Headlines News :
முகப்பு » , , » "மாற்றுத்தொழில்கள் பற்றி மலையகம் சிந்திக்க வேண்டிய தருணம்" பேராசிரியர் மு.சின்னத்தம்பி (நேர்காணல்)

"மாற்றுத்தொழில்கள் பற்றி மலையகம் சிந்திக்க வேண்டிய தருணம்" பேராசிரியர் மு.சின்னத்தம்பி (நேர்காணல்)

பொருளாதார ரீதியாக மலையக பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்னும் பின்தங்கி இருப்பதற்கான பிரதான காரணம் அவர்களின் வாழ்வாதாரம் கொழுந்து பறித்தல் தொழிலில் மட்டும் தங்கி இருப்பதாகும். தேயிலை தொழில் துறையானது வருடந்தோறும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதன் காரணமாகவே சில மாதங்கள் அவர்களுக்கு வேலை நாட்கள் குறைவாகவும் வருமானம் கீழ் மட்டத்திலும் இருக்கின்றன. ஆகவே அவர்கள் மாற்றுத்தொழில்களில் ஈடுபாடு காட்டுவது அவசியம். அதாவது இத்தொழிலை பிரதானமாகக்கொண்டு ஏனைய உப தொழில்களில் ஈடுபடல் அவசியம். அதற்கு அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகளும் தோட்ட நிர்வாகங்களும் கைகொடுக்க வேண்டும் என்கிறார் பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான மு.சின்னத்தம்பி. கேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு.

கேள்வி: இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் மிகவும் மதிக்கப்படும் கல்வியியலாளரான உங்களைப்பற்றி…?

பதில்: நான் கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் பிறந்தேன். அங்குள்ள தோட்டப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத்தொடர்ந்தேன். தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர். 1948 ஆம் ஆண்டு குடும்பம் தலவாக்கலைக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றேன். இப்பாடசாலை தற்போதுள்ள பொலிஸ் நிலைய கட்டிடத்துக்கு அருகில் அமைந்திருந்தது. பின்பு 1959 இல் தெல்லிப்பளை மகஜன கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பொருளியலை விசேட பாடமாக தொடர்ந்தேன். 1965 இல் உதவி விரிவுரையாளராகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகி பின்பு 1969 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணி பட்டத்தைப்பெற்றேன். 1974 இல் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகி கடமையாற்றி வந்தேன். 1993 இல் பொருளியல்துறை பேராசிரியராகவும் 1997 இல் துறைத்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டேன். 2006 இல் ஓய்வு பெற்றேன்.

கேள்வி: வளங்கள் குறைவாக இருந்த அக்காலகட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்தன?

பதில்: வளங்கள் குறைவு என்பது உண்மை தான் ஆனால் முயற்சி என ஒன்றுள்ளதே? நான் சிறுவயதிலிருந்தே வாசிப்பிலும் கற்றலிலும் திறமையாக விளங்கினேன். அதுவே எனது வளர்ச்சிக்குக்காரணம். பெற்றோரின் ஆதரவும் கூறப்போனால் கடவுளின் கடாட்சமும் எனக்குக் கிடைத்தது.

கேள்வி: மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றிய பல பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றீர்கள் இன்னும் ஏன் இந்த சமூகம் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளது?

பதில்: பல காரணங்கள் இருந்தாலும் பிரதானமாக இச்சமூகத்துக்கு அனைத்தும் தாமதமாகியே கிடைத்ததைக்கூறலாம். 1980 களுக்குப்பிறகு தான் கல்வி வளர்ச்சியைப்பற்றி பேச முடியும். அதே நேரம் அரசியலிலும் குறித்த காலப்பகுதிக்குப்பின்னரே உரிமைகளைக்கேட்டுப்பெறும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமரர் தொண்டமான் பெருந்தோட்டப்பகுதிகளில் பல கல்விக் கூடங்கள் உருவாக வழிவகுத்தார். இது ஆரம்ப கால வரலாறு. தற்போது வரை ஏன் இச்சமூகம் இப்படி இருக்கின்றது என்றால் இம்மக்களின் ஒரே வாழ்வாதாரத் தெரிவாக கொழுந்து பறித்தல் மட்டுமே காணப்படுவதேயாகும்.இவர்கள் ஒரே தொழிலில் மட்டும் தங்கி வாழும் குழுவாக இருக்கின்றனர். மாற்றுத்தொழில் குறித்த எவ்வித விழிப்புணர்வும் இவர்களிடையே இல்லை என்பதோடு அதை அவர்களுக்குத்தெளிவு படுத்தும் பணிகளை அரசியல் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கும் செயற்பாடுகளும் மந்த கதியிலேயே உள்ளன. மாற்றுத்தொழில்கள் என்றால் இவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கின்றனர்.அப்படிக் கருதியதாலேயே தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

கேள்வி : என்ன மாற்றுத்தொழில்களை நீங்கள் சிபாரிசு செய்கின்றீர்கள்?

பதில்: இப்பகுதியின் புவியியல் அமைப்பின் படி கால்நடை வளர்ப்பு சிறந்த மாற்றுத்தொழிலாக இருக்கின்றது அடுத்ததாக விவசாயத்தைக்கூறலாம். இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மலைகளைத் தவிர தரிசுநிலங்கள் காணப்படுகின்றன. கால் நடை வளர்ப்புக்குரிய தோதான காலநிலை உள்ளது. பண்ணைகளை அமைத்துக் கொடுத்து தொழிலாளர்களுக்கு வழிகாட்டினால் அவர்கள் மேலதிக வருவாயைப்பெறலாம். கால்நடைகளுக்கான உணவுத்தேவைக்கு வேறு எங்கும் செல்லத்தேவையில்லை. மேலும் ஒவ்வொரு மாதமும் வருவாயை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலாக இது உள்ளது. அடுத்ததாக காய்கறி செய்கை. இதற்கும் இங்கு நிலம் தாராளமாகவே உள்ளது. ஆனால் எல்லா தொழிலாளர்களும் இதில் ஈடுபாடு காட்டுவதில்லை ஏனெனில் இதற்கு முதலீடு அவசியம். இதற்கு இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது தோட்ட நிர்வாகங்களும் இவ்வாறான தொழில்களில் இவர்களை ஊக்குவித்து அவர்களை தன்னிறைவு அடையச்செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். கால்நடை பண்ணைகளை தோட்ட நிர்வாகங்களே அமைத்துக்கொடுக்கலாம். கடன் வசதிகள் ஏற்படுத்திக்கொடுப்பது அல்லது கிடைக்கும் இலாபத்தில் ஒரு தொகையை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் தோட்ட நிர்வாகங்களுக்கு சாதகமான அம்சத்தை தரும். அதாவது தொழிலாளர் வெளியேற்றத்தை இச்செயன்முறைகள் கட்டுப்படுத்தும்.

கேள்வி: தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகத்தான் தேயிலை தொழிற் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக கம்பனிகள் கூறுகின்றனவே?

பதில்: ஓரளவிற்கே அதில் உண்மையுள்ளது.

 இங்கு வீழ்ச்சியடைந்திருப்பது உற்பத்தி அளவு மட்டுமே ஒரேடியாக தொழில் துறையைக்கூறமுடியாது. அதாவது ஒரு தொழிலாளி கொழுந்து பறிக்கும் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியே அது. பராமரிப்பு ,தேயிலை கன்றுகளை நடல் போன்றவற்றில் கம்பனிகள் அக்கறை காட்டுவதில்லை. உதாரணமாக போட்டி நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையில் ஒரு தொழிலாளி பறிக்கும் கொழுந்தின் அளவு மிகக்குறைவு. கென்யாவில் 3035 கிலோவாகவும் ,இந்தியாவில் 25 கிலோவாகவும் வியட்நாமில் 30 கிலோவாகவும் இருக்கும் அதே வேளை இலங்கையில் அது 1220 கிலோவாக உள்ளது. நிலத்தினதும் ஊழியத்தினதும் குறைந்த உற்பத்தித்திறன் காரணமாகவே ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்தி செலவு இங்கு அதிகமாக உள்ளது. ஒரு ஹெக்டேயருக்கான தேயிலை விளைச்சல் கென்யா மற்றும் இந்தியாவில் 2300 கிலோவாக இருக்க இலங்கையில் 1688 கிலோவாகவே உள்ளது. இது தொடர்பான தகவல்களை ‘இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் போக்குகள் என்ற ‘எனது புதிய நூலில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நூல் இம்மாதம் 8 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

கேள்வி: அண்மையில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போதைய சூழலில் தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் 1200 ரூபா வரை இருத்தல் வேண்டும் என்று கூறியிருந்தீர்களே?

பதில்: உண்மை அது தான். ஆனால் அத்தொகையை வழங்குவதற்கு கம்பனிகள் முன்வருவதில்லை. அவர்கள் நட்டக்கணக்கை காட்டுகின்றனர். தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே தவிர அத்துறை நட்டமடையவில்லை. அப்படி நட்டம் ஏற்பட்டால் கம்பனிகள் இப்படி இயங்க முடியாது. தோட்டத்தை விட்டுச் செல்ல வேண்டுமே? மேலும் ஆய்வு ரீதியான தரவுகள் கூட்டு ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக்கு கொண்டு செல்லப்படல் வேண்டும். அப்போது தான் வாதம் புரிய முடியும். 1984 ஆம் ஆண்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு தோட்டத்தொழிலாளர்களின் ஊதியம் பற்றிய ஒரு அறிக்கையை நாம் தயாரித்து வழங்கியிருந்தோம். அதை சிறப்பாக முன்னெடுத்தார் அவர். இறுதியில் அரசாங்கமும் அதை ஏற்றுக்கொண்டது.

கேள்வி: தற்போது ஏன் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை?

பதில்: அக்காலகட்டத்தில் தொழிற்சங்க செயற்பாடுகள் அதிகம். அதற்கு அரசாங்கமும் ஏனையோரும் பயங்கொண்டிருந்தனர். தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வேகம் இருந்தது. தற்போது அரசியல் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. தொழிற்சங்க அணுகுமுறைகள் முற்றாக இல்லாது போய்விட்டன அல்லது அவை பற்றி இப்போதுள்ளவர்களுக்கு தெரிய வில்லை எனலாம்..இதை அரசாங்கமும் கம்பனிகளும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

கேள்வி: மாதச் சம்பள முறை சாத்தியமாகாதா?

பதில்: இல்லை அது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரே தொகை சம்பளத்தை வழங்க தோட்ட நிர்வாகங்களால் முடியாது அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் உற்பத்தி ஒரே அளவில் இருப்பதில்லை. அது தோட்ட நிர்வாகங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

கேள்வி: தேசிய வருமானத்துக்கு பங்களிப்புச் செய்யும் இச்சமூகத்தை ஏன் அரசாங்கங்களும் கண்டு கொள்வதில்லை?

பதில்: முதலில் இம்மக்களின் பிரச்சினைகளை இங்குள்ள அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் கண்டு கொள்ள வேண்டும்.அதாவது அக்கறை குறைவாகவே உள்ளது. நாம் ஒரேடியாக இவர்களை பின்தங்கிய சமூகம் என்று அடையாளப்படுத்த முடியாது. மெதுவாக முன்னேறி வரும் சமூகம் எனலாம். இங்கிருந்து கல்வியியலாளர்கள் தற்போது உருவாகி வருகின்றனர். ஆனால் அரசியலில் கற்றவர்களின் செயற்பாடுகள் அவசியம். அல்லது அவ்வாறானவர்களின் ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளல் மிக முக்கியம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலகட்டத்தில் இப்பணியை அவர் சிறப்பாக முன்னெடுத்திருந்தார். எனினும் இப்போது எவரையும் இவ்விடயத்தில் நான் குறை கூறவில்லை. ஏனெனில் காலமாற்றங்கள் அனைத்தையும் மாற்றுவனவாக உள்ளன. ஆனால் கல்விமான்கள் ,கொள்கை வகுப்பாளர்களை நிச்சயமாக அரசியல்வாதிகள் அரவணைத்துச் செல்லல் வேண்டும். அதற்கும் அப்பாற்பட்டு சிறுபான்மையினர் என்ற காரணத்தினால் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை என்பதை விட வேறு என்ன தான் கூற முடியும்?

கேள்வி:கல்விப் புலத்திலுள்ளோர் சமூக மாற்றத்துக்கு வித்திட முடியாதா?

பதில்: நிச்சயமாக முடியும் ஆனால் இப்போதுள்ள கல்விச் சமூகத்தினர் அனைவரும் அது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதே? தற்போதைய சூழலில் பல ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு மிகவும் குறைவாகவே உள்ளன. எல்லோரையும் இதில் அடக்க முடியாது ஆனால் ஒரு கல்விக்கூடத்தில் அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்தால் மட்டுமே பெறுபேறுகளை அடைய முடியும். இதை ஒரு வருமானம் தரும் தொழிலாக என்று இவர்கள் நினைக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து சேவை மனப்பான்மையும், சமூகத்தை வளர்க்க கல்வி அவசியம் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லாது போய்விட்டது. எமது காலத்தில் அது சாத்தியப்படலாம் இப்போது அப்படி முடியாது என்று சிலர் கூறலாம். ஆனால் அப்படியல்ல. இன்று மலையக கல்விப்புலத்திலுள்ளோர் சிலர் தனித்தனியாக அமைப்புகளை நிறுவி சமூக உயர்வுக்கு பாடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடைப்பதில்லை அல்லது கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் மட்டுமே ஆதரவு கிடைக்கும் நிலைமை உள்ளது. இதுவே இங்குள்ள பிரச்சினை. இவற்றையெல்லாம் தாண்டி சில நல்ல ஆசிரியர்களும் அதிபர்களும் பாடு பட வேண்டியுள்ளது.

கேள்வி: தனி வீட்டுத்திட்டங்களை வரவேற்கின்றீர்களா?

பதில்: வரவேற்கின்றேன் ஆனால் 7 பேர்ச் காணி என்பது அவர்களுக்கு போதாது. நான் ஆரம்பத்தில் கூறியதைப்போன்று தொழிலாளர்கள் மாற்றுத்தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றால் அவர்களுக்கு அதற்கான சூழல் அமைய வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் அவர்களுக்கு மேலதிக நிலம் ஒதுக்கப்படல் வேண்டும். கால் நடை வளர்ப்புக்கு இல்லாவிட்டாலும் உப உணவுப்பயிர்ச்செய்கைகள் சிறிய அளவிலான பண்ணைகள், சிறு தொழில் முயற்சிகளுக்கு உரிய இடம் அவர்களுக்கு வேண்டுமே?

கேள்வி: பெருந்தோட்டங்களும் அங்கு வாழ்ந்து வரும் மக்களும் அபிவிருத்தியடைய அரசியல் ரீதியாக என்ன நகர்வுகளை மேற்கொள்ளலாம்?

பதில்: பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபைகளுக்குள் உள்வாங்கப்படல் வேண்டும். இச்சபைகளுக்கு வாக்களிக்கும் மக்களாக இவர்கள் இருந்தாலும் அரசாங்கத்தின் நலன்புரி சேவைகள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. மக்களை திருப்திப் படுத்துவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவதை விட இம்மக்களின் நீண்ட காலத்தேவையை கருத்திற்கொண்டு திட்டங்களை வகுப்பதில் அரசியல்வாதிகள் முனைப்போடு செயற்படல் அவசியம்.

நேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates