மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியும் கம்யூனிசவாதியுமான திரு.ஓ.ஏ.ராமையா அவர்கள் 19.05.2013 அன்று காலமானார். நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த அவர் சத்திரசிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாக மலையக தமிழர்கள் அழைத்துவரப்பட்டு அவர்கள் மீது ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காலத்தில் கம்யூனிச அரசியல் செய்துகொண்டு செங்கொடிச் சங்கம் என்று ஒன்றை உருவாக்கி தொழிலாளர்களுக்காக போராடிய ஒரு உன்னத தலைவர் அமரர்.ராமையா அவர்கள். இவருடைய தலைமையில் மலையகத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டம் வரவாற்று பதிவாகும். மலையக தமிழர்கள் தொடர்பில் சர்வதேச மாநாடு கூட்டங்களில் இவர் பல கருத்துக்களை முன்வைத்து அம்மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர பாடுபட்டார்.
பிற்காலத்தில் இவர்களது கம்யூனிச தொழிற்சங்க கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு, இவருடைய செயற்திறமின்மை, மக்கள் செல்வாக்கை இழந்தமை என பல காரணங்களால் ஓ.ஏ.ராமையா என்ற ஒரு தொழிலாளர் வர்க்க புரட்சியாளர் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விட்டார்.
மலையகத்தில் தொழிலாளர்கள் மீது அக்கறை என்ற போர்வையில் எழுந்த முதலாளித்துவ தொழிற்சங்கங்களின் பணவளர்ச்சி இவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனலாம்.
செங்கொடி சங்கத்தின் ஊடாக தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்து புரட்சியாளர் என்று போற்றப்படும் சிறந்த அறிவுடைய, சிந்தனையுடைய தகவல் களஞ்சியமான இவர், பின்னர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பாக மாறி முதலாளிமாருக்கு விலைபோனவர் என்ற அபகீர்த்தியையும் மூன்று தொழிற்சங்கங்களோடு இணைந்து பகிர்ந்து கொண்டார்.
அமரர். ஓ.ஏ.ராமையா அவர்களின் சமீபகால அரசியல், தொழிற்சங்க செயற்பாடுகளை முற்றிலும் விரும்பாதவன் என்றபோதும் ஆரம்ப காலத்தில் அவர் தொழிலாளர் வர்க்கத்திற்காக செய்த போராட்ட புரட்சியை ஒருகாலமும் மறக்க முடியாது. இவருடைய ஆரம்பகால புரட்சிகர செயற்பாடுகளால் நானும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அதேபோன்று இவருடைய வரலாறு எதிர்கால மலையக இளைஞர் சந்ததியினருக்கு நல்லதொரு முன்னுதாரணமாக அமையும் அமைய வேண்டும் என எண்ணுகிறேன்.
அமரர்.ஓ.ஏ.ராமையா அவர்களின் இறுதி அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோது அவருடன் நண்பர்களாக கடமையாற்றியவர்கள் அவரைப்பற்றி கூறியபோது மலையகம் ஒரு உண்மையான உணர்வுள்ள தலைவரை இழந்துவிட்டது என்று உணர்ந்தேன்.
செங்கொடி சங்கம் போன்ற அமைப்புக்கள் அன்று முன்னெடுத்த தொழிலாளர் போராட்டம், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வெயில், மழை, குளவி, அட்டைக்கடிக்குள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நமது தொழிலாளர்களுக்காக மீண்டும் உணர்வுள்ள மலையக மைந்தர்கள் உருவில் விஸ்வரூபம் எடுக்குமா என்ற கேள்வியுடன் அமரர். ஓ.ஏ.ராமையா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...
பழனி விஜயகுமார் முகநூல் வழியாக
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...