மதுவொழிப்பு இயக்கம் பிரித்தானியர் ஆட்சி செய்த காலத்தில் தான் தோற்றம் பெற்றது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்கள் தத்தமது தேவைக்கான மதுவை தாமே தயாரித்துக்கொண்டார்கள்.
“சிங்களவர்கள் குடிக்கு பழக்கப்பட்டவர்கள் அல்லர்” என்று ரொபர்ட் நொக்ஸ் தனது குறிப்புகளில் எழுதிவிட்டுச் சென்றார். ஆனால் 1912 ஆம் ஆண்டு இலங்கையில் கிராமம் கிராமமாக கள்ளுக்கடைகளைத் திறக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை அன்றைய அரசாங்க சபையில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்றால் எந்தளவு தூரம் அந்த இடைக்காலத்துக்குள் இலங்கை மக்கள் குடிபோதைக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதை நாம் உணர முடியும்.
மகாவம்சத்தின் பிரகாரம் இலங்கையில் விஜயன் – குவேனி திருமணத்தின் போது பரிமாறப்பட்டதாக கூறப்படும் மது கள்ளாக இருந்திருக்க வேண்டும். அதுபோல மகாவம்சத்தின் பிரதான பாத்திரமான துட்டகைமுனு; எல்லாளனுடனான போரின் போது துட்டகைமுனுவின் யானை “கந்துல”வுக்கு மது கொடுக்கப்பட்டதாகவும், அது போல துட்டகைமுனுவின் படை அதிகாரிகளும் மது அருந்தியதாகவும் குறிப்பிடப்படுவதும் கள்ளாக இருக்க வாய்ப்புண்டு. இலங்கைத் தீவில் “கள்” இலகுவாக கிடைக்கும் மதுவகையாக காலாகாலமாக இருந்துவந்திருக்கிறது.
இலங்கையில் கள், சாராய உற்பத்தி ஒரு வியாபாரமாக வளர்ந்திருக்கவில்லை. போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றிய வேளை, இலங்கையில் தமக்கு வருமானம் தரத்தக்க துறைகளை தேடித்தேடி மேற்கொண்டார்கள். அப்படித்தான் மதுத் தயாரிப்பும் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் தென்னை உற்பத்தியும் பெருகத் தொடங்கிய காலம். தென்னம் பொருட்களின் உப உற்பத்தியில் ஒன்றாக கள்ளுற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி போர்த்துக்கேயரின் பிரதான வருமானங்களில் ஒன்றாகவும் அது பின்னர் ஆனது. போர்த்துக்கேயரை விட அதற்குப் பின் இலங்கையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கள் உற்பத்தித்துறையை மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். பிரித்தானியரின் ஆட்சியில் கள் உற்பத்தி என்பதை அரச ஆட்சியின் கீழ் முக்கிய ஒரு வருமானத்துறையாக ஆக்கிக்கொண்டார்கள். மேலும் அத்துறையை விரிவுபடுத்தினார்கள்.
1817 இல் இலங்கையின் விவசாய, வர்த்தக வியாபாரத் துறையின் மீதான ஆங்கிலேயர்களின் கரிசனை பற்றிய ஒரு விரிவான பெரிய நூலை பெர்டோலசி (Anthony Bertolacci) எழுதினார். இலங்கையின் காலனித்துவ பொருளாதாரம் பற்றி ஆராய்பவர்கள் தவிர்க்காத நூல் இது என்று கூறலாம். பிரித்தானியாவுக்கான இலங்கையின் சிவில் வருமானத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் பெர்டோலசி. அவர் தனது நூலில் அப்போதைய இலங்கையின் பிரதான வருமானமாக பட்டியலிடும்போது சாராயம், கள் என்பனவற்றிலிருந்து தான் பட்டியலைத் தொடங்குகிறார். மேலும் இலங்கையில் தென்னை மரங்களின் உற்பத்தி, அவற்றின் நுணுக்கங்கள், அவற்றின் பயன்பாடுகள், எங்கெல்லாம் பரவி இருக்கிறது, அவற்றில் இருந்து சாராய ஏற்றுமதி செய்யப்பட்ட விபரங்கள் போன்ற தகவல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். (1)
யாழ்ப்பாணத்தில் "நளவரும் பள்ளரும் உயர்சாதி இந்துக்களின் அடிமைகளாக இருந்தார்கள்" என்றும் அவர்களே கள்ளு சீவும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளதையும் இங்கே கொசுறாக சொல்லிவிட்டுக் கடக்கிறேன்.
கள், சாராயத்தின் பெருக்கம்
1834 இல் ஆங்கிலேயர்கள் மதுவரி சட்டத்தை முதற்தடவையாக அறிமுகப்படுத்துமளவுக்கு மதுவுற்பத்தி வியாபித்திருந்தது. 1844 ஆம் ஆண்டு 10ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் மேலும் இத்துறை பலமூட்டப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் கள்ளுத் தவறணைகளை தனியார் ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் கள்ளுற்பத்தியும், கள்ளுத் தவறணைகளும் பெருகின. தொகையாகவும், சில்லறையாகவும் விற்பனைசெய்யப்பட்டன. அது அரச கட்டுப்பாட்டின் கீழ் பெருவருமானம் ஈட்டும் துறையாக ஆனது.(2) 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டின் அரச வருமானத்தில் 10% - 15% வீதத்தை இந்த மதுவரியின் மூலம் தான் ஈட்டப்பட்டது.
அந்தந்த பிரதேசங்களில் இத்துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்குவதற்கென்று முகவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த அனுமதிகளை அவர்கள் ஏலத்தில் விட்டார்கள். இதன் மூலம் இலங்கையில் ஒரு புதிய பணக்காரப் பிரிவினர் உருவானார்கள். அது போலவே மதுவிற்பனை நிலையங்களும் பெருகின. அந்தக் கள்ளைப் பருகும் நுகர்வோரும் பாரிய அளவில் பெருகினர். மதுபோதைக்கு அடிமையாகும் கூட்டம் நாடளாவிய ரீதியில் பெருகியதை ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளவில்லை. அந்த வியாபாரத்தில் ருசிகண்டு லாபமீட்டிவந்த சுதேசிகளும் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 1810-1812 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 939,112 கலன்கள் சாராயம் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாண்டு இதன் மூலம் 6260 பவுண்டுகள் திறைசேரிக்கு வருமானமாக கிடைத்திருக்கிறது.
மதுவொழிப்பு இயக்கம்
இப்படிப்பட்ட சூழலில் தான் 1911இல் "மதுவொழிப்பு, மாட்டிறைச்சி உண்ணாதீர்" என்கிற பிரச்சாரத்தை நாடு பூராவும் கொண்டு சென்றார் அநகாரிக தர்மபால. இந்த இயக்கத்தை முன்னின்று தீவிரமாக வழிநடத்திய தர்மபாலாவுக்கு ஆதரவாக பல சிங்கள தலைவர்கள் ஒன்றிணைந்தனர். இந்த ஒன்றிணைவு காலப்போக்கில் இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாவதற்கான காரணிகளில் ஒன்றாக ஆனது. அநகாரிக தர்மபாலாவின் "சிங்கள பௌத்தயா" பத்திரிகை இந்த பிரசாரத்தின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.
“ஐரோப்பிய பரதேசிகள், முஸ்லிம்கள் (ஹம்ப), பொம்பாய்கார பரதேசிகள் போலவே ஐரோப்பிய போதைகளும் சிங்களவர்களுக்கு எதிரானவை”
என்று “சிங்கள பௌத்தயா”வில் முழங்கினார். இந்தப் பழக்கத்தால் சிங்களவர்கள் பல துர்நடத்தைகளுக்கு ஆளாகியிருப்பதாகவும், பௌத்த விழுமியங்களில் இருந்து விலகி, குடும்பங்களில் பெற்றோரும், பிள்ளைகளும், கணவர்மாரும், மனைவியரும் அவரவர் பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றத் தவறிவருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வழிதெரியாது தாம் நிலைகுலைந்து போயிருப்பதாகவும் அவர் எழுதுகிறார்.
“சிங்களவர்கள்; இயல்பில் வன்முறையற்றவர்களாக இருந்தபோதும் இந்த மதுப்பழக்கத்தின் காரணமாக கொலைகாரர்களாக ஆகியிருக்கிறார்கள்”
என்றும் அன்றைய “சரசவி சந்தரெச” பத்திரிகை எழுதியது. (3)
“ஹம்ப மறக்கல (முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிப் பதம்) காரன்கள் மது அருந்தாமல் இருக்க முடியுமென்றால் சிங்களவனால் ஏன் முடியாது?”
என்றார் அநகாரிக தர்மபால.
“ஆண்டொன்றுக்கு சிங்களவர்கள் மாசி கருவாடுக்காக முப்பது லட்சம் செலவளிக்கிறார்கள். கள்ளு, சாராயத்துக்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்கள். சிங்களவர்கள் மாசி கருவாட்டுக்கும், மதுவுக்கும் செலவளிப்பதை இனத்தின் வளர்ச்சிக்கு முதலிட்டால் பன்னிரெண்டே மாதங்களில் நமது தேசம் ஒரு சொர்க்கபுரிக்கு நிகராக ஆகிவிடும். மதுக்காக செலவிடுவதை சேமிக்க உறுதி பூணுவோம்!”
(சிங்கள பௌத்தயா, 1912)
தர்மபாலாவின் "மதுவை ஒழி! மாட்டிறைச்சியை உண்ணாதீர்" என்கிற பிரச்சாரம் தூய பௌத்தத்தை வலியுறுத்திய அதேவேளை அந்த பிரச்சாரம் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமன்றி ஏனைய சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிப் திருப்பப்பட்டது.
அநகாரிக தர்மபால தனது பிற்காலங்களில் ஆங்கிலேயர்களை விட அதிகமாக வெறுத்தது உள்நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களையே. தமிழர், மலையாளிகள், முஸ்லிம்கள், பறங்கியர் என அவரின் இனவெறுப்புணர்ச்சி என்பது இனவெறுப்போடு மட்டும் நிற்கவில்லை அது மோசமான மதவெறுப்பையும் இணைத்தே இருந்தது. ஆகவே தான் அவர் "சிங்கள கிறிஸ்தவர்களுக்கு" எதிராக அதிகமாக பிரச்சாரம் செய்தார்.
"கள் குடிப்பவன் இழிந்தவன்... மாட்டிறைச்சி உண்பவன் இழிசாதியன்"
என்பது அவரது சுலோகங்களில் ஒன்று.
“...ஆரிய தர்மத்தை பின்பற்றும் ஆரிய இனத்துக்கு உரித்தான சிங்கள பௌத்த சகோதர்களே! பௌத்த சொற்களை அன்புடன் பயன்படுத்தி... மதுபானத்தை அருந்தாதிருக்க போதியுங்கள்”
சிங்களவர்களுக்கு விஷ மதுபானத்தை அருந்தச் செய்து சிங்களவர்களை அழித்துவருகிற வெள்ளையர்களை நமது பரம்பரைப் பகைவர்களாகவே நான் கொள்கிறேன்” (4)
அநகாரிக தர்மபாலாவின் இந்தப் பிரச்சாரத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட மது வியாபார பிரமுகர்கள் ஏராளமான பணத்தை பௌத்த மறுமலர்ச்சி நடவடிக்கைக்கு நிதியாக வழங்கினார்கள். காலியில் பெரிய பௌத்த பாடசாலையை ஆரம்பிப்பதற்கு பெருமளவு நிதியைக் கொடுத்தவர் சாராய வியாபராத்தில் பேர்போன தனவந்தரான டி,டீ.அமரசூரிய. இப்படி பலரைக் குறிப்பிடலாம்.
மதுவொழிப்பு இயக்கத்தின் பிரச்சாரங்களின் போது ஆங்கிலேய அரசை விமர்சிகின்ற கண்டிக்கின்ற போக்கானது பின்னர் மெதுவாக ஆங்கிலேயர்கலின் மீதான வெறுப்புணர்ச்சியாகவும், சுதேசிய – விதேசிய சிக்கலாகவும், ஈற்றில் ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கான பிரச்சாரமாகவும் ஆங்காங்கே தலை தூக்கியது. ஆங்கிலேய அரசுக்கு எதிரான பிரச்சாரக் களமாக மதுவொழிப்பு இயக்கத்தின் களம் ஆனது.
கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கு
1912 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்கச் சட்டத்திருத்தத்தின் மூலம் மேலும் இத்துறை நெகிழ்ச்சியாக்கப்பட்டது. மதுவரித் திணைக்களமும் ஆரம்பிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் இதன் மூலம் சட்டபூர்வமாகவே அனுமதிபெற்று மதுவிற்பனை நிலையங்களாக அவற்றை மாற்றிக்கொள்ள எளிமையான வழியேற்பட்டது. 1900த்தில் இருந்ததை விட நூறு மடங்கு அதிகமாக மதுவிற்பனை நிலையங்கள் உருவாகின.இந்தச் சட்டத்தின் மூலம் 1072 புதிய சாராய விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியை அரசாங்க சபை வழங்கியது.(5)
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே இதற்கு எதிரான குரல்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதனால் பல சமூகக் குற்றங்கள் பெருகிவருவதை பல அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 1872இல் கவர்னர் வில்லியம் கிரகரி அரசாங்க சபையில் உரையாற்றும்போது மரணதண்டனைக்காக தன்னிடம் பரிந்துரைக்கப்பட்ட பலர் மதுபோதையின் விளைவாக குற்றம் இளைத்தவர்கள் என்றார்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். மதுவொழிப்பு இயக்கம் என்றால் அது சிங்கள பௌத்த இயக்கமாக நமக்கு கருத்தேறி இருக்கிறது. ஆனால் மதுவொழிப்பு குரல்கள் முதலில் வெளிவந்தது கிறிஸ்தவ மிஷனரி இயக்கங்களின் மத்தியில் இருந்து தான் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.
அரசின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். அப்படி மதுவொழிப்பு பிரச்சாரங்களில் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ பாதிரியார்களில் லிஸ்போவா பின்டோ, ஜோன் மர்டோக் போன்றோர் குறிப்பிடத்தக்க்கவர்கள். மதுபான நிலையங்களைக் குறைத்து, ஞாயிறு தினங்களில் அவற்றை மூட வேண்டு என்று அவர்கள் முதலில் கோரினார்கள். மேலும் ஒரு மதுபான நிலையம் திறப்பதாயின், அல்லது இருப்பதாயின் முதலில் அந்த பிரதேச மக்களின் விருப்பைப் பெறவேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால் இந்த இயக்கம் மதப் பிரிவுகளோடு மட்டுமே இந்த முயற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததால் நாடளாவிய ரீதியில் இயங்கவில்லை. எனவே காலப்போக்கில் இந்த முயற்சிகளோடு பௌத்த இயக்கங்களும் இணைந்து கொண்டதன் பின்னர் தான் மதுவொழிப்பு இயக்கம் நாடளாவிய ரீதியில் பெருகியது.
“ரேந்தகாரயோ”
போர்த்துக்கேயர் இலங்கையில் முதன்முதலாக கைப்பற்றி; அதன் பின்னர் ஆங்கிலேயர் 1815இல் இலங்கையை முழுவதுமாக கைப்பற்றும்வரையிலான மூன்று நூற்றாண்டுகள் இலங்கையின் கரையோரப் பகுதிகள் மட்டுமே போர்த்துகேய, ஒல்லாந்த காலனித்துவத்தின் கீழ் இருந்தது. வரிகளை அறவிட்டு தமது வருமானத்தை ஈட்டினார்கள் அவர்கள். தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் முழுவதும் அந்த வரிகளை அறவிடுவதற்கான ஆளணி அவர்களிடம் இருக்கவில்லை. எனவே அந்தப் பணிகளை உள்ளூர் பிரமுகர்களைக் கொண்டே மேற்கொண்டனர். அப்படி அறவிடும் வரிவசூலிப்பு ஊழியர்களை சிங்களத்தில் “ரேந்தகாரயோ” (Renters) என்பார்கள். இந்த சொல் போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் போர்த்துகேயர் மொழியில் தான் “ரேந்த” (Renda) என்கிற சொல் இருக்கிறது. அது “வரி”யைக் குறிக்கிறது. இந்த “ரேந்த” என்கிற சொல் ஆங்கிலேயர் காலத்திலும் அப்படியே தான் தொடர்ந்தது. சிங்களத்திலும் வரியை “ரேந்த” என்றே எங்கெங்கும் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் பலவகை வரிகள் நடைமுறையில் இருந்தன. பல இடங்களில் “பாதைவரி” கூட இருந்தது. காலப்போக்கில் இப்படி வரிகள் அறவிடுபவர்கள் பெரும் செல்வாக்கும், பணபலம் மிக்கவர்க்களுமாக பின்னர் ஆனார்கள்.
சிங்கள உயர்சாதி வெள்ளாளர்களாகிய “கொவிகம” அல்லாத சாதியினர் பெரும்பாலும் இலங்கையின் ஆரம்பகால காலனித்துவ பிரதேசங்களாகிய கரையோரப் பிரதேசங்களிலேயே அதிகமாக இருந்தனர். அவர்களில் பலர் தான் இந்த புதிய செல்வாக்கு படைத்த பிரிவினராக ஆனார்கள். அவர்கள் தமது பணத்தைக் கொண்டு மது வியாபாரத்தில் முதலிட்டார்கள். அதுபோல தோட்டங்களையும், பெருமளவு நிலங்களிலும் முதலிட்டார்கள். கீழே வெள்ளை வேட்டியும், மேலே ஆங்கிலேயர்களின் கோர்ட்டுகளையும் அணிந்து திரிந்தார்கள். தமது பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு பட்டப்படிப்புக்காக அனுப்பி விட்டார்கள். மருத்துவம், நீதித்துறை, தத்துவம், அரசியல், பொருளாதாரம் போன்ற உயர்பட்டப்படிப்பை கற்று திரும்பும் பொது அவர்கள் தாம் கற்ற காலங்களில், கற்ற சூழலில்அங்குள்ள ஜனநாயகத்தையும் தாராளவாதத்தையும் கற்றுத் திரும்பினார்கள். ஏன் பலர் மாக்சியத்தையும் கற்றுத் திரும்பினார்கள். இவர்கள் தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இலங்கை அரசியலின் திசைவழியை மாற்ற அணிதிரண்டார்கள்.(6) ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் இலங்கை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இவர்களுக்கு மதுவொழிப்பு இயக்கம் ஒரு முக்கிய காலமாக ஆனது.
1915ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் 220 கிளைகளை ஸ்தாபித்திருந்தது மதுவொழிப்பு இயக்கம். 24033 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருந்தது.
தேசப்பற்றுக்கு வித்தாக மதுவொழிப்பு இயக்கம்
இந்த இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட தலைவர்களே 1915 கலவரத்தின் போது அதிகமாக கைது செய்யப்பட்டார்கள். சேனநாயக்க சகோதரர்கள், டீ.பி.ஜயதிலக்க, வலிசிங்க ஹரிச்சந்திர,(7) ஆதர் வீ டயஸ், பியதாச சிறிசேன, மார்கஸ் பெர்னாண்டோ, ஜோன் கொத்தலாவல, ஜேம்ஸ் பீரிஸ், ஹென்றி அமரசூரிய போன்ற பலரை அடுக்கிக்கொண்டு போகலாம். கலவரத்தின் பின் சிங்கள பௌத்தயா பத்திரிகை தடை செய்யப்பட்டு அதன் காரியாலயத்தில் இருந்த அத்தனையையும் அள்ளிக்கொண்டு போனது ஆங்கிலேய அரசு. அநகாரிக தர்மபாலாவை சிறை வைப்பதற்கு இந்த காலத்தில் சிங்கள பௌத்தயா பத்திரிகையில் வெளிவந்தவற்றின் உள்ளடக்கங்களைத்தான் ஆதாரங்களாகக் காட்டினார்கள்.
மதுவொழிப்பு மற்றும் மாடுகளை அறுப்பதற்கு எதிரான பிரச்சாரம் முதன் முதலில் பெருமளவு மேற்கொள்ளப்பட்டது இந்த காலத்தில் தான். தனது இந்திய பயணங்களின் போது இந்து சமயத்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த மாட்டிறைச்சி உண்ணாமை என்பவற்றால் அவர் மேலும் கவர்ந்திருக்க வேண்டும். பௌத்தம் போற்றும் தம்மபதம் கூறும் ஐம்பெரும் குற்றங்களில் உயிர்களைக் கொல்லாமை முக்கிய அங்கம். ஆனால் அது மாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. சகல உயிர்களுமே அதில் அடக்கம்.
கள்ளுத் தவறணைகளை திறப்பதற்கான முயற்சிகளை ஆதரித்து இருந்தவர் ஆங்கிலேயர்களின் பரம விசுவாசியான கரைநாட்டு சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சார் சாலமன் கிரிஸ்டாப்பல் ஒபயசேகர (Solomon Christoffel Obeyesekere). அவர் பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராக ஆன பண்டாரநாயக்கவின் தந்தை.
இதற்கு நேரெதிராக ஆங்கிலேயர்களுடன் இந்த விடயத்தில் முரண்பட்டுக் கொண்டு கள்ளுத் தவறணைகளை எதிர்த்து நின்றவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் என்று சிங்கள நூல்கள் பல பாராட்டுவதையும் காண முடிகிறது.
பொன்னம்பலம் இராமநாதன் 1879 ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உத்தியோகபற்றற்ற உறுப்பினராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார். ஆனால் 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். கேணல் ஒல்கொட்டுடன் சேர்ந்து பரம விஞ்ஞான சங்கத்துடன் சேர்ந்து பல மாநாடுகளில் பங்குபற்றியவர். பௌத்த-இந்து உறவை பலப்படுத்தும் நோக்குடன் பௌத்த-இந்து பாடசாலைகளை அமைப்பதற்காக ஒல்கொட்டோடு சேர்ந்து பொன்னம்பலம் இராமநாதன் பணியாற்றியிருக்கிறார். இப்பேர்பட்ட உறவுகளும் பொன்.இராமநாதன் 1915 கலவரத்தின் போது சிங்கள பௌத்த தரப்பை பாதுகாக்க காரணிகளாக தொழிற்பட்டிருக்கிறது.
மதுவொழிப்பு இயக்கத்தின் “மாட்டிறைச்சித் தடை” குறித்த பிரச்சாரங்கள் காலப்போக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றாக உருமாற்றமடைந்த பின்னணி தனியாக பார்க்க வேண்டிய ஒன்று.
1915 கலவரத்தில் மதுவொழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிங்களத் தலைவர்களை ஆங்கிலேய அரசு வேட்டையாட முடிவு செய்தததன் பின்னணியில் இந்த மதுபான வியாபாரத்துக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதும் காரணமாக இருக்க வாய்ப்புண்டு என்றே கணிக்க முடிகிறது.
1915 கலவரத்தின் விளைவுகளைத் தொடர்ந்து மதுவொழிப்பு இயக்கம் சற்று செயலிழந்தது. அனால் ஓரிரு வருடங்களில் மீண்டும் சிங்களத் தலைவர்கள் அதற்கு உயிர்கொடுத்து நிமிர்த்திவிட்டனர். குறிப்பாக டீ.பி.ஜயதிலக்க, உதேனி த சில்வா, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர, சீ.த.எஸ்.குலரத்ன போன்றோரும், சேனநாயக்க சகோதரர்களும் மதுவொழிப்பு இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர்களாக ஆனார்கள். இத்தனைக்கும் சேனநாயக்க சகோதர்களின் தந்தை தொன் ஸ்பேட்டர் சேனநாயக்க பிற்காலத்தின் மாணிக்கக்கல் அகழ்வு வியாபாரத்தில் பிரசித்தி பெற்றபோதும் அவர் ஒரு பிரபல சாராய விற்பனைக் குத்தகைக் காரராக (Arrack Renter) இருந்தவர் தான்.
மதுவொழிப்பு இயக்கம் பற்றிய கற்கை உயர்தர அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அநகாரிக தர்மபாலாவை அறிந்தவர்கள் இவ்வியக்கத்தை தவிர்த்துவிட்டு பார்க்க முடியாது. அதுபோல இலங்கையின் சுதந்திரத்துக்கான கோரிக்கைகளையும், அதற்காக “இலங்கை தேசிய காங்கிரஸ்” அமைத்து தம்மை தயார்படுத்திய வரலாறையும் அறிய முயல்பவர்கள் அவற்றுக்கெல்லாம் முன்னோடியான “மதுவொழிப்பு” இயக்கத்தின் வகிபாகத்தை தவறவிட முடியாது.
ஆங்கிலேயர் காலத்தில் கரையோர பிரதேசமொன்றின் வீதியில் இருந்த கள்ளுத்தவறணையொன்றைப் பற்றிய சுவாரசியமான கதையொன்று உண்டு.
ஒருமுறை ஆங்கிலேய ஆளுநர் தனது உத்தியோகபூர்வ பனியின் காரணமாக தனது மோட்டார் வாகனத்தில் கொழும்பு காலி வீதியின் வழியாக தென்பகுதியை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார். போகும் வழியில் ஆளுநர் வீதியோர கள்ளுத் தவறணை ஒன்றில் கள் அருந்தும் ஆசை ஏற்பட்டது. வாகனத்தை அதற்கருகே நிறுத்திவிட்டு தனது வேலையாளை அனுப்பி தனக்கு கள் வாங்கிவரச் செய்து சந்தோசமாக அருந்தினார். அதுவரைகாலம் அவர் அருந்திய விஸ்கி, பிரண்டி, ஜின், பியர் போன்ற மேற்கத்தேய மதுபானங்களுக்கு பழகியிருந்த அவர் வித்தியாசமான சுவையுடன் கூடிய மதுவகையாக அதை உணர்ந்தார். பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்து சென்றுவிட்டார். அடுத்த நாள் அவர் மீண்டும் அதே பாதையில் தனது வாகனத்தை செலுத்தி வந்து கொண்டிருந்த போது முதல் நாள் கள்ளருந்திய அந்த தவறணையில் பெரிதாக ஆங்கில எழுத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து உறைந்துபோனார்.
அதில் இப்படி இருந்தது
“கௌரவ ஆளுநருக்கு கள் விநியோகிப்பவர்கள்...” (“Suppliers of Toddy to his Excellency the Governor”)(8)
- Bertolacci, A, View of the Agricultural, Commercial and Financial Interests of Ceylon. London. Black, Parbury and Allen, (1817)
- ආර්.එච්.ආර්.ගුණවර්ධන, අනගාරික ධර්මපාල තුමා සහ අමද්යප ව්යාපාරය. කැලණිය විශ්ව විද්යාලය, කැලණිය, 152nd Birth Anniversary of Srimath Anagarika Dharmapala National Summit - 2016
- ඩී.දිලානි නිරෝෂිනී ද සිල්වා, “අමද්යප ව්යාපාරයේ ගමන් මග සහ අනගාරික ධර්මපාල තුමා” 152nd Birth Anniversary of Srimath Anagarika Dharmapala National Summit - 2016
- රට දැය සසුන නැගු අභීත සිංහනාද - අනගාරික ධර්මපාල ශ්රීමතාණෝ - මහමෙව්නාව භාවනා අසපුව
- සාලිය හෙට්ටිආරච්චිඩී, බෞද්ධ ආගමික ප්රබෝධය, අමද්යප ව්යාපාරය සහ ශ්රීමත් අනගාරික ධර්මපාලතුමා. 152nd Birth Anniversary of Srimath Anagarika Dharmapala National Summit - 2016
- Kumari Jayawardena, Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka, Zed Books, 2002
- வலிசிங்க ஹரிஸ்சந்திர (09.07.1879 - 13.09.1913) பௌத்த மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர். அநகாரிக்க தர்மபாலவின் பிரதான சீடர். அநகாரிக தர்மபாலவைப் போலவே பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். மதுவொழிப்பு இயக்கத்தின் முக்கிய தலைவரான அவர் பௌத்த மதம், சிங்கள மொழி, சிங்கள பண்பாடு, உடை என்பவற்றை மக்கள்மயப்படுத்த வேண்டுமென அயராது உழைத்தவர். தொல்பொருள் ஆய்வுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன் சில Great Story of King Dutugemunu, The Significance of Jaya Sri Maha Bodhi, Life of King Devanampiyatissa போன்ற நூல்களை எழுதியவர்.
- எதிர்ப்பவர்களுக்கு சிரட்டைமாலை அணிவித்த மதுவொழிப்பு இயக்கம், சிலுமின 30.05.2020
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...