"இலங்கை மலையகத் தமிழர்கள் : நூல் விபரப்பட்டியல்" என்கிற நூல் வெளியீட்டு விழா 18.07.2020 அன்று முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடக்கவிருக்கிறது.
மலையக படைப்புகளை ஆவணப்படுத்தும் செயற்பாட்டில் முக்கிய மைற்கல்லாக இந்த நூலைக் குறிப்பிடலாம். இந்த நூலை பேராசிரியர் சே.சந்திரசேகரன், கலாநிதி இரா.ரமேஷ் ஆகியோர் தொகுத்துள்ளனர். இந்த நூலில் என்.சரவணன் எழுதிய "கள்ளத்தோணி" என்கிற நூல் பற்றி சிறு குறிப்பை இங்கே பகிர்கிறோம்.
இலங்கை மலையகத் தமிழர்கள் : நூல் விபரப்பட்டியல்
நூலின் பெயர் : கள்ளத்தோணி
ஆசிரியர் : என்.சரவணன்
வெளியீடு : குமரன் புத்தக இல்லம், கொழும்பு
ஆண்டு : 2019
பக்கங்கள் : 239
என்.சரவணன் சரிநிகர் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர். இவர் பத்திரிகைத் துறையில் காத்திரமான பதிவுகளை வெளிப்படுத்தி வருபவரும் தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகளில் தீவிரமான பங்கு கொண்டவருமாவார். அரசியலில் பெண்களும், 'பெண்களின் அரசியலும்', '1915 கண்டிக் கலவரம்', 'அறிந்தவர்களும் அறியாதவையும்', 'தலித்தின் குறிப்புக்கள்' ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். சமூக பண்பாட்டு அரசியல் தளத்தில் முனைப்பான பதிவுகளை ஏற்படுத்தி வருபவர்.
'நமது மலையகம்' என்ற இணையதளத்திணையும் உருவாக்கி மலையகம் குறித்த ஆழ்ந்த தேடல்களை வெளிப்படுத்தி வருகின்றார். 'கள்ளத்தோணி' எனும்; இந்நூலில் மலையகம் குறித்து பல்வேறு விரிவான கட்டுரைகளை எழுதியுள்ளார். 'கள்ளத்தோணி' எனும் கருத்தாக்கம் உருப்பெற்ற விதம், அதன் பின்னணி, கருத்தியல் தளங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மலையக அரசியலில் நேருவின் வகிபாகம், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற கட்டுரைகள் மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதனை சான்றுகளுடன் பதிவு செய்துள்ளன. உருளுவள்ளி போராட்டம், முல்லோயா கோவிந்தன், 1983ஆம் ஆண்டு கலவரம், சம்பள உயர்விற்கான அக்டோபர் தன்னெழுச்சிப் போராட்டங்கள் போன்ற கட்டுரைகள் விரிவான தளங்களில் ஆராயப்படுகின்றன.
இலங்கையின் பெருந்தோட்டப் பகுதியில் வேலை செய்த வெள்ளைக்கார துரையான ப்ரஸ்கேர்டல் அவர்கள் இந்திய தொழிலாளர்களுக்காக செய்த சேவைகளையும் அவரது இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளையும் விளக்கியுள்ளது ஒவ்வொரு காலப்பகுதியிலும் மலையக மக்கள் மீது ஏவி விடப்பட்ட வன்முறைகள், கருத்தியல் தளங்கள் பண்பாட்டு அடக்குமுறைகளை ஆதாரமாகக் கொண்டு பல விடயங்களை இந்நூல் ஆராய்கின்றது.
மலையக மக்கள் பெரும்பாலானோர் தலித் என்ற அடையாளத்துடன் சில புரிதல்களை முன்வைத்திருப்பது விவாதத்துக்குரிய கட்டுரைகளாக மிளிருகின்றன மலையக மக்களில் வாலாற்ற சம்பவங்கள் தீர்க்கப்படாத பிரச்சினைகள், தேசியம் தொடர்பான விடயங்கள் என்பவற்தை முன்னிறுத்தியதாக அமைந்திருக்கும் இந்த பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...