இராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை அதிகார சபை” ஒரு விளம்பரத்தை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது.
“இராவண மன்னன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்கிற தலைப்பில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கான மூலத் தகவல்களை தேடும் முயற்சிக்கு உதவுமாறும் அந்த விளம்பரத்தில் கோரப்பட்டுள்ளது. இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை கோரியுள்ளது “சிவில் விமான சேவை அதிகார சபை.
இது இலங்கை அரச விளம்பரம் என்பதை கவனத்திற்கொள்க: |
இதனை 2020 யூலை 31 க்கு முன்னர் 0766317110 என்கிற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ mgrrdp@caa.lk என்கிற மின்னஞ்சல் மூலமோ அல்லது குறிப்பிட்ட விலாசத்துடன் தொடர்பு கொண்டோ அறியத்தந்தால் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது இலங்கை அரசு.
இராவணனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை சிங்களவர்களின் முப்பாட்டனே இராவணன் என்று நிறுவுகிற அவசரத்தில் இந்த புஷ்பக விமான புனைவில் அரசே நேரடியாக இறங்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மறுபுறம் இந்தக் கண்மூடித்தனத்தின் ஆபத்தின் எச்சரிக்கையையும் நமக்கு மிச்சம் வைக்கிறது.
உலகின் முதலாவது விமானத்தைத் தந்தவன் இராவணன் என்றெல்லாம் கட்டுரைகள் உள்ளன.
இராவணனை தற்போது சிங்களவர்கள் தமது நாயகனாகவும், சிங்கள பௌத்தர்களின் மூதாதையாராகவும் கொண்டாடி வருவதை அறிவீர்கள். இராவணன் வாழ்ந்ததாக கூறி வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள நிலங்களை சுவீகரிக்கும் முன்னெடுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். இராவணன் என்கிற கற்பனைக் காவியத்தில் உள்ளதையெல்லாம் இருந்ததாகக் கூறி இப்போது புஷ்பகவிமானத்தையும் தேடத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே புஷ்பக விமானம் வந்திறங்கிய பகுதிகளாக சிகிரிய மலை உள்ளிட்ட இன்னும் பல இடங்களை குறித்து புஷ்பக விமானம் வந்திறங்கிய தளங்கள் என்று நிறுவுகிற நூல்களும், ஆவணப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளதை அறிவீர்கள்.
1921 இல் U.D. Johannes Appuhami’s என்பவர் வாய்மொழிக் கதையை வைத்து எழுதிய கவிதை நூலான “The Story of the Wooden Peacock,” என்கிற நூலின் அட்டைப்படம் |
இராவணன் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இதுவரை அதிகாரபூர்வமாக எங்கும் வெளியானதில்லை. ஆனால் இலங்கையில் ஆயிரகணக்கான இடங்களை இராவணனின் அடையாளங்களாக கற்பிதம் செய்து புனைந்து நிறுவுகின்ற போக்கை தொடர்ச்சியாக காண முடிகிறது.
இலங்கையின் முக்கிய சர்வதேச விமான ஒட்டி பயிற்சி நிலையத்தின் பெயர் கூட இராவணன் விமான பயிற்சி நிலையம் (Ravana Aviation Academy) (https://ravanaaviation.com/) இது களனியில் இயங்கி வருகிறது.
ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிராக தொல்லியல் போர் தொடங்கியாயிற்று. இம்மாதம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வடக்கு கிழக்கில் தமிழர் பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆரம்பித்த “தொல்லியல் செயலணி” சிங்கள பௌத்தர்களை மட்டுமே கொண்ட ஒரு ஆபத்தான குழு. இராணுவத் தளபதி, பிக்குமார், ஆகியோரை தலைமையாகக் கொண்ட அந்தக் குழு ஒரு இராணுவவாத, இனவாத குழுவென்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
தொல்லியல் திணைக்களமானது கலாசார அமைச்சின் கீழ் இயங்குகிறது. பிரதம மகிந்த ராஜபக்சவே கலாசார அமைச்சராக இருக்கிறார் என்பதையும் கவனித்திற்கொள்க.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...