பயன்படுத்தப்படாத காணிகள் என்று கூறி சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
காணிகளை பெறுகின்ற வேலையற்ற இந்த இளைஞர்களுக்கு, இந்த காணிகளில் விவசாயம் செய்வதற்காக கடன் வழங்கவும், காணிகளில் பயிரிட நாற்றுகளை,  விதைகளை வழங்கவும், உரவகைகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது.
'இந்த தோட்டப்புற காணிகளையும், கடன் உதவிகளையும் பெறுகின்ற 12,500 வேலையற்ற இளைஞர்கள் பட்டியலில், வேலையற்ற தோட்டப்புற மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனை பேரின் பெயர்கள் இடம்பெறுகின்றன என்பதை  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ் அரசியல்வாதிகள் அறிவார்களா?' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.             
'மலையகத்தில் உழைக்கும் மக்களின் இருப்பை இல்லாது ஒழிக்கும் இனவாத நோக்குடன் முன்னேடுக்கப்படும் எந்தவொரு காணி சுவீகரிப்பு நடவடிக்கையையும் ஜனநாயக மக்கள் முன்னணி, முற்போக்கு தோழமை கட்சிகளுடன் இணைந்து எதிர்த்து போராடும்' என்றும் அவர் தெரிவித்தார். 
இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, 
'இன்று நாவலப்பிட்டி பஸ்பாகே கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட போகில் பாரண்டா தோட்ட குடியிருப்பில் வாழ்ந்துவரும் தோட்ட தொழிலார்களை அப்புறப்படுத்தி அந்த தோட்ட காணிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு எதிராக தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கிவிட்டார்கள். 
எனவே மலையக தோட்டப்புற காணிகளை மீளப்பெற்று அவற்றை, தெரிவு செய்யப்பட்ட  வேலையற்ற இளைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. 
1970 காலகட்டத்தில் மலையகத்தில் நடைபெற்ற காணி எதிர்ப்புக்கு எதிரான தோட்ட தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்நடும்  மீண்டும் இன்று மலையகத்தில் நடைபெற அரசாங்கம் வழி ஏற்படுத்துகின்றதா? நிதி அமைச்சில் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இது சம்பந்தமான உயர்மட்ட கூட்டத்துக்கு அரசில் உள்ள மலையக தமிழ் அமைச்சர்கள் அழைக்கப்பட்டார்களா? 
தோட்டப்புறங்களிலும் காணியும், கடனும் பெறுவதற்கு தகுதிவாய்ந்த வேலையற்ற தமிழ் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பது அரசாங்க உயர்மட்டத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா? இந்த காணிப்பகிர்வு - கடன் வழங்கல் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உடன்பாடு நிலவுகின்றதா? 
இதுபற்றி தாம் அறிந்துகொண்டுள்ள விபரங்களையும்,  தமது நிலைப்பாடுகளையும்  அரசில் உள்ள மலையக கட்சிகள் மலையக இளைஞர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க தயாரா? இந்த கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 
இந்த தோட்ட  காணிகள், வேலையற்ற இளைஞர்களுக்கு  30 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டம் தொடர்பாக, தமக்கு இதுவரை அரசாங்கம் எதுவும் அறிவிக்கவில்லை என தோட்ட முகாமை நிறுவன சங்கத்தின் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார். 
இந்த நடவடிக்கை, தோட்டங்களில் ஏற்கனவே தொழில் செய்து வாழும்  தோட்ட தொழிலாளர்களுக்கும், காணிகளை பெறும் புதியவர்களுக்கும் இடையில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.  
அந்நிய செலவாணியை இந்நாட்டுக்கு  நூறு ஆண்டுகளுக்கு மேல் அள்ளி வழங்கி வரும் மலையக தோட்ட தொழிற்துறையை உருவாக்கிய, மலையக தமிழ் பாட்டாளிகளை புறக்கணித்துவிட்டு  இந்த திட்டம் நடைமுறையாக போகின்றதா? மலையக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ பலத்தை நுவரேலியா மாவட்டத்தில் வெட்டி குறைக்கும் முகமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றதா?
வடக்கில், கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்புக்கு சமானமான மலையக காணி அபகரிப்பு இதுவா? 1970களில் இடம்பெற்ற அநீதியான மலையக காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகி சிவனு லட்சுமணனின் போராட்டத்தை மீண்டும் மலையகம் காணப்போகின்றதா? என்ற கேள்விகள் இன்று மலையக சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன' என்று மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார். 
நன்றி - தமிழ்மிரர்

 
 
 
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...