Headlines News :
முகப்பு » , , , , » நாட்டை உலுக்கிய இராணுவச் சட்டம் (1915 கண்டி கலகம் –23) - என்.சரவணன்

நாட்டை உலுக்கிய இராணுவச் சட்டம் (1915 கண்டி கலகம் –23) - என்.சரவணன்

கலவரம் பரவிய இடங்கள்
100 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த கலவரத்தை 100 நாட்கள் இராணுவச் சட்டத்தினை அமுல்படுத்தி நசுக்கியது. ஆனால் கலவரம் நடந்தது என்னவோ ஒரு சில வாரங்கள் மாத்திரமே. கலவரத்தை அரும்பிலேயே கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை வளர விட்டு, பின்னர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கிய விதம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த ஒரு அடக்குமுறை.

கண்டியில் 1915 மே 28 தொடங்கிய கலவரம்   மே 30 இல் முடிந்தது. ஆனால் 31 இலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களுக்கும் பரவியது. ஜூன் 2 அன்று இராணுவச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. அது ஓகஸ்ட் 30 வரை நீடித்தது.

யூன் 2ஆம் திகதி கண்டியில் இருந்தபடி முதலில் கொழும்புக்கான இராணுவச்சட்டத்தை  நிறைவேற்றிய ஆளுநர் இராணுவத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்கினார். இந்த நிலைமை குறித்து ஜெனெரல் மல்கம் (Henry Huntly Leith Malcolm) “பூரண அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்குவது அசாதாரணமான நிகழ்வு.” என்றார். ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து எந்தவித விசாரணையுமின்றி சுட்டுத்தள்ளும்படி உத்தரவிட்டவரும் இவர் தான். இதனை அடக்குவதற்கு இந்தியாவில் இருந்து படைகளை கொண்டுவருவோமா என்று ஆளுநர் சால்மஸ் பிரிகேடியர் மெல்கொம்மிடம் கேட்டபோது அவர் அதற்கான அவசியமில்லை என்றார். ஆனால் பின்னர் அவர் இலங்கையில் இருந்த இந்திய பஞ்சாப் படைகளைத் தான் இந்த ஈவிரக்கமற்ற அடக்குமுறையை பிரயோகிக்க பயன்படுத்திக்கொண்டார்.

சேர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ் (Reginald Edward Stubbs)
இந்த கலவரத்தின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 25. காயப்பட்டவர்கள் 189. 4 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகின. இலங்கை நிர்வாக அறிக்கையின் பிரகாரம் 4075 முஸ்லிம்களின் கடைகள் சேதத்துக்குள்ளாகின. 250 வீடுகள் தீயிடப்பட்டும், தாக்குதல்களுக்கும் உள்ளாயின. இராணுவ நீதிமன்றத்துக்கு ஊடாக மரணதண்டனை வழங்கப்பட்டவர்கள் 10 மாத்திரமே. இதில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 49. கலவரம் குறித்து கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்துக்குள் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1102. இதில் அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளும் உள்ளடக்கம். இதில் 210 வழக்குகள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டவை பற்றியது.  17 பள்ளிவாசல்கள் தீயிடப்பட்டன.  86 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன.

இலங்கையில் சிங்கள தேசியத் தலைவர்களாக கருத்தப்பட்ட மித வாதத் தலைவர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சதி புரிவதை நினைத்தும் பார்த்திருக்க்கமாட்டார்கள். அவர்கள் இலங்கைக்கான சுதந்திரக் கோரிக்கைகளை முன்வைப்பதற்குப் பதிலாக சீர்திருத்தங்களை மாத்திரம் கோரிப் பெற்றுக்கொண்டவர்களாயிற்றே.  பலருக்கு எதிராக “முடிக்கு எதிரான ராஜதுரோக” குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்தன. பலர் மரண தண்டனைக்கும், சிறைத்தண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டனர். சுட்டுக்கொல்லும் படி இருவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. பலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன. இராணுவ நீதிமன்றத்தில் 412 பேருக்கெதிராக விசாரிக்கப்பட்ட துரித வழக்குகளில் 358 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்து எழுதிய பிரித்தானிய ஆங்கில பத்திரிகைகள் அவை மோசமான மிலேச்சத்தனமான தண்டனைகள் என்று வர்ணித்தன.

இராணுவச் சட்டம்
இராணுவச் சட்டத்தின் விளைவாக இராணுவத்தினரும், பொலிசாரும் மாத்திரமல்ல சிவில் அதிகாரிகளும், ஆங்கிலேய தோட்ட உரிமையாளர்களும் கூட தாம் விரும்பியபடி தண்டனையளிக்கும் பணிகளில் ஈடுபட்டார்கள். கலவரம் அடங்கிய பின்னரும் கூட கலவரத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கக்கப்பட்டவர்கள் கூட எந்த விசாரணையுமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்தன. 1915 ஓகஸ்ட் வெளியிடப்பட்ட அரச ஆணையின் பிரகாரம் இப்படி சட்டவிரோதமான துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டவர்கள் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

ஐரோப்பியர்கள் தவிர்ந்த அனைவரும் தம்மிடமுள்ள துப்பாக்கி உள்ளிட்ட அனைத்துவித வித ஆயுதங்களையும் அரசிடம் கையளிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. கையளிக்கப்பட வேண்டிய ஆயுதங்கள் பட்டியலில் சாதாரண சமையலறையில் பயன்படுத்தப்படும் தேங்காய் துருவி கூட இருந்ததாக ஆர்மண்ட் டி சூசா தனது நூலில் விளக்குகிறார்.

கலவரப் பாதிப்புகள் குறித்து வெளியிடப்பட்ட ஆணையின் பிரகாரம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு சிங்களவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. வலுக்கட்டாயமாக அந்த நட்ட ஈடுகள் சிங்களவர்களிடம் பெறப்பட்டுமிருக்கின்றன.

முதலாவது உலக யுத்தத்தின் காரணமாக பிரித்தானியா தமக்கெதிரான சதிகள் தமது எதிரி நாடான ஜேர்மனியினால் தமது காலனித்துவ நாடுகளில் மேற்கொள்ளக்கூடும் என்கிற பீதி நிலவியது. இலங்கையில் அப்போது ஆங்கிலேய-கத்தோலிக்க எதிர்ப்பை மும்முரமாக முன்னெடுத்த மதுவொழிப்பு இயக்கத்திற்கும் அதனை தலைமை தாங்கிய அனகாரிக்க தர்மபாலவுக்கும் பின்னணியில் ஜெர்மனியின் சதி இருக்கிறது என்று ஆங்கிலேய அரசு நம்பியது. ஜெர்மன் நாட்டுத் தலைவருடன் தர்மபால இருக்கும் புகைப்படம் இருக்கும் ஒரு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவியிருந்தன.

இத்தகைய முக்கியத்துவமற்ற, ஆதாரமற்ற வதந்திகளை பெரிய அளவில் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் இந்த கலவரம் ஜெர்மனியின் சதியாக இருக்க வாய்ப்புண்டு என்று அதிகாரபூர்வ அறிக்கையில் கூட குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே பிரித்தானிய காலனித்துவ நாடுகள் பலவற்றில் ஜேர்மன் உளவாளிகள் செயற்பட்டு வருவதாக நம்பப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்தியாவில் இயங்கிவந்த சக்திகளுக்கு ஜெர்மன் உதவிகளை வழங்கி வந்தது என்று திடமாக நம்பப்பட்டது. பிரித்தானியாவுக்கு எதிரான கருத்து கொண்டோர் என்கிற சந்தேகத்தின் பேரில் அப்போது இலங்கையில் இருந்த சில ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.

ஆனால் இத்தகைய பீதிகளிலும், அனுமானங்களிலும் எந்தவித உண்மையும் இருக்கவில்லை என்பதை பிற்காலங்களில் வெளிவந்த சகல ஆய்வுகளிலும், அறிக்கைகளிலும் தெளிவாகத் தெரியவந்தது. இது உள்நாட்டில் ஏற்பட்ட இரு சமூகங்களுக்கு இடையில் திட்டமிடப்படாமல் தொடங்கப்பட்ட திடீர் கலவரம். அதை அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் சென்றது கொள்ளையடிப்பவர்களும், சண்டியர்களுமே. அதை மேலும் மோசமான படுகொலைகளுடன் முடிவுக்கு கொண்டுவந்தது பிரித்தானிய அரசே. எல்லாவற்றையும் விட இந்த கலவரம் எந்த விதத்திலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரானதாக இருக்கவே இல்லை. இது அரசுக்கு எதிரான கலவரம் என்கிற கதை படு முட்டாள்தனமானது என்று இராமநாதன் அரசசபையிலும் தனது நூலிலும் இன்னும் பல இடங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹர்ரி க்ரீசி (Harry Creasy) “மிகவும் நம்பிக்கையுடன் கூறுகிறேன் பிரித்தானிய அரசாட்சியில் சிங்களவர்கள் அளவுக்கு சட்டத்தை மதிக்கும் நம்பிக்கையான மக்களை காண முடியாது” என்று அரசவையில் உரையாற்றினார்.

அதேவேளை கலவரம் நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்திவிட்டு வந்த அதிகாரிகள் இந்த கலவரம் முஸ்லிம்களுக்கு எதிரானது மாத்திரமல்ல ஐரோப்பியர்களுக்கு எதிரானதும் கூட என்று நம்புவதாக இலங்கை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கேப்டன் நோர்த்கோட் அறிக்கையிட்டார். தேசத்துரோக நடவடிக்கைகள் மேலும் பரவாமல் தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையும் இத்தகைய இராணுவச் சட்டம் கொண்டுவருவதற்கு ஏதுவாக இருந்தது.

இந்த கலவரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணையாளரின் சில ரகசிய அறிக்கைகளிலும் இதனை “தேசத்துரோக சதி”  என்றே குறித்திருந்தது. நாடு முழுவது கலவரத்தை ஏற்படுத்துவதற்காக நன்கு திட்டமிட்ட நிகழ்ச்சி இது என்று கேகாலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிங்கள – மரக்கல (கரையோர முஸ்லிம்கள்) சமூகங்களுக்கு இடையில் இருந்த விரிசலை பிரித்தானியாவுக்கு எதிராக திசைதிருப்பி விடும் இலக்குடன் இது நகர்ந்தது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்றைய சூழலில் இலங்கையில் இருந்த அரச அதிகாரிகளுக்கு இடையில் நிலவிய பாரிய முரண்பாடுகளும் இப்படி முன்னுக்குப் பின் முரணான குழப்பகரமான அறிக்கைகளுக்கு காரணம் என்று குமாரி ஜெயவர்த்தன எழுதிய “இலங்கை தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி” என்கிற நூலில் விளக்குகிறார்.

ஆன்றைய ஆள்பதி சார்மஸ் தலைமையிலான சிவில் அதிகாரிகள் கொண்ட குழு கூட்டங்களில் பல முரண்பாடுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இறுதியில் முடிவு எடுக்கும் அதிகாரம் அன்றைய காலனித்துவ செயலாளர் சேர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ் (Reginald Edward Stubbs) இடமே இருந்தது, கலவரம் குறித்து சார்மசுக்கும் ஸ்டப்சுக்கும் இடையில் பரிமாறப்பட்ட இரகசிய கடிதமொன்றில் “தேசாதிபதியின் கணிப்பை விட நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது. இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரே வழி இராணுவச் சட்டத்தை கொண்டு வருவதே. அதுபோல இதனை அடக்குவதற்கான பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும்” என்றும் அறிவித்திருக்கிறார். தேசாதிபதி இதனை செய்யத் தவறியிருக்கிறார் என்றும் நிலைமை குறித்த அவரது அறிக்கை உண்மை நிலையை விபரிக்கத் தவறியுள்ளன என்றும் காலனித்துவ நடவடிக்கைகளுக்கான அலுவலகத்துக்கு அவர் அறிவித்திருக்கிறார்.

ஸ்டப்ஸ் இன் கருத்துக்கள் மிகவும் வேடிக்கையாகவே இருந்தது என்று குமாரி ஜெயவர்த்தன குறிப்பிடுகிறார். ஸ்டப்ஸ் காலனித்துவ காரியாலயத்தைச் சேர்ந்த ஏ.ஈ.கொலின்ஸ் க்கு அனுப்பிய கடிதமொன்றில் இப்படித் தெரிவிக்கிறார்.

“கலகக்காரர்கள் கூடியிருந்த இடங்களில் இராணுவத்தினர் சென்று துப்பாக்கியால் அவர்களை சுட்டுகொன்றர்கள். இதில் மதுவொழிப்பு இயக்கத்தின் தலைவர் மிரண்டோ கொல்லப்பட்டது தற்செயல் நிகழ்வு தான். ஆனால் அது தேவ சித்தத்தினால் சரியாகத் தான் நடந்திருக்கிறது. ஆரம்பத்தில் மிரண்டோ அந்த கும்பலைத் தூண்டிவிட்டு களைந்து சென்றுவிட்டு பின்னர் மீண்டும் அந்த இடத்துக்கு விளைவுகளை பார்வையிட வந்திருந்தார் என்பதற்கான சாட்சிகள் உள்ளன. ஆனால் அதன் போது அவர் தற்செயலாகவே கொல்லப்பட்டார். அதன் மூலம் சரியான ஒருவரை கொல்லக்கூடியதாக இருந்திருக்கிறது.”

கலவரம் பற்றி 1916 இல் நூல்களாக எழுதிய சேர்.பொன்,இராமநாதன், ஆர்மண்ட் டி சூசா, ஈ,டபிள்யு பெரேரா போன்றோர் இந்த கருத்திலிருந்து வேறுபடுவதை காண முடிகிறது. அவர்கள் குறிப்பிடும்போது “கொட்டாரோட்டில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 150 யார் தூரத்திலேயே மிரண்டோவின் இல்லம் இருந்தது. அவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது இராணுவம் அவரை சுட்டுக்கொன்றது” என்றே குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டப்ஸ் 1913 - 1919 காலப்பகுதியில் இலங்கைக்கான காலனித்துவ செயலாளராக கடமையாற்றியாவர். அதன் பின்னர் மீண்டும் இலங்கைக்கான 27வது ஆள்பதியாக 1933 – 1937 காலப்பகுதியில்  ஆட்சிபுரிந்தவர். கறைபடிந்த முக்கிய சம்பவங்கள் அவரது காலத்தில் பதிவாகியுள்ளன. அவுஸ்திரேலிய பிரஜையும் லங்கா சமசமாஜ கட்சியின் செயற்பாட்டாளருமான பிரஸ்கேடிலை (Bracegirdle) நாடுகடுத்தும் ஆணையை பிறப்பித்த பிரதான சூத்திரதாரியும் இவர் தான். அந்த வழக்கில் ஸ்டப்ஸ் தோற்றுப்போனார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பிரஸ்கேடிலுக்கு ஆதரவாக அந்த வழக்கு அமைந்தது நமக்கு நினைவிருக்கலாம்.

ஆள்பதிக்கும் காலனித்துவ செயலாளருக்கும் இடையில் இருந்த பனிப்போரும், முரண்பாடுகளும் இந்த சம்பவத்தில் பல சிக்கல்களைக் கொண்டுவந்திருந்தன டீ.ஏ.பேத்திரிஸ் மரணதண்டனை சம்பவம் இந்த முரண்பாட்டை விளக்க நல்ல உதாரணம். அது மட்டுமன்றி பேதிரிஸ் தேசத்துக்காக உயிர் துறந்த தியாகியாக இன்றும் சிங்களவர்கள் மத்தியில் போற்றப்படுகிறார். சென்ற ஆண்டு கண்டி கலவரம் குறித்து இலங்கையில் நிகழ்ந்த ஒரே குறிப்படத்தக்க நிகழ்வு, பேதிரிஸ் நினைவு தினத்தை பெரிய அளவில் கொண்டாடியது தான். அந்த நிகழ்வின்போது கண்டி கலவரத்தின் போது பேதிருசுக்கு நிகழ்ந்தது என்ன என்பதை விபரிக்கும் 155 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெளியிடப்பட்டது. எட்வர்ட் ஹென்றி பேதிரிசுக்கு கொழும்பு ஹெவ்லொக் சந்தியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. பேதிரிஸ் குறித்து விரிவாக அடுத்த இதழில் பார்க்கலாம்.

தொடரும்

இக்கட்டுரையாக்கத்துக்கு உசாத்துணைக்கு பயன்பட்டவை

  • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  • A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates