கள்ளத்தோணி’ ‘தோட்டக்காட்டார்’ ‘புளிச்சக்கீரை’ ‘கொண்டைகட்டி’ இதெல்லாம் நாங்கள் எம்முடன் பாடசாலையில் படிக்கும் இந்திய வம்சாவழித்தமிழ் சக மாணவர்களை விளிக்கும் சொற்கள். அதன் அர்த்தம் எமக்கு தெரியாவிட்டாலும் எமது பெரியவர்களின் உரையாடல்களிலிருந்து பெற்றவைதான் அந்தச் சொற்கள். பிள்ளைகள் பிறந்தால் அவர்களது தலைமுடியை திருப்பதிக்கோ சிறீரங்கத்துக்கோ நேர்த்தி செய்து வைப்பார்கள். பெண்பிள்ளையானால் போச்சு. ஆனால் ஆண்பிள்ளைகளுக்கு அந்த முடியை ஒரடி ஒன்றரையடி நீளத்தில் பின்னி ரிபண் வைத்துக்கட்டி பாடசாலைக்கு விடுவார்கள். ஆறாம் ஆண்டு படிக்கும் பையன் பின்னலுடன் வருவான். அவனை நண்பர்கள் சக மாணவர்கள் கொண்டைகட்டி என்பார்கள். அப்படியும் ஏழை பணக்காரர் என்ற விதத்தில் நான் இரண்டாந்தரப்பிரசைதான். எனக்கு முதல் வாங்கு கிடைக்காது. அதிகமாக கடைசி அல்லது அதற்கு முன் எனவே என்னைப்போலவே இருக்கும் கறுத்த (வெய்யிலில்அலைவதால்) நாகரீக உடையில்லாத ஒழுங்காக எல்லாப்பாடங்களுக்கும் புத்தகம் கொப்பி இல்லாத அந்த குழுவுடன்தான் எனது சகவாசம் இருந்தது. நானும் அப்படித்தான்.
என் சரவணனின் கள்ளத்தோணியை படிக்கும் போதுதான் அதன் ஆழமும் நீளமும் புரிந்தது. பின்னொரு காலத்தில் நம்மவர்களும் கள்ளத்தோணியில் அவர்களுடைய நாட்டுக்குள் போகப்போவதை அப்போது யாரறிவார். அவர்கள் மீதான எமது அணுகுமுறைகளை இப்போதல்ல, அன்றே நான் வெறுப்பும் ஒரு வருத்தமும் கலந்தே பார்த்திருக்கிறேன். எமது கிராமத்தில் சரளமாக தெருவுக்குத்தெரு அவர்கள் கலந்திருந்தார்கள். அவர்களது விவசாய தொழில் நுட்பங்கள் துலாவில் ஓடி இறைத்த எம்மவருக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இதுபற்றி நான் எனது காடுலாவு காதையில் விபரித்துள்ளேன். எமது கிராமத்துக்கு வந்து குடியேறியோர் பெரும்பாலும் வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே மன்னார் யாழ்ப்பாணக்கரைகளில் வந்திறங்கியவர்கள். தமக்கென காணிகளைப் பெற்று வாழ்ந்தவர்களும், நிலமுள்ளவர்களின் நிலங்களை குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்தவர்களும் தத்தம் குலத் தொழிலாக செருப்பு தைப்பது வளையல் விற்பது, போன்ற தொழில்களையும் பெருமளவில் துப்பரவுப்பணிகள் செய்வோரும் இருந்தனர். இன்றும் இவர்களுடைய சந்ததியினரே இந்தப்பணியில் உள்ளார்கள்
பெரியாருடைய கொள்கைகளின் வீச்சால் கவரப்படும்வரை எமது வன்னி யாழ்ப்பாணச்சமூகம் இவர்களை தம்முள் ஒருவராக நடத்தியதே இல்லை. கள்ளத்தோணி பல அரசியல் பொருளாதார சமூக நிலைகளின் அடிப்படைகளை கிளறி விட்டாலும், எனக்கு என் சிறு வயதில் அவர்களுடன் வாழ்ந்த காலமும் நாம் அறியாமலே அல்லது எமக்குப் புரியாமலே என் கண்முன் நடந்த அநேக விடயங்கள் நினைவுக்கு வந்து என் தூக்கத்தை கெடுத்தன. இப்போதுமணி இரவு பன்னிரண்டரை தூக்கம் வருவதாயில்லை.
இந்த சம்பவங்களில் எத்தனை அரசியல்வாதிகள் குளிர்காய்ந்துள்ளார்கள். இன்றைய தமிழ்தலைவர்கள் அன்றைய தமிழ் தலைவர்கள் எவராலும் கவனிக்கப்படாத ஒரு இனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பந்தாடப்பட்டதன் பின்னணியில் எவ்வளவு தில்லு முல்லுகள் சுத்துமாத்துகள். ஏவ்வளவு காலமாக மிக கஸ்டப்பட்டு அத்தனை விடயங்களையும் ஆதாரபூர்வமாக கொண்டுவந்திருக்கும் சரவணன் இதை ஒரு ஆன்மீக சுத்தியோடு மலையக மக்களின் மாவீரர்களுக்கு வழங்கியிருக்கிறார். ஏப்போதாவது ஒரு பத்திரிகையின் ஒரு மூலையில் படித்த அந்த செய்திகள் இப்போது வீரியம் பெற்று நிமிர்கின்றன.
“மன்னாருக் கோச்சியேற மனசு சரியில்ல
என்மனசுக்குகந்த கண்ணே உன்னை மறக்கமுடியவில்லை.- அடி
வாழ வந்த பொண்ணே என்ன மதிமயக்கிய கண்ணே
பூமரத்து சிட்டே என் புனுகு சாந்துப் பொட்டே
தேனே ஒன்ன பிரிந்து போக தேம்புதடி எம்மனசு
தேற ஒரு வழியுமில்லடி தேமதுரகிளியே
ஓன்ன அக்கரை இறக்க ஒட்டார் என்ன இக்கரை இறங்க ஒட்டார்
இது இமிக்கிரேசன் சட்டம் அது ஒனக்கும் எனக்கும் நட்டம்”
இது மலையகத்திலிருந்து வன்னிக்கு வந்து எமது தோட்டத்தில் கூலியாக வந்த ஓருவர் பாடிய பாடல்களில் ஒன்று. ஆக அரசாங்கமும் இனத்தில் பிறழ்சாதியினரும் மட்டுமல்ல ஒரே மொழியைப் பேசும் சக தமிழர்களால் வஞ்சிக்கப்பட்ட பலரை எனக்குத் தெரியும். குடியுரிமையற்றவர்களை கைது செய்து நாடுகடத்திய காலத்தில் ஒருநாள் எமது வீட்டின் முன்னே ஒருவரது வாகனத்தரிப்பிடத்தில் சிறு மறைப்படைத்து வாழ்ந்த ஒரு குடும்பம் குத்தகைநிலத்தில் மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டிருந்தார்கள். திடீரென ஒரு மத்தியானப்பொழுது ஒரு பொலீஸ் வாகனம் வந்து அவர்களை குடும்பத்துடன் இழுத்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பறந்தது. அவர்கள் கள்ளக்குடியேற்றக்காறர்களாம் என்றார்கள். நாங்கள் ஓடிப்போய் அந்த வீட்டை எட்டிப்பார்த்தோம். சாப்பிட்ட பாத்திரங்கள் சிதறிக்கிடந்தன. அவர்களை எச்சிக் கைகழுவக்கூட அனுமதிக்கவில்லை. முதன்முதலாக நான் கண்ட குடிப்பெயர்வு. அது என்னைக் கலக்கியது. அதன்பின் இதே போல பல. காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர்களது செழிப்பான பயிர்களை தமதாக்கிக் கொள்ள முனைந்த நிலச் சொந்தக்காரர்களின் மொட்டைக்கடுதாசிகளே.
இனக்கலவரங்களின் பட்டியல் நான் அறிந்த வரையில் 1915என்றுதான் நினைத்திருந்தேன். அதற்கு முன்னும் நடந்த கலவரங்கள் அதன்காரணங்களோடு மிகத் துல்லியமாக தந்துள்ளது ஆச்சரியம். போராட வலுவற்ற ஒரு குழுமம் போராடியே தீர வேண்டும் என்ற அழுத்தங்களின் பின்னணியில் தன்னெழுச்சியுடன் போராடியது எனற செய்தி இதுவரை இருட்டில் கிடந்துவிட்டது. உண்மையில் கள்ளத்தோணிக்காக சரவணன் பெரும் முயற்சியை முதலீடாக்கியுள்ளார். இதற்காக மலையகம் மடடுமல்ல நாங்களும் அவருக்குத் தலைவணங்குகிறோம்.
மக்களை பங்குபோட்ட இலங்கை இந்திய அரசுகளின் பச்சோந்தித்தனத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கும் பாங்கு அருமை. ஒரு வரலாற்றை எழுதும் போது முன்பின் சாயாமல் தேதிவாரியாக நிர்ணயித்து சம்பவங்களை கோர்த்தெடுத்து வாசிப்பவர் சோர்வடையாமல் தருவது யாருக்கும் அரிதாகும். சரவணனுக்கு அது கைவந்த கலையாக படிந்திருக்கிறது. அவரிடம் தேர்ந்த அரசியற் தெளிவும் மக்களின் மீதான கரிசனமும் இதை யாருக்காக எழுதுகிறாரோ அவர்களுக்கும் புரியும் வண்ணம் இலகுநடையிலும் சொல்லியிருக்கிறார். புத்தகத்தை மூடும்போது மனம் பெரும் சுமையாகி கனக்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...