பட்டறிவு
சுனிலாவின் ஐந்தாண்டு நினைவாக கொழும்பில் சில நிகழ்வுகள் இந்த வாரம் ஏற்பாடாகியுள்ளன. அவரின் நினைவாக இந்தக் கட்டுரை
90களின் நடுப்பகுதியில் ஒரு நாள் நடந்த சம்பவம் இது.... திம்பிரிகஸ்யாயவிலுள்ள எமது சரிநிகர் அலுவலகமும் சுனிலாவின் இன்போர்ம் நிறுவனமும் எதிரெதிரில் அலுவலகங்கள் இருந்தன. எமது சகோதர நிறுவனமும் கூட.
சக தமிழ் பணியாளர்களின் பாதுகாப்பில் அனைத்து சிங்கள நண்பர்களும் மிகுந்த அக்கறை எடுப்பார்கள். அப்படி பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அது இருக்கட்டும். எனக்கு ஒரு நாள் நேர்ந்தத்தை பதிய வேண்டும்.
ஒரு நாள் காலியில் உள்ள ஒரு தோழர் ஒருவரை சந்திப்பதற்காக சென்ற இடத்தில் திரும்பி வர இரவு பஸ்சும் இன்றி நான் சிக்கிவிட்டேன். அது ஒரு கிராமம் அங்கிருந்து தொலைபேசியில் அறிவிக்கக் கூட வசதி இல்லை. இருட்டிய பின்னர் அவர்கள் என்னையும் வெளியில் அனுப்புவதாக இல்லை. வழமையாக நான் எங்கு சென்றாலும் இரவில் தங்கும் நிலை ஏற்பட்டால் நான் பத்திரமாக இருப்பதை வீட்டுக்குத் தெரிவித்து விடுவேன். அன்று அதற்கு வழியில்லை என்றாகிவிட்டது. விடிந்ததும் கிளம்பத் தயாராக இருந்தேன்.
சுனிலாவின் குரலில் அமைந்த பாட்டுப் பின்னணியுடன் இந்த காணொளி செய்யப்பட்டிருக்கிறது.
அன்று விடியவே அந்த கிராமத்திலிருந்து ஒரு மாட்டு வண்டிலை பிடித்து சந்திவரை வந்து இன்னொரு ட்ரக்டரில் என்னை ஏற்றிவிட்டார் தோழர். அங்கிருந்து டவுனுக்கு வந்து காத்திருந்து பஸ் பிடித்து கொழும்பு வந்து, கொழும்பில் இருந்து நேராக அலுவகத்திற்கு வந்து சேர்ந்தேன். சற்று பின்னேரமாகியிருந்து.
அங்கு அலுவலகம் அல்லோல கல்லோலமாக இருந்தது. என்னைத் தூரத்தில் கண்டவுடன் அங்கு அலுவலக பணியாளர் அதோ சரா வருகிறார் என்று சிங்களத்தில் கத்திய சத்தம் கேட்டதும் அலுவலகத்தின் உள்ளிருந்து சக நண்பர்கள் பதட்டத்துடன் வெளியே வந்தார்கள். அருகில் உள்ள இன்போர்ம் அலுவலகத்திலிருந்தும் நண்பர்கள் வந்து என்ன நடந்தது என்று பதட்டமாக கேட்டார்கள்.
அவர்களைப் பார்த்து நானும் பதட்டமடைந்தேன். எங்கு போயிருந்தாய் உன்னை காணவில்லை என்று ஊடக செய்திகள் வரை போய் விட்டது. நான் நடந்ததைக் கூறினேன். சுனிலா அங்கிருந்து வந்து என் மண்டையில் ஒரு அடி அடித்தார்.
“வீட்டுக்கு நீ நேற்று வரவில்லை என்று அம்மா காலையில் தொடர்பு கொண்டு கூறினார். நாங்கள் பதட்டப்பட்டு மங்களவுக்கு தெரிவித்தோம் (மங்கள சமரவீர: ஒரு சமயத்தில் நம்முடன் நட்புடன் இருந்த இன்றைய அமைச்சர், அன்றைய ஊடக அமைச்சர்). உன்னைக் கடத்திக் கொண்டு போயிருக்கலாம் என்ற பயத்தில் சற்று கடுமையாகவே நாங்கள் உரையாடினோம். பொலிஸ் நிலையங்களில் அப்படி ஒருவர் உள்ளே இல்லை என்றும் பொலிஸ் மா அதிபரும் கூறிவிட்டார். அப்படி கண்டு பிடித்தால் அறிவிப்பதாக கூறியிருக்கிறார். இங்கே நாங்கள் ஏனைய ஊடகங்களுடனும் தொடர்புகொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம். நீ ஹாயாக வந்து இருக்கிறாய்...”
மற்ற நண்பர்கள் சூழ இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் இடைக்கிடை என்னை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். குற்றவாளியாக அதிர்ச்சியடைந்து இருந்தேன்.
ஏதாவது ஒரு வழியில் எமக்கு நீ தகவல் தந்திருக்க வேண்டும் என்பதே அனைவரது ஆத்திரத்திலும் இருந்த சாராம்சம். நான் காலி டவுனில் அதை செய்திருக்கலாம். எனது தவறை நினைத்து வெட்கித்தும், என்னிலே ஆத்திரமும் கொண்ட தருணம் அது. இவ்வளவு அசட்டையாக நான் பாதுகாப்பு விடயத்தில் பொதுவாக இருந்ததில்லை. அன்று எனக்கு பெரிய பாடம் கிடைத்தது. என்னில் அக்கறை கொண்டவர்களை நான் இப்படி பதட்டத்துக்கும், பயத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறேன். குறிப்பாக என்னை எந்த இடத்திலும் தன் தத்துப் பிள்ளையாக அறிமுகப்படுத்தும் சுனிலாவை நான் காயப்படுத்திவிட்டேன் என்று மிகுந்த வேதனைப்பட்ட நாள் அது.
சுனிலா உலகறிந்த ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அவரின் கருத்துக்களை அசட்டை செய்ய மாட்டார்கள். எனவே சுனிலா மீண்டும் உரிய இடங்களுக்கு நான் பத்திரமாக இருப்பதை அறிவித்தார்.
சுனிலா இறப்பதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் 2012 ஒக்டோபர் மாதம் ஒஸ்லோ வந்திருந்தார். ஒஸ்லோவில் மனித உரிமை குறித்த ஒரு கலந்துரையாடலை எனது நிறுவனத்தில் ஒழுங்கு செய்தேன். அப்போது பல இடங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார், ஏற்கெனவே திட்டமிட்டபடி என்னையும் அங்கெல்லாம் அழைத்துச் சென்றார். சுனிலா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அழைத்துக் கொண்டு வெளியே வரும்போது வெளியில் மழைத்தூரலும், குளிருமாக இருந்தது. நான் எப்போதும் போல எனது ஜெக்கட்டை மூடாமல் அனாயசமாக குடையை அவருக்குப் பிடித்தேன். என் தலையில் அதே குட்டு விழுந்தது.
“முதலில் ஜெக்கட் சிப்பை இழுத்து மூடு. குளிராக இருக்கிறது. விளையாடுகிறாயா... வியாதியை இழுத்துக்கொள்....”
அன்று தான் நான் அந்த இறுதிக் குட்டை வாங்கினேன். அது தான் நான் அவரை சந்திக்கும் இறுதி நாள் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை.
சுனிலா புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரை இறுதியாக சந்தித்த வேளை தான் மிகவும் தேறிவிட்டதாகவும், ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டதாகவும் கூறினார். அப்போது அவர் நெதர்லாந்தில் சிறிது காலம் வாழ்ந்து வந்தார். நோயுற்று இருந்த நிலையிலும் இலங்கை திரும்பமுடியாத படி அவருக்கு உயிரச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் அக்கிரமங்களை உலகெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால் மகிந்த அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்தார். அவரை கிட்ட இருந்து கவனிக்க என்று முமுதினி சாமுவேல், சேபாலி இன்னும் சில சக தோழிகள் இலங்கையில் இருந்து மாறி மாறி நெதர்லாந்து வந்து தங்கியிருந்து அவரைக் கவனித்துச் சென்றார்கள்.
“நான் ஒரு அகதியைப் போல நாட்டுக்கு நாடு திரிந்து அலைந்து என்னைத் துரத்திய எமனிடமிருந்து தப்ப முயற்சித்தேன். ஆனால் எமன் எனது உடலுக்குள்ளேயே ஒளிந்திருந்தான். என்று அவர் இன்னொரு நண்பியிடம் தெரிவித்திருந்தார்.
சுனிலாவின் வீடு புற்றுநோயாளும் வேறு உடல் உபாதைகளாலும் பாதிக்கப்பட்ட பல நட்புகளுக்கு உறைவிடமாக ஒரு காலத்தில் இருந்ததை நான் அறிவேன். பேராசிரியர் மௌனகுருவுக்கு இதய சத்திரிசிகிச்சை செய்து சுனிலாவின் வீட்டில் இருந்தபோது அவர் அங்கு தான் இருக்கிறார் என்பதை அவரின் வீட்டுக்கு அருகிலேயே இருந்த எங்கள் அலுவலகத்தில் எவருக்கும் தெரியாதிருந்தது. பார்க்க வருபவர்களால் அவருக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்று கவனமாக இருந்தார்.
எங்கள் சரிநிகர் பத்திரிகையை வெளியிட்ட மேர்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரும், நீண்ட காலமாக தன தலைவராகவும் இருந்த பிரபல மனித உரிமையாளர் சார்ள்ஸ் அபேசேகரவின் மகள் தான் சுனிலா.
இலங்கையில் அவரோடு சேர்ந்து பணியாற்றிய காலம் மிகவும் பசுமையானது. நகைச்சுவை உணர்வை எப்போதும் பேணுபவர். அவருடன் நிறைய பயணம் செய்திருக்கிறேன். பல்வேறு விடயங்களை விவாதித்து, உரையாடியிருக்கிறேன். பெண்ணியம், மனித உரிமைகள் சார்ந்த கூட்டங்கள் பலவற்றில் அவரின் மொழிபெயர்ப்பாளராக நான் இயங்கியிருக்கிறேன். எங்கும் என்னை தனது தத்துப் பிள்ளை என அறிமுகப்படுத்துவது அவரது வழக்கம்.
உயிரச்சுறுத்தல் காரணமாக இலங்கையை விட்டு பலரும் தப்பிப் போவதற்கு தனிப்பட்ட ரீதியில் நூற்றுக்கணக்கானோருக்கு அவர் உதவி செய்திருக்கிறார். அது மட்டுமன்றி பின்னர் அவர்கள் தஞ்சமடைந்த நாடுகளில் அகதி அந்தஸ்து பெறுவதற்கு சுனிலா காரணமாக இருந்திருக்கிறார்.
மனித நேயம் மிக்கவராக மட்டுமல்ல சிறந்த மனித உரிமையாளராகவும் உலகளவில் அறியப்பட்டிருந்தார் சுனிலா. 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறந்த மனித உரிமையாளருக்கான விருது அவருக்கு அன்றைய செயலாளர் நாயகம் கொபி அனானால் வழங்கப்பட்டது.
அவர் போன்ற ஒரு பெண் ஆளுமையை நான் இதுவரை இலங்கையில் கண்டதில்லை. 70களின் இறுதியில் புரட்சிகர மேடைகளில் அவரின் குரல் மிகவும் பிரசித்தம். ஜே.வி.பியின் செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்ட அந்த காலப்பகுதியில் “விமுக்தி கீ” (விடுதலை கீதம்) என்கிற பிரச்சாரக் குழுவில் முக்கிய பாடகி. மனித உரிமையாளர், பெண்ணுரிமையாளர், தமிழர்களின் உரிமைக்காகவும் இறுதிவரை குரல்கொடுத்தவர். ஒட்டுமொத்தத்தில் சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சகல தளங்களிலும் போராடியவர் அவர். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னணிப் பாடகியாகவும் குரல் கொடுத்திருக்கிறார்.
அவர் நம்மை விட்டுப் பிரிந்து செப்டம்பர் 9ஆம் திகதியோடு சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நம் காலத்து நாயகி. நம் காலத்து வீராங்கனை.
+ comments + 1 comments
Thanks for this article. I already read some of her books 🤗✌
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...