Headlines News :
முகப்பு » , , » தோழர் லெனின் மதிவானத்துடனான தோழமைப் பயணம் - என்.சரவணன்

தோழர் லெனின் மதிவானத்துடனான தோழமைப் பயணம் - என்.சரவணன்

இக்கட்டுரை லெனின் தோழரின் நினைவாக தோழமைக்குரிய ஜீவா சதாசிவம் தொகுத்த 'லெனின் மதிவானம்  . இளமை . புலமை . இனிமை'  நூலில் வெளிவந்தது.

தோழர் லெனின் மதிவானம் தனது தொழில் ஆளுமைக்கு வெளியே இலக்கிய உலகில் விமர்சகராகவும், செயற்பாட்டாளராகவும் சமூக சிந்தனை மிக்கவராகவும் தன்னை பரவலாக நிலை நிறுத்தியவர். 

அவர் இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையிலும் வெற்றிபெற்று அரச உயர் உத்தியோகம் வரை சென்றதை அப்போது வியப்பாகத் பார்த்தார்கள். மலையகத்திலிருந்து மிகச் சிறிய எண்ணிக்கையானவர்களே இவ்வாறு அரச உயர் உத்தியோகங்களுக்கு வர முடிந்தது. இத்தகைய நிலையை எட்ட வேண்டுமாயின் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களைவிட அதிக ஆற்றலை வெளிப்படுத்தியாக வேண்டும் என்கிற நிலை மலையகத்துக்கு உரியது.

இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக அப்படித்தான் ஆனார்.

உண்மையைச் சொல்லப்போனால் அவரின் தந்தை ஜெயராமனின் நேரடி வழிகாட்டல் இல்லாமல் வளர்ந்தவர்கள் தான் லெனினும், ட்ரொஸ்கியும்.

அதுபோல அவருக்கு நேரடி அரசியல் வழிகாட்டலும் அவரின் தந்தையால் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும். தந்தையின் பராமரிப்பு அவர்களுக்கு குறைவாக இருந்தநிலையில் அவர்களை வளர்த்தவர் தாய் தான். லெனினின் தாயார் ஒரு சராசரி தாயாராகவும் இருக்கவில்லை. அவர் அதற்குமேல் எந்தளவு வழிகாட்டியாக இருந்தார் என்பதை அவ்விருவரின் வளர்ச்சியைக் கொண்டு நாம் கணிக்கலாம்.

அதேவேளை தோழர் ஜெயராமன் தனது அரசியல் வலைப்பின்னலுக்குள் இருந்த தொடர்புகளை அவர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்படித்தான் லெனினும் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.

தோழர் இளஞ்செழியனுடன் தோழர்கள் லெனின் மதிவானம், ட்ரொட்ஸ்கி

அது தொண்ணூறுகளின் தொடக்கம். பீபல்ஸ் பார்க் எனப்படுகிற கொழும்பு மத்திய தனியார் பஸ் நிலைய வளாகத்தில் அமைந்திருந்த பொது மலசலகூடங்களை சுத்தப்படுத்தும் கண்ராக்ட் தோழர் ஐயலு எனப்படுகிற பெருமாள் அவர்களிடம் இருந்தது. அருகில் ஒரு சின்னஞ்சிறு அறையொன்றை தனது அலுவலகமாகவும், சந்திப்பிடமாகவும் ஆக்கிக்கொண்டிருந்தார். அங்கே பல இடதுசாரி நண்பர்களும், தொழிற்சங்கவாதிகளும் சந்தித்துக்கொள்வார்கள். தோழர் ஜெயராமனை சந்திப்பதாக இருந்தாலும் அங்கே தான் பலர் அப்போது சென்று வந்தார்கள். அவர்களின் அறிமுகம் கிடைத்த காலத்தில் தான் தோழர் ஜெயராமன் அங்கே லெனினை ஒரு நாள் அறிமுகப்படுத்தினார். என்னைப் பற்றி லெனினுக்கும், லெனினைப் பற்றி எனக்கும் விரிவான அறிமுகத்தை செய்தார்.

லெனின் என்னை விட ஒரு சில மாதங்களே மூத்தவர். என்பதால் எங்கள் உரையாடல்களும் அலைவரிசையும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது. எனக்கு மாக்சியத்தையும் மாக்சிய இலக்கியங்களையும் அறிமுக்கப்படுத்தியவர் தோழர் ஜெயராமன். அவரின் அரசியல் இலக்கிய தொடர்புகள் பலவற்றை எனக்கும் அறிமுகப்படுத்தினார். என்னை கவிதை எழுத வைத்தார். கவியரங்கு மேடைகளில் அக்கவிதைகளை பாடவைத்தார். லெனின், ட்ரொஸ்கி ஆகிய மகன்களைப் போல நானும் அவருக்கு ஒரு மகனாகவே நடத்தப்பட்டேன். வெறும் சாதாரண தரத்தோடு நான் எனது கல்வியை இடைநிறுத்திவிட்டு சமூக, அரசியல் பணிகளில் என்னை ஈடுபடுத்த தொடங்கிய காலத்தில் என்னை உயர்தரக் கல்விக்கு உந்தியவர் அவர் தான். அதுபோல எனது முதலாவது நூல் “Abbreviation 1000” 91ஆம் ஆண்டு வெளிவருவதற்கு முற்றுமுழுதான காரணமும் தோழர் ஜெயராமன் தான். அன்றைய கொழும்பு மேயர் ரத்னசிறி ராஜபக்ச தலைமையில் கொழும்பில் உள்ள பெரிய மண்டபங்களில் ஒன்றான எல்பின்ஸ்டனில் அதை வெளிக்கொணர முற்றுமுழுதாக அவர் தான் பின்னணியில் உழைத்திருந்தார். தனது பிள்ளைகள் லெனின், ட்ரொஸ்கி ஆகியோரை எனது வடிவில் பார்த்தார் தோழர் ஜெயராமன்.


தோழர் ஜெயராமனின் அரசியல், தொழிற்சங்கப் பணிகளின் காரணமாக அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவராக இருந்தார். லெனினும், ட்ரொஸ்கியும், அவர்களின் தாயாரும் தோழர் ஜெயராமிடம் இருந்து  தூர விலகி இருந்ததற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது. தந்தையின் பராமரிப்பின்றி தம்மைத் தாமே தாயாரின் உதவியுடன் செதுக்கிக் கொண்டவர்கள் தான் லெனினும், ட்ரொஸ்கியும். 

லெனின் கொழும்பு வந்த சில சந்தர்ப்பங்களில் தோழர் இளஞ்செழியனின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வார். அங்கே எப்போதும் தோழர் இளஞ்செழியனை சந்திக்க அரசியல், தொழிற் சங்கத் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வந்து போவார்கள். தோழர் இளஞ்செழியனை நானும் லெனினும் வியப்பாகவே பார்த்தோம். அடிக்கடி அவரை சந்தித்துக்கொள்வோம். நிறையவே அவருடன் உறையாடியிருக்கிறோம். தோழர் இளஞ்செழியனுக்கும் லெனின் என்றால் மிகவும் பிடிக்கும். பிற்காலத்திலும் பல சந்தர்ப்பங்களில் அவரின் வளர்ச்சியைப் பெற்றி மிகவும் பெருமையாக உரையாடியிருக்கிறார்.

எவரைப் பார்த்தாலும் தோழர் என்று அழைக்கிற அந்த மாக்சியப் பண்பாட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவரும், திடமாக ஊட்டியவரும் தோழர் ஜெயராமன் தான். எனவே தான் லெனினும் அவரின் தாயாரும் கூட அவர்களுக்குள் தோழர் என்று வீட்டுக்குளேயே பரஸ்பரம் அழைக்கப் பழக்கிக் கொண்டார்கள். அப்படி ஒரு வழக்கத்தை நாம் நிச்சயம் கண்டிருக்க மாட்டோம்.

நான் சரிநிகரில் பணிபுரிந்த 90களில் லெனின் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவர் புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்த காலம். தந்தை ஒரு ட்ரொஸ்கிடாக இருந்தபோதும், தோழர் இளஞ்செழியன் போன்ற அவரின் நட்புகளும் ட்ரொஸ்கிட்டுகளாக இருந்தபோதும் லெனின் அந்த அரசியல் சித்தாந்தத்துக்கு நேரெதிரான மாவோவாத அணியில் இயங்கினார். தந்தை ஜெயராமனுக்கு இது தொடர்பில் அதிருப்திகள் இருந்தபோதும் அவருடன் அரசியல் வாதம் செய்யுமளவுக்கு லெனின் வளர்ந்துவிட்டிருந்தார். அவ்வாறு அவர் மாவோவாத பாதையை பலப்படுத்தியதில் அவரோடு கொட்டக்கலை ஆசிரிய கலாசாலையில் சக விரிவுரையாளராக பணிபுரிந்த தோழர் ரவீந்திரனுக்கும் முக்கிய பங்குண்டு.


பின்னர்  2000ஆம் ஆண்டு நான் நோர்வே வந்து சேர்ந்துவிட்டதன் பின்னர் தோழர் லெனினுடன் தொடர்புகள் அற்று போனது. ஆனால் அவரின் எழுத்துக்களை நானும், எனது எழுத்துக்களை அவருமாக ஒருவரை ஒருவர் கண்கானித்துக்கொண்டிருந்தோம். அவர் அரசியல் செயற்பாட்டாளராக மட்டுமன்றி, மலையகத்தில் முன்னணி இலக்கிய விமர்சகராக ஆகியிருந்தார். குறிப்பாக அனைத்தையும் மாக்சிய நோக்கில் கட்டுடைத்து திறனாய்வுகளை முன் வைப்பதில் அவருக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார். மலையகத்தில் இருந்து வந்த விமர்சகர்களில் ஈழத்து திறனாய்வுப் பரப்பிலும் தடம் பாதித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் லெனின் இளம் மாக்சிய திறனாய்வாளராக மிளிர்ந்தார்.

பேராசிரியர் கைலாசபதியின் பணிகளால் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்த லெனின் கைலாசபதியின் திறனாய்வு அணுகுமுறைகளை கைக்கொண்டார். அவரையே தனது ஆஸ்தான வழிகாட்டியாக வரித்துக்கொண்டார். கைலாசபதியின் பணிகளை புதிய தலைமுறைக்கு வியாக்கியானம் செய்யும் பணியையும் மேற்கொண்டார்.

யுத்தம் முடிந்தபின்னர் தான் பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு நான் மீளவும் பிரவேசிக்க முடிந்தது. பல தோழர்களை தேடித் தேடிச் சென்று சந்தித்தேன். அப்படி மீண்டும் எனக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்க முந்தவர்கள் தான் தோழர் லெனினும், திலக்கும். திலக் தான் லெனினுடானான மீள் சந்திப்பை ஏற்படுத்தியவர். மூவரும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள், ஒரே அலைவரிசையைக் கொண்டிருந்தவர்கள் என்பதால் மலையகத்துக்கான புதிய அரசியல் செயற்பாட்டொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டோம். பல தடவைகள் எனது வீட்டில் இதற்கான சந்திப்பை மேற்கொண்டோம். மலையகத்தின் அரசியல் முன்னெடுப்புக்கு பெரும் அவசியமாக இருப்பது ஊடகப் பலம். எனவே நாமே நமக்கான வணிக நோக்கமற்ற ஒரு ஊடகத்தை உருவாக்குவது என்கிற முடிவுக்கு வந்தோம்.

அதன் விளைவாக உருவானது தான் நமது மலையகம் (namathumalayagam.com) இணையத்தளம். Malayagam.com என்கிற இணையத்தளப் பெயரை இதற்காக வாங்கினோம். ஆனால் அந்தப் பெயர் பற்றி தோழர் லெனினுக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. அதற்குப் பதிலாக அவர் நமது மலையகம் என்கிற பெயரை சூட்டச் சொன்னார். உண்மையில் அவரின் திருப்திக்காகத் தான் மீண்டும் namathumalayagam.com என்கிற பெயரை வாங்கி அதையே பயன்படுத்த நேரிட்டது.

இந்தப் படத்தில் எனக்கு இடதும் வலதுமாக இருக்கிற எவரும் உயிருடன் இல்லை. தெளிவத்தை ஜோசப், பேராசிரியர் சந்திரசேகரம், லோரன்ஸ், லெனின் ஆகியோர் இரு ஆண்டுகளுக்குள் நால்வரும் மறைந்து போனார்கள்.

நமது மலையகம் இணையத்தளத்தை கிரமமாகவும், தடையின்றியும் நடத்துவதாயின் போதிய ஊடக செயற்பாட்டாளர்களையும் நம்மோடு இணைத்து கொள்ள வேண்டும் என்கிற முடிவெடுத்தோம். மலையக இளம் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி அளித்து எம்மோடு இணைக்கும் நோக்குடன் ஒரு முழுநாள் ஊடகப் பயிற்சிநெறியை கொழும்பில் மேற்கொண்டோம். நமது மலையகம் எதிர்காலத்தில் ஒரு அரசியல் சமூக செயற்பாட்டுக் களமாக மாற்றுவது என்கிற உரையாடல் வந்தபோது அது பெரும் பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என்கிற விமர்சனத்தை முன்வைத்து எம்மோடு இருந்த சிலர் வெளியேறினார்கள். ஆனால் அந்த முடிவில் உறுதியாக இருந்தவர்கள் லெனினும், திலக்கும் தான்.

2013 ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்சங்கத்தில் இணையத்தளத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடத்தப்பட்டபோது அதன் தொடக்கவுரையை லெனின் தான் செய்தார். தலைமையுரையை தெளிவத்தை ஜோசப் அவர்களும், சிறப்புரையை பேராசிரியர் சோ.சந்திரசேகரனும் வழங்கினார்கள். இவர்கள் மூவரும் கடந்த ஓராண்டுக்குள் ஒன்றன் பின் ஒருவராக நம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள்.

சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம் போன்றவை எப்போதும் எமது பேசுபொருளாக இருந்திருக்கிறது. தலித் விடுதலை குறித்த விடயத்தில் அவரோடு ஒத்த அலைவரிசையைக் கொண்டிருந்தோம். அவருடனான ஒரு சம்பவத்தை என்றும் மறக்க முடியாது. அந்த சம்பவத்தை தலித்தின் குறிப்புகள் நூலிலும் நான் பதிவு செய்திருக்கிறேன்.

பாட நூலை மாற்றவைத்த தோழர் லெனின் மதிவானம் - என்.சரவணன்

இலங்கை அரசாங்கத்தின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட “தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10-11” என்கிற பாடசாலைகளுக்கான பாடநூலில் தான் கண்ட ஒரு குறைபாட்டை ஒரு பெரியவர் எனது வீட்டுக்கு வந்து தனது வேதனையைத் தெரிவித்தார். அந்த நூலின் போட்டோ பிரதியொன்றைக் கொண்டு வந்து காட்டினார். அதில் உள்ளதைக் காட்டி பாடசாலை மாணவர்களிடமும் இப்படியான சாதிய வசவுச் சொல்களை அறிமுகப்படுத்துகிறார்களே என்று நொந்துகொண்டார். நான் அந்த மூல நூலைக் கண்டெடுத்தேன். இது நடந்தது 2012இல்.


கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளராக தோழர் லெனின் மதிவானம் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரிடம் நான் “என்ன தோழர் நீங்கள் எல்லாம் இருந்தும்கூட இப்படி நடந்திருக்கிறதே. எப்படி உங்கள் பார்வையை மீறி இது நிகழ்ந்திருக்க முடியும்” என்று அவரிடம் தொலைபேசிமூலம் ஆதங்கமாக கூறினேன்.

அவர் அந்த நூலை என்னுடன் உரையாடிக்கொண்டே பார்வையிட்டார்.

"உண்மை தான் தோழர். வீராசாமி செட்டியார் எழுதிய “ஒரு பதிவிரதையின் சரித்திரம்” என்கிற கதை தானே. அதில் ‘செருப்பு தைக்கும் சக்கிலியன்’ என்கிற ஒரு வசனம் வருகிறது ” என்றார்.

ஆம் என்றேன். நூலுருவாக்கத்தின் போது தொகுப்பாளர் குழுவுடன் எதிர்கொள்ளும் ஆதிக்க சித்தாந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார்.

“இதை உடனடியாக மாற்ற வேண்டும் தோழர். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? இதை உடனடியாக செய்வதற்கு ஒரு முறைப்பாடு தேவைப்படுகிறது. உடனடியாக அப்படியொன்றை எழுதி எனக்கு இன்றே அனுப்புவீர்களா” என்றார் லெனின்.

நான் ஒரு தூரப்பயணத்தில் இருந்தேன். உடனடியாக செய்வதில் சிரமங்கள் இருந்தன. நிலைமையை விளக்கி பின்னேரத்துக்குள் வீட்டை அடைந்ததும் அனுப்பி வைக்கிறேன் என்று விடைபெற்றேன்.

பின்னேரம் அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.

“தோழர்! வேறொருவரைக் கொண்டு அந்த முறைப்பாட்டை எழுதி எடுத்துக்கொண்டேன். நூல் விநியோகத்தை நிறுத்திவிட்டேன். புதிய பதிப்பில் மாற்றங்களை செய்ய வழி செய்திருக்கிறேன் தோழர்.” என்றார்.

தோழர் லெனின் மதிவானம் இவ்வளவு வேகமாக இயங்கியதை மிகுந்த வியப்பை அளித்தது. இப்படி ஒரு விடயத்தை மேற்கொள்ள எத்தனை காலம் செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.


அதே வருடம் ஒரு சில மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட்டு எனக்கும் அதன் பிரதியைக் கிடைக்கச் செய்தார். அதில் “செருப்பு தைக்கும் தொழிலாளி” என்று மாற்றப்பட்டிருந்தது. அவரின் பிரக்ஞைக்கும், வேகத்துக்கும் இது ஒரு சிறந்த உதாரணம்.

ஒவ்வொரு ஆண்டும் இலங்கை விஜயம் செய்யும் போது எங்கள் வீட்டில் எங்களின் நேசபூர்வமான சந்திப்புகள் நிச்சயம் இருக்கும். அச்சந்திப்புகளில் உடன்பாடுகளைப் போல முரண்பாடுகளைக் கொண்ட உரையாடல்களும் தலைதூக்கியிருக்கின்றன. ஆனால் அவை புலமைத்துவ மட்டத்தில் தீர்த்துக் கொள்ளும் பக்குவம் அவரிடம் இருந்தது. எங்கள் சந்திப்புகள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடியும், உரிமையுடன் அன்பு மேலிடலுடனும் இருக்கும்.பெரும்பாலும் இரவு அவர் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்.

அவர் விழுந்து உடல் பாகங்கள் இயங்காமல் போனதை அறிந்தபோது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் சிகிச்சையால் எழுந்துவிடுவார் என்கிற நம்பிக்கை இருந்தது. இறுதியாக இலங்கை சென்றிருந்த வேளை அவரைப் பார்ப்பதற்காக நானும் தோழர் திலக்கும் ஒன்றாக மருதானையில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அங்கே நாங்கள் எந்தக் கவலையையும் காட்டிக்கொள்ளாமல் மிகவும் உற்சாகமாக கதைத்தோம். ஆனால் அவர் எம்மோடு ஏதோ பேசுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். அவருக்கு சொற்கள் எதுவும் வரவில்லை. தனது துணைவி அவர் சொல்லவந்ததை எமக்கு விளக்குவார் என்று எதிர்பார்த்து அவர் பக்கம் திரும்பினார். ஆனால் அவரின் துணைவியாலும் அதை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. அவர் சொல்ல வந்தததை சொல்ல முடியாமல் போன ஆற்றாமையால் அவரின் கண்களில் இருந்து கண்ணீர் விழுந்துகொண்டிருந்தது. அந்தக் காட்சி இன்றும் என்னை வந்து தொந்தரவு செய்யும் காட்சிகளில் ஒன்றாக ஆகிவிட்டது.

நான் வருக்காக கொண்டு சென்றிருந்த எனது “கண்டி கலவரம்” நூலை அவருக்கு கொடுத்து விட்டு, அதில் உள்ள சில பகுதிகளை வாசித்து காட்டி விளக்கினேன். எனது அடுத்த நூலின் அறிமுகக் கூட்டத்துக்கு அவர் எழுந்து வந்து உரையாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். உண்மையாகவே அப்படி எழுந்து விடுவார் என்றும் சிகிச்சை பலனளிக்கக் கூடும் என்றும் நம்பிக்கொண்டிருந்தேன்.

சிகிச்சை ஏன் பலனளிக்குதில்லை என்பதை அவரின் துணைவியும், தோழர் திலக்கும் எனக்கு விளங்கப்படுத்தியிருந்தார்கள். ஆனாலும் அவர் இப்படி வேகமாக விடைபெற்றுவிடுவார் என்பதை கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அவரின் இழப்பை ஒரு சாதாரண இழப்பாக கடந்து போக முடியவில்லை. அவரால் நம் சமூகத்துக்கு கிடைக்க இருந்த பெரும் பணியையும் நாம் இழந்துவிட்டிருக்கிறோம்.

அவர் எனக்கு அரசியல் தோழராக, சக நண்பராக மட்டுமல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உறவாக ஆக்கப்பட்ட சகோதரரும் கூட.

எனது அடுத்த நூலை என் சகோதரன், என் தோழன் லெனினுக்கே சமர்ப்பிக்கிறேன்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates