Headlines News :
முகப்பு » , , , , , » வரலாற்றில் இருவேறு ஜே.வி.பி.க்களும் ரணில் விக்ரமசிங்கவின் திரிபும் - என்.சரவணன்

வரலாற்றில் இருவேறு ஜே.வி.பி.க்களும் ரணில் விக்ரமசிங்கவின் திரிபும் - என்.சரவணன்

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், சிறிமா -இந்திரா ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு ஜேவிபி அன்று எதிர்த்ததாகவும், மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் இயங்கியதாகவும் ரணில் விக்கிரமசிங்க 10ஆம் திகதியன்று நுவரெலியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். இன்றைய ஜேவிபி அதற்காக மலையக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவ்வுரையின் போது காட்டமாகக் கூறியிருந்தார்.

இது ஒரு கயமையான ஒரு பிரச்சாரம். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் அரசியல் சூழ்ச்சிக்காக வரலாற்றுத் திரிபுகளை செய்யக்கூடியவராக இதற்கு முன்னர் இனங்காணப்படாத நபர். ஆனால் தற்போதைய அரசியல் வங்குரோத்துத் தனம் அவரை அதையும் செய்யத் தூண்டியிருக்கிறது என்றே கூறவேண்டும்.

மலையக மக்களுக்கான குடியுரிமை பிரச்சினைகள் 1948 ஆம் ஆண்டளவில் எழுந்தபோது ஜேவிபி தோற்றம் பெற்றிருக்கவில்லை. சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் அதே ஆண்டு அதாவது 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 இல் செய்து கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1965 ஆம் ஆண்டு தான் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள 300,000 இந்திய தோட்டத்  தொழிலாளர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்குவதும், 525,000 பேரை  இந்தியாவுக்கு அனுப்புவதும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய  எஞ்சிய 150,000 இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்வதுமே சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சமாக இருந்தது.

1974 ஜூன் 28, அன்று கையெழுத்திடப்பட்ட சிறிமா – இந்திரா ஒப்பந்தத்தின் படி மீதமுள்ள இந்திய வம்சாவளி மக்களின் தலைவிதியை தீர்மானிப்பது பற்றியும் பேசப்பட்ட ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தம் செய்துகோள்ளப்பட்ட 1974 இல் ஜேவிபி அரசியல் களத்திலேயே இல்லை. 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அது  ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கம். மேலும் அக்கிளர்ச்சியின் போது பலர் படுகொலை செய்யப்பட்டும், எஞ்சிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு அரசியல் பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்த காலம் அது. அக்கட்சியின் தலைவர்கள் 1977 இன் பின்னர் தான் விடுதலையாகி மீண்டும் அக்கட்சி மெதுமெதுவாக அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியது. எனவே 1974 ஒப்பந்தத்தின் மீது வினையாற்ற அவர்களுக்கு எந்த வாய்ப்பும் விட்டுவைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை ரணில் அறியாமல் இல்லை. ஆனால் இந்த அரசியல் புழுகு மலையக மக்கள் மத்தியில் எடுபடும் என்கிற நம்பிக்கை எங்கிருந்து வந்தது. மலையக மக்களின் அரசியல் அறிவை குறைத்து மதிப்பிடும் ஒருவராக ரணிலைக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நயவஞ்சகமாக மலையக மக்களிடம் சென்று அவர்களை ஜேவிபிக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி அதை நம்பவைக்க இந்த விஷமப் பிரச்சாரத்தில் ரணில் ஈடுபட்டிருந்தார்.

இன்றைய ஜே.வி.பி. (மக்கள் விடுதலை முன்னணி) இந்திய வம்சாவளியினர் குறித்த கடந்தகால பார்வைகள் ஆரோக்கியமானதல்ல என்பது உண்மையே. அது இந்திய வம்சாவளியினருக்கு எதிரான கருத்து நிலையில் இருந்து உருவானதள்ள. அது இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட கருத்தாக்கம். அக்கருத்தாக்கம் நாளடைவில் இந்திய வம்சாவளியினரையும் பாதித்தது உண்மை. ஆனால் 1989 இல் அழிக்கப்பட்டு மீண்டும் அரசியல் களத்துக்கு வந்ததன் பின்னர் குறிப்பாக கடந்த 35 வருடங்களாக இந்திய வம்சாவளியினருக்கு எதிரான எந்த இனவாத போக்கையும் கொண்டதில்லை. மாறாக குடியுரிமை பிரச்சினையை முற்றிலும் தீர்க்க எந்த தேசிய கட்சியோ, மலையக கட்சியோ, தமிழ் கட்சியோ முன் வராத போது 2003 ஆம் ஆண்டு யூலை மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து இனி மேல் குடியுரிமையற்ற எந்தவொரு இந்திய வம்சாவழித் தமிழரும் இலங்கையில் இல்லை என்கிற நிலையைக் கொண்டு வந்தது ஜேவிபியினரே. அவர்கள் பிரேரித்த அந்த அந்த சட்டம் 2003 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பிரசாவுரிமை (திருத்தச்) சட்டம் என்கிற சட்டமாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த கால சிறு தவறுகளுக்குமான பிராயச்சித்தமாக அந்த மாபெரும் தீர்வு அமைந்தது என்பதே நிதர்சனம்.

50களில் இயங்கிய இன்னொரு ஜேவிபி

இதேவேளை அவர் அதற்கு முன்னர் இருந்த ஜேவிபி என்கிற கட்சியைத் தான் இங்கே திரித்து தொடர்புபடுத்தினாரா என்று சந்தேகிக்க வேண்டிருக்கிறது.

1950 – 1960களில் கொடிகட்டி பரந்த கட்சிகளிள் ஒன்று கே.எம்.பி.ராஜரத்னவின் தேசிய விடுதலை முன்னணி கட்சியாகும். சிங்களத்தில் அக்கட்சியை ஜாதிக விமுக்தி பெரமுன (JVP) என்று அழைக்கப்பட்டது. இக்கட்சியின் சார்பில் கே.எம்.பி ராஜரத்னவும் (வெலிமட தொகுதி) அவரது மனைவி குசுமா ராஜரத்னவும் (ஊவா பரணகம தொகுதி) பாராளுமன்ற உறுப்பினர்களாக ஏக காலத்தில் அங்கம் வகித்தார்கள். நான்கு தடவைகள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றவர் குசுமா.

குசுமா ராஜரத்னவுடன் கே.எம்.பி ராஜரத்ன

1957 ஆம் ஆண்டு தேர்தல் முறைப்பாடொன்றைத் தொடர்ந்து கே.எம்.பி.ராஜரத்னவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதும் வெலிமட தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரின் மனைவி குசுமா ராஜரத்ன போட்டியிட்டு 11,000 அதிகபடியான வாக்குளில் வென்றார். அதுபோலவே 1960 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் யூலை மாதங்களில் நடந்த இருதேர்தல்களிலும் குசுமா வென்றார். அவர் வென்று பாராளுமன்றத்துக்கு சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறித்த வாகத்தில் கோலாகலமாக அழைத்து வரப்பட்ட்டார். சிங்களம் மட்டும் சட்டத்தைத் தொடர்ந்து 1958 இல் சிங்கள ஸ்ரீ எழுத்து வாகனங்களின் இலக்கத் தகடுகளில் பொரிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்ததுடன் அதனை எதிர்த்து தமிழ்ப் பிரதேசங்களில் அப்போது அதற்கு பெரும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்ப் பிரதேசங்களில் அதனை எதிர்த்து தமது வாகனங்களில் தமிழ் “ஸ்ரீ” எழுத்து பொறித்த வாகன இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தினர். தமிழ் “ஸ்ரீ” எழுத்து பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றும்  ஏன் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடும் கண்டனத்தையும், அழுத்தத்தையும் கொடுத்த வந்தார் குசுமா.

தமிழ்ப் பிரதேசங்களில்  சிங்களத்தைப் போல தமிழும் அரச கரும மொழியாக இருக்கும் என்கிற சட்டத்தை நீக்கும்படி அவர்கள் கடும் அழுத்தத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து வந்தார்கள். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப் போகிறார்கள் என்றும் அதைப் பார்த்துக் கொண்டு ஐ.தே.க. அமைதியாக இருக்கிறது என்றும். அது மட்டும் நிகழ்ந்தால் சிங்களவர்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம் என்று அவர் கூறினார் குசுமா. 

குசுமா ராஜரத்ன ஒருமுறை யூகோஸ்லாவிய தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு குரலெழுப்பினார். யூகோஸ்லாவிய தூதுவர் ஜோன்ன் கொஸ்வின் சமசமாஜ தலைவர்களுடன் சேர்ந்து சதி செய்து தமிழ் கத்தோலிக்க சோசலிச அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறார் என்று அவர் அப்போது குற்றம் சாட்டினார்.

இதைக் கேட்டதும் சமசமாஜக் கட்சியினர் கொந்தளித்தனர். இறுதியில் தூதுவரும் நாடு திரும்ப வேண்டியதாயிற்று. அவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்திய முதலாவது பெண் குசுமா ராஜரத்ன என்று கூறலாம்.

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட அரசு ஆதரவு தொழிற்சங்கத் தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமானும் முஸ்லிம் இனத்து அசீஸும் இந்திய இராணுவத்தின் உளவாளிகள் என்றும், ஒன்றரை மில்லியன் கள்ளத்தோணிகளை நாட்டிற்குள் படையெடுப்பதற்கு வழிகளை ஏற்படுத்துவதே அவர்களின் திட்டம் என்றும் குசுமா வாதிட்டார்.

1950 களின் நடுப்பகுதியில் பண்டாரநாயக்கவை சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டுவருவதற்கு அழுத்தம் கொடுத்த சக்திகளில் ஒன்றான சிங்கள பாஷா பெரமுனவைச் சேர்ந்த எப்.ஆர்.ஜெயசூரிய, கே.எம்.பி.ராஜரத்ன ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்பட்டது தான் ஜேவிபி எனப்படும் “ஜாதிக விமுக்தி பெரமுன”. 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஆளுங்கட்சியில் இருந்து விலகிய கே.எம்.பி.ராஜரத்ன ஐந்து நாட்களாக தொடர்ந்த சாகும்வரை  உண்ணாவிரதப் போராட்டம் அன்று சிங்கள பௌத்த தரப்பை அதிகமாக தூண்டியது ஈற்றில் பண்டாரநாயக்கவின் வீடு வரை சென்று அவ்வொப்பந்தத்தை கிழிக்கவைத்தனர். அவ்வாறு சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி உருவாக்கப்பட்டது தான் அவரி ஜே.வி.பி. கட்சி.

1958 கலவரத்த்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்?

தமிழரசுக்கட்சி 1958 மே 25ம் திகதி வவுனியாவில் சிறப்பு மாநாடு ஒன்றினை நடாத்த தீர்மானித்திருந்த போது தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் அணிதிரண்டு தென்னிலங்கையை ஆக்கிரமிக்கப் போகின்றனர் எனும் வதந்தியை இந்த ஜாதிக ஜாதிக விமுக்தி பெரமுன பரப்பியது. 1958 ஆம் ஆண்டு இந்த வதந்தியே இனக் கலவரத்துக்கு முக்கிய தூண்டுகோலாக இருந்தது. அது மட்டுமல்ல 1958 மே மாதம் திகழ்ந்த கலவரத்துக்கான பழியை சுமத்தி அன்றைய பண்டாரநாயக்க அரசாங்கம் இரு கட்சிகளை தடை செய்தது. ஒன்று தமிழரசுக் கட்சி அடுத்தது இந்த ‘ஜேவிபி’. அவ்வாண்டு ஒக்டோபர் 27 வரை இத்தடை நீடித்தது. 1958 இல் தமிழ் மொழி விசேட சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது  யூன் மாதம் தமிழரசுக் கட்சியின் எம்.பி.களையும் ஜே.வி.பி. கட்சியின் எம்.பி ராஜரத்னவையும் வீட்டுத் தடுப்புக் காவலில் வைத்தது அரசு.

இந்த காலப்பகுதியில் தீவிர இனவாத செயல்களில் ஈடுபட்ட மூன்று அமைப்புகளை ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார். தர்ம சமாஜ கட்சி (D.P), ஜாதிக விமுக்தி பெரமுன (JVP), சிங்கள மகாஜன பெரமுன (SMP).

“இங்குள்ள இந்தியர்கள் நாட்டுக்கு பெரும் பொருளாதாரத் தலையிடி. அவர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்” என்று இந்த தேசிய விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யினர் வெளிப்படையாக கூறி வந்தார்கள். (Ceylon Daily News, January 15, 1964)

“தமிழர்களின் தோலில் செருப்பு தைத்து அணிவேன்” என்று குரூரமாக இனவாதத்தை வெளிப்படுத்திய கே.எம்.பி.ராஜரத்னவும் கூட்டரசாங்கத்தின் தலைவர்களில் ஒருவர்.

1960 ஆம் ஆண்டு யூன் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. 1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தில் பங்கேற்றது. வேடிக்கை என்னவென்றால் கே.எம்.பி.ராஜரத்னவின் ஜேவிபியும், தமிழரசுக் கட்சியும் பங்காளிக் கட்சிகளாக அந்த தேசிய அரசாங்கத்தில் இருந்தன. 1970 ஆம் ஆண்டு சிறிமா அரசாங்கத்தில் ராஜரத்ன மீண்டும் ஒரு கெபினட் அமைச்சராக ஆனார்.


கே.எம்.பி.ராஜரத்ன 2011ஆம் ஆண்டு மரணமான போது அவரின் நினைவாக பாராளுமன்றத்தில் பலர் நீண்ட உரையை ஆற்றினர். அன்று உரையாற்றியவர்களின் உரைகளில் சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்த்தன, ரணில், சூரியப்பெரும, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் உரைகள் கவனிக்கப்படவேண்டியவை. இவர்களில் சூரியப்பெரும தனது உரையில் “அந்த ஜே.வி.பி. கட்சியின் முதலாவது பொதுச்செயலாளர் நானே. எப்.ஆர்.ஜெயசூரிய, பேராசிரியர் திலக் ரத்னகார, கலாநிதி ஹரிச்சந்திர விஜேதுங்க, பெசில் சில்வா போன்றவர்களும் தலைமையில் இருந்தார்கள் என்கிறார். அன்று ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய நினைவு உரையின் இறுதியில் “அவர் அன்று ஆரம்பித்த ஜாதிக விமுக்தி பெரமுன”வின் மூலம் தான் முதற் தடவையாக ஜே.வி.பி. என்கிற பெயரும் புழக்கத்துக்கு வந்தது என்கிறார். (24.06.2011 ஹன்சாட்). அதே உரையில் பண்டா செல்வா ஒப்பந்தம், சிங்களம் மட்டும் சட்டம் என்பவற்றின் போது ராஜத்னவின் வகிபாகத்தையும் குறிப்பிடுகிறார் ரணில். அப்படி குறிப்பிட்ட ஒருவர் நுவரெலிய கூட்டத்தில் மாத்திரம் தற்போதைய ஜேவிபியுடன் அவற்றை கோர்த்துவிட்டதன் அரசியல் மோசடியை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பல அரசியல் வரலாற்று ஆய்வாளர்களுக்கு கூட சில வேளைகளில் இந்த இரண்டு ஜேவிபி க்களையும் சரியாக இனங்காண முடியாமல் போயிருப்பதை காண முடிகிறது. ஆனால் சுமார் அரை நூற்றாண்டு அரசியல் அனுபவத்தைக் கொண்ட ரணில் போன்ற தலைவருக்கு அந்தக் குழப்பம் எப்படி வர முடியும்.

உசாத்துணை:

  • தோட்ட மக்களிடம் ஜே.வி.பி மன்னிப்பு கேட்க வேண்டும் (ரணில் விக்ரமசிங்க  ජවිපෙ වතුකරයේ ජනතාවගෙන් සමාව ගත යුතුයි - රනිල් වික්‍රමසිංහ) The Leader, 11.11.2024.
  • அரசாங்கத்தைச் சார்ந்திராத குசுமா ராஜரத்ன ( ආණ්ඩුවට කුසුමක් නොවුණ කුසුමා රාජරත්න) லங்காதீப – 15.12.2017
  • Rohan Gunaratna Lost Revolution no.56, p.82; 
  • 24.06.2011 ஹன்சாட்
  • A. Jeyaratnam Wilson, Politics In Sri Lanka 1947-1973, The Macmillan Press 1974
  • Citizenship (Amendment) Act, No. 16 Of 2003, Government Publications Bureau, Colombo
  • Federal Party in Ceylon Politics Towards Power or Wilderness ?, Economic and Political Weekly, Vol. 4, No. 20 (May 17, 1969),
  • Tarzie Vittachi, Emergency '58: The Story of the Ceylon Race Riots.. London,  Deutsch,  1958
  • மகாசங்கத்தினரின் அரசியலமைப்பு முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் ராஜரத்ன முன்வைத்தார் (මහා සංඝ රත්නයේ ව්‍යවස්ථා යෝජනා රාජරත්න සභාගත කරයි), 2016/01/18 திவயின

நன்றி தினகரன் - 13.11.2024



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates