Headlines News :
முகப்பு » , , , , » காற்புள்ளி மாற்றிய தலையெழுத்து (1915 கண்டி கலகம் –25) - என்.சரவணன்

காற்புள்ளி மாற்றிய தலையெழுத்து (1915 கண்டி கலகம் –25) - என்.சரவணன்


1915 பற்றி ஆராய்பவர்கள் எட்வர்ட் ஹென்றி பேதிரிசை (Edward Henry Pedris) தவிர்த்து விட்டு ஆராய முடியாது. "எடி" என்று செல்லமாக அழைக்கப்படும் ஹென்றியின் கைதுக்குப் பின்னால் இருந்த சதியும் ஆங்கில அரசின் மிலேச்சத்தனத்தையும், கடந்த வாரம் பார்த்தோம்.

ஹென்றியைத் தொடர்ந்து ஜூன் 2ஆம் திகதி பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டார்கள். வெலிக்கடை சிறைச்சாலையின் எல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களுடன் ஹென்றியும் ஒன்றாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும் ஹென்றி பற்றிய விடயத்தில் தீர்க்கமான முடிவுடன் ஆங்கில அரசு இருந்ததால் அவரை வேறு சிறைக்கூட்டுக்குள் மாற்றினர். 

ஹென்றியை விடுதலை செய்வதற்காக உள்ளூர் வெளியூர் மட்டங்களில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கள, தமிழ் தலைவர்கள், வெளிநாட்டு நண்பர்கள், கத்தோலிக்க ,பௌத்த மதத் தலைவர்களும் ஈடுபட்டார்கள். ஹென்றியின் விடுதலை வேண்டி அந்த மத ஸ்தலங்களில் விசேட பூஜை நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹென்றி கற்ற கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்கள் ஆங்கில அரசுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தமது கைகளில் கறுப்புப் பட்டிகளை கட்டிக்கொண்டு பாடசாலைக்குச் சென்றனர்.

அதேவளை ஹென்றியின் விடுவிப்பதற்கும், தண்டனைக் குறைப்புக்கும் எதிரான நிலைப்பாட்டில் ஆங்கில அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.
"மகா முதலியார்" சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா
அதுபோல ஹென்றியை விடுவிக்கக் கூடாது என்று ஆளுநர் சார்மசுக்கு அழுத்தம் கொடுத்தவர்களின்  கண்டி திரித்துவ கல்லூரியின் கல்லூரியின் (Trinity College, Kandy) அதிபராக இருந்த பாதிரியார் ஏ.ஜே பிரேசர் (Alec Garden Fraser), மற்றும் "மகா முதலியார்" சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும் முக்கியமானவர்கள். இவர் பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராக ஆன எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தந்தையார். சொலமன் டயஸ் பண்டாரநாயக்க ஆங்கிலேயர்களின் விசுவாசி. ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளர், ஆலோசகர். அதற்காகவே ஆங்கில அரசின் விசேட பட்டங்களையும், உயர் பதவிகளையும் வசதிகளையும் அடைந்தவர். அவர் பேதிரிஸ் குடும்பத்தினர் மீது கொண்டிருந்த பொறாமையும் ஹென்றி மீது பழி தீர்க்கச் செய்தது என்கிற கருத்துக்களை பலர் எழுதியிருக்கிறார்கள். ஹென்றியின் மீது ராஜதுரோக குற்றம் சுமத்தி பதவியை பறித்து, கைது செய்யப்படுவதற்கு சொலமன் பண்டாரநாயக்காவின் அபாண்டமான குற்றச்சாட்டும் காரணமாகியிருந்தது.
ஏ.ஜே பிரேசர்
பாதிரியார் ஏ.ஜே.பிரேசர் கலவரத்தை கடுமையாக அடக்கும் பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைக்கும்படி ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தவர்.

இது இப்படி இருக்கையில் இலங்கையின் பிரபல வழக்கறிஞரும், அரசியல் தலைவருமான இருந்த ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்துக்கு விரைந்தார். அது ஒரு சுவாரசியமும், சாகசமும்  நிறைந்த வரலாற்று பயணமாக வரலாற்றில் பொறிக்கப்பட்டது.

சப்பாத்துக்கடியில் இரகசியம்
அரசியல் தலைவர்கள் பலர் இலங்கையில் நிகழ்ந்துவரும் அநீதியை இங்கிலாந்து மகாராணியிடம் முறைப்பாடு செய்வதற்கு தீர்மானம் எடுத்தார்கள். ஈ.டபிள்யு.பெரேராவின் வீட்டில் சேர்.பொன்.இராமநாதன் , சேர் ஜேம்ஸ் பீரிஸ் ஆகியோரால் இது திட்டமிடப்பட்டது.

ஈ.டபிள்யு.பெரேராவை அதற்காக அனுப்புவதற்கு தீர்மானித்தார்கள். இங்கிலாந்துக்கு ஒரு ஆய்வின் நிமித்தம் இந்த பயணத்தை பெரேரா மேற்கொள்வதாக ஆங்கில அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. முறைப்பாட்டுக்கு தேவையான சில ஆவணங்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் சிக்கினால் இந்த காரியமும் தடைப்படும், ஆபத்தான நிலைமையையும் எதிர்கொள்ள நேரிடும்.
1915 யூன் 3. நள்ளிரவு எப்.ஆர்.சேனநாயக்க குருனாகலையை சேர்ந்த தேர்ந்த செருப்பு தைக்கும் ஒரு இளைஞரை கொள்ளுபிட்டியிலிருந்த அவரது மும்தாஜ் மகால் இல்லத்துக்கு அழைத்து வந்தார்.  முறைப்பாடுகள் அடங்கிய அந்த இரகசிய ஆவணங்களை அந்த சப்பாத்தின் அடிப்பாகத்துக்குள் வெளித்தெரியாதபடி பாதுகாப்பாக மறைத்து வைத்து தைக்கப்பட்டது.
ஈ.டபிள்யு.பெரேரா
முதலாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில் கடல் பயணம் அவ்வளவு பாதுகாப்பாக இருக்கவில்லை. ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல்கள் நேச நாட்டு கப்பல்களை தாக்கியழித்து வந்தன. சிக்கல் நிறைந்த கடல் பயணத்தைக் கடந்து இங்கிலாந்தை அடைந்த ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அதனை சேர்ப்பிக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அதுபோல சேர் பொன் இராமநாதனும் இங்கிலாந்து வந்தடைந்து இன்னொருபுறம் தமது முறைப்பாடுகளையும், முன்மொழிவுகளையும் முன்வைத்தார்.

இதே வேளை ஈ.டபிள்யு.பெரேரா இங்கிலாந்துக்கு விரைந்த அதே சந்தர்ப்பத்தில் பாதிரியார் ஏ.ஜே பிரேசரும் அங்கு சென்றடைந்தார். ஹென்றி பேதிரிஸ் கிளர்ச்சியாளர்களுக்கு தலைமை தாங்கிய சதிகாரர் என்று ஒரு சிறி கைநூலையும் தயார் செய்து இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகளுக்கு விநியோகித்தார். அதில் ஹென்றிக்கு சாதகமான எந்தவித முடிவையும் எடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தார்.
சேர் ஹெக்டர்
சேர் பொன் ராமநாதனை சுட முயற்சி
ஹென்றியை காப்பாற்றுவதற்காக சேர் ஹெக்டர் வென்கியுலேன்பேர்க் (Sir Hector Van Cuylenburg) அன்றைய பிரிகேடியர் ஜெனரல் மெல்கமை சந்தித்து உரையாடினார். ஏற்கெனவே களுத்துறையில் கலவரக்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட சாதாரண மக்களையும், பிக்குமார்களையும் கசையடிகொடுத்து தண்டித்த ஒரு சந்தர்ப்பத்தின் போதும் இது போன்றதொரு ஒரு சந்திப்பு இவர்களுக்கு இடையில் நிகழ்ந்திருந்தது. இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் நிறுத்தப்படாவிட்டால் தி இண்டிபெண்டன்ட் (The Independent) பத்திரிகையில் அவற்றை வெளியிடுவதாக ஹெக்டர் எச்சரித்த வேளை தமது பரிபாலனத்துக்கு எதிராக அப்படி எதேனும் வெளியிட்டால் எந்த தகுதியையும் பாராது சுட்டுக்கொல்வேன் என்று மெல்கம் எச்சரித்திருந்தார். இப்பேர்\பட்ட நிலையிலேயே ஹெக்டர் மீண்டும் மெல்கமை சந்திக்க சென்றிருந்தார்.

இந்த சந்திப்பின் போது ஹெக்டருடன், சேர் பொன் இராமநாதனும், டக்லஸ் டி சேரம் ஆகியோரும் இணைந்திருந்தனர். பஞ்சாப் படையினரின் பாதுகாப்புடன் நடந்த இந்த சந்திப்பில் நகர பாதுகாப்பு படையின் கேப்டன் வேண்டேர் ஸ்ட்ராடனும் (Vander Straaten) இருந்தார். களனி பாலத்தினருகில் கலகக்காரர்களுக்கு ஹென்றி ஒத்துழைத்ததை தனது கண்களால் பார்த்ததாக வேண்டேர் ஸ்ட்ராடன் அந்த சந்திப்பில் கூறிக்கொண்டிருந்தார். இந்தப் பொய்யை மறுத்து பொன்னம்பலம் இராமநாதனும், டக்லஸ் சேரமும் சற்று ஆவேசமுற்று மறுத்தனர். அதனால் கோபமுற்ற மெல்கம் பஞ்சாப் படையினரைக் கொண்டு இராமநாதனையும், டக்லஸ் டி சேரத்தையும் துப்பாக்கியால் சுட எத்தனித்தார். அவர்கள் அத்தோடு வெளியேறிச் சென்றனர்.

ஹென்றியின் எடைக்குத் தங்கம்

இவர்கள் மூவரும் சளைக்காது ஆளுநர் சார்மசை சந்திக்கச் சென்றனர். அதன் போது ஹென்றியின் தகப்பனார் டீ.டீ.பீரிசும் கலந்துகொண்டார். ஹென்றியின் தந்தை வெறும் கையுடன் செல்லவில்லை. அவர்கள் சென்ற வாகனத்தில் மூடை மூடையாக பணக்கட்டுகளை எடுத்துச் சென்றனர். அன்றைய காலத்தில் அது மூன்று லட்சம். இந்த பணத்தை அபராதப்பணமாக செலுத்தி மகனை மீட்பதற்கு அவர் முயற்சி செய்தார்.

ஏற்கெனவே இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பேதிரிஸ் குடும்பம் பிரிவிக் கவுன்சிலில் மேற்கொண்ட மேன்முறையீடு செய்திருந்தனர். பிரிவுக் கவுன்சில் தனது பதிலைத தரும் வரையாவது தண்டனையை ஒத்தி வைக்கும்படி தகப்பனாக அவர் கோரிக்கை வைத்தார். இதையே இராமநாதன், ஹெக்டர், டக்லஸ் போன்றோரும் முன்வைத்திருந்தனர். ஆனால் ஆளுநர் சார்மஸ் சிங்களத் தலைவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க இந்த மரண தண்டனை முக்கியம் என்று உறுதியாக இருந்தார்.

எனவே சார்ம்ஸ் மிகவும் சூட்சுமமாக ஒரு பதிலை அளித்தார். இராணுவ ஜெனெரல் மெல்கமிடமிருந்து சாதகமாக பதிலைப் பெற்று வரும்படி அவர்களை அனுப்பிவைத்தார். மெல்கம் அப்படியான மன்னிப்பு வழங்கும் அதிகாரி அல்ல என்பதை சார்ம்ஸ் நன்றாகவே அறிந்திருந்தார்.

ஹென்றியின் தந்தை இந்த முடிவுகளால் சோர்ந்து போயிருந்தார். ஹென்றியின் விடுதலைக்காக 3000 றாத்தல் தங்கத்தை தர அவர் முன்வந்திருந்தார். அதாவது ஹென்றியின் உடல் நிறையை விட சில மடங்குகள் அதிகமாக தங்கத்தை வழங்க அவர் தயாராக இருந்தார். ஆனால் சார்மசின் பதிலால் முழு நம்பிக்கையும் இழந்திருந்தார் அவர்.

ஆனால் வேறு சில சந்தர்ப்பங்களில் அரசியல் தலைவர்களை விடுவிப்பதற்காக லஞ்சம் பெறுவதற்கு தயாராகவும் ஆங்கில அதிகாரிகள் இருந்தார்கள். தம்மை விடுவிப்பதற்காக வெள்ளையர்களுக்கு  எந்த லஞ்சமும் வழங்கக்கூடாது என்று சிறையிலிருந்த தலைவர்கள் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்கள். ஹென்றியும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஹென்றி தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தான் நிரபராதி என்றும் மிகவும் தூய்மையுடனேயே தனது இராணுவக் கடமையை நிறைவேற்றியதாகவும் மற்றும்படி குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்யென்றும் தனது விடுதலைக்காக வெள்ளையர்களிடம் கெஞ்சவோ, லஞ்சம் கொடுக்கோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

சகல தரப்பு முயற்சியும் தோற்றுப்போன நிலையில் சிறைச்சாலையில் ஹென்றி எப்பேர்பட்ட நிலையில் இருந்தார் என்பதை அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹென்றியின் ஒன்று விட்ட சகோதரர்கள் (விஜேசேகர சகோதரர்கள்) சாட்சி கூறினர். இவர்கள் இருவரும் பின்னர் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பேதிரிஸ் குடும்பம் அதன் படி மூவரை பலிகொடுத்த குடும்பம் என்று கூறுவார்.

ஹென்றியின் இறுதி ஆசை
ஜூலை 8 ஆம் திகதி ஹென்றிக்கு மரண தண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டிருந்தது. தனது இறுதிப்பயனத்துக்கு தயாராக இருந்த ஹென்றி தனது மரணத்துக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களை ஐந்து கோரிக்கைகளாக முன்வைத்தார்.
  1. தன்னை பெற்றெடுத்து ஆளாக்கிய தமது பெற்றோரை வணங்கி விடைபெற அனுமதிக்க வேண்டும்.
  2. தான் நெருக்கமாக பழகிய இசிபதனாராம விகாரையின் மதகுரு தங்கெதர சரணபால தேரரின் பௌத்த நல்லாசி மதப் போதனையைக்  (பன) கேட்டு அவர்களுக்கு வணக்கம் செலுத்தி ஆசி பெற வேண்டும்.
  3. தன்னோடு சேவை புரிந்த நகர பாதுகாப்பு படையை சேர்ந்த நண்பர்களுடன் தேனீர் அருந்தி விடைபெற வேண்டும்.
  4. பஞ்சாப் படையினரைக் கொண்டு தன்னைச் சுட வேண்டும்.
  5. தனது உடலை புதைக்கும்போது மயானத்திலுள்ள தனது குடும்பத்துக்கு உரிய புதைகுழியில் புதைக்க வேண்டும்.

அதன்படி தனது தாயையும் தந்தையும் சந்தித்து விடைபெற்ற சந்தர்ப்பம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் தாயார் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். தனது நண்பர்களையும் சந்தித்து தேநீர் அருந்தி மகிழ்ச்சியாக உரையாடினார்.

ஜுலை 6 அன்று தங்கெதர சரணபால தேரரின் ஆசி நிகழ்ந்தது. "எதற்கும் அஞ்சாதீர்கள். என்றாகிலும் நாம் அனைவரும் மரணத்தை எதிர்கொண்டாக வேண்டும்." என்று அவர் தொடர்ந்த போது, ஹென்றி அவரைப் பார்த்து.'

"ஹாமதுருவே! நான் இந்த துப்பாக்கிக்கு அஞ்சவில்லை. இதன் பின்னர் உங்களைப் போன்றவர்களை சந்தித்து உங்கள் போன்றவர்களிடமிருந்து மதப்போதனைகளைப் பெறமுடியாது என்பதே எனது கவலை" என்று கூறியிருக்கிறார்.

இது ஒரு புறமிருக்க இன்னொருபுறம் ஹென்றியின் விடுதலைக்காக இங்கிலாந்தில் ஈ.டபிள்யு.பெரேராவின் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. தன்னால் முடிந்த தரப்புகளிடமெல்லாம் முயன்று சாதகமான பதில் கிடைக்காத நிலையில் அவர் அரசியை சந்திப்பதற்கு எத்தனித்திக்கொண்டிருந்தார். அவருக்கான செலவுகள் அத்தனையும் பேதிரிஸ் மேற்கொண்டார்.
சார்மஸ்
பெரேராவின் முயற்சிகள் தக்க பலனளிக்கும் சமிக்ஞைகள் தெரிந்தன. ஆனால் திருத்துவக் கல்லூரி பாதிரியார் பிரேசர் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் சர்மசுக்கு அங்கிருக்கும் நிலைமைகளை அவ்வப்போது அறிவித்துக்கொண்டிருந்தார். "ஹென்றியின் விடுதலைக்காண வாய்ப்புகள் உள்ளதென்றும் ஆளுநர் சார்மசுக்கு அறிவித்தார்.

ஹென்றி விடுதலையடைந்தால் சிங்களத் தலைவர்களுக்கு பயம் விட்டுப்போகும், அவர்கள் மேலும் பலமடைவார்கள் என்று கருதிய ஆளுநர் சார்ம்ஸ் ஜெனெரல் மெல்கம் மற்றும் இன்னும் பல அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

காற்புள்ளி மாற்றிய தலையெழுத்து
இந்த நிலைமையில் ஆளுநர் சார்மசுக்கு பிரித்தானிய காலனித்துவ காரியாலயத்திலிருந்து ஒரு தந்தி வந்தடைந்தது. அந்த தந்தியில் "Kill him, not let him go" அதாவது "கொல், அவனை விட்டுவிடாதே" என்று இருந்தது. தமது முடிவை வழிமொழிந்து காலனித்துவ காரியாலயத்திலிருந்தே அனுமதி வந்துவிட்டதை அறிந்து மகிழ்ச்சியடைந்த சார்மஸ், ஹென்றிக்கு தண்டனை நிறைவேற்ற நியமித்திருந்த 8ஆம் திகதியை ஒரு நாளைக்கு முன் கூட்டியே நிறைவேற்றிவிடலாம் என்கிற முடிவில் 7 ஆம் திகதி சுட்டுக்கொல்ல ஆணை பிறப்பித்தார்.

ஆனால் உண்மை அதுவல்ல. மிகப் பெரிய அநீதி இங்கு நிகழ்த்தப்பட்டது. இவர்களுக்கு அனுப்பப்பட்ட தந்தி பிழையாக அனுப்பட்டிருக்கிறது.

"Kill him not, let him go" 

"கொல்ல வேண்டாம், அவனை விட்டுவிடுங்கள்" என்பதே உண்மையான செய்தி. பெரேராவின் முயற்சியால் ஹென்றியை விடுவிக்கும் ஆணையை மகாராணி லண்டனிலிருந்து பிறப்பித்திருந்தார். அந்த செய்தி கப்பல் மூலம் வந்தடைவதற்கு மேலும் ஒரு சில நாட்கள் எடுத்திருக்கும். அதற்குள் அந்த ஆணை தந்தியாக சார்மசுக்கு தலைகீழான அர்த்தத்தில் கிடைத்திருந்தது. ஒரே ஒரு காற்புள்ளி இடம் மாறியதில் ஒரு பாரதூரமான முடிவு எடுக்கப்பட்டது. ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது.

எவ்வாறிருந்தபோதும் ஹென்றிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமானது ஆங்கில பழிதீர்ப்பு, அநீதியான தண்டனை என்பவை மட்டுமல்ல. ஹென்றி வரலாற்றுப் பதிவாகவும், விடுதலை வீரராகவும் சித்திரிக்கப்படுவதற்குப் பின்னால் ஹென்றியின் வர்க்கச் செல்வாக்கு பிரதான பங்கு வகித்திருப்பத்தையும் இனங்காணலாம்,
தொடரும்...

உசாத்துணைக்குப் பயன்பட்டவை...
  1. EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
  2. Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  3. Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  4. A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  5. The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  6. Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  7. “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  8. “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  9. “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  10. ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  11. ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates