Headlines News :
முகப்பு » , » மலையக தேசியம்: சவால்களும், தீர்வுகளும் சிவம் பிரபாகரன்

மலையக தேசியம்: சவால்களும், தீர்வுகளும் சிவம் பிரபாகரன்



தேசியம் எனும்பொழுது தம்மை தாங்களே ஆளத்தகுதியுள்ளவர்களின் கூட்டுணர்வை குறிக்கின்றது. பொதுப் பிரதேசம், பொதுப் பொருளாதாரம், பொது மொழி, பொதுக் கலாசாரம் என்பன இந்த கூட்டுணர்வின் பிரதான அங்கங்களாகும். இவையே ஒரு இனத்தின் அடையாளங்களாகும்.
பொதுவாக மலையகத் தமிழரில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்களாகவும், அவர்களை சார்ந்தவர்களாகவும் இருப்பதனால் தொழிற்சங்க அரசியலே கூடுதலாக வெளிப்பாட்டுத் தன்மைவுடையதாக காணப்படினும், தேசிய இன அரசியலின் கூறுகளுக்கு (பிரதேசம், பொருளாதாரம், மொழி, கலாசாரம்) அச்சுறுத்தல் ஏற்படுகின்றபோது தொழிற்சங்க அரசியலையும் மேவி தேசிய இன அரசியல் மேலெழும்புவதையும் அவதானிக்கலாம்.

தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் தொழில் நிலைமைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கும், முன்னேற்றுவதற்குமான தொழிலாளர்களின் அமைப்பாக தொழிற்சங்கங்கள் செயற்படுகின்ற பொழுதிலும் மலையகத் தமிழர்களை பொறுத்தவரை அவர்களின் ஆரம்பகால அரசியல் செயற்பாடுகள் கூட தொழிற்சங்கங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது. ஒருபுறம் வர்க்க ஒடுக்குமுறை என்பது தோட்டத் தொழிலாளர்கள் “மலையகத் தமிழர்களாக” ஒரு தேசிய இனத்தின் பிரதான சக்தியாக விளங்குவதால் தான் இடம் பெறுகிறது. எனவே தொழிற்சங்க அரசியல் மலையகத் தமிழரின் ஒட்டுமொத்த தேசிய இன அரசியலின் ஒரு கூறாக கொள்ளலாம்.

மலையகத் தமிழரின் தேசிய இன அரசியல் முனைப்பு பெற்றுவரும் இன்றைய சூழலில் தமிழரின் தேசிய இன அரசியல் முனைப்பு பெற்று வரும் இன்றைய சூழலில் அதன் ஆரம்ப மற்றும் இன அரசியலின் ஒரு முக்கிய கூறாகிய தொழிற்சங்க அரசியலின் முக்கியத்துவம் பற்றியும் பார்ப்பது இன்றியமையாததாகும். வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக அந்த தளத்திலிருந்துதான் போராட வேண்டும். இது சர்வதேச ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு விடயமாகும். இந்நிலையிலேயே மலையக தொழிற்சங்க அரசியலின் வளர்ச்சிப்படிகள் ஆராய்வதற்கு முன் சர்வதேச ரீதியில் தொழிற்சங்க செயற்பாடுகள் பற்றி சற்று பார்ப்பது சிறந்ததாகும்.

ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சியுடன் எழுச்சி பெற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் பரவியது. தொழிலாளர்களுக்கான முதலாவது சர்வதேச அமைப்பு 1864 இல் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானியாவை சேர்ந்த ரொபர்ட் ஒவன் என்பவர் தனது தொழிற்சாலையில் வேலை நேரத்தை குறைந்ததுடன், 1819 இல் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை குறைப்பதற்கான சட்டமூலம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் பெரும் பங்களிப்பு செய்திருந்தார். அதே வேளை பிரான்சை சேர்ந்த டேனியல் லீ கிரான்ட் (1783 - 1859) என்பவரே ‘சர்வதேச தொழிலாளர் சாசனம்’ ஏற்படுவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் 1790 களின் ஆரம்பத்தில் பல்துறைசார்ந்த தேர்ச்சிப்பெற்ற தொழிலாளர்கள் ஒன்றுகூடி ‘குறைந்த வேதனம்’ என்பதை முன் வைத்து தொழிற்சங்கத்தை தோற்றுவித்தனர். 1886 இல் அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டது. 1842 இல் நீதிமன்ற தீர்ப்பொன்றில் தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமற்றவை என அறிவிக்கப்பட்டது.

இவை இவ்வாறு இருக்கையில் கார்ல் மார்க்ஸ் தொழிற்சங்கங்களை வேறொரு விதமாக அணுகினார். தொழிற்சங்கம் என்பது முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையில் இடம்பெறுகின்ற சமரசமாகவே கருதினார். அவரது பார்வையில் தொழிற்சங்கம் என்பது முதலாளித்துவத்தின் கூறாகவே இருந்தது. இதற்கு அப்பால் மலையக சமூக பின்புலத்தோடு நோக்குகின்றபோது யதார்த்தம் வேறுவிதமாக இருந்தது. மலையகத்திலே உருவான மிதவாத தொழிற்சங்கங்களாக இருந்தாலென்ன (இ.தொ.கா) அல்லது இடதுசாரி தொழிற்சங்கங்களாக இருந்தாலென்ன (சண்முகதாசன், நடேசன் தலைமையிலானவை), இவை அனைத்தும் ஒரு தொழிற்சங்க பாரம்பரியத்தினூடாகவே மலையக தேசிய அரசியலை அணுகின.

முதன்முதலில் இலங்கையில் தொழிற்சங்கம் பற்றிய சிந்தனையை விதைத்தவர்கள் அல்பிரட் ஏர்னெஸ்ட் பூல்ஜன்ஸ் (1865 - 1916) மற்றும் கலாநிதி பின்டோ ஆகியோர் ஆவர். 1893 இல் கேவ்ஸ் அச்சு நிறுவன தொழிலாளர் போராட்டமும், 1896 இல் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் பேராட்டமும், போக்குவரத்து துறைசார்ந்த ஊழியர்களின் 1906 ஆம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டம் என தொடர்ச்சியான போராட்டங்களும் இலங்கையில் தொழிற்சங்க இயக்கத்திற்கு அத்திவாரமிட்டன.

இலங்கையில் தொழில் கட்சி மற்றும் அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் என்பன 1928 இல் தோற்றுவிக்கப்பட்டதோடு ஏ. ஈ. குணசிங்க அதன் முதலாவது தலைவராக தெரிவானார். இலங்கை முதலாளிமார் சம்மேளனம் 1928 இல் தோற்றுவிக்கப்பட்டதோடு, அதுவே இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலாவது (1935 இல்) தொழிற்சங்கமாகும்.

இந்நிலையிலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 1930 களில் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்தன. மலையக மக்களின் அரசியலும் தொழிற்சங்க அரசியலோடே ஆரம்பிக்கிறது. மலையகத் தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு நூறு வருடங்களுக்கு பின்பே (முதல் பொருளாதார குடியேற்றம் 1828 இல் ஆரம்பம்) தொழிற்சங்க அரசியல் பணிகள் மெதுவாக வேரூன்றுகிறது.

சேர் பொன் அருணாசலம், பெரி சுந்தரம் ஆகியோரால் 1921 இல் இலங்கை தொழிலாளர் சேமா அபிவிருத்தி சங்கம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துண்டு முறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர். 1931 இல் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம், இலங்கை இந்திய தொழிலாளர் சம்மேளனம் கோ.நடேசய்யரினால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் இந்தியர் என்பதற்கு அப்பால் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இலங்கை சமூகத்தின் ஒரு பிரிவாக வளர்த்தெடுக்க விரும்பினார். 1939 ஜுலை 25 ஆம் திகதி நேருவின் வருகையோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸானது பாரத் சேவா சங்கம், நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம் என்பனவற்றின் இணைவே ஆகும். இவர்கள் ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அங்கத்துவம் பற்றி சிந்தித்திருக்கவில்லை. இதன் முதலாவது தலைவராக இலட்சுமணச் செட்டியாரும் இணை செயலாளர்களாக ஏ.அஸிஸ்சும், எச்.எம்.தேசாயும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த அமைப்பு தோட்டத் தொழிலாளர்களிள் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் காரணத்தால் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் 1940 மேயில் ஹப்புத்தளை கதிரேசன் கோவிலில் வைத்து பெரி சுந்தரம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இடதுசாரி தேசிய சிந்தனை வளர்ச்சி பெற்று வந்த 1930 இற்கு பிற்பட்ட பெருந்தோட்டதுறை வரலாற்றில் லங்கா சமசமாஜ கட்சியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியனால் முப்பதுகளில் இறுதி, நாப்பதுகளின் ஆரம்ப பகுதிகளில் பல வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

1954 இல் இலங்கை இந்திய காங்கிரஸின் பெயர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) என மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றம்கூட இந்தியா நிலையிலிருந்து இலங்கை மலையகத்தவர்கள் என்பதனை வெளிப்படுத்துவதற்கான மற்றுமொரு வளர்ச்சிப்படியாகவே கொள்ளலாம். 1954 இல் இ.தொ.காவிலிருந்து பிரிந்து சென்று அஸிஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை தோற்றுவித்தார். 1965 மே மாத்தில் மற்றுமொரு பெரிய பிளவு ஏற்பட்டு வெள்ளையன் தலைமையிலே தொழிலாளர் தேசிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறே மலையக பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்களுக்கிடையில் பிளவுகளும், புதிய சங்கங்கள் உருவெடுத்தலும் இன்றுவரை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இவ்வாறு தொழிற்சங்க அரசியலை மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கும்பொழுது பலர் தங்கள் உயிர்களையும் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

1. 1942 இல் முல்லோயா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கோவிந்தன்
2. 1942 இல் புப்புரஸ்ஸ கந்தா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வேலாயுதம், வீரசாமி ஆகியோர்
3. 1950 மார்ச் 02 ஆம் திகதி டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வைத்திலிங்கம்
4. 1953 இல் என்சாவெல தெபுவான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த எட்லின் நோனா
5. 1953 இல் நெபொட லேங்டேல் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த தேவன்
6. 1953 நவம்பரில் கல்தோணி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பீ.வெள்ளையன்
7. 1956 இல் மஸ்கெலியா நல்லதண்ணி தோட்ட போராட்டத்தில் உயிர் நீத்த காருமலை
8. 1956 மே 08 ஆம் திகதி டயகம தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அல்விஸ் அப்புஹாமி ஆப்ரஹாம் சிங்கோ
9. 1957 ஜுலை 15 ஆம் திகதி உடபுஸ்ஸலாவை போராட்டத்தில் உயிர் நீத்த எனிக் தோட்டத்தை சேர்ந்த பொன்னையன் மற்றும் கொம்பாடி ஆகியோர்.
10. 1958 இல் இரத்தினபுரி ஹேய்ஸ் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த நடேசன்.
11. 1958 மார்ச் 30 ஆம் திகதி பொகவந்தலாவை பேராட்டத்தில் உயிர் நீத்த பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர்
12. எட்டியாந்தொட்ட வெற்றிலையூர் பம்பேசும தோட்ட போராட்டத்தில், உயிர் நீத்த மாமுண்டு
13. 1959 இல் மாத்தளை மாதென்ன தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கே.முத்துசாமி
14. 1960 இல் ரக்வானை மூக்களாந்சேனை தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த தங்கவேலு
15. 1960 இல் நிட்டம்புவ மல்வான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிதம்பரம்
16. 1961 நவம்பரில் நாலப்பிட்டி மொண்டிசிரஸ்டோ (லெட்சுமி தோட்டம்) தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகியோர்.
17. 1964 மே 28 ஆம் திகதி மாத்தளை கந்தநுவர தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அழகர், ரெங்கசாமி ஆகியோர்
18. 1967 நவம்பர் 08 ஆம் திகதி மடுல்கெல சின்ன கிளாப்போக்கு தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சோனை
19. 1968 ஒக்டோபர் 27 ஆம் திகதி இரத்தினபுரி மயிலிட்டியா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சின்னப்பன் அந்தோனிசாமி
20. 1970 செப்டெம்பரில் பதுளை சீனாகொல தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த அழகர்சாமி, ராமையா ஆகியோர்.
21. 1970 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தளை கருங்காலி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பார்வதி, கந்தையா, ஆறுமுகம், ராமசாமி ஆகியோர்
22. 1977 மே 11 ஆம் திகதி தலவாக்கலை டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிவனு லட்சுமணன்
23. 1980 இல் கண்டி பள்ளேகல தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பழனிவேல்

என்று இந்த பட்டியல் நீண்டு செல்கின்றது.
பொதுவாக உயிர் நீத்த தியாகிகள் அனைவரும் தொழிற்சங்க போராட்டங்களிலேயே என பட்டியலிடப்பட்டாலும் பல இடங்களில் தேசிய இன அரசியலின் வெளிப்பாடாகவே இருந்துள்ளது. உதாரணமாக 1958 மார்ச் 30 ஆம் திகதி பொகவந்தலாவையில் உயிர் நீத்த பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர் முழு நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கள ‘ஸ்ரீ’ எழுத்திற்கு எதிரான போராட்டத்தின் போதே பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். மலையகத் தமிழரின் இன அடையாளத்தின் ஒரு கூறான தமிழ் மொழியை சிதைக்கின்ற விடயமாகவே இவர்கள் சிங்கள ‘ஸ்ரீ’ எழுத்தின் அறிமுகத்தை பார்த்தனர். இது போன்றே இன அரசியலின் மற்றுமொரு கூறாகிய பொதுப் பிரதேசம் (மண்ஃநிலம்) துண்டாடப்படுவதை எதிர்த்தே 1977 மே 11 ஆம் திகதி சிவனு லட்சுமணன் உயிர் நீத்தார். இவரது உயிரிழப்பினூடாகவே பத்தனை பிரதேச டெவன் தோட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் காணி பாதுகாக்கப்பட்டது. 1980 இல் கண்டி பள்ளேகல தோட்டத்தில் உயிர் நீத்த பழனிவேலும் துரித மகாவலி திட்டத்தினூடாக தங்கள் இருப்பிற்கு (நிலம் ஃ பிரதேசம்) ஆபத்து வருவதை உணர்ந்து இடம்பெற்ற போராட்டத்திலேயே ஆகும்.

சுதந்திரத்திற்கு முன்னரான உருளைவள்ளித் தோட்ட காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டம், 1950 களில் குடியுரிமை பறிப்பதற்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் மற்றும், மலையகத்தில் தொடரும் இன வன்செயல்களுக்கு எதிரான போராட்டங்கள், தொன்னூறுகளின் இறுதியில் இரத்தினபுரி வேவல்வத்த சம்பவம், 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெல சம்பவத்திற்கு எதிராக மலையகத்தில் எழுந்த எழுச்சி என்பனவும் தொழிற்சங்கங்களினால் தலைமை தாங்கப்பட்டபோதிலும் இவை இன அரசியலின் இருப்பிற்கான போராட்டங்களே! வரலாற்று ரீதியாக ஒட்டுமொத்த தொழிற்சங்க போராட்டங்களின் பின்னாலும் மலையக தேசியத்தின் இருப்பு முக்கிய பங்கு வகித்திருப்பதை அவதானிக்கலாம்.

இதுபோன்றே தோட்டத் தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்டு தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளிடையே காலத்துக்கு காலம் மலையக தேசிய அரசியல் சிந்தனை எழுச்சியுற்றதை காணலாம். 1930 களிலேயே மலையகத் தமிழரின் அரசியல், தொழிற்சங்க பிதாமகன் கோ.நடேசய்யர் தோட்டத் தொழிலாளர்களின் இலங்கை பிரஜைகள், அவர்கள் இந்த நாட்டையே நேசிக்க வேண்டும், என்ற சிந்தனையை முன் நிறுத்தி செயற்பட்டார். இந்திய தலைவர்களுக்கு “ஜே“ போடுவதை கடுமையாக எதிர்த்தார். இலங்கைக்கு வந்த நேரு அவர்கள் நடேசய்யரை சந்திக்க விடுத்த அழைப்பையும் ஏற்ப மறுத்தார். ‘நாங்கள் இந்த மண்ணுக்கு உரித்துடையவர்கள், எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்மானிக்க வேண்டியவர்கள், நேருவோ, காந்தியோ எங்களுடைய தலைவர்கள் அல்ல’ என்று மலையகத் தமிழர்கள் இந்த மண்ணுக்கு உரித்துடையவர்கள் என்பதை தெளிவாக கூறினார்.

இந்த நிலையில் தான் பிற்காலத்தில் இந்தியாவுக்கு விசுவாசமான ஒரு தலைவரை இலங்கை வாழ் இந்தியர்களிடையே வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு ஏற்படுகின்றது. இந்த பின்னணியிலேயே சௌமிய மூர்த்தி தொண்டமான் வளர்த்தெடுக்கப்படுகின்றார். அஸிஸ் மேற்கு பாக்கிஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவரைவிட தமிழ்நாட்டை சேர்ந்த தொண்டமான் இந்தியாவின் விசுவாசத்திற்குரியவரானார். இந்த விசுவாசத்தை அவர் இறுதிவரை காப்பாற்றினார்.

நடேசய்யரினால் விதைக்கப்பட்ட மலையக தேசிய சிந்தனையின் வளர்ச்சியாகவே 1954 இல் இலங்கை இந்திய காங்கிரஸ், தனது பெயரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றியதை அவதானிக்கலாம். இதுவும்கூட மலையகத்தின் தேசியத்தின் வளர்ச்சி படியேயாகும். இந்தியாவிற்கு தனது விசுவாசத்தை காட்டும் அதேவேளை, மலையக மக்களின் இருப்பை பேணும் ஓர் அரசியல் சாணக்கியமாகவும் கொள்ளலாம். இதன் அடுத்த கட்டங்களில் அதாவது 1960 களின் ஆரம்பத்தில் இலங்கை திராவிட முன்னேற்ற கழக தலைவர் இளஞ்செழியன் இந்திய தமிழர் என்பதற்கு மாற்றீடாக ‘மலையகம்’ என்ற சொற் பிரயோகத்தை அறிமுகப்படுத்துவதை காணலாம்.

இதன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிபடிகளாகவே 1967 இல் இர.சிவலிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட மலையக இளைஞர் முன்னணி, 1968 இல் வி.எல்.பெரேரா, சக்தி பாலையா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட மலையக இளைஞர் பேரவை, தொடர்ந்து எழுபதுகளின் நடுப்பகுதியில் எல்.சாந்திகுமார், எம்.எஸ்.கந்தையா ஆகியேரால் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் இயக்கம், பீ.ஏ.காதர், வீ.டீ.தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், எஸ்.தேவசிகாமணி ஆகியோரின் முன்னெடுப்பில் உருவான மலையக வெகுசன இயக்கம், வீ.புத்திரசிகாமணி, திவ்யநாதன், நேருஜி இணைந்து ஏற்படுத்திய மலையக ஐக்கிய முன்னணி, 1989 பெப்ரவரியில் பீ.சந்திரசேகரன், பீ. ஏ. காதர், வீ. டி. தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், சரத் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி என இந்த தொடர்ச்சி ஓர் தேசிய இன அரசியல் பாதையில் பயணித்து வந்துள்ளதையும் சுட்டி காட்ட வேண்டும்.

இவை போன்றே இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், மலையக பாட்டாளிகள் கழகம், புதிய மலையகம், மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், மலையக சமூக ஆய்வு மையம் போன்றவையும் மலையகத்தின் இன அடையாளத்தை மையமாகக் கொண்டு இயங்குவதையும் அவதானிக்கலாம்.

இவற்றிற்கு மத்தியிலும் ‘மலையகத் தமிழர்’ என்ற இன அடையாளத்தை சிதைக்கின்ற முயற்சிகள் தீவிரமாக ‘இந்திய தமிழர்’ என்ற சொற்பிரயோகத்தை முன் நிறுத்துவோரால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும்பாலும் இலங்கையில் உழைத்து இந்தியாவில் சேமிக்கும் வர்த்தகர்களாலும், அவர்களுடன் இணைந்து இயங்குபவர்களாலுமே இவ்வாறான முயற்சிகள் கூடுதலாக செய்யப்படுகின்றது. மலையகத் தமிழரை பல்வேறு வழிக@டாகவும் மூளைச்சலவை செய்து இந்திய தமிழராக ஏற்க செய்வது, சாதிய அமைப்புகளின் செயற்பாடுகளை மீள நிலைபெற செய்தல், மாற்று தெய்வ வழிபாட்டு முறைகளை வலு கட்டாயமாக இந்தியவிலிருந்து கொண்டு வந்து மலையகப் பிரதேசங்களில் நிலைபெற செய்தல், அதிகார வர்க்கம் தங்களுக்கு தேவையான அரசியல் - தொழிற்சங்க தலைமைகளை வளர்த்தலும், பாதுகாத்தலும், இந்தியா அல்லது இந்திய வம்சாவளி என்ற பெயரை கொண்டு புதிய புதிய அமைப்புக்களை தோற்றுவிப்பதனூடாகவும் மலையகத் தமிழர், ‘இந்திய தமிழர்’ அல்லது ‘இந்திய வம்சாவளியினர்’ என்ற சொற் பிரயோகத்தை அதிகம் விரும்புவதாக ஒரு மாயையே உருவாக்குதல் என்று இது ஒரு தொடர் கதையாகவே உள்ளது. இந்திய தமிழர்  என்ற பதப்பிரயோகதi;த வலியுறுத்தி வலுவற்ற காரணங்களை முன்வைத்து ‘மலையக சமூகத்தில் இருக்கக்கூடிய ஒரு சில இந்திய சார்புநிலை புத்திஜீவிகளை கொண்டு ஆக்கங்களை படைக்க செய்து, இந்நாட்டின் இந்திய பெரும் முதலாளிகளினால் நிர்வகிக்கப்படும் பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் அவற்றை வெளிவர செய்து செயற்கையான ஓர் ‘இந்திய தமிழர்’ சூழலை மலையகத் தமிழர் மத்தியில் தோற்றுவிக்கும் முயற்சிகளும் குறைவின்றி தொடர்ந்த வண்ணமே உள்ளன.
மலையகத்திற்கென வலிமையானதொரு தொழிற்சங்க வரலாறு உண்டு. இன்றைய நிலையில் மலையகத் தமிழரில் பெரும் எண்ணிக்கையானோர் இன்னும் பெருந்தோட்டத் தொழிற்துறை சார்ந்தே உள்ளனர். எனவே தொழிலாளரின் தொழில்சார் நலன்களை பேணுவதற்கும், தொழில் இருப்பிற்கும் தொழிற்சங்க அரசியல் இன்றியமையாதது. இதனை பாதுகாக்க வேண்டியது ஒட்டு மொத்த மலையக சமூகத்தினுடைய பொறுப்பாகும்.

அதேவேளை, இந்த தொழிற்சங்க அரசியலை தொழிலாளரின் சம்பள விடயத்துடன் மட்டும் மட்டுப்படுத்தாது, அவர்களின் ஏனைய விடயங்களையும் கையாளக்கூடிய விதத்தில் ஊழியர் நலன்சார் சர்வதேச தொழிற்சங்களின் தரத்திற்கு வளர்த்தெடுத்தல் வேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போன்ற ஒரு பங்கேற்பு பொருளாதார முறையை ஊக்குவித்தல் வேண்டும். இதன்மூலம் மலையகத் தொழிற்சங்கள் மீது இருக்ககூடிய நம்பிக்கையின்மையை அகற்றமுடிவதுடன், மலையகத் தமிழரின் பிரதான பொருளாதார வளமான பெருந்தோட்ட துறையையும் பாதுகாக்க முடியும். அத்துடன் இன்றைய தேக்க நிலையிலிருந்தும் மீள முடிவதுடன் ஆரோக்கியமான அரசியல் முயற்சிகளையும் முன்னெடுக்க முடியும்.

ஆனாலும் தொழிற்சங்க அரசியல் என்பது மலையகத் தேசிய இன அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும். மலையக தேசிய இன அரசியலே என்றும் பிரதானமானதாக இருத்தல் வேண்டும்.

அந்தவகையில் பார்க்கையில் மலையகத் தமிழரின் தேசிய இன அரசியல் முக்கியத்துவம் பெற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் மலையகத்தமிழரின் தேசிய இன அரசியலின் அடையாளங்கள் பெரும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. பல இழப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் இன்றும் இலங்கையின் இரண்டாவது அதிகமான தமிழர் வாழும் மாவட்டமான நுவரெலியாவும், மலையகத் தமிழர் செறிந்து வாழும் மற்றுமொரு மாவட்டமான பதுளையும் உள்ளடங்களாக மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசம் மலையகத் தமிழரின் பொது பிரதேசத்தின் பிரதான வகிபாகத்தை இன்றும் கொண்டுள்ளன.

திட்டமிட்ட குடியேற்றங்கள் மலையகத் தமிழரின் பொது பிரதேசத்தை வலுவிலக்கச் செய்கின்ற பிரதான ஊடகமாக உள்ளது. உசவசம, நட்சா திட்டங்கள் மூலம் மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களின் பெருமளவிலான தோட்டகாணி திட்டமிட்ட முறையில் சிங்களவர்களுக்கு பிரித்து கொடுத்தமை. மலையகத்தின் சிறு நகரங்களுக்கும் தோட்டங்களுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குடியேற்ற கிராமங்கள், அட்டன் பிரதேசத்தில் தியகலைக்கும் மஸ்கெலியா – நல்லத்தண்ணிக்கும் இடையிலான மலைத்தொடரில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குடியேற்றம் என்பன சிறந்த உதாரணங்களாகும்.

மேலும் சட்டவிரோதக் குடியேற்றம் (மலையகத்தின் பிரதான பாதைகளின் இரு மருங்கிலும் உருவாகி வருகின்ற குடியேற்றங்கள்), கைத்தொழில் குடியேற்றங்கள், அபிவிருத்தி குடியேற்றங்கள் குறிப்பாக  நீர் தேக்கங்களை அண்மித்து உருவாக்கப்பட்டுள்ள குடியேற்றங்கள் (கொத்மலை குடியேற்றம்) தோட்டங்களுக்கு அண்மித்த இடங்களில், சிறு சிறு பௌத்த விகாரைகளை ஏற்படுத்தி அதனை சூழ ஏற்படுத்தப்பட்டு வரும் குடியேற்றங்கள், சிங்கள விவசாய குடியேற்றங்கள் (நுவரெலியா மாவட்டம் போபத்தல பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய மாட்டுப் பண்ணையும் அதனை சூழ சிங்களவர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய விவசாய குடியேற்றம்) என திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றத் திட்டங்கள் பல வழிகளிலும் தொடர்ந்தவாறே உள்ளன.

மலையகத் தமிழரின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பிரதான பங்கினை வகிப்பதோடு சிறு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு வியாபாரம் மாணக்கக்கல் அகழ்வு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, அரசாங்க தொழில் வாய்ப்பு என்பனவும் பொதுப் பொருளாதாரத்தின் ஏனைய கூறுகளாக உள்ளன. இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தவர்கள் மலையகத் தமிழரே. எனவே இது இம் மக்களுக்கு சொந்தமானது. மேலும் பெருந்தோட்டப் பொருளாதாரம் மலையகத் தமிழரின் பொதுப் பொருளாதாரத்தின் அடையாளமாக இருப்பதோடு, பேரம் பேசும் பலத்தின் பிரதான அம்சமாகவும் உள்ளது.

இன்று பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பல வழிகளிலும் சிதைக்கப்படுகின்றது. தோட்டங்கள் பராமரிப்பின்மை, தரிசு நிலங்களாகவிடல், கல், மரம் போன்ற வளங்கள் அகற்றப்படல் போன்ற வழிமுறைகள் ஊடாக சிதைக்கப்படுகின்றது. வலப்பனை பிரதேசத்திலுள்ள எலமுள்ள, வத்துமுல்ல, கொச்சிக்காய் தோட்டம், கண்டி பள்ளேகல தோட்டம் என்பன அண்மைய சிறந்த உதாரணங்களாகும். மறு புறத்தில் மலையகத் தமிழரின் கைகளிலிருந்து இப்பொருளாதாரம் பறிக்கப்படுகின்றது. பெருந்தோட்டங்கள் சிறு, சிறு துண்டுகளாக துண்டாடப்பட்டு சிங்களவர்களின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று இலங்கையின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் 70மூ மேல் சிறு தேயிலை உற்பத்தியாளர்களையே மேற்கொள்ளப்படுகின்றது இவர்களில் 90மூ மேற்பட்டோர் சிங்களவர்களாவர். இவர்களுக்கு பெருமளவிலான மாணியமும் வழங்கப்படுகின்றது.

மலையக நகரங்களில் ஏனைய இனத்தவர்களுக்கு பாரியளவில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுவதோடு, சிறு விவசாய வாய்ப்புகளும் சிங்களவர்களுக்கே கூடுதலாக வழங்கப்படுகின்றது. உரம் மாணியத்தின் முழுமையான பயனும் மலையகத் தமிழருக்கு கிடைப்பதில்லை. இடை தரகர்கள் உற்பத்தியின் முழு பயனை அடைய விடாது தடுத்து விடுகின்றனர். மலையகம் இலங்கையின் பிரதான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இருந்தபோதிலும் அதன் ஆதிக்கம் சிங்களவர்களின் கைகளிலேயே உள்ளது. அதேபோன்று மலையக பிரதேசத்திலேயே சிறந்த மாணிக்கக்கற்கள் அகழந்தெடுக்கப்பட்ட போதிலும், அகழ்வு தொழிலாளர்களாகவே பெரும்பாலான மலையகத் தமிழர் உள்ளனர்.

அரச வேலை வாய்ப்புக்களை பொறுத்தவரையில் ஆசிரியர் தொழிலை தவிர ஏனைய அனைத்து துறைகளிலும் மலையகத் தமிழர் மீதான பாராபட்சம் தொடரவே செய்கின்றது. மேலும் தொழிற்சங்க, அரசியல் கட்சிகளின் செல்வாக்கும் அளவுக்கதிகமாகவே உள்ளன.

மலையகத் தமிழரின் பொது மொழியாக தமிழ் மொழி உள்ளதோடு, அவர்களுக்கே உரித்தான பொது பண்பாட்டு, கலாசார விழுமியங்களையும் பேணி வருகின்றனர். இவர்களின் பண்பாடும், கலாசாரமும் மொழியில் தங்கியுள்ளதோடு, மலையக மக்களை இணைக்கும் ஊடகமாகவும் தமிழ்மொழி உள்ளது. திருமணச் சடங்கு, கோவில் சடங்கு, குடும்பச் சடங்குகள், மலையக கூத்துக்கள், மலையக கோவில்களும் வழிபாட்டு முறைகளும், விளையாட்டுக்கள், நாட்டார் இலக்கியம் போன்றவற்றை பொதுக் கலாசாரத்திற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்.

நடைமுறையில் தமிழ்மொழி அமுலாக்கம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. அரசியல் சட்ட பிரகாரம் குறித்த ஒரு பிரதேச செயலாகப் பிரிவில் 12மூ மக்கள் ஒரு மொழியை பேசுபவர்களாக இருப்பின், அந்த மொழியில் கருமங்கள் ஆற்றப்பட வேண்டும். ஆனால் மலையகத்திலோ அல்லது மலையகத்திற்கு வெளியில் (வடகிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த) தமிழர் 12மூ மேல் வசிக்கின்ற எந்த பிரதேச செயலகப்பிரிவிலும் தமிழ் மொழியில் கருமங்கள் ஆற்றப்படுவதில்லை. குறிப்பாக தனித்தமிழ் பிரதேச செயலகங்களான ஃ பிரதேச சபைகளான நுவரெலியா மற்றும் அம்பகமுவை சபைகள் இருந்தபோதிலும் அங்கு முழுமையான தமிழ் மொழி அமுலாகத்தை காணமுடிவதில்லை.

இலங்கையில் மலையகத் தமிழ் சமூகம் தவிர மற்றைய அனைத்து சமூகங்களுக்கும் தனியான பல்கலைக்கழங்கள் உள்ளன. ஆனால் மலையகத் தமிழர்கள் கல்வி கலாசார விழுமியங்களை பாதுகாத்து, முன்னெடுப்பதற்கும் உற்பத்தி முறைகளை விருத்தி செய்யகூடிய வசதியான தனியான பல்கலைக்கழகம் ஒன்று இல்லை. பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி ஜேர்மன் நாட்டு அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக உருவாக்கப்பட்டபோதிலும், அதன் முழு பயனையும் அடையும் வாய்ப்பு மலையக சமூகத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலையக பல்கலைக்கழகம் உருவாகும்வரை பல்கலைக்கழகத்தின் சமூகம் சார்ந்த பொறுப்புக்களை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியும், கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கல்லூரியும் பொறுப்பேற்க வேண்டும். இவற்றிலுள்ள ஆசிரியர்களுக்கு இதில் பெரும் பொறுப்பு உள்ளது. மலையகப் பாடசாலைகளில் பெரும் வளப்பற்றாக்குறை நிலவுவதுடன், மாணவர் இடை விலகலும் மலையகததிலேயே அதிகமாக உள்ளது.

படித்த மத்தியதர வர்க்கத்தினரின் இடப்பெயர்வு, இந்திய ஊடுருவல் (மாற்று தெய்வ வழிபாட்டு முறைகளை புகுத்துதல், ஒப்பந்தங்கள் மூலம் மலையகத் தமிழரின் எண்ணிக்கை குறைந்தமை), சாதிய அமைப்புக்களின் சடுதியான மீள் நிலையாக்கமும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் மலையக தேசத்தின் தேசிய அரசியல் உருவாக்கத்தை பாதிக்கின்றன.

திட்டமிட்ட குடும்ப கட்டுப்பாடு இன்று மலையக தேசியத்திற்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். திட்டமிட்ட முறையில் எவ்வாறு மலையகத் தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது என்பது 2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் மூலம் அறிய முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய ரீதியான சனத்தொகை அதிகரிப்பு 36.49மூ இருக்கும் அதேவேளை, மலையகத் தமிழரின் அதிகரிப்பு 2.8மூ ஆக மட்டுமே உள்ளது. இதுவே முஸ்லீம் சமூகத்தில் 78.6மூ மாகவும் சிங்கள சமூகத்தில் 38.2மூ மாகவும் இலங்கைத் தமிழரின் வளர்ச்சி 20.3மூ மாகவும் உள்ளன. ஏனைய சமூகங்களின் வளர்ச்சி 7.4மூ மாகவும் உள்ளன. இதேவேளை கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) ஆண்டுக்கான சராசரி சனத்தொகை வளர்ச்சி வீதம் தேசிய ரீதியில் 0.71மூ இருக்கையில் சிங்களவர் வாழும் அநுராதபுரம் மாவட்டத்தில் 1.33மூ மாகவும் அம்பாந்தொட்டை மாவட்டத்தில் 1.77மூ மாகவும் உள்ளன. மலையகத் தமிழர் மிகையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் ஆகக்குறைந்த வளர்ச்சி வீதம் 0.05மூ மாகவும், பதுளை மாவட்டத்தில் 0.39மூ மாகவும் உள்ளன. இதிலிருந்து எவ்வாறு திட்டமிட்ட குடும்ப கட்டுபாட்டின் மூலம் மலையகத் தமிழரின் இன விதாசாரம் சிதைக்கப்படுகின்றது என்பது தெளிவாக புலனாகின்றது.

தொடர் இன வன் செயல்கள் மூலம் மலையகத் தமிழரை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டுகின்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதையும் அவதானிக்கலாம். 1956, 1958,  1977, 1979, 1981, 1983 என தொடர்ந்து 1990 களில் இறுதியில் இரத்தினபுரி – வேவெல்வத்தை, 2000 இல் பண்டாரவளை பிந்துனுவௌ என்று தொடர்ந்த வண்ணமே உள்ளன. இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மலையகத் தமிழர் மீது மேற்கொள்ளப்படும் இன வன்செயல்கள், 2011-2012 இல் இறக்கிவிடப்பட்ட அச்சுறுத்தும் கிறீஸ் மனிதன் என்று அச்சுறுத்தல்கள் தொடர்ந்தவாறே உள்ளன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் மலையகத் தமிழரின் இடப்பெயர்வு கட்டாயப்படுத்தப்படுகின்றது.

இதுபோன்றே சுதந்திர இலங்கையில் தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட சட்டங்களும், ஒப்பந்தங்களும், கூட மலையகத் தமிழரின் இன செறிவை பெரிதும் பாதித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம், 1949 ஆம் ஆண்டு இந்தியர் பாக்கிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம், 1949 ஆம் ஆண்டு தேர்தல்கள் திருத்தச் சட்டம், 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1967 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கல் சட்டம், 1974 ஆம் ஆண்டு ஸ்ரீமா - இந்திரா ஒப்பந்தம், 2012 ஆம் ஆண்டு தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பன மலையகத் தமிழரின் தேசிய இருப்பை கடுமையாக பாதித்துள்ளன.

இந்நிலையில் இன்று மலையக தேசியத்தை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாததாகும். அதற்கு மலையக தேசிய இன அரசியலை முன் நகர்த்த வேண்டியது கட்டாயமாகும். மலையக தேசிய இன அரசியலை முன் நகர்த்துவதற்கு முதலில் மலையகத் தமிழரின் இருப்பை பாதுகாக்கக் கூடிய விதத்திலான இலக்கு அவசியம். அடுத்து இலக்கை அடைவதற்கான கொள்கைகளும், கொள்கைகளை மையப்படுத்தியதான வேலைத்திட்டங்களும் வேண்டும். இவ் வேளைத் திட்டங்களை நீண்டகால குறுகியகால என இருநிலையில் இருத்தல் வேண்டும். வேலைத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய அமைப்பு வடிவமும், அதற்கான ஊழியர்களின் தேவையும் அடுத்து தீர்மானித்தல் வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் அர்ப்பணம் உள்ள தலைமையின் அவசியம் மிகவும் முக்கியமானதாகும். இறுதியாக மலையக தேசிய இன அரசியலை நேர்த்தியான முறையில் முன்னெடுப்பதன் ஊடாக மட்டுமே இன்று மலையக தேசியம் எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்து, அதன் தேசியத்தை முன் நிறுத்த முடியும்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates