நடேசய்யர் (14.01.1887 - 07.11.1947) முதன் முதலில் 1919 இல் இலங்கை வந்தார். இன்னும் ஓரிரு வருடங்களில் நூற்றாண்டைக் கிட்டுகிறது.
இலங்கை வந்த போது இந்திய வம்சாவளியினர் செரிவாக வாழ்ந்த பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சென்று பணி புரிந்தது மட்டுமன்றி அவர் இலங்கையில் தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை திட்டமிட்டபோது அவர் அதிகமாக வாழ்ந்தது பெருந்தோட்ட சூழலில் அல்ல. அவர் பெருந்தோட்டங்களுக்கு வெளியில் அதிகமான இந்திய வம்சாவளியினர் வாழ்ந்த கொழும்பில் இயங்கினார். அங்கு வாழ்ந்த பல இந்திய வம்சாவழித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். தலைமை கொடுத்தார்.
சேர் பொன் அருணாச்சலம், எ.ஈ.குணசிங்க போன்ற தலைவர்களுடன் தொழிற்சங்கப் பணியாற்றினார். கொழும்பிலேயே அவரின் அலுவலகத்தையும் அமைத்துக் கொண்டார். அங்கேயே தனது தொழிற்சங்கங்களையும் அவரின் பத்திரிகைகளையும் கூட நடத்தினார். தலைநகர் என்பதால் கொழும்பிலேயே உத்தியோகபூர்வமான பணிகளில் அவர் ஈடுபட வாய்ப்பானது.
இலங்கையின் முதலாவது தினசரி பத்திரிகை “தேசநேசன்” ஆகும். அப்பத்திரிகையை அவர் 1921 இல் ஆரம்பித்தது கொழும்பில் தான்.
நடேசய்யர் அதிகமாக இந்திய செய்திகளை சுதந்திரனில் எழுதியதற்கு காரணம் அவர் ஏற்கனவே நடத்திய பத்திரிகைகளிலும் இந்திய செய்திகளை அதிகமாக வெளியிட்டு வந்த அனுபவமும் காரணமாக இருக்கலாம்.
சுதந்திரனின் முதலாவது ஆசிரியர்
1924ஆம் ஆண்டு அவர் சட்டநிரூபன சபைக்குத் தெரிவாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 3 அன்று அவர் “தேசபக்தன்” பத்திரிகையை ஆரம்பித்தார். அரசியல் கருத்துப் பரப்புரைக்கு ஊடகங்களின் செல்வாக்கு எத்தகையது என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார். தேசபக்தன் பத்திரிகையை 1929 இல் தினசரியாக வெளியிடத் தொடங்கினார். ஆனால் பெரு மூலதனத்துடன் வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளின் வருகையால் 1931 இல் தேசபக்தனை அவர் நிறுத்த வேண்டியதாயிற்று. அவரால் அந்த வர்த்தகப் போட்டியை அப்போது தாக்குப்பிடிக்க முடியவில்லை.
பின்னர் வெளியிட்ட சுதந்திரன் கூட தினசரி பத்திரிகை தான்.
நடேசய்யர் இலங்கை வருமுன் தஞ்சாவூரில் நடத்திய ‘வர்த்தக மித்திரன்’ என்கிற பத்திரிகை அதன் பின்பு அங்கே “சுதந்திரன்” என்று பெயர் மாற்றம் செய்து நடத்தப்பட்டிருக்கிறது. எனவே இலங்கையில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்; தமிழ் மொழியில் ஒரு பத்திரிகையை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டபோது அதற்கான பெயராக “சுதந்திரன்” எனும் பெயரை இடுவதில் கோ.நடேசய்யரின் பரிந்துரை இருந்திருக்கலாம். அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பும் நடேசய்யரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்! சுதந்திரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியர் கோ.நடேசய்யர்.
1947 மே 18 அன்று ‘தோட்டத் தொழிலாளி’ பத்திரிகையை அவர் ஆரம்பித்திருந்த நிலையில் அன்று தமிழ் மக்களின் தலைவர்களாக அறியப்பட்ட தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் புதிய பத்திரிகையொன்றை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினார். அதற்கடுத்த இரண்டே வாரத்தில் அதாவது யூன் முதலாம் திகதியிலிருந்து சுதந்திரன் வெளியானது.
நடேசய்யரே தமது பத்திரிகையை நடத்துவதற்கான சிறந்த அறிஞர் என்று தெரிவு செய்தமை தற்செயல் நிகழ்வல்ல. அரசியல் சமூக பிரக்ஞையும், அரசியல் அனுபவமும், குறிப்பாக பத்திரிகை – எழுத்துத் துறையில் அவருக்கு இருந்த அனுபவத் தேர்ச்சி எல்லாமே அவரைத் தெரிவு செய்வதற்கான பிரதான காரணிகளாக அமைந்தன.
கோ.நடேசய்யர் நடத்திய வர்த்தக மித்திரன், தி சிட்டிஷன், ஃபோர்வர்ட், தேசபக்தன், வீரன், தோட்டத் தொழிலாளி போன்ற பத்திரிகைகளின் வரிசையில் இறுதியாக அவர் ஆரம்பித்து வழிநடத்திய பத்திரிகை தான் “சுதந்திரன்”.
தேர்தல் தோல்விக்கு சுதந்திரன் காரணமா?
1947 பொதுத்தேர்தலுக்கான பரப்புரைக்கு சுதந்திரன் முக்கிய பங்காற்றியது. அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்துகொண்டே பத்திரிகைப் பணியையும் அவர் ஆற்றியிருந்தார். இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் செப்டம்பரில் நடந்திருக்கிறது. 1924 இலிருந்து 1947 வரை 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற பிரதிநிதியாக பணியாற்றிய அவர் சுதந்திரன் பத்திரிகையையும் தோட்டத் தொழிலாளி பத்திரிகையையும் தீவிரமாக நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் 1947 செப்டம்பர் தேர்தலில் மஸ்கெலிய தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை. அவர் அப்போது கொழும்பில் தமிழ் காங்கிரஸ் தரபினரோடு சேர்ந்து பத்திரிகை விடயங்களில் தீவிரமாக உழைக்கத் தொடங்கியதில் தான் போட்டியிட்ட மஸ்கெலிய தொகுதியில் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளையும், சக்தியையும் இழந்தாரா என்கிற சந்தேகம் எழவே செய்கிறது.
நடேசய்யர் 07.11.1947 இலேயே இறந்து விடுகிறார். ஆகவே அவர் சுதந்திரனில் ஆசிரியராக கடமையாற்றியது அந்த ஐந்து மாதங்கள் என்று கணிக்க முடிகிறது.
ஆனால் பிற்காலத்தில் மாதமிருமுறை வெளிவந்த பத்திரிகை எனும்போது சுமார் 98 பத்திரிகைகள் ஆண்டொன்றுக்கு வந்திருக்கின்றன.
நடேசய்யர் தினசரி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த அந்த ஐந்து மாதங்களையும் சேர்த்து பார்த்தால் அவர் சுமார் 150 நாட்களாக வெளிவந்த பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் என்று கணிக்கலாம்.
தட்டாரத் தெருவில் வீடும் அலுவலகமும்
கொழும்பு, தட்டாரத் தெரு 196 ஆம் இலக்க வீடு நடேசய்யரின் முகவரியாகப் பதிவு செய்யப்பட்டிருந்திருக்கிறது. அதே வீட்டில் தான் நோய்வாய்ப்பட்டு அவர் காலமானார். அவரது இறுதிக் கிரியையைகளையும் தந்தை செல்வாவே முன்னின்று நடத்தி வைத்தார். ‘தட்டாரத் தெரு’ என்கிற பெயரே பின்னர் ‘பண்டாரநாயக்க மாவத்தை’ என்று மாற்றப்பட்டது. அதே தெருவின் 194-ஏ என்கிற இலக்கத்தில் இருந்து தான் சுதந்திரன் பத்திரிகையின் அச்சுக்கூடம் இயங்கியது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அந்த அச்சகத்தை வாங்கி சுதந்திரன் அச்சகம் என்று பெயரிட்டு “சுதந்திரன்” பத்திரிகையை இயக்கினார். பிற காலத்தில் சுதந்திரன் பதிப்பகத்தின் ஏராளமான தமிழ் தேசிய நூல்கள் வெளிவந்தன.
