விலைவாசி உயர்வால் திண்டாடும் தோட்டத் தொழிலாளருக்கு இம்முறை நிவாரணமளிக்குமா கூட்டு ஒப்பந்தம்? -
அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவித பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக ‘ஜெட்’ வேகத்தில் அதிகரித்து வருவதால் நாட்டு மக்களின் வாழ்க்கைச்சுமையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
குறிப்பாக, தற்போதைய விலைப்பொறிமுறையானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதில் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் சம்பளமானது கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே தீர்மானிக்கப்படுகின்றது.
அந்த இரண்டு வருடங்களுக்குள் விலைவாசி உட்பட இதர காரணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்திற்கொண்டு அதற்கேற்ப சம்பள உயர்வை வழங்குவதற்காகவே மேற்படி கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகின்றது.
எனினும், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது மேற்கூறப்பட்ட காரணிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள், இனியும் இவ்வாறு தவறிழைக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டுகின்றன.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அந்த அடிப்படையில் அதன் பின்னர் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
அவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கேற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன தொழிற்சங்கங்கள். நியாயமான சம்பள உயர்வுக்கு வலியுறுத்தப்படும் என்கின்றன கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும். தோட்டத் தொழிலாளர்களும் இதே கோரிக்கையைத்தான் முன்வைத்துள்ளனர். ஆனால், முதலாளிமார் சம்மேளனம் எவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளாந்த சம்பளமாக சுமார் 575 ரூபா வழங்கப்படுகின்றது. 390 ரூபா அடிப்படைச் சம்பளம் உட்பட இதர கொடுப்பனவும் இதில் உள்ளடங்கும். எனினும், 75 சதவீத வரவு இருந்தால் மாத்திரமே 575 ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது. இல்லையேல் அடிப்படைச் சம்பளம் மட்டும்தான் என்ற அவல நிலையும் உள்ளது.
அத்துடன், சில தோட்டங்களில் கொழுந்து பறிப்பதற்கான நிபந்தனைகளும் முன்வைக்கப்படுகின்றன. இதனால் தோட்டப்புற மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இந்தக் காரணி குறித்தும் கூட்டு ஒப்பந்தத்தின்போது பேசப்பட்டு தொழிற்சங்கங்கள் தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் மக்கள்.
அதேவேளை, கடந்த இரண்டு வருடங்களுக்குள் பல தடவைகள் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பல பொருட்களின் விலைகள் அதிகரிப்பானது எம்மைப் பெரிதும் பாதித்துள்ளது. எனவே, இம்முறை நாம் 800 ரூபாவுக்கு மேல் சம்பள அதிகரிப்பை எதிர்பார்க்கின்றோம்" - என்று ‘சுடர் ஒளி’யிடம் கூறினார் மடுல்கலைத் தோட்டத்தைச் சேர்ந்த தங்கையா சுபாகரன்.
எம்மிடமுள்ள தங்க நகைகளையெல்லாம் அடகு வைத்துத்தான் நாம் குடும்பம் நடத்துகிறோம். இந்தத் தடவை எங்களுக்கு சம்பள உயர்வில் நிதி கிடைக்கவேண்டும்" - எனத் தெரிவித்தார் அதே தோட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் மனோமணி.
இதற்கிடையில், சம்பளம் மட்டுமல்ல, எங்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய வசதிகள் செய்துகொடுக்கப்படுவதில்லை" - என்ற குற்றச்சாட்டை முன்வைத்த புரட்டொல் பூச்சிக்கொடைத் தோட்டத்தைச் சேர்ந்த கட்டயன் எனப்படும் ராசமாணிக்கம், இதுகுறித்து தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தவேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இம்முறை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்" - எனக் குறிப்பிட்டு அதற்கான காரணிகளை முன்வைத்தார் புசல்லாவை மெல்ப்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள்.
எனவே, மக்களின் கோரிக்கைக்கிணங்கவும், தற்போதைய பொருளாதார நிலைவரத்துக்கமையவும் நியாயமான சம்பள உயர்வு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும். இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தாம் தயார் என்று தோட்டத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...