Headlines News :
முகப்பு » , , , , , » புர்கா தடையின் பிதாமகர்கள்! - என்.சரவணன்

புர்கா தடையின் பிதாமகர்கள்! - என்.சரவணன்


புர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்குவரத்து பஸ்களில் இருந்து இறக்குவதும், பஸ்கள், தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றின் வாசலிலேயே “புர்கா அணிந்து உள்ளே வராதீர்” என்கிற வாசகத்தைக் கொண்ட அறிவித்தல்களை ஒட்டியிருந்ததைக் காண முடிந்தது. புர்கா அணிந்த பெண்கள் கற்களால் தாக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகின. புர்கா அணிந்த பெண்களை சிங்களவர்கள் சண்டித்தனத்துடன் அழைத்து விசாரிக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவின.

முஸ்லிம் பெண்கள் இனி தாம் தொடர் இம்சைக்கு ஆளாக நேரிடும் என்கிற அச்சத்தில் தலையை/முகத்தை மறைக்கும் ஆடைகளைத் தவிர்க்கும் போக்கை காண முடிகிறது. அப்படி அணிந்துசெல்லவேண்டாம் என்று நெருக்கமானவர்களே அறிவுறுத்தும் அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. தொலைகாட்சி செய்தியொன்றில் “எங்கள் பெண்கள் வீட்டுக்குள் அடைந்திருக்கும் நிலைமை உருவாகியுள்ளது.” என்று ஒரு ஆண் கூறுவதை ஒளிபரப்பியிருந்தார்கள்.

26ஆம் திகதி குருநாகல் மேயர் தமது எல்லைக்குள் புர்கா தடையை அறிவித்தார். அதற்கு முதல் நாள் ஜா-எல நகரசபைத் தலைவரும் தமது எல்லைக்குள் புர்காவுக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தார்.

அபாயா, புர்கா, நிகாப் போன்ற பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் ஆடைகள் அணிவதை தடைசெய்யும் சட்டதிட்டங்களை இயற்றும்படி  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள பகிரங்கமாக தெரிவித்து வந்தார். இதனை அமைச்சரவையில் தீர்மானமாக நிறைவேற்ற நிர்ப்பந்தித்தவர்களில் முக்கியமானவர் தலதா அத்துகோரள.

ஏப்ரல் 26ஆம் திகதியன்று நிகழ்ந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான யோசனையை முன்வைத்தபோது பிரதமர், ரணில், மங்கள சமரவீர, ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, மனோகணேசன், அகிலவிராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திராணி பண்டார ஆகியோர் இந்த யோசனைக்கு ஆதரவளித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் பின்னர் பிரதமர் காரியாலயத்திலிருந்து வெளியிடப்பட்ட மறுப்பறிக்கையொன்றில் ரணில் அதனை எதிர்க்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


ஜனாதிபதியின் தடை அறிவித்தல்
ஆனால் அதன் பின்னர் பாதுகாப்பு தரப்பு மற்றும் பொது அழுத்தத்தின் விளைவாகவும் ஜனாதிபதி இந்தத் தடையை அமுலுக்கு கொண்டுவந்தார். ஆனால் அந்தத் தடை நிரந்தரமானதல்ல. 29ஆம் திகதி ஜனாதிபதி அந்தத் தீர்மானத்தை வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் (Gazette Extraordinary No. 2120/5, of April 22, 2019) வெளியிடப்பட்டது, பொதுப்பாதுகாப்பு விதியின் 5வது பிரிவின் 40வது அத்தியாயத்தின் கீழ் அவரசகால சட்ட விதிகளின் படி  அந்த விதிகளைப் பிறப்பித்திருந்தார். பிறப்பிக்கப்பட்ட ஏழு புதிய விதிகளில் நான்காவது விதியில் 32A என்கிற விதி 
32அ. (1) (அ) ஆளொருவரின் ஆளடையாளத்தைக் காண்பதற்கு ஏதேனும் தடங்கலை விளைவிக்கும் ஏதேனும் முறையில் முழுமுகத்தையும் மறைக்கின்ற ஏதேனும் தைத்த ஆடையை, துணியை அல்லது அத்தகைய வேறு பொருளை ஆளெவரும் ஏதேனும் பொது இடத்தில் அணிதலாகாது. 
என்கிறது. அந்த விதியின் கீழ் “பொது இடம்”, “முழு முகம்”, “பொது வீதி” என்பவற்றுக்கான வியாக்கியனானமும் கூறப்பட்டுள்ளது.
“முழு முகம்” என்பது, காதுகளுட்பட ஆளொருவரின் முழு முகமும் என்று பொருள்படும்”
என்று வரையறுக்கிறது.


இது ஒரு நிரந்தரத் தடை இல்லை. அவரசகால சட்டத்தின் கீழ் தான் இது கொண்டுவரப்பட்டிருக்கிறது. அவரசகால சட்டம் அமுலில் இருக்கும் காலங்களில் இந்த விதிக்கு வலிமை இருக்கும். மக்களின் சாதாரண பொது உரிமைகளை கட்டுப்படுத்தும் பல நூற்றுக்கணக்கான விதிகளைக் கொண்ட அவசரகால சட்டத்தை கடந்த பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் அதிகமாக அனுபவித்து வந்த அதே நேரம் நாட்டு மக்கள் அனைவருமே அவ்விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

மே 1ஆம் திகதி வெளியான "மவ்பிம" சிங்கள பத்திரிகையில் முதல் பக்கத்தில் "கோட்டையிலுள்ள கடைகளுக்கு "புர்கா தடை" தொடர்பில்லையா?" என்கிற தலைப்பில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இந்த விதிகள் அவசரகால சட்ட காலத்தில் மட்டும்தான் என்பதை அறிந்திருந்தும், இந்த உடைகள் போது இடங்களில் அணிந்துவருவதற்கு மட்டும்தான் தடையேயொழிய விற்பனைக்குத் தடையில்லை என்பதை அறிந்தும் ஊடக நெறியற்று, அறிவற்று முதற் பக்கத்தில் செய்தியிட்டனர். சிங்கள ஊடகங்களைக் கவனித்தாலே போதும் பெரும்போக்கு சிங்கள சிந்தனாபோக்கை நாடிபிடித்தறிய முடியும்.

இன்றைய ISIS அச்சுறுத்தலின் பின் எங்கேயும்-எவராலும்-எப்போதும்-எதுவும்-நிகழலாம் என்பதே எந்த முஸ்லிம் நபர் மீதும் சந்தேகம் கொள்ள வாய்ப்பை விரித்துள்ளது. அதேவேளை இந்த அவசரகால சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிராகப் பாயக்கூடியதல்ல. சகல மக்களுக்கும் எதிராகவும் துஷ்பிரயோகம் செய்யக்கூடியவை. அதை தமிழ் சமூகம் இதற்கு முன்னர் அனுபவித்துள்ளது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் கடற்கரைகளில் சோடியாக காதல்புரிபவர்களை கைதுசெய்வதற்கு சட்டம் இருக்கிறது. சிறுகதைகளை எழுதுபவர்களைக் கூட தண்டிக்க சட்ட விதிகள் இருக்கின்றன. தேங்காய் மூன்றைத் திருடிய சிறுவனைக் சிறையில் அடைக்கவும் நீதி அனுமதித்திருக்கிறது. தேவையேற்படும் போதெல்லாம் சமூக வலைத்தளங்களைத் தடை செய்யவும் சட்டம் இடமளிக்கிறது. ஆனால் இன்றைய இந்த நிலைமைக்கு பிரதான காரணியான ISIS, NTJ போன்ற இயக்கங்களைத் தடை செய்ய சட்டத்தில் இடமில்லை என்கிறது அரசு.

ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்; கண்களைத் தவிர அனைத்தையும் மூடிக்கொண்டு போகும் ஆடைகளைப் பயன்படுத்தித் தான் பல நாசகார சட்டவிரோத ஆயுதங்களையும், சட்ட விரோத போதைப்பொருள்களையும் கடத்தி வந்தார்கள் என்கிற பேரினவாத பிரச்சாரம் வலிமை பெற்றிருக்கிறது. இப்படி அணிந்தவர்களால் எந்த பேராபத்தும் எப்போதும் நிகழக்கூடும் என்கிற பிரச்சாரம் வலுத்திருந்தது. பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கமராக்களில் இருந்து புர்கா அணிந்தவர்கள் மாத்திரம் தப்பித்து வருவதாக அவர்கள் கோஷமிட்டுக்கொண்டே இருந்தார்கள். நாளடைவில் பாதுகாப்பு தரப்பும் இந்த வாதங்களை முன்வைக்கத் தவறவில்லை. எனவே பாதுகாப்பைக் காரணம் காட்டி இந்தத் தடையைக் கொண்டு வருவது அவர்களுக்கு சாத்தியமாயிற்று. பேரினவாதத்தின் நீண்டகால கோரிக்கை இலகுவாக கைகூடியிருக்கிறது.


கன்னியாஸ்திரிகளுக்கும் தடை?
முஸ்லிம் பெண்கள் முகம் தலை, காது என்பவற்றை மறைக்கும் வெவ்வேறு வடிவங்கள் உலகெங்கும் கைகொள்ளப்படுகின்றன. ஷய்லா, ஹிஜாப், அல்-அமிரா கில்மர், சதர், நிக்காப், புர்கா, இவை அனைத்துமே அடிப்படையில் தலை, காது என்பன மூடப்பட்டிருக்கும். இப்போது நடைமுறைக்கு வந்துள்ள தடையானது புர்காவுக்கு மட்டுமல்ல இந்த அத்தனைக்கும் தான். இந்தத் தடையில் எங்குமே மேற்படி வடிவங்களில் எவை என்பது பற்றி நேரடியாக எதையும் குறிப்பிடாதபோதும் இஸ்லாமிய பெண்கள் அணியும் மேற்படி அனைத்து வகை வடிவங்களும் தடைக்குள்ளாகியுள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல இந்த விதிகளின் பிரகாரம் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் தலையை மறைக்கும் சீருடைகளுக்களும் தன்னியல்பாக உள்ளடங்குகின்றன. ஏனென்றால் அவர்களும் தலையுடன் சேர்த்து காதையும் மறைக்கும் சீருடையைத் தான் அணிகிறார்கள்.

இதற்கிடையில் “இலங்கை மோட்டார் சைக்கில் சங்கம்” ஏப்ரல் 30 அன்று விடுத்த ஊடக அறிக்கையில் புதிய விதிமுறை ஏற்படுத்தியிருக்கிற தரப்படுத்தலின் பிரகாரம் முகத்தையும் காதையும் சேர்த்து மறைக்கும் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை அணிவது அவசரகால சட்டத்தின்படி தடையாக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் வீரரத்ன அமரசிங்க இவ்வறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அனுப்பியிருக்கிறார்.

புர்கா  பீதியின் பிதாமகர்கள்
முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத சக்திகளின் பிரபலமான முழக்கங்களில் ஒன்று இந்த புர்காவைத் தடை செய்வது. சிங்கள பௌத்தத்தின் “முஸ்லிம் வெறுப்பரசியல் நிகழ்ச்சிநிரலின் ஒரு அங்கமாக இந்த புர்கா விவகாரம் வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. பொது பல சேனா ஆரம்பித்ததிலிருந்து இந்த முழக்கத்தை சமூகமயப்படுத்தியிருந்தார்கள். இந்த புர்காவுக்கு எதிரான சித்தாந்தத்தை வளர்த்தெடுத்தவர்கள் அவர்களே. சகல சிங்கள பௌத்த இனவாத அமைப்புகளும் அதன்பின்னர் அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தார்கள். ஞானசார தேரரும், அன்றைய பொதுபல சேனா தலைவர் கிரம விமலஜோதி தேரரும் தொடர்ச்சியாக கூட்டங்கள், ஊடக மாநாடுகளை நடத்தி வந்தார்கள். உலகில் புர்கா பாவனையைத் தடை செய்த, கட்டுப்படுத்திய நாடுகளை பட்டியலிட்டுக் காட்டி; ஏன் இலங்கையில் அதனை செய்யாது இருக்கிறீர்கள் என்று அவர்கள் அரசுக்கு நெருக்கடி  கொடுத்து வந்தார்கள்.

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மாத்திரம் புர்கா அணிந்த பெண்கள் மீது பொது இடங்களில் நிகழ்ந்த தாக்குதல்கள், இம்சைகள் என்பன ஊடகங்களில் ஏராளமாக பதிவாகியிருகின்றன. இப்படியான சம்பவங்களைத் தொகுத்து  டீ.பி.எஸ் ஜெயராஜ் (“Goni Billa” Hate Speeches of Bodhu Bala Sena Cause Rise in Attacks on Muslim Women in “Abaya” Attire) என்கிற தலைப்பில் ஒரு விரிவான கட்டுரையையும் 2013 மார்ச் மாதம் எழுதியிருந்தார். அது சிங்களத்திலும் கூட மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

2013 தான் ஹிஜாப், புர்கா போன்றவற்றுக்கு எதிரான மிகப்பெரிய அலை எழுந்த ஆண்டு என்றும் கூறலாம். மார்ச் 17அன்று கண்டியிலும், மார்ச் 24 அன்று பாணந்துறையிலும் பெரும் ஹிஜாப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தது. அதே மார்ச் மாதம் 31ஆம் திகதி கொழும்பு, (ஹைட் பார்க் மைதானம்) களனி, பண்ணல ஆகிய இடங்களில் ஹிஜாபுக்கு எதிராக பொதுக்கூட்டங்களையும் நடத்தியிருந்தது.

(2017ஆம் ஆண்டு தம்புல்லையில் ஞானசார தேரரின் புர்காவைப் பற்றி மோசமான வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் உரை இந்த வீடியோவில். அதற்குக் கிடைக்கும் கரகோசங்களையும் கவனியுங்கள்)

புர்கா, நிகாப் என்பவற்றைத் தடைசெய்யும்படி பொதுபல சேனாவின் செயலாளர் டிலந்த விதானகே 2013 ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவற்றைத் தடைசெய்யக் கோரி இணையத்தளத்தில் ஒன்லைன் கையெழுத்து சேகரிப்பையும் நடத்தினார்கள்.

இதே காலத்தில் “பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஆகியிருக்கும் புர்காவை தடைசெய்வேன்” என்று “சிங்கள ராவய” இயக்கத்திடம் அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியதாக செய்திகளும் வெளியாகியிருந்தன.

30.06.2013 அன்று விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  எம் முஸம்மில் லங்காதீப பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில்.. (இவர் பேரினவாத அணியில் ஒரு அங்கம் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்)  

“இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த முஸ்லிம்களின் கலாசாரமானது இந்து கலாசாரத்தை அடியொட்டிய முஸ்லிம் கலாசாரமாக இருந்துள்ளது. இந்நாட்டு முஸ்லிம்கள் விளக்கேற்றும் பழக்கத்தை கொண்டிருப்பதை இதற்கான உதாரணமாக சுட்டிக்காட்டலாம்... முஸ்லிம்கள் ஆரம்ப காலம் தொட்டே இந் நாட்டின் சிங்கள பாரம்பரிய கலாசாரத்தை அடியோட்டியே தமது முஸ்லிம் கலாசார தனித்துவத்தை பேணி வந்துள்ளார்கள்... 
அக்காலம் தொட்டே முஸ்லிம் பெண்கள் மத்தியில் “சாரி” அணியும் பழக்கம் பிரபலமாக இருந்துள்ளது. அந்த ஆடைமுறையால் இந் நாட்டு சிங்கள சமூக கலாசாரத்துடன் ஒன்றிப்போக கூடிய சந்தர்பமும் கிடைத்தது. அதே வேளை முஸ்லிம்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்த சாரியின் ஒரு பகுதியால் தமது தலையையும் மறைத்துகொண்டார்கள். அதே போல் முஸ்லிம் யுவதிகளுக்கு மத்தியில் சல்வார் கமிஸ் மிக பிரபலமான ஆடையாக இருந்தது, அதன் முந்தானையால் தமது தலையை மூடுவதால் அவர்கள் இஸ்லாமிய தனித்துவத்தையும் பேணி வந்தார்கள்... பிற்காலத்தில் 1980/90  களுக்கு பிறகு மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தொழில் வாய்ப்புகளால் இந் நாட்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் சவூதி அரேபிய ஆடை முறை தீவிரமாக பரவியது... 
மத்தியகிழக்குக்கு பணிக்காக சென்று வந்த பெண்கள் மத்தியில் கருப்பு ஜுப்பா முறையை பின்பற்ற தொடங்கினார்கள். தற்காலத்தில் இந் நாட்டில் வாழும் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்தினரால் பின்பற்றப்படும் இம் மத்திய கிழக்கு ஆடை முறையால் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் ஒரு அநீதி இழைக்கப் பட்டுள்ளது. இப்போது இது நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவும் உள்ளது.
“ஆண்களின் காம இச்சையிலிருந்து பெண்களை பாதுகாப்பது” என்பதற்காகத் தான் என்கிறார்கள். பெண்களின் முகத்தையும் கைகையும் கண்டதும் காமம் வெளிப்படுவது மன நோயாளிகளுக்கல்லாமல் சாதாரணமான மனிதர்களுக்கு அல்ல என்றதையும் நினைவுகாட்ட வேண்டியிருக்கிறது" என்கிறார்
சில முஸ்லிம் அல்லாத பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களையும், முஸ்லிம் ஆசிரியர்களையும் பர்தா, ஹிஜாப் போன்றவற்றுடன் வரவேண்டாம் என்கிற பிரச்சினைகள் எழுந்திருந்ததையும் நாமறிவோம். குறிப்பாக திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி, பதுளை கேகாலை இன்னும் பல இடங்களிலும் பாடசாலைகள் ஹிஜாப் அணிந்து வந்த ஆசிரியர்களை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றம் கேட்டு போகுமாறு கூறிய செய்திகள் சர்ச்சைகளுக்குள்ளாகியிருந்ததையும் நாமறிவோம்.

கோனி பில்லா
புர்கா பற்றிய அதிபீதியை உருவாக்கும் வகையில் இதற்கு “கோனி பில்லா” என்கிற சிங்களச் சொல்லைப் பயன்படுத்தி வந்தார்கள். தலையைத் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுகிற கறுப்புத்துணியால் மூடப்பட்ட கொலைஞரையும் அந்தப் பெயர் கொண்டு அழைப்பார்கள். அதுபோல யுத்த காலத்தில் சில தமிழர்களின் முகத்தை கறுப்புத் துணியால் மூடி கண்கள் மட்டும் தெரியக் கூடிய வகையில் இராணுவம் அழைத்துச் சென்று “ஆள்காட்டி”களாக பயன்படுத்தி வந்தது. அவர்களை “தலையாட்டி” என்றும் அப்போது அழைத்தார்கள். அவர்கள் பேசமாட்டார்கள் இராணுவம் கூட்டிச்சென்று காட்டுபவரை அவர்தானா என்று உறுதிப்படுத்துவதற்காக தலையை மட்டும் ஆட்டி சைகை செய்ததும் சந்தேகநபரை இழுத்துச் செல்வார்கள். அல்லது கொன்றுவிடுவார்கள். அவர்களையும் “கோனி பில்லா” என்று தான் அழைத்தார்கள். சிறு குழைந்தைகளுக்கு பொதுவாக கோனி பில்லா கதைகள் சொல்லி கட்டுப்படுத்தும் வழக்கம் சிங்கள சமூகத்தில் இருக்கிறது.

இவர்கள் சொல்லும் சேதி
பெண்கள் எதை அணிய வேண்டும், நீக்க வேண்டும் என்கிற உடல் மீதான கட்டுப்பாட்டை ஆணாதிக்க அதிகார மையங்களே உருவாக்கி வந்திருக்கின்றன. ஆண்களாலும், ஆணதிகார பண்பாட்டு நிறுவனங்களாலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட உடைக் கட்டுப்பாட்டு கருத்தாக்கங்கள் காலப்போக்கில் பெண்களே அது தமது உரிமை என்று கூறுமளவுக்கு சமூகமயப்பட்டுவிடும். இன்றும் ஆணாதிக்க அதிகார மையங்கள் மெதுவாக இதனை நாங்கள் திணிப்பதில்லை பெண்கள் தாங்களே இது தொடர்பான முடிவை எடுக்க அதிகாரமுடயவர்கள் என்று மெதுவாக திருப்பி விட்டு காலப்போக்கில் பெண்ணின் உரிமையாக, பெண்ணுரிமையாக இப்போது புனைய முயற்சிப்பதை எவரும் அவதானிக்கலாம். இதனை பெண்ணுரிமை முழக்கமாக முன்னெடுக்க ஏனைய மனித உரிமையாளர்கள், பெண்ணுரிமையாளர்கள் தருணத்தில் கைகோர்த்துவிடுகின்றனர்.

அதேவேளை பாதுகாப்பின் பேரில் முகம் மறைப்பு கோரிக்கைக்கு அரசு சட்ட அங்கீகாரம் வழங்குவதென்பது இனவாதத் தரப்பை திருப்தி செய்து ஆசுவாசப்படுத்தும் கைங்கரியமும் தான் என்பதை நாமறிவோம்.



இப்போது ஜம்மியதுல் உலமா முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிகளாக காட்டிக்கொண்டு பொது இடங்களில் பயணிக்கும் போது முகத்தை மூடும் வண்ணம் அணியப்படும் புர்கா, நிகாப் போன்றவற்றை அணிய வேண்டாம் என முஸ்லிம்களுக்கு 25ஆம் திகதி அறிவித்திருந்தது. இந்த தீர்மானத்தை எடுத்ததில் பெண்களின் பங்கு என்ன?

முஸ்லிம் அரசியல் தலைவர்கள், மௌலவிமார், மதத் தலைவர்கள், கட்சிகள், அமைப்புகள் என்பவற்றின் தலைவர்களும் இப்போது நிறையவே விட்டுக்கொடுப்பையும், சமரசத்தையும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அரசியல் தலைவர்கள் இந்த isisக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை வலிந்து நிரூபிப்பதற்காக முன்கூட்டியே  சில, பல விடயங்களில் தாமாக  முன்வந்து அறிக்கை விடுப்பதை இந்த நாட்களில் காணமுடிகிறது. அவர்களில் பலர் இந்த ஆடை விடயத்தில் “நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு” தமது இறுக்கத்தைத் தளர்த்தத் தயார் என்று ஒப்புதல் அளிக்கும் சூழலைக் காண்கிறோம்.

புதிய அவசரகால விதி வருமுன்னரே மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் சாலி கடந்த ஏப்ரல் 26 அன்று ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போது.
“...முகத்தை மறைக்கும் இந்த ஆடை எமது நாட்டுக்கு பொருந்தாத ஒன்று. எமது பாட்டிமார் தமது சேலைகளால் தான் தலையும் போர்த்திக்கொண்டார்கள். அந்தப் பரம்பரையில் தான் நாம் வந்தோம். வெளிநாட்டில் உள்ளவர்கள் முகத்தை மூடிக்கொண்டார்கள் என்பதற்காக நாமும் மூடத் தொடங்கியதால் எழுந்த பிரச்சினை தான் இது. வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்குச் சென்ற பெண்கள் திரும்பிவரும்போது கருப்பு உடைகளை அணிந்து வந்தார்கள். அதை எமது உடை வடிவமாக்கிக்கொண்டோம். இதனால் தான் நாசமாய்ப் போனோம். கருப்பு உடையை அணியாதீர்கள் என்றோம் கேட்கவில்லை. முகத்தை மூடாதீர்கள் – என்றோம் கேட்கவில்லை. நான் இப்போது “நிகாப் அணிந்து எந்தவொரு மாணவியும் பாடசாலைக்கு வரமுடியாது, அதுபோல நிகாப் அணிந்து எந்த தாய்மாரும் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கவேண்டாம்” என்று சகல பாடசாலைகளுக்கும் அறிவிக்கும்படி எனது கல்விச் செயலாளருக்கு ஆணையிட்டிருக்கிறேன். இந்த நிலைமையை முன்கூட்டியே தடுப்பதற்காக எமது மதத் தலைவர்களிடம் எத்தனையோ முறை கேட்டுக்கொண்டிருந்தோம். அவர்கள் செவிகொடுக்கவில்லை. போதாததற்கு கருப்பு ஆடைகளுக்குப் பதிலாக வேறு நிறங்களில் ஆடைகளை நாங்களே விநியோகித்தோம். அப்படியும் மாறவில்லை....” என்றார் 
மறைந்த முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் மக்களின் பெருந்தலைவராக போற்றப்படும் அஷ்ரப் அவர்களின் பாரியாரும் முன்னாள் அமைச்சருமான பேரியல் அஷ்ரப் சிரச தொலைகாட்சி நடத்திய “பெத்திகட” எனும் நிகழ்ச்சியில் 29.04.2019 அன்று சிங்களத்தில் வழங்கிய உரையாடலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“தமது முகங்களை அந்நியர்களுக்கு காட்டுவதை விரும்பாமல் சுயவிருப்பில் தமது முகங்களை மூடிக்கொள்ளும் பெண்களை நான் அறிவேன்... அதே வேளை சாரியொன்றை அணிந்ததும்; தேவைப்படும் இடங்களில் சாரியை தலையில் போர்த்திக்கொள்ளும் வழிமுறையே ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்தது. வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பின்பற்றும் மத வழிமுறைகளை இங்கே கொண்டுவந்து சேர்த்தார்கள். இலங்கையின் கலாசாரத்துக்கு ஒத்துவரக்கூடிய இஸ்லாம் மார்க்கம் நம்மிடம் இருந்ததே. நாடு சென்றதும் பள்ளிவாசல்களை கட்டுங்கள் என்று வெளிநாட்டிலிருந்து ஏராளமான பணம் வழங்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு தேவையானவற்றை செய்வதை விட அவர்களுக்கு கிடைத்த பணத்தை எப்படி செலவு செய்வது என்கிற பிரச்சினை எழுந்தது. எங்கெங்கும் பள்ளிவாசல்களைக் கட்டிக் குவித்தார்கள். நாம் அவற்றைக் கவனிக்கத் தவறியிருந்தோம். பிரிவுகள் உண்டாகின அவற்றுக்கென தனியான வழிமுறைகள் உருவாயின. வெள்ளிக்கிழமைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை இருந்தால் தான் ஜூம்மாவை நடத்தலாம் என்கிற ஒரு விதி இருந்தது. அந்த விதிகளைத் தாண்டினார்கள்...”
முஸ்லிம்களுக்கு எதிரான பொதுப்புத்திகளின் அபிலாசைகளுக்கு தீனியாக இந்த சம்பவம் வந்து முடிந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சிநிரலின் ஒரு அங்கம் ஓரளவு நிறைவேறியிருக்கிறது. அந்நிகழ்ச்சிநிரல் பட்டியலில் இனி அடுத்தடுத்து நிறைவேறவிருப்பவை என்ன என்பதே முஸ்லிம் சமூகத்திடம் எஞ்சியிருக்கும் பீதி.

நன்றி - அரங்கம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates