Headlines News :
முகப்பு » » காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்!

காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்!

ஓ.ஏ.ராமையா

இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76!

''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.

இந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி!'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தைகள் இவை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.

இளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இலங்கை தி.மு.க. தலைவர் நாவலர் நெடுஞ்செழியன், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான‌ பெ.முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து சாதி, மத, பேதங்களுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக 'ராமையாவின் செங்கொடி சங்கமும், இளஞ்செழியனின் இலங்கை திராவிட இயக்கமும் இணைந்து தலவாக்கலையிலும், அப்புத்தளையிலும் தமிழர்களின் உரிமைகளுக்காக நடத்திய மாபெரும் போராட்டங்கள் மலையக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவை' என 'எழுதாத வரலாறு' நூலில் குறிப்பிடுகிறார் பெ.முத்துலிங்கம்.

இலங்கை தீவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால் அதனை தடுக்கும் விதமாக இலங்கை வாழ் மலையாளிகளையும், இலங்கை வாழ் தெலுங்கர்களையும் ஒன்றிணைத்து 1970ல் 'இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் இளஞ்செழியன் கொழும்பிலும், பெ.முத்துலிங்கம் கண்டியிலும், ராமையா ஹட்டனிலும் நடத்திய போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசின் குரல் வளையை நெரித்தன. இதன் விளைவாக 1983ஆம் ஆண்டு நடந்த‌ இன கலவரத்தில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பினரை தேடித்தேடி காவு வாங்கியது சிங்கள பேரினவாதம்.

மலையக‌ அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்த ஓ.ஏ.ராமையா, வடக்கில் எழுந்த தனி நாடு கோரிக்கையை ஆதரித்து தென்னிலங்கையில் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். அவரின் இழப்பு மலையக பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.

'காலம் முழுவதும் செங்கொடி சுமந்த என் மீது, இறப்பிலும் செங்கொடி போர்த்தியே அடக்கம் செய்ய வேண்டும். தப்பி தவறி கூட குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரால் இந்து மத சடங்குகளோ, சாதிய மூட நம்பிக்கைகளோ அரங்கேற்ற கூடாது' என இறுதியாக எழுதி விட்டு காற்றில் கலந்திருக்கிறது இந்த செங்கொடி!

-இரா.வினோத்

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates