Headlines News :
முகப்பு » , , , , » Dr.W.G.ரொக்வூட் : வெள்ளாளரல்லாத முதல் பாராளுமன்ற பிரதிநிதி | என்.சரவணன்

Dr.W.G.ரொக்வூட் : வெள்ளாளரல்லாத முதல் பாராளுமன்ற பிரதிநிதி | என்.சரவணன்

இலங்கையில் முதன் முறையாக வெள்ளாளரல்லாத முதல் பாராளுமன்ற பிரதிநிதி டொக்டர் டபிள்யு.ஜீ.ரொக்வூட் (William Gabriel Rockwood).

இலங்கையில் முதற்தடவை இலங்கைக்கான அரசியலமைப்பு சட்டவுருவாக்கமும், அரசியல் ரீதியில் நாட்டை ஆள்வதற்கான அமைப்பும் 1833 கோல்புறூக் சீர்திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. 15 அங்கத்தவர்களைக் கொண்ட அந்த சட்ட நிரூபன சபை உத்தியோகபற்றுள்ள 9 உறுப்பினர்களும், உத்தியோக பற்றற்ற உறுப்பினர்களாக 6 பேரையும் கொண்டதாக அது அமைக்கப்பட்டது. அதன்படி உத்தியோகபற்றற்ற அறுவரில் ஐரோப்பியர் மூவரும், சிங்களவர் -1, தமிழர் -1, பறங்கியர் – 1. என்கிற அடிப்படையில் அங்கத்துவம் வகித்தார்கள். அதன் அடிப்படையில் இலங்கையின் சட்டசபை மரபில் முதலாவது தமிழ் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும், முதலாவது சிங்கள அங்கத்தினராக ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்ன (J.G. Philipsz Panditharatne)  என்பவரும், ஜே.சீ.ஹீலபிரான்ட் (J.G. Philipsz) முதலாவது பறங்கி இனத்து உறுப்பினராகவும் தெரிவானார்கள்.


குமாரசுவாமி குடும்பத்தினர் அதன் பின்னர் நீண்ட காலமாக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக ஆகினர். ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியைத் தொடர்ந்து அதே பரம்பரையில் இருந்து எதிர்மன்னசிங்கம், ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (30 மே 1835 – 07.11.1836 இறக்கும்வரை) எதிர்மன்னசிங்கம் (1846-1861), முத்து குமாரசுவாமி (1861–1879 இறக்கும்வரை), சேர் பொன்னம்பலம் இராமநாதன் (1879–1930), பொன்னம்பலம் குமாரசுவாமி (1892–1898) பொன்னம்பலம் அருணாச்சலம் (1912–1913) என இன்னும் அடுத்து பலரும் அக் குடும்பத்தில் இருந்து வந்தார்கள்.  இவர்களில் சேர் போன் இராமநாதன் சுமார் அரை நூற்றாண்டு கால அரசியல் பங்களிப்பைக் கொண்டவர். அதேவேளை இராமநாதனை விட அதிகமாக போற்றப்படுப்பவர் அவரின் இளைய சகோதரர் சேர் போன் அருணாச்சலம். இராமநாதனுக்குப் பின்னர் பிறந்து இராமநாதனுக்கு முன்னரே காலமாகிப் போன அருணாச்சலம் ஒரே ஒரு ஆண்டு தான் சட்டசபைப் பிரதிநிதியாக இருந்தார். ஆனால் அவர் ஒரு சிவில் சேவையாளராகவும், அரசியல் மற்றும் தொழிற்சங்க விடயங்களில் ஆற்றிய பாத்திரம் மகத்தானது.

சிங்களச் சூழலை எடுத்துக் கொண்டாலும் சிங்கள வெள்ளாள சாதியான “கொவிகம” சாதியைச் சேர்ந்தவர்களே ஆரம்பத்தில் இருந்து சட்ட சபையில் கோலோச்சு வந்தார்கள். சட்ட சபையில் தமிழ் சமூகத்தில் இருந்து குமாரசுவாமி குடும்பத்தை (வெள்ளாள) சேர்ந்தவர்களே தொடர்ந்து ஏகபோகமாக கோலோச்சியதைப் போலவே, சிங்களச் சூழலிலும் பண்டாரநாயக்க, ஒபேசேகர ஆகிய இரு (கொவிகம எனப்படுகிற வெள்ளாள) குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏகபோகமாக கோலோச்சி வந்தார்கள். அவர்களை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்; எச் டயஸ் (H. Dias, 1861-1865), ஜேம்ஸ் அல்விஸ் (James Alwis, 1875-1878), ஜே.பி.ஒபேசேகர ( J.P. Obeyesekera 1878-1881), ஏ.எல்.டி அல்விஸ் (A.L. de Alwis, 1881-1888), ஏ.டி.அல்விஸ் செனவிரத்ன (A. de Alwis Seneviratne, 1888-1900) எஸ்.சி.ஒபேசேகர (S.C. Obeyesekera, 1900-1911).


இவர்களில் ஒரே ஒருவர் விதி விதிவிலக்கு. அவர் 1865 -1875 வரை அங்கம் வகித்த ஈ.எச்.தெஹிகம (E.H. Dehigama). 

தமிழ் வெள்ளாள x சிங்கள கொவிகம கூட்டு

பிற்காலத்தில் 1911ம் ஆண்டு சட்டசபைக்காக படித்த இலங்கையரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் சேர் போன் இராமநாதனை எதிர்த்து போட்டியிட்ட மார்கஸ் பெர்னான்டோ கராவ (கரையார்) சாதியை சேர்ந்தவர் என்பதற்காகவே சிங்கள ‘கொவிகம’ சமூகத்தைச் சேர்ந்த மேட்டுக்குடியினர் ‘கரவ’ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தமது பிரதிநிதியாக ஏற்கத் தயாரில்லாமல் மார்கஸ்  பெர்னாண்டோவை தோற்கடித்து அதைவிட உயர் சாதி வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பொன் இராமநாதனை வெற்றிபெறச் செய்தனர் என்பதை இங்கே நினைவிற் கொள்வோம்.

அப்போது சிங்கள – தமிழ் முரண்பாடுகள் கூட ஒரு பொருட்டாக இருக்கவில்லை. மாறாக “யாழ் x சைவ x தமிழ் x வேளாள x படித்த s மேட்டுக்குடி” பொன்னம்பம் இராமநாதனா அல்லது “கொழும்பு x பௌத்த x சிங்கள x கராவ x படித்த s மேட்டுக்குடி” மார்கஸ் பெர்னாண்டோவா எனும் போது அங்கே பொன்னம்பலம் தெரிவாக சாதி என்பது மட்டுமே மேலதிக தகுதியாக இருந்தது.

இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கையில் முதற் தடவையாக வெள்ளாள – கொவிகம சாதியின் ஏகபோகத்துக்கு வெளியில் இருந்து வந்த தமிழ் பிரதிநிதி டொக்டர் டபிள்யு.ஜீ.ரொக்வூட்  (William Gabriel Rockwood) அவர்களே. சிங்களச் சூழலில் கொவிகம சாதிக்கு வெளியில் ஓருவர் தெரிவு செய்யப்பட 1912 வரை ஆனது என்பதையும் இங்கே நினைவுபடுத்துவோம். 

மேற்படி தமிழ் பிதிநிதிகள் வரிசையில் 1838–1845 வரை தமிழர் பிரதிநிதியாக இருந்த சைமன் காசிச்செட்டியை சிலவேளை விதிவிலக்கென எவரும் கூறக்கூடும். ஆனால் செட்டியார் சமூகமும் எப்போதும் வெள்ளாள சாதிக்கு நிகராகவே இலங்கையின் சாதிய அமைப்பில் மதிக்கப்படுகிறது.

முன்னர் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பிரதிநிதியாக ஒருவரே இருந்தார். முஸ்லிம்களையும் தமிழராகவே கருத்திற்கொண்டிருந்த சமயம் அது. இராமநாதன் இவ்வாறு 28-8-1879 இலிருந்து 15-12-1892 வரை சட்டசபையில் உத்தியோகப் பற்றற்ற தமிழ் பிரதிநிதியாக இருந்தார். பின்னர் அவர் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கிச் இராமநாதன் அரசுத் தலைமை வழக்குரைஞராக (சொலிசிட்டர் ஜெனரல்) 1892 சேர் பொன்னம்பலம் பதவியேற்றமையால் அவர் வகித்து வந்த சட்டசபை உறுப்பினர் பதவி வெற்றிடமாது. அவருடைய இடத்தில் அவருடைய சகோதரர் பொன் குமாரசுவாமி பரிந்துரைக்கப்பட்டு 4-2-1893 அன்று உத்தியோகப் பற்றற்ற பிரதிநிதியாகச் சட்டசபையில் நியமனம் பெற்றார். இந்த நியமனம் ஆர்தர் ஏலிபேங் ஹெவ்லொக் (Arthur Elibank Havelock) அவர்களால் வழங்கப்பட்டது. அவரையடுத்து பின்னர் ஆளுநராக வந்தவர் தான் ரிஜ்வே.

யார் இந்த ரிஜ்வே?

ஆளுநர் ஆதர் ஹவலொக் (Governor Sir Joseph West Ridgeway) அவர்களுக்குப் பின் இலங்கைக்கு ஆளுநராக வந்தவர் சேர் ஜோசப் வெஸ்ற் றிஜ்வே. இவர் இராணுவத்தில் பணியாற்றியதோடு ரசியாவில் பீற்றர்ஸ் பேக் அரண்மனையில் ஜார் மன்னன் காலத்தில் பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் சென்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஒருவர். ஆபிரிக்காவில் மொறக்கோவிலே சுல்தானின் அரண்மனையில் ஸ்தானிகராகவும் பணியாற்றிய அனுபவமுடையவர். இலங்கைக்கான ஆளுநர் பதவியை விரும்பிக் கேட்டுப் பெற்று இலங்கை வந்தவர். அதற்கு முன்னர் இந்தியாவில் அவர் பணியாற்றிய காலத்தில் இலங்கையைப்பற்றி அவர் அறிந்திருந்தார். இலங்கையை விட்டுப்போன பழைய ஆளுநர்களிடமும் இலங்கையைப் பற்றிய பல தகவல்களைக் கேட்டு முன்னறிவு பெற்று இலங்கை வந்தார்.

ரிஜ்வே 1895 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வந்து இலங்கையைச் சுற்றிப் பார்த்து இங்குள்ளவர்களோடு மிக நெருங்கி உரையாடி நேரனுபவத்தைப் பெற்றார். இவர் காய்தல் உவத்தல் இன்றி இலங்கை வாழ்மக்களை இன மத மொழி வேறுபாடு கருதாமல் இயங்கினார் என்பார்கள். இவருக்கு முன்னிருந்த ஆளுநர் நிதி நிலைமையை நல்லமுறையில் விட்டுச் சென்றமையால் இலங்கையின் பல அபிவிருத்தி வேலைகளை இவரால் ஆரம்பிக்கக் கூடியதாயிருந்தது. தேயிலைச் செய்கை, புகையிரதப் பாதை, வீதிகளை அமைத்தல், சுகாதார சேவை புனரமைப்பு, கல்வி, அளவையாளர் அலுவலகப் புனரமைப்பு என்பன சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டன.

எண்ணற்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்ட காலம் அது. கனிப்பொருளாராய்ச்சித் துறையின் மேலதிகாரியாக ஆனந்த குமாரசுவாமியின் அரியசேவை இலங்கைக்குக் கிடைத்த காலமும் இதுவேயாகும்.

கொழும்புத் துறைமுக அபிவிருத்தி மேற்கொள்ளும் போது அதற்காக பிரித்தானிய அரசாங்கமும் அதன் செலவில் அரைப் பங்கை செலவிட உடன்பட்டது. றிஜ்வே காலத்தில் போக்குவரத்துத் துறையில் துரித முன்னேற்றங்கள் நடைபெற்றன. மின்சாரத்தில் ஓடிய' 'ட்ராம் வண்டி' போக்குவரத்து  சேவை இவர் காலத்திலேதான் ஆரம்பிக்கப்படது. இலங்கையில் முதன் முதலாக மோட்டார் வண்டி இவர் காலத்திலேயே இறக்குமதியாயிற்று.

இலங்கைப் பிரதமராயிருந்த S. W. R. D அவர்கள் பிறந்த காலமும் இதுவே. அக்காலத்திலே முதலியார் உத்தியோகம் வகித்த பண்டாரநாயக்கவின் தந்தையார் தம்முடைய பிள்ளைக்குப் பெயரிட்டபோது ஆளுனரை அவர்களைக் கௌரவிக்குமுகமாகத் தன் மகனின் பெயரில் றிஜ்வேயின் பெயரையும் சேர்த்தே சொலமன் வெஸ்ற் றிச்வே டயஸ் பண்டாரநாயக்க என பெயர் சூட்டினார். 

இன்று இலங்கைப் பிரதமரின் உத்தியோக வாசஸ்தலமாக விளங்கும் அலரி மாளிகை கட்டடமும் ரிஜ்வே காலத்திலே தான் அரசாங்கத்தால் விலைக்கு வாங்கப்பட்டது.

அன்று பொதுக்காணிகள் பல தனவந்தர்களாலும், அதிகாரிகளாலும் கள்ளத் தனமாகக் காடு வெட்டுதலும், காட்டு நிலத்தைச் சுவீகரித்தலும் பல காலமாக நடைபெற்று வந்தன. ஆகவே 1840 ஆம் ஆண்டில் காடுகளும், வெறும் தரைகளும், ஐந்து ஆண்டுகளுக்குக் குறைந்த ஆளுரிமை நிலங்களும் அரசாங்க நிலமாகக் கணிக்கப்படும் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம் ஒரு விசேட உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டு அவர் முன்னிலையில் காணிகளின் உரிமை பதிவு செய்யப்படல் வேண்டும் என்று விதிக்கப்பட்டது. உள் நாட்டில் சுதேசிய நிலங்களை பிரித்தானிய காலனித்துவம் சுவீகரித்துக் கொண்டதாகவே பிரச்சாரப்படுத்தப்பட்டதுடன் இதற்கு எதிராக சுதேசிய கிளர்ச்சிகளும் எழுந்தன. பிரித்தானிய பாராளுமன்றத்திலும் இது குறித்த விவாதங்கள் நிகழ்ந்தன.

ஆனால் ஆளுநர் ரிஜ்வே பின்வாங்கவில்லை "இச்சட்டம் இலங்கை வாழ் மக்களின் சுபீட்சத்துக்காகவே இயற்றப்பட்டது. எதிர்கால சந்ததியினரே இதனால் பயன்பெறுவர் என்றார். இக்காணிகளில் உரிமை கொண்டாடுவோர் ஏதேனும் ஒரு ஆவணத்தையேனும் காட்டி உண்மையை நிலைநாட்டுங்கள் அப்படியானால் காணி உங்களுடையதே என்று நிலைமையைத் தெளிவுபடுத்தினார். இன்னொரு வகையில் இச்சட்டத்தின் மூலம் பல நிலங்களை கோப்பிப் பயிற்செய்கைக்காக ஒதுக்க முடிந்ததுடன் இங்கு  பணியாற்ற வந்த இந்தியத்தமிழர்கள் குடியிருப்பதற்கும் வழிவகுத்தது. இதனால் இந்தியத் தமிழர்களுக்கு நிலங்களை தாரைவார்த்தவர் ரிஜ்வே என்கிற குற்றச்சாட்டு சிங்களவர் மத்தியில் தோன்றியதையும் நாம் காண முடிகிறது.

ஆளுனர் ரிஜ்வேக்கு எதிரான சுதேசிய எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கிய காலத்தில் அவரின் நிர்வாக போக்கை எதிர்த்து முரண்பட்டவர்களில் பொன் குமாரசுவாமியும் ஒருவர். ஆளுநரின் போக்கை வழிப்பறிக்காரனின் போக்கு எனக் கூறிக் கண்டித்தார். இந்த நிலைமையின் காரணமாக பொன் குமாரசுவாமியின் பதவிக்காலம் முடிந்து பதவி நீடிப்பு செய்வதற்கான காலம் வந்த போது குமாரசுவாமியை மறுமுறை நியமிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் ஆளுநர்.

ஆனால் தமிழர் பிரதிநிதியாக பொன் குமாரசுவாமியையே மறுபடியும் ஆளுநர் நியமிக்க வேண்டும் எனக்கோரி றொக்வுட் தலைமையில் மாபெருங் கூட்டங் கூட்டப்பட்டது. ஒரு சிலர் பிறிட்டோவின் மருமகனான சுவாமிநாதனையே நியமித்தல் வேண்டும் எனக்கோரினர். 

பிறிட்டோ x இராமநாதன் போட்டியில் ஆறுமுக நாவலர்

இராமநாதன் முதற்தடைவையாக 1879இல் சட்டசபைக்கு நியமனம் பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த ஆசனத்துக்காகப் போட்டியிட்டவர் தான் பிறிட்டோ. செல்வாக்குள்ள பிறிட்டோவை யாழ் – தமிழ் – கிறிஸ்தவ - செட்டி சமூகத்தை சேர்ந்த பிறிட்டோவை தோற்கடித்து அந்த இடத்துக்கு யாழ் – தமிழ் – சைவ – வேளாள பின்னணியைக் கொண்டபொன்னம்பலம் இராமநாதனை கொண்டுவருவதற்காக கடும் பாடுபட்டவர் ஆறுமுக நாவலர். இத்தனைக்கும் யாழ் மானிப்பாயைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான ஈ.நன்னித்தம்பியின் மகள்களைத் தான் இராமநாதனும் பிறிற்ரோவும் திருமணம் முடித்தார்கள்.

பிரபாகரனின் கொள்ளுப்பாட்டன் வல்வெட்டித்துறை திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை பிறிற்ரோவை அரசியலுக்கு வருவதை ஆதரித்தார். அதைத் தோற்கடித்து ஒரு சைவ வெள்ளாளனைத் தான் கொண்டுவரவேண்டும் என்று  ஆறுமுக நாவலர் தன் முழு முயற்சியுடன் இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சி நிகழாமல் இருந்திருந்தால் இலங்கையின் வரலாறு வேறொரு அரசியல் பக்கத்தை திரும்பியிருக்கக் கூடும். 

சாதிய ஏகபோக பிரதிநிதித்துவத்தை முடிவுக்கு கொண்டு வந்த ரிஜ்வே

இறுதியில் 1898 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஆளுநர் ரிஜ்வே றொக்வுட்டை இரகசியமாகத் தன் அலுவலகத்துக்கு அழைத்து அவர் மனதை மாற்றி அவரையே தமிழர் பிரதிநிதியாக நியமித்தார்.

முதலியார் பொன் குமாரசுவாமி 1898 வரை தமிழ்ப் பிரதிநிதியாக பதவி வகித்து வந்த நிலையில் அந்த இடத்துக்கு 1898 மார்ச் 14 அன்று  அன்றைய பிரித்தானிய ஆளுநர் சேர் ஜோசெப் வெஸ்ட் ரிஜ்வே  ரொக்வூட் அவர்களை இலங்கைச் சட்டசபையில் தமிழர் பிரதிநிதியாக 13-3-1898 முதல் 13-3-1903 வரை ஐந்து வருடங்களுக்கு நியமித்தார். இதன் மூலம் குடும்ப – ஆதிக்க சாதிய ஏகபோக நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்தார் ஆளுநர் ரிஜ்வே.  பின்னர் 15-3-1903 இல் ரொக்வூட் மறுபடியும் நியமனம் பெற்றார்.

பொன் இராமநாதன் என்ன சொல்கிறார்?

மூத்த சகோதரனுக்கு ஊடாக தனது சட்டசபை உறுப்பினர் பதவி பேணப்பட்டுக்கொண்டிருப்பதாக திருப்திபட்டுக்கொண்டிருந்த இராமநாதனுக்கு ரொக்வூட்டின் நியமனம் ஏமாற்றத்தையே கொடுத்திருந்தது. பிற் காலத்தில் பொன்னம்பலம் இராமநாதனின் சுயசரிதை நூலை எழுதிய எம்.வைத்திலிங்கம் தனது நூலில் இதைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். முதலியார் குமாரசுவாமியின் பதவியை நீடிப்பதற்குப்  பதிலாக ரொக்வூட்டை ஆளுநர் நியமித்தது பற்றி இராமநாதன் எந்தளவு விசனப்பட்டார் என்பதை இப்படிப் பதிவு செய்கிறார்.

‘நாட்டில் அனைத்து தமிழ் பேசும் மக்களின் பேராதரவு தமக்கு இருந்தபோதிலும், தனது சகோதரர் குமாரசுவாமி இரண்டாவது முறையாக சட்டவாக்க சபையில் உறுப்பினராவதற்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்ட கதையை இராமநாதன் இவ்வாறு விவரிக்கிறார்.’

"1892-ல் மற்றுமொரு ஆளுநர் மக்களின் வெறுப்புக்கு ஆளானார். தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வலுவான உறுப்பினர் சபையில் அங்கம் வகித்து வந்தார். இலங்கை அரசாங்கத்தின் சில நிர்வாகமுறைகளையும் சட்டமன்ற நடவடிக்கைகளையும் அவர் கண்டித்து வந்தார். அவர் எனது மூத்த சகோதரர். அவரின் பதவிக்காலம் முடிவடைந்த போது குமாரசுவாமிக்கு ஈடான தகுதிவாய்ந்தவர் யார், போட்டியிடக்கூடிய இன்னொருவர் யார் என்பது குறித்து தமிழ் மக்கள் கொழும்பு நகர மண்டபத்தில் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்தினர். ஐரோப்பிய சமூகம் முழுவதிலும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தமிழரான காலஞ்சென்ற டொக்டர் ரொக்வூட் அக்கூட்டத்தின் தலைவராக இருந்தார். சட்ட மேலவையில் ஐந்தாண்டு காலம் சுதந்திரமாகச் செயல்பட்ட குமாரசுவாமியின் பெயரை மீண்டும் நியமனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அத்தலைவரே ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் ஆளுநர் ரிட்ஜ்வே அதையும் மீறி இந்த அசாதாரண நடவடிக்கையை எடுத்தார். குமாரசுவாமி மீண்டும் சட்டசபையில் அங்கம் வகிப்பதை ஆளுநர் விரும்பவில்லை. எனவே அவர் டொக்டர் ரொக்வூட்டுக்கு ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதி, அந்த ஆசனத்தை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார். குமாரசுவாமி அல்லது கூட்டத்தில் கலந்து கொண்ட வேறு எவருடனும் டொக்டர் ரொக்வூட் தொடர்பு கொள்ளாமல், இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். எனவே, நியமன முறை நடைமுறையில் இருக்கும்போது, சரியான நேரத்தில் சரியான முடிவை ஆளுநர் எடுப்பார் என்று நம்பிக்கை வைக்க முடியாது என்பதை உணரமுடிந்தது.” 

ஆனால் 1909 ஆம் ஆண்டு வெளிவந்த Jaffna College Miscellany சஞ்சிகையில் ரொக்வூட்டின் நியமனம் குறித்து இராமநாதன் வாழ்த்தினார் என்று ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

"டொக்டர் ரொக்வூட் போன்று சகல இனங்களையும் வர்க்கங்களையும் சேர்ந்த மனிதர்களின் மதிப்பையும் போற்றுதலையும், பல சமூகங்களின் நன்மதிப்பையும் போற்றுதலையும் பெற்றவர் எவரையும் தமிழ் சமூகம் நினைத்துப் பார்க்க முடியாது."

என்று தனது சகோதரர் குமாரசுவாமியின் மறுதேர்வுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆற்றிய உரையில் இராமநாதன் குறிப்பிட்டார் என்று பதிவு செய்திருக்கிறது. 

செல்வாக்குள்ள குடும்பத்தை தொடரவிடாமல் செய்த இந்த நியமனம் குறித்து காலனித்துவ செயலகம் திருப்தியுறவில்லை என ஆளுநர் ஸ்டப்ஸ் பிற்காலத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையை (CO. 723 of 29 March, 1909, Stubbs minute) ஆதாரம் காட்டுகிறார் எம்.யு.டி.சில்வா (M. U. de Silva).  சில்வா எழுதிய 19ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் பிரித்தானியர் காலத்து சுதேசிய நியமனங்களில் சாதியத்தின்  வகிபாகம் கட்டுரையில் இதைப் பற்றிய பல விபரங்களைக் காணலாம்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாண சாதிய அமைப்பில் அடிமைச் சாதியாக நடத்தப்பட்ட கோவியர் சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர் ரொக்வூட் என்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

ரொக்வூட்

வில்லியம் கபிரியேல் ரொக்வூட் 1843 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள அலவெட்டியில் பிறந்தார். இவர் காங்கேசந்துறை எச்.எம்.சுங்கத் திணைக்களத்தைச் சப்-கலெக்டரான சின்னத்தம்பி எலிசா றொக்வூட் என்பவரின் இரண்டாவது மகனாவார். 

யாழ்ப்பாணம் வேம்படி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர், சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் கற்று அங்கு மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியைப் பெற்று அங்கு அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இலங்கை திரும்பிய ரொக்வூட் புத்தளத்தில் வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1866/67 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கொலரா பரவிய காலத்தில் இவர் சிறப்புப் பணியில் பணியாற்றினார். தனது மருத்துவப் பணிகளுக்காக மீண்டும் அவர் புத்தளம் திரும்பியபோதும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் 1875 ஆம் ஆண்டு கொலரா தொற்று வேகமாக பரவிய போது மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி கொலரா ஒழிப்பு நடவடிக்கையிலும், மருத்துவ நிலையங்களில் பலரைக் காப்பாற்றும் பணியிலும் தீவிரமானார்.  பல மருத்துவ சிகிச்சை நிலையங்களில் அங்கே பணியாற்றிய பின்னர் 1878 இல் கொழும்பு பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டார். பின்னர் உயர் தகைமைகளைப் பெற்று இலங்கை மருத்துவக் கல்லூரியில் சத்திர சிகிச்சை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

அவரது காலத்தின் ஒரு திறமையானவராகவும், பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருத்துவராகவும் பின்னர் ஒரு திறமையான அரசியல்வாதி என்றும் புகழ்பெற்ற அவர் அக்காலத்தின் ஒரு சிறந்த ஆளுமையாக அறியப்பட்டு இருந்தார்.

ரொக்வூட் தனது பதவிக் காலத்தில் ஒரு திறமையான உறுப்பினராக செயல்பட்டதோடு வடக்கிற்கும் சிலாபத்திற்கும் புகையிரத சேவைக்காக கடுமையாக போராடினார். இறுதியில் வடக்குக்கான இரயில் பாதையை அமைத்ததன் பின்னணியின் பாரிய பங்கு ரொக்வூட்டை சாரும். கொழும்பு புத்தளம் புதிய இரயில் பாதையை அமைப்பதற்காக 1903ஆம் ஆண்டு ஆளுநர் ரிஜ்வே அமைத்த ஐவர் கொண்ட ஆணைக்குழுவில் ரொக்வூட்டும் ஒருவர். அரசாங்க வரிவிதிப்பு ஆணைக்குழுவிலும் ஆணையாளர்களில் ஒருவராக அவர் அங்கம் வகித்தார். இன்னும் அவர் பங்களித்த அபிவிருத்திக் குழுக்கள் பற்றிய விபரங்களை அன்று வெளியான பெர்குசன் டிரக்டரில் காண முடிகிறது. 

இவர்களின் மகள்களில் ஒருவர் வழக்கறிஞர் சரவணமுத்துவுக்கும், மற்றொருவர் பட்டயக் கணக்காளரான எஸ்.குமாரசுவாமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.

ரொக்வூட்டின் நினைவாக கொழும்பில் உள்ள இலங்கையின் பெரிய ஆஸ்பத்திரியில் அன்றைய ஆளுநர் சேர் ஹென்றி மெக்கலம் அவர்களால் 16.04.1912 அன்று திறக்கப்பட்ட மண்டபத்துக்கு “ரொக்வூட் மண்டபம்” என்று பெயரிட்டார்.  அவ் ஆஸ்பத்திரியில் தலைமை சத்திரசிகிச்சை நிபுணராக பதவியேற்று அங்கே சுமார் 20 வருடங்களாக கடமையாற்றியிருந்தார் ரொக்வூட்.

அவர் ஒரு மருத்துவர் மட்டுமன்றி சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்று ஐரோப்பியர் மத்தியில் நற்பெயரைக் கொண்டிருந்தார். இரண்டு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களின் இரண்டு குறிப்பிடத்தக்க கூற்றுகள் இங்கே நினைவு கூறத்தக்கவை. டொக்டர் ஜொனாதன் ஹட்சின்சன் (Dr. Jonathan Hutchinson) அவரை கிழக்கின் மிகப் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்று அழைத்தார். வெப்ப மண்டல நோய்களில் வல்லுனரான சேர் ஃபிரடெரிக் ட்ரீவ்ஸ் (Sir Frederick Treves), ஒரு கடினமான சிகிச்சைகளில் குழப்பமடையும்போது, “இலங்கையைச் சேர்ந்த டொக்டர் ரொக்வூட் இங்கே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று வியந்ததாகக் கூறப்படுகிறது. மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து சென்ற ரொக்வூட் மன்னரின் உடல்நலக்குறைவு குறித்து ஆலோசனை வழங்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர் இரண்டு முறை இங்கிலாந்துக்குச் சென்றார். அப்பயணத்தின் போது ரோயல் கொலேஜ் ஒஃப் சர்ஜன்ஸ், ரோயல் கொலேஜ் ஒஃப் ஃபிஷியன்ஸ் ஆகிய இரு ராஜரீக அமைப்பின் உறுப்பினராகவும், ஆனார்.

1904 ஆம் ஆண்டு அதாவது சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி புலமைப்பரிசில் நிதியம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி தொடர்பான ஒரு சட்டமூலத்தை 1902ஆம் ஆண்டு அவர் சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்ற வைத்த தகவலையும் காண முடிகிறது. 

அதுபோல இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியை ஆரம்பிப்பதற்காக நிதி திரட்டியபோது அதற்கு நிதி வழங்கிய முதல் எட்டு தனவந்தர்களில் ரோக்வூட்டும் ஒருவர்.  ரொக்வூட்டின் மறைவுக்குப் பின்னர் அவரின் பெயரால் அவரின் குடும்பத்தினர் பல்வேறு கல்வி, மருத்துவ உதவிகளை புரிந்து வந்திருக்கிறார்கள் என்பதை பல பதிவுகளில் இருந்து இனங்கான முடிகிறது. இதைப் பற்றிய விபரங்கள் 1900களில் வெளியான யாழ்ப்பாண அமெரிக்க மிஷன் ஆங்கில அறிக்கைகளில் நிறைய காணப்படுகின்றன.

இதேவேளை ரொக்வூட்டுக்கு செல்வத்தில் குறைவு இருக்கவில்லை. அவர் ஒரு தோட்ட உரிமையாளராகவும் இருந்தார். குறிப்பாக இலங்கையில் 1917 ஆம் ஆண்டளவில் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் தென்னங் காணிகளை உரிமையாகக் கொண்ட இலங்கையின் அன்றைய மிகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் ரொக்வூட் குடும்பத்தினரின் பெயரும் காணப்படுகிறது. 

பின்னர் 1903 யூலை 9 அன்று ரொக்வூட்டின் பதவிக்காலம் நீடிக்கப்பட்ட காலத்தில் அவர் இங்கிலாந்துக்குப் பயணப்பட்ட போது  அந்த இடத்துக்கு தற்காலிக உறுப்பினராக 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று டபிள்யு.என்.அசெரப்பா நியமிக்கப்பட்டார். இறுதியில் 1906 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரொக்வூட் தனது உடல்நிலை காரணமாக சட்டசபையில் இராஜினாமா செய்துகொண்டார் (John H. Martyn). அவரின் வெற்றிடத்துக்கு பெப்ரவரி 4 அன்று திரும்பவும் நியமிக்கப்பட்டவர் இன்னொரு வெள்ளாளரான ஏ.கனகசபை.

ரொக்வூட் 1906 இல் ஏற்பட்ட பக்கவாத நோயின் காரணமாக மருத்துவத் தொழிலுக்கும், சமூக, அரசியல் பணிகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டியதாயிற்று.  இறுதியில் 1909 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று தனது 66வது வயதில்  காலமானார்.

கலாநிதி டபிள்யு.ஜி.ரொக்வூட் யாழ்ப்பாணம், மூலாயைச் சேர்ந்த சின்ன முதலியார் கதிரவேற்பிள்ளையின் மகள் முத்தம்மாவை (1857-1925)  மணந்தார்.  அவர் தனது கணவரின் அனைத்து சமூக நடவடிக்கைகளிலும் உதவியதுடன் நன்கு அறியப்பட்ட ஆளுமையாக இருந்தார். அவர் 1925 ஆகஸ்ட் 29 அன்று காலமானார்.


இராமநாத வெள்ளாளியத்தைக் கடக்க...

இலங்கையின் தமிழர் அரசியல் வரலாற்றில் கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக ஏகபோகமாக செல்வாக்கு செலுத்தி வந்த குடும்பம் குமாரசுவாமி குடும்பம் ஆகும். அந்தப் பரம்பரையில் மோசமான வைதீக அரசியலை பேணியவர் சேர்.பொன் இராமநாதன். 

அவரது இறுதிக் காலங்களில் ஒரு வைதீக – பழமைவாத - யாழ் - சைவ - உயர் வேளாள – படித்த – மேட்டுக்குடி – ஆணாதிக்கத்தனத்தின் பிரதிநிதியாக ஆன போதும் அவரின் ஆரம்பகால பாத்திரம் அவ்வாறு இருக்கவில்லை. 1921 இல் பிரித்தானிய அரசின் சேர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட போது அவரது வயது 70. சுதேசிகளுக்கு சுதந்திரம் தேவையில்லை, சீர்திருத்தமே போதும் என்கிற சமரச சீர்திருத்தவாதியாகவே இருந்தார். ஆறுமுகநாவலர் மற்றும் சைவ மறுமலர்ச்சி என்பவற்றின் உற்பத்தியே பொன்னம்பலம் இராமநாதன் என்றால் அது மிகையாகாது. 1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு முதல் தடவை நியமிக்கப்பட்ட போது அவரது வயது 28 மட்டுமே. அதிலிருந்து சரியாக 50 ஆண்டுகாலம் அதாவது அவர் இறக்கும் காலம் வரை அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார். 

அதுபோல அரசியல் அதிகாரம் சாதாரண பொதுமக்களுக்கு சென்றடைவதை அவர் பிற்காலத்தில் விரும்பியிருக்கவில்லை. “படித்த - உயர் வர்க்க - உயர்சாதி – ஆண்களிடம்” மட்டுமே அரசியல் அதிகாரம் இருக்கவேண்டும் என்று விரும்பினார். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு டொனமூர் ஆணைக்குழு விசாரணைக் காலத்தில் அவர் வெளிப்படையாகவே சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார்.

“நீங்கள் எங்கள் பெண்களை அவர் பாட்டில் இருக்க விடுங்கள். கடவுளின் விருப்பப்படி அவர்கள் இந்த உலகத்தில் கீழானவர்களாக உள்ளமை எதற்காக என்பது பற்றி நீங்கள் அறிய நியாயமில்லை. பெண்களின் முழு வாழ்க்கையும் அவர்களது கவனமும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதற்கப்பால் ஒரு உலகமில்லை. வீட்டுப் பொறுப்பிற்கப்பால் அவர்கள் செல்வதற்கு இடம் கொடுக்க வேண்டாம்” என்றார்.

 (சாட்சியம் இலக்கம் 101, 20.12.1927 சாட்சியமளித்தபோது)

இதே கருத்தை அவர் அரசாங்க சபை விவாதத்திலும் வெளியிட்டார்.

“ஏன் இந்த நாறிப்போன தத்துவத்தை எமக்குப் போதிக்கிறார்கள். எதற்காக எமது தொண்டைக்குள் இவற்றைத் திணிக்கிறார்கள்”

என்று 1928 நவம்பர் 8 ஆம் திகதி டொனமூர் யாப்பு பற்றிய விவாதத்தின் போது உரையாற்றினார். அந்த டொனமூர் திட்டமும், சர்வஜன வாக்குரிமையும் நிறைவேற்றப்பட்டபோது அவர் உயிருடன் இருக்கவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் அதாவது 1930 இல் அவர் இறந்துபோனார்.

இராமநாதன் எழுதிய ஆய்வு நூல்களும், கட்டுரைகளும் இன்றும் பல ஆய்வாளர்களால் மெச்சப்படுகின்ற போதும் மறுபுறம் அவற்றில் சில சர்ச்சைகளையும் உண்டுபண்ணியிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது “இலங்கைச் சோனகர் இன வரலாறு” (Ethnology of the moors) என்று அவர் எழுதிய கட்டுரை. இதனை ஆய்வுக் கட்டுரையாக அவர் 1885 இல் இலங்கைச் சட்டவாக்க சபையிலும் 1888 இல் அரச ஆசிய கழகம் - இலங்கைக் கிளை (Royal Asiatic society) முன்னிலையிலும் இராமநாதன் பகிரங்கமாக எடுத்துரைத்தார். இலங்கை வாழ் சோனகர்கள் இனத்தால் தமிழர்கள் எனவும் மதத்தால் முகம்மதியர் எனவும் அவர் அதில் விளக்கியிருந்தார். கிழக்கு வால் முஸ்லிம்களின் தோற்றமானது அங்கிருந்த “தாழ்ந்த” சாதியினரை திருமணம் முடித்த வர்த்தகர்களால் உருவானது என்று தனது கட்டுரையில் வன்மம் கக்கினார். ஆறுமுக நாவலர் பாசறையில் அரசியலுக்கு வந்த ஒருவரிடம் இந்த வன்மம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த கருத்துக்கள் அப்போது பெரும் சர்ச்சைகளை உண்டுபண்ணியிருந்தது. முஸ்லிம்கள் பற்றிய அவரது தரவுகள் குறித்து முஸ்லிம் தரப்பில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி, சைவ மறுமலர்ச்சி, இஸ்லாமிய மறுமலர்ச்சி என்பன ஏறத்தாள இதே காலப்பகுதியில் தான் நிகழ்ந்தன. இராமநாதனின் கருத்துக்களுக்கு வினையாற்றக்கூடிய முஸ்லிம் புலமையாளர்கள் அப்போது வளர்ந்திருந்தனர்.

1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.

1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன். இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டார். அந்த ஆண்டு தான் அவர் மறைந்தார்.

இத்தகைய ஆதிக்க வைதீக மனநிலையைக் கொண்டிருந்த இராமநாதன் வெள்ளாளர் அல்லாத ஒருவர் அரசியல் அதிகாரத்துக்கு வருவதை எவ்வாறு தாங்கியிருப்பார். அதுவும் தனது வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட தனது மூத்த சகோதரரை நீக்கி விட்டு அந்த இடத்துக்கு ஒரு அடிமைச் சாதி (கோவிய) நியமனம் பெறுவதை எப்படி பொறுப்பார். தனது உயர் வர்க்க, உயர் சாதிய செல்வாக்குக்கு ஏற்பட்ட களங்கமாகவே அவர் எடுத்துக் கொண்டார்.

ரொக்வூட் என்னதான் கல்வி கற்றவராகவும், வர்க்கத்தால் இராமநாதனுக்கு அத்தனை குறைவில்லாதவராகவும் இருந்த போதும் தனது அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு சாதிய ரீதியில் நெருக்கடியையும், அசௌகரியத்தையும் அனுபவிக்கவே செய்தார். ஆளுநர் ரிஜ்வேயின் அனுசரணையும் கிடையாது விட்டால் இன்னும் அப்படி ஒரு வெள்ளாளரல்லாத ஒருவரின் பிரதிநிதித்துவத்துக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் எத்தனை காலம் காத்திருக்க நேரிட்டிருக்குமோ என்னவோ!

தமிழில் ரொக்வூட்டைப் பற்றி இதுவரை ஒரு பந்தி எழுத்து கூட வெளிவராததன் அரசியலை நாம் உணர வேண்டும். இந்த அரசியல் நீக்கத்தின் மறைமுக சாதிய ஆதிக்கப் பின்புலத்தை நாம் அறிதல் வேண்டும். யாழ்ப்பாணத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இருந்து ரொக்வூட் எவ்வாறு காணாமலாக்கபட்டார்? ஏன் மறைக்கப்பட்டார்? என்பதற்கான காரணங்களை அறிய ஆழமான அறிவெல்லாம் அவசியப்படாது. யாழ் சைவ, வேளாள மையவாதத்தை அறிந்த எந்தப் பொதுப்புத்திக்கும் எளிமையாக அது விளங்கும். ரொக்வூட் பற்றி தமிழில் எங்கும் எதுவித பதிவும் இராததன் காரணம் யாழ் மையவாத சாதிய இருட்டடிப்பைத் தவிர வேறெதை நாம் குற்றம் கூற இயலும்.

உசாத்துணை:
 1. என்.சரவணன், கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி: இலங்கைத் தமிழர்களின் முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதி, தினக்குரல், 12, ஜனவரி, 2020
 2. Lakshmi Kiran Daniel, PRIVILEGE AND POLICY: THE INDIGENOUS ELITE AND THE COLONIAL EDUCATION SYSTEM IN CEYLON, 1912-1948, Thesis submitted for the Degree of Doctor of Philosophy, Faculty of Modern History, Michaelmas Term, 1992
 3. K. M. Desilva, Universal Franchise, 1931-1981 The Sri Lankan Experience, Department of Information Ministry of State Democratic Socialist Republic of Sri Lanka, July, 1981
 4. க. சி. குலரத்தினம்,  நோத் முதல் கோபல்லவா வரை - இலங்கையின் அண்மைக் கால (1798-1962) அரசியல் வரலாறு, முதலாம் பாகம் (1798-1947), ஆசீர்வாதம் அச்சகம் - புத்தகசாலை. யாழ்ப்பாணம். 1966.
 5. என்.சரவணன், இராமநாதனை நாவலர் அரசியலுக்கு கொண்டுவந்த கதை -, காக்கைச் சிறகினிலே, ஏப்ரல், 2020
 6. John H. Martyn, Martyn's Notes on Jaffna: Chronological, Historical, Biographical, Asian Educational Services, 2003
 7. Roland Wenzlhuemer, From Coffee to Tea Cultivation in Ceylon, 1880–1900 An Economic and Social History Leiden • Boston, Martinus Nijhoff Publishers and VSP 2008.
 8. M.Vythilingam, The life of Sor Ponnambalam Ramanathan, Ramanathan Commemoration Society, Colombo, 1971
 9. Jaffna College MISCELLANY Published by the Faculty and Students of Jaffna College, Vaddukkoddai, Ceylon. Vol. XIX. No. 3. July 1909
 10. M. U. de Silva, Caste Consideration In Native Appointments — A Review Of British Administrative Policy In Sri Lanka During The Nineteenth Century, Journal of the Royal Asiatic Society of Sri Lanka, Vol. 51 (2005), 
 11. S. A. Meegama, Famine, Fevers and Fear The State and Disease in British Colonial Sri Lanka,  Sridevi Publication, Dehiwela, 2012
 12. Ferguson’s Ceylon Directory, 1904
 13. 1959 - Ferguson's Ceylon Directory, Associated Newspapers of Ceylon Limited, 1959
 14. Papers Laid before, The Legislative Council Of Ceylon During The Session Of 1901, Printed By H,. C. Cottle, Acting Government Printer. Ceylon, 1902
 15. The University Of Ceylon at Peradeniya, The Ceylon University Pres, 1954
 16. K. M. De Silva, History Of Ceylon (Volume Three), Printed for The University of Ceylon, Peradeniya, 1973
 17. Obituary, William Gabriel Rockwood, Published 24 April 1909, 1909;1:1034
 18. Arnold Wright, Twentieth Century Impressions of Ceylon: Its History, People, Commerce, Industries, and Resources, Asian Educational Services, 1999
 19. என்.சரவணன், 1915: கண்டி கலவரம், கிழக்கு பதிப்பகம், 2017
நன்றி - காக்கைச் சிறகினிலே யூன் 2024
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates