Headlines News :
முகப்பு » , , , » குருந்தூர் மலை எதிரொலி: தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் அனுர மனதுங்க இராஜினாமா! - என்.சரவணன்

குருந்தூர் மலை எதிரொலி: தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் அனுர மனதுங்க இராஜினாமா! - என்.சரவணன்

முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருந்தூர் மலையை அண்டிய (குருந்தி மலை) தொல்லியல் இடத்துக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியை விடுவிக்க மறுத்ததால் தொல்லியல் பணிப்பாளர் பதிவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தொல்லியல் பணிப்பாளர்பேராசிரியர் அனுர மனதுங்க கடந்த 15ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

முல்லைத்தீவு வரலாற்றுச் சிறப்புமிக்க குருந்தூர் மகா விகாரைக்கு சொந்தமான இருநூறு ஏக்கர் நிலப்பரப்பிலான தொல்லியல் எச்சங்கள் அடங்கிய அநுராதபுரத்தின் ஆரம்ப காலத்தை விஞ்ஞான ஆய்வு மூலம் அடையாளம் கண்டு அளவிட்டு தருமாறு காணி அளவீட்டாளரிடம் தொல்லியல் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அடையாளம் காணப்பட்ட பகுதியில் 05 ஏக்கருக்கும் அதிகமான விவசாய காணியும் உள்ளடங்கும்.

கடந்த 08ஆம் திகதி மாலை ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த நெற்காணிகளை மக்களுக்கு விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அப்போது தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் என்ற வகையில் பேராசிரியர் அனுர மனதுங்க, தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள நாட்டின் சட்டங்களின்படி அதனைச் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி என்ற வகையில் தாம் வழங்கிய உத்தரவை அமுல்படுத்த முடியாவிட்டால் பதவி விலகுமாறு தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன்படி, பேராசிரியர் அனுர மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆலயத்தின் புராதன இடிபாடுகள் கொண்ட நகரின் பகுதியை விஞ்ஞான ரீதியில் ஆய்வுக்குட்படுத்தி தொல்லியல் திணைக்களம் பிரித்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அதில் 05 ஏக்கர் காணியை அதன் உரிமையாளர் தொல்லியல் திணைக்களத்துக்கு தரத் தயாராக இருந்ததாகவும் அவருக்கு அங்கே ஏற்கெனவே அவருக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் சொந்தமாக இருந்ததாகவும் தொல்லியல் திணைக்களம் கூறியிருக்கிறது.

இந்த நிலைமையை மோசமாக ஆக்குவதும் தடுப்பதும் தமிழ் தரப்பு அரசியல் வாதிகள் தான் என்று தற்போது அரசியல்வாதிகளும், தொல்லியலாளர்களும், பௌத்த சங்கங்களும் இனவாத அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

முல்லைத்தீவு குருந்தூர் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பிரதேசம் பௌத்த தொன்மைகளைக் கொண்ட பிரதேசம் அல்ல என்றும், அது இந்து மக்கள் காலங்காலமாக வழிபட்டு வந்த ஆதி ஐயனார் கோவிலுக்குச் சொந்தமானது என்று தமிழர் தரப்பு உறுதியாக கூறி வருகிறது. இந்தப் பகுதியில் இதற்கு முன்னர் ஒருபோதும் சிங்களவர்களோ, பௌத்த பிக்குகளோ வாழ்ந்ததில்லை. மேலும் 2018ஆம் ஆண்டில் தமிழர்கள் இங்கு வழிபடத் தடையில்லை என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இராணுவத்தினரையும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளையும் களமிறக்கி வடக்கில் உள்ள இந்துப் பிரதேசங்களை வலுக்கட்டாயமாக பௌத்தமயமாக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழர் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இராணுவத்தின் பாதுகாப்பிலேயே தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்துள்ள பிரதேசத்தில் பௌத்த பிக்குகளோ அல்லது சிங்கள மக்களோ இதுவரை வாழ்ந்ததில்லை.

சிங்கள வரலாற்று புராணங்களிலும் அட்டகத்தா போன்ற பாரம்பரிய  இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பழங்கால குருந்தவசோக விகாரை இந்த இடத்தில் அமைந்துள்ளதாக சிங்கள தொல்லியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.  குருந்தவசோகாராமய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான தொல்லியல் தளம் என்று உரிமை கோருகின்றனர் அவர்கள். இது கிறிஸ்தவத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து இருந்த குடியேற்றம் என்பதற்கான விஞ்ஞானபூர்வமான சான்றுகள் இருப்பதாக வாதிடுகின்றனர். 

இது தொடர்பான விபரங்கள் உள்ளடங்கிய வராலாற்று சான்றுகள் எவை, முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி ஒரு பட்டியலையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.


  • மகாவம்சத்தின் 33வது அத்தியாயத்தின் 32வது சரணத்தில் லஜ்ஜிதிஸ்ஸ மன்னனுக்குப் பின் வந்த கல்லாடநாக (கி.மு. 110-103) மன்னனால் கட்டப்பட்ட “குருந்தபாசகா” கோயில் இது என்று அடையாளப்படுத்துகின்றனர்.
  • இக்கோயிலை ஒட்டி குருந்தசுல்லக்க என்ற ஊர் இருந்ததாக வம்சவரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.
  • சமந்தபசாதிகா வினயட்ட என்கிற இதிகாசக் காப்பியத்தில், குருந்தனூர் அட்டகத்தா பற்றி 75 முறைக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அந்த அட்டகத்தா இந்த குறுந்வேலு விகாரையில் தான் தொகுக்கப்பட்டது என்கின்றனர்.
  • முதலாம் அக்போ மன்னர் (கி.பி. 571-604) இந்தவிகாரையின் தளத்தில் குடியேறினார் என்றும், அந்த இடமே குருந்துவெவ என்றும், முதலாம் அக்போ மன்னன் செய்த குருந்துவெவா (வாவி) தற்போதைய தன்னிமுருப்பு ஏரி என்றும் நிக்கோலஸ் குறிப்பிடுகிறாராம்.
  • வரலாறு நெடுகிலும் இவ்விகாரையுடன் சேர்ந்து நடந்த வளர்ச்சிப் பணிகளை பௌத்த இலக்கியங்கள் பதிவு செய்து வருவதாக கூறுகின்றனர்.
  • IV ஆம் அகபோ மன்னர் (667-683) மற்றும் IIIஆம் மிஹிந்து மன்னர் (கி.பி. 801-804) ஆகியோர் இந்தக் கோயிலின் மீது மேற்கொண்ட தலையீட்டைப் பற்றி மகாவம்சம் குறிப்பிடுகின்றதாம்.
  • முதலாம் விஜயபா மன்னன் (கி.பி. 1055-1110) இக்கோயிலை மீட்டெடுத்தாராம்
  • இரண்டாம் பராக்கிரமபாகு (கி.பி. 1236-1270) மன்னரின் ஆட்சியின் போது கலிங்க மாக மற்றும் ஜெயபாகு ஆகிய தமிழர்ப் படைகளால் அழிக்கப்பட்ட 15 முகாம்களில் குருந்தனூர் விகாரையும் ஒன்று என்கின்றனர்.
  • பூஜாவலிய, நிகாய சங்கிராய போன்ற பழைய நூல்களில் இப்பகுதி குருந்து நாடு (சிங்களத்தில் ரட்ட என்பது நாடு), குரனந்துகம்மு நாடு, என்றும் அழைக்கப்படுவதாக தொல்லியல் குறிப்புகள் தெரிவிக்கினவாம்.
  • 1905 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இந்த பகுதியில் ஒரு  கவேட்டு இருந்ததாம்.
  • ஹென்றி பார்க்கரின் கூற்றுப்படி, வட மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய தொல்லியல் எச்சங்கள் உள்ள பகுதி; இந்த குருந்தசோகா விகாரை என்கின்றனர்.
  • இந்த காணி 1933 ஆம் ஆண்டு 12-05-1933 தேதியிட்ட வர்த்தமானி அறிவித்தல் எண் 7981 இன் படி 78 ஏக்கர் நிலம் தொல்லியல் பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த விபரங்களில் பிழைகள் இருபதாகத் தெரியவில்லை.

கஜேந்திரன் பொன்னம்பலம் போன்றோர் “குருந்தூர் மலை என்பது பௌத்த சான்றல்ல” என்று வாதிடுவதை விட, அது பௌத்தம் தான், அது எங்கள் பௌத்தம் என்று வாதிடும் சாணக்கியமும் நேர்மையும் வேண்டும். ஏனென்றால் அங்கே சைவ சான்றுகளைப் போலவே பழைய பௌத்த தூபிக்கான சான்றும் கிடைத்திருக்கிறது என்பது உண்மை.


பிரபல இனவாத கோட்பாட்டாளராக அறியப்பட்ட நளின் த சில்வா

“அரச அதிகாரிகள் இருப்பது ஜனாதிபதி கூறியதும் விலகுவதற்கல்ல. மேலும் இந்த ரணில் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியும் அல்ல. மாறாக தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஒருவர்.”

என்கிறார்.

சம்பா வைத்தியத்திலக்க என்கிற சிங்கள எழுத்தாளர் இப்படி சமீபத்தில் எழுதுகிறார்.

ஹெல எழுத்துக்களில் முதன் முதலில் எழுதப்பட்ட குருந்தி கல்வெட்டு சான்றுகள் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றப்பட்டு மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு ஜகத் சுமதிபாலவினால் நிதி உதவி வழங்கப்பட்டது. ஒருமுறை ரணில், வெளியார் நிதியுதவியுடன் தொல்லியல் பாதுகாப்புப் பணிகளைச் செய்யக்கூடாது என்றும், பௌத்த விகாரைகள் இவ்வாறான உதவியுடன் புனரமைக்கப்படுவதானால், அது அரசாங்க நிதியில்தான் தொல்பொருள் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அப்படிச் செய்தால் இந்தப் பாதுகாப்புப் பணிகள் நின்றுவிடும். ஏனென்றால் இவற்றைச் செய்ய தொல்லியல் துறையிடம் பணம் இல்லை.வடக்கு, கிழக்கில் ஆங்காங்கே பௌத்த தொல்லியல் சான்றுகள் ஏராளம் உள்ளன. அங்கே கிடைக்கின்ற பௌத்த தொல்லியல் சான்றுகள்; தமிழ் தாயகக் கோட்பாட்டுக்கு புனைவுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மரண அடி. அதனால்தான் அவர்கள் வடக்கில் அனைத்து மதத்தினருக்கும் இடமளித்த போதும் பௌத்த கலாச்சாரத்தை அங்கே அனுமதிக்கவில்லை.

பௌத்த சான்றுகளைக் கண்டவுடனே அங்கே சென்று சிவலிங்கம் வைக்கும் அளவிற்கு துணிந்தனர். தாங்கள் செய்வது பித்தலாட்டம் என்றும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களால் உண்மையை எதிர்கொள்ள முடியாமல்  அந்த உண்மையுடன் மோதுவதற்கு அவர்கள் கூட்டம் சேர்ப்பதையும் பொய்யான நாடகங்களையும் ஆடுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் ஒரே பலம் புலம்பெயர் மக்களின் பணம். அதனால் அந்த பணத்தை செலவு செய்து இந்த நாட்டிற்கு தமக்கேற்ற ஆட்சியாளர்களையும் ஏற்படுத்துகிறார்கள். அந்த ஆட்சியாளர்களோ; கொள்கை முடிவுகளை எடுத்து அவர்களுக்கு மேடையைக் கொடுக்கிறார்கள். வடக்கின் பௌத்த பாரம்பரியத்தை அழித்து, நிலங்களை அபகரித்து, தாயகத்தை கட்டியெழுப்புவது “தெற்கின் புலிகள்” (தமிழர்களுக்கு உதவுவதாக அவர்கள் கருதும் சிங்களவர்களைத் தான் தெற்கின் புலிகள் என்கிறார்கள்) தான். அதுதான் உண்மை.

குருந்தியிலுள்ள தொல்லியல் காணிகளை மீள ஒப்படைக்குமாறு தனக்கு வழங்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இன்று பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முடியாவிட்டால் பதவி விலகுங்கள். யாரையாவது வைத்து செய்கிறேன்... என்கிற வசனங்களை “புலம்பெயர் நாட்டில் பணம் தான்.” பேச வைக்கின்றன. இந்த தமிழ் தய்ச்போரா கோருவது  இலங்கையின் எதிர்காத்தைத் தான்.

எதை எதிர்கொண்டாலும் உனக்காக காத்திருக்கிறோம் குருந்தியே. சிங்களக் கலாச்சாரத்தையும் பௌத்த பாரம்பரியத்தையும் விரும்பும் உங்கள் அனைவரையும் எம்முடன் இணையுமாறு பணிவுடன் அழைக்கின்றோம்..”

-சம்பா வைத்தியதிலக.


மனதுங்கவின் இராஜினாமா உறுதியானால் சிங்கள பௌத்தத் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும், கிளர்ச்சியும் எழும் என்பதை  உணர முடிகிறது.

குருந்தூர் மலை தொடர்பாக சிங்கள சமூகத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் உரையாடல்கள், பரப்புரைகள், தமிழர்கள் மீதான எதிர்ப்புகள், ஊர்வலங்கள், கூட்டங்கள், இணையத்தளங்கள், கட்டுரைகள், நூல்கள், உரையாடல் குழுக்கள் என்பவற்றைப் பார்க்கும் போது ஆயிரத்தில் ஒரு பகுதி எதிர்வினை கூட தமிழர் தரப்பில் இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.

விடுதலைப் புலிகள் காலத்தில் இவற்றை நாசம் செய்திருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகள் இத்தகைய தொல்லியல் சான்றுகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மாறாக யுத்த காலத்திலும் அவை அழியவிடாமல் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அவ்வாறு பாதுகாகபட்டதால் தான் இன்று தென்னிலங்கை தொல்லியலாலர்களுக்கும் அங்கே சென்று அவற்றை ஆராய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த தொல்லியலின் பேரால் ஆக்கிரமிக்கப்படவிருக்கும் இடங்கள் எவை என்கிற வரைபடத்தை 1970களிலேயே தயார் செய்துவிட்டார்கள். அதனை சிறில் மெத்தியு 1980ஆம் ஆண்டு தனது நூலில் முதன் முறை பகிரங்கமாக வெளியிட்டார் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்களோ தெரியாது. அந்த வரைபடத்தில் 42 ஆம் இலக்கத்தைக் குறிப்பது "குருந்தூர் மலை". மொத்தம் எத்தனை இடங்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளன என்பது தெரியுமா? மொத்தம் 261 இடங்கள்.

தற்போது அந்த இடங்களின் பட்டியல் மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பதை சிங்களத்தில் நடக்கும் விவாதங்களில் இருந்து அறிந்துகொண்டேன். இவற்றில் சுமார் 10 இடங்களின் மீதான ஆக்கிரமிப்பின் மீது தான் நாம் வினையாற்றி வருகிறோம். எண்ணிப் பாருங்கள் எத்தகைய விபரீதம் காத்திருக்கிறது என்பதை. இவை அனைத்தும் சிங்கள பௌத்த தொல்லியல் சான்றுகளென நிறுவி "தமிழர் பூர்வீக அடையாளத்தை" துடைத்தெறியும் சதியே. தமிழ் பௌத்தம் பற்றிய மீள் கண்டுபிடிப்பின் அவசியத்தை இதனால் தான் திரும்பத் திரும்ப சில வருடங்களாக வலியுறுத்தி வருகிறோம் தோழர்களே.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates