Headlines News :
முகப்பு » , , , » மலையகத்தில் ஆயுத இயக்கமா? 90களில் மலையகக் கைதுகள்! - என்.சரவணன்

மலையகத்தில் ஆயுத இயக்கமா? 90களில் மலையகக் கைதுகள்! - என்.சரவணன்

இக்கட்டுரை 1995 பெப்ரவரியில் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்தது. சந்திரிகா 1994 இல் பதவியேற்றவுடன் மலையகத்தில் பெருந்தொகையான மலையக இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுக்குள்ளானார்கள். புதிய பொலிஸ், இராணுவ காவலரண்கள் மலையகத்தின் பல இடங்களிலும் புதிதாக முளைத்தன. மலையகம் பீதிக்குள் சிக்கவைக்கப்பட்டது. மலையக தேசியம் பேசியவர்களும் இலக்குக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 

94 பொதுத் தேர்தலுக்காக ஐ.தேக. சிறையிலிருந்து சந்திரசேகரன், காதற், தர்மலிங்கம் ஆகியோரை விடுவித்தது. தமக்கு சாதகமாக இருப்பார்கள் என்று நம்பியது. ஆனால் ஐ.தே.க அத்தேர்தலில் வெற்றிபெறவில்லை. சந்திரிகாவின் ஆட்சி அமைவதற்கு ஒரே ஒரு ஆசனம் தேவைப்பட்ட நிலையில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் சந்திரிகாவோடு இணங்கி அந்த ஆட்சி அமைவதற்கு காரணமானார். பிராயச்சித்தமாக சந்திரசேகரனுக்கு பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

சந்திரசேகரன் மலையகத்தில் நடந்த கைதுகளை கண்டும் காணாது இருந்தார். சில இடங்களில் அதை நியாயப்படுத்தவும் செய்தார். தான் கைதாகி தண்டனை அனுபவிக்கவும் காரணமாக அதே அவசர கால சட்டத்துக்கு ஆட்சியின் அங்கமாக அவர் ஆனபின் அதனை ஆதரித்துக் கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் தொண்டமானுக்கும் அவருக்கும் எந்த வித்தியாசமில்லை என்று அம்பலப்பட்டார். அதுவரை பேசிவந்த “மலையக அதிகார அலகு” பற்றிய திட்டங்களையும் கைவிடத் தொடங்கினார். மலையகக் கைது விடயத்திலும் அரசை பாதுகாப்பதைத் தான் செய்தார்.

மலையகத்தில் நிகழ்ந்த தொடர் கைதுகள் பற்றி விரிவாக எழுதுவதற்காக மலையகத்தின் பல இடங்களுக்கும் பிரயாணித்தேன். கெடுபிடி கூடிய அந்த நாட்களில் இந்த தனிப்பயணம் பீதிமிகுந்ததாகவே இருந்தன. எண்கள் சரிநிகர் பத்திரிகையோடு தொடர்பில் இருந்த ஒரு வழக்கறிஞரை நுவரெலியாவில் சந்திப்பதற்காக நாள் முழுதும் அலைக்கழிய நேரிட்டது. இறுதியில் அவமானப்படுத்தப்பட்டு வெளியேறினேன். இரவு நித்திரைக்கு கையில் இருந்த குறைந்த பணத்தில் இடம் தேடி அலைந்து கிடைக்காமல் சாராயத் தவறனைக் கொட்டிலில் இரவு நித்திரையை கழித்தேன். அதிகமான கைதுகள் நிகழ்ந்த “கிறிஸ்லஸ்பார்ம்” பகுதியில் பல தொழிலாளர்கள் எனக்கு நன்றாக உதவினார்கள்.


அங்கே தான் J.O.C. குண்டு வெடிப்பை மேற்கொண்ட வரதனை மறைத்து வைத்திருந்த இடம். வரதன் தற்கொலை செய்து கொண்டு இறந்ததன் பின்னர் இங்குள்ள பலர் சிறைசெய்யப்பட்டார்கள். வரதனுக்கு புகலிடம் கொடுத்ததற்காக ஜேக்கப் மேரியம்மா என்கிற பெண்ணும் அவரது சகோதரன் ராஜாராமும் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதை மற்றும் நீண்டகால சிறைவாசத்தின் பின் மேரியம்மா விடுதலை செய்யப்பட்டார். கடந்த வாரம் அவர் இயற்கை எய்தினார்.

அது போல தோழர் சாந்தகுமாரும் இந்த மலையகக் கைதுகளின் போது காரணமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தார். அவர் சிறையிலிருந்து இரகசியமாக தனது கைப்பட எழுதிய கடிதங்களை சரிநிகர் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அதனால் இந்த பயணத்தில் அவரையும் சென்று சிறையில் சந்தித்தேன்.

அதற்கு முந்திய ஆண்டுகளில் சந்திரசேகரன், காதர், தர்மலிங்கம் ஆகியோரின் விடுவிப்புக்காக குரல் கொடுத்து வந்ததுடன், அவர்களின் நேர்காணல்களையும் கட்டுரைகளையும் வெளியுலகுக்கு கொண்டு வந்தேன். இதற்காக பல வாரங்கள் அவர்களை நான்காம் மாடியிலிருந்து கோட்டை பொலிசுக்கு சனிக்கிழமைகளில் கொண்டு வரும் நாட்களில் சந்தித்து வந்திருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவர்கள் வெளிவந்ததன் பின்னர் தமது கொள்கைகளையும், அரசியல் வேலைத்திட்டங்களையும் கைவிட்டு இன்னொரு தொண்டமானாக மாறினார்கள். இந்தக் கட்டுரை அந்தக் காலப் பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

அது தலவாக்கலை பகுதி. தலவாக்கலை தோட்டத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அந்த பிரதான வீதியோரத்தை தாண்டும் ஒவ்வொருவரும் நெஞ்சு நிறைந்த பீதியுடனேயே அதை தாண்டுகின்றனர். காரணம் அங்கு அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தடை முகாம். அந்த தடை முகாமைச் சேர்ந்த பொலிசாரின் சோதனை, விசாரணைகளுக்குள்ளால் போய்வரும் எவரும் 'இங்கும் தொடங்கிவிட்டார்கள்' என்று எரிச்சல்படாமல் வந்ததில்லை!

சென்ற வருடம் யூலை மாதத்தின் ஒரு நாள் அந்தத் தடை முகாமைச் சேர்ந்த பொலிசார் அந்த வழியில் வந்த 23 வயதையுடைய ஒரு இளைஞனை விசாரித்தனர். தன்னி டம் அடையாள அட்டை இல்லை என அவன் கூறியதைத் தொடர்ந்து வாக்குவாதம் தொடங்கியது. வழமையான இவ்வாறான சோதனை, திட்டல், தூஷண வார்த்தை என்பவை யாருக்குமே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தத்தான் செய்யும். அடிக்கடி இவ்வாறான விசாரணைகட்கு முகம் கொடுத்து வந்த அந்த இளைஞன் அன்றைய விசாரணையின் போது பாவிக்கப் பட்ட வார்த்தைகளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாகி விட்டான். இளம் வயது. வார்த்தைகளுக்கு கட்டுப்படாத கோபம் அவனுக்கு. இறுதியில் பொலிசாரை அவன் தாக்கிவிட்டான். கணநேர ஆவேசத்தில் தாக்கினாலும் நெஞ் சுப்பயம் சும்மா விடவில்லை. அடுத்தது என்ன நடக்குமோ என்ற பீதி, அவன் கால்களை வேகமாக இயங்கச்செய்தன. ஓடினான் பொலிசாரும் விரட்டிச் சென்றனர். “புலி.... புலி... ஓடுறான் பிடியுங்கோ " என சிங்களத்தில் கத்திக் கொண்டே துரத்தினார்கள் பொலிசார். அவன் பின்னால் வீதியில் நட மாடிய ஏனைய சனங்களும் ஓடினர். அவன் பிடிபட்டான். அவனை அடித்தும் இழுத்தும் சென்றனர் பொலிசார்.

அந்த இளைஞனை துன்புறுத்தி விசாரணை செய்த பொலிசார்; அவ்விளைஞனுடன் தப்பிச் சென்ற 25 வயதுடைய இன்னொரு இளைஞனையும் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்களென்றும் அதற்கான பல ஆதாரங்களை கைப்பற்றியிருப்பதாகவும் T.56 ரக இயந்திரத் துப்பாக்கிகள் இரண்டும், கைத்துப்பாக்கிகள் இரண்டும், கிரனைட்டுக்கள் பத்தும், இரு ரகங்களைச் சேர்ந்த 500 துப்பாக்கிரவைகளும், சையனைட் மருந்து குப்பிகள் ஐந்தையும் இதுவரை அவர்களிடமிருந்து எடுத்துள்ளதாகவும் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அறிவித்தனர்.

மேற்படி செய்தி வெளியானதைத் தொடர்ந்து மலையகத்தில் பீதி பரவியது. “இவன்கள் திரும்பவும் பொடியன்களை புடிக்கத் திட்டமிடுராங்கள்'' என்ற பீதி கலந்த கதை பரவியது. எதிர்பார்த்ததைப்போல் பெருமளவு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக செப்டெம்பர் தொடக்கம் டிசம்பர் வரை இக்கைது பெருமளவு நடந்தது. டிசம்பர் மாதமளவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டோர் போக தடுப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 28 எனத் தெரியவந்தது. இந்த கைதுகள் பற்றி சிங்கள மொழியில் பெருமளவு பிரச்சாரங்களை மேற்கொள்ள எண்ணிய நுவரெலிய பொலிசார் திவயின, லங்காதீப ஆகிய பத்திரிகைகளை மட்டும் அழைத்து இது முழுக்க முழுக்க 'புலிகளின் செயற்பாடுகளே' என தொடர்ச்சியாக எழுதி வெளியிடும்படி தெரிவித்துள்ளார்கள்.

பொலிசாரிடமிருந்து இது தொடர் பான தகவல்களைப் பெற்றுக் கொண்ட பத்திரிகைகளும் பொலி சாரின் ஆலோசனைப்படியே எழு தினார்கள். ‘த ஐலன்ட்', 'திவயின', 'லங்காதீப' போன்ற பத்திரிகைக ளில் இதுபற்றி வெளிவந்த செய்திகள், கட்டுரைகள் என்பவை மிகவும் இனவாத ரீதியிலும் பொறுப் பற்ற முறையிலும் வெளியிடப்பட் டிருந்தன. டிசம்பர் 25ஆம் திகதி லங்காதீப பத்திரிகையில் 'எதிர்காலத்தில் மலையகம் புலிவாயில் சிக்குமா?'' என வெளியிடப்பட்ட கட் டுரையானது அங்குள்ள நிலை மையை ஊதிப்பெருக்கி மிக மோச மாக சித்திரித்திருந்தது. அச்சித்திரிப்பின் பின்னணியில் பொலிஸ் தரப்பே இயங்கியிருந்தது பலருக்கு தெரியாத செய்தி!

பொலிசாரின் தரப்பில் இன்று இது பற்றி தெரிவிக்கப்படும் தகவல்கள் இவையே:

மலையகத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று புலிகளுடன் மேற்படி இளைஞர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனேகமாக தலவாக்கலை, டிக்கோயா, கொட்டகலை, பொகவந்தலாவ, ஹட்டன், நுவரெலியா, நானுஓயா போன்ற பிரதே சங்களைச் சேர்ந்தவர்கள் கிளிநொச்சியில் 3மாதம் ஆயுதப் பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மலையகத்தில் (ULO - Up Country Liberation Organization) 'மலையக விடுதலை முன்னணி' எனும் இயக்கமொன்றை ஏற்படுத்தி இயங்கிவந்திருக்கிறார்கள். இவர்களது அடிப்படை நோக்கம் மலையகத்தில் “மலைநாடு” எனும் பேரில் தனி நாடு உருவாக்குவதே. இவ்வியக்கத்தின் தலைவர் தான் 25 வயதுடைய அருணாச்சலம் லோகேஷ் எனும் இளைஞர். (இவர் ஒக்டோபர் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவ்விளைஞர் 1992 நவம்பரில் புலி உறுப்பினரொருவருடன் வடக்குக்கு சென்று அங்கு 3 மாதங்கள் ஆயுதப் பயிற்சியை பூர்த்தி செய்துவிட்டு மீண்டும் மலோகம் வந்து சேர்ந்துள்ளார் என அத்தகவல்கள் கூறுகின்றன.

ULO வின் பிரதான நடைமுறை வேலைத்திட்டங்கள் 3 விடயங்களைக் கொண்டதென்றும் அவற்றில் முதலாவது அவ்வியக்கத்துக்கான உறுப்பினர்களை சேர்ப்பது, இரண்டாவது மலையகத்தில் ஆயுதப் போராட்டமொன்றுக்கான நிதிகளைத் திரட்டுவது, மூன்றாவது ஆயுதங்களை சேகரிப்பது.” என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் 18 - 25 வயதுக்கு இடையிலான இளைஞர்களே உள்ளனர். இவர்களோடு பல இளைஞர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள், பல தோட்டங்களிலிருந்து இளைஞர்கள் திடீரென்று தலைம றைவாகிவிடுகின்றனர். இவர்கள் வடக்கிற்கு சென்று பயிற்சி பெற்று திரும்பி வந்து தங்களது வேலைகளை ஆரம்பிக்கின்றனர். நிதிதிரட்டலுக்காக இவர்கள் பல கொள்ளைச்சம்பவங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 19ம் திகதியன்று அகரபத்தனை - அல்பியன் எஸ்டேட்டில் (ALBION ESTATE) நடந்த கொள்ளைச் சம்பவமும் இவர்களாலேயே நடத்தப்பட்டிருந்தது முகமூடி அணிந்து ஈடுபட்டிருந்த இக் கொள்ளைச் சம்பவத்தின் போது தங்களை EPDP இயக்கம் என இவர்கள் கூறிக்கொண்டுள்ளனர். இது போன்று பொகவந்தலாவ பகுதியில் எஸ்டேட் ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவமும் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவை பொலிசார் தங்களது ஊகங்களை ஆதாரப்படுத்த சொல்கிற தகவல்கள்.

இது தவிர தோட்டப்பகுதியில் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவேலைநிறுத்தப் போராட்டங்களையும் திட்டமிட்டு நடத்துவதும் இவர்களது வேலைத்திட்டமாக இருக்கிறது என்றும், கடந்த வருடம் செப்டெம்பர் 14ம் திகதி பொகவந்தலாவ - லெட்சுமி தோட்டத்தில் நடந்த வேலைநிறுத்தத்தையும் அங்கு பெண் தொழிலாளர்கள் பலர் தோட்ட அதிகாரிகளை தடுத்து வைத்து செய்த போராட்டம் இவ்விளைஞர்களின் வழிகாட்டலிலேயே மேற்கொள்ளப்பட்டது என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

“பொலிசார் இந்த விசாரணையை இது புலிகளின் வேலையே'' என அழுத்திக் கூறுவதற்காக ஆங்காங்கு கிடைக்கும் சிறு சலசலப்புக்களையும் துணைக்கு சேர்த்துக் கொள்கின்றனர்'' என்கிறார் மலையகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி.

வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவ்விளைஞர்கள் இன்றுடன் 100 நாட்களுக்கும் மேலாகியும் தடுப்புக்காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் குற்றவாளிகள் என்பதற்கு தம்மிடம் போதியளவு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் பொலிசார், இவர்களது விசாரணைகளை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செய்து முடிக்காமல் இழுத்தடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

"விசாரணைகக்கென்று 180 நாட்கள் வரை பொலிசாருக்கு தடுப்புக் காவலில் வைக்க சட்டம் இடமளிக்கிறது. இதை சாட்டாக வைத்துக் கொண்டு எந்தவொரு குற்றத்துக்கும் சம்பந்தமில்லாத எங்களது பிள்ளைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள"

என்கிறார் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரது தந்தை,

“வழக்கறிஞர்களைக் கேட்டால் 'பொலிசார் நீதிமன்றத்துக்கு உங்கள் பிள்ளைகளைக் கொண்டு வரும்வரை எங்களால் வழக்கு தொடர்வது சாத்தியமில்லை. பொலிசார் விசாரணைகளை முடிக்கும் வரை நீதிமன்றத்துக்கும் கொண்டு வரப்போவதில்லை என்று சொல்கிறார்கள்"

என அத்தந்தை மேலும் குறிப்பிடுகிறார்.

இதைவிட கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் பலர் பிள்ளைகளின் விடுதலைக்காக சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தொழிற்சங்க தலைவர்களிடமும் முறையிட்ட போதும் அவர்கள் இவ்விடயத்தில் ஓடி ஒழிகிறார்கள் என்றும், தமிழ் பிரதி அமைச்சர் ஒருவரிடம் ஒரு தகப்பன் சென்று “என் புள்ள ஒங்க கட்சிக்காக வேலை செஞ்சதுனாலதான் அவன பயங்கரவாதின்னு சொல்லி இழுத்திட்டு போயிட்டாங்க. அவனுக்காக நீங்க பேசி விடுதலை செய்யவைங்க சாமி' என கண்ணீர் வடித்த போதும் அந்த அமைச்சர் அவன் என்ட கட்சியில்ல, சம்பந்தப்பட்ட கட்சிய போய் பாருங்க'' என்று விரட்டி விட்டாராம்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களில் பலர் 'மலையக மக்கள் முன்னணி'யில் இருந்தவர்களென்றும் அவ்வமைப்பின் அரசியல் வேலைகளில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரியவருகிறது. ஆதாரங்களுடன் பிடிபட்டதாக கூறப்படும் இளைஞர்களில் இருவர் சந்திரசேகரனின் அருகிலேயே (சிறைக்குச் செல்வதற்கு முன்) இருந்தவர்களென்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சிலர் தெரிவிக்கின்றனர்.

மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த முக்கிய நபரொருவரிடம் ''இந்த இளைஞர்களது விடுதலைக்காக ஏன் இன்னமும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை ?" என கேட்ட போது அவர் தோழர், இது டேஞ்சர்..... மிச்சம் பேரு ஆயுதங்களோட பிடிபட்டிருக்காங்க, நாங்க தலையிட்டா எங்களையும் சந்தேகப்படுவாங்க. எங்கட கடந்த கால சம்பவங்களாட தொடர்புபடுத்தப் பாப்பாங்க...'' என்கிறார்.

அவரது பதிலைப்பற்றி பேசிக் கொண்டிருந்த மலையக மக்கள் முன்னணியுடன் மனமுறிவுற்றிருக்கும் இன்னொருவர் இவ்வாறு ஆத்திரத்துடன் பேசினார்: “இவங்கள் எல்லாரும் பயங்கரவாதிகள்னு முத்திரை குத்தப்பட்டு உள்ளுக்கு இருக்கிற நேரம் அவங்களுக்காக கத்தினது நாங்க....... நாங்களும் எந்த நேரமும் சந்தேகத்துக்குள்ளா கிற ஆட்கள். அப்படியிருந்தும் நாங்க பயப்பட இல்ல. ஆனா இன்னைக்கு அவங்கட பிழைப்புவாதத்தையும் இருப்பையும் பாதுகாக்க அவங்கட மக்களின்ட விடுதலைக்கு குரல் கொடுக்க பயப்படுறாங்க. ஆனா ஒன்னு..... இனி இவங்க அவுட். இவங்களை இனி நம்பேலாது... இவங்களும் இன்னுமொரு தொண்டமான் கூட்டந்தான் '' என்கிறார்.

மலையகத்தில் பல இடங்களில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல சோதனை முகாம்கள், காவலரண்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கடக்கும்வரை பலரின் மனம் படபடத்துக் கொண்டிருக்கும். குறிப்பாக இச்சோதனை முகாம்களை ஹட்டன், நுவரெலியா, றாகல, பொகவந்தலாவ, தலவாக்கலை பகுதிகளில் அதிகமாகக் காணலாம். 1991 மத்தியில் கொழும்பில் JOC' (கூட்டுப்படைத் தலைமையகம்) குண்டுவெடிப்பு சூத்திரதாரிக்கு புகலிடம் அளித்தது மலையகம், என்பது வெளித்தெரியவந்ததன் பின் மலையகத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு (சந்திரசேகரன், காதர், தர்மலிங்கம் உட்பட) சலசலப்பை ஏற் படுத்திய பின்னரே மேற்படி முகாம்கள் பல ஏற்படுத்தப்பட்டன. அன்று போடப்பட்ட இம்முகாம்கள் இன்னும் அகற்றப்படவில்லை. மாறாக பெருக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடந்த கைது விசாரணைகள் என்பவற்றைத் தொடர்ந்து இவை மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது இவ்வாறு இருக்க ஒரு சில இளைஞர்களை விசாரணை செய்துவிட்டு, மலையகம் பூராவும் பெருமளவு கைது நடவடிக்கை களை பாரியளவில் நடத்திவருவதும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகளைத் துரிதப்படுத்தாமல் வருடக்கணக்கில் தடுப்புக்காவலில் வைத்திருப்பதும் இறுதியில் 'ஒப்புக் கொண்டால் மன்னிப்பு! அல்லது குறைந்த தண்டனை' எனக்கூறி, செய்யாத ஒன்றைச் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்த சம்பவங்களையும் தமிழ் இளைஞர்கள் பலர் ஏற்கனவே சந்தித்துவிட்டார்கள். கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதி இதற்கு சான்று பகரும். அன்றைய அரசாங்கத்தை ஞாபகப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கையும் அமைந்துவிடுமா? என்பது பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் வேதனை தொனிந்த கேள்வியாகவுள்ளது.

மேலும், பொலிசாரின் கூற்றுப்படி அவ்விளைஞர்கள் தீவிரவாத செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்கள் என்று கூறப்படுவது உண்மையாக இருந்தால், அவற்றிற்கான தீர்வு கைது, துன்புறுத்தல், தண்டனை என்பதல்ல. அவர்களது கோரிக்கைகள், அத்தோடுவற்றை ஆராயாது, அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தால் அது இன்னொரு வடகிழக்கு யுத்தத்தை மலையகத்தில் உருவாக்க நேரிட்டாலும் ஆச்சரியம் இல்லை. அன்று தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஊதாசீனம் செய்ததும், இளைஞர்கள் சிறு அளவிலான கிளர்ச்சி செய்த போது அவற்றை மோசமாக அடக்கி அழிக்க முயற்சித்ததும், ஏற்படுத்திய விளைவை இன்று நாடே அனுபவிக்கிறது. இங்கும் அது போன்றதொரு முறையே கையாளப்பட்டால் என்ன விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் ....... என்பதை சம்பவங்களைக் கூர்ந்து பார்க்கும் ஒருவர் தெளிவாகப் புரிந்துகொள்வார். வரலாறு தெரியாதவர்கள் முட்டாள்கள்..... அதைக் கற்றுக் கொள்ள மறுப்பவர்களோ வெறும் முட்டாள்கள் மட்டுமல்ல, முழு நாட்டிற்குமே ஆபத்தைத் தேடித்தரப் போபவர்கள் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கலாம்.

"புலிகளுடன் எங்களை முடிச்சு போட முனைகின்றனர் பொலிசார்" டொக்டர் சாந்தகுமார்

புதிய ஜனநாயக முன்னணி (New Democratic Front)யைச் சேர்ந்த டொக்டர் சாந்தகுமாரும் இச்சம்பவத்தின் சந்தேக நபர் என்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த ஆதாரங்களில் - குறிப்பு புத்தகமொன்றில் சாந்தகுமாரின் பெயர் இருந்ததைக் கொண்டே இவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் டிசம்பர் 10ம் திகதி மு.ப. 11 மணியளவில் ஹட்டன் டன்பர் ரோட்டில் அமைந்துள்ள அவரது வைத்தியசாலையிலிருந்து கைது செய்யப்பட்டு ஹட்டனில் ஒருநாள் தடுத்து வைத்திருந்து நுவரெலியா கொண்டு போய் அங்கிருந்து உடபுஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று வைத்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள 28 பேரும் வெவ்வேறான பொலிஸ் நிலையங்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சாந்தகுமாரை பார்ப்பதற்காக உடபுஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையம் சென்று (வழக்கறிஞர் ஒருவரின் கடிதத்துடன்) பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் அனுமதி கேட்ட போது உடனடியாகப் பார்ப்பதற்கு அனும திக்க முடியாதென்றும் மாலையளவில் சந்திக்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டது. கொழும்பிலிருந்து சிரமப்பட்டு வந்திருக்கிறோம் மாலை சந்திப்பதாயிருந்தால் மீண்டும் போக சிரமம் பஸ் கிடையாது என்பதை கூறியபோது, இரண்டு நிபந்தனைகள் விதித்தனர். 'ஒன்று 5 நிமிடங்கள் மட்டுமே கதைக்க அனுமதிக்க முடியும், அடுத்தது தமிழில் கதைக்க முடியாது, சிங்களத்திலேயே கதைக்க அனுமதிக்க முடியும் கதைக்கும் போது எங்களது பொலிஸ் ஒருவர் அருகில் இருப்பார்' என்றார். அப்படியேனும் கதைக்க கிடைத்ததையிட்டு சம்மதித்தேன்.

பொலிஸ்காரர் கூட்டிச்சென்று இதோ சாந்தகுமார்' எனக் காட்டினர். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவர். சிங்களத்தில் மட்டுமே நமக்கு கதைக்க அனுமதி என அவரிடம் நான் கூறிவிட்டு தெரிந்த சிங்களத்தில் கதைத்தேன். சாந்தகுமார் கூறியது இதுதான்.

''என்னை குறிப்பிட்ட ஒரு இயக்கத்துடன் சம்பந்தம் என கூறுகின்றார்கள். எனக்கு அப்படியொரு சம்பந்தமும் கிடையாது. கைது செய்யப்பட்ட இளைஞர்களை தெரியுமா என விசாரித்தார்கள். உண்மையில் அவர்களில் ஒரு சிலரை எனக்குத் தெரியும். காரணம் நாங்கள் இடதுசாரி அரசியலைச் சார்ந்தவர்கள். நாங்கள் அவர்களுடன் அரசியல் ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தியும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் ஏதாவது ஒரு பயங்கரவாத இயக்கமொன்றைச் சார்ந்தவர்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது பொலிசார் என்னை விசாரிக்கையில் 'உன் கிளினிக்குக்குள்தான் ஆயுதங்களை கொண்டு வந்து மறைத்து வைத்து விட்டு எடுத்துச் செல்வதாக சொல்கிறார்களே' எனக் கேட்டனர். அவர்களுடன் இருந்த நட்புறவு காரணமாக அவர்களது பேக்குகள், புத்தகங்கள் ஏதேனும் வைத்துவிட்டு செல்வார்கள். அதில் என்ன இருக்கிறது என தேடுவதற்கு எனக்கு உரிமை கிடையாது' எனவே உள்ளே என்ன இருந்தது என்றும் எனக்குத் தெரியாது. பொலிசார் இப்போது என்னை அவ்வியக்கத்தின் அரசியல் ஆலோசகர் (Political Advisor) என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், எனது விடுதலை பற்றி கதைக்க இன்னும் எந்த கட்சியோ, தொழிற்சங்கமோ முன்வரவில்லை. அவர்களுக்கும் எங்களை இது விடயத்தில் இறுக்கி வைக்க வேண்டிய தேவையும் உள்ளதே!

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான தெரிவுக்குழுவின் முன்னிலையில் எமது (NDF) அமைப்பு இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைத்த தீர்வுகள் புலிகள் முன்வைத்த யோசனைகளுடன் ஒத்துப்போவதாகவும் பொலிசார் கூறுகின்றனர். அதையும் தங்களுக்கு சார்பாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர்” என்றார்.

டொக்டர் சாந்தகுமார் கடந்த காலத்திலும், பிரச்சினைக்குரிய காலப்பகுதியிலெல்லாம் சிறையிலடைக்கப்பட்டவர். 1983இல் இருந்து தொடர்ந்து 3 வருடங்களுக்கும் மேலாக (JOC குண்டு வெடிப்பு சூத்திரதாரி வரதன், மலையக மக்கள் முன்னணி காதர் ஆகியோருடன்) பூஸாவில் அடைக்கப்பட்டிருந்தார். அதற்குப் பின்னரும் ஒரு தடவை கைது செய்யப்பட்டு சிலகாலம் சிறையிலிருந்தார்.

புலிகளின் பிரதேசமாக முத்திரை குத்தப்பட்ட கிறிஸ்லஸ் பார்ம் எஸ்டேட்

கொட்டகலை - கிறிஸ்லஸ் பார்ம் எஸ்டேட்டிலிருந்து (Chrystlos Form Estate) கைது செய்யப்பட்ட இளைஞர் ஆறுமுகம் முத்துவிநாயகம் (வயது 29) தோட்டத்தில் வேலை செய்யும் சராசரி இளைஞன், வேலை நேரம் போக காய்கறித் தோட்டம் செய்து வருபவர். இப்போது இவர் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கிறிஸ்லஸ்பார்ம் சென்று அவரது பெற்றோர்களை சந்தித்து இது பற்றி கேட்ட போது அவரது தாய் இப்படி தெரிவித்தார். "அன்றைக்கு நவம்பர் முதலாம் திகதி, தீபாவளிக்கு முதல் நாள் காலை 5 மணியிருக்கும் வேலைக்கு ஆயத்தப்படுத்துவதற்காக எழுந்து தேனீர் கலக்கிக் கொண்டிருந்தேன். பின்வாசல் கதவு பலமாக தட்டப்பட்டது. "யாரது....' என்று கேட்டுக்கொண்டே போய் கதவை திறந்தேன். வெளிச்சம் பட்டு கண் கூசியது. பொலிஸார் டோச் லைட்டை அடித்துக்கொண்டே 'எங்கே ரவி?' என்றனர். என் மகன் முத்துவிநாயகத்தை ரவி என்றுதான் அழைப்போம். நான் பதட்டத் துடன் என் கணவரை எழுப்பினேன். பொலிசார் அவசரப்படுத்தினார்கள். எனது மகன் திருமணம் முடித்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அவனின் புதியவீடு எங்களின் அடுத்தவீடே. அவனின் வீட்டிற்கு விரைவாக கூட்டிச்சென்று கதவை தட்டித் திறந்தோம்.. மகன் எழுந்து வந்து திறந்தான். அவனுக்கும் டோச் லைட் அடிக்கப்பட்டது. அவன் 'யாரது .... லைட் அடிக்கிறது' எனக் கேட்டான்.

ரவியின் தாயின் அரவணைப்பல் ரவியின் குழந்தை

“நாங்கள் ஹட்டன் பொலிஸிலிருந்து வருகிறோம்...... நீர் தானே ரவி.. வாரும் எம்முடன்' என அழைத்தனர். மகன் சேட்டை மாட்டிக் கொண்டு கிளம்பி னான். நாங்களும் பின்னாலேயே அழுது கொண்டு சென்றோம், அவன் எந்த பொல்லாப்புக்கும் போறவனில்ல சாமி, அவனை ஏன் கூட்டிக்கிட்டுப் போறீங்க, அவனை விட்டிடுங்க சாமி..... என கதறினேன். விசாரித்து விட்டு விட்டுவிடுவோம் என்றனர். ஜீப் அருகே சென்றடைந்ததும் அங்கு இன்னொரு வன் விலங்கிடப்பட்ட நிலையில் முகம் தெரியாத அளவு தலையை குனிந்தபடி நின்று கொண்டிருந்தான். பொலிசார் அவனிடம், இவன் தானே? என கேட்ட னர். அவன் தலையை ஆம் என்பதைப் போல் அசைத்தான். இருவரையும் ஏற்றிக்கொண்டு ஜீப்புறப்பட்டது. தலையசைத்து காட்டியவன் அடையாளம் காட்ட வந்தவன் என்றும் அவனது பெயர் லோகேஷன் என்றும் பின்னர் அறிந்தோம்.

பொலிசாரிடம் சென்று எவ்வளவோ கெஞ்சியும் விடவில்லை. ஏற்கனவே நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தில் இவன் சம்பந்தப்பட்டிருகிறான் என பொலிசார் கூறுகின்றனர். ஆனால் அவன் எவ்வளவு தூரம் உழைப்புக்கு மதிப்புக் கொடுக்கிறான் என்பதும், எவ்வளவு அப்பாவி என்பதும் எங்களுக்குத்தான் தெரியும்.

என் மகனை பிடித்துக் கொண்டு போய் இன்றோடு நூறுநாளுக்கும் மேலாகிறது. இன்னமும் விட்டபாடில்லை. எங்களை கவனிக்க அவன் ஒருத்தன் மட்டும் தான் இருந்தான். அவனின் மனைவி மாசமாயிருக்கா இந்த நேரத்திலயும் அவன் இல்லை ". என்றார்.

இந்த கிறிஸ்லஸ் பார்ம் எஸ்டேட, வழமையாக மலையகத்தில் ஏதாவது சலசலப்புக்குள்ளாகும் காலங்களிலெல்லாம் கண்காணிப்புக்கும், சோதனைக்கும், கைதுகளுக்கும் உள்ளாக்கப்படும் இடம். இதுபற்றி அந்த தோட்டத்தைச் சேர்ந்த ஆர் எஸ் சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கும் போது.

"இந்த தோட்டம் கடந்த காலங்களில் எல்லோர் வாயிலும் பேசப்பட்ட இடம், 1991இல் கொழும்பில் நடந்த கூட்டுப்படைத் தலைமையகம் (IOC) குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரி என சொல்லப்பட்ட வரதன் பிடிபட்டது இந்தத் தோட்டத்தில் தான், வரதன் அன்று இங்கு மறைந்திருந்த போது பொலிசார் சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்டனர். வரதன் பொலிசாரையும் தாக்கி விட்டு சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டான். அதைத் தொடர்ந்து இந்த 'கிறிஸ்லஸ் பார்ம் மிலுள்ள எல்லா இளைஞர்களையும் சந்தேகித்தனர். அன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இங்கிருந்து கைது செய்யப்பட்டனர். குறிப்பாக இந்த தோட்டத்தில் மலையக மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய பலர் கைது செய்து சில காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதற்குப்பின்னரும் பல தடவைகள் இந்த தோட்டம் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டது. எங்கள் அடையாள அட்டைகள் யாழ்ப்பாண அடையாள அட்டைகள் போல் கவனிக்கப்படுகிறது. வெளியில் பொலிசாரின் சோதனைக்கு உள்ளாக்கப்படும் போது எங்களது அடையாள அட்டையில் கிறிஸ்லஸ் பார்ம் என்றதைக் கண்டவுடன் "ஆங்... கிறிஸ்லஸ் பார்ம் நேத... கொட்டின்கே ஏரியா நேத..... வரதன்கே ஏரியா நேத" (புலிகளின் ஏரியா அல்லவா. வரதனின் ஏரியா அல்லவா?) என கேட்கின்றனர். சில வேளை கூட்டிக் கொண்டு போய் விடுகின்றனர்' என்றார். 

ஓ.ஏ.ராமையா - செங்கொடிச்சங்கத்தின் பொதுச்செயலாளர்)

"சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோரில் 90%க்கும். அதிகமானோர் நிரபராதிகளே! வடகிழக்குக்கு போய் வந்தாலும் கூட அதுவே கைதுக்கான ஆதாரமாகிவிடுகிறது இந்த பொலிசாருக்கு. இவ்வாறு குற்றம் செய்யாத நிரபராதிகள் பலர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்று முன்னைய அரசாங்கத்தோடு - ஒப்பிடும் போது ஓரளவு பரவாயில்லை.

மலையகத்தில் தீவிர தேசியவாதம் இருப்பதாக ஒப்புக்கொள்ள முடியாது. அப்படி ஒன்று தோன்றுவதானால் அது எப்போதோ உருவாகியிருக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இதற்கு முன்னர் எத்தனையோ தடவை இருந்தது. மேலும் மலையக மக்களின் இன்றைய பிரச்சினையை தேசியவாத பிரச்சினையாக இனங்காண முடியாது. அவர்கள் இன்று பிரதானமாக எதிர் நோக்கும் பிரச்சினை தோட்ட முதலாளிகளால் ஒடுக்கப்படுவதே. அது தொழிற்பிரச்சினை. மலையக மக்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தோட்டத் தொழில் சார்ந்த வர்க்கப்பிரச்சினையே.

"வடக்கில் எழுந்த ஆயுதம் தாங்கிய தீவிர தேசியவாதத்திலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது"


மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தோட்ட வீடமைப்பு நிர்மாணத்துறை பிரதி அமைச்சருமான பெ.சந்திரசேகரன் அவர்களை சந்தித்து இது தொடர்பில் உரையாடிய போது..

“இளைஞர்கள் கைது செய்யப்படுவது புதியதொன்றல்ல ஆனால் கடந்த அரசாங்கத்தின் கைது பற்றிய அணுகுமுறைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வளவு மோசமான அணுகுமுறை இந்த அரசாங்கத்திடம் இல்லை. இவர்களது கைது பற்றி நான் பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் கதைத்திருக்கிறேன்.

எனது அமைப்பைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என பேசப்படுகிறது. அவர்கள் எமது கட்சியில் முக்கிய பதவி வகிப்பவர்களாகவோ ஆதரவாளர்களாகவோ அல்லது தொண்டர்களாகவோ இருந்ததில்லை.

தற்போது எழுந்திருக்கும் தேசியவாதம் நியாயமானதே ஆனால் வெறும் ஆர்வத்துடிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஒரு வகையான ஈர்ப்பை மாத்திரம் வைத்துக்கொண்டு முன்னேற முடியாது. சில மோசமான நடவடிக்கைகள் மற்றவரையும் நாசமடையச் செய்துவிடக்கூடும். ஏனையோரையும் ஈடுபடச்செய்ய இது துணையாக ஆகிவிடும்.” என்கிறார்.

புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் திரு தம்பையா

'தற்போது இடம்பெற்று வரும் கைதுகள் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை. கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த யு.என்.பி. அரசாங்கம் எந்த சட்டங்கள் அடக்குமுறைகள் என்பவற்றைப் பயன்படுத்தி கைதுகளைத் தொடர்ந்ததோ, அதே சட்டங்கள், அடக்குமுறைகள் என்பவற்றைத் தான் இந்த அரசாங்கமும் செய்கிறது என்றால் அர்த்தமில்லை. சென்ற அரசாங்கத்திலிருந்து மாறுபட்ட ரீதியிலேயே இந்த அரசாங்கம் செய்யும் என்ற எதிர்பார்ப்பிலேயே மலையக மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினர். அதைப் பொய்த்துவிடச் செய்யக்கூடாது.

இந்த கைதுகள் பற்றி இன்னமும் எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ குரல் கொடுக்காதது வருந்தத்தக்க விடயம்.

மலையகத் தேசியவாத கோரிக்கைகள் எந்த வடிவத்திலும் எழலாம். அந்த கோரிக்கைகளை ஆராய்ந்து நிறைவேற்றுவதற்குப் பதிலாக அதை அடக்க முயற்சித்தால் அது மோசமான வடிவம் பெற்றுவிடும். கடந்த காலங்களில் வடகிழக்கில் ஏற்பட்ட அனுபவம்


நன்றி - சரிநிகர் - 09.02.1995
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates