Headlines News :
முகப்பு » , » ஆசீவக மதம் - மயிலை சீனி வேங்கடசாமி (1939)

ஆசீவக மதம் - மயிலை சீனி வேங்கடசாமி (1939)

முன்னொரு காலத்தில் நிலைபெற்றிருந்து பின்னர் அழிந்தொழிந்து மறைந்துபோன இந்த மதம் இப்போது முழுவதும் மறக்கப்பட்டிருப்பதால், இதனைப்பற்றி ஆராய்வது அமைவுடைத்து.

பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரி புத்திரர் என்பவர். பாலி மொழியில் இப்பெயர் மக்கலி புத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் 'கோசால' என்னும் அடைமொழி கொடுத்து கோசால மக்கலி புத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.

'மக்கலி' என்பது வடநாட்டில் பண்டைக் காலத்தில் இருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தாருக்குப் பெயர் என்றும், அந்தக் கூட்டத்தாரைச் சேர்ந்தவர் ஆகையால் இவருக்கு 'மக்கலி புத்திரர்' என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். 'மக்கலி' என்பது இவருடைய தந்தையின் பெயர், ஆகையால் இவருக்கு மக்கலி புத்திரர் என்னும் பெயர் வழங்கியதென்று வேறு சிலர் உரைப்பர்.

மக்கலி அல்லது மற்கலி என்பவர் ஆருகத (ஜைன) மதத்தை உண்டாக்கிய மகா வீரரும், பெளத்த மதத்தை உண்டாக்கிய கௌதம புத்தரும் உயிர்வாழ்ந்திருந்த அதே காலத்தில் இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக் கொள்கைகளை உலகத்தாருக்குப் போதித்து வந்த காலத்தில் அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மக்கலி அவரிடம் சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால் மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரது உடன்பாடு பெற்று, அவருடன் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். பின்னர், அவருடன் பகைத்துக்கொண்டு தனியே பிரிந்துபோய் ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் 'ஆசீவக மதம்' அல்லது 'ஆஜீவக மதம்' என்பது. ஆருகத மதக் கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி மற்கலி இந்த மதத்தை உண்டாக்கியதாகச் சொல்லப்படுகின்றது.

சற்றேறத்தாழ கி.மு. 500ல் மற்கலி காலமானார் என்று ச கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு ஆண்டு களுக்குப் பின்னர் மகாவீரர் வீடுபெற்றார் என்ப. மகா வீரர் வீடுபெற்ற சில ஆண்டுக்குப் பின்னர் கௌதம புத்தர் நிர்வாணம் அடைந்தார். ஆசீவகர், ஆருகதர் (ஜைனர்), வைதீகர், பௌத்தர் ஆகிய இந்த மதத்தவர்களுக்குள் எப்பொழுதும் சமயப்பகை இருந்து கொண்டே இருந்தது.

ஆசீவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு நவகதிர் என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் என்னும் ஐம்பொருள்களைப் பற்றிக் கூறியுள்ள தென்பர். கருமை,நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் அறுவகைப் பிறப்பு உண்டென்பதும், தூய வெண்மை நிறப் பிறப்புத்தான் மிக உயர்நிலைப் பிறப் பென்பதும், இப்பிறப்பினைப் பெற்றவர்தான் வீட்டுலகஞ் சேர்வரென்பதும் இந்த மதக் கொள்கை. எண்பத்து நான்கு இலட்சம் மகாகல்ப காலம் வரையில் உயிர்கள் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலங் கடந்ததும் அவை பாவஞ் செய்திருந்தபோதிலும் வீடுபேறடையுமென்றும், இந்தக் கால நியதியை மாறி புண்ணியஞ் செய்த உயிர்கள் விரைவில் வீடு பேறடையாவென்றும் கொள்கை கொண்டது இந்த மதம் என்பர். இந்தக் கால நியதிக்கு நூலுருண்டையை உதாரண மாகக் கூறுவர். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குள் குறைவாகவோ அதிகமாகவோ நீளாததுபோல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன கால நியதிக்குட்பட்டு நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடுபெறான்; உயிர்களுக்கு நியமிக்கப்பட்ட எண்பத்தினான்கு இலட்சம் மகாகல்ப காலம் வரையில் அவனும் பிறந்திறந்து உழன்றே ஆகவேண்டும். இந்தக் கால நியதி கடந்து வீடுபேற டையும் நிலையில் இருக்கும் ஒருவன் தீயகருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல விரும்பினாலும் அவன் அவ்வாறு செய்ய இயலாது. ஏனென்றால், காலநியதி கடந்துவிட்ட படியால், அவன் மீண்டும் பிறக்க விரும்பினாலும் அவன் வீடு பேறடைந்துதானாக வேண்டும் என்பன இம்மதக் கொள்கைகளில் சிலவாம். இந்த மதத் தலைவர்கள் ஆடை யின்றி அம்மணமாகத் திரிவர் என்றும், உணவைக் கையில் உண்பார்கள் என்றும், இன்னின்ன் கனவுக்கு இன்னின்ன விளைவு நிகழும் என்று வகுத்துக் கூறுவதில் இவர்கள் தேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

மற்கலிக்குப் பூரணர் என்ற பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின் அவருக்கு இப்பெயர் உண்டாயிற்றென்பர்.

இந்த மதத்தைப் பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் எதிரிகளான ஜைனர், பௌத்தர், வைதீகர் என்பவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளார்கள் என்று கருதப்படுகின்றது. மணிமேகலை என்னும் பௌத்த நூலிலும் (சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை),நீலகேசி என்னும் ஜைன நூலிலும் (ஆசீவக வாதச் சருக்கம்), சிவஞான சித்தியார் என்னும் சைவ சமய நூலிலும் (பரபக்கம்: ஆசீவக மதம்) இந்த மதக் கொள்கைகள் எடுத்துக் கூறி மறுக்கப் பட்டுள்ளன. இந்த மதத்தைப் பற்றி நன்கறிய விரும்புவோர்க்கு மேற்சொன்ன தமிழ் நூல்களும் Encyclopaedia of Religion and Ethics by James Hastings என்னும் ஆங்கில நூலும் உதவி புரியும்.

இந்த மதம் தமிழ்நாட்டிலும் பண்டைக்காலத்தில் பரவி யிருந்ததாகத் தெரிகின்றது. தமிழ் நாட்டிலே சமதண்டம் என்னும் ஊரிலே இந்த மதத்தவர் அதிகமாக இருந்ததாக நீலகேசி என்னும் நூலினால் தெரிகிறது. கோவலனுடைய மாமனும் கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும் செல்வத்திற் சிறந்த வணிகன் கோவலனும் கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டுத் தன் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு ஆசீவக மதத்தில் சேர்ந்து துறவு பூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

கண்ணகி தாதை கடவுளர் கோலத்

தண்ணலம் பெருந்தவத் தாசீவகர் முன்

புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்

(நீர்ப்படை காதை)

மணிமேகலை, நீலகேசி என்னும் நூல்களில் ஆசீவக மதமும் நிகண்ட மதமும் (நிகண்டம் = நிர்க்கந்தம் = திகம்பர ஜைனம்) வேறுவேறு மதங்கள் என்று சொல்லியிருக்க, பிற்காலத்து நூலான சிவஞான சித்தியாரியில், இந்த மதம், ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றாகிய திகம்பர ஜைன மதம் என்று தவறாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப் பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக்காட்டியிருக்கின்றார். "திகம்பரமொப்பினும் அநேகாந்தவாதிகளாகிய நிர்க்கந்தரல் லாத ஆசீவகனென்க" என்று எழுதி, ஆசீவக ஜைனரில் திகம்பரர் அல்லது நிர்க்கந்தரைப் போன்ற கொள்கையுடையவ ரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். ஆசீவகரைத் திகம்பர ஜைனரென்று பிற்காலத்தில் தவறுபடக் கருதியது தமிழ் நாட்டில் மட்டுமன்று; வடநாட்டிலும் இவ்வாறே தவறுபடக் கருதப்பட்டு வந்திருக்கிறது.

இராச இராச சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சில சாசனங்களில் ஆசுவகடமை என்னும் ஆயம் (வரி) குறிப்பிடப் பட்டிருப்பதைக் கொண்டு, சிலர் ஆசீவக மதத்தாருக்கு அக்காலத்தில் ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர். இதை மறுத்து, சாசனங்களில் கூறப்பட்டுள்ள ஆசுவகடமை என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச் செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக மதத்தாருக்கு விதிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு என்று பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம் பதிப்பித்துள்ள நீலகேசியின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக எழுதியிருக்கின்றார்கள். ஆகையால், ஆசீவக மதத் தாருக்கு இதை விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவது தவறாகும்.

திருவிளக்கு, பிப்ரவரி 1939

நன்றி - மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் : தொகுதி - 6

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates