Headlines News :
முகப்பு » , , , , , » யாழ் நூலகம்: பிரபாகரனின் ஆணையில் புலிகளால் எரிக்கப்பட்டதா? - என்.சரவணன்

யாழ் நூலகம்: பிரபாகரனின் ஆணையில் புலிகளால் எரிக்கப்பட்டதா? - என்.சரவணன்

ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகிவிட்டிருக்கிறது.

தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.

70களின் இறுதியில் வடக்கு கிழக்கெங்கும் தொல்பொருள் ஆய்வுகள் என்கிற பேரில் கண்டு பிடிக்கப்பட்டவற்றைக் கொண்டு ஆதலால் வடக்குகிழக்கு முழுவதும் சிங்களவர்களின் பிரதேசங்கள் என்று நிறுவும் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை மறுத்தொதுக்குவதற்கான இந்த வேலைத்திட்டத்தில் அரசின் உதவியுடன் பல்வேறு இனவாத அமைப்புகள் பல முனைகளில் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தன. 77 இனக் கலவரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கூட சாட்சியமளித்த பல இனவாத சக்திகள் கலவரத்தைப் பற்றி பேசுவதை இந்த தொல்பொருள் ஆதாரங்களைப் பற்றியே அதிகம் பேசின என்பது அந்த சாட்சியங்களில் இருந்து காண முடியும். மடிகே பஞ்ஞாசீல தேரர், ஹரிச்சந்திர விஜேதுங்க, எச்.எம்.சிறிசோம போன்றோர் அங்கு பெரிய அறிக்கைகளையே சமர்ப்பித்தனர். அவை சிறு கை நூல்கலாவும் கூட சிங்களத்தில் வெளியிடப்பட்டன.

யார் இந்த சிறில் மெத்தியு


அந்த பாதையில் வளர்த்தெடுக்கப்பட்டவர் தான் சிறில் மெத்தியு. இலங்கையின் வரலாற்றில் பல இனவாதிகளை உருவாக்கிய முக்கிய கோட்டையாக  அன்றிலிருந்து இன்றுவரை திகழ்வது களனி பிரதேசம். அந்தத் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் சிறில் மெத்தியு. 1977 தேர்தலில் களனி தொகுதி மக்களால் வெற்றியடையச் செய்யப்பட்டவர் சிறில் மெத்தியு. அதே தொகுதியைச் சேர்ந்தவர்தான் ஜனாதிபதி ஜே.ஆர். தான் அமைத்த அமைச்சரவையில் ஜே.ஆர் சிறில் மெத்தியுவுக்கு தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சகத்தை வழங்கினார். 1980ஆம் ஆண்டு சிறில் மெத்தியு தனது அதிகார பலத்துடன் வடக்கில் அகழ்வாராய்ச்சிகளை விஸ்தரிப்பதற்காக அதிகாரிகளை அனுப்பி தனது வழிகாட்டலின் பேரில் மேற்கொண்டார்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக “அரச தொழிற்துறை பௌத்த சங்கம்” என்று ஒன்றை ஆரம்பித்து திருமலையில் புல்மோட்டை – குச்சவெளி பிரதேசத்தில்  “அரிசிமலை ஆரண்ய சேனாசனய” என்கிற ஒரு பௌத்த தளத்தை  ஆரம்பித்தார். சிறில் மெத்தியு தயாரித்த அறிக்கையை அதிகாரபூர்வமாகவே இலங்கையின் கலாசார உரிமைகள் பற்றி யுனெஸ்கோ நிறுவனத்திடம் கையளித்து அந்த பிரதேசங்களை பாதுகாத்து தருமாறும் முறைப்பாடொன்றை செய்தார். அந்த அறிக்கை இன்றுவரை சிங்கள தேசியவாதிகளால் போற்றப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு சிங்களவர்களின் பூர்வீக உடமை என்கிற வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த மதமும், அதன் செல்வாக்கும் இருந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வரலாற்றை சிங்களத்துடன் இணைத்து சிங்கள பௌத்த வரலாறாக புனையும் சிங்கள பேரினவாதம் அதை காலாகாலமாக செய்து வருகிறது. தமிழ் பௌத்தம் என்கிற ஒன்று இருந்தது என்பதையும், அதன் செல்வாக்குக்குள் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, அதை உறுதி செய்வதன் மூலமே சிங்கள பௌத்த புனைவுகளுக்கு பதிலடி கொடுக்க முடியும். ஆனால் யாழ் – சைவ – தம ிழ் மையவாத மரபு அதற்கு இடங்கொடுப்பதில்லை. தமிழ் பௌத்தத்தை கொண்டாட அந்த மரபு இடங்கொடுப்பதில்லை. வெகு சில ஆய்வுகளிலேயே அப்படிக் காண முடிகிறது. 

தமிழர்களுக்கு உரிமை கோருவதற்கு அங்கு ஒன்றும் இல்லை. அது பயங்கரவாதக் கோரிக்கைகளே என்று நிறுவும் வகையில் அவர் நூல்களை எழுதி பிரசுரித்தார். “கவுத கொட்டியா?” (புலிகள் யார்? - 1980), “சிஹளுனி! புதுசசுன  பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!) என்கிற நூல்கள் மிகவும் மோசமான இனவாத நூல்கள். தன்னை தீவிர சிங்கள பௌத்தனாக ஆக்கிக்கொண்ட சிறில் மெத்தியு தமிழ் விரோத போக்கையும், வெறுப்புணர்ச்சியையும் வளர்த்துக்கொண்டிருந்தவர்.

யாழ் நூலக எரிப்புக்கு சிறில் மெத்தியு மட்டும் பொறுப்பில்லை. அதற்கு ஏதுவான இனவாத அலை ஏற்கெனவே வளர்தெடுக்கப்பட்டு, நிறுவனமயப்படுத்தப்பட்டுத் தான் இருந்தது. ஆனால் சிறில் மெத்தியு அந்த உடனடி நிலைமைகளுக்குத் தலைமை கொடுத்தார் என்பதே வெளிப்படை.. இந்தக் காலத்தில் சிறில் மெத்தியு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் இனவாத விசர் நாயொன்றின் கர்ஜனைகளைக் காண முடியும். சிறில் மெத்தியுவின் இந்தப் போக்கை ஐ.தே.க அரசாங்கமும் ஜே.ஆறும் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை சிறில் மெத்தியுவால் சகிக்கக் கூட முடியவில்லை. எம். சிவசிதம்பரம் சிறில் மெத்தியுவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடுமையான வாதம் நிகழ்ந்தது. தமிழ் மாணவர்களை குறுக்குவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்காக வினாத்தாள் திருத்துனர்கள் மோசடி செய்து அதிக புள்ளிகளை வழங்கினார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அந்த விவாதத்தில் அவரை ஆதாரத்தை முன்வைக்கக் கோரியபோதும் கையில் ஒரு கடுதாசியை வைத்துக் கொண்டு கடைசி வரை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இன்றுவரை சிங்கள நூல்களில் சிறில் மெத்தியு கூறியது உண்மை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.  

“நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது... கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிகின்ற, இழிவுசெய்கின்ற கருத்துக்கள் இவை” என எம். சிவசிதம்பரம் ஆத்திரத்துடன் உரையாற்றினார் .

வடக்கில் எழுச்சியுற்ற தமிழர் உரிமை இயக்கங்களை எதிர்கொள்ள இப்படியான சக்திகள் சிங்களத் தரப்புக்கு குறிப்பாக அரசாங்கத்துக்குள் தேவைப்பட்டுக் கொண்டிருந்தது.

ஐ.தே.வின் மானப் பிரச்சினைக்கு விலை

70 களில் இருந்து வடக்கில் தமிழ் இளைஞர்களின் எழுச்சி அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்தது. 77 கலவரம் நிகழ்ந்து அதன் மீதான விசாரணைகளின் முடிவுகள் கூட அந்தத் தணலை தணிய வைக்கவில்லை. மாவட்ட சபைகள் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டு எப்பெரும் விலையைக் கொடுத்தாவது பல ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று களம் இறங்கியது ஐ.தே.க. அருவருக்கத்தக்க தேர்தல் மோசடிகளில் இறங்கியது பற்றி பல சர்வதேச அறிக்கைகள் கூட சுட்டிக் காட்டியுள்ளன. வாக்குப் பேட்டிகள் சூறையாடப்பட்டன. பொலிசாரின் கெடுபிடிகள் சாமான்ய மக்கள் மேல் அதிரித்திருந்தன.

இந்த நிலையில் ஐ.தே.க நியமித்திருந்த பிரதான வேட்பாளரான தியாகராஜா தமிழ் இயக்கங்களால் குறி வைக்கப்பட்டிருந்தார். அவர் 1981 மே 24 அன்று அவர் கொல்லப்பட்டார். ஐ.தே.கவுக்கு இது பேரிடியாக இருந்தது. வெற்றி வாய்ப்புகள் கைநழுவிப் போவதை உணர்ந்த அவர்கள் இதனை தமக்கெதிரான சவாலாகவே பார்த்தனர்.

தேர்தல் பணிகளை நேரில் நின்று கவனிப்பதற்காக ஜே.ஆர், அமைச்சர் சிறில் மெத்தியுவையும், மெத்தியுவுக்கு நெருக்கமான அமைச்சர் காமினி திசாநாயக்கவையும் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை மே 30 ஞாயிறு அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அதைவிட ஏற்கெனவே அதிகளவில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்துக்கு மேலதிகமாக வெளி மாவட்டங்களிலிருந்து 500 பொலிசாரைக் கொண்ட ஒரு பெரும்படையும் அனுப்பப்பட்டது. ஒரு பெரும் அசம்பாவிதத்துக்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதை யாழ்ப்பாண மக்கள் அறிந்திருக்கவில்லை.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள்  பரபரப்புமிக்கதாக இருந்தது.  மே.31ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த மூன்று பொலிஸார் இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்கள். இரண்டு பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்கள்.

அரச பயங்கரவாதம்

சொற்ப நேரத்தில் அங்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று தமது வெறியாட்டத்தைத் தொடங்கியது. வீதியில் கண்டவர்களையெல்லாம் அடித்து துன்புறுத்தினர். வீதி வெறிச்சோடியது. ஆத்திரத்தில் அருகில் இருந்த அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தினர். 150க்கும் மேற்பட்ட கடைகள் கொள்ளையிடப்பட்டும் தீயிடப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கத் தொடங்கினர். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு சாம்பலாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. யோகேஸ்வரனும் அவரது மனைவியும் மயிரிழையில் உயிர் தப்பியோடினர்.


ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியர் எஸ். எம். கோபாலரத்தினம் கொடூரமாக தாக்கப்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயமும் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. நான்கு தமிழர்கள் வீதிக்கு இழுத்து வரப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணப் பெரிய கடையில் கட்டியெழுப்பப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஓளவையார் சிலை, சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் சிலைகளும் உடைத்து துவம்சம் செய்யப்பட்டன.

இந்த ஆராஜகத்தை யாழ்ப்பாண விருந்தினர் விடுதியில் இருந்தபடி இயக்கிக் கொண்டிருந்தார்கள். சிறில் மெத்தியு, காமினி திசாநாயக்க தலைமையிலான குழு. ஏற்கெனவே இறக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காடையர்களும் தம் பங்குக்கு கொள்ளைகளிலும், நாசம் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவசரகால சட்டம், அமுலில் தான் இருந்தது. சகலதும் முடிந்த பின்னர் தான் காலம் கடந்து  ஜூன் 2 அன்று ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தது அரசாங்கம். அந்த சட்ட நடவடிக்கைகள் காடையர்களுக்கு பாதுகாப்பையும், பாமரர்களுக்கு இழப்பையும் தான் தந்தது. மொத்தத்தில் சொல்லப்போனால் அரச பயங்கரவாதம் இந்த சட்டங்களின் மூலம் மேலதிக அதிகாரங்களுடனும், வசதிகளுடனும் மக்களை கட்டிப்போட்டு சூறையாடியது. அவர்களின் சொத்துக்களை அழித்து சின்னாபின்னமாக்கியது.

இரவிரவாக நடந்த இந்தக் கொடுமைகளுக்கு இடைவேளை கொடுக்கவில்லை. அவர்களின் நாசகார தாகமும் அடங்கவில்லை. மறுநாளும் தொடர்ந்தது ஜூன் 1 அவர்கள் யாழ் பொது நூலகத்துக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த 97,000க்கும் மேற்பட்ட நூல்களையும், காலங்காலமாக பாதுக்காக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடிகளையும், பல கையெழுத்து மூலப் பிதிகளையும் சேர்த்து கொளுத்தினார்கள். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற “யாழ்ப்பாண வைபவ மாலை”யின் ஒரேயொரு மூலப்பிரதியும் அழிக்கப்பட்ட அரிய ஆவணங்களுக்கு ஓர் உதாரணம்.

இரவிரவாக தீயில் பொசுங்கிக் கொண்டிருந்த அந்த புலமைச் சொத்துக்களுடன், பல்லாயிரக்கணக்கானோரை உருவாக்கிய அந்த நூலகம் எரிந்துகொண்டிருந்த யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரியின் மேல்மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்த 74 வயதுடைய தாவீது அடிகள் இதனைக் கண்ணுற்ற அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிர்துறந்தார்.

“தமது புலமைச் சொத்தின் ஒட்டுமொத்த அழிப்பின் அடையாளமாகவே பார்த்தார்கள். பொது நூலக எரிப்பானது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அடக்குமுறைமிக்க அரசுக்கு எதிராகத் திருப்பியது" என்று குறிப்பிடுவார் பேராசிரியர் சிவத்தம்பி.

மா.க. ஈழவேந்தன் ‘தமிழினத்தின் மீதான பண்பாட்டுப் படுகொலை’ என்றார்.

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தமிழ் மொழி, கலை, பண்பாடு என்பவற்றை சிங்கள சமூகத்து கொண்டு போய் சேர்க்கும் முக்கிய சிங்கள புலமையாளர். யாழ் பல்கலைக்கழகத்திலும் கற்றவர். அவர் இப்படி குறிப்பிடுகிறார்.

“ஆயிரக்கணக்கான வரலாற்று இதிகாசங்களைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். மிகவும் கிடைத்தற்கரிய நூல்களையும் கொண்டிருந்தது யாழ் நூலகம். நாங்கள் எங்களுக்குத் தேவையான நூல்களை பலகலைக் கழக நூலகத்திலிருந்து பெற்றுக்கொண்ட போதும் அதை விட மேலதிகமான தேவைகளுக்கு யாழ் பொது நூலகத்தையே நாடினோம். உலகில் எங்கும் கிடைத்திராத நூல்களும், இந்தியாவில் கூட கிடைத்திராத பல நூல்கள் ஆவணங்களும் பாதுகாப்பாக அங்கு இருந்தன.  இனி அந்த நூல்களை எந்த விலை கொடுத்தாலும் நமக்கு கிடைக்கப்போவதில்லை. புராண வரலாற்று தொல்லியல் சான்றுகளை எரித்து அழித்ததற்கு நிகர் இது.”

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் இப்படி கூறுகிறார்.

“காலனித்துவகாலத்து நூல்களும், யாழ்ப்பாணத்தின் கல்வி மறுமலர்ச்சி சம்பந்தப்பட்ட மூல ஆவணங்களும், ஈழத்து தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் எங்கும் கிடைத்திராத நூல்களும் கூட இங்கு சேகரிக்கப்பட்டிருந்தன.”

அங்கே அழிந்தவற்றில் இவையும் அடங்கும்

  • கலாநிதி ஆனந்த குமாரசுவாமியின் கையெழுத்துப் பிரதிகள் 
  • திரு.சி.வன்னியசிங்கம் நூற்தொகுதி (சுமார் 100 நூல்கள்)
  • திரு ஐசாக் தம்பையா நூற்தொகுதி (சமயம், தத்துவம் பற்றிய நூல்கள் சுமார் 850)
  • திரு.கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி (சுமார் 600 நூல்கள்)
  • ஏட்டுச் சுவடித் தொகுதி
  • அமெரிக்க நூலகத்திலிருந்து அன்பளிப்பு செய்யப்பட்ட உசாத்துணை நூற் தொகுதி

இலங்கையின் அரச பயங்கரவாதம் காலத்துக்கு காலம் கலவரங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தலைமை கொடுத்து வந்திருக்கிறது தான். இதற்கு முந்திய 1939, 1956, 1958, 1977 முக்கிய கலவரங்களின் போதும் அழிவுகளை ஒவ்வொரு கோணத்தில் கண்ணுற்றிருக்கிறோம் ஆனால் 1981 இல் அழித்தவற்றில் தலையாய இழப்பாக, மறக்கவும், மன்னிக்கவும் முடியாத இழப்பாக பதிவானது யாழ் நூலக அழிப்பு.

கணேசலிங்கத்தின் வாக்குமூலம்

தென்னாசியாவின் சிறந்த நூலகமாகவும், இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாகவும் அறியப்பட்டது அது. 


யாழ் நூலக எரிப்புக்கு காரணமான எவரும் இறுதிவரை உத்தியோகபூர்வமாக தண்டிக்கப்படவில்லை. அவர்கள் எவரும் சட்ட ரீதியாக குற்றம் சுமத்தப்படவுமில்லை. ஆனால் 1993 மார்ச் மாதம் அப்போது வெளிவந்த சரிநிகர் பத்திரிகைக்கு ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் இனப்பிரச்சினை குறித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் அவர் அன்றைய கொழும்பு மேயரும், ஐ.தே.க.வின் பொருளாளருமாக இருந்த கே.கணேசலிங்கத்துடன் ஒரு உயர்ஸ்தானிகரின் வீட்டு விருந்தொன்றில் பரிமாறிக்கொண்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

“அங்கு மது பரிமாறப்பட்டிருந்தது “க” போதை நிலையில் இருந்தார். “1981 யாழ் நூலக தீவைப்புக்கு நீங்களும் மெத்தியு போன்றோருக்கு உடந்தையாக இருந்திருக்கிறீர்களே!” என்று கேட்ட கேள்விக்கு.

கணேசலிங்கம்: “அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதற்காகத்தான் நாங்கள் போயிருந்தோம் என்பது உண்மை.... நானோ, சிறில் மெத்தியுவோ, காமினியோ பெஸ்ரல் பெறேராவோ காரணமல்ல. அதைச் செய்தது பொலிஸ் அதிகாரி ஹெக்டர் குணவர்த்தன தான். நாங்கள் அதைத் தடுக்கவில்லை.”

ஐவன்: “83 கலவரத்தில் சிறில் மெத்தியுவுக்கு நேரடிப் பங்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா? ”

கணேசலிங்கம்:

“1983 கலவரத்திற்கு நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன். நானும் சிறில் மெத்தியுவும் மட்டுமல்ல அரசோடு இருந்த எல்லா சிரேஷ்ட அரசியல் வாதிகளும் அக்கலவரத்தைப் பாவித்தார்கள்.. தமக்கு தேவையானதை செய்துகொண்டார்கள். காமினி, லலித், மெத்தியு, பிரேமதாச அனைவரும் பாவித்தார்கள். நாங்கள் எவரும் யோசிக்கவில்லை அது இவ்வளவு சிக்கல்களைக் கொண்டு வரும் என்று. சாதாரணக் கலவரத்தைப் போல எழும்பி அடங்கி விடுமென்றே கருதியிருந்தோம்”

ஐவன்: “இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்ய தமிழனான நீங்களும் எப்படி உடந்தையாக இருந்தீர்கள்.”

“......”

பிரேமதாச அரசாங்கத்தின் போது காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி பிரேமதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது  பிரேமதாச இந்த உண்மைகளை உடைத்தார். காமினி திசாநாயக்க நூலக எரிப்பில் ஆற்றிய பாத்திரத்தைப் பற்றிய உண்மைகளை அன்றைய ஜனாதிபதி பிரேமதாச மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

புத்தளம் முஸ்லிம் கல்லூரியில் பிரேமதாச ஆற்றிய உரையின் போது;

“1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடைபெற்ற வேளையில் கட்சிக்காரர்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பலபேரைச் சேர்த்துக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். வடக்கில் நடைபெற்ற தேர்தலை நடக்க விடாமல் குழப்பம் செய்தார்கள். யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் விலைமதிப்பற்ற புத்தகங்களைக் கொழுத்தியவர்கள் யாரென்று அறிய விரும்பினால் எம்மை எதிர்ப்பவர்களின் முகத்தைப் பார்த்தால் தெரியும்”

என்றார்.

அன்று அவரை எதிர்த்து நின்றவர்கள் வேறு யாருமில்லை காமினி திசாநாயக்க தலைமையிலான குழுவே.

இந்தக் குற்றச்சாட்டுக்கு காமினி பூசி மெழுகி எழுதியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி பிரேமதாச மீண்டும் பதிலளித்தார். அது பற்றிய செய்தி 1991 ஒக்டோபர் 26 ஆண்டு வெளியான ஈழநாடு பத்திரிகையில் செய்தியாயும் வெளியானது, அதில்

“வடக்கு கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார். இதற்கு பிரதானமான காரணம் திரு.காமினியே பத்து வருடங்களுக்கு முன் 1981ல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கு இடையிலான உறவுகளில் இது ஒரு கறை படிந்த துரயரமான சம்பவமாகும். மாவட்ட அபிரிவித்து சபை முறையை பாராளுமன்றத்தில் காமினி திசாநாயக்கவே எதிர்த்தார். தேர்தலுக்கு முதல் காமினி நிறைய ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார்.

மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களில் சதி நாசவேலைகள் இடம்பெற்ற பின்னர் ஒரு சர்வதேச நூல் நிலையமான யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுக்களால் நீதியை பெறுவதற்கே எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியை குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாத செயலில் இறங்கினார்கள்..” 

அழிப்பின் சிகரம்

கடந்த 2016 டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி யாழ் நூலக எரிப்புக்கு முதற்தடவையாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் பிரதமர் ரணில்.  ஆனால் அவரது உரையில் இரட்டை அர்த்தம் தரத்தக்க விளக்கங்கள் இருந்தையும் கவனிக்கலாம்.

"யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது ஒரு கொடூரகரமான குற்றம் என்பது இரகசியமல்ல. ஒரு சிலரின் கொடூரமான செயல்களால் தேசமே அவமானப்படுத்தப்பட்டது. யாழ் நூலக எரிப்பானது தமிழ் மக்களின் இதயத்துக்கு அடிக்கப்பட்ட கடும் தாக்குதல். ஆனால் தற்போது அந்த காயம் ஆற்றப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தினால் மூட்டப்பட்ட யுத்த நெருப்புக்கு சிங்கள மக்கள் எந்தளவு அனுபவிக்க வேண்டியேற்பட்டது... அதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்காக மன்னிப்பு கேட்கப் போபவர்கள் யார்? இந்த எரிப்பைப் பற்றி அன்றைய போலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்த்தன தயாரித்த இரகசிய அறிக்கையின்படி இந்த தீமூட்டலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள். அது பிரபாகரனின் ஆணை. யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு சர்வதேச அனுதாபத்தை பெறுவதற்காக செய்த காரியம் என்று அந்த அறிக்கையில் இருந்தது...”

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பை கேட்டுவிட்டு மீண்டும் அதனைத் திரும்பப் பெறும் பாணியிலான கதை என்பதை விளங்கிக்கொள்ளலாம். யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது ரணில் அதே அரசாங்கத்தின் அமைச்சர் என்பதை நாம் மறந்துவிட்டோமா என்ன?

அவர் ஆதாரம் காட்டுகின்ற அதே போலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்தனவின் கதையை இன்று சிங்கள ஊடகங்கள் அனைத்தும் பரப்பி வருகின்றன. யாழ் நூலகத்தை கொழுத்தியது சிங்களத் தரப்பே என்று இதுவரை நம்பியிருந்த இனவாத சாக்திகள் கூட; எட்வர்ட் குணவர்தனவை ஆதாராம் காட்டியபடி தமது கரங்கள் தூய்மையானவை, இரத்தக் கறையற்றவை என்று சாதித்து வருவதை பார்க்க முடிகிறது. யார் இந்த எட்வர்ட் குணவர்தன அவர் எதை எங்கு இப்படி சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.


முன்னாள் பொலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்தன 2013 இல் 390 பக்கங்களுடன் படங்களுடன் கூடிய ஒரு நூலை வெளியிட்டார். நூலின் பெயர் “யாழ்ப்பாண நூலக எரிப்பு உட்பட மறக்கமுடியாத குறிப்புகள்” (Memorable Tidbits Including the Jaffna Library Fire) இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு 19.01.2013 அன்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில்  நிகழ்ந்தது. பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டம் அது. அந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தவர் நாடறிந்த பிரபல பேராசிரியர் கார்லோ பொன்சேகா. அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்பதையும் கவனிக்க வேண்டும். நீண்ட காலம் தமிழ் மக்களின் நீதியான அரசியல் கோரிக்கைகளை ஆதரித்து வந்தவராக அறியப்பட்டவரும் கூட.

அங்கு அவர் ஆற்றிய உரை முக்கியமானது.

“எட்வர்ட் குணவர்த்தன குற்றவியல் நீதியியல் பற்றிய கற்கையில் உயர் பட்டம் பெற்றவர். அவர் தான் பெற்ற ஆதாரங்களை வைத்து இந்த யாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரிகள் புலிகளே என்கிறார். சிங்களவர்கள் காட்டுமிராண்டிகள் என்று உலகத்துக்கு புனைவதற்காக செய்யப்பட்டது. முழு உலகமும் புலிகளின் பிரச்சாரத்தை நம்பியது. நானும் அந்த காலப்பகுதியில் கடும் அரசாங்க எதிர்ப்பாளனாக இருந்தேன். யாழ் நூலக எரிப்பின் பின்னால் இருந்த அந்த வில்லன் காமினி திசாநாயக்க என்றே நானும் உறுதியாக நம்பியிருந்தேன். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் காமினி திசாநாயக்கவுக்கு பகிரங்கமாக தாக்கிப் பேசினேன். எட்வர்ட் குணவர்த்தனவின் இந்த நூலை வாசித்தறியும் வரை யாழ் நூலகத்தை எரித்தது காமினி திசாநாயக்க என்றே நம்பிவந்தேன்.


1993 ஆம் ஆண்டு யாழ் நூலகத்தைப் பற்றிய “murder” என்கிற கவிதையை வாசித்தேன் அது Ceylon Medical Journal இல் வெளியாகியிருந்தது. அது பேராதனை பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் எம்.ஏ.நுஹ்மான் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது. (என்று கூறிவிட்டு அதன் ஆங்கில வடிவத்தை வாசிக்கிறார்.)

அக்கவிதையை நான் என் தாய் மொழியான சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தேன். 1994 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதான போட்டியாளர்களான சந்திரிகாவுக்கும் காமினி திசாநாயக்கவுக்கும் இடையிலான போட்டியில் நான் சந்திரிகாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். ஏறத்தாள 30 க்கும் மேற்பட்ட கூட்டங்களில் எனது உரையின் இறுதியில் இந்தக் கவிதையை சிங்களத்தில் வாசித்து முடித்தேன். (சிங்களத்தில் அதே கவிதையை வாசிக்கிறார்). இந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பான காமினி திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக ஆகக்கூடாது என்றபோது கூட்டத்தில் இருந்து “ஜயவேவா... ஜயவேவா...” கோஷம் எழும்பின.

23.10.1994  அன்று பேருவளையில் இருந்து எங்கள் பிரச்சாரங்கள் ஆரம்பமாகி பயாகல, வாதுவை, பாணந்துறை, மொரட்டுவை, கிருலப்பனை என தொடர்ந்தது. அங்கெல்லாம் அந்தக் கவிதையை வாசித்தேன். அன்று உறங்கிக்கொண்டிருந்த போது என்னை எழுப்பி, “காமினி திசாநாயக்க பேலியகொட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுவிட்டதாக”க் கூறினார்கள். நான் உண்மையில் மிகவும் நொந்துபோனேன். காமினி திசாநாயக்கவை நான் தனிப்பட அறிவேன். அவர் ஒரு கனவான். என்னை எதிர்த்து ஒரு வார்த்தையும் அவர் கூறியதில்லை. நாங்கள் அரசியல் ரீதியாக வேறுபடுகின்ற போதிலும் அவர் எப்போதும் என்னிடம் மிகவும் மரியாதையாக இருந்தார்.

எட்வர்ட் குணவர்த்தனவின் நூலை வாசித்ததன் பின்னர் எபேற்பட்ட குற்றத்தை நான் விளைவித்திருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டேன். இப்போது நான் அதற்கு பிராயச்சித்தமாக திருமதி ஸ்ரீமா திசாநாயக்க, நவீன் திசாநாயக்க, லங்கா திசாநாயக்க ஆகியோரிடம் நான் செய்த தவறுக்காக மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். 

திரு. நவின் திசாநாயக்க, சிலுவையில் அறையப்பட்டவர்களுக்கு இயேசு கிறிஸ்து காட்டிய கருணையை எனக்கு காட்ட முடியும். "பிதாவே, அவர் அறியாமல் செய்த பாவத்தை மன்னித்தருளும்". இப்படி ஒரு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதற்கு எனக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த எட்வர்ட் குணவர்த்தனவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...”

கார்லோ பொன்சேகா 2019 இல் மறைந்தார். ஆனால் அவர் போன்ற ஒரு முக்கியமான பிரமுகர் ஏற்படுத்திவிட்டுப் போன இத்தகைய செயலால் சிங்கள மக்கள் மத்தியில் மேலும் இந்தக் கருத்துக்கு வலுவூட்டப்பட்டது. ஒன்று குற்றவாளிகளை தப்பவைத்தது. இரண்டாவது இதை விடுதலைப் புலிகளின் மீது (தமிழர் தரப்பிடம்) பழியைப் போட்டுவிட்டது. கார்லோ பொன்சேகா இதைப் பேசிய கால கட்டத்தில் அவர் ஒரு ராஜபக்சவாதியாக ஆகியிருந்தார்.

அவரின் இந்த உரையை பல சிங்கள ஆங்கில பத்திரிகைகளும் அடுத்த நாளே முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்தன. ராஜபக்சவாதிகளால் நடத்தப்பட்ட “நேஷன்” பத்திரிகையில் “மனசாட்சியுள்ள மனிதன்” என்று ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியது. ஆனால் அதேவேளை “யாழ் நூலக எரிப்பில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டட்டிருந்த ஒரு பொலிஸ் அதிகாரியொருவரே அந்த சம்பவம் பற்றி அறிக்கை எழுதுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது” என்று சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதியவர் தமிழர் அல்ல. மனசாட்சியுள்ள இன்னொரு ஓய்வு பெற்ற போலிஸ் அதியாரியான டாஸ்ஸி செனவிரத்ன. 

டாஸ்லி செனவிரத்னவின் கட்டுரையைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியான அன்றைய போலிஸ் அதிகாரி கே.கிருஷ்ணதாசன் இப்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் சமீபத்தில் எட்வர்ட் குணவர்த்தனவுக்கு எழுதிய பகிரங்க கடிதம் ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தது. யாழ் நூலக எரிப்பு தொடர்பாக அதுவொரு முக்கியமான கடிதம்.

ஓய்வுபெற்ற பிரதிப் போலிஸ் மாஅதிபர் எட்வர்ட் குணவர்த்தன!

பதில் : யாழ் நூலக எரிப்பு!

என் பெயர் கே.கிருஷ்ணதாசன். நான் ஜூன் 1967 முதல் டிசம்பர் 1986 வரை இலங்கை போலீஸ் சேவையில் பணியாற்றினேன், நான் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து, சிட்னியில் எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறேன். எனது தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு கீழ் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. எச்செலான் எசெலோன் சதுக்க பொலிஸ் பயிற்சிப் பள்ளியில் நான் பயிற்சிபெற்ற ஜூன் 1967க்கும் டிசம்பர் 1967க்கும் இடைப்பட்ட காலத்தில் எங்கள் ADT நீங்கள் பணியாற்றியிருந்தீர்கள். அதன் பின்னர் மாத்தறையில் பணியைத் தொடங்கினேன். இறுதியாக அக்டோபர் 1983 முதல் மார்ச் 1986 வரை இறுதியாக நான் மட்டக்களப்பில் பணியாற்றினேன். அதன்பிறகு நான் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர் நீங்கள் பொலிஸ் தலைமையகத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய வேளை நானும் அங்கு பணியாற்றியிருந்தேன். நான் உங்களைப் போன்ற ஒரு பழைய ஜோசபியன். (ஜோசப் கல்லூரியைச் சேர்ந்தவன்)

சமீபத்தில் இலங்கை செய்தித்தாள்களில் வெளிவந்த RTD எஸ்.எஸ்.பி திரு.டாஸ்ஸி செனவிரத்னா எழுதிய கட்டுரையோடு தொடர்புடைய ஒரு விடயத்துக்கு கருத்தளிப்பதற்காக இதை எழுதுகிறேன். திரு. டாஸ்ஸி செனவிரத்ன என்னுடைய ஒரு நல்ல நண்பர், அவர் தற்போது சிட்னியில் விடுமுறையைக் கழித்து வருகிறார். யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டவேளை நானும் கண்ணால் கண்ட ஒரு  சாட்சியாக இருந்ததால், அதைப் பற்றிய உங்கள் நூல் அறிமுக நிகழ்வின் போது வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்குமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். நூலக எரிப்பைக் கண்ணால் கண்ட நேரடி சாட்சியாக இருந்த காரணங்களால் உங்களுடன் தொடர்புபடுத்த விரும்புகிறேன்.

ஜனவரி 1980 முதல் டிசம்பர் 1982 வரை யாழ்ப்பாண குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரியாக நான் பணியாற்றியதுடன் யாழ்ப்பாணப் பிரிவு கண்காணிப்பு சுப்பிரிண்டன்ட்டுக்கு கீழ் நான் நேரடியாகப் பணியாற்றினேன். அப்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நான் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரியாகவும் பணியாற்றினேன். அப்போது எனது மேலதிகாரியாக லலித் குணசேகர கடமையாற்றினார்.

31 மே 1981 இரவு 7.00க்கும் 7.30க்கும் இடையில் யாழ்ப்பான போலிஸ் வளாகத்தில் பிரதிப் போலிஸ் மா அதிபர் மகேந்திரனுடன் இருந்தேன். அப்போது யாழ் நூலகப் பகுதியிலிருந்து பெரிய புகை எங்களால் காண முடிந்தது. நூலகம் தான் எரிகிறது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். உடனடியாக போலிசாரையும் அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு போகுமாறு பொலிஸ் மாஅதிபரால் பணிக்கப்பட்டேன்.

பொலிசில்  இருந்து 250 யார் தூரம் மட்டுமே இருந்த யாழ் நூலகத்துக்கு இரு சப் இன்ஸ்பெக்டர்களுடனும், பத்து கான்ஸ்டபில்களுடனும் விரைவாக சென்றடைந்தோம். அங்கே சுமார் 20 சீருடை அணிந்த இராணுவத்தினர் உள்ளே இருந்ததைக் கண்டோம். அவர்கள் அங்கே மேலும் எண்ணெய் ஊற்றி தீயை மூட்டிக்கொண்டிருந்தார்கள். புத்தக ராக்கைகளிலிருந்த நூல்களை அள்ளி அந்தத் தீயில் போட்டு கொளுத்திக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கண்ட அந்த இராணுவத்தினர் சில இராணுவத்தினருடன் எங்களருகில் வந்து AK47 துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியபடி எங்களை பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பிவிடுமாறு சிங்களத்தில் கத்தினர். நான் உடனடியாக போலிஸ் அதிபருடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினேன். அவரும் எங்களைத் திரும்பிவருமாறு பணித்தார். நாங்கள் பொலிஸ் நிலையம் திரும்பியவேளை முழு நூலகக் கட்டிடமும் தீப்பிழம்பாக பரவியிருந்ததைக் கண்டோம்.

போலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டார் அதில் எந்தப் பலனும் இருக்கவில்லை. அங்கிருந்த நிலைமைகளால் அந்த இராணுவத்தினருக்கு எதிராக எதையும் செய்ய இயலாதவர்களாக நாங்கள இருந்தோம். சகலவற்றையும் கண்டும் கூட கையறு நிலையில் நான் இருந்தேன். நான் கண்ட அந்த காட்சிகளை என்றும் என்னால் மறக்கவே இயலாது. என் வாழ்நாள் காலம் முழுதும் என்னோடு கூடவே இருக்கும் நினைவுகள் அவை. பொலிஸ் நிலையத்துக்கு வந்ததும் நான் ஒரு அறிக்கையை எழுதினேன். போலிஸ் மா அதிபரும் அந்தக் கோரச் சம்பவம் பற்றி ஒரு அறிக்கையை எழுதினார். 

துரதிர்ஷ்டவசமாக இன்று அந்த மகேந்திரன் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் இன்று என் கருத்துக்கு துணையாக அவர் இருந்திருப்பார். ஆனால் திருமதி மகேந்திரன் இன்றும் சிட்னியில் வாழ்கிறார். அவசியப்பட்டால் அவரிடம் நீங்கள் மகேந்திரன் இதைப் பற்றி பகிர்ந்தவற்றைப் பற்றி வினவலாம்.

தயவு செய்து டாஸ்ஸி செனவிரத்ன பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையை வாசியுங்கள். யாழ் நூலகத்துக்கு எப்படி தீயிடப்பட்டது என்பது பற்றிய விபரங்களை அவரோடு முன்னாள் ஓய்வுபெற்ற போலிஸ் மா அதிபர் சீ.எல்.ரத்னாயக்கவின் (என்னோடு கற்றவர்)  விபரங்களையும் அறியலாம்.

நான் எதைப் பார்த்தனோ, யாரைப் பார்த்தனோ அவற்றை நான் அறிக்கையாக எழுதியிருக்கிறேன். தீ பரவிக்கொண்டிருந்தபோது தான் நான் அங்கு சென்று அவற்றைப் பார்த்தேன்.

சமீபத்தில் உங்கள் புத்தகமான ‘யாழ்ப்பாண நூலக எரிப்பு உட்பட மறக்கமுடியாத குறிப்புகள்’ என்கிற நூலைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழர்களிடையே நிலவும் சாதி மோதலும், யாழ்ப்பாணப் பொது நூலகத்தை புலிகள் எரித்ததற்கு காரணம் என்று நீங்கள் அதில் கூறியுள்ளீர்கள்.

அரசாங்கத்தையும் படையினரையும் இதில் தொடர்புபடுத்துவதற்காக விடுதலைப் புலிகள் நூலகக் கட்டிடத்திற்கு தீ வைத்திருக்க வாய்ப்பில்லை.  மேலும் யாழ் நூலகமானது தமிழருக்கு மாத்திரமல்ல நாட்டின் சகலருக்குமானதாக இருந்தது. யாழ் நூலக எரிப்பு இன்று வரலாறாகிவிட்டது. அதுபோல அதை யார் செய்தார்கள் என்பதை அறிவார்ந்த மக்கள் அறிவார்கள்

ஒரு உயர்மட்ட நீதிக் குழுவை நியமிப்பதன் மூலம், யாழ்ப்பாண பொது நூலகத்தை எரிப்பு பற்றிய உண்மையை ஆராய அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டிய முக்கியமான நேரம் இது.

சுதந்திரமாக ஆராயாதவரை உண்மையைக் கண்டறிய முடியாது. சம்பந்தப்பட்ட அனைவரின் பதிவுகளையும் கருத்திற் கொண்டு, அந்த உண்மைகளை சுயாதீனமாகவும் புறநிலையாகவும் மீண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்தவும் உண்மைகளை நிறுவவும் காலம் கடந்துபோய்விடவில்லை.

உங்கள் கருத்துக்கள் பகிரங்க வெளிக்கு வந்துவிட்டதால் பின்வரும் விபரங்களை நான் பணிவுடன் உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்.

1. பொலிஸ் கடமைகளுக்கா அல்லது அரசாங்க தேர்தல் பணிகளுக்கா நீங்கள் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் விசேட பணிக்காக அனுபப்பட்டிருந்தீர்கள்?

2. நீங்கள் பொலிஸ் கடமைகள் தொடர்பாகத் தான் அங்கு வந்திருந்தீர்களென்றால் முக்கிய பணி தொடர்பில் ஏன் நீங்கள் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்துக்கு வந்து பிரதிப் பொலிஸ் மா அதிபரையோ மற்றும் அதிகாரிகளையோ சந்திக்கவில்லை? அணுகவில்லை? விளக்கம் கொடுக்கவில்லை? அல்லது உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பணி இரகசியப் பணியா? (‘under-cover’) அங்கு மற்றவர்கள் கண்ட எதுவும் உங்கள் பார்வைக்கு எட்டாதது எப்படி? சம்பவ தினத்தன்று நான் உங்களை யாழ்ப்பாண பொலிஸ் வளாகத்தில் பார்த்ததில்லை என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

3. நீங்கள் கூறும் இன்ஸ்பெக்டர் சத்தியனைத் தவிர வேறு எவராவது உங்களோடு அப்போது பணியில் ஈடுபட்டிருந்தார்களா? அப்படி பணியாற்றியிருந்தால் அவர்கள் யார்?

4. யாழ்ப்பாண நூலகம் எரிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை சந்தித்து உங்களுக்குத் தெரிந்தவற்றை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு எது தடையாக இருந்தது. ஏனெனில் அந்தக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அல்லவா அனுப்பட்டிருந்தார்கள்?

5. நீங்கள் IGP யிடம்/ஜனாதிபதியிடம் சமர்பித்ததாகக் கூறும் அறிக்கையில் உங்கள் யாழ்ப்பாண விசேடபணி தொடர்பான விடயங்களும் உள்ளனவா?

நான் ஏன் இத்தனை காலமாக காத்திருந்தேன் என்தையும் இந்த இடத்தில்  கூறியாகவேண்டும். 

DIG/NR அறிக்கையில் நான் கண்டவற்றை ஏன் இவ்வளவு காலம் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்பதை இங்கே கூறியாகவேண்டும்.

இராணுவ ஆதிக்கம்  நிறைந்த நாட்டில் இராணுவத்தை சிக்கவைக்கின்ற விபரங்களை வெளியிடுவது தற்கொலை முயற்சிக்குச் சமம். மேலும் நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தாலும் இலங்கைக்கு அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன். இறுதியாக  போலிஸ் 67 பேட்ச் ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்காக 2014 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணித்தேன்.

எவ்வாறிருப்பினும் இந்த சம்பவத்தை அறிய விரும்பும் எவருக்கும் நான் கண்டதை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நிலைமை இப்போது மாறியிருக்கிறது, எனவே நான் இப்போது உங்களுக்கு எழுதுகிறேன், ஏனென்றால் இப்போது நான் நடந்ததை பகிரங்கமாகச் சொல்ல முடியும்.

நான் மிகுந்த மரியாதையுடன் எதிர்பார்க்கும் தகவலைத் தெளிவுபடுத்த நீங்கள் உதவ முடிந்தால் உங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

உங்கள் உண்மையுள்ள

க்றிஸ் கிருஷ்ணதாசன்

பகிரங்கச் சவாலாக கேட்டிருந்த இந்தக் கேள்விகள் முழுமையாக டீ.பீ.எஸ்.ஜெயராஜ் அவர்களின் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. இதை அவர் எங்கிருந்து பெற்றார். அவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது வேறெங்கேயும் பதிவான ஒன்றைத் தான் பதிவிடாரா என்கிற விபரங்கள் அதில் இருக்கவில்லை. ஆனால் அந்த இணையத்தளம் இலங்கைப் பற்றிய முக்கியமான ஒரு ஆங்கில இணையத் தளம் என்பதால் பரவலாக இது சென்றடைந்திருக்கவேண்டும். அது வெளியான திகதி 23.02.2015. ஆனால் இப்போது இத்தனை ஆண்டுகள் கழிந்தும் க்றிஸ் கிருஷ்ணதாசன் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் எட்வர்ட் குணவர்த்தன தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளிவந்ததில்லை.

யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றி தமிழில் மாத்திரம் ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அதுபோல சிங்களத்திலும் வெளிவந்த இரண்டு நூல்களைக் காண முடிகிறது. அதில் ஒன்று எட்வர்ட் குனவர்தனவினுடையது. இன்னொன்று சந்தரேசி சுதுசிங்க எழுதிய “எரிந்த இறக்கைகள்” (ගිනි වැදුණු පියාපත්) என்கிற நூல். இந்த நூலில் குற்றவாளிகளாக அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் சாடுகிறது.

ஆனால் பேரினவாதம் வெகுஜனமயப்பட்ட சிங்கள சமூகத்தில் எட்வர்ட் குணவர்த்தனவின் நூல் இப்போது பெரும் செல்வாக்கு பெற்று வருகிறது. அதில் கூறியபடி இதை யாழ் நூலகம் பிரபாகரனின் ஆணையின் பேரில் விடுதலைப் புலிகளே எரித்திருக்கிறார்கள் என்கிற கருத்தும் வேகுஜனமயப்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

யாழ் நூலக எரிப்பு நாள் ஆண்டுதோறும் நினைவு கூறப்படும்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் சிங்களத்தில் நடக்கின்ற பெருமளவு விவாதங்கள் அந்த இரத்தக்கறையை குறுக்குவழியில் கழுவ முயற்சித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

அடையாள அழிப்பின் சிகரம்

இந்த எரிப்பில் சம்பந்தப்பட்ட சிறில் மெத்தியு ஒரு வீரனாகவே இனவாதிகள் மத்தியில் இன்னும் திகழ்கிறார். காமினி திசநாயக்கவையும் காப்பாற்ற பெரும் எத்தனிப்பு எடுக்கப்படுகிறது. 1981 சம்பவத்தில் சிறில் மெத்தியுவை கண்டும் காணாது இருந்ததன் விளைவு தான் 1983 கலவரத்திலும் மெத்தியு அதனை தனக்கு கிடைத்த லைசன்சாக கருதி ஆடிய ஆட்டம். பிரேமதாசா போன்றோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அவர் விலத்தப்பட்ட நாடகம் வேறொரு உபகதை. உண்மையில் சிறில் மெத்தியுவை எவரும் விலத்தத் துணியவில்லை அவர் தானாக விலகினார் என்பது தான் உண்மை.


சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவர் Orville H. Schell, தலைமையில் உண்மையறியும் குழுவொன்று இதனை விசாரிப்பதற்காக 1982இல் சென்றது.  Orville H. Schell சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவராகவும் விளங்கியவர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பக்கசார்பில்லாத புலனாய்வுப் பிரிவை நிறுவவில்லை என்றும், சுயாதீனமான விசாரணையொன்றை மேற்கொள்ளவுமில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 1981 மே, யூனில் ஏற்பட்ட அழிவிற்கு யார் பொறுப்பாளி என்பதைக் கூறுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

யாழ் நூலகத்தை பின்னர் புனரமைத்து தமிழர்களுக்கு தந்ததாக சிங்கள அரசு கைகழுவிக் கொண்டது. ஆனால் கைநழுவிப் போன தமிழர் நம்பிக்கையை அவர்களால் திருப்பிப் பெற முடியவில்லை. அது அடுத்து வரும் பெரிய இழப்புகளுக்கு முத்தாய்ப்பாக ஆனது. ஒரு போராட்டத்தின் விதையாக ஆனது. தமக்கான தலைவிதியை தீர்மானிக்கும் வித்தானது.

யாழ் நூலக எரிப்பு அடையாள அழிப்பின் சிகரம்.

இந்த அரச பயங்கரவாதச் செயலுக்கு ஒருவகையில் காரணமாக இருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன றோட்டரிக் கழக வைபவத்தில் ஆற்றிய உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.

யாழ் பொது நூலகமே எனது அரசியல் வாழ்வுக்கு அத்திவாரமிட்டது. (11.06.1982 வீரகேசரி செய்தி)

கால வரிசை:

  • 1933 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு இலவச தமிழ் நூலகத்தை திறக்கவேண்டும் என்கிற சிந்தனையில் அன்றைய நீதிமன்ற காரியதரிசியாக பணிபுரிந்த க.மு.செல்லப்பா இளைஞர் முன்னேற்ற சங்கத்திடம் தெரிவித்தார். இளைஞர்களுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று நூல்கள் சேகரிக்கப்பட்டன.
  • 11.12.1933 செல்லப்பா நூலகத்தின் அவசியத்தைப் பற்றி  “A central Free Tamil Library in Jaffna” என்கிற தலைப்பில் ஒரு அறிக்கை விட்டார்.
  • 04.06.1934 யாழ் மத்திய கல்லூரியில் நீதிபதி சீ.குமாரசுவாமி தமைமையில் கூடிய புலமையாளர்கள் மற்றும் அரச உயர் உத்தியோகத்தர்கள் அனைவரும் கூடி இதற்கான ஒரு குழுவை நியமித்தார்கள்.
  • 01.08.1934 ஆஸ்பத்திரி வீதியில் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள கடைகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்தார்கள். பலரும் நின்றுகொண்டு குவிந்திருந்து படிக்கத் தொடங்கினார்கள். இடப்பற்றாகுறையினால் பக்கீஸ் பெட்டிகளின் மீதிருந்து படித்தார்கள்.
  • 01.01.1935 நூலகம் உத்தியோகபூர்வமாக கோலாகலமாக யாழ்ப்பாண நகர சபையிடம் கையளிக்கப்பட்டது. 844 தரமான நூல்களுடன் (இவற்றில் 694 நூல்கள் பொதுமக்களால் அன்பளிப்பு செய்யப்பட்டவை) மாநகராட்சி மன்றத்தின் மராமத்துப் பகுதி அமைந்துள்ள பகுதியில் அது இயங்கியது.
  • 1936 மழவராயர் கட்டடத்துக்கு மாறியது.
  • 16.05.1952 “யாழ்ப்பாண மத்திய நூலக சபை” என ஒரு ஆளுநர் சபை உருவாக்கப்பட்டது.
  • 23-03-1954 இல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
  • 29.05.1954 நகரபிதா வணக்கத்துக்குரிய லோங்பிதா, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செசில் செயேஸ், அமெரிக்க தூதுவர் பிலிப் குறோல், இந்திய உயர்தாநிகராலயத்தில் முதல் காரியதரிசி சித்தாந்தசாரி ஆகிய ஐவரும் சேர்ந்து வீரசிங்க - முனியப்பர் கோயில் முன்னுள்ள முற்றவெளியில் அடிக்கல் நாட்டினார்கள். ஆசிய அபிவிருத்தி நிதியம் இந்திய உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட மேலும் பலர் நிதியுதவிகளை வழங்கினர். சிறிது சிறிதாக பலரது உதவிகளும் நூலகத்துக்காக  திரட்டப்பட்டன. நிதி சேகரிப்புக்காக களியாட்ட விழாக்களும் நடத்தப்பட்டன.
  • 17-10-1958 இல் மழவராயர் கட்டிடத்தில் இயங்கிய நூலகம் பொது நூலகம் எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது
  • 11.10.1959 நூலகத்தின் இட நெருக்கடி தொடர்ந்தும் இருந்த நிலையில் மேல் மாடி கட்டி முடிக்குமுன்பே கீழ் மண்டபத்தை நகர பிதா அல்பிரட் துரையப்பா குடிபுகும் வைபவத்தை நடத்தினார். பழம்பெரும் நூல்களின் தொகுதிகளை கோப்பாய் வன்னியசிங்கம் மற்றும் பண்டிதர் இராசையனார் நினைவாகவும் கிடைத்தன. முதலியார் குல சபாநாதனிடமிருந்து பல அரிய நூல்கள் விலைக்கு கிடைத்தன. இப்படி பல அரிய ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும், கையெழுத்து மூலப் பிரதிகளும் சேகரிக்கப்பட்டன. 
  • 03.11.1967 மேல் தளம் பூர்த்தியாக்கப்பட்டு பின்னர் சிறுவர், பகுதி, அடுக்கு அறை என்பனவும் திறக்கப்பட்டன.
  • 01.06.1981 யாழ் நூலகத்தை சிங்களக் காடையர்கள் எரித்து சாம்பலாக்கினர். 97000க்கும் மேற்பட்ட நூல்கள், அரிய ஓலைச் சுவடிகள் அனைத்தும் எரித்துப் பொசுக்கப்பட்டன. பின்னணியில் அரசாங்க அமைச்சர்கள் காமினி திசாநாயக்க, சிறில் மெத்தியு. இந்த சம்பவத்தைக் கண்ட வணக்கத்துக்குரிய சிங்கராயர் தாவீது அடிகளார் திகைத்து மாரடைப்பில் மரணமானார்.
  • 07.02.1982 புதிதாக திருத்தபோவதாக அடிக்கல் நாட்டல்
  • 10.12.1982 இடைக்கால ஒழுங்காக ஒரு பகுதி திருத்தியமைக்கப்பட்டு வாசிகசாலையின் சிறுவர் பகுதி, உடனுதவும் பகுதியும் இயங்கத் தொடங்கியது.
  • 14.07.1983 இரவல் கொடுக்கும் பகுதி மீள இயங்கத் தொடங்கியது.
  • 10.01.1984 மாநகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு மட்டமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த நூலக உறுப்புரிமை யாழ் மாவட்டத்தினர் அனைவருக்குமாக விஸ்தரிக்கப்பட்டது.
  • 05.06.1984 மீண்டும் திறக்கப்பட்டது.

உசாத்துணை

  • பொன்விழாப் பொலிவு காணும் பொதுசன நூலகம்- க.சி.குலரத்தினம் (மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலகம் திறப்பு விழா மலர் – 1984
  • யாழ்ப்பாண பொதுசன நூலகம் (எரிக்கப்பட்டு 34 ஆண்டுகள்) 01.06.2015 – தங்க முகுந்தன்
  • மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது - 1981
  • யாழ்ப்பாணப் பொது நூலகம் – ஒரு வரலாற்றுத் தொகுப்பு எ.செல்வராஜா
  • யாழ்ப்பாணப் பொது நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது – வி.எஸ்.துரைராஜா
  • Thurairajah, V.S., The Jaffna Public Library Rises From Its Ashes, (2007), pg. 28
  • Selvarajah, N. ed., Jaffna Public Library- A historic compilation (2001)
  • http://www.vikalpa.org/?p=6895
  • REPORT OF AMNESTY INTERNATIONAL MISSION TO SRI LANKA 1982
  • Orville H.Schell, Chairman of the Americas Watch Committee, and Head of the Amnesty International 1982 fact finding mission to Sri Lanka
நன்றி - காக்கைச் சிறகினிலே
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates