Headlines News :
முகப்பு » , , , » கோத்தாவதாரம் - என்.சரவணன்

கோத்தாவதாரம் - என்.சரவணன்


ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை வடிவமைப்பதில் இலங்கையில் வல்லவர்களாக இருப்பவர்கள் மகிந்தவாதிகள் தான்.

ஈஸ்டர் படுகொலையில் அதிக அரசியல் லாபம் ஈட்ட முயற்சித்துக்கொண்டிருப்பவர் கோத்தபாய. அதிக அரசியல் லாபம் அடையக் கூடியவரும் அவர் தான்.

பிரதான கட்சிகள் இன்னமும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதிலும், வெளிப்படையாக பகிரங்கப்படுத்துவதிலும் ராஜதந்திரத்துடன் அணுகுவதாக அக்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. எதிரி தமது வேட்பாளரை அறிவித்ததும் அதற்குரிய சரியான சதுரங்கக் காயை தாம் நகர்த்துவோம் என்கிற வகையில் தான் மூன்று பிரதான சக்திகளும் அணுகிவருகின்றன. ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொது ஜன பெரமுன ஆகிய பிரதான அரசியல் சக்திகள் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அறிவிப்பதில் தயக்கம் காட்டுகின்றன என்றால் அதன் அர்த்தம் மூன்று கட்சிகளும் தத்தமது வெற்றியில் சந்தேகம் கொண்டிருப்பது தான் காரணம்.

இன்னொரு வகையில் கூறப்போனால் எவருக்குமே தமது வேட்பாளர் குறித்த முழு நம்பிக்கை இல்லை என்பது தான். தமது பலத்திலும் நம்பிக்கையில்லை. எதிரியின் பலவீனத்திலும் நம்பிக்கையில்லை என்கிற கதை தான் இது.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ராஜபக்சவாதிகளின் தெரிவு கோத்தபாயவாக இருக்குமென்று தெரிகிறது. நீண்ட காலத்துக்கு ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையை ஆண்டுகொண்டிருக்கலாம் என்கிற கனவு  2015இல் கலைந்தது.


ராஜபக்ச குடும்பத்துக்கு ஆப்பு
19வது திருத்தச்சட்டத்தில் முக்கிய மூன்று திருத்தங்கள் ராஜபக்ச குடும்பத்தின் எதிர்கால கனவை நாசமாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு.
  • ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் தடவை ஜனாதிபதியாக ஆக முடியாது. அதாவது மகிந்தவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது.
  • இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதாவது கோத்தபாய, பசில் ஆகிய மகிந்தவின் இரு சகோதர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
  • மகிந்தவின் மகனை ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவைக்கவும் முடியாது. ஏனென்றால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 35 வயதைத் தாண்டியிருக்கவேண்டும் என்பது அரசியலமைப்பு விதி. 2015 வரை வயதெல்லை 30ஆக இருந்தது. 1986இல் பிறந்த நாமல் ராஜபக்ச 35 வயதைக் கடக்க 2021 ஆக வேண்டும். 2019 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் பங்குபெறமுடியாது. அதாவது 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தான் பங்குபெறலாம். அல்லது 2021குப் பின்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடம் ஏற்படவேண்டும் வேண்டும். இந்த இடைக்காலத்துக்குள் “ராஜபக்சவாத”த்துக்கான மக்கள் மவுசுக்கு என்ன நிகழும் என்றும் தெரியாது.
புதிய அரசியலமைப்பு விதிகள் ராஜபக்சவாதிகளின் அந்த கலைந்த கனவை சட்ட ரீதியில் உறுதிசெய்தது. நாமல் போட்டியிடும் வரையாவது இலங்கையின் அரசியலில் பெரும்போக்கு சக்தியாக தம்மை தக்கவைத்துக்கொள்ள பல தந்திரோபாயங்களை இயக்கியாகவேண்டும். அதுமட்டுமல்ல நாமலை மகிந்த அளவுக்கு வசீகரமான (Charismatic) தலைவராக மாற்றிவிட முடியுமா என்பதெல்லாம் அரசியல் களத்தில் நடக்கின்ற விவாதங்கள்.

மகிந்தவுக்கு பசில், சமல் ஆகியவர்களிடம் இருக்கின்ற நம்பிக்கை கோத்தபாயவின் மீது இல்லை என்பதை சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியே வந்துள்ளன. ஆனாலும் ராஜபஷ குடும்பத்தினருக்கு எதிரான பல்வேறு சட்ட சிக்கல்களில் இருந்தாவது தப்பியிருந்தால் போதுமானது என்பதே அவர்களின் குறைந்தபட்சத் தேவை. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கிற கதை தான்.
வாசுதேவவின் பல்டியின் பின்னால்
மகிந்த முகாமின் மூத்த முக்கியஸ்தராக கருதப்படும் வாசுதேவ நாணயக்காரவின் நேர்காணல் ஒன்று கடந்த ஏப்ரல் 20 அன்று லங்காதீப பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அந்த நேர்காணலில் பெரும்பகுதி கோத்தபாயவின் வருகை பற்றியதாகவே அமைந்திருந்தது. வாசுதேவ நாணயக்கார ஆரம்பத்திலிருந்தே கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குவதற்கு பகிரங்கமாக மேடைகளிலும், ஊடகங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்த முக்கியமானவர்.

ஆனால் அந்த நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் கண்டிருப்பது தெரிவிக்கிறது. மகிந்த தரப்பின் கட்சியான பொதுஜன முன்னணியின் முக்கிய பேச்சாளரான அவர் “நான் சார்ந்த முகாம் எடுக்கும் தீர்மானத்துக்கு நானும் இணங்க வேண்டியிருக்கிறது.” ஆனால் கோத்தபாய பற்றிய எனது கருத்தில் மாற்றமில்லை என்கிறார்.
“நான் ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். கோத்தபாய என்பவர் மக்கள் மத்தியில் இருந்து உருவான ஒரு தலைவர் இல்லை. மக்களோடு இருந்தவரும் இல்லை. மக்களின் உணர்வுகளை அந்தளவு புரிந்தவரும் இல்லை. ஒருவகை இராணுவத்தனம் தான் அவரிடம் இருக்கிறது. அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவர் எப்படி இராணுவத்தனத்துடன் இயங்கினார் என்பதை கண்டிருக்கிறேன். பரந்துபட்ட மக்கள் அபிலாஷையின் பாத்திரமாக அவரால் ஆக முடியாது....” என்கிறார்.
“கோத்தபாயவுடன் நேரடியாகவே இது பற்றி தெரிவித்திருக்கிறேன், அப்போது அவர்; முன்னர் நீண்ட காலமாக இராணுவச் சேவையில் இருந்த காலத்தில் உருவான உணர்வுநிலையும், அரச அதிகாரியாக இயங்கிய விதத்திலும் பார்க்க தற்போது மாற வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டார். புதிய பாத்திரத்துக்கு ஏற்றார்போல அவர் மாறுவதாக ஒப்புக்கொண்டார்.”
“உங்கள் மச்சானும் போட்டியாளராக வாய்ப்பு உண்டல்லவா?” என்கிற கேள்விக்கு
“ஆம். என் மச்சான் விக்கினேஸ்வரனின் பெயரும் பேசப்படுகிறது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் அல்லவா. மச்சான் உறவு வேறு பக்கம் இருக்கட்டும். ஆனால் நாங்கள் இரு எதிர் பக்கங்களில் இருக்கிறோம்.” என்றார்.
சமல் ராஜபக்சவையே வாசுதேவ நாணயக்காரவின் தனிப்பட விரும்புகிறார். அந்தப் பேட்டியில் கூறியது போல. “சமல் என்னிடம் கற்ற மாணவன். நமது கருத்தோடு ஒன்றி இருக்கும் இடதுசாரி குணமுடையவர்.” என்கிறார் வாசுதேவ.
“கோத்தபாயாவைப் போலவே ஜனாதிபதி வேட்பாளராக வாய்ப்புள்ள சமல் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடலை நடத்தப் போகிறோம்” என்கிறார்.
தெரண நேர்காணல்
29.04.2019 அன்று இரவு தெரண தொலைகாட்சி சேவையில் 360 நிகழ்ச்சியில் ஒன்றரை மணித்தியாலம் கோத்தபாயவின் நேர்காணலொன்றை ஒளிபரப்பினார்கள். நேர்கண்டவர் தில்கா.

இந்த நேர்காணலில் தான் முதன்முதலில் கோத்தபாய அமெரிக்க குடியுரிமையை திருப்பிக்கொடுக்கும் பணிகள் 99வீதம் முடிந்துவிட்டதென்றும், இனி தான் இலங்கைப் பிரஜை என்றும் கூறினார்.

இந்த நேர்காணலில் ஒரு அரசியல் தலைவரைப்போல அவரால் பதிலளிக்க இயலாமல் போனது உண்மை. அதிக எச்சரிக்கையுனும் ராஜதந்திரத்துடனும் பதிலளிப்பதாக எண்ணிக்கொண்டு ஆறுதலாகவே பதிளிக்க முடிந்தது. கேட்கும் கேள்விகளுக்கு வேகமாக பதிலளிக்க முடியவில்லை. சில கேள்விகளுக்கு ஆத்திரப்பட்டத்தையும் அவதானிக்க முடிந்தது.
“உங்கள் ஆட்சிகாலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இன்னும் சில இனவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்து வளர்த்து வந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றவே?”
என்கிற கேள்வியின் போது அவரது உண்மை ஆத்திர முகத்தை அடக்கிக்கொள்ள அவர் முயற்சித்ததை கண்ணுற முடிந்தது.
“இப்படியான நிகழ்ச்சியில் இந்தளவு கீழ்த்தரமான நபர்களின் மோட்டுத்தனமான குற்றச்சாட்டுக்களில் கவனத்தை செலுத்தாமல் பிரயோசனமாவற்றில் செலவழியுங்கள்”
என்றார் தில்காவிடம்.
“புலிப் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என்று உலகமே கூறியபோது எங்கள் திறமையாலும், திட்டமிடலாலும் குறுகியகாலத்தில் முழுமையாக அழித்தொழித்தோம்.” என்கிறார்.
கோத்தபாயாவுக்கு எதிரான ஊழல், ஆட்கடத்தல், படுகொலை போன்ற விசாரணைகளில் இருந்து தப்ப தனக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தல் என்று கருதப்படுவதால் தனக்கான தந்திரோபாய வியூகத்தை வினைத்திறனுடன் வகுத்துத் தான் ஆகவேண்டும். 

ராஜபக்ச முகாமில் உள்ளவர்களிலேயே சிங்கள பௌத்த சக்திகளின் ஆதரவையும், பலத்த எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பவர் கோத்தபாய ராஜபக்ச தான். போர்வெற்றி போதையில் இருந்து இன்னும் மீளாதவர்கள் அனைவரும் கோத்தபாயவை எதிர்கால மீட்பராகவும் கருதுவதில் ஆச்சரியமில்லை.

சுதந்திரக் கட்சியை காலப்போக்கில் தமது நிகழ்ச்சிநிரலின் கீழ் சரணடைய வைத்துவிடலாம் என்று மகிந்த முகாமினர் கருதுவது போல; சுதந்திரக் கட்சியினரும் தாம் ஒரு நீண்ட வரலாற்றை உடைய பிரதான கட்சியென்றும் தம்மிடம் இருந்து வெளியேறி இயங்கும் அதிருப்தியாளர்களின் நிகழ்ச்சிநிரலுக்குக் கீழ் இணங்குவதானது தமது கட்சியின் இறைமையையும், கௌரவத்தையும் பாதிக்கும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தமது வேட்பாளரை கட்சி தான் தீர்மானிக்கும் என்று கூறி வருகின்றனர்.

கோத்தாவின் புலனாய்வு
இந்த நிலையில் தான் ஈஸ்டர் படுகொலைகள் அரசாங்கத்தை நன்றாக பலவீனப்படுத்தியிருப்பதுடன் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு குறித்த உரையாடல் தேசத்தின் பிரதான மைய பேசுபொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. கோத்தபாயவின் இராணுவவாத நிர்வாகத் திறமையால் தான் இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்கிற பிரச்சாரத்தை ராஜபக்சவாதிகள் மட்டுமல்ல ராஜபக்சவாதிகளின் நேரடி/மறைமுக ஆதரவு ஊடகங்கள் அனைத்துமே மேற்கொண்டு வருகின்றன. பௌத்த சங்கங்களும் அதையே வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளன. கோத்தபாயவை சுற்றி மீண்டும் ஒரு அலை உருவாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பைப் பற்றிய கடும் விமர்சனங்களை ஒரு அனுபவஸ்தர் என்கிற பந்தாவுடன் வெளிப்படுத்திவருகிறார்.

ஏப்ரல்  28 அன்று திவயின பத்திரிகையில் வெளியான கோத்தபாயவின் நேர்காணலில் ஈஸ்டர் தாக்குதல் குறித்தும், புலனாய்வுப் பிரிவை புணரமைப்பது பற்றியும் பலவற்றை விபரிக்கிறார்.

ரணில், மைத்திரி மீது பழியை போட்டு அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் கோத்தபாய; தான் இப்போது ஆட்சியில் இல்லாததால் இலகுவாக  இப்படியான பழிகளைப் போட முடிகிறது. புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர்களை எல்லாம் சிறையில் தள்ளிவிட்டு எப்படி பாதுகாப்பை நிலைநாட்டலாம் என்று பகிரங்கமாக அந்தப் பேட்டியில் கோத்தபாய விமர்சிக்கிறார்.

இலங்கையின் புலனாய்வுத் துறையில் கிட்டத்தட்ட 12,000 பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு சில மூலாதாரங்கள் 20,000பேர் என்கின்றன. கடந்தகாலத்தில் குற்றங்கள் புரிந்தமை தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தவர்களில் 48 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அல்லது தொடர்ந்து விசாரணையின் கீழ் இருக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் 7 பேர் மாத்திரம் தான். அப்படி இருக்கும்போது பெருந்தொகை புலனாய்வாளர்கள் சிறையில் இடப்பட்டிருக்கிறார்கள் என்கிற தர்க்கம் யாரை திசைதிருப்ப முற்படுகிறது.

இப்போது சிறையில் வைக்கப்பட்டிருக்கும் 7 பேரும் 11 மாணவர்களை  கப்பத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் இருப்பவர்களே தவிர நாட்டுக்கு சேவைசெய்ததால் தண்டனை அனுபவிப்பவர்கள் அல்லர்.

மேலும் சிறைக்கு வெளியில் விசாரணையின் கீழ் இருக்கும் 48 பேரும் யார்? லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தது, பிரகீத் எக்னேளிகொடவை காணாமல் ஆக்கியது, ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தது, உப்பாலி தென்னகோனைத் தாக்கியது, பொத்தல ஜயந்தவை கடத்திச் சென்று கை கால்களை உடைத்தது, ரத்துபஸ்வல போராட்டத்தின் போது படுகொலை செய்தது, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 27 பேரை கொலை செய்தது போன்ற சம்பவங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவர்கள்.

புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தவேண்டும் என்கிற பேரில் இந்த குற்றவாளிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதா கோத்தபாயவின் கோரிக்கை. மேற்படி சம்பவங்கள் சிலவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கோத்தபாயவும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.

தன்மீதான வழக்குகளில் இருந்து தன்னைத் தப்பவைக்க இப்போது கோத்தாவுக்கு அதிகாரம் அவசியப்படுகிறது. ‘மகிந்த குடும்ப’ ஆட்சியில் தம்மால் குறுக்குவழியில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

மேற்படி 48 பேரும் கைது செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் கூட சம்பளம் பெற்றவர்கள். பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டவர்கள். இந்த வழக்குகளில் அரச தரப்பு சாட்சிகளாக மாறிய புலனாய்வுத் துறை உறுப்பினர்கள் எவருக்கும் அப்படி எந்தவொரு பதவியுயர்வும் வளங்கப்படாதவர்கள் என்கிறார் சிங்கள அறிஞரான காமினி வியங்கோட.

விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் இருந்து கோத்தபாய தப்பியது புலனாய்வுப் பிரிவின் திறமையால் அல்ல. ஜேர்மன் தயாரிப்பான குண்டு துளைக்காத BMW வாகனத்தால் தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார். இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை இராணுவத் தலைமையகத்தில் வைத்தே தற்கொலை தாக்குதல் நடத்திய போது கோத்தபாயவின் புலனாய்வுப் பிரிவு தான் இருந்தது. ஒரு நாட்டின் இராணுவத் தளபதியை இராணுவத் தலைமையகத்தில் வைத்தே தாக்கிய சம்பவம் இலங்கையில் மட்டும் தான் நிகழ்ந்திருந்தது.

இதைவிட கோத்தபாயவின் அன்றைய புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்தவிதாரண. அவர் ஒரு தலைசிறந்த புலனாய்வாளர் என்கிறார் கோத்தபாய. கோத்தபாய இராணுவத் தலைமையகக் காணியை ஷங்கிரிலா ஹோட்டலை அமைப்பதற்காக விற்றபின்னர் அங்கு உருவான ஷங்கிரிலா ஹோட்டலின் பாதுகாப்புக்கு பொறுப்பாக மிகப் பெரிய சமபளத்துடன் நியமிக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்தவிதாரண. அப்பேர்பட்ட ஹோட்டலில் தான் ஈஸ்டர் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது என்றால் கோத்தபாயவின் வாய்ச்சவடாலை என்னவென்பது. ஹோட்டல்களில் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் பொறுப்பில்லை மாறாக அவர்களின் சொந்தத் தனியார் பாதுகாப்பு பிரிவினரே என்பதை நாமறிவோம்.

சிங்கள பௌத்த வாக்கு வங்கி
கோத்தபாய தன்னை ஒரு புது அவதாரமாக உருவெடுத்தாலும் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை தன்னால் வெல்ல முடியாது என்பதை கணித்தே வைத்திருக்கிறார். எனவே குறைந்தது ஏனைய பிரதான கட்சிகளுக்கு செல்லக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை வென்றெடுப்பதே முக்கிய இலக்காக வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. எனவே சிங்கள பௌத்த வாக்கு வங்கியை திருப்திபடுத்தக் கூடிய முழக்கங்களையும், வாக்குறுதிகளையும் தான் கோத்தபாய வைக்க முடியும். 

கோத்தபாய சமீபத்தில் ஒரு நேர்காணலில் “எனது வெற்றிக்கு சிங்கள வாக்குகளே போதுமானது” என்கிற ஒரு கருத்தை வெளியிட்டிருந்ததையும் கவனிக்க வேண்டும். அதாவது சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையில் தனது வாக்குறுதிகளோ, முழக்கங்களோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தான் அவர் இன்னொரு வடிவத்தில் வெளியிட்டிருந்தார் எனலாம்.


சம்பிக்கவின் கணிப்பு
பாட்டலி சம்பிக்க ரணவக்க எப்போதும் அரசியலிலும், நிர்வாகத்திலும் கணித சூத்திரங்களை பிரயோகித்துக்கொண்டிருப்பவர் நாம் கண்டிருப்போம்.  அவரின் கணிப்பின் படி ஜனாதிபதித் தேர்தலில் சராசரியாக 65-70 லட்ச வாக்குகளைப் பெரும் ஒருவர் தான் வெல்ல முடியும் என்றும் போது ஜன பெரமுன 49 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுவது கடினம் என்றும் கூறுகிறார். 

அவர் இரு பிரதான வேட்பாளர்களை மனதில் இருத்தியே கணித்திருக்கிறார். இறுதியாக நடந்த  உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சியும் 50 வீதத்துக்கு கிட்டிய மொத்த வாக்குகளைப் பெறவில்லை. வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன கூட 40.47%வீத வாக்குகளைத் தான் பெற்றது. ஐ.தே.க. 29.42% ஐ மட்டும் தான் பெற்றது.

செல்லுபடியாகும் 135-140 லட்ச வாக்குகளில் 50% வீதத்துக்கு அதிகமான வாக்குகளை எவரும் பெறப்போவதில்லை என்பது தெரிகிறது. அப்படி நேரும் போது முதல் வாக்கெடுப்பின் பின் போது அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இருவரை மட்டும் எடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட வாக்குகளின் இரண்டாம் தெரிவை தனியாக எண்ணினால் அது மகிந்த அணிக்கே சாதகமாக அமையக் கூடும் என்று சிங்கள ஊடகங்கள் கணிக்கின்றன. சுதந்திரக் கட்சியும், மகிந்த அணியினரும் இரண்டாம் தெரிவை ஐ.தே.க வுக்கு போகாதபடி பார்த்துக்கொள்வதில் உடன்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நேரும் பட்சத்தில் ஐ.தே.க.வுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு என்றே கணிக்க முடிகிறது. அதாவது கோத்தபாய களத்தில் இறங்கும்பட்சத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருத இடமுண்டு. இந்த தைரியத்தில் தான் தனது வெற்றிக்கு சிங்கள வாக்குகள் போதுமானது என்று கோத்தபாய துணிச்சலாக கொக்கரிப்பதை காண்கிறோம்.

கோத்தாவின் புதிய உடல்மொழி
இப்போதெல்லாம் கோத்தபாய செயற்கையான புன்னகையுடனேயே எங்கெங்கும் போஸ் கொடுப்பதை நாம் கண்டிருப்போம். அதிகமாக பன்சலைகளுக்கு போய் பௌத்த பிக்குமார்களின் ஆசியை பெறுவதை ஊடகங்கள் பெருப்பித்துக் காட்டி வருகின்றன. உடைகள் கூட வெளிர் நிற ஆடைகளைத் தெரிவு செய்கிறார். கடுமையான கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்க முயல்கிறார். கொடுங்கோலன் என்கிற உருவகத்தை நீக்க அதிக பிரயத்தனத்தை மேற்கொள்வதை அவரை தொடர்ந்து அவதானித்து வந்தவர்களால் உணர முடியும்.

அமெரிக்க பிரஜையாகிப்போன ஒருவர், குடும்பத்தோடு அமெரிக்காவில் இடம்பெயர்த்தவர், சொத்துக்களை அமெரிக்காவுக்கே கொண்டுபோய் சேர்த்துவிட்டவர் கோத்தபாய. அப்பேர்பட்ட ஒருவரின் தேசப்பற்றை எந்த கேள்வியுமில்லாமல் சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அத்தனைக்கு மேலும் கோத்தபாய தன்னை சிங்கள பௌத்தர்களின் நம்பகமான சக்தியென்கிற புனைவில் வெற்றிபெற்றிருக்கிறார் என்று தான் அர்த்தம். பத்தாண்டாகியும் யுத்த வெற்றிக் களிப்பின் போதையில் இருந்து மீளவில்லை என்று தான் அர்த்தம்.
கோத்தாவின் இராணுவவாதம், அராஜகம், ஊழல், குடும்ப அரசியல் என்பவற்றை இந்த நாடு ஏற்கெனவே கண்டு அனுபவித்துவிட்டது. பெரும்பான்மை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் “யுத்தத்தை வெற்றிகொண்ட” நவீன துட்டகைமுனுவாக கொண்டாடி மேற்படி தவறுகளை மன்னிக்கவோ, கண்டும்காணாதுவிடவோ கூடும். சிறுபான்மை மக்களுக்கு அப்படி என்ன தேவை இருக்க முடியும்.

இலங்கையின் ஊடகச் சந்தை என்பது தேசியவாதத்தை சந்தைபடுத்தும் துறையாகத் தான் வளர்ந்துவிட்டிருக்கிறது. தேசியவாதத்தை எந்தளவு இனவாதம் கலந்தோ, அல்லது பாசிசம் கலந்தோ விற்பது என்பதைப் பொறுத்து அவர்களின் மூலதனம் காக்கப்படுகிறது. பன்மடங்கு பெருப்பிக்கப்படுகிறது. மக்களின் சிந்தனையை வழிநடத்துவதில் ஊடகத்தின் வகிபாகத்தை அறிந்த ஆதிக்க சக்திகள் எந்த ஊடகத்தையும் விட்டுவைப்பதாகத் தெரியவில்லை.

இந்த ஊடகங்கள் அனைத்துமே கோத்தபாயவை பாதுகாக்கும் அரண்களாக மட்டுமல்லாது, கோத்தபாயவை ஒரு மீட்பராக உருவகித்து வருகின்றன. இவை அனைத்துமே இனவாத சக்திகளின் புகலிடமாக இருப்பது ஒன்றும் தற்செயலல்ல.

கோத்தபாயவின் இன்றைய எழுச்சி கோத்தபாயவின் பலம் அல்ல. அது ஆளுங்கட்சியின் பலவீனம். அந்த பலவீனத்தை அப்பட்டமாக அம்மனப்படுத்தியிருக்கிறது ஈஸ்டர் தாக்குதல்கள். அந்த பாதிப்புகள் தான் கோத்தபாயவுக்கு சிறந்த அவகாசத்தையும், வசதியையும், வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் சிங்கள பௌத்த சூழலைப் பொறுத்தளவில் கோட்டபாய மீட்பராகிறார், மகிந்த இரட்சகராகிறார், ஞானசாரர் ராஜகுருவாகிறார், சரத் பொன்சேகா தீர்க்கதரிசியாகிறார். கோத்தபாயவை மையப்படுத்திய கோத்தாவதாரம் கட்டமைக்கப்பட்டு உயிர்கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆபத்தை பலரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

நன்றி - தினக்குரல்


Share this post :

+ comments + 1 comments

8:31 AM

மிக அருமையான ஆய்வு - சண்டாளன் கோதபாய நன்றாக காய் நகர்த்துவது தெரிகிறது.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates