Headlines News :
முகப்பு » , , , , » 1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்

1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்


தந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம் செய்து திரும்பியிருந்தார். லண்டனில் அவரது கூட்டத்துக்கு ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்தக் காலத்திலேயே கலந்து கொண்டதையும் இங்கு நினைவுகூர வேண்டும். அப்போது திராவிடர் கழகம் உருவாகியிருக்கவில்லை. 

இலங்கையில் அவர் தனது தோழர்களுடன் கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித்துறை போன்ற இடங்களுக்கு சென்று பாரிய பெருங்க்கூட்டங்களில் உரையாற்றினார். பிற்காலத்தில் பெரியார் இயக்கம் வெவ்வேறு பெயர்களில் இலங்கையில் இயங்க இந்தக் கூட்டங்கள் முக்கிய வகிபாகம் வகித்தன.

பெரியார் ஆற்றிய உரைகள் தனித்தனியாக பதிவு செய்யப்படாமல் அவர் தமிழகம் திரும்பியதும் அவற்றையெல்லாம்  தொகுத்து ஒரே நூலாக வெளிக்கொணர்ந்தார்கள். அவர் இலங்கை பயணித்தது நவம்பர் மாதம் ஆனால் அவரின் உரை ஒரே மாதத்தில் நூலாக வெளிக்கொணரப்பட்டது.

சாதியை, மதத்தை, கடவுளை ஒழிக்கப் புறப்பட்ட,  சுயமரியாதை பகுத்தறிவுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட பெரியாரின் குரல்களை அன்றைய பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்துவந்த வேளை ஊடகங்கள் இயக்கத்தின் பாரிய பாய்ச்சலுக்கு முக்கியமானவை என்றுணர்ந்தார் பெரியார். அதன் விளைவாகவே அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அது போலவே நூல் பதிப்பு பணிகளையும் தொடக்கினார்.


பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் லிமிடெட் என்கிற பதிப்பகத்தை தொடக்கி வெளியிட்ட நூல்களின் வரிசையில் ஏழாவது நூல் பெரியாரின் இலங்கை பேச்சுக்களின் தொகுப்பு. அது அப்போது "ஈ. வெ. இராமசாமியின் இலங்கை உபந்யாசம்" என்கிற பெயரில் வெளியானது. இந்த நூல் அதன் பின்னர் 1942 இல் இரண்டாம் பதிப்பையும் கண்டது. இரண்டாம் பதிப்பை "குடி அரசு பதிப்பகம்" வெளியிட்டது. பின்னர் பல ஆண்டுகளின் பின்னர் வெவ்வேறு பதிப்பகங்கள் அதை "தந்தை பெரியாரின் இலங்கை பேருரை" என்கிற தலைப்பில் வெளியாகியிட்டிருக்கின்றன.

முதல் பதிப்பு "ஈ. வெ. இராமசாமியின் இலங்கை உபந்யாசம்" என்கிற பேரில் இருக்கிறது. சம்ஸ்கிருத சொல் தவிர்ப்பு, தமிழ் மொழி பழக்குதல், தமிழ் மொழி சீர்திருத்தம் எல்லாம் பிற காலத்தில் தான் ஒரு இயக்கமாகவே மேலெழுகின்றன. ஆகவே "உபந்யாசம்" என்கிற சம்ஸ்கிருத சொல்லை அவர் 1932, 1942 இல் பிரயோகித்திருப்பதையும் பிற்காலத்தில் அதை தவிர்ப்பதிலும் நமக்கு ஆச்சரியம் இருக்காது.

இலங்கை இந்த இலங்கை பேருரையைக் கட்டவிழ்த்து விரிவான ஒரு கட்டுரையாக எழுத முடியும். குறிப்பாக இந்த உரையின் இறுதிப் பகுதிகளில் அவர் தேசியம் பற்றி பேசும் பேச்சைக் குறிப்பிடலாம். இவை யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறையில் எல்லாம் பேசப்பட்டிருக்கலாம். அந்தக் சுவாரசியமான இந்தப் பேச்சு இன்று சுமார் 90 ஆண்டுகளில் அதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும்.

-என்.சரவணன்

ரோப்பா, ஆப்பிரிக்கா ரஷியா முதலிய தேசங்களில் பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்கள் சுற்றுப்பிரயாணம் செய்துவிட்டு இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்பு கையில் 1932 - அக்டோபர் 17ந் தேதி கொழும்பு வந்திறங்கின பெரியார் ஈ. வெ. ராமசாமிக்கு இலங்கையில் யல இடங்களில் அதாவது கொழும்பு, கண்டி, நாவல்பட்டி, ஹட்டன் யாழ்ப்பாணம், பருத்தித்துறை முதலிய இடங்களிலும் இந்தியாவில் தூத்துக்குடி, மதுரை முதலாகிய இடங்களிலும் பலஸ்தாபனங்களின் பேரால் அளித்த சுமார் 20 வரவேற்புப் பத்திரங்களுக்குப் பதிலளிக்கையிலும், பொதுக்கூட்டங்களிலும் செய்துள்ள உபந்நியாசங்களைத் திரட்டி எழுதப்பட்டது. 

பெரியார் உபந்யாசம். தோழர்களே, கூட்டங்களில் தலைவர்களின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப்பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு கூடவே இதன் மூலம் நீங்கள் எனது கொள்கைகளையும், தொண்டையும் ஆதரிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைகிறேன். 

மனிதசமூகம்

தோழர்களே! எனது அபிப்பிராயத்திற்கும், முயற்சிக்கும், குறிப்பிடத்தகுந்த அளவு எதிர்ப்பு இருக்கின்றது. என்பதை நான் அறியாமலோ, அல்லது அறிந்தும் அவை களை மறைக்க முயலவோ இல்லை . யார் எவ்வளவு எதிர்த்தபோதிலும், யார் எவ்வளவுக்கு தூஷித்து விஷமப் பிரசாரம் செய்தபோதிலும், யார் எவ்வளவு எனது அபிப்பிராயம் வெளியில் பரவாமல் இருக்கும்படியும் சூழ்ச்சிகள் செய்து மக்களின் கவனத்தை வேறுபக்கம் திருப்பிய போதிலும், உலகத்தில் எல்லா பக்கங்களிலும் வேதபுராண - சரித்திரகாலம் முதல் இன்றையவரையிலும்: மனித சமூகமானது கடவுள், ஜாதி, மதம், தேசம் என்னும் பேர்களால் பிரிவுப்பட்டு உயர்ந்தவன்-- தாழ்ந்தவன், ஏழை-பணக்காரன், முதலாளி--தொழிலாளி, அரசன் பிரஜைகள், அதிகாரி - குடிஜனங்கள், குரு-சிஷ்யன், முதலியனவாகிய பல தன்மையில் வகுப்பு வித்தியாசங்களுக் காளாகி மேல் கீழ்த்தரத்தோடு கட்டுப்பாடான சமுதாயக் கொடுமைகளாலும், அரசாங்கச்சட்டங்களாலும், கொடுமைக்குள்ளாகி வந்திருக்கின்றது-வருகின்றது என்பதை மாத்திரம் யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது என்று உறுதியாய்ச்சொல்லுவேன். இவ்வகுப்பு பேதங்களால் மக்கள் படும் துன்பத்தையும், அனுபவிக்கும் இழிவையும் அல்லும் பகலும் காடுகளிலும், மேடுகளிலும், தொழிற்சாலைகளிலும், கஷ்டமான வேலைகளைச் செய் தும், வயிறார கஞ்சியில்லாமலும், குடியிருக்கவீடும் மழைக்கும் வெய்யிலுக்கும் மறைவுக்கும் நிழலும், இல்லாமலும் எத்தனைபேர் அவதிப்படுகின்றார்கள் என்பதை சிந்தித் துப்பாருங்கள். அவர்களது நிலைமையை உங்கள் மனதில் உருவகப்படுத்திப்பாருங்கள். இந்தக்கொடுமைகள் எத்தனைகாலமாக இருந்துவருகின்றன? இன்றா? நேற்றா? இது அந்நிய அரசஆட்சியாலா? அல்லது சுய ஆட்சி இல்லாத தாலா? தர்மதேவதை ஆட்சி, அவதார ஆட்சி, தெய்வாம்ச ஆட்சி இல்லாததாலா? என்பதையும் சிந்தித்துப்பாருங்கள். உலக சரித்திரம் கிடைத்தது முதல் உலகத்தில் எந்தப்பாகத்தில் எந்த ஆட்சியால் என்றைய தினம் இந்தக்கொடுமைகள் இல்லாதிருந்தது? என்பதைச் சற்று நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள். 

காரணம். 

தோழர்களே! இனி இதற்கு அடிப்படையாகவும் அரணாகவும் இருந்துவரும் காரணங்கள் எவை என்பதை நீங்கள் சற்று நடுநிலைமையில் இருந்து சிந்தித்துப்பார்த்தீர்களானால் இக்கொடுமைகளுக்கு முக்கியகாரணம் முற் கூறிய கடவுள், மதம், ஜாதீயம், தேசீயம் என்பவையாகிய மயக்க உணர்வை மக்களுக்கு ஏற்றி அதன் பயனாக பெரும்பான்மையான மனித சமூகத்தை மடமையாக்கி ஏய்த்து, அடிமைப்படுத்தி தங்கள் சுயநலமே பிரதான மெனக்கருதி சோம்பேறிகளாய் இருந்துகொண்டு சுகம் அனுபவித்துவரும் ஒரு சிறு கூட்டமக்களின் சூழ்ச்சியே ஒழிய வேறில்லை என்பதை தெள்ளத்தெளிய உணர்வீர்கள். 

இந்த சூழ்ச்சிகளை யாராவது வெளிப்படுத்தக் கிளம்பிவிட்டாலோ உடனே அப்படிப்பட்ட காரியத்தை - நாஸ்திகம் என்றும், மதத்துரோகம் என்றும், தேசத் துரோகமென்றும், தேசீயத்துக்கு விரோதமென்றும், சிலர் சொல்லி அடக்கிவிடப்பார்க்கிறார்கள். இப்படிச் சொல்லி அடக்குகின்றவர்கள் யார் என்று பார்த்தாலோ அவர்கள் பெரிதும் மேல்நிலையில் இருந்துகொண்டும், சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல் சோம்பேறி வாழ்க்கையில் இருந்து. கொண்டும் அந்நியன் உழைப்பில் சுகமனுபவிக்கும் ஒரு சிறு கூட்டத்தாரும் மற்றும் அவர்களால் தங்கள் நிலைமையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக என்று ஏற்படுத்தப்பட்டு இருக்கும் அவர்களது கூலிப்பிரசாரகர்களுமே யாவார்கள். அதோடு "ஈன ஜாதி” யாராயும், ஏழைகளாயும் தொழிலாளர்களாயும் கூலிகளாயும் கருதப்பட்டும் கீழ் நிலையில் இருந்து வெகுகாலமாய் தலைமுறை, தலைமுறையாக இழிவு படுத்தப்பட்டும் அரைப்பட்டினி கிடந்து உழலும் மக்களிலும் சிலர் அவர்களுடன் சேர்ந்துகொண்டு மேல்கண்டபடி கூப்பாடு போடுவதையும் பார்க்கலாம். இதற்குச் சமாதானம் சொல்லுவதென்பது சிலருக்கு சற்று கஷ்டமானதாகக் காணப்பட்டாலும் கூர்ந்து கவனித்தால் மேற்கண்ட உயர்நிலையை நிரந்தரமாய்க் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கின்ற கருத்தின் மீது செய்துகொண்டிருக்கும் ஏற்பாடுகளான கடவுள், மதம், தேசீயம் தேசம் ஆகியவற்றின் ஸ்தாபனங்களும், அவற்றிற்குள்ள கவசமும், காப்பும், அவை சம்மந்தமான பிரசாரங்களுமேதான் காரணம் என்பது தெளிவாய் விளங்காமல் போகாது. 

என்ன செய்ய வேண்டும்?

ஆகையால் மேற்கண்ட கஷ்டப்படும் மக்களுக்கு விடுதலையும் சமத்துவமும் வேண்டுமானால் முதலில் அக்கவசங்களையும், காப்புகளையும் உடைத்தெரிய வேண்டும். அவற்றின் பிரசாரங்களையும் முறியடித்துத் துரத்தவேண்டும். அஃதில்லாமல் வேறு எவ்வளவு பாடுபட்டபோதிலும் கஷ்டப்படும் மக்கள் ஒரு நாளும் விடுதலையடைய முடியாது. இக்காரியம் செய்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. செய்பவர்களுக்கு மகத்தான உறுதியும், தன்னலமறுப்பும் வேண்டும். அனேக துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும், பழிப்புகளுக்கும் நஷ்டங்களுக்கும் ஆளாகத் தயாராயிருக்கவேண்டும். "ஊரார் நம்மைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் - சொல்லுவார்கள்'' என்பதைப்பற்றிச் சிறிதும் சிந்திக்கக்கூடாது. போலி மானாபிமானங்களையும், கௌரவங்களையும், வசவுகளையும் துச்சமாய்க் கருதவேண்டும். பாமர மக்களால், சுயநல சூழ்ச்சிக்காரர்களால் வசவு கேட்கவும், உயிர்விடவும்கூட தயாராயும் இருக்கவேண்டும். இந்த நிலையில் உள்ளவர்களால் அல்லாமல் வேறுயாராலும் இக்காரியங்கள் ஒரு சிறிதும் செய்யமுடியாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். 

தானாக ஏற்பட்டதல்ல 

தோழர்களே! கடவுள், மதம், ஜாதீயம், தேசீயம், தேசாபிமானம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப்பாடான 'ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால் அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும். 

ஆதியில் 

ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமையாய் சுயேச்சையாய்த் திரிந்து - இயற்கை வாழ்க்கையிலிருந்து சமூகக் கூட்டு வாழ்க்கைக்கு வரும்போது அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்துகொண்டும், அவசியமான பரஸ்பர உதவிகளை வழங்கிக்கொண்டும் ஒரே சமூகமாய் சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணியே ஒழிய மற்றபடி மற்றொருவனை அடிமைப்படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலையையும் வாங்கிக்கொண்டு ஏய்த்து அவனை உலக சுகபோகங்களில் பட்டினி போட்டு, தான்மாத்திரம் சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு எல்லா சுக போகங்களையும் தானே அனுபவித்துக்கொண்டு இருப்பதற்கோ, அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும்பயனை மற்றவன் அனுபவிக்க விட்டுவிட்டு தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப் புக்கொள்ளத்தக்க விஷயமாகும்.

ஆனால் நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்கு பேராசையும், பொறாமையும் சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும் அரசனுக்கு குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலைநிறுத்த ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள் ஆகியவைகளைக் கற்பித்து பிறகு அவைகள் மூலம் கடவுள் செயல், முன்ஜென்மம், பின்ஜென்மம், கர்மம், பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ் உலகம், தீர்ப்பு நாள், மோக்ஷம், நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது. 

இந்த கற்பனைகளின் பயன்தான் பெரும்பான்மையான மக்கள் பாமரர்களாகவும் ஏமாற்றப்படவும், கொடுமைக்குள்ளாகவும் மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும் உழைத்தும், சரியான கூலி கிடைக்காமல் பட்டினி கிடந்துழல்வதை பொறுமையுடன் பொறுத்துக்கொள்ளவுமான காரியங்கள் நடந்து வருவதுடன் அவை எங்கும், என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் இந்த நிலை அடியோடு அழிபடவேண்டும், அதற்காக அதன் காப்புகளான மேற்குறிப்பிட்ட கடவுள், மதம், தேசீயம், ஜாதியம் என்பவைகளும் அவற்றின் பேறுகளான ஆத்மா, முன்ஜென்மம், கர்மம், தீர்ப்பு, மோக்ஷ நரகம், பாவ புண்ணியம், ஆகியவைகளாகிய போலி உணர்ச்சிகளும் அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத்தெரியப்பட வேண்டும். 

தலைவிதி

கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும் யோக்கியமாய்' 'நாணயமாய்' நடந்தும் - இழிவாய்' கீழ் மக்களாய்' கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப்படுவதுதான் காரணம் என்பதை உணராமல், தங்களுடைய முன்ஜென்ம கர்மபலன் - தலை விதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக்கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலைமையை பற்றி சிறிதும் அதிருப்திகூட அடையக்கூடாதென்று கருதி தங்கள் நிலைமையைப்பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்கிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக்கூட வெட்கப்படுகிறார்கள். ஏனெனில் கஷ்டப் படுகின்றமக்களுக்கு கடவுள் உணர்ச்சியும் மதமும் இதைத் தான் போதிக்கின்றது. 'எப்படி என்றால்:

"ஓ கஷ்டப்படுகின்ற மனிதனே! கஷ்டப்பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே!! நீ உனது முன்ஜென்ம பாபகர்மபலத்தினால் - தலைவிதி யால் - கடவுள் சித்தத்தால், இம்மாதிரி துன்பத்தை அனுபவிக்கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இதே நிலைமையைப் பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்தஜன்மத்தில் சுகப்படுவாய்- மேலான பிறவிபெறுவாய் - அல்லது மேல் உலகில் மோக்ஷம் என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார்'' என்கின்ற உபதேசமேயாகும். 

இந்தப் பொறுமை உபதேசமும் சாந்த உபதேசமும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழைகளாகவும், முற்போக்கற்றவர்களாகவும் செய்து அவர்களது கஷ்டத்தி லிருந்தும் இழிவிலிருந்தும் முன்னேறமுடியாமலும் விடு படமுடியாமலும், சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர்வாழும்படி செய்துவந்திருக்கிறது. 

இவ்வளவுதானா

இவ்வளவுமாத்திரம்தானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும் மதமும் செல்வந்தர்களுக்கும், மிராசுதாரர்களுக்கும் மற்றும் உத்தியோகம், வியாபாரம், லேவாதேவி என்னும் பேர்களால் ஏழைகளிடமிருந்து பெரும்பணம் கொள்ளை கொண்டு மற்றவர்களைப் பட்டினிபோட்டுப் பெரும்பணம் சேர்க்கும் பணக்காரர்களுக்குப் போதிப்பது என்ன என்பதைப் பார்த்தாலோ அது, 

"ஓ பிரபுக்களே! செல்வவான்களே?! ஏராளமாக மேலும் பணம் சேர்க்கும் பணக்காரர்களே!!! லக்ஷ்மி 

புத்திரர்களே!! நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியகர்மங்களால் - கடவுள் உங்கள் மீது வைத்த கருணையினால் இவ்வுயர் நிலையை அடைந்திருக்கிறீர்கள்-இவ்வேராளமான பணவருவாய்கள் உங்க ளுக்கு ஏற்பட்டிருக்கும் இச்சுகபோகம் உங்களுக் குக் கிடைத்ததற்கும் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால் நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும், கடவுளுக்குக் கோயில் கட்டுவதன் மூலமும் கடவுள் பக்தர்களான பாதிரி, குரு, பிராமணர் முதலியவர்களுக்குச் மரியாதை செய்து சத்திரம், மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி இந்நிலையை நிலை நிறுத்திக்கொள்ளுவதுடன் மோக்ஷலோகத்திலும் சுலபமாக இடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்" 

என்பதேயாகும். ஆகவே தோழர்களே! இந்தக் காரணங்களாலேயே மக்களில் உயர்வு - தாழ்வும், எஜமான் அடிமையும், முதலாளி தொழிலாளியும், அரசன்- குடிகளும், குரு - சிஷ்யனும், ஏற்பட்டிருக்கின்றன என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

அரசன் 

உலகிற்கு அரசன் அரசாக்ஷி என்பதாக ஒருவகை இருந்துவருவதின் காரணமெல்லாம்கூட செல்வவான்களின் செல்வங்களைக் காப்பாற்றவும் சோம்பேறி வாழ்க்கைகளையும் அவர்களது, தத்துவங்களையும் பிறர் இகழாமல் இருக்கவுெேமாழிய மற்றபடி மக்கள் சமூகம் துன்பப்படாமலோ, மற்றவர்களால் கொடுமைப்படுத்தப்படாமலோ சகல துறைகளிலும் உயர்வுதாழ்வு கொடுமை இல்லாமலோ, இருப்பதற்காக அல்லவே அல்ல என்பதை நீங் கள் உறுதியாய் நம்புங்கள். 

இதுபோலவேதான் முன் குறிப்பிட்ட கடவுள் மத உணர்ச்சி - கற்பிக்கப்படுவதும் ஏழைகள் தாங்கள் படும் கஷ்படங்களுக்கு காரணம் முதலாளிகளின் சூழ்ச்சியும், சோம் பேறிகளின் தத்துதுவங்களும் என்பதை உணராமல் இருப்ப தற்காகவே ஒழிய வேறில்லை. 

உதாரணம் 

உதாரணம் வேண்டுமானால், இன்றைய தினம் கஷ்டப்படுவதாகவும், இழிவுபடுத்தப்பட்டதாகவும், பட்டினி கிடந்து துன்பப்படுவதாகவும், ஏழைகளாகவும், காணப்படும் மக்களில் அநேகரை அணுகி அவர்களது இவ்வித கஷ்டநிலைக்கு காரணம் என்ன என்று , கேட்டுப்பாருங்கள். , உடனே அவர்கள் சற்றும் தயக்கமின்றித் தங்களின் கஷ்டநிலைக்குத் தங்கள் தலைவிதி" என்றும் "முன் ஜன்ம கர்மபலன்'' என்றும் கடவுள் சித்தம்'' என்றும் ஆண்டவன் கட்டளை" என்றும்தான் பதில் சொல்லுவார்களேயொழிய பிறமனிதர்களால் - அரசாங்க சட்டத்தால் செல்வவான்களின் சூழ்ச்சியால், சோம்பேறிகளின் தந்திரத்தால், தாங்கள் ஏமாற்றப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு, அவதிப்படுவதாக ஒருநாளும் சொல்லமாட்டார்கள். ஆதலால் தான் ஏழைகளின் கஷ்டங்களை விலக்கவேண்டுமென்பவர்கள் முதலில் அதற்கு அஸ்திவாரமான காரணகாரியங்களைக் கண்டுபிடித்து அழித்தெரிய வேண்டுமென்று சொல்லவேண்டி இருக்கின்றது.

கடவுள்

கடவுள் என்பது அருத்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்துவந்தபோதிலும் அது மனித சமூகத்தில் 100க்கு 99 மக்களைப் பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆயிருந்தபோதிலுங்கூட கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்தியவர்களோ, உணர்ந்தவர்களோ, இதுவரையில் காணக்கிடைக்கவில்லை. பொதுவாக அந்தப்படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்திவைக்கவேண்டும் என்கின்ற அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத்தையும் பாவபுண்ணிய பயனையும், மோக்ஷ நரகத்தையும், கற்பித்து அதை பரப்பபலவித ஸ்தாபனங்களை உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து, அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீரவேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்திவிட்டதால் வெகு சுலபமாகவும் செல்வாக்காகவும், அதன் பிரசாரம் நடக்கவும் மக்களை தன்வயப்படுத்தவுமான காரியங்கள் நடந்துகொண்டே வருகின்றன. கடவுள் என்றால் என்ன? என்றாலும் கடவுள் என்றால் என்ன? என்பதை உணருவதற்கில்லாமலும் உணரவேண்டும் என்று நினைப்பதற்கில்லாமலும் இருந்து வருகிறது. 

யாராவது கடவுளைப்பற்றி நெருக்கிப்பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முரணான கருத்துக்களையும் செய்கைகளையும் கொண்டிருப்பதும், ஆளுக்கு ஒருவித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல் வேறுவிதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அரிதாகவே யிருக்கிறது.

கடவுள் என்பது சர்வவல்லமையும், சர்வவியாபகமும் சர்வசக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனிப்பொருளென்று சொல்லப்பட்டுவிட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனத்திற்குத்தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல், அதற்கு உருவம் இல்லையென்றும், குணம் இல்லையென்றும் இன்ன தன்மையது என்று விளக்கமுடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது. 

ஒரு வேடிக்கை 

இவற்றுள் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு கடவுள் தன்மையை அதாவது "சர்வ சக்தியும் சர்வவியாபகமும், உடையதும், கண்ணுக்கும் மனதிற்கும் தென்படாததும், குணமும் உருவமும் இன்ன தன்மையென்று குறிப்பிடக்கூடியதன்மையும் இல்லாதது', மான ஒரு கடவுளை நிலைநிறுத்தவும் அதைப்பற்றி மக்கள் நம்பிக்கை கொள்ளவும் "கடவுளால் உண்டாக்கப்பட்ட" மக்களிலேயே பலர் வக்காலத்து பெற்றுக் கடவுளை நிரூபிக்க ஒழுங்கற்றமுறையிலும் ஒழுக்கஈனமான முறையிலும் எவ்வளவோ பாடுபடவேண்டியிருப்பதுமேயாகும். 

மற்றும் அப்படிப்பட்ட வக்காலத்துக்காரர் தங்கள் சொந்த நிலையில் தங்களால் செய்யப்படும் ஒவ்வொரு காரியத்தையும் தாங்களே செய்வதாகவும் தங்களால் சொல்லப்படும் ஒவ்வொரு விஷயமும் தாங்களே அறிந்து சொல்வதாகவும் நினைத்தே பேசியும் நடந்தும் வருகிறார்கள். அதுமாத்திரமல்லாமல் மற்றவர்களால் செய்யப்படும் சொல்லப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்கள் தங்களுக்குச் செய்வதாகவும், சொல்லுவதாகவும், எழுதுவதாகவும், கருதுவதுடன் மற்றவர்கள் மீது துவேஷமும் வெறுப்பும், விருப்பும் கொண்டு அவர்களை இன்ன இன்னபடி நடவுங்கள் என்றும் தங்களுக்கு இன்ன இன்ன காரியங்களைச் செய்து கொடுங்கள் என்றும் கோருகிறார்களேயல்லாமல் "இவை எல்லாம் சர்வ வல்லமையுள்ள கடவுள்'' செயலால் தான் நடக்கின்றது, நடந்து விடும் என்ற நம்பிக்கையும் உறுதியும் தைரியமும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். 

மற்றொரு சாரார். 

மற்றொருசாரார் "கடவுளைப் பார்க்காவிட்டாலும், உணராவிட்டாலும் உலகப்படைப்புக்கும் நடக்கும் ஏதாவது ஒரு கர்த்தாவோ காரணமோ இருக்க வேண்டாமா? அப்படிப்பட்ட கர்த்தாவோ காரணமோதான் கடவுள்'' என்று சொல்லுகிறார்கள். 

மற்றொரு சாரார் "உலகத் தோற்றத்திற்கும், நடப்புக்கும் ஏதாவது ஒரு சக்தி (force)யாவது இருக்குமல்லவா? அதுதான் கடவுள்'' என்கிறார்கள். 

மற்றொருசாரார் "இயற்கையே - அழகே- அன்பே சத்தியமே கடவுள்'' என்றும் இன்னும் பலவாறாக சொல்லுகிறார்கள். ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை நமது மக்கள் கடவுளுக்கு மனித உருவம் கற்பித்து, சாதாரண மனித வாழ்க்கையிலுள்ள பெண்டு பிள்ளை முதலியவைகளைக்கற்பித்து, செல்வவானுக்குள்ள குணங்களையும், சுகபோகங்களையும் கற்பித்து, அதற்குக் கோவில் பூசை உற்சவம், கல்யாணம், சாந்திமுகூர்த்தம் முதலியவை களைக்கற்பித்து வணக்கத்திற்காக என்று கோடானு கோடி ரூபாய்களை செலவு செய்யச் செய்து மக்களை அதுவும் ஏழைமக்களை வாட்டி வளைவெடுத்து தொல்லைப்படுத்தியும் வருகிறார்கள். இப்படியாக கடவுளைப்பற்றி இன்னும் பலவிதமாய் அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டும் காரியத்திலும் பல செய்யப்பட்டும் வருகின்றன. இந்தவிதமான கடவுளைப்பற்றி அர்த்தமற்ற - குறிப்பற்ற பரிகாசத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் இடமான அபிப்பிராயங்களும் மற்றும் பாமரமக்களை தந்திரக்காரர்கள் ஏமாற்றுவதற்கான முறைகள் கொண்ட கருத்துக்களும் விவகாரங்களும் இன்றோ நேற்றோ அல்லாமல் வெகுகாலமாகவே இருந்து வருகின்றது. அன்றியும் இக்கருத்துக்களை மதக்கொள்கைகள் என்பவற்றின் மூலமாகவும் அரசாங்க சட்டங்களின் மூலமாகவும் மறுத்துப்பேச இடங்கொடுக்கப்படாமலும், மீறிப்பேசினால் தண்டித்தும் மத வெறியால் என்றும் கொடுமைப்படுத்தியும் தான், காப்பாற்றப்பட்டும் நிலைநிறுத்தப்பட்டும் வந்திருக்கின்றது. 

இன்றும் கூட 

இன்றும்கூட நமது இயக்கப் பிரசாரங்களில் அவற்றின் கொள்கைகளைப்பற்றி ஆட்சேபிக்கக்கூடியவகை சுலபத்தில் இல்லாமல் இருப்பதால் வேறுவழியில் தந்திரமாய் அதாவது "சுய இயக்கக் கொள்கைகள் எல்லாம் சரி. அது ஏழைமக்களுக்குத்தான் பாடுபடுகின்றது. ஏழை பணக்காரன் என்கின்ற வித்தியாசம் கூடாதென்கின்றது. 

ஆனால் அது கடவுள் இல்லை என்று சொல்லுகின்றது, மதத்தை அழிக்கின்றது, மக்களை நாஸ்திகராக்குகின்றது, அதுதான் எமக்குப் பிடிக்கவில்லை ஆதலால் அதை வளர விடக்கூடாது'' என்று சொல்லுவதன் மூலம் நமக்கு எதிர்ப் பிரசாரம் செய்கின்றார்கள். மற்றும் பல இடங்களில் நாம் போகுமுன்பே நாஸ்திகன் வந்துவிட்டான், மதத்துரோகி வந்துவிட்டான் என்று விஷமப்பிரசாரம் செய்து மக்களை நமது பிரசங்கத்தை - நான் என்ன சொல்லுகிறேன் என்பதை கேட்க அனுமதிக்கக்கூட மறுக்கின்றார்கள். மற்றும் சில இடங்களில் பலாத்கார முறையில் - காலித்தனமான முறையில் நமது பிரசாரத்தை கலைக்க முயற்சிக்கிறார்கள் 

காரணம்

இதன்காரணம் என்னவென்று பார்க்கப்போனால் கண்டுபிடிப்பது மிகவும் சாதாரணமான விஷயமேயாகும். அதாவது அவர்களது. எங்கும் நிறைந்த" "எல்லாம் வல்ல" "அவனன்றி ஓரணுவும் அசையாததான'' கடவுள் நம்பிக்கையும், அப்படிப்பட்ட கடவுளின் அவதாரங்களா லும், கடவுள் அம்சம் பெற்றவர்களாலும், கடவுள் குமாரராலும் உண்டாக்கப்பட்ட மத நம்பிக்கையும் ஒழிந்துவிடும் என்கின்ற எண்ணமேயொழிய வேறில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதன் கருத்து என்ன வென்றால் எல்லாம்வல்ல, எங்கும் நிறைந்த கடவுள் உணர்ச்சியும், தத்துவமும் ஒரு சாதாரண மனிதனால் அழிக்கப்பட்டுவிடும் என்றும், கடவுள் அவதாரம், அம்சம், குமாரன், தூதன் ஆகியவர்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட மதமானது ஒரு சாதாரண மனிதன் முயற்சியால் அழிக்கப் பட்டுவிடும் என்றும் இதனால் மனித சமூகத்தின் மேன்மை போய்விடுமென்றும் பயந்தே இம்மாதிரி விஷமப்பிரசாரம் செய்வதாயும், பலாத்காரச் செயல்கள் கூட செய்யவேண்டி இருப்பதாயும் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. இவ்விதமாக கடவுள் நம்பிக்கையின் பேரால் மதநம்பிக்கையின் பேரால் பலாத்காரச்செயல் - எதிர்ப்பிரசாரம் - விஷமப் பிரசாரம் ஆகியவைகள் செய்யப்படுவது பெரிதும் அறியாமையால் என்றோ, மதத்தையும் கடவுள் தன்மையையும் சரிவர உணராததினால் என்றோ, அல்லது மதவெறி கடவுள் வெறி என்றோ சொல்லிவிடமுடியாது. ஏனெனில் கடவுளும்மதமும் உள்ள உலகில் மக்கள் தோன்றிய காலமுதலே அவற் எதிரிடையான கருத்துடையவர்களையும், அவற்றை ஒப்புக்கொள்ளாதவர்களையும் அரசாங்கமும், மதஸ்தாபக்காரர்களும் கொன்றும் சித்திரவதை செய்தும், தண்டித்தும் கொடுமை செய்தும் வந்திருப்பதானது கடவுள் மதம் சம்பந்தமான சரித்திரங்களாலும், பிரச்சார முறைகளாலும் நன்றாய் உணரலாம். இக்கொள்கையை முறையை இன்னும் சில சமயக்காரர்கள் கையாண்டு வருவதையும் நம் போன்றவர்கள் கடவுள், மதநம்பிக்கைக்காரர்கள் என்பவர்களால் நடத்தப்படுவதையும் கொண்டு உணரலாம். ஆகவே இதன் கருத்து சுயநலமும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியமும் பயமுமே ஒழிய வேறில்லை. 

மதம்

மதங்கள் என்பவை 'சர்வவல்லமையும்' "சர்வவியாப கமும்'' உள்ளதாகச் சொல்லப்படும் கடவுள் உணர்ச்சியை மக்களிடம் பெருக்கவும், அதை நிலைநிறுத்தவும் ஏற்பட்ட ஸ்தாபனங்களாய் இருந்து வருகின்றனவேயொழிய மற்ற படி எந்தமதத்தாலாவது, அதைச் சேர்ந்த உலக மக்கள் வாழ்க்கையிலோ பொருளாதாரத்திலோ சுதந்தரமோ, சமத்துவமோபெற்று கேவலம் ஜீவனத்திற்காக மற்ற மனிதனுக்கு அடிமையாகாமல் வாழ்வதற்கு இடமளித்திருப்ப தாய் காணமுடியவில்லை. ஒருமதக்காரனே தன் மதத்தைச் சேர்ந்த மற்றொருவனை அடிமைகொண்டிருக்கிறான். ஆனால் அவன் மதநம்பிக்கையென்பது "மக்கள் வாவரும் கடவுள் பிள்ளைகள்'' ''எல்லோரும் சமமானவர்கள்" என்று போதிப்பதாகத்தான் சொல்லுகிறான். ஆனால் ஏழை, பணக்காரன், கூலிக்காரன், எஜமான் என்கின்ற வித்தியாசம் எப்படி ஏற்பட்டது என்பதை மாத்திரம் உணரும்போது எல்லாம்வல்ல கடவுள் சக்தியையும், சமத்துவ மதபோதனையையும்;' மறந்துவிடுகின்றான்.

மதம் என்பது ஒரு போதை தரும் (வெறி உண்டாக்கும்) வஸ்து என்று பல அறிஞர் கூறியிருப்பதுபோல் மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருப்பவர்களுக்கு ஆவேசமும், வெறியும் உண்டாவதுதான் முக்கிய பலனாக இருக்கிறதேயொழிய, அது கஷ்டப்படுகின்ற, ஒருபாவமுமறியாத பாமரமக்களுக்கு காரியத்தில் இன்று என்ன நன்மை செய்திருக்கிறது? செய்கிறது? மதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டிருக்கிறது? என்ற கேள்விக்கு “இது மதத்துரோகமான கேள்வி" என்று சொல்லுவதல்லாமல் வேறு எவ்விதமான பதிலும் சொல்லுவதற்கு வகை காணவில்லை. 

எல்லா மதங்களும் கடவுள் அருளால், கடவுள் அம்சம்பெற்றவர்களால், கடவுளால் அனுப்பப்பட்டவர்களால் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் ஒருமதத்திற்கும் மற் றொருமதத்திற்கும் நடப்பு, வேஷங்கள் சடங்குகள் ஆகிய வைகளுடன் மற்றும் பல முக்கிய விஷயங்களில் பெருத்த - மாறுபாடும், துவேஷமும், வெறுப்பும் பெரிதும் காணப்படுவானேன் என்பதைப் பார்த்தால் ஒன்றா? பத்துமதங்கள் இருந்தால் அதில் ஒன்று உண்மைபோகப் பாக்கி ஒன்பது மதங்கள் பொய்யாகத்தான் இருக்கவேண்டும். அல்லது ஒவ்வொருமதமும் வெவ்வேறு கடவுள் அருளால் ஏற்பட்டதாக இருக்கவேண்டுமே ஒழிய ஒரே கடவுள் அருளால் ஏற்பட்டதாயிருக்காது. எப்படியிருந்தாலும் சர்வசக்தி, சர்வவல்லமை, சர்வவியாபகமுள்ள ஒரு கடவுளருளால் எந்தமதமாவது ஏற்பட்டது என்று சொல்லுவது பகுத்தறிவுக்கும், விவகாரத்திற்கும் நிற்காத காரியமேயாகும். அன்றியும் ஒரேமதத்தை அனுசரிக்கிற மக்கள் எல்லோரும் ஒரேமாதிரி நடக்கிறார்கள் என்று சொல்லுவதற்கோ அல்லது மதசக்தியானது மக்கள் யாவரும் ஒரேமாதிரி - நடத்தப்படப் பயன்படுகின்றது என்று சொல்லுவதற்கோ இடமில்லாமல் தான் எல்லாமதங்களும் இருந்துவருகின்றன. ஏனெனில் ஊருக்கு ஒருவிதம், வகுப்புக்கு ஒருவிதம் நடப்பதுடன் வெளிப்படையாகவே ஒரே ஊரில் ஒரேமதக்கொள் கைக்குப் பலவித வியாக்கியானங்களும் ஏற்பட்டு இருப்பதுடன் நட்புகளும், எண்ணங்களும் வேறுபட்டிருக்கின்கின்றன. ஒருசமயம் இப்படி மாறுபட்டு நடப்பவர்கள் எவ்லோரும் மூடமக்கள் என்றும் மதத்தைச் சரிவர உணராதவர்கள் என்றும் சுலபமாய்ச் சொல்லிவிடலாம். ஆனாலும் அந்தமதத்தை நம்பி அதை தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிவந்த மக்களின் கதி அதுதானா என்பதும் அம்மதத்திற்கு உள்ள சக்தி அவ்வளவுதானா என்பதுமாவது யோசிக்கவேண்டிய முக்கிய விஷயமல்லவா என்று கேட்கின்றேன். 

எது எப்படியிருந்தபோதிலும் முன் குறிப்பிட்ட அதாவது "சர்வ சக்தி, சர்வவியாபகம், சர்வதயாளத்துவம் கொண்ட கடவுளால்" சிருஷ்டிக்கப்பட்டவர்களாகவும் 4 சர்வசமரசம்கொண்ட மதத்தைப்" பின்பற்றியவர்களாகவும் உள்ள மக்களுக்குள் ஒருவன் ரிக்ஷாவண்டி இழுத் துக் கஷ்டப்படவும், ஒருவன் அதன் மேல் சுகமாய் உட்கார்ந்து சவாரி செய்யவும், ஒருவன் கிரீடத்தை அணிந்து பல்லக்கில் சவாரி செய்யவும் 16-பேர்கள் முக்கிமுக்கிச் சுமந்து செல்லவும் அக்கடவுளும் மதமும் எப்படி அனுமதித்தன என்ற கேள்விக்கு ''அது நமக்குத் தெரியாது. சர்வசக்தியுள்ள கடவுள் செயல்'' என்பதைத்தவிர இது வரை எந்தக் கடவுள் நம்பிக்கைக்கார்ரும் மதநம்பிக்கைக் காரரும் வேறுபதில் சொன்னதாகத் தெரியவில்லை. ஒரு சமயம் இச்செய்கைக்கு முறையே ஒருவனின் அதாவது கரிக்ஷாவண்டி இழுப்பவனின் முட்டாள் தனமும், சவாரி செய்பவனின் அயோக்கியத்தனமும் " என்று பதில் சொல்லக்கூடுமானாலும் சர்வசக்தியும் சர்வ வியாபகமும் சர்வ தயாபரத்வமும் உள்ள கடவுளுக்கும் சர்வ மனித சமூக சமத்துவமாகிய மதத்திற்கும் தன்னை ஏற்றித்துதித்து பின்பற்றும் மக்களின் இம்மடமையையும், அயோக்கியத்தனத்தையும் நிறுத்த முடியவில்லை என்பதாவது விளங்குகின்றதா இல்லையா என்பதைப் பொறுமையோடு பகுத்தறிவுடன் நடுநிலையில் இருந்து யோசித்துப்பாருங்கள். 

சற்று கவனியுங்கள். 

தோழர்களே, இங்கு சற்று கவனியுங்கள். என்ன வென்றால் மேல் சொன்ன கடவுள் உணர்ச்சியும், மத உணர்ச்சியும் மேலே குறிப்பிட்ட மடமையையும் அக்கிரமத்தையும் ஒழிப்பதற்குச் சிறிதும் பயன்படாமலிருப்பதோடு அம்மடமையையும், கொடுமையையும் நிலைநிறுத்துவதற்கும், அமுல் நடத்துவதற்கும் பயன்பட்டு வருகின்றதா இல்லையா என்பதையாவது பரிசுத்த நிலையிலிருந்து யோசித்துப்பாருங்கள். 

கடவுள், மத உணர்ச்சியானது மக்களின் சுதந்திரத்திற்கும் சமத்துவ வாழ்விற்கும் இவ்வளவு இடையூறும் தாரதம்மியங்களும் ஏற்பட இடந்தராதிருந்திருக்குமானால் நான் அவைகளைப்பற்றி இவ்வளவு - கவலை எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்பதோடுகடவுள், மத பிரசாரத்தின் பேரால் வயிற்றுப்பிழைப்பு நடத்தவேண்டியவர்களின் பரிதாபத்திற்காகவாவது சும்மாவிட்டுவிடுவேன் என்பதை நம்புங்கள். ஏனெனில் ஒரு மனிதன் அநாவசியமாய் அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தைக்காக பைத்தியம் பிடித்திருந்தாலொழிய போராடிக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அதனால் பாமர மக்கள் சமூகத்திற்குவிளையும் கெடுதியைப் பார்க்கும் போது உண்மையான உணர்ச்சியுள்ளவன் அப்பிரசாரத்தை ஒழிக்கப் போராடாமல் இருக்க முடியாது.

கவலையில்லை

கடைசியாக ''உலக உற்பத்திக்கும் இயற்கைத் தோற்றங்களுக்கும் நடப்புக்கும் ஏதாவது ஒரு காரணப்பொருள் இருக்கவேண்டாமா" என்று கேட்பதின் மூலம். எப்படியாவது ஒருசக்தி உண்டு என்பதையாவது ஒப்புக்கொள்ளச் செய்து, அதிலிருந்தே ஒரு கடவுளைக்கற்பிக்க முயற்சிகள் செய்யப்படுவதையும் அத்தோடேயே சர்வசக்தி- சர்வ வியாபகம் உள்ள கடவுள் நம்பிக்கைக்காரர்கள் திருப்தி அடைந்து விடுவதையும், பிறகு அதை அஸ்திவாரமாக வைத்துப் பெரிய ஆகாயக்கோட்டைகள் கட்டுவதையும் பார்த்திருக்கிறேன். உலக உற்பத்திக்கும் அதில் காணப்படும் தோற்றங்களுக்கும், நடப்புகளுக்கும் விஞ்ஞானம் என்னும் சைன்சை தொடர்ந்துகொண்டே போனால் சமாதானம் கிடைக்கலாமானாலும் பிறகு "சைன்ஸ்சுக்கு யார் கர்த்தா'' என்கின்ற கேள்வியும் பிறக்கும். "அது இதுவரை எந்த அறிவாளியாலும் கண்டுபிடிக்கக்கூடியதாய் இல்லை'' என்று பதில் சொன்னால் அதுதான் கடவுள்' என்று சொல்லி, திருப்தி அடைவார்கள். அப்படியானால் அந்தக் கடவுளுக்கு யார் கர்த்தா? அவர் எப்படி உண்டானார்? அவரின் நடவடிக்கைக்கு என்ன காரணம்? அதற்கு என்ன ஆதாரம்? என்பதான கேள்விகளை முன்னைய விஷயங்களுக்கு போடப்பட்ட கேள்விகளைப் போலவே போட்டோமானால் “அப்படிப்பட்ட கேள்வி கேட்கக்கூடாது” என்றும், ''கடவுளும் சக்தியும் தானாக உண்டானது'' என்றும் அதற்குக் காலவரையறை இல்லையென்றும் சொல்லுவார்கள். அச்சமாதானத்தால் நாம் திருப்தியடையாவிட்டால் அல்லது இது உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டால் (அல்லது கடவுள் தானாக உண்டாகும் போது இயற்கை தானாக உண்டாகாதா என்று கேட்டால்) உடனே நம்மை நாஸ்திகன் என்று சொல்லிவிடுவார்கள். இந்தமாதிரி நிலையில்தான் ஏதோ யூகத்தின்மீது அதுவும் "ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டாமா" என்கிற யூகத்தின் மீதே “இதுவாயிருக்கலாம் அல்லது அதுவாயிருக்கலாம்'' என்கின்ற பொறுப்பற்ற நிலையில் கற்பிக்கப்பட்ட ஒரு கடவுள் என்பதைப்பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவ தில்லை என்கிறேன். 

பொறுப்பு ஏற்றுவது

ஆனால் அப்படிப்பட்ட கடவுளின்மீது மனிதவாழ்க்கையின் பொறுப்புகளை சுமத்துவதும், அதை வணங்குவது தொழுவது, பிரார்த்தனை செய்வது என்பதும், அதை வணங்கினால் பிரார்த்தித்தால் தொழுதால் அதற்காக நேரத்தையும், அறிவையும், பணத்தையும், ஊக்கத்தையும் செலவு செய்தால் லாபம் பெறலாம் என்பதும், தகுதிக்கு மேற்பட்ட பிரதிபலன் உண்டென்பதும், பாவங்கள் மன்னிக்கப்படுமென்பதும், மற்றும் மனிதனால் தன் சுயநலத்திற்காகவும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியத்துக்காகவும் பிறருக்குச் செய்யப்படும் சூழ்ச்சிக்கும் அக்கிரமத்திற்கும் கடவுள் செயலே காரணம் எனச்சொல்லி ஏமாற்றுவதும் ஆகிய காரியங்களைப்பார்த்தால் அது எப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியானாலும் அது எங்கிருந்தபோதிலும் அதை அழித்தே தீரவேண்டியிருக்கிறது. 

திருடனுக்கும் கடவுள்

அன்றியும் திருடப்போகிற ஒரு திருடன் தான் திருடப் புறப்படுமுன் தனக்கு நல்லதிருட்டுக் கிடைக்கவேண்டும்" என்று கடவுளைப் பிரார்த்தித்து விட்டுப் புறப்படுகிறான். நல்ல திருட்டுக் கிடைத்தவுடன் அதில் ஒரு சிறு பாகத்தை கடவுளுக்கும் அதன் திருப்பணிகளுக்கும் செலவு செய்து கடவுள் உணர்ச்சியை அனுபவிக்கிறான். இதுபோலவே ஒரு கொலைகாரனும் தான் விடுதலை அடையக் கடவுளைத் துதித்து விடுதலையடைந்தவுடன் கடவுளுக்கு பூசை அபிஷேக முதலியன செய்து நன்றி செலுத்துகிறான். இது போலவே சொத்துகளை வைத்திருக்கும் உடமைஸ்தனும் தனது சொத்துக்களைத் திருடர்கள் கொள்ளைகொள்ளக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்தித்து நன்றி செலுத்துகிறான். இதுபோலவேதான் கடவுள் நம்பிக்கையுள்ளமற்ற எல்லாச் சோம்பேறிகளும் செல்வவான்களும் அயோக்கியர்களும் கொள்ளைலாபம் அதிக வட்டி அனுபவிக்கும் வியாபாரிகளும் கடவுள் பிரார்த்தனையின் மீதே தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றார்கள். 

ஆக்வே கடவுள் செயலும் கடவுள் கருணையும் - எவ்வளவு ஒழுக்கக்குறைவுக்கும், அநீதிக்கும் இடம் தருகின்றது என்று பாருங்கள். ஆதலால் தான் கடவுள் உணர்ச்சியும் நம்பிக்கையும் இதைத்தவிர வேறு எதற்காவது பயன்படுகின்றதா என்று பாருங்கள் என்கிறேன்.

மதம் என்றால் என்ன?

மதம் என்றால் - என்ன? என்கிற விவகாரகாலத்தில் மதவாதிகள் "மனித சமூக வாழ்க்கை ஒழுங்காகவும் ஒரு கட்டுப்பாட்டிற்கு உள்பட்டும் நடைபெறுவதற்காக அனு போகஸ்தர்களால் வகுக்கப்பட்ட திட்டங்களே மதம்" என்றும், மதக்கொள்கைகள் என்றும் "அவை காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றவாறு திருத்திக்கொள்ளக்கூடியது" என்றும் சொல்வதுடன் அதற்கு உதாரணமாக அவ்வப்போது பல சீர்திருத்தவாதிகள் தோன்றி புதிய திட்டங் கள் ஏற்படுத்தி சீர்திருத்தி இருக்கிறார்கள்' என்றும் ஒரு சிலர் சொல்வதோடு இதுதான் மதம் என்பதின் அர்த்தம் என்று சொல்லி அதனிடம் யாருக்கும் தகராறு இருக்கக் கூடாது என்கிறார்கள். அப்படியானால் அக்கொள்கை களின் குணதோஷங்களைப்பொறுத்தும் அதனால் ஏற்படும் பயன்களைக் குறித்தும் யோசிக்கவும் திருத்தவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்கவேண்டும் அல்லவா? ஆம் என்றால் நமக்கு அவர்களிடம் தகராறு இல்லை. 

அப்படிக்கில்லாமல் மதம் என்பது மனிதசக்திக்கு மீறிய ஒரு சக்தியையுடைய "மகான்களால் ஏற்படுத்தப்பட்டது என்றும் அதன் கொள்கைகள் எல்லாம் எங்கும் எக்காலத்திற்கும் ஒரேமாதிரியாய் இருக்கத்தக்கது என்றும் அவைகளில் எக்காலத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த எவருக்கும் உரிமையில்லை என்றும் அதனால் யாருக்கு எவ்வளவு கெடுதி இருந்தபோதிலும் பயனில்லாத போதிலும் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்றும் சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட மதத்தை நாம் சிறிதும் ஒப்புக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வித மூட அடக்குமுறை உணர்ச்சியைக்கொண்ட மதத்தை என்ன விலை கொடுத்தாவது அழித்தாகவேண்டும் என்று கூசாமல் சொல்லுகிறேன். ஏனெனில் அவை மனித சுமூக முற் போக்கைத் தடைசெய்வதுடன் மனித சமூக ஒற்றுமைக்கும் சுதந்திரத்திற்கும் சமஉரிமைக்கும் இடையூறாய் இருக்கின்றன. 

மற்றும் மதத்தின் பேரால் அநேக அற்புதங்களும் இயற்கைக்கும், மனிதசக்திக்கும் மீறிய அநேக காரியங்களும் பலர் செய்ததாகவும் இன்றும் செய்வதாகவும் கதைகள்கட்டி மக்கள் மூடர்களாக ஆக்கப்பட்டு வருகின் றதுடன், ஏராளமான பொருளும் முயற்சியும் நேரமும் மனிதசமூக நன்மைக்கும் முன்னேற்றத்துக்கும் சமத்துவத்துக்கும் உபயோகப்படாமல் பாழாக்கப்படுகின்றன. அன்றியும் மக்களது அறிவும் ஆராய்ச்சியும் கட்டுப்படுத் தப்பட்டு அடிமையாக்கப்படுகின்றன. இவ்வளவுகேட்டை எப்படி சகித்துக்கொண்டிருக்கமுடியும், ஏன் சகிக்க வேண்டும் என்று யோசித்துப்பாருங்கள். 

தேசீயம்

தேசீயம், தேசீயம் என்பதும் முற்கூறியவைகளைப் போன்ற ஒரு போலி உணர்ச்சிதான். ஏனெனில் தேசீய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும் மற்றும் அப்படிபட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்றுசேர்ந்து தங்களுடைய நிலைமைக்கு பரிகாரம் தேடுவதை தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழ்க்கைச்சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசீயம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது. 

தேசம் என்றால் எது? 

தேசம் என்றால் எது? உலகப்பரப்பு ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன, தேசம் என்பவைகளில் சில கண்டத்தைவிடப் பெரிதாகவும் பலமதங்களாகவும் பலபிறவிகளாகவும் பலமொழி, பலநாகரிகம், பலகலை ஆகவும் இருக்கின்றன. இவைதவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும், மாகாணத்திலும் பலமாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பலபாஷைகளும், பல மதங்களும், பல உட்பிரிவுகளும், பல பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வகட்டளை என்றும் மதக்கட்டளை என்றும் தேசீயகொள்கை என்றும் தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்றமுடியாது என்றும் இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர்விட்டாவது முயற்சிக்க வேண்டுமென்றும் கருதிக்கொண்டிருப்பவைகளாகும்.

இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சிகொண்டிருப்பதை நன்றாய்ப் பார்க்கின்றோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழு வதிலும் உயர்ந்த ஜாதி தாழ்ந்தஜாதி ஏழை - பணக்காரன், கீழ்நிலை - மேல்நிலை, கஷ்டப்படுகின்றவன்- கஷ்டப்படுத்துகிறவன் முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின் றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தை பிரித்துக்கொண்டு தங்களுக்கென தனித்ததேசம் தேசீயம் என்று ஒன்றைச் சொல்லிக்கொள்ளுவது என்பது எனக்குப் புரியவில்லை. நமது தேசம் என்று எந்த விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக்கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதிலுள்ள மனிதர்களின் நிலை என்னென்னவோ, அதுதான் மற்ற எந்த கண்டம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்துவருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும் தாழ்மைப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்துவருகின்றார்களோ அவ்வளவு நிலையில் தான் மற்ற தேசத்தார் என்கின்ற மக்களும் இருந்துவருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்தவிதமான மக்களின் துயரம் நீக்கப்பாடுபடுகின்றோம் என்கின்றோமே அந்தவிதமான துயரம் கொண்ட மக்கள் அந்நிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகின்றார்கள். நம்முடைய தேசீயம் என்னபதிலேயே எந்தவிதமான மக்கள், சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும் செல்வவான்களாகவும், அரசாங்க ஆதிக்கக்காரர்களாகவும் குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொதுஜனங்களைப் பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கி பட்டினி போட்டு வதைத்துத் தாங்கள் பெருஞ்செல்வம் சேர்த்துவாழ்ந்து சுக போகம் அனுபவித்துவருகின்றார்களே அதுபோலத்தான் அந்நியதேசம் என்பதிலும் சிலர் இருந்து அந்தாட்டுப் பெரும்பான்மையான மக்களைக் கொடுமைப்படுத்திவருகின்றார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் நம்மநாட்டில் ஒருபிரிவரர் பிறவியின் பேரால் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் என்ன கொள்கைகளைக்கொண்டு எந்த லட்சியத்தைக்கொண்டு உலகப் பரப்பில் ஒரு அளவை மாத்திரம் பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று கேட்கின்றேன். 

துருக்கிதேசத்துக்கும் இந்தியாதேசத்துக்கும் சண்டைவந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு தேசாபிமானம் இந்தியாவுக்கா? துருக்கிக்கா? ஹைதராபாத்துக்கும் மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால் ஹைதராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே தேசம் தேசாபிமானம் என்கின்ற வார்த்தைகளும் கடவுள், மதம் என்பதுபோன்ற ஒருவகுப்பாருடைய சுய நலத்திற்கு ஏற்ற ஒரு சூழ்ச்சிவார்த்தை என்று சொல்ல வேண்டி இருப்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்லமுடிய வில்லை. முடிவாகக் கூறும்பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொருதேச முதலாளியும் மற்றதேச முதலாளிகளுடன் சண்டைபோட்டு தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக்கொள்ள ஏழைமக்களைப்- பாமரமக்களைப் பலிகொடுப்பதற்காகக் கற்பித்துக்கொண்ட தந்திரவார்த்தையாகும்.

உதாரணமாக இங்கிலாந்துதேச முதலாளிகள் அமெரிக்கா நியூயார்க் தேசமுதலாளிகளுடன் சண்டைபோட்டு வெற்றிபெற்று தங்கள் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ளவேண்டும் என்கின்ற ஆசை ஏற்பட்டால் அல்லது நியூயார்க் முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேசத்துக்கு முதலாளிகளின் செல்வத்தைக் கொள்ளைகொள்ள முயற்சிப்பதாயிருந்தால் இங்கிலாந்து தேசத்து முதலாளிகள் இங்கிலாந்து தேசத்து ஏழைமக்களையும் பாமரமக்களையும் பார்த்து "ஓ இங்கிலாந்து தேசீய வீரர்களே, தேசாபிமானிகளே தேசத்துக்கு நெருக்கடி வந்துவிட்டது; இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள், ஓடிவாருங்கள் ஓடிவாருங்கள்'' என்று கூப்பாடு போடுவார்கள். கூலி களை அமர்த்தியும் வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைக்காரர்களுக்கு எலும்பு போட்டும் பிரசாரம் செய்விப்பார்கள். இதுபோலவே அமெரிக்க முதலாளியும் தன்தேசம் நெருக் கடி நிலையில் இருப்பதாகவும் அமெரிக்கமாதா அங்குள்ள பாமரமக்களையும் வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் பட்டினிகிடக்கும் ஏழைமக்களையும் தங்கள் கடமையைச்செய்ய அழைப்பதாகவும், கூவிக்கொண்டு கூலி கொடுத்து பிரசாரம் செய்வார்கள். இரண்டுதேச ஏழைமக்களும் மற்றும் சாப்பாட்டிற்கு அறவே வேறுவழியில்லாத மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு சண்டைக்கு போய் ஒருவரையொருவர் சுட்டுக்கொன்று கொள்ளுவார்கள். சிறைப்பிடிப்பதின் மூலம் இரு தேச சிறையையும் நிரப்பிவிடுவார்கள். கணக்குப்பார்த்தால் இருகக்ஷியிலும் பத்து லக்ஷக்கணக்கான மக்கள் உயிர்விட்டிருப்பார்கள் பிறகு இருவரும் ராஜியாகப்போயோ அல்லது யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.

ஜெயம்பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும், அல்லது தங்கள் முதல் என்றும், குறையாத மாதிரியில் பத்திரமேற்பட்டிருக்கும். ஆனால் சுட்டுக்கொண்டு செத்தவர்களுக்கு சுடுகாடும், அவர்கள் பெண்ஜாதிகளுக்கு சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழைமக்களுக்கு என்ன பயன் என்பதை யோசித்துப்பாருங்கள். அமெரிக்கா குடி அரசு நாடாவதற்கும் அந்நிய ஆட்சியைத் துரத்து வதற்கும் அமெரிக்கா ஏழைமக்கள், தொழிலாளி மக்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள், எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள் என்பதை அமெரிக்கா விடுதலைச் சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள். இன்று அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்களும், வியாபாரிகளும், விவசாயப்பெருக்கும் இருந்து வருகின்றன. ஆனால் ஏழைகள் படும் கஷ்ட மும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள் அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்துவருவது வேறு எந்தநாட்டிற்கும் குறைந்ததல்ல.

அதுபோலவே இந்திய தேசீயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பல ஏழைப் பாமரமக்களைத் தூண்டிவிட்டு அடிபடச்செய்து சிறையை நிரப்பி உரிமையும் பதவியும் அதிகாரமும் பெற்று முதலாளிகள் பணத்தையும் சோம்பேறி வாழ்க்கைப் பிறவிகள் உத்தியோகங்களையும் பெற்றுத் தங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பெருக்கிக் கொண்டதைத்தவிர இந்த இந்திய தேசீயத்தால் ஏழைமக்கள், பாமரமக்கள் அடைந்த - அடையப்போகும் நன்மை என்னவென்பதைப் பாருங்கள். 

தோழர்களே! அமெரிக்கா தேசாபிமானத்தின் தன்மையையும் அதன் பயனையும் சிந்தித்துப்பாருங்கள். அமெரிக்கா அந்நிய . ஆட்சியை ஒழித்ததாலும், ஒரு அர சனையே விரட்டிவிட்டு “குடிகளின் ஆட்சி" ஏற்படுத்திக் கொண்டதாலும் ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது என்பதை மற்றொருதரம் யோசித்துப்பாருங்கள். 

இந்த இலங்கையில் இருந்துகொண்டு இந்திய தேசாபிமானம் பேசும் தேசீய வீரர்களைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஏறக்குறைய அத்தனைபேரும் 100-க்கு 90- பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து வந்து இலங்கைதேசத்தை சுரண்டிக்கொண்டுபோக இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர்களாய் - அடிமைகளாய் இருப்பவர்களுமாகும். 

லேவாதேவிக்காரர்கள் பெரிதும் மாதம் 100-க்கு. 12-வரை வட்டிவாங்கி ஏழைமக்களையும் இலங்கைவாசிகளையும் பாப்பராக்கி கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், விவசாயக்காரர் பெரிதும் இலங்கை பூமிகளை ஏராளமாய் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்து பொருள் சேர்த்து கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளைலாபம் அடித்து இலங்கைச் செல்வத்தைக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆட்சியில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டு பணம் சுரண்டிக்கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம் பிடித்த வன்னெஞ்சப்பார்ப்பனர்களுமாகக் கூடிக்கொண்டு இந்திய தேசாபிமானக் கூப்பாடு போடுகின்றார்கள். 

வெள்ளைக்காரனான அந்நியன் 100-க்கு வருஷம் 6-வட்டிக்கு கொடுத்தால் கருப்பனான அந்நியன் 100-க்கு மாதம் 6-வட்டிக்கு கொடுக்கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால் கருப்பன் எழைகளிடம், கூலிகளிடம் வட்டிவாங்கிக் கொடுமைப் படுத்துகிறான்.

இந்தப்படி மக்களை சதித்து கொள்ளை அடிப்பவர்களே (வெள்ளையரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம், மதாபிமானம், தேச அபிமானம் பேசுகிறார்கள். 

ஆகவே இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம், என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்து விடுங்கள். அவை ஒரு நாளும் கஷ்டப்படும் மக்களுக்கு பயனளிக்கா. மற்றபடி அவை உலகில் ஏழை பணக்காரன் என்று இரண்டு வகுப்புகள் இருக்கவும் எழை களைத்தொழிலாளிகளை பணக்காரரும், சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும்தான் பயன்படும்.

முடிவு.

தோழர்களே! முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி, மனிதத்தன்மை, மானம் இல்லாமல் செய்திருப்பதையும் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும், அவர்களது பெண்டுபிள்ளைகளின் பட்டினியையும், கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்துகொண்டு கஞ்சிக்கு ஊர்ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார்யாரால் கஷ்டப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் பாருங்கள். உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி- தொழிலாளி, குரு-சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன்-குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத்தள்ளி தரை மட்டமாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய , மனிதசமூகம் சமஉரிமை - சம நிலை என்கின்ற கட்டடத்தை கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகில் உள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கின்ற வித்தியாசம் இல்லாமல், பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.

தேசபக்தி தேசீயம் என்னும் சூழ்ச்சியானது பல வருஷங்களாக மக்களை அந்நிய நாட்டு நடப்புகளையும் அந்நிய நாட்டு மக்கள் நிலைமையும் உணரமுடியாமல் செய்துவந்த காரணமே உலக ஒற்றுமை ஏற்பட முடியாமல் இருந்துவருகின்றது.

தெளிவாய்ச் சொல்லவேண்டுமானால் ''அந்நிய ஆட்சி" "சுயாட்சி" என்பதெல்லாம் அறவே ஏழைமக்களுக்கு பயனற்றதும் சூழ்ச்சி நிறைந்தது மேயாகும். சுயாட்சி உள்ள நாட்டிலும், சுயராஜ்யம் உள்ள ஊரிலும் ராஜாவே இல்லாத குடி அரசு தேசத்திலும் பணக்காரன் கொடுமையும், பாதிரியின் சூழ்ச்சியும், ஏழைகளின் கஷ்டமும், பாமரமக்களின் மடமையும் இருந்துதான் வருகின்றது. கடவுள் பக்தியும் மதபக்தியும் தேசாபிமானமும் நிறைந்து ததும்பும் நாடுகளிலும் இக்கொடுமைகள் இருந்துதான் வருகின்றன. கடவுளுக்காகவும், மதத்துக்காகவும் கோடானுகோடி ரூபாய் செல வழித்துப் பலிகொடுத்து பக்தி செலுத்திவரும் நாட்டிலும் மகாத்மாக்கள், ரிஷிகள், அவதாரங்கள் ஏற்பட்ட நாட்டிலும் இக்கொடுமைகள் இருந்துதான் வருகின்றன. ஆனால் கடவுள், மதம், தேசீயம் ஆகியவைகள் அழிக்கப்பட்ட அடியோடு இல்லாத இடங்களில் மாத்திரம் பணக்காரக் கொடுமையும், சோம்பேறி வாழ்க்கையும், பட்டினிக் கஷ்டமும், உயர்வு தாழ்வு நிலையும் பாதிரி ஏமாற்றமும் மகாத்மா தந்திரமும் காணப்படவில்லை. அவ்வூராருக்கு கடவுள் மத தேச அபிமானம் இல்லை. மனித சமூக சமத்துவ அபி மானம் மாத்திரமே பிரதானமாய்க்காணப்படுகிறது. அங்கு பணக்காரன்-ஏழை, முதலாளி தொழிலாளி, அதிகாரி - குடிஜனங்கள் என்கின்ற வித்தியாசமே காணப்படவில்லை. 

அங்குள்ள சகல சொத்திற்கும் அங்குள்ள சகல மக்களும் சமசுதந்திரமுள்ளவர்களாய் இருந்து வருகிறார்கள். எல்லா மக்களுக்கும் சரி அளவு வேலையும், போதுமான ஆகாரமும் சுக சௌகரியமும் இருந்து சமமாய் அனுபவிக் கப்பட்டு வருகிறது. நாளைக்கு என் செய்வது" என்ற கவலையே இல்லாமல் என் பெண்டு பிள்ளைகளை காப்பதார் என்கின்ற சிந்தனையே இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். கடவுளும், மதமும் இல்லாததால் அந்நாடு பூமிக்குள் அமிழ்ந்து போகவில்லை. 

அந்நாட்டு மக்களுக்கு ஆண், பெண் அடங்கலுக்கும் ஏற்பட்ட தைரியமும், உயிருக்குத் துணிந்த வீரமும், சமத்துவ உணர்ச்சியும் கடவுளையும், மதத்தையும் நம்பிய தேசாபிமானமுள்ள எந்த நாட்டாரிடமும் காணமுடியாததாயிருக்கிறது. நமது நாட்டிலோ சகல பொறுப்பையும் கடவுள்மீது போட்டுவிட்டு சோம்பேறிஞானம் பேசுபவர்களே மலிந்து இருக்கிறார்கள். நமது தலைவர்கன் என்பவர்களோ அதைச்சாதிக்கிறேன், இதைச் சாதிக்கிறேன் என்று பேசி மக்களை ஏய்த்து பயன் அடைவதும், முடியாவிட்டால் கடவுள் மீது பழிபோட்டு நழுவிக்கொள்ளுவதுமானவர்கள். கடவுள் மீது நம்பிக்கை உள்ள நமது மக்கள் வீரமோ ஒரு சிறு உண்மைத் தியாகம் செய்ய வேண்டி ஏற்பட்டாலும் நான் எதற்கும் தயார்தான்; ஆனால் எனக்கு ஏதாவது. கஷ்டம் வந்துவிட்டால் என் பெண்டு பிள்ளைகளுக்கென்ன கதி என்றுதான் யோசிக்கவேண்டியிருக்கிறது'' என்ற அளவோடு நிற்கக்கூடியதாகும். கடவுளை நம்பாதவர்களும், கடவுள் மீது எவ்வித பொறுப்பும் போடாதவர்களுமாயிருக்கிறவர்களும் கடவுள் உணர்ச்சியை அடியோடு ஒழித்துக்கொண்டவர்களுமான மக்களுள்ள ரஷ்ய நாட்டில் ''நாளைக்கு என்னகதி'' என்கின்ற பேச்சே கிடையாது. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவேதான் காணப்படுகிறார்கள். 

அந்த நிலைமைதான் “நம் நாட்டுக்கும்" மற்றும் உலகமெங்கும் வேண்டும். அதற்காகவே வாலிபர்கள் எல்லோரும் உழைக்கவேண்டும். அதுவே இப்போது நமது, முன்னணியில் இருக்கும் வேலையாகும். 

புரட்சி ஓங்குக! பொதுவுடமை தோன்றுக!!

தமிழன் பிரஸ், ஈரோடு, காப்பிகள் 1000

Share this post :

+ comments + 1 comments

அரிய பொக்கிஷம். நல்லதொரு அறிமுகம். மிக்க மகிழ்ச்சி.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates