அறியப்பட்ட தமிழ் இலக்கியத்தை மன்னராட்சி இலக்கியம் நிலப்பிரபுத்துவ இலக்கியம் மற்றும் சமகால இலக்கியமாக நடுத்தரவர்க்க இலக்கியம் என வரையறுக்கலாம். சமகாலத்தில் நிறுவப்பட்ட உன்னத இலக்கியமாகக் கருதப்படுவது ஐரோப்பிய மத்தியதரவர்க்கத்தவரின் வாழ்நிலை நெருக்கடியையும் அவர்தம் பார்வையையும் உள்வாங்கிய இந்திய-தமிழக-ஈழ மத்திதரவர்க்கத்தவரின் இலக்கியம்தான். இலக்கியத்தில் தமிழக இலக்கிவாதிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் மதிப்பீடுகளும் ஐரோப்பிய மத்தியதரவர்க்கத்தவரின் மதிப்பீடுகள்தாம். இந்த மதிப்பீடுகள் இவர்களின் வாழ்க்கை அனுபவம் தோற்றுவிக்க இவர்கள் கண்டடைந்த அறவியல் மதிப்பீடுகளாகும். இந்த மதிப்பீடுகளுக்கு மாற்றாக நாடோடி மக்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் விளிம்புநிலை மக்களுடையதும் ஒடுக்கப்பட்ட மக்களுடையதுமான வெளிப்பாடுகளை ஐரோப்பிய மார்க்சீயர்களான ரேமான்ட் வில்லியம்சும் டெர்ரி ஈகிள்டனும் தமது விமர்சன மதிப்பீடுகளில் முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். தமிழகத்திலும் இவ்வகையில் தமிழக மார்க்சீயவாதியான நா.வானமாமலையும் அவர்களது மாணவர்களான நெல்லை ஆய்வு வட்டத்தினரும் இம்மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
மொழி சார்ந்த கலை உணர்வென்பது அதிகமும் பயிற்சி சார்ந்ததும் பிரக்ஞைபூர்வமான சிந்தனை சார்ந்ததும்தான். நாடோடிப் பாடல் மரபுகளிலும் விளிம்புநிலை மக்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளிலும் இந்த மொழி சார்ந்த பயிற்சி அல்லது பிரக்ஞை என்பது அவர்களின் வாழ்பனுபவங்களைப் பொறுத்து இரண்டாம் பட்சமானவையாகும். வுிளிம்பு நிலை மக்களின் கோபமும் துயரமும் சந்தோஷமும் கரையுடைத்த வெள்ளம் போல் பெருகி வருபவையாகும் அவர்களது கவிதைகள் என்பது தமது மரபில் வெகுமக்கள் பிரக்ஞையாகச் செயற்பட்ட நாட்டார்பாடல்களை தமது ஆதார ஊற்றாக எடுததுக் கொள்கிறது. இவ்வகையில் மலையகத்தைச் சேர்ந்த தமிழோவியனின் கவிதைகளும் நாட்டுப்பாடல்களின் சந்த லயத்தையும் எளிமையையும் நேரடித் தன்மையையும் தனது ஆதார ஊற்றாகக் கொள்கிறன.
தமிழோவியன் கவிதைகள் மலையக மக்களின் கூட்டு அரசியல் பிரக்ஞையின் அங்கமாக ஒலிக்கிறன. 'தமது கோபத்தையும் உரிமை வேட்கையையும் அரசியல் உணர்வுகளையும் பிரதிநிதித்தவப்படுத்த சரியான அரசியல் அமைப்புக்கள் கட்சிகள் நிறுவனங்கள் போன்றன இல்லாதபோது அல்லது அத்தகைய நிறுவனங்களின் தோற்றம் அடக்குமுறைக்கு ஆளாகியபோது அந்த அரசியல் பிரக்ஞையின் இடத்தைக் கலை இலக்கிய வெளிப்பாடுகள் எடுத்துக் கொள்கிறன ' எனும் ரேமான்ட் வில்லியம்சின் ஆய்வு நோக்கை மிகச் சரியாகவே மு.நித்தியானந்தன் தனது முன்னுரையில் மலையகத்துக்குப் பொருத்திக் காட்டுகிறார். மலையக மக்களின் எதிர்ப்புக் குரல்களின் இருமுனைக்கத்தியைப் போன்று திகழ்ந்தவை அவர்தம் தொழிற்சங்கங்களும் அவர்களது இளைஞர் சங்கங்களும் ஆகும். தொழிற்சங்கங்களின் வர்க்க சமரசம் சில வேளை கோபம் கொண்ட மலையக இளைஞர்களைச் சோர்வுறச் செய்தாலும் அவர்கள் அமைத்த இளைஞர் சங்கங்கள் படிப்பகங்கள் கலை இலக்கிய அமைப்புக்கள் அவர்களது ஆன்மாவை வெளியிடுவதில் அவர்களை ஏமாற்றவில்லை. அத்தகைய இளைஞர் அமைப்புக்களில் தோன்றி வளர்ந்தவர் தான் இப்போது தனது முதுமை நாட்களில் கரைந்து கொண்டிருக்கும் தமிழோவியன்.
தமிழோவியனின் கவிதைகளில் பெரும்பாலுமானவை 1983 ஆடிக்கலவரத்தில் மூண்ட சிங்களப் பேரினவாதத் தீயில் கருகிப்போன பின் எஞ்சிய கவிதைகளே தற்போது தொகுப்பாசிரியர் மு.நித்தியானந்தனின் முன்முயற்சியில் வெளியாகியிருக்கிறன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான மலையகப் பரிசுக் கதைகள் தொகுப்பையடுத்து வெளிியாகியிருக்கும் குறிப்பிடத்தக்க கவிதைத்தொகுப்பு இந்நுால். மலையகப் பரிசுக் கதைகளின் அட்டைப்படம் மலையக மனிதனொருவனின் துயரத்தைச் சித்தரித்தது. டென்மார்க் செளந்தர் தீட்டிய 'தமிழோவியன் கவிதைகள் ' புத்தக அட்டைப்படத்தில் மலையக முதிர் மனிதனுக்கு உடல் தளர்ந்து போயினும் அவன் நெஞ்சில் மூண்ட வெஞ்சினம் தளர்ந்து போய்விடவில்லை எனும் படியில் ஓவியம் சித்தரிப்புப் பெறுகிறது.
தமிழோவியனின் கவிதைகளை இந்தத் தொகுப்பின் வழி ஒரு சேரப்பார்க்கிறபோது மூன்று வகையான பண்புகளைக் காணமுடிகிறது. முதலில் மலையக மக்களின் துயர் பற்றிய கவிதைகள்; இரண்டாவதாக, மலையகப் பெண்களின் தியாகமும் காதல் மனமும் குறித்த கவிதைகள்; மூன்றாவதாக, மலையக மக்களின் அரசியல் குரலாகவிருந்த அவர்தம் உணர்வுகளின் பிரதிநிதிகளாகவிருந்த தொழிற்சங்கவாதிகள் அரசியல் தலைவர்கள் போன்றவர்களுக்கான மனம் நெகிழ்ந்த அஞ்சலிகள். அஞ்சலிகள் கவிதைத் தன்மையைப் பெறுவது என்பது பெரும்பாலும் கடினம். மறைந்தவரின் பிறப்பு இறப்பு மற்றும் இடைநாள் குறிப்பு பற்றிய விதைந்துரைப்பு தவிரவும் அதில் தேர்ந்து கொள்ள எதுவுமிருப்பதில்லை என்பதால் சம்பந்தப்பட்ட மக்களது விருப்புக்கே அதைவிட்டு நகர்வது நல்லது. தமிழோவியன் அன்றைய மலையக இளைஞர் பெரும்பாலுமானவர்கள் போலவே திராவிட இயக்க அரசியலுக்கும் அவர்தம் கலை இலக்கிய வெளிப்பாடுகளுக்கும் மனம் பறிகொடுத்தவர் . நாட்டுப்பாடல் மரபையடுத்து தமிழோவியனை பாரதிதாசனும் கண்ணதாசனும் அதிகம் பாதித்திருக்கிறார்கள். தமிழோவியனின் பல்வேறு கவிதைகளில் பாரதிதாசனின் கவிதைக்கதை சொல்லும் பாணியை நாம் பார்க்கமுடியும். பெண்கள் குறித்த தமிழோவியனின் கவிதைகளில் பெயர்கள் கொண்ட காதலனும் காதலியும் தம் வாழ்வுத்துயரையும் சந்தோத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஜீவநாளங்கள் எனும் கவிதையொன்றில் மலையகப் பெண்களின் மீதாக அவரது காதல் உணர்ச்சிமீதுற வெளிப்படுகிறது :
கொழுந்து கிள்ளும் கோதையர்க்கே மாலைசூடுங்கள்-அவர்கள்
கோடி செல்வம் தேடித்தரும் திறனைப்பாடுங்கள்.
விழுந்தெழுந்து தளர்ந்திடாமல் மலைச்சரிவிலே-கொழுந்தை
விரைந்தெடுக்கும் விரலசைவின் அழகைக் கூறுங்கள்
மலையகப பெண்களின் துயர்சுமந்த வாழ்வுக்கான ஆராதனையாகத்ததான் அவரது காதல் கவிதைகள் வேர்கொள்கின்றன. தொடர்ந்து பெண்கள் படும் வேதனையை சிறிய வெளிச்சம் கவிதையில் இவ்வாறு சொல்லிச் செல்கிறார் :
பச்சிளங் குழந்தைகள் பிள்ளைகள்
பாதுகாக்கு மகத்தில் நிறுத்தி
உச்சிமலை முகடுகளில் கொழுந்தை
உடல் வியர்க்கப்பறித்து-நிறுத்தே:
ஓட்டமும் நடையுமாய் பிள்ளைகள்
உறங்கிடும் காப்பகம் வந்தே
ஊட்டுவார் பாலை! அரைவயிறாய்
ஓடுவார் மீண்டும் மலைக்கே
அரைவயிறு உண்டவர்கள் முழு வயிறு உண்ணும் கனவோடுதான் தமிழகத்திலிருந்து இலங்கை மலைக் காடுகளுக்குத் தமிழகத் தமிழர்கள் சென்றார்கள். தேயிலையும் காப்பியும் வளர்க்க அவர்களது இரத்தத்தை உறிஞ்சிய புிரிட்டாஷ் ஏகாதிபத்தியம் அவர்களைக் கூலிகள் என்றது. இலங்கையர் அவர்களை, 'கள்ளத் தோணிகள் ' என்றார்கள். மேட்டுக் குடித்தமிழர்கள் அவர்களை 'தோட்டக் காட்டான் ' என்றார்கள். அவர்களுக்கு பிரஜா உரிமையை மறுத்தது இலங்கை அரசு. இந்திய அரசு திரும்பிவர அவர்களை அனுமதித்தபோதும் அவர்கள் தமிழக கிராமங்களில் நிராகரிக்கப்பட்டு ஒதுககப்பட்டு வாடும் தலித்மக்களோடு சேர்த்து புறக்கணிக்கப்பட்டார்கள்.. நாள் தோறும் லயன்களில் மிருகங்கள் போல் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இம்மக்கள் தமது கடந்த கால தமிழக நினைவுகளில் நொடிதோறும் வாழ்ந்தார்கள். தமிழகத் தெய்வங்கள் அவர்களது காவல் தெய்வங்களாகத் தொடர்ந்தன. தமது துன்பங்களை அவர்கள் தெய்வங்களிடம் சொல்லித்தான் ஆறதல் தேடிக் கொண்டார்கள். கலைவாணியைப் பார்த்து தமிழோவியன் இவ்வாறாக இறைஞ்சுகிறார்.:
வறுமையும் கவலையும் நோயும்
வாட்டுமென் குடும்ப நிலையில்
பொறுமை நீ காட்டாது நல்ல
பொருள் வளஞ்சேர்த்து நீ
இனியன நிலைக்க வைத்து
இன்னலில் தவிக்கும் என்றன்
பணிகளும் வெல்ல நித்தம்
பக்க பலமாய நிற்பாயம்மா
வறுமையிலும் காதல் கனிந்தது மழலைகள் மலர்ந்தன. நம்பிக்கையும் அவர்களது வாழ்வின் சங்கல்பமாக தொடர்ந்து வந்தது. மனிதரெனும் பெருமிதம் உழைப்பவரெனும் பெருமிதம் திராவிட இயக்கம் ஊட்டிய சுயமரியாதை உணர்வு அவர்களது வாழ்வின் அங்கமாக ஆகியது. தமிழோவியனின் இரண்டு கவிதைகள் அவர்தம் அவநம்பிக்கையையும் உடனே அதைச் சாடி எழும் நம்பிக்கையையும் காட்டப் போதுமானதாகும். 'வெளியில் வந்து ' எனும் கவிதையில் இவ்வாறு சொல்கிறார் :
தொன்று தொட்டு இலங்கை நாட்டில்
வாழ்ந்த கூட்டம் நாம்
இன்றுமிங்கே குடியுரிமை
வாக்குரிமை இழந்து நிற்கிறோம்!
நன்றி கெட்டோர் நாடற்றவர்
என்று கெடுத்ததால்
குன்றுகளில் உழைப்பவராய்
தின்று பிழைக்கின்றோம்.
ஈனப்பிழைப்பு பற்றிய கோபத்தினின்று நம்பிக்கையும் காதலும் உழைப்பின் பயனாாய் விளைந்த சிருஷ்டிப் பொருளும் அதன் மீதான நேசமும் அடுத்த நொடியில் பீறிட்டு வருகிறது :
உழைக்கவே பிறந்த தமிழர்
உதிரத்தில் வளர்ந்து நன்கு
தழைக்கும் தேயிலையே! நாட்டை
தற்காக்கும் கற்பகத் தருவே!
புிழைக்கப்பாடுபடும் தமிழ்ப்
பாட்டாளி மக்கள் தினம்
செழிக்கவே நல்ல நிலையைச்
சேர்ந்திட வழியும் செய்வாய்!
தோட்டக்காட்டான்! ஏதும்
தெரியாத தொழிலாளி!-என்று
வாட்டியே வதைக்க நினைத்தோர்
வலிமையும் ஒடுங்க சட்டம்
ஆட்டிப் படைக்கும் நிலையால்
ஆதிக்கமடங்க நீதியை
நாட்டினாய் தேயிலையே!
உன்னை நாவாறப் போற்றி வாழ்வோம்.
வுிளிம்பு நிலை மக்களின் கவிதைகளிள் உயிராய் உறைந்திரக்கும் ஒரு அம்சம் அவர்களது இயற்கை சார்ந்த வாழ்வு. தேயிலையை நேசிக்கிற மாதிரித்தான் அவர்தம் குழந்தைகளையும் மனைவியரையும் காதலியரையும் அவர்கள் நேசிக்கிறார்கள். அகப்படாத நேசிக்கிற வாழ்வு கையகப்படாத போதுதான் அவர்களது துயரம் கோபமாக வெஞ்சினமாகப் பிறிடுகிறது.
மலையகத் தமிழர்தம் வாழ்வும் அரசியலும் அவர்தம் கலை இலக்கிய முயற்சியும் குறித்த வரலாற்று ஆவணங்களாக இரண்டு கட்டுரைகள் ந்நுாலில் டம் பெறகிறது. மலையகக் கல்வியாளரும் அறிஞருமான காலஞ்சென்ற ஆர் சிவலிங்கம் அவர்களின் அணிந்துரை ஒன்று. பிறிதொன்று மலையகக் கலாச்சார தளத்தில் ஒரு எதிர்ப்புக் குரல் எனும் இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனின் மிக விரிவான ஒரு கோட்பாட்டுக் கட்டுரையாகும். இந்த நுாற்றாண்டு அக்டோபர் புரட்சியையும் காலனிய ஆதிக்க எதிர்ப்பு தேச விடுதலை யுத்தங்களையும். மட்டும் காணவில்லை. மக்களின் மாபெரும் இடப் பெயர்வுகளை எல்லைகள் துண்டாடப்பட்டதை தேசப்பிரிவினைகளை சோசலிச அமைப்பின் வீழ்ச்சியை அறிவுத்துறைக் காலனியாதிக்கப்பரவலைக் கண்ணுற்றது. இன்று பொருளியல் சுரண்டலின் நவீன ஏகாதிபத்திய வடிவமாக உலக மயமாதலையும் கண்டு வருகிறது. பல்வேறு நாடுகள் சுதந்திரம் பெற்றதாகத் தோன்றினாலும் கூட அது விளிம்பு நிலை மக்களுக்கு எந்தவிதமான சுதந்திரத்தையும் சுபிட்சத்தையும் கொண்டு தரவில்லை. ஐரோப்பாவிலே ஜிப்ஸி மக்கள், அமெரிக்காவில் ஆப்பிரிக்க மக்கள், இந்தியாவில் தலித் மக்கள் போன்று இலங்கையின் கடைக் கோடி விளிம்புநிலை மக்களாக இன்றும் கூட வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மலையகத் தமிழர்கள். இந்த மலையகத்தமிழர்களில் அறிவுஜீவிகளும் தோன்றினார்கள். அவர்களில் தலையாயவர்தான் ர.சிவலிங்கம். அதற்கடுத்த தலைமுறையைச் சார்ந்த மலையக அறிவாளிவர்க்கத்தைச் சார்ந்தவர் மு.நித்தியானந்தன். மலையக மக்களின் இலக்கிய முயற்சிகள் பற்றிப் பேசவரும் சிவலிங்கம் இம்முயற்சிகளை இவ்வாறாகக் காண்கிறார்:
எல்லா ஒடுக்கப்பட்ட இனங்களும் மக்கள் சமுதாயங்களும் எழுத்தை ஒரு கருவியாகவே பயன்படுத்தியி ருக்கின்றன. அமெரிக்காவில் கறுப்பு மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படத்துவதற்கும் சமுதாய மறுமலர்ச்சிக்கும் எழுத்தைக் கருவியாக உபயோகித்துள்ளனர். தமிழகத்திலேயே கூட திராவிட யக்கங்கள் பாரப்பன சக்திகளை முறியடிக்க எழுத்தை ஓர் ஆயதமாகப் பயன்படுத்தியுள்ளன. இன்று கூட தலித் லக்கியம் ஓங்கிவரும் தலித் சக்திகளுக்கு வலிவூட்டும் ஒரு கருவியாக ஆகிவருகிறது. முக்கியமாக கவிதைகள் இந்த உணர்வுப்பிழம்புகளுக்கு உருவம் கொடுப்பதில் முதலிடத்தை வகிக்கின்றன.
தமிழோவியன் கவிதைகளில் ஆரம்பத்தில் தோன்றிய அதே உணர்ச்சிபபாங்காண பண்புதான் இன்றைய கவிதைகள்வரை அவரிடம் தொடர்ந்து வருகிறது. பாரதிதாசன் பாணியும் சந்த லயமும் கவிதைக் கதைப் பண்பும் மலையாக நாட்டார் பாடல் மரபும் தான் தமிழோவியன் கவிதைகள். தமிழகத்தில் தோன்றிய வானம்பாடி வகை சமஸ்கிருதத்தமிழ் மணிப்பிரவாள மொழி அவரது கவிதைகளில் இல்லை. எழுத்து மரபில் தோன்றிய அகவிசாரணைக் கவிதைகளின் மொழிப்படிமங்கள் அவரது கவிதைகளில் இல்லை. அவரது கவிதைகளை மொழித்தேர்ச்சி, படிமங்கள், தத்துவதரிசனம் போன்ற நவீன மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு அணுகமுடியாது. அவரது கவிதைகள் செயல்படும் பிரதேசங்களாக இந்தத்தளங்கள் இல்லாததற்காண காரணம் அவரிடம் தேடல்களோ இயத்தனங்களோ இல்லை என்பதல்ல. மாறாக இத்தகைய கவிதைப் பாணிகளை முன் வைத்தவர்களின் சிந்தனைப் பிரதேசத்தக்குள்ளோ அவர்தம் வாழ்க்கைத் தேடல்களுக்குள்ளோ மலையகத் தமிழர்களும் அவர்தம் துயர வாழ்வும் இடம்பெறவில்லை என்பதுதான். யுாழ்ப்பாண அவலம் குறித்து அக்கறைப்பட்ட தமிழ்ப்படைப்பாளிகள் எவரும் மலையகத் தமிழர் குறித்த தீவிர அக்கறையைக் காட்டவில்லை. தம்மைப் புறக்கணித்த இடதுசாரிக் கவிதை மொழியையும் தமிழ் அகக் கவிதை மொழியையும் தமிழோவியன் நிராகரித்திருப்பது அவரது வாழ்வு அவர்முன் வைத்த தேர்வுதான்.
தமிழக லக்கிய உன்னதர்களின் ஐரோப்பிய மத்தியதரவர்க்க இலக்கியமதிப்பீடுகளின் அடிப்படையில் தமிழோவியன் கவிதைகள் உணர்ச்சிவசமான பிரச்சாரக்கவிதைகள் தான். மாயக்காவ்ஸ்க்கியை கவிஞனாக ஒப்புக் கொள்ள- கார்க்கியை தீவிர இலக்கிவாதியாக ஒப்ப தர்மூ சிவராமுவுக்கு யலவில்லை. ஆனால் E=mc2 எழுதிய அதே சிவராமுவின் தமிழீழ தேசிய கீதத்தை எவரேனும் வாசித்துக் கவிதையாக ஒப்புக் கொள்ள முடியுமானால் அதைவிடவும் ஆயிரம் மடங்கு கவித்துவம் கொண்டவை மாயக்காவிஸ்க்கியின் கவிதைகள் என்பதை மிகச் சாதாரணமாக அறிந்து கொள்ளமுடியும். ஜெயகாந்தன் கூறுவதைப் போல் எல்லாக் கலைகளும் பிரச்சாரம் தான். ஆனால் எல்லாப் பிரச்சாரங்களும் கலையாகிவிடுவதில்லை. தமிழோவியன் கவிதைகளிள் அஞ்சலிகள் அரசியல் அறைகூவல்கள் போன்றவற்றையும் தாண்டி கலைத் தன்மை கொண்ட கவிதைகளாக அவரது மலையக வாழ்வு மற்றும் பெண்கள் பற்றிய கவிதைகளையும் மலையகத் தமிழர்தம் துயரம் பற்றிய கவிதைகளையும் அவரது நாட்டார்பாடல் மரபு வழிக் கவிதைகளையும் நிச்சயமாகக் குறிப்பிடமுடியும். சாட்சியமாகச் சில கவி வரிகள் :
நாட்டார்பாடலொன்றின் வரிகள்
பாதையிலே வீடிருக்க
பழனிச்சம்பா சோறிருக்க
எருமே தயிரிருக்க
ஏண்டி வந்தே கண்டிச்சீமை ?
தமிழோவியனின் கவிதையொன்று :
கூடை சுமந்து மலை மலையாய்
கொழுந்து எடுத்தே
பாடுபட்ட பெண்களது
பத்துவிரல் சுழற்சியினால்
நாடு செழிக்க வெளிநாட்டு
நாணயத்தைத் தேயிலையால்
கோடிக் கணக்கில் அன்று
தேடிக் கொடுத்த பரம்பரையும்
நாடற்ற மக்களாக இன்று
நாதியற்று நிக்கலாமோ ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழோவியன் கவிதைகள்.
டிசம்பர் 2000
வெளியீடு :
கலை ஒளி முத்தையா பிள்ளை நினைவுக்குழு
கொழும்பு : 13
100 இலங்கை ரூபாய்
இந்திய விநியோகம் :
குமரன் பதிப்பகம்
சென்னை: 600 026
40 இந்திய ருபாய்
நன்றி - திண்ணை
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...