தமிழில் – என்.சரவணன்
நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ராவய பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் லண்டனில் பி.பி.சி சிங்கள சேவையில் பல ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் நாடு திரும்பி பல அரசியல் ஆவணப்படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக, தமிழர், மலையக, முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்தி வந்திருக்கிறார். சிங்கள சமூக சாதியப் பிரச்சினைகளைப் பற்றி இடையறாது பதிவுகளை செய்பவராகவும் இருக்கிறார். இக்கட்டுரை யாழ் நூலக எரிப்பு தொடர்பாக அவர் சிங்களத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை. தமிழ் மக்களின் போராட்டம் பற்றி அவர் வெளியிடவிருக்கும் சிங்கள நூலில் வெளியாக இருக்கும் கட்டுரை. வாசித்ததுமே தமிழுக்கு இது முக்கியம் எனக் கருதி இக்கட்டுரையை மொழிபெயர்ப்பதற்கு முன் அவரோடு உரையாடி சில விபரங்களையும் உறுதி செய்துகொண்டேன். – என்.சரவணன்
செப்டம்பர் 1993 ஆண்டு ஒருநாள், வவுனியாவிலிருந்து மடுபள்ளி செல்லும் சாலையின் வழியாக எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்தோம்.
இரு அரசாங்கங்களின் அனுமதி பெற்று நாங்கள் செல்லாததால் இது ஒரு ஆபத்தான பயணமாகவே எங்களுக்கு இருந்தது. இதனால் இந்த பயணத்தின் போது மடுவில் இருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றில் நாங்கள் ஒரு வாரம் தங்கியிருக்க நேர்ந்தது. எவ்வாறாயினும் நாங்கள் இரண்டு வார காலமாக அவர்களின் பகுதிகளில் இருந்தும் குறிப்பாக அடம்பன் கிளிநொச்சி ஊடாக நாங்கள் யாழ்ப்பாண நகரத்தை அடைந்தோம்.
அப்போதெல்லாம் வடக்கிலிருந்து செய்திகள் தெற்கை வந்தடைய முடியாத காலம் இந்தப் பயணத்தின் மூலம் பல்வேறுபட்ட செய்திகளை தெற்குக்கு கொண்டுபோய் சேர்க்கும் இலக்காக நாங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தோம். இந்தப் பயணத்துக்காக முழு அளவில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய எங்கள் ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் அவர்களையும் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறோம். இந்தப் பயணத்தின் போது எங்களுக்கு இன்னொரு இரகசியத் திட்டமும் இருந்தது. அது தான் யாழ்ப்பாண நூலகத்துக்கு நேர்ந்ததை ஆராய்வது. நாங்கள் கற்ற கல்வி நிறுவனங்களை விட நூலகங்களே எங்களுக்கு பல்கலைக்கழகங்களாக இருந்திருக்கின்றன.
1981 மே 31 இரவு யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை; இன்று வரை குணப்படுத்த முடியாத காயமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த அநியாயத்தை எந்த தென்னிலங்கை பத்திரிகைளும் பதிவு செய்யவில்லை. தென்னிலங்கையில் அதை பதிவு செய்த முக்கியமான பத்திரிகையாளர் அன்றைய “சட்டர்டே ரிவியு” பத்திரிகையின் ஆசிரியர் காமினி நவரத்ன அவர்கள். அதுவும் ஒரு பெரிய கதை அதைப் பற்றி இன்னொரு தடவை எழுதுவோம்.
யாழ் நூலகத்தை எரித்ததனால் உருவான புண் தீக்காயமாகவே இருப்பதற்கு இன்னொரு காரணம் செனரத் பரணவிதான, ஆனந்த குமாரசுவாமி ஆகியோரின் நினைவு தான். இவர்கள் இருவரதும் கையெழுத்துப் பிரதிகளை யாழ்ப்பாண செல்வந்தர்கள் ஏலத்தில் வாங்கி பேணிப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். அந்த பொதுநல குணமுள்ள சிரேஷ்ட தனவந்தர்கள் ஆவற்றைப் பின்பு யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பு செய்திருக்கக் கூடும். யால் நூலகத்துக்கு ஏற்பட்ட துயரம் இலங்கையின் வரலாற்றில் அபயகிரிக்கு நேர்ந்த கதி என்று சொல்லமுடியும்.
யாழ்ப்பாணத்துக்கு சென்றடைந்த முதல் நாளிலேயே நாங்கள் யாழ் நூலகத்தைச் சென்று பார்ப்பதை இலக்காகக் கொண்டிருந்தோம். இதைப் பற்றி விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் அலட்சியமான சிரிப்பையே உதிர்த்தார்.
“அது எரிக்கப்பட்டுவிட்டது. இனி பார்ப்பதற்கு அங்கே ஒன்றுமில்லை” என்று வெறுப்புடன் கூறினார். நாங்கள் தங்கியிருந்த ஞானம் ஹோட்டலில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே யாழ் நூலகம் அமைந்திருந்தது. எனவே நாங்கள் தமிழ்ச் செல்வனிடம் மேலதிகமாக எதையும் கூறாமலேயே தீயினால் கருகிப்போயிருந்த பாழடைந்த நூலகத்தின் எச்சங்களை போய்ப் பார்க்க கஷ்டமாக இருக்கவில்லை.
அடுத்த நாள் அன்றைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரைச் சென்று சந்தித்தோம். அவரை நாங்கள் சந்தித்த போது எங்கள் முதல் கேள்வி
“பரணவிதான சேகரிப்புகளுக்கு என்ன நேர்ந்தது."
அவர் அமர்ந்திருந்த கதிரையை இறுக்கி முன்னால் இழுத்துவிட்டு மேசை ஓரத்தை ஒரு கையால் பிடித்தபடி.
“பரணவிதான இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் பத்திரமாக இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் யாழ்ப்பாண நூலகத்தில் இருக்கவில்லை. அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்கியிருக்கவில்லை. அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துக்கே தந்திருந்தார்கள். நாளை வாருங்கள் நாங்கள் அவற்றை உங்களுக்கு காட்டுகிறோம்”
நாங்கள் மகிழ்ச்சியுடன் பெருமூச்சு விட்டோம். ஆனால் எங்கள் கேள்விகளை அத்துடன் நிறுத்திவிடத்தான் முடியுமா?
:அப்படியென்றால் ஆனந்த குமாரசுவாமி சேகரிப்புகள் எங்கே?” என்றோம்.
அவர் இறுக்கிப் பிடித்திருந்த மேசையின் விளிம்பிலிருந்து கையை விட்டுவிட்டு கதிரையில் சாய்ந்தார். உதடுகளைக் கடித்துக் கொண்டார். முகமும் இறுகிப் போனது.
“குமாரசுவாமி எரிக்கப்பட்டார்… யாழ்ப்பாண நூலகத்துடன் எரிக்கப்பட்டார். அவர் இரத்தத்தால் பாதித் தமிழராக இருந்தபோதும் அவர் இதயத்தால் ஒரு சிங்களவராக இருந்தவர். அவரின் பேரப்பிள்ளைகளால் அவர் எரித்து நாசமாக்கப்பட்டார்… நாங்கள் என்னதான் செய்ய முடியும்? இனி அந்த பழைய கதையில் பயனில்லை. நாளை வாருங்கள் பரணவிதானவை நாங்கள் யாழ்ப்பாணத்தில் எப்படி பாதுகாத்து வருகிறோம் என்பதைக் காட்டுகிறோம்.”
அடுத்த நாள் நாங்கள் பரனவிதானவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டோம். அந்தக் கையெழுத்துக்கள் உயிர் பெற்று அதை எழுதியவரின் மண்ணில் இருந்து வந்திருந்த எங்களை பரிகாசமாக பார்த்துக்கொண்டிருந்தன.
யாழ்ப்பாண நூலகத்தை எரித்த அந்த அநியாயக்காரர்களை அம்பலப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற தீவிர முடிவுக்கு அன்று தான் வந்தோம். ஏனென்றால் யாழ்ப்பாண நூலகத்தில் பரணவிதான கையெழுத்துப் பிரதிகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரிகளில் இருந்த கண்ணாடிகளில் எங்கள் முகங்களே அந்தக் குற்றவாளிகளாகத் தெரிந்தபடியால் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்ட நாங்கள் பிரயத்தனப்பட்டோம். “சிங்களவர்களாக நாங்கள் பிறந்ததற்காக நாங்கள் இந்த மானுட விரோத கொடூர குற்றத்திற்கு நாங்கள் உடந்தையாக இல்லை" என்பதை சிங்களவர்களாகிய எங்கள் மனசாட்சியைச் சொல்ல வேண்டியிருந்தது.
அதன் பின்னர் சில வாரங்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க நேர்ந்திருந்தது. ஆனால் அரச படைகள் யாழ்தேவி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதால் எங்கள் முயற்சிகள் பாதிக்கப்பட்டன.
1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடக்கினார். சமாதான பேச்சுவார்த்தையை பதிவு செய்வதற்காக யாழ்ப்பாணம் செல்ல எங்களுக்கும் மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்கு முந்திய தடவை விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் ஆட்சியைப் பற்றியும் எழுதும் பொது ஓரிடத்தில் புலிகளின் பாலியல் கலாசாரம்” பற்றியும் எழுதப்பட்ட ஒரு கட்டுரை யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலும் அதைப் பற்றிய விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்கள். இதனால் சமாதான பேச்சுவார்த்தையை அறிக்கையிடச் சென்றிருந்தாலும் எங்களுக்குள் ஒரு வகை உயிர்ப்பயம் இருந்தது. ஆகாய வழியாக பலாலிக்கு சென்று அங்கிருந்து மீண்டும் ஒரு படகில் யாழ்ப்பாணக் கடல் வாயிலாக யாழ்ப்பாண மீன்பிடித் துறை ஒன்றில் இறங்கும் போது எங்களுக்கு ஒருபுறம் வெட்கமாகவும், இன்னொருபுறம் பயமாகவும் இருந்தது.
வியக்கத்தக்கவகையில் யாழ்ப்பாணத்தில் எங்களை வரவேற்க வந்திருந்தவர்களில் தயா மாஸ்டரும், எங்கள் நண்பரும் பத்திரியாளருமான நிமலராஜனும் (பின்னர் கொல்லப்பட்ட) இருந்தார்கள். கொழும்பிலிருந்து அன்று சென்றிருந்தவர்களில் அவர்கள் எங்களைத் தான் ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். அவர்கள் தந்த உற்சாகமான வரவேற்பு எங்கள் வெட்கத்தையும், பயத்தையும் காணாமல் செய்தது.
சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த தமிழ் செல்வன் எங்களைக் கண்டதும், “நீ இன்றே கிளம்பிவிட மாட்டாய் அல்லவா..?” என மிகவும் நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். நாங்கள் சடுதியாக “இல்லை சில நாட்கள் இருப்போம். பின்னேரம் சந்திக்கலாம்” என்றோம்.
பின்னேரம் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் தமிழ்ச் செல்வனைச் சந்தித்த வேளை ஒரு விசேட கோரிக்கையை விடுத்தோம்.
“எங்களிடம் வீடியோ கெமரா இல்லை. ஒரே ஒரு நாளைக்கு வீடியோ கெமரா ஒன்றை குத்தகைக்கு கிடைக்குமா..?”
“எதற்காக…?”
“நாங்கள் யாழ் நூலக எரிப்பு பற்றி ஒரு ஆவணப்படத்தைச் செய்ய வேண்டும்…!”
தமிழ்ச் செல்வன் சிறுபிள்ளை போல பலத்து சிரித்தார்.
“உனக்கு போன தடவை வந்த விசர் இன்னமும் சுகமாகவில்லையா? கொழும்பில் மருந்தெதுவும் எடுக்கவில்லையா…? அதை கைவிட்டுவிடு..! அது முடிந்த கதை…”
“இல்லை அதை கைவிட்டுவிட முடியாது.. தயவு செய்து வீடியோ கேமரா ஒன்றைத் தாருங்கள் எங்களிடம் இல்லை அதற்காகத் தான் இந்தளவு கெஞ்சுகிறேன்”
தமிழ்ச் செல்வனின் முகம் சீரியஸாக ஆனது.
“சரி.. இவ்வளவு தான் எங்களால் ஆகவேண்டுமா? வேறெதுவும் வேண்டுமா என்றார். காலையில் ஹோட்டலுக்கு கேமரா ஒன்றை அனுப்புகிறேன்..”
எங்கள் உரையாடல் அத்தோடு நின்றது. அடுத்த நாள் காலை ஞானம் ஹோட்டல் அறையின் மேலாளர் கதவை தட்டிக்கொண்டிருந்தார். “உங்களைப் பார்க்க சிலர் வந்திருக்கிறார்கள்” என்றார்.
தமிழ்ச் செல்வன் வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தார். நாங்கள் கேட்டது ஒரு கேமராவைத் தான். ஆனால் அவர் இரு கமராக்களை கமரா காரர்களுடன் அங்கே அனுப்பி வைத்திருந்தார். நிமலராஜனும் எங்களோடு எங்கள் பணிகளுக்கு மொழிபெயர்ப்பு உதவிக்காக இணைந்துகொண்டார். நாங்கள் எங்கள் வேலையில் இறங்கினோம்.
அன்றைய காணி, போக்குவரத்து, மகாவலி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் சிறில் மெத்தியுவும் தான் யாழ் நூலகத்தை எரிப்பதற்காக கொழும்பில் இருந்து பல சண்டியர்களை அழைத்து வந்திருந்தார்கள் என்பதை நேரில் கண்ட சாட்சிகள் சிலரையும் சந்தித்தோம். 1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது வெல்வதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆணையின்படி வந்திருந்த தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் இறங்கியது தொடக்கம் பல விடயங்களை சொல்லக் கூடிய சாட்சிகளைச் சந்தித்தோம். இதில் ஒரு முக்கியமான ஓர் விடயத்தையும் கவனித்தோம். யாழ் நூலகம் எரிந்துகொண்டிருந்தபோது தீயை அணைப்பதற்காக அரச கடற்படையைச் சேர்ந்த தண்ணீர் லாரிகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால் யாழ்ப்பாண நூலகத்தை எரித்த குற்றச்சாட்டிலிருந்து இராணுவம் தப்பித்துக்கொண்டது என்று தான் கூறவேண்டும்.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பில் எழுதிய முக்கிய கட்டுரையை அடுத்த வாரமே ராவய பத்திரிகையின் ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டேன். ஆனால் அது ஒரு போதும் வெளியாகவில்லை. வீடியோவை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்திருந்தோம் அந்த வீ.எச்.எஸ் கசட் ராவய அலுவலகத்தில் எனது மேசை லாச்சில் இருந்தது. அன்று டீ.என்.எல் தொலைகாட்சி சானலில் பணிபுரிந்த சந்தன சூரிய பண்டார ஒரு நாள் அவசரமாக என்னோடு தொடர்பு கொண்டு யாழ்ப்பாண நகரத்தின் விசுவல் கொஞ்சம் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டார். ஒரு போதும் ஊடக தானத்திற்கு குறைவிலாது பணியாற்றிப் பழகிய நான் அதை அவர் அனுப்பிய வண்டி ஓட்டுனரிடம் கொடுத்தனுப்பினேன். அவை ஒரு போதும் எனக்கு மீதும் திருப்பி கிடைக்கவில்லை. எங்கள் யாழ்ப்பாண நூலகத்தின் கதை அத்தோடு நின்று போனது.
“ஆனந்த குமாரசுவாமி எங்களை மன்னியுங்கள். மனிதர்களின் வாழ்நாள் காலத்தில் செய்யக் கூடியதும், செய்ய முடியாதவையும் உண்டு”
+ comments + 4 comments
எதோவாக நினைத்து படிக்க உள் நுழைந்தேன் முடித்து வெளிவரும் போது கண்ணீரோடே வருவதாயிற்று..😢..
எம் தமிழினம் தனது அடையாளத்துடனே அழிய ஆரம்பித்திருக்கு போல....
அல்லது அழிக்க ஆரம்பித்தார்கள் போல...
Thanks to Sinhala brothers Who understand our pain in Srilanka!
அவர்களிலும் நல்ல மனிதம் இருந்திருக்கிறது. எல்லாம் முடிந்து போனது
Thanks Saravanan... Translating to Tamil.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...