இது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்டு இந்த ஆண்டு. அவரின் “புத்தம் சரணம் கச்சாமி” பாடலை கேட்காத இலங்கையர் அரிது. இந்த நாட்களில் முஸ்லிம்கள் எதிர்கொள்கிற நெருக்கடிகள் மத்தியில் மொகிதீன் பெக்கை நினைவுக்கு கொண்டுவருவது காலப்பொருத்தம்.
புத்தங் சரணம் கச்சாமி...
இந்தியாவின் ஸ்டூடியோ ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்த மைக்குகளுக்கு முன் ஒரு புறம் 25 இளம் ஆண்களும், மறுபுறம் 25 பெண்களுமாக தயாராக இருந்தனர். அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் போதே இசையமைப்பாளர் அனில் பிஸ்வாஸ் அதனை சற்று நிறுத்திவிட்டு,
“மிஸ்டர் மொகிதீன் பதினான்கரை நிமிடங்களைக் கொண்டது இந்தப் பாடல். நிச்சயமாக ஒரே டேக்கில் உங்களால் பாட முடியுமா?” என்று கேட்டார்.
“இந்தப் பாடலை நான் பாடுவேன்... இல்லையேல் செத்துவிடுவேன்” என்றார் மொகிதீன் பெக். அப்படி உருவானது தான் புத்தங் சரணங் கச்சாமி பாடல். இன்று இன, மத, மொழி பேதமின்றி சகலரும் கொண்டாடும் பாடல் அது.
1960 இல் “அங்குலிமாலா” என்கிற பெயரில் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படத்தை சிங்களத்திலும் வெளியிடுவதற்கான டப்பிங் இந்தியாவில் செய்தபோது நடந்த சம்பவம் அது.
யுத்த வெற்றியின் போது மகிந்த ராஜபக்சவுக்காக பாடப்பட்டு நாடெங்கிலும் பிரச்சாரப்படுத்தப்பட்ட “ஆயுபோவேவா மஹா ரஜானனி” (வணக்கம் மகாராஜா) என்கிற பாடலைப் பாடிய பாடகி சஹேளி கமகே என்பவருக்கு பரிசாக ஏக்கர் கணக்கில் நிலங்களையும் கொடுத்தார் மகிந்த. சைட்டம் மருத்துவ கல்லூரியில் படிக்க அடிப்படைத் தகுதியில்லாமலேயே அனுமதியை வழங்கினார். அப்பெண்ணின் பெயரில் “சஹேளி கமகே மாவத்தை” என்று மஹரகமையில் ஒரு வீதிக்கும் சூட்டினார். ஆனால் கலாசூரி அல்ஹாஜ் மொகிதீன் பெக் வறுமையில் இறந்தார். அவரின் நாமத்தை எங்கும் சூட்டவில்லை எந்த அரசும்.
அதில் “புத்தம் சரணம் கச்சாமி” பாடல்; திரைப்படம் தொடங்கும் போது டைட்டில் பாட்டாக வைக்கப்பட்டிருக்கும். அத்திரைப்படம் தமிழில் “புயலுக்குப்பின்” (1961) என்று வெளிவந்தது. கே.குணரத்தினத்தின் தயாரிப்பில் 1963 ஆம் ஆண்டு மே மாதம் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது “அங்குலிமாலா” என்கிறபெயரில் வெளியானது. (1988 ஆம் ஆண்டு மீண்டும் சிங்களத்திலேயே சிங்களக் கலைஞர்களைக் கொண்டு அங்குலிமாலா படம் எடுக்கப்பட்டது வேறுகதை. அதில் பிரதான கதாபத்திரத்தில் ரவீந்திர ரந்தெனிய நடித்திருந்தார்) ஹிந்திப் பாடலை விட சிங்களத்தில் புத்தங் “சரணங் பாடல்” மொஹிதீன் பெக்கின் கம்பீரக் குரலில் சிறப்பாக அமைந்தது. அதன்பின்னர் பௌத்தர்களின் உற்சவங்களில் பிரதான இடம்பிடிக்கும் பாடலாக அந்தப்பாடல் ஆனது. மொஹிதீன் பெக் சிங்களத்தில் ஏராளமான காலத்தால் அழியாத பௌத்த பாடல்களைப் பாடியிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து வருகை
தென்னிந்தியாவில் சேலத்தில் 05.12.1919 இல் பிறந்து 1932ஆம் ஆண்டு இலங்கை வந்து பின்னர் 1934 இல் பொலிஸில் இணைந்து சேவையாற்றத் தொடங்கிய மொஹிதீன். ஆனால் அவர் பேர்சியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த படான் என்கிற சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத்தில் இருந்து பின்னர் சென்னையில் வாழ்ந்து வந்தது அந்தக் குடும்பம். 14 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாமவர் மொகிதீன் பெக். கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிசில் பணியாற்றிய தனது சகோதரன் அசீஸ் பெக் 1931இல் மரணமானவேளை இலங்கை வந்தவர். வந்த இடத்தில் அப்படியே தங்கியவர் தான் மொகிதீன் பெக்.
பம்பலப்பிட்டி பொலிசில் பணியாற்றிய அவரது மாமனாருடன் தங்கிக்கொண்டு அன்று மிகவும் பிரசித்தம் பெற்றிருந்த இசைக்கலைஞர் கவுஸ் மாஸ்டருடன் தொடர்புகளைக் பேணிக்கொண்டு அவரின் மேடைகளில் பாடத் தொடங்கினார். கவுஸ் மாஸ்டர் அப்போது கொலொம்பிய இசை நிறுவனத்தில் நிரந்தரப் பாடகராகப் பணியாற்றிய காலம். அப்போது வெளிவந்த ஹிந்தி திரைப்படப் பாடல்களின் சாயலில் சிங்களப் பாடல்களை இயற்றி தனக்குத் தெரிந்த உருது மொழியில் எழுதிப் பாடினார் மொகிதீன் பெக். அப்படிப் பாடிய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்கள் பத்தாயிரம் எண்ணிக்கை வரை விற்பனையாகியிருக்கிறது. அதன் பின்னர் மொகிதீன் பெக்கும் கொலம்பியா நிறுவனத்தின் நிரந்தப் பாடகராக ஆனார்.
தனது உறவுமுறைப் பெண்ணான சகீனா என்பவரைத் திருமணம் முடித்து ஐந்து ஆண் பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் அவருக்கு உள்ளார்கள்.
யமுனா ராணியுடன் பாடிய பாடல்களில் இரண்டு இங்கே
திரைப்படங்களில்
1934 இல் கே.கே.ராஜலக்ஷ்மியுடன் இணைந்து பாடிய “கருணா முஹுது நாமு கிலிலா...” என்கிற சோடிப் பாடலின் மூலம் இசைத்துறைக்கு அறிமுகமானார். அதிலிருந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் இலங்கையின் இசைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். சிங்களம் அல்லாத வேறொருவர் இந்தளவு நீண்டகாலம் இசைத்துறையில் வேறெவரும் இருந்ததில்லை என்று தான் கூற வேண்டும்.
இலங்கையின் இரண்டாவது திரைப்படம் “அசோகமாலா”. 1947 இல் வெளியான அந்த சிங்கள சரித்திரத் திரைப்படத்தின் மூலம் தனக்கான தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டார். லதா மன்கேஷ்காருடன் சோடியாக பாடிய ஒரே இலங்கைப் பாடகரும் அவர் தான். ஜமுனா ராணி, இலங்கையின் முன்னணிப் பாடகர்களான எச்.ஆர்.ஜோதிபால, ராணி பெரேரா, லதா வல்பொல, சுஜாதா அத்தநாயக்க போன்றோருடன் எல்லாம் திரைப்படங்களுக்காக பல பாடல்களைப் பாடியுள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியிருப்பதாக இலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தள பதிவொன்று கூறுகிறது. 350 மேற்பட்ட திரைப்படங்களில் பாடியிருக்கிறார். தமிழில் சில பாடல்களையும், ஒருசில இஸ்லாமிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.
சிறப்புப் பிரஜாவுரிமை பரிசு
1956ஆம் ஆண்டு S.W.R.D.பண்டாரநாயக்க ஆட்சியில் புத்த ஜெயந்தி 2500ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. அதன் போது “இரண்டாயிரத்தையாயிரம் புத்த ஜெயந்தியால் ஜொலிக்கட்டும் இலங்கை...” என்கிற பாடலை சிங்களத்தில் பாடினார். இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கருணாரத்ன ஒபேசேகர மெதுவாகப் போய் பிரதமரின் காதுகளில் இரகசியமாக மொகிதீன் பெக்குக்கு இன்னமும் குடியுரிமை அற்றவர் என்பதைக் கூறியுள்ளார்.
இதன்போதுதான் பிரதமர் பண்டாரநாயக்க மொகிதீன் பெக்குக்கு இலங்கையின் சிறப்புக் குடியுரிமையை பரிசாக வழங்கினார். இந்தக் காலப்பகுதியில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் கடுமையான சட்டங்கள் அமுலில் இருந்த காலம் என்பதால் அது வரை மொகிதீன் பெக்கும் குடியுரிமை பெறாதவராகவே இருந்துவந்தார். பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷியா உள் ஹக் இலங்கை வந்திருந்த போது உருது மொழியில் அல்லாவைப் புகழ்ந்து மொகிதீன் பெக் பாடிய பாடலைக் கேட்டு ஆகர்சிக்கப்பட்டு அவருக்குப் பரிசாக மக்காவுக்கு போய் வருவதற்கான முழு வசதிகளையும் செய்து கொடுத்தார் ஷியா உல் ஹக். கூடவே அவரை பாகிஸ்தானுக்கு நிரந்தரக் குடியாக வரும்படியும் கோரியிருக்கிறார். மக்காவுக்கான பயணத்தின் பின்னர் அல்ஹாஜ் மொகிதீன் பெக் என்று அழைக்கப்பட்டார்.
1974 ஆம் ஆண்டு தீபக்ஷிகா விருது விழாவில் அதிக சிங்களத் திரைப்படங்களில் பாடிய பாடகருக்கான விருதைப் பெற்றார். இலங்கையில் கலாசூரி விருது 1982இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி கலாசூரி விருதைப் பெற்றுக்கொண்ட முதல் 8பேரில் ஒருவர் மொகிதீன் பெக்.
ஆயுபோவேவா!
மொகிதீன் பெக் ஒரு பாட்டுக் கலைஞனாக இலங்கை மக்களை மகிழ்விப்பதில் காட்டிய அக்கறையை பணமீட்டுவதில் காட்டவில்லை என்பது உண்மை.
ஒரு தடவை வருமானவரித் துறையினர் அவரை கைது செய்துகொண்டு போய் நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டனர். அவரின் மகன் இலியாஸ் அவரை நீதிமன்றத்திலிருந்து விடுவித்து அழைத்து வந்தார். அழுகுரலில் அவர் “வருமானமின்றி இந்த சிறு குடிலில் குடும்பத்தை நடத்திக் கொண்டு இருக்கும் என்னிடம் வரி கட்டுமளவுக்கு என்ன தான் இருக்கிறது. மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவிடலாம் போலிருக்கிறது..." என்று அழுதிருக்கிறார்.
மருதானை ஸ்ரீ வஜிராராம மாவத்தையில் இலக்கம் 50 அவரின் வீட்டு இலக்கம். 16 பேர்களைக் கொண்ட குடும்பமும் வாழ்ந்து வந்த ஒன்றரை பேர்ச்சஸ் நிலத்தில் மட்டுமே அமைந்த வீடு அது. பிரேமதாச காலத்தில் கலைஞர்கள் பலருக்கு வீடுகள் வழங்கிய போதும், அவர் கொடுக்க முன் வந்த தொடர்மாடி வீடு இருந்த வீட்டை விட சிறியதாக இருந்ததால் அதை அவர் பெறவில்லை. மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று நம்பியிருந்தார்.
83இல் வெங்கட் கொலையின் போது
83 கருப்பு யூலையின் போது பாணந்துரையில் வைத்து பிரபல சிங்கள சினிமா இயக்குனரும் தமிழருமான கே.வெங்கட் தனது வாகனத்தில் பாணந்துறை நகரைக் கடந்து கொண்டிருந்தார். இனவாதக் கும்பல் அவரை காரிலிருந்து இறக்கித் தாக்கியபோது அவர்; தான் “சிரிபதுல” (1978) என்கிற பிரபல சிங்கள திரைப்படத்தின் இயக்குனர்” என்றும் கூறி பார்த்தார். அத்திரைப்படத்தின் மூலம் பிரபலமான பாடல் கசற்றையும் காரில் இருப்பதைக் காட்டி கெஞ்சினார். அவரை அடித்து அந்தக் காரில் வைத்து எரித்தார்கள். அந்த புகழ் பெற்ற பாடல் “மினிசாமய் லொவ தெவியன் வன்னே மினிசாமய் லொவ திரிசன் வன்னே!” (“மனிதனே உலகின் தெய்வமாகிறான் மனிதனே உலகின் மிருகமும் ஆகிறான்”). அதைப் பாடியவர் “மொஹிதீன் பெக்”.
ஈழத்து தமிழ் சினிமாவில் இருந்த அளவுக்கு முஸ்லிம்களின் பங்கு இலங்கையின் சிங்கள சினிமாத்துறைக்குள் ஏன் குறைந்திருந்தது என்பதை இலங்கையின் இனத்துவ அரசியலுடன் சேர்த்துத் தான் பார்க்கவேண்டும். சிங்கள சினிமாவின் ஆரம்பகாலங்களில் நட்சத்திரமாக இருந்த பரீனா லாய் என்கிற முஸ்லிம் நடிகையின் பாத்திரம் இன்றும் இருட்டடிப்பு செய்யப்பட்டே இருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் பல சிங்களத் சிங்களத் திரைப்படங்களில் கதாநாயகனாக கொடிகட்டிப்பறந்த ஷசி விஜேந்திர என்கிற நடிகர் முஸ்லிம் என்றும் அவரின் இயற்பெயர் அவுப் ஹனிபா என்கிற உண்மை சமீபத்தில் வெளிவந்த போது அதை ஒரு மோசடி என்று சிங்களப் பேரினவாதம் துள்ளியது. முஸ்லிம் ஒருவர் இத்துறையில் முஸ்லிம் அல்லாத அடையாளமொன்றின் மூலம் தான் தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
மொகிதீன் பெக் போலவே இன்னுமொருவர் இந்தக் காலப்பகுதியில் இருந்தார் அவர் ஏ.ஆர்,.எம்.இப்ராகிம் (1920-1966) இப்ராகிம் மாஸ்டர் பாடிய அதிக பாடல்கள் பௌத்த பாடல்கள் தான். இலங்கையில் கிரமோபோன் காலத்தில் பௌத்த பாடல்களை அதிகமாக பாடியவர் மொகிதீன் பெக் என்றால் அதற்கடுத்ததாக அதிகமாக பௌத்த பாடல்களை பாடியிருப்பவர் இப்ராகிம் மாஸ்டர் தான்.
இவர்களின் காலத்துக்கு முன்னரும், அவர்களின் காலத்திலும் ஏன் அவரைப்போன்ற முஸ்லிம் கலைஞர்கள் சிங்களச் சூழலில் உருவாக்கப்படவில்லை. எம்.எம்.ஏ.ஹக் மாஸ்டர் கூட ஐந்து திரைப்படங்களுக்கு கிட்டத்தட்ட முப்பது பாடல்களை இசையமைத்திருக்கிறார். அவை பௌத்த பாடல்கள் என்கிற வகையறாவில் வராவிட்டாலும் அவர் இசையமைத்த திரைப்பட பாடல்கள் பல மிகவும் பிரசித்திபெற்றவை.
மொகிதீன் பெக்கின் புதல்வர் இஷாக் பெக் இன்று மேடை நிகழ்ச்சிகளில் பாடிவருகிறார். ஆனால் அவரது தந்தையின் பாடல்களைப் பாடுவதற்குத் தான் அவர் அழைக்கப்படுகிறார். கவிஞர் நிலார் எம். காசீம் சில திரைப்படங்களுக்கு பாடல் அமைத்தாலும் அதை ஒரு போக்காக நம்மால் பார்க்க முடியாது. எண்ணிக்கையில் தமிழர்களை விட அதிகமான முஸ்லிம்கள் சிங்களம் கற்ற குழாமினராக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற போதும் இத்தகைய துறைகளில் ஏன் உரிய இடமில்லை என்பது சற்று ஆராயப்பட வேண்டிய ஒன்று.
மேலும் சிங்கள பௌத்த பாடல்களைப் பாடிய அதே மொகிதீன் பெக்; இஸ்லாமிய பாடலொன்றை சிங்களத்தில் பாடி வரவேற்பைப் பெறும் கலாசாரம் இலங்கையில் இருக்கிறதா? டிக்கிரி மெனிக்கே - கொவி ரால காதல் பாடலை கொண்டாடிய சூழலால் ஒரு ஹமீதுனுடயதும், பாத்திமாவுடையதும் காதல் வெளிப்பாட்டை சிங்களத்தில் சகிக்கும் கலாசாரம் வளர்க்கப்பட்டிருக்கிறதா?
இலங்கையின் வரலாற்றில் அதிக அளவிலான பௌத்த பாடல்களைப் பாடியவர் ஒரு இஸ்லாமியர் என்பதை மறுத்துவிடமுடியாது. சிங்கள பௌத்த மக்களுக்காக அவர் விட்டுச் சென்ற பாடல்கள் மொகிதீன் பெக்கை நீண்ட காலத்துக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது நிச்சயம். சிங்கள – முஸ்லிம் உறவுக்கான ஒரு நினைவுப் பாலமாகவும் அவரின் வகிபாகம் உறுத்திக்கொண்டே இருக்கும். எப்படியென்றாலும் ஒவ்வொரு வெசாக்குக்கும் அவர் நிச்சயம் உயிர்ப்பிக்கப்பட்டுக்கொண்டிருப்பார்.
04.11.1991 இல் தனது 71வது வயதில் காலம் ஆனார். அவரது உடல் கோப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
“அப்பா இருக்கும் வரை எங்களைப் பாடவிடவில்லை. “எனது பெயரைக் கெடுக்கவேண்டும் என்று தீர்மானித்தல் நீ பாடு..” என்றார் அவர். அவரின் இறப்பின் பின்னர் தான் அவரின் பாடல்களைப் பாடத் தொடங்கினேன்....”மொகிதீன் பெக்கின் புதல்வர் இஷாக் பெக்கின் தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் வெளியிட்ட கருத்துக்கள் இவை.
“அப்பா நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சைக்காக ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்ட அந்த நாள் அவர் கூடவே இருந்தேன். இரவானதும் ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பும் முன் “எங்கே வா மகனே.. என்று அழைத்தார். “நான் மீண்டும் வீடு திரும்புவேனோ தெரியவில்லை” என்று கூறியபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. எங்கள் வீடு சிறியது. அப்பா உட்பட குடும்பத்தில் எல்லோரும் வரிசையாக பாயில் ஒன்றாகத் தான் உறங்குவோம். அப்பா இல்லாத வீட்டை கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை....”
வீட்டுக்கு போய்விடுவோமா அப்பா..? என்று கேட்டேன்.. அவர் ‘நான் கூறுவதை நன்றாகக் கேட்டுக்கொள் நான் பாரத தேசத்திலிருந்து இந்த நாட்டுக்கு வந்தேன். சிங்கள சமூகம் என்னைச் சுற்றியிருந்து ஆதரவு தந்தார்கள். நான் பாடிய பாடல்களை நீ பாதுகாக்கவேண்டும்... நான் நாளை இறந்து போனாலும் கடைசி சிங்களவர் இருக்கும் வரை உங்கள் எவரையும் பட்டினியில் இருக்கவிட மாட்டார்கள்..” என்றார்.
நான் அழுதபடி விடைபெற்றுவந்தேன். அடுத்த நாள் காலையில் அங்கு சென்ற போது அப்பா இறந்துவிட்டதை மருத்துவர் உறுதிபடுத்தினார். அவரது மரணத்தின் போது அதிக அளவில் பௌத்த பிக்குமார் கலந்துகொண்டார்கள். அவர்கள் அழுதார்கள். பிக்குமார்கள் ஒரு சிங்கள மரணவீட்டில் கூட அழுததை நான் ஒரு போதும் கண்டதில்லை. சில பிக்குமார் அவரைப் புதைத்த இடத்தில் இருந்து மண்ணை எடுத்து பையில் எடுத்துச் சென்றார்கள். அது ஏன் என்று கேட்டேன். இன்னும் ஐந்து வருடத்திற்குப் பின் என்னிடம் கேள் நான் பதில் சொல்கிறேன் என்றார் ஒரு பௌத்த துறவி.
அப்பாவின் இறுதிக் காலத்தில் கலைஞர்களுக்கு வீடுகள் வழங்கிய சமயத்தில் அப்பா தனக்கென ஒரு வீட்டுக்காக விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. அவர் இறந்து இரண்டு வருடங்களுக்குள் எங்கள் சிறு வீட்டையும் வீதி அதிகார சபை உடைத்து எங்களை அகற்றினார்கள். அதன் பின்னரும் நாங்கள் வறுமையுடன் வாடகை வீடுகளில் மாறிக்கொண்டிருக்கிறோம். அப்பாவின் 100வது வருட நினைவிற்குப் பின் நானும் பாடுவதை நிறுத்திவிட்டு வேறேதாவது தொழிலைத் தேடி வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவேன்....” என்கிறார்.
மொகிதீன் பெக்கின் மிகப் பிரலமான பாடல்களை தெரிவு செய்து இங்கு தொகுத்திருக்கிறேன். இடதுபுற மேல் மூலையில் உள்ள playlist ஐ அழுத்தி அப்பாடல்களை தெரிவு செய்து நீங்கள் கேட்கமுடியும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...