Headlines News :
முகப்பு » , , , , » எட்வர்ட் ஹென்றி பேதிரிஸின் மரண தண்டனை (1915 கண்டி கலகம் –24) - என்.சரவணன்

எட்வர்ட் ஹென்றி பேதிரிஸின் மரண தண்டனை (1915 கண்டி கலகம் –24) - என்.சரவணன்



"என் கண்களைக் கட்டாதீர்கள்
என்னை சுடுபவர்களை நான் பார்க்க வேண்டும்"

எட்வர்ட் ஹென்றி பேதிரிசுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது இப்படித் தான் ஆங்கில அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆங்கில அரசு செய்த பழிவாங்கள்கள் படுகொலைகளாக தொடர்ந்தன. இலங்கையில் மதுவொழிப்பு இயக்கத்தின் எழுச்சியை ஆங்கிலேயர்களுக்கு எதிரான எழுச்சியாகவே நோக்கிய ஆங்கில ஆட்சியாளர்கள் அந்த இயக்கத்தின் முன்னோடிகளை வேட்டையாடினார்கள். இந்த கலவரத்தை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த கலவரமும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக திசைதிருப்பி சதி செய்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி வீண் பழி சுமத்தினார்கள். கலவரத்துடன் சம்பந்தப்படாத பலர் இப்படி இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

1915 ஜூன் 2 அன்று அன்றைய பிரபல தொழிற்சங்கத் தலைவரான எ.ஈ.குனசிங்கவைக் கைது செய்தது அதனைத் தொடர்ந்து டீ.பீ.ஜயதிலக்க, டபிள்யு.ஏ.டீ.சில்வா, எப்.ஆர்.சேனநாயக்க, டீ.எஸ்.சேனநாயக்க, டீ.சீ.சேனநாயக்க,டாக்டர், சீ.ஏ.ஹேவாவிதாரண (அநகாரிக்க தர்மபாலாவின் சகோதரர்), ஜோன் டீ.சில்வா, ஈ.ஏ.விஜேரத்ன, ஏ.டபிள்யு.பீ.ஜயதிலக்க, சைமன் விஜேசேகர, பியதாச சிறிசேன, எல்பட் விஜேசேகர, ஆதர்.வீ.தியேஸ், ஹேரி தியேஸ், ரிச்சர்ட் சல்காது, ஏ.எச்.மொலமூரே, டயஸ் பண்டாரநாயக்க, வோல்டர் சல்காது, பீ.சீ.எச்.தியேஸ் மற்றும் பௌத்த மதகுருவான பத்தரமுல்ல சுபூதி தேரர் ஊள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இவர்கள் முதலில் மருதானை போலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் போலிஸ் ஆணையாளரான ஆர்.டபிள்யு.பேர்ட் மற்றும், ஏ.சீ.எல்னட் ஆகியோரே.

இவர்கள் அனைவரும் வெலிக்கடை சிறையின் எல் பிரிவில் (எல் வார்டு என்றும் அழைக்கப்படும்) அடைக்கப்பட்டார்கள். கொலை, கொள்ளை போன்ற மிகவும் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடைக்கும் பிரிவு இது. பலத்த பாதுகாப்பு கூடிய இந்த பிரிவில் தம்மை நாயை விடக் கேவலமாக நடத்தினார்கள் என்று பின்னர் அந்தத் தலைவர்கள் தெரிவித்தார்கள்.


பேதிரிஸ் குடும்பம்
பிரபல தொழிலதிபரான டீ.டீபேதிரிஸுக்குப் பிறந்த ஐந்து பேரில் கடைசி மகன் ஹென்றி பேதிரிஸ். பேதிரிஸ் இலங்கையில் பிரபல வர்த்தக செல்வந்த நிலச்சுவாந்திர பரம்பரையச் சேர்ந்தவர். டீ.டீ.திரிசின் மூத்த மகளை திருமணம் முடித்தவர் சீ.ஜே.மேதிவ் (இவர் பிற்காலத்தில் பிரபல இனவாதியாக அறியப்பட்ட சிறில் மெதியுவின் பாட்டனார்) காலியிலும் கொழும்பிலும் கப்பல் போக்குவரத்தோடு சார்ந்த தொழிலில் ஏகபோக வர்த்தகராக அறியப்பட்டவர். மேலும் பல வித வர்த்தகங்களில் அன்று கொடிகட்டிப் பறந்த நபர். நிலக்கரி, காரியம், மாணிக்கக்கல் அகழ்வு போன்ற வியாபரங்களிலும் ஈடுபட்ட இவர் ஜெர்மனுக்கு காரீய ஏற்றுமதியையும் செய்து வந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டு மட்டும் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த 33.41 தொன் காரீயத்தின் பெறுமதி 220 லட்சம் ரூபாய். இதில் பெருமளவு பங்கு காரீயம் பேதிரிஸ் கம்பனியுடையது.  ஆங்கிலேயர்கள் பேதிரிஸ் குடும்பத்தின் மீது பகை கொள்வதற்கு இந்த ஜேர்மன் உறவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அது போல அவர் மதுவொழிப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளராகவும் இருந்தார். தனது சொத்துக்களைக் கொண்டு பல்வேறு சமூக நல காரியங்களிலும் ஈடுபட்டவர். அவரது குடும்பத்தினர் பலர் இலங்கையின் சுதந்திரத்துக்காக பின்புலத்தில் பணியாற்றியவர்கள். 1915 கலவரத்தின் போது பேதிரிசுக்கு சொந்தமான சொத்துக்களும் சேதத்துக்கு உள்ளாகின.

இலங்கையின் சுதந்திரத்துக்கான இரகசிய கூட்டங்களை எப்.ஆர்.சேனநாயக்க நடத்திய வேளைகளில் அதில் ஹென்றியும் கலந்து கொண்டுள்ளார். 

ஹென்றி பேதிரிஸ் 1886 ஓகஸ்ட் 16 காலியில் பிறந்தார்.  ஹென்றி புனித தோமஸ் கல்லூரியிலும் பின்னர்  பிரபல ரோயல் கல்லூரியிலும் கற்ற காலத்தில் விளையாட்டுத் துறையில் திறமையானவராக மிளிர்ந்தார். ஹென்றியிடம் அழகானதொரு குதிரை இருந்தது. ஒரு முறை ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த இளவரசி தன்னுடன் கொண்டு வந்த குதிரைகளைக் கண்ட ஹென்றி தகப்பனின் செல்வாக்குக்கு ஊடாக அந்த குதிரையை பெரு விலைக்கு வாங்கியிருந்தார். அந்த குதிரையுடன் மிடுக்குடன் வலம்வரும் இளைஞர் ஹென்றியை பார்க்க அப்போது வீதிகளில் பலர் கூடுவார்களாம். ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஒரு முறை இது குறித்து விபரித்த போது ஹென்றி குதிரையில் செல்வதை தனது தாயார் தன்னை அழைத்து அடிக்கடி காண்பிப்பாராம். பிற் காலத்தில் சேர் ஜோன் கொத்தலாவலவும் தனது நண்பர்களிடம். ஹென்றியை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு அவர் போல இருக்கவேண்டும் என்று விரும்பினாராம்.

ஹென்றியின் நண்பர்களில் பலர் வெள்ளையினத்தை சேர்ந்தவராக இருந்திருக்கின்றனர். ஒரு முறை தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்த வேளை அங்கு வந்த வெள்ளையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஹென்றியைப் பார்த்து இந்த இடம் பிரித்தானியர்களுக்காக ஒதுக்கப்பட்டதென்றும் உடனடியாக எழுந்துச் செல்லும்படியும் அதட்டியிருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பல இடங்களில் இப்படி ஆங்கிலேயர்களுக்கு என்று பிரேத்தியேக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஹென்றி அந்த இளைஞர்களிடம் உன்னைப்போல் நானும் பணம் கட்டி படம் பார்க்க வந்திருக்கிறேன். உனக்கு இருக்கும் அதேயுரிமை எனக்கும் இருக்கிறது என்று கூறவே அந்த இளைஞர்கள் கோபத்துடன் வெளியேறிய சம்பவமும் பதிவாகியிருக்கிறது.

அது போல இன்னொரு சம்பவம். வெள்ளவத்தை வழியாக தனது குதிரையில் ஒரு பாலத்தைக் கடந்து செல்லும் போது எதிரே வந்த காரில் இருந்த ஆங்கிலேயர் ஒருவர் ஹென்றியை அந்த பாதையில் பின்னால் சென்று வழிவிடும்படி கத்தியிருக்கிறார். "என்னுடைய குதிரையில் ரிவர்ஸ் கிடையாது உன்னுடைய வாகனத்தை நீ ரிவர்சில் செலுத்து. அல்லது பாலத்தை பெரிதாக்குமாறு உனது ஆட்சியாளர்களிடம் போய் சொல்". என்று கூறியிருக்கிறார்.

தனது வழியில்  தனது மகனும் தனது வர்த்தகத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவார் என்று எதிர்பார்த்தார் டீ.டீ.பேதிரிஸ். ஆனால் முதலாவது உலக யுத்த காலப்பகுதியில் இராணுவத்திற்கு ஆட் சேர்ப்பதற்காக ஆங்கிலேயர்கள் "இலங்கை பாதுகாப்பு படை"  (Ceylon Defence Force) என்கிற இராணுவத்தை உருவாக்கியது. அதுபோல கொழும்பைப் பாதுகாப்பதற்காக கொழும்பு நகர பாதுகாப்புப் படை ( CTG - Colombo Town Guard) என்கிற ஒன்றையும் உருவாக்கியது. இந்த இராணுவத்தில் இணைந்த முதலாவது இலங்கையர் ஹென்றி.

கொழும்பு பாதுகாப்பு படையிலும் சிறந்த துப்பாக்கிச் சூட்டு வீரராக இருந்தார் ஹென்றி. தனது ஆங்கில அறிவாலும், ஆற்றலாலும் ஹென்றி வேகமாக பல பதக்கங்களையும், பதவியுயர்வுகளும் பெற்றுக்கொண்டார். ஒரே வருடத்தில் கேப்டன் பதவியும் கிடைத்தது. ஹென்றியின் செல்வாக்கும், வசதிகளும் பலரையும் பொறாமைகொள்ளச் செய்தது.

1915 கலவரத்தை அடக்குவதற்காக இராணுவச் சட்டத்தை மிலேச்சனமாக அமுல்படுத்துவதற்காக பயன்படுத்திய இராணுவத்துக்கு துணையாக  இந்திய பஞ்சாப் இராணுவத்தைப் பயன்படுத்தியது ஆங்கிலேயே அரசு. பஞ்சாப் படையினர் மேலும் மோசமான ஈவிரக்கமற்ற இராணுவதினராக இருந்தார்கள். அவர்கள் இராணுவ ஒழுக்கங்கலையோ, மனிதாபிமானமோ இல்லாதவர்களாக இருந்தார்கள் என்பதை பல்வேறு வெளியீடுகள் ஒப்புவித்துள்ளன.

ஹென்றிக்கு எதிரான சதி
கோட்டையிலும், பேலியகொடையிலும் இருந்த பேதிருசுக்கு சொந்தமான சொத்துக்கள் முஸ்லிம்களால் சேதப்படுத்தப்பட்டு கொள்ளையிடப்படுகின்றன என்கிற வதந்தி பரவியது. பேலியகோடையை நோக்கி பல சிங்களவர்கள் கூட்டமாக சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலைமையைப் பற்றி கேள்விப்பட்ட நகர பாதுகாப்பு படையின் கேப்டனாக இருந்த ஹென்றி பேதிரிஸ் தலைமையிலான அணி அதனைக் கட்டுப்படுத்த அங்கு அனுப்பப்பட்டது. விக்டோரியா பாலத்தின் அருகில் கூட்டத்தை தடுத்து நிறுத்திய  ஹென்றி; பரப்பட்டிருப்பது வெறும் வதந்தி என்றும் அதில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் களைந்து சென்றுவிடும்படியும் கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் அதனை செவிசாய்க்காத சிலர் களனி ஆற்றுக்குள் நீந்தி கடந்து வருவதற்காக ஆற்றில் பாய்ந்துள்ளனர். இதனைக் கட்டுபடுத்துவதற்காக நகர பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தத்துடன் ஒருவர் கொல்லப்பட்டார். அதுபோல கோட்டையில் நடந்த கலவரத்தின் போது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதுபோல கொழும்பு கோட்டை கெய்சர் வீதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கிறிஸ்டல் பேலஸ் என்கிற கடையை தாக்கியதைத் தடுக்காது அங்கே குழுமியிருந்த முஸ்லிம்களை நோக்கி சுட்டதாக ஹென்றி பேதிரிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டதன் விளைவாக ஹென்றி பேதிரிஸ் கைது செய்யப்பட்டார். ஹென்றியின் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சதி என்பது பின்னர் உறுதிசெய்யப்பட போதும், ஹென்றி இந்த குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை என்று வாதிட்டும் பயனளிக்கவில்லை. மேலும் அங்கு வந்த சிங்களவர்களை புறக்கோட்டை நோக்கி திசைதிருப்பி அனுப்பினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உண்மையில் அந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அந்த படையணியில் இருந்த வெறும் இருவரே. அந்த கலவரக்காரர்களைக் கலைத்து விரட்டியது கூட ஹென்றி தான் என்று வெறும் சிலர் சாட்சி கூறினர்.

ஜேர்மன் நாசி இராணுவத்திற்கு தேவையான பொருட்களையும், உளவுச் சேவைகளையும் பேதிரிஸ் குடும்பம் வழங்கியது என்று சந்தேகப்பட்டது ஆங்கிலேய அரசு. அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் ஏதும் உள்ளனவா என்பதை ஆராய்வதற்காக ஹென்றியின் கைதைப் பயன்படுத்திக்கொண்டது அரசு. பேதிரிசுக்குச் சொந்தமான வீடுகள், வியாபார நிலையங்கள் என்பவற்றிற்குள் புகுந்து அனைத்தையும் விழுத்தி சோதனை செய்தனர். அப்படி எதுவும் அவர்களுக்கு கிட்டவில்லை.

ஆனாலும் முன்னைய குற்றச்ச்காட்டுக்களை முன்வைத்து ஹென்றியை வெலிக்கடைச் சிறைக்குள் தள்ளினர். ஹென்றியை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு பெருமளவு இராணுவத்தை அனுப்பியிருந்ததுடன், வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றத்தில் ஹென்றிக்கு எதிராக நான்கு பிரதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவை தேசத்துரோகம், முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்கியது, அவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளையடித்தது, கொலை செய்யும் நோக்கத்துடன் பலரை காயப்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த விசாரணைக்கும் இடம் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பில் பதில் கூறவும் விடவில்லை. ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்ப்பை வழங்குவதற்காக கூட்டப்பட்ட ஒரு நீதிமன்றமாகவே அது காணப்பட்டது. அதன் படி 1915  ஜூலை முதலாம் திகதி ஹென்றி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அதற்கு தண்டனையாக சுட்டுக் கொல்லும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு ஜெனெரல் எச்.எல்.எல் மெல்கம் என்பவரால் உறுதி செய்யப்பட்டது. தான் குற்றவாளி அல்ல என்று ஹென்றி இயன்றவரை கூறியும் எதுவும் கணக்கிற்கொள்ளப்படவில்லை.

இந்தத் தீர்ப்பு ஒரு திட்டமிடப்பட்ட சதி என்பதை பெருமளவு நூல்களும் கட்டுரைகளும் வெளிப்படுத்தியுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையில் ஹென்றியை சங்கிலியிட்டு கட்டி நித்திரை கொள்ளக்கூட வசதியில்லாதபடி வைத்திருக்குமளவுக்கு ஈவிரக்கமின்றியே சிறைச்சாலை அதிகாரிகள் நடந்து கொண்டார்கள்.

ஹென்றியை விடுவிப்பதற்காக சேர்.பொன்.இராமநாதன் உள்ளிட்ட பலர் முயற்சி செய்தார்கள் அதேவேளை ஹென்றியைக் கொல்வதற்காக ஆங்கில அரசுக்கு உதவி புரிந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் இருந்தார்கள். அடுத்த இதழில் பார்ப்போம்.

தொடரும்
  • EDWARD HENRY PEDRIS : "National hero who awakened a nation" - Charnika Imbulana - (Sarasavi  publications - 2015)
  • Memorandum upon recent disturbances in Ceylon - Perera, Edward Walter – (London, E. Hughes & co., 1915)
  • Riots and Martial Law in Ceylon - 1915 Hardcover – P. Ramanathan (St.Martins Press, 15 Craven Street, Strand, 1916)
  • A History of Sri Lanka - K. M. De Silva – (University of California Press - 1981)
  • The Rise of the Labor Movement in Ceylon - Kumari Jayawardena - Duke University Press, 1972
  • Hundred days in ceylon under martial law 1915 - Armand de Souza (The Ceylon Morning Leader - 1916)
  • “Hobgoblins, Low-Country Sinhalese Plotters or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots”, Roberts, Michael (Sri Lanka Journal of the Social Sciences 1981)
  • “The Rev.A.G.Fraser and the Riots of 1915”, James Rutnam,  (Ceylon Journal of Historical and Social Studies, Vol.1 No. 2 (July-December 1971))
  • “අනගාරික ධර්මපාල” - ඩේවිඩ් කරුණාරත්න (M.D.Gunasena & Co. (Pvt.) Ltd, 2012)
  • ධර්මපාල ලිපි අනගාරික ධර්මපාලතුමාගේ ලිපි සංග්‍රහයකි ආචාර්ය ආනන්ද ඩබ්ලිව්. පී. ගුරුගේ සංඥාපනය –(Department Of Government Printing-1991)
  • ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිරාකරණය සහ සාමය ගොඩනැංවීම : බෞද්ධ පර්යාලෝකය - Nirmanee Circle (Social scientists Association, 2008)

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates