Headlines News :
முகப்பு » , , , » ஸ்ரீலங்காவும் தொல்லியலும் - எழில்

ஸ்ரீலங்காவும் தொல்லியலும் - எழில்

வரலாறு என்பது எப்போதுமே தற்சார்பற்ற குறிக்கோளை கொண்டிருந்ததில்லை, அதிகார வர்க்கத்தின் விருப்பத்திற்கும், நலன்களுக்கும் ஏற்றவாறே தற்சார்பான முடிவுகளை எடுக்கும் விதத்தில் ஆராய்ச்சி முறைமையில் வடிவமைக்கப்பட்டது. தேசியவாத அரசியலில் எம்.ஜி. சுரேஷின் 'யுரேகா என்றொரு நகரம்' நாவல் மிகவும் நாசூக்காகவும், துல்லியமாகவும் தொல்லியலை மையப்படுத்திய வரலாற்றியல் கட்டமைப்பையும் அதன் அரசியலையும் சொல்ல முற்படுகின்றது. வரலாற்றுத் திரிபுகளுக்கு பஞ்சமிருந்ததில்லை வரலாற்றில். வரலாற்றை எழுதுவதற்கு யாரிடம் அதிகாரம் இருந்திருக்கின்றதோ, இருக்கிறதோ என்பதன் அடிப்படையில் வரலாற்றின் முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன. சிறிலங்காவை பொறுத்தவரையில் வரலாற்றுப் புனைவுகள் அறிவுப்புல உத்தியோடும் முறைமையோடும் வரலாற்றியல் கோட்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பது தெரியாத இரகசியம் அல்ல. புனையப்பட்ட வரலாற்றின் முடிவுகளை கட்டவிழ்ப்பதும், பிரச்சனைக்குட்படுத்துவதும், மீள்வாசிப்புச் செய்வதும் காலத்தினுடைய கட்டாயமாகின்றது. நாவல் குறிப்பிடுகின்ற, வரலாற்று உண்மைகள் பேரம் பேசும் பொருளாக உள்ள அரசியல் சூழலில், காலனித்துவத்தினதும், நவீன காலனித்துவத்தினதும் முடிவுகள் முடிந்த முடிவுகளாக கொள்ளப்பட முடியாதவை.

இறந்த காலத்தை (வரலாறு) யார் சொந்தமாக்கின்றார்கள் அல்லது கையகப்படுத்துகின்றார்கள் என்பது தேசியவாத அரசியலில் மிகவும் முக்கியமானது. பின் - காலனித்துவ வரலாற்றில் காலனித்துவம் கையகப்படுத்திய தொல்லியல் சார்ந்த பொருட்களை காலனித்துவ நாடுகள் அவ் அவ் நாடுகளுக்கு வழங்கத் தொடங்கியிருந்தன. தொல்லியல் மற்றும் மரபுரிமைகள் பாதுகாப்பும், முகாமைத்துவமும் அரசுடைமையாக்கப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்டதன் மூலம் சட்ட அதிகாரத்தை அரசு கையிலெடுத்துக் கொண்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொல்லியல் பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். தொல்லியல் தடயங்களின் விளக்கங்கள், தெளிவுரைகள் அவற்றின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களில் தங்கியுள்ளது. மேற்கூறப்பட்டவைகளை அவதானிக்கும் போது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஓரளவிற்கு தெளிவாகின்றது. தொல்பொருளியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரமும், சட்டப்படியான நிலையும் ஒற்றை வரலாற்றியல் சொல்லாடல் கட்டமைப்பில் அதிகம் செல்வாக்கைச் செலுத்துவதோடு ஏனைய வரலாற்றியல் சொல்லாடல்களை நிராகரிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும். அரசமையப்படுத்திய தொல்லியல் நிகழ்ச்சித் திட்டங்கள், அரச்சார்பற்ற விளிம்பு நிலை வர லாற்றியல் சொல்லாடல்களை மேற்கூறப்பட்ட நிறுவனமயப்படுத்தல் புறந்தள்ளலாம்.

தொல்லியலுக்கும், தேசியவாதத்திற்கும் இடையிலான பிணைப்பு தவிர்க்கமுடியாதது அல்லது இயற்கையானது (P. L. Kohil + C. Fawcett 1995). தேச - அரச கட்டுமானத்தில் தொல்லியல் புள்ளி விபரங்கள், தகவல்கள் பரவலாக எல்லா நாடுகளாலும் பயன்படுத்தப்படுகின்றது (Silberman 1995). ஸ்ரீ லங்காவில் 1940க்கு பின்னர் கொண்டுவரப்பட்ட சட்ட ஒழுங்கின்படி தொல்லியல், மரபுரிமை சார்ந்த ஏகபோக உரிமையை அரசு கொண்டிருக்கின்றது. தொல்லியல் தேசியவாதத்தால் செல்வாக்குட்படுத்தப்படும் பொழுது அதிலுள்ள அபாயம், தொல்லியல் தன்னுடைய முதன்மை நோக்கிலிருந்து மாறுபட்டு, திசை திருப்பப்பட்டு தொல்லியல் ஆவணங்களை ஒரு குழுமத்தின் நலன்கள் சார்ந்து விபரிப்பதற்கு வழிகோலுகின்றது. பேராசிரியர் பரணவிதாணவின் மீது தமிழ் தொல்லியலாளர்கள் முன்வைத்த விமர்சனம் மேற்கூறப்பட்டதாக இருக்கின்றது. காலனித்துவ வரலாற்றில் தேசியவாத தொல்லியலின் எழுச்சி என்பது காலனித்துவத்திற்கு எதிராக சுதேசிகளால் காலனித்துவத்திற்கெதிரான சுதேசமை யப்படுத்தப்பட்ட தொல்லியலின் வகிபாகம் நேர்மறையானது, குறிப்பாக சுதேச இனங்களின் கலாசார, பாரம்பரியங்கள் தொடர்பில் (Ibid). ஆய்வுகளின் அடிப்படையில் பெரும்பாலான அரச தொல்லியலாளர்கள், அரசுக்கு சார்பாக தொல்லியல் தரவுகளை திரிபுபடுத்தியிருக்கின்றார்கள். தேசியவாத அரசியலில் குறிப்பாக நில உடைமை அல்லது நிலத்திற்கு உரித்துக் கொள்ளும்போது. வரலாற்றுக்கு முற்பட்ட trom time immeanoial) காலத்திலிருந்தே நிலம், அரசுக்கு (குறிப்பிட்ட இனத்திற்கு) சொந்தமாவிருந்ததாக குறிப்பிட்டு ஏனைய குழுமங்களின் மீது மேலாண்மையையும், அதிகாரத்தையும் பிரயோகித்திருக்கின்றனர். (C. Fawcett 1995)

சிறிலங்காவில் தேசியவாத தொல்லியல் எழுச்சியை மிக அண்மையது என குறிப்பிட முடியாது. அநுராதபுரத்தை புனித தலைநகராக மையப்படுத்தி அல்லது பௌத்தத்தின் தோற்றுவாயாக மையப்படுத்தி நிகழ்ச்சி த் திட்டங்கள் வகுக்கப்படும் போது தொல் லியல் தேசிய வாதம் ஆரம்பித்தது எனக் கொள்ளலாமா எனச் சரியாக கூறமுடியா விட்டாலும், தொல்லியல் தவிர்க்க முடியாதபடி அரசியல் சார்பானது' (Silberman 1995) தொன்மங்களுக்கூடாக கட்டமைக்கப்படுகின்ற வரலாற்றுக் கதைகள் ஒரு பக்கச் சார்பாக இருக்கும் போது குறிப்பாக ஒரு குழு மத்தின் கதையை மேன்மைக்குரியதாயும் பெருமைக்குரியதாயும் கட்டமைக்கும் போது மற்றமைகளின் தொன்மைகளுக்கூடாக கட்டமைக்கப்படும் கதைகள் புறந்தள்ளப்படுகின்றன. இதன் விளைவாக ஒன்றுக்கொன்று முரணான தொன்மங்களுக்கூடாக பேசுதல் முன்மொழியப்பட குழுமங்களுக்கிடைய முறுகல் நிலை ஏற்படுகின்ற து. (P.L. Kohl + C Fawcett 1995)

சிறிலங்கா தனது தொன்மங்களுக்கூடாக தன்னை ஆரியத்தின் வழித்தோன்றலாகக் கட்டமைத்திருக்கின்றது. திராவிடத்திலிருந்து தான் மேன்மையானதாகவும், தூய்மையானதாகவுமான புனைவை கௌதம தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் சொல்லாடல் சிங்களத்தின் மேன்மைத்தன்மையை வலியுறுத்துவதோடு அதனது புராதனத் தனிமைக்கும் வலுச் சேர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்களம் தனது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப தொல் லியலை அரசியல் பயன்படுத்தியுள்ளது. தொல்லியலை அரசியல்மயப்படுத்திய நாடுகளின் பட்டியலில் பலவற்றைச் சே ர்த்துக் கொள்ளலாம், சீனாவிலிருந்து இஸ்ரயேல் வரைக்கும் பட்டியல் நீண்டு செல்லும். அரசியல் மயப்படுத்தப்பட்ட தொல்லிய லிலிருந்து கட்டமைக்கப்படும் வரலாறும் நிச்சயமாக அரசியல் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. வரலாற்றாய்வாளர் தனது அரசியல் விருப்புக்கேற்பவும் தெரிவுக்கேற்வும் வரலாற்றியல் முறையைப் பயன்படுத்தி வரலாற்றுத் தரவுகளுக்கேற்ப வரலாற்றினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் (ShnirelIman 1995). அரசுடன் அடையாளப்படுத்தப்பட்ட தொல்லியல் சுயாதீனத் தன்மையை இழப்பதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமாகவே தென்படுகின்றது.

அரசு சார்பான அல்லது அரசு மையப்படுத்திய தொல்லியல் நிகழ்ச்சித் திட்டங்கள் அதிகாரத்தில் உள்ள இனத்தின் பெருமைகளைக் கோடிட்டுக் காட்டி மேலாண் மையை உருவாக்க முனையலாம். அரச தொல்லியல் நிகழ்ச்சித்திட்டங்களுக்குள் உள்வாங்கப்படும் தொல்லியல் நிபுணர்களின் சுதந்திரமும், சுயாதீனமும் சிக்கலுக் குரியது என்பதை ஜப்பானையும் அதனது புதிய அடையாளக் கட்டமைப்பையும் ஆய்வு செய்த Fawcett (1995) குறிப்பிடுகின்றார். தொல்லியல் கட்டமைக்கும் அல்லது கட்டமைக்கு முற்படும் தேசிய அடையாளம் சிக்கலானது. அவ்வாறான அடையாளக் கட்டமைப்பு அதிகாரமையம் கொண்டது. அதிகார மையத்திற்கு ஏற்ற வகையில் நெகிழ்வுத் தன்மையையும் அதே நேரத்தில் அடிப்படைவாத இறுக்கத்தையும் கொண்டது. அரசினுடைய இனத்தேசியவாத அரசியல் செல்லாக்கு தேசியவாத தொல்லியல் ஆராய்ச்சிகளின் செல்நெறியை தீர்மானிக்கின்ற தன்மையை தவிர்க்க முடியாது.

Triggerன் கருத்துப்படி 19ம் நூற்றாண்டின் கடந்த மூன்று தசாப்தங்களாக தேசியவாதக் கருத்தியல் தொல்லியல்களில் மிகவும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இச் செல்வாக்கின் வீரியம் எவ்வாறெனில் தொல்லியலாளர்களின் தேடலுக்கான திசையையும் அவர்கள் கேட்க வேண்டிய கேள்வியையும் தேசியவாதம் தீர்மானிக்கின்ற அளவிற்கு அதன் செல்வாக்கு உணரப்பட்டது. ஏற்கனவே கூறப்பட்டது போல தொல்லியல் தேச-அரச கட்டுமானத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்கின்றது. தேச- அரச கட்டுமானம் - தேசியவாதம் - தொல்லியல் இவற்றிற்கிடையேயான இடைவெளி மிகக் குறுகியது. இவ்வுறவுகளின் அடிப்படையிலேயே சிறிலங்காவின் தொல்லியல் மீள்வாசிப்புச் செய்யப்பட வேண்டியதும், விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.

இன மேலாண்மை செல்வாக்கினூடு வெளிவருகின்ற தொல்லியல் உண்மைகள் இன அதிகார நலன் சார்ந்தது. சிறிலங்கா தேச-அரச கட்டுமானத்தில் சிறிலங்காவின் தொல்லியல் ஏனைய இனங்களின் தொல்லி யல் உண்மைகளை மறுத்து ஒற்றை வரலாற் றியலை (homogeneous historiography) உருவாக்கிக் கொண்டே வந்திருக்கின்றது. 19ம் நூற்றாண்டின் தொல்லியல் அறிவுப்புல கற்கை நெறி எவ்வாறு விளங்கிக் கொள்ளப் பட வேண்டுமெனில், அது உருவாக்கும் தேசிய வரலாறு சார்ந்து. அதாவது தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கும், சுயாதீன தேசத்தை உருவாக்குவதற்கும் (Diaz Andreu 1995) மேற்கூற்று பின்-காலணித்துவ வரலாற்றில் விளங்கிக் கொள்ளல் அவசிய மாகின்றது.

தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் அவதானிப்பின்படி தொல்லியல் ஆராய்ச்சி என்பது சமூக செயற்பாடு (community engagement R. Coningham 2019) சிறிலங்காவில் இம் முறைமை செயலற்று, பிரத்தியேக முறைமை (exclusive) மட்டுமே பின்பற்றப்படுவதாக தோன்றுகின்றது. பரசூட் முறை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது. சமூக பரிச்சயமில்லாத ஆராய்ச்சியாளர்கள் கொண்டுவரப்பட்டு சமூகம் புறந்தள்ளப்பட்டு அல்லது அந்நியப்படுத்தப்பட்ட சூழலில் தான் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. சமுகத்தை அந்நியப்படுத்திய சூழல் மக்களுக்கும், மண்ணுக்கும், மதத்திற்கும், பூர்வீகத்திற்குமான தொடர்புகளை துண்டித்து தொல்லியலை வெறுமனே உதிரியான செயற்பாடாக காட்டும் (R. Coningham 2019).

வடக்கு கிழக்கின் பிரபல்யமான சைவ இந்துக் கோயில்களின் அருகே பௌத்த விகாரைகள் மிக வேகமாக கட்டப்பட்டு வருகின்றன. கண்ணியா , முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின் றது. வடக்கு - கிழக்கின் கண்டெடுக்கப்பட்ட பிரதானமாக சைவ இந்துக் கோவில்களில் கண்டெடுக்கப்பட்ட (ஏனைய பிரதேசங்க ளிலும் கண்டெடுக்கப்பட்ட) மரபுரிமைச் சின்னங்கள் வடக்கு - கிழக்கிலிருந்து பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளன. மரபுரிமைச் சின்னங்களுக்கு வெவ்வேறு விழுமியங்கள் உண்டு அவற்றில் அவ் மரபுரிமைச் சின்னங்கள் கொண்டுள்ள கலாச்சார விழுமியம் அச் சமூகத்திற்கு மிக அவசியமானது. அந்த இடம் அமைந்திருக்கும் இடத்தினு டைய தொன்மைக்கும் அப்பால், அதைச்சூழ கட்டமைக்கப்பட்டிருக்கும் வழிபாட்டிடம், மத அனுஷ்டானங்கள், மத நம்பிக்கைகள் அது கொண்டிருக்கும் சகவாழ்வுத் தன்மையை கட்டமைக்கும் அடையாளம், சுயமரியாதை அச் சமூகத்தின் பெருமை (James O. Young 2012) என்பவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இம்மரபுரிமைதக் கலாச்சாரப் பெறுமதி-விழுமியம் (cultural value) என்பது அதை இடப்பெயர்த்தும் போது ஏனையவர்களுக்கு புரிய வாய்ப்பிருக்காது. மரபுரிமைச் சின்னங்கள் வடக்கு-கிழக்கிலிருந்து அகற்றப்படும் போது அதைச்சூழ கட்டமைக்கப்பட்டிருந்த கலாச்சாரப் பெருமையும், சுய மதிப்பும் சிதைக்கப்படுகின்றது. மரபுரிமைச் சின்னங்களைக் கையகப்படுத்தல் என்பது ஒரு சமூகத்தின் இறந்த காலத்தைக் கட்டுப்படுத்தலாகும்.

எந்தவொரு மரபுரிமைச் சின்னத்திற்கும் அறிவிப்புல விழுமியம் (cognitive value) உண்டு அவ் அறிவுப்புல பெறுமதி, அதன் அகநிலை சார்ந்தும், புறநிலை சார்ந்தும் அமையலாம். அகநிலை சார்ந்த அறிவிப்புல விழுமியம் இறந்த காலகட்டத்தைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மரபுரிமைச் சின்னங்க ளின் கைப்படுத்தலை ஊக்குவிப்பதில்லை (Ibid).

என். சரவணன் குறிப்பிடுகின்ற சிறி லங்காவின் வரலாற்றுப்புனைவு என்பது மகாவம்சம் குறிப்பிடுகின்ற இரு புனைவுகளுக்குள் கட்டப்பட்டிருக்கின்றது. முதலாவது சிங்களவர்கள் சிங்களத்தின் வழித் தோன்றல் என்பது, இரண்டாவது, வங்கத் தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகின்றது சிங்களவரின் வரலாறு. இந்த பூர்வீக இருமைப்புனைவுகளுக்கிடையே சிறிலங்கா பெரும்பாண்மையினரின் தேச - அரச கட்டுமானம் நிச்சயமற்ற தன்மையை எப்போதும் சுட்டிக் கொண்டேயிருக்கும். இவ்விரு புனைவுகளின் பூர்வீக நிச்சய மற்ற தன்மை சிங்களத்தை ஒன்று புதுப் புனைவை நோக்கிய தேடலுக்கு இட்டுச் செல்லும். அந்த தேடலின் கண்டு பிடிப்பு என். சரவணன் கூறுகின்ற 'இராவணனை சிங்களமயப்படுப்படுத்துவது, இரண்டாவது சிங்களப் பூர்வீக புனைவை சிக்கலுக்குட்படுத்துகின்ற இன்னொரு இனத்தின் பூர்வீகத்தைக் கட்டுடைப்பது. தமிழர்களின் பூர்வீகத்தை கட்டுடைப்பதன் மூலம் சிங்களம் தனது தொன்மையைக் கட்டமைக்க முயலுகின்றது. தொல்லியல் ஆய்வாளர்கள் தேசத்திற்கான தொல்லியல் (National archaeology), தேசியவாத தொல்லியல் (Nationalist archaeology &P. L. Kohl 1998) இவ்விரண்டிற்கும் இடையேயான இடைவெளி வெவ்வேறானது எனக் குறிப்பிடுகின்றனர். சிறிலங்காவைப் பொறுத்தவரையில் இவ் இடைவெளி மிக நுண்ணியது, வேறுபாடு இல்லை, இரண்டுமே ஒன்று தான் என்றும் கூறலாம்.

2009க்கு பின்னரான அரசியல் வரலாற்று வெளியில் சிறிலங்கா முன்னெடுக்கின்ற தேச- அரச (nation state) கட்டுமானம் தொல்லியலை மையப்படுத்தியதாக அமைகின்றது. அரசு - தொல்லியல் - இனம் - மதம் இவற்றின் கூட்டு இணைவின் மையம் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதாகும் அந்த ஓற்றை சிறிலங்கா (Homogenous Sri Lanka) விற்கான அடித்தளம் தான் தற்போது முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள். சிறிலங்கா முன்னெடுக்கின்ற தொல்லியல் ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரல்கள் எல்லாமே சிறிலங்காவின் தேச - அரச (nation State) கட்டுமானத்தில் மிக காத்திரமான பங்களிப்பை வழங்கப்போகின்றது. தொன்மங்களுக்கூடாக வரலாற்றுக் கதை சொல்லல் சிறிலங்காவின் தேசியவாதத்தை வலுக்கட்டமைப்பு செய்வதுடன் மட்டுமல்லாது இன்னொரு தேச கட்டுமானத்தை கட்டவிழ்ப்புச் செய்கின்றது.

(சிறிலங்கா) சிங்கள அரசின் தொல்லியல் முயற்சிகள் தமிழினத்தின் பூர்வீகத்தைச் சிக்கலுக்குட்படுத்தி, தமிழர்கள் வந்தேறிய குடிகள் என்ற ஆதாரமற்ற வரலாற்றுச் சொல்லாடலுக்கு வலுச்சேர்த்து தமிழர்களின் பூர்வீக மையத்தை வடக்கு - கிழக்கிலிருந்து இடம் பெயர்த்தி, பூர்வீகத் தன்மையை பலவீனமாக்குவதே முதன்மை நிகழ்ச்சி நிரலாகும். தொல்லியல் நிகழ்ச்சி நிரலோடு முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கலை தவிர்க்க முடியாதபடி செய்கின்றது. தமிழர்களின் எல்லைக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சிங்கள - பௌத்த மயமாக்கல் தமிழர் நிலத்தை துண்டாடுகின்றது. மேற்கூறிய நிகழ்ச்சிகள் தமிழர்களின் தேச கோரிக்கையை பலவீனமாக்கி தேச நீக்கம் செய்கின்றது.

நன்றி - தினக்குரல் (12.07.2020)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates