Headlines News :
முகப்பு » , , , , » ஹென்றி பேதிரிஸ்: மரணத்தின் பின் விடுதலை! (1915 கண்டி கலகம் –26) - என்.சரவணன்

ஹென்றி பேதிரிஸ்: மரணத்தின் பின் விடுதலை! (1915 கண்டி கலகம் –26) - என்.சரவணன்


மரண தண்டனையை நிறுத்துமாறு இங்கிலாந்திலிருந்து ஆணை பிரபித்ததன் பின்னரும் அந்த கட்டளையை தலைகீழாக விளங்கிக்கொண்டு ஹென்றியை குறித்த தினத்துக்கு முன்பாகவே சுட்டுக் கொன்று மரண தண்டையை நிறைவேற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

27 வயதுடைய தனவந்த குடும்பத்தை சேர்ந்த குடும்பத்தின் ஒரேயொரு வாரிசான ஹென்றியின் படுகொலையில் சதி மட்டுமல்ல, விதியும் சேர்ந்து தான் விளையாடியிருந்தது. தன் தரப்பு வாதங்களை முன்வைக்கவோ, குற்றச்சாட்டையும், தீர்ப்பையும் எதிர்த்து முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் ஹென்றிக்கு வழங்கப்படவில்லை. இராணுவச் சட்டத்தின் பேரால் இப்படிப் பலர் கொல்லப்பட்டார்கள்.

07.07.1915 காலை ஹென்றி முகச்சவரம் செய்து, முகம் கழுவி, தனது கப்டன் சீருடையை அணிந்து தயாராகியிருந்த விதத்தைப் பார்த்தால் மரணத்துக்கல்ல, தன் கடமைக்கு தயாராக வெளிக்கிளம்புவதைப் போல இருந்தது.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே தயாராக இருந்த ஹென்றியின் சீருடையில்; தான் அதுவரை பெற்ற வர்ண பதக்கங்களும், நட்சத்திரங்களும் மட்டுமே காணப்படவில்லை. மரணத்துக்கு பயந்த எந்த அறிகுறியும் ஹென்றியிடம் காணப்படவில்லை.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி டீ.சீ.தேவேந்திர அங்கு கூடியிருந்த சிறைச்சாலை அதிகாரிகள், வைத்தியர், பிக்குமார் உள்ளிட்ட பலர் முன்னிலையில் ஹென்றியை சுட்டுக்கொல்லும் இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை மறுபடியும் வாசித்துக் காட்டினார்.

ஹென்றி அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்று செல்லும் போது சிறைச்சாலை வைத்தியர் மேர்ல்லிடம் “நான் எந்தவித குற்றமும் புரியாத நிரபராதி” என்று மட்டும் கூறினார். மேர்ல் கொலன்னாவ பிரதேசத்தில் அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றியவர். சிறையில் இருந்த சிங்களத் தலைவர்களுக்காக விசேட உணவுகளை தயாரித்து கொண்டு வந்து கொடுப்பவர் அவர்.

அதிகாலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டிருந்தது. பஞ்சாப் படையினரின் பலத்த பாதுகாப்பு மத்தியில் ஹென்றி சிறைச்சாலைக்கு வெளியே உள்ள வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைகளைத் தாண்டியே அழைத்து செல்லப்பட்ட ஹென்றி தனது ஒன்றுவிட்ட சகோதரரான எல்பட் விஜேசேகரவுக்கு வணக்கம் செலுத்திக்கொண்டே ஏனைய கைதிகளுக்கும் தனது கண்களால் விடைபெற்றபடி கடந்து சென்று திறந்த வெளியை அடைந்தார். அந்த வெளி இன்று பொரல்லையில் அரசாங்க அச்சகம் அமைந்துள்ள கட்டடத்துக்கு பின்னால் அமைந்துள்ளது.

நான்கு பஞ்சாப் படையினர் சூழ இருந்த ஹென்றி அங்கு நிறுத்தபட்டிருந்த கதிரையில் அமருமாறு கூறிக்கொண்டே கறுப்புத் துணியொன்றைக் கொண்டு ஹென்றியின் கண்களை மூட எத்தனித்த போது,
“எனது கண்களை மூட வேண்டாம்!
நீங்கள் என்னை சுடுவதை நான் காண வேண்டும்”
என்றார்.
ஆனால் இது தண்டனையளிக்கும் வழிமுறை என்றும் அதற்கு குறுக்கிட வேண்டாம் என்றும் அதிகாரி கேட்டுக்கொண்டபோது அந்த விதிகளுக்கு கட்டுப்பட்டு தனது காற்சட்டைக்குள் இருந்த தனது கைக்குட்டையை எடுத்து தானே தனது கண்களைக் கட்டிக்கொண்ட ஹென்றி..

“ஆம்... நான் தயார்... உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்” என்று உரத்த குரலில் கூறினார்.

பொலிஸ் மா அதிபர் ஹெர்பர்ட் டவ்பிகின் (Herbert Layard Dowbiggin) தனது தலைக்கவசத்தை அசைத்து சுடுவதற்கான சமிக்ஞையைச் செய்தார். ஆரம்பத்திலிருந்தே ஹென்றியை கொன்றே ஆவது என்பதில் திடமாக இருந்தவர் டவ்பிகின்.

பஞ்சாப் படையினரே தன்னை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது ஹென்றியின் இறுதி ஆசைகளில் ஒன்று. பஞ்சாப் படையினர் கத்தோலிக்கர் அல்லாதவர்கள், ஆசியர்கள் என்பது அதற்கான காரணம்.

பஞ்சாப் படையினனின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ரவை வேகமாகச் சென்று ஹென்றியின் நெஞ்சைத் துளைத்தது. ஹென்றியின் உயிரைப் பறிக்க அந்த ரவை போதுமானதாக இருக்கவில்லை. அங்கிருந்த பிரித்தானிய படையதிகாரியொருவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சென்று ஹென்றியின் நெஞ்சை நோக்கி மீண்டும் சுட்டதில் ஹென்றியின் தலை சிறிது சிறிதாகத் தொங்கி உயிர் பிரிந்தது.

அந்த வெடிச்சத்தங்கள் அந்த சிறைச்சாலையில் இருந்த அனைவரையும் ஒரு கணம் அதிர வைத்தது.

இரண்டு நிமிடங்களின் பின்னர் ஹென்றியின் உயிர் பிறந்துவிட்டதை அதிகாரியொருவர் உறுதிசெய்தார்.

அன்றைய தினம் ஹென்றியை சுட்டுக்கொல்லவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்த பலர் சிறைச்சாலைக்கு வெளியில் குழுமியிருந்தனர். அந்த சிறைச்சாலைக்கு வெளியில் இருந்த மிகப்பெரிய மரங்களின் கிளைகளில் ஏறி இருந்தபடி அங்கு நடக்கும் அசைவுகளைக் காண முயற்சித்துக் கொண்டிருந்தனர் பலர். அப்படி அந்த கிளைகளில் ஏறியிருந்த இளைஞர்களில் ஒருவர் பிற்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக ஆன ஜே.ஆர்.ஜெயவர்த்தன.

ஹென்றியைக் கொல்லும்போது அமர்ந்திருந்த கதிரை இரத்தத்தால் தோய்ந்திருந்தது. அதனை எடுத்துச் சென்ற சிறையதிகாரிகள் அதிர்ச்சியுடனும், சோகத்துடனும் அங்கு இருந்த சிங்களத் தலைவர்களுக்கு அக் கதிரையைக் காண்பித்து..

“அடுத்து... உங்களுக்கும் இதே கதி தான்...” என்று சத்தமிட்டனர். சிங்களத் தலைவர்களுக்கு எச்சரிக்கையும், பீதியையும் ஏற்படுத்துவது அவர்களின் நோக்கமாக இருந்தது.

அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த எப்.ஆர்.சேனநாயக்க இப்படி உரத்த குரலில் கத்தினார்.
“...ஹென்றியின் இரத்தத்தைக் காண்பித்து எங்களை பயமுறுத்தலாம் என்று நினைத்தால் அது உங்கள் மடமை. இந்த அந்நிய வெள்ளையர்களுக்கு நான் தகுந்த பாடம் கற்பிப்பேன். என் முழு சொத்தையும் இழந்தாவது, எனது கடைசி கோர்ட்டை விற்றாவது, சிரட்டை ஏந்தி பிச்சை எடுக்க நேரிட்டாலும் கூட நான் போராடுவேன்...” அவருடன் அருகில் இருந்த ஏனையோரும் அவருடன் கோஷமிட்டனர்.
நிரபராதி தீர்ப்பு
ஹென்றியின் பேரில் பிரித்தானியாவில் உள்ள பிரபல லொய்ட் காப்புறுதி கம்பனியில் ஆயுத காப்புறுதியை அவரது தந்தை 1907 இலிருந்து செய்து வைத்திருந்தார். அந்த காப்புறுதிப் பணத்தைக் பெற்றுக்கொள்ள ஹென்றியின் தந்தை விண்ணப்பித்தார்.

ஹென்றி தேசத்துரோக குற்றமிழைத்ததின் பேரில் கொல்லப்பட்டவர் என்பதால் அந்த நட்ட ஈட்டுதொகையைத் தரமுடியாது என்று அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது பிரித்தானிய காப்புறுதிக் கம்பனி.

ஆனால் ஹென்றி கொல்லப்படுவதற்கு முன்னரே ஹென்றி நிரபராதியெனக் கூறி அவரை விடுவிக்கும்படி இராணியின் ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. தந்தியை பிழையாகப் புரிந்துகொண்டதனால் ஆளுனரால் தவறுதலாக அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஹென்றியை விடுவிக்கும் ஆணையின் பிரதி ஈ.டபிள்யு.பெரராவின் மூலம் ஹென்றியின் தந்தைக்கு கிடைத்திருந்தது. அதனைக் கொண்டு அவர் காப்புறுதிக் கம்பனிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஹென்றிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இராணி ஹென்றியை விடுவிக்கும்படி கட்டளையிட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்றம் எட்வர்ட் ஹென்றி தேசத்துரோகி இல்லையென்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலமும் ஹென்றி தேசத்துரோக குற்றச்சாட்டிலிருந்து சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்டார்.

மிகப்பெரிய தனவந்தரான அவருக்கு இந்த பணம் முக்கியமாக இருக்கவில்லை. ஹென்றியின் தந்தை இந்த வழக்கின் மூலம் இரண்டு விடயங்களைச் சாதித்தார். இந்த வழக்கில் வெற்றி பெற்ற ஹென்றியின் தந்தைக்கு காப்புறுதி நிறுவனம் அன்றைய காலத்தில் மூன்று லட்சம் பணத்தை வழங்கியது. காப்புறுதித் திட்டம் அத்தனை விரிவாகியிராத அந்த காலத்தில் இப்படிப்பட்ட தொகையைப் பெற்ற முதலாவது இலங்கையர் ஹென்றியின் தந்தை டீ.டீ.பேதிரிஸ். இந்தப் பணம் அத்தனையையும் அவர் ஹென்றியின் பேரில் பல நல்லுதவிகளை செய்தார். பெரும்பாலும் விகாரைகளை சீர்திருத்துவதற்கும் அப்பணத்தைச் செலவிட்டார்.

பிரேத இரகசியம்
தனது பிரேதத்தை குடும்ப புதைகுழியில் புதைக்க வேண்டும் என்பது ஹென்றியின் இறுதி ஆசைகளில் ஒன்று. பிரேதத்தை வைப்பதற்காக விலையுயர்ந்த ஒக் மரத்தில் செய்யப்பட்ட பிரேதப்பெட்டியை ஹென்றியின் தந்தை சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தார். ஆனால் அதனை சிறைச்சாலை அதிகாரிகள் நிராகரித்தனர். அதுமட்டுமன்றி பிரேதத்தையும் குடும்பத்திடம் ஒப்படைக்காது இரகசியமாக எங்கேயோ புதைத்துவிட்டனர். ஹென்றியின் தந்தை எவ்வளவோ அழுது மன்றாடியும் எங்கே இருக்கிறது என்பதை இறுதி வரை கூறவில்லை.

ஊரடங்கு சட்டம் பிறப்பித்தே அந்த பிரேதத்தை வெளியே கொண்டு சென்றிருந்தனர். ஹென்றியின் பிரேதத்தைக் கொண்டு ஆங்கில அரசுக்கு தலையிடி கொடுக்க நேரிடும் என்று எண்ணியிருக்கலாம். அல்லது இதையும் ஒரு பாடம் புகட்டும் நோக்கமாக இருந்திருக்கலாம். அந்த பிரேதம் சிறைச்சாலைக்குள்ளேயே ஓரிடத்தில் இரகசியமாக புதைக்கபட்டிருகிறது என்றும் நம்பப்பட்டது. ஜூலை 07 இரவு 11 மணியளவில் கொழுப்பு கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டதாக ஒரு அதிகாரி பின்னர் கூறியபோதும் அது எங்கே என்பது குறித்து தகவல் வெளியிட மறுத்தார்.

மயானத்தில் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஹென்றியி ன் தந்தை தனது இறுதிக் காலம் வரை பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் பலனளிக்கவில்லை. சிறைச்சாலையில் புதைக்கப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம் என்றும் ஹென்றியின் குடும்பம் நம்பியது. தனது மகனின் உடலை உரிய முறையில் இறுதிக் கடமைகள் செய்து புதைப்பதற்கு இடம்தருமாறு ஹென்றியின் தாயார் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதும் அந்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

ஹென்றியின் பெற்றோர்கள் இறுதியில் இறந்தும் போனார்கள். ஆனால் ஹென்றியின் குடும்பத்தினர் அவரது உடலைத் தேடும் பணியை நிறுத்தவில்லை. இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர். வெலிக்கடை சிறைச்சாலையின் பழைய ஆவணங்களில் இருந்து ஒரு செய்தி கிடைத்தது.

07.07.1915 அன்று பெயர் குறிப்பிடாத ஒரு சடலம் பொரல்லை கனத்தையில் 3/HLK/23/24 என்கிற இலக்கத்தை கொண்ட பகுதியில் புதைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. டீ.டீபேதிரிஸ் கனத்தையில் தமது குடும்பத்தினருக்காக வாங்கியிருந்த 1186 என்கிற பகுதியில் அதுவரை எவரையும் புதைத்தது இல்லை. ஹென்றியின் உடலை இராணுவ மரியாதையுடன் இந்தியத் தொழிலாளர்களின் உதவியுடன் நள்ளிரவு ஹென்றியின் விருப்பப்படி அவரது குடும்பத்துக்கு உரிய புதைகுழியில் புதைக்கப்பட்டிருகிறது. 

மயானத்திற்கு அன்று பொறுப்பாக இருந்த அதிகாரி ஈ.எல்.ஹேர்ட்ஸ் இராணுவத்தின் கட்டளைக்கிணங்க அந்த இரகசியத்தை பாதுகாத்து வந்தார். ஆனால் இந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இரகசியம் கசிந்ததும் 1987 இல் பொரல்லை கனத்தையில் அந்தக் குழியை தோண்டிய போது அங்கு ஒக் மரத்தினாலான பழுதடைந்த பெட்டியில் இராணுவ சீருடைக்குரிய பொத்தன்களும் சப்பாத்தின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. எலும்பு எச்சங்களை வெளியில் எடுத்து பரிசோதனை செய்த பேராசிரியர் கோத்தாகொட அந்த உடல் 5 அடி இரண்டு அங்குலமுள்ள 27-30 வயதுக்குரிய ஆணுடைது என்று அறிக்கை வெளியிட்டார். இறுதியின் அது ஹென்றியின் உடல் தான் என்கிற முடிவுக்கு வந்தனர். மீண்டும் அந்த பாகங்களை உரிய சடங்குகளுடன் அதே இடத்தில் புதைத்து வீரருக்குரிய ஸ்தூபி ஒன்றையும் நிறுவினர் ஹென்றியின் குடும்பத்தினர்.


ஹென்றியின் பேரில் கொழும்பு ஹெவ்லொக் பகுதியில் இசிபத்தானராமய விகாரையை உருவாக்கி வழங்கினர். அதன் அருகில் அமைக்கப்பட்ட ஹெவ்லொக் மைதானத்தை பிற்காலத்தில் புனரமைத்த போது 07.07.1978இல் அதற்கு ஹென்றி பேதிரிஸ் மைதானம் என்று பிரேமதாச பெயர் சூட்டியதுடன் அங்கு ஹென்றியின் சிலையையும் நிறுவினார். 08.07.1971இல் ஹென்றியின் உருவப்படத்துடன் முத்திரையும் வெளியிடப்பட்டது. 1992 இல் ஹென்றி பிறந்த காலியிலும் பிரதான தபால் கந்தோரின் முன்னாள் ஹென்றிக்கு உருவச் சிலையை நிறுவினார் பிரேமதாச. ஹென்றி பேதிரிஸ் பெயரில் காலியில் வீதியொன்றுக்கு பெயரும் சூட்டப்பட்டது. ஹென்றியின் தந்தை தனது இறுதிக்காலத்தில் பொதுச் சேவைகளை செய்து காலம் கழித்தார். ஆனால் மகனின் அநீதியான சாவை ஜீரணிக்க முடியாத தாயார் மலினோ பேதிரிஸ் அனைத்தையும் துறந்து பிக்குணியாக ஆனார். தனது மகனின் பேரில் அநுராதபுரவில் எட்டு ஏக்கர் காணியில் மடாலயம் ஒன்றை அவர் அமைத்துக் கொடுத்திருந்தார். இன்றும் யாத்திரிகர்கள் பலருக்கு இரவு தங்குமிடமிடமாக அது திகழ்கிறது.

ஹென்றி கைது செய்யப்பட்ட அவரது இல்லமான விமல் வில்லாவை பின்னர் அவரது தந்தை விற்றுவிட்டார். “Wimal villa” அன்று Turret Road இல் இருந்தது. பின்னர் அந்த வீதி  தர்மபால மாவத்தை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.



ஹென்றியின் நினைவாக 2015இல் ஹென்றி நினைவு மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதலைமை தாங்கி “எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ்: தேசத்தை விழித்தெழச் செய்த வீரர்” (Edward Henry Pedris – National Hero who awakened a nation)என்கிற நூலையும் வெளியிட்டு வைத்தார். இந்த நிகழ்வில் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

1915 ஆம் ஆண்டு கலவரம் குறித்து ஆராயும் போது ஹென்றியின் கொலை பல வகையில் முக்கியத்துவமுடையது. ஹென்றி ஒரு குறியீடு. மேலும் ஹென்றியின் வர்க்கப் பின்னணி ஹென்றி குறித்த பதிவை வரலாற்றில் உறுதியாக பதியவைக்க வாய்ப்பாகிப் போனதையும் இங்கு சுட்ட வேண்டும்.

கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பலர் சாதாரண லும்பன் கோஷ்டியாக இருந்தபோதும் அவர்கள் அனைவரும் தப்பிவிட்டனர். ஆனால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் பலர் நிரபராதிகள் என்று தெரிந்திருந்தும் உறுதியுடன் ஆங்கிலேயர் அநீதியிழைக்க துணிந்ததன் காரணம் இலங்கையர்களுக்கு தெளிவான அரசியல் எச்சரிக்கையை வழங்குவதற்காகவே.

தொடரும்...



உசாத்துணையாக பயன்பட்டவை
  1. EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
  2. Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  3. Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  4. “කුලය හා සිංහල අන්තවාදය”- කුසල් පෙරේරා (Ravaya 20.09.2015)
  5. “Execution of 27-year-old henry pedris 100 years ago in colonial Ceylon”  - T.V. Antony Raj
  6. A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  7. The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  8. Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  9. “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  10. “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  11. “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  12. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  13. ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

நன்றி - தினக்குரல்



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates