Headlines News :
முகப்பு » , » அருந்ததியர்கள் தெலுங்கு பேசுவது ஏன்.....?

அருந்ததியர்கள் தெலுங்கு பேசுவது ஏன்.....?

அருந்ததியர் (சக்கிலியர்) ஆங்கிலேயர் ஆட்சியின் போது சென்னை ஆளுநரும், 'தென்னிந்தியக் குடிகளும் குலங்களும்' என்ற நுலை எழுதியவருமான எட்கர் தர்ஸ்டன் என்பவர்....சக்கிலியர்கள் , ஆந்திரம், கஞ்சம் ஜில்லாவில் இருந்து நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் குடியேறியவர்கள் என்று கூறினார்.

அவரே அதே நூலில் > கொற்றவை என்ற பெண் தெய்வத்தை வணங்கியவர்கள் ' மாதியர் '.இவர்கள் தென்னாட்டில் அரசர்களாக ஆட்சி செய்திருக்கிறார்கள் < என்றும் எழுதியருக்கிறார். மாதியர் என்பது அருந்ததியரின் இன்னொரு பெயர். அறிஞர் தேவநேயப்பாவாணர் சொல்கிறார், "சக்கிலியர் என்னும் தெலுங்கு வகுப்பார் தமிழ் நாட்டிற்கு வந்த பின், 'பறம்பர்' என்னும் தமிழ் வகுப்பார் மறைந்தனர்".இங்கே பறம்பர் என்ற பெயர் அருந்ததியரைக் குறிப்பதாக தமிழ் கலைக் களஞ்சியம் அபிதான சிந்தாமணியும், சிலப்பதிகாரமும் சொல்கின்றன. ஆகவே நாம் 2000ஆண்டுகளுக்கு முன் உள்ள தமிழக வரலாற்றில் இருந்து அருந்ததியரின் வரலாறைத் தேடவேண்டும்..

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய பேரரசர்களுடன், வேளிர் என்ற மரபைச் சேர்ந்த குறுநில மன்னர்களும் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த வேளிர் மரபில் சில குடிப் பிரிவுகள் இருந்தன. அதில் ஒன்று ' அதியர் குடி'. கடை எழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் அதியர் குடிவழி வந்த குறுநில மன்னன். இவன் ஆட்சி செய்த நிலப் பகுதியின் பெயர் குதிரைமலை. பின்னாளில் இது தகடூர் ஆகி, இன்று தர்மபுரியாக இருக்கிறது.  மன்னன் அதியமானும்,| புலவர் ஒளவையாரும் மிக நெருங்கிய நண்பர்களா் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் உறுதி செய்கின்றன.       ஒளவையார் அதியமானை ' அதியர் கோமான் ' என்று புகழ்ந்து பேசுகிறார் புறநாநூற்றில்.

இங்கே கோ என்பதற்கு பெரிய, சிறந்த, பெருமை வாய்ந்த என்று சிறப்புப் பெயர்கள் உண்டு. கோ என்ற ஓரெழுத்துச் சொல்லும், மா என்ற ஓரெழுத்துச் சொல்லும், இருசொல் ஒருபொருள் ஆகும். எனவே அதியர்குடியினர் சிறப்பு வாய்ந்தவர் என்பதை உணர்த்த அவர்கள் மா+அதியர் என்று அழைக்கப் பட்டனர். மாதியர் -- இதுதான் அருந்ததியரின் முதல் இனப்பெயர். அதுபோல அருமை (யான) +அதியர் என்பது அருந்ததியர் ஆயிற்று. மாதியர், அருந்ததியர் ஆகிய இவ்விரு பெயர்களும் மரபு வழியான அருந்ததியர்களின் குடிப் பெயர்களள் ஆகும்.

அடுத்து பறம்பன் என்ற பெயரைப் பார்ப்போம். 2000 அடி உயரத்திற்கு உள் இருக்கும் மலையைப் பறம்பு என்று சொல்வார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி என்று அழைக்கப்படும். எனவே பறம்பு என்பது குறிஞ்சி நிலம். குறிஞ்சியின் தலைவன் முருகன், அவனின் தாய் கொற்றவை. அதனால் கொற்றவையை வணங்கும் (தாய் வணக்கம்) பறம்பு என்ற குதிரை மலையை ஆட்சி செய்த அதியர், பறம்பர் என்றும் அழைக்கப்பட்டனர். பறம்பு என்பது நிலம் சார்ந்து வருவதால் இப் பெயர் இடவாகு பெயர் என்று இலக்கணம் சொல்கிறது. எட்கர் தர்ஸ்டன் சொன்ன, கொற்றவையை வணங்கி ஆட்சி செய்தவர் மாதியர் என்பதற்கும், தேவநேயப் பாவாணர் சொன்ன பறம்பர் என்பதற்கும் வரலாற்றுச் சான்றாய் இருக்கும் மன்னன் அதியமானின் ' அதியர் குடி ' வழி வந்த அருந்ததியர்கள் - - ஆதித் தமிழர்கள் என்பதே தமிழ் நாட்டின் வரலாறு.

அருந்ததியர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் ஏன் தெலுங்கு, கன்னடம் பேசுகிறார்கள்?

நம் முன்னோர்கள் வாழ்ந்த தகடூர் என்ற தருமபுரிக்குச் சற்று தொலைவில் கர்நாடகாவுக்குப் போக வழி அமைந்திருக்கிறது. எனவே அங்கு சென்ற அருந்ததியர்கள் குறைவு. ஆனால் தருமபுரிக்கு அண்மையில் ஆந்திராவுக்குப் போகும் வழி அமைந்திருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே நம் மக்கள் ஆந்திராவுக்குப் போய் விட்டார்கள். ஏன் போனார்கள்?

1. தருமபுரியை விட ஆந்திரா நிலவளம், நீர்வளம் மிக்க விவசாய நாடு. தருமபுரியில் அத்தகைய வளம் இல்லை. எனவே தருமபுரியின் எல்லைப் பகுதிக்குள் வாழ்க்கைக்காக வேலை தேடிச்சென்றனர் கொஞ்சம் பேர்.

2.இன்னும் கொஞ்சம் பேர்கள் வணிகம் (வியாபாரம்) காரணமாகச் சென்றுள்ளார்கள்.

அப்படிச் சென்றவர்கள் அடிக்கடி போய்வர, இன்று போல அன்று போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்களால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டில் சென்று தங்கும் மக்களைப், பட்டினப்பாலை - சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள் ' புலம் பெயர் மாக்கள் ' என்று சொல்கிறது.

அப்படிப் புலம் பெயர்ந்து சென்ற அருந்ததியர்கள் ஆந்திராவின் மையப் பகுதிகளுக்குச் செல்லாமல் தமிழகத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மட்டுமே தங்கினார்கள். ஆந்திர எல்லைப் பகுதிகளில் தங்கிய அருந்ததியர் ஆந்திரத் தெலங்கைப் பள்ளியில் மறையாகப் படிக்கவில்லை. எனவே நன்னயர் என்ற தெலுங்கு அறிஞரால் செப்பம் செய்யப்பட்ட தெலுங்கு அருந்ததியருக்குத் தெரியாது. அருந்ததியர் பேசுவது தெலுங்கு இல்லை. தெலுங்கு முலாம் பூசப்பட்டு, தெலுங்கு மொழியின் ஓசை - ஒலியில் தமிழைத்தான் பேசுகிறார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

எடுத்துக்காட்டு :-

1. வன்னம். இது சோறு என்பதன் தெலுங்குச சொல்.

கெஞ்சி (Gangee) -இது சோறுக்கு அருந்ததியர் சொல்லும் சொல். கஞ்சி என்ற தமிழ்ச் சொல் இப்பட மருவி இருக்கிறது.

2. குழம்புக்கு தெலுங்குப் பெயர் - பலுசு. அருந்ததியர்கள் சாறு என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுததுவார்கள்.

3.தெலுங்கில் அம்மாவை தல்லி என்றும், அப்பாவை நய்னா என்றும் அழைப்பார்கள். அருந்ததியர் அம்மாவை அம்ம என்றும், அப்பாவை ஐய (ஐயா) என்றும் தமிழால் அழைப்பார்கள்.

இப்படி ஆந்திராவுக்குத் தமிழ் நாட்டில் இருந்து பிழைப்பு தேடிச் சென்ற அருந்ததியர்கள், அங்குள்ள தெலுங்கைப் படிக்காமல், அக்கம் பக்கம் பேசும் வட்டாரத் தெலுங்கு ஒலியில், தெலுங்குச் சாயலில் தமிழைப் பேசும் அருந்ததியரை தெலுங்கர் என்று எப்படிச் சொல்ல முடியும் ? இப்பொழுதும் அருந்ததியர்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். ஓரிரு தலைமுறைகளில் மொழி, திருத்தம் ஏற்படும்.

அருந்ததியர் மக்களின் தொழில் அன்று கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து துப்புரவுப் பணியாளர்களாக சீரழிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்னும் கூடுதலாக செல்ல வேண்டும் என்றால், தூய தமிழ் மொழி களை பேசுபவர்கள் அருந்ததியர்களே.! இன்றளவும்    கடை (அங்காடி) என்றும் வீடு என்பதற்கு (இல்லம்) என்று குழம்புக்கு (சாறு) என்றும்   பேசுபவர்கள்.

இவர்கள் பேசும் பல தமிழ் வார்த்தைகளை உலக மறை என்று சொல்லக்கூடிய திருக்குறளில்  எடுத்து கூற முடியும்.

ஏன் தமிழை மட்டும் பேச கூடிய அருந்ததியர்கள் விவசாய குடி மக்களாக இன்றும்  வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழர்கள் வழிப்படும் நடுகல் வழிப்பாட்டு மறபு முறைகளை இன்றளவும்  வழிபடுவது அருந்ததியர் மக்கள் மட்டுமே.     

இவர்கள் தமிழர்கள் என்று அடையாளப்பட்டு விட்டால் தங்கள் உரிமைக்கும் வாழ்வியலுக்கும் பிரச்சனை வந்து விடும் என்று நினைக்கும், இங்குள்ள தீய சக்திகளுக்கு துணை போகும்  வலது சாரி தமிழ் தேசிய வாதிகளும்,  சாதி மேலாதிக்கத்தை கடை பிடிக்கும் தலித்களும்    திட்டமிட்டு அருந்ததியர் மக்களின் வரலாற்று உண்மைகளை மறைத்தும் திரிந்தும் வருகிறார்கள்.

உண்மை எப்போதும் மறையாது   வென்றே தீரும்.

இக்கட்டுரை சமூக வலைத்தளங்கள் பலவற்றில் பகிரப்பற்றிருந்த ஒரு கட்டுரை. எழுதியவரின் பெயரை எங்கும் அறிய முடியவில்லை. எழுதியவருக்கு எமது நன்றியுடன் இதனை பகிர்கிறோம்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates