையக மக்கள் எனும் போது பொதுவாக அது தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும் தொழிலாளர்களாக இல்லாது விட்டாலும் அவர்கள் வழிவந்தவர்களையும் இளைஞர்களையும் குறிக்கும். இன்று அவர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை என்பன உண்டு. இதனால் அவர்கள் அவ்வப்போது இடம்பெறும் தேர்தல்களில் வாக்களித்து தமது உரிமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குக் கிடைத்த அரசியல் உரிமைகளில் இதை விட வேறெதுவும் அதிகமாகக் கிடைத்து விட்டதாகக் கூற முடியாது. தேர்தல் காலங்களில் இவர்களைத் தேடிவரும் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் முடிந்தபின் அடுத்த தேர்தல் வரும்வரை இவர்கள் இருக்கும் தோட்டப் பகுதிபக்கம் தலைவைத்துப் படுப்பதேயில்லை. இன்று இரத்தினபுரி மாவட்டத்தில் குக்குலேகம போன்ற இடங்களில் இடம்பெறும் சம்பவங்கள் தாம் பெற்ற அரசியல் உரிமைகளால் தோட்ட மக்கள் எந்தளவு பயன் பெறுகிறார்கள் என்பதைக் காட்டி நிற்கின்றன.
தோட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் எவ்வளவு தான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தாலும் அரசும் அவர்களிடம் வாக்குவாங்குவதற்கு வரிசையில் நிற்பவர்களும் அவர்களைக் குடிமக்களாகக் கருதுவதில்லை. அவர்களைத் தொழிலாளர்களாகவே பார்க்கின்றார்கள். எனவே வாக்குகளை வாங்கிய பின் அவர்களது பிரச்சினைகளைத் தோட்ட நிர்வாகம் கவனித்துக் கொள்ளட்டும் என்று வாளாவிருந்து விடுக்கின்றனர். ஆனால் தொழிலாளர்களோ தம்மைத் தொழிலாளர் என்று தாம் நினைப்பதைக் கூடத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்போ மிகப் பெரியது.
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக மலையகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்த் தொழிலாளர் சமூகத்துக்கு நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் மிகப் பலமான அமைப்புகள் இருந்தன. அவர்களது நலன்களை சுதந்திரத்திற்கு முன்பு அவைதான் கவனித்தன.
சுதந்திரத்திற்குப் பிறகு ஒட்டுமொத்தமாக அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கு மேல் அவர்களது நலன்களை அவைதான் கவனித்தன. இன்று பச்சை, நீலமென்று கலர்கலராக வரும் அரசியல் கட்சிகள் அவர்களின் வாக்குகளைக் கேட்டுப் பிச்சையெடுக்கும் கட்சிகள் அவர்கள் நாடற்றவர்களாக இருந்த காலத்தில் அவர்களை நாய்களாகக் கூட நினைக்கவில்லை. மலையகத் தோட்ட தொழிலாளர்களின் அன்றைய அமைப்புகள் மாபெரும் சக்தியாகத் திகழ்ந்தன. மலையகத்தின் எந்தப் பகுதியிலாவது தொழிலாளர்களுக்கு இன்னல் ஏற்படும் போது ஒன்றாகக் கிளர்ந்தெழுந்தன. அவர்களுக்கு அபயக்கரம் நீட்டின.
அவைதான் அன்று மலையகத்தில் மிகப் பலம் பொருந்தியவைகளாகத் திகழ்ந்த தோட்டத் தொழிற்சங்கங்கள். மலையகத்தில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து, பெரியவனாகி பிறகு வயது முதிர்ந்து சுடுகாட்டிற்குச் செல்லும் வரை சென்ற பின்பும் கூட அதன் எல்லா நலன்களையும் கவனித்தவை தோட்டத் தொழிற்சங்கங்களே.
அன்றைய மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும் சில வேளை அவை ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொண்டாலும் தொழிலாளர்களுக்கு அவை துரோகம் செய்தன, தொழிலாளரை ஏமாற்றின என்று ஒட்டு மொத்தமாகக் கூறமுடியாது. ஏனெனில் அன்றைய தொழிற்சங்கங்கள் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்டவையாக இருந்தன. தொழிற்சங்கத் தலைவர்கள் பல தியாகங்களைச் செய்து தொழிலாளருக்கு வழிகாட்டினர். ஆரம்பகாலத் தொழிற்சங்கத் தலைவர்களாக கோ. நடேசையர், ஏ. அஸீஸ், கே. இராஜலிங்கம், எஸ். சோமசுந்தரம், எஸ். தொண்டமான் ஸி. வி. வேலுப்பிள்ளை, வீ. கே. வெள்ளையன், வி.பி. கணேசன், எம்.எஸ். செல்லச்சாமி, என். சண்முகதாசன், என். எம் பெரேரா, டாக்டர் எஸ். ஏ.விக்ரமசிங்க போன்ற மாபெரும் தொழிற் சங்கத் தலைவர்கள் தோட்டத் தொழிலாளருக்கு செய்த சேவையை மறக்கவோ மறுக்கவோ முடியாது. (செல்லச்சாமி மட்டும் இன்றும் உயிர் வாழ்கிறார்) அவர்களது காலத்தில் தோட்டத் தொழிலாளருக்கு ஒரு தெம்பு இருந்தது. தொண்டமான் இருக்கிறார். அஸீஸ் இருக்கிறார். சண் இருக்கிறார். வெள்ளையன் இருக்கிறார். என். எம். இருக்கிறார். நம்மைக் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.
1948 க்கு முன்பு தேர்தல் காலங்களில் தமது வாக்குகளை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். தொழிற் சங்கத் தலைவர்கள் மீதும் தொழிற் சங்கங்கள் மீதும் ஒரு மதிப்பு இருந்தது. தொழிற் சங்கங்களையும் தொழிற் சங்கத் தலைவர்களையும் தமது ஆபத்பாந்தவர்களாக மலையக மக்கள் துதித்தனர். மலையக மக்கள் தமக்கு குடியுரிமை இல்லாவிட்டாலும் வாக்குரிமை இல்லாவிட்டாலும் ஒழுங்கான கல்வி வாய்ப்பு இல்லாவிட்டாலும் தொழில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் தாம் தொழிலாளர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தொழிலாளர்கள், சுரண்டிப் பிழைப்பவர்கள் அல்லர். உழைத்துப் பிழைப்பவர்கள் என்று பெருமைப்பட்டவர்கள் இன்று அந்த மதிப்பிற்குரிய தலைவர்கள் யாவரும் மறைந்து விட்டார்கள். அவர்களை நினைவு கூருவதற்கு கூட யாரும் இல்லை. உயிரோடிருக்கும் செல்லச்சாமி போன்றவர்கள் கூட நேரடி தொழிற் சங்க ஈடுபாட்டிலிருந்து முதுமை காரணமாக ஒதுங்கி விட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டார்கள்.
இன்று மலையகத் தொழிற் சங்கங்களின் நிலை என்ன? தலைவர்மாரின் தகைமை என்ன? அவர்களின் சேவை என்ன? அவர்களால் தோட்டத் தொழிலாளருக்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்றெல்லாம் ஒவ்வொன்றாக ஆராயும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. அன்றைய தலைவர்மாரின் செயல்கள் அவர்களை நாம் ஆராதிக்கச் செய்தன. இன்றையவர்களின் செயல்கள் அருவருப்பைத் தருகின்றன.
இன்று மலையகத்தில் புற்றீசல்கள் போல தொழிற் சங்கங்கள் தோன்றி விட்டன. மலையகத்தின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களாக வருகிறவர்கள் எதைச் சாதிக்காவிட்டாலும் இரண்டைச் சாதித்து விடுகின்றனர். முதலாவது மலையகத்தின் மூலைமுடுக்கெல்லாம் அவர்களின் பினாமிகள் பெயரில் சாராயக் கடைகளைத் திறந்து விடுகின்றனர். இரண்டாவது தமது தலைமையில் ஒரு தோட்டத் தொழிற் சங்கத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். அரசியல் பதவிகள் பறிபோனாலும் தொழிற் சங்கம் அவர்களுக்குச் சோறு போடும். மதுபானச்சாலைகள் பணம் சேர்க்கவும் தேர்தல் காலத்தில் வாக்காளப் பெருங்குடி மக்களுக்குப் போத்தல் போத்தல்களாக திறந்து வார்க்கவும் கைகொடுக்கின்றன. தாம் ஆரம்பித்த தொழிற் சங்கங்கள் தமது வாக்கு வங்கியைக் கொஞ்சமாவது பாதுகாக்கத் துணை புரிகின்றன.
முன்பு அர்ப்பணிப்புடனும் தூர நோக்குடனும் செயல்பட்ட கௌரவமிக்க தலைவர்களால் வழி நடத்தப்பட்ட பலம் வாய்ந்த தொழிற் சங்கங்கள் இன்று மானாப்புதூர் மைனர்களாலும் நாலாங் குறுக்குத் தெரு நாட்டாமைகளாலும் விலைக்கு வாங்கப்பட்டு விட்டன. அவர்கள் மலையக மக்களை கட்டி மேய்க்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் தமது தொழிற் சங்கப் பலத்தைக் காட்டி தொழிலாளருக்கும் தேவையானதைப் பேரம் பேசி அல்லது போராடிப் பெற்றுக் கொள்வதாக இருப்பதில்லை. அதைவிடுத்து ஆள்வோருக்கு ஆலவட்டம் வீசி அடிபணிந்து தொழிலாளர் வாக்குகளால் தாம் பெற்றுள்ள எம்.பி.பதவியை அடகுவைத்து அரசுப் பதவிகள், ஆலோசகர் பதவிகள் போன்றவற்றைப் பெற்று ஜமீன்தார் வாழ்வதற்காகத்தான் இடம் பெறுகின்றன. எஜமானின் எச்சில் தட்டில் எஞ்சிக் கிடக்கும் எலும்புத் தூண்டுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் நாயின் நிலையை விட கேவலமானதாக இருக்கின்றது இவர்களின் நிலை. இவர்களோடு மின்னலாய் வந்து மலையக மக்களின் வாக்குகளைக் கன்னமிட்டவர்களும் சேர்ந்து மலையக மக்களைக் கன்னத்தில் கைவைத்து நிற்கச் செய்து விட்டார்கள்.
ஆளவந்தோருக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்த இவர்களால் அல்லல் படும் தோட்ட மக்களின் அவல நிலையைத் தீர்க்கமுடியாது. குக்குலேகமயில் மட்டுமல்லாது கொட்டகலையிலும் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டாலும் இவர்களால் ஆவேசமாகக் கிளர்ந்தெழ முடியாது. ஏனெனில் இவர்கள் ஆளவந்தாரின் அடிமைகள். தொழிற்சங்கத் தலைவர்களாக இருப்பது தொழிலாளருக்கு நன்மை செய்வதற்கல்ல. மாறாக அவர்களை வைத்துப் பணம் பண்ணுவதற்குதான். ஏனெனில் இவர்கள் அடிப்படையில் வர்த்தகர்கள்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...