தமிழரசுக் கட்சியின் கொழும்பு காரியாலயமாகவும் அது அப்போது இயங்கியது. நடேசய்யரின் “தோட்டத் தொழிலாளி” பத்திரிகையும் சுதந்திரன் அச்சுக் கூடத்திலிருந்தே ஏக காலத்தில் வெளியானது. இவ்விரண்டு பத்திரிகையையும் ஏக காலத்தில் நடத்தி வந்தார்.
அவர் நடத்திய பத்திரிகைகளில் எல்லாம் இந்திய செய்திகள், விமர்சனங்கள், பார்வைகள் கணிசமான அளவு இடம்பெற்றிருக்கும். ஆரம்ப சுதந்திரனிலும் இந்திய செய்திகளின் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் கவனிக்க முடிகிறது. அதேவேளை வழமையான அவரின் பத்திரிகைக்கும் சுதந்திரனுக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகிறது. சுதந்திரம் கிடப்பதற்கு முன்னரே தமிழர்களும், இந்திய வம்சாவளியினரும் எந்தளவு பாரபட்சங்களுக்கும், அநீதிகளுக்கும் இலக்காகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கச்சிதமாகப் பதிவு செய்த வேறு தமிழ் பத்திரிகைகள் இக்காலத்தில் இருக்கவில்லை. அதில் பதிவாகியுள்ள செய்திகளும், விபரங்களும் கூடவே நடேசய்யர் எழுதியிருக்கிற ஆசிரியர் தலையங்கங்களும் இதற்கு சிறந்த ஆதாரங்கள்.
இன்னும் சொல்லப்போனால் அன்றைய பெரும்போக்குப் பத்திரிகைகளின் மத்தியில் அதுவொரு மாற்றுப் பத்திரிகையாக இருந்தது. அதன் செய்தித் தலைப்புக்கள் வழமையான பெரும்போக்கு தினசரிகளின் இடும் தலைப்புகள் அல்ல.
இந்திய வம்சாவளி மக்கள் பற்றி மட்டுமல்லாமல் இலங்கையின் அனைத்து தமிழ் மக்களுக்குமான பத்திரிகையாக சுதந்திரன் பத்திரிகையை நடத்திக் காட்டினார். அவரின் மறைவுக்குப் பின்னர் இந்திய வம்சாவளியினரின் பிரச்சினைகளை வெளிக்கொணரக்கூடிய ஒரே பத்திரிகையாகவும் சுதந்திரன் இருந்தது என்றால் அது மிகையாகாது.
சுதந்திரன் – கட்சிப் பின்னணி
1948 குடியுரிமைப் பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு போன்றவற்றின் காரணமாக இந்தியப் பிரதிநிதித்துவம் பாரிய அளவில் குறைக்கப்பட்டபோது பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியே இந்திய வம்சாவளியினரின் தீவிரக் குரலாக இருந்து வந்தது.
ஜி.ஜி.பொன்னம்பலம் இந்தியத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தின் காரணமாக தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தார். சுதந்திரன் பத்திரிகையும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால். அது அப்படியே தமிழரசுக் கட்சியின் பத்திரிகையாக ஆனது. அதில் இந்திய மக்களின் நலன்கள் தொடர்ச்சியாகவும், தீவிரமாகவும் எதிரொலித்தன.
ஆனால் சுதந்திரன் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதில் எங்கேயும் எந்தவொரு அரசியல் கட்சியினதும் ஒரு பத்திரிகையாக ‘சுதந்திரன்’ குறிப்பிடப்பட்டதில்லை. கொழும்பில் இருந்து 1983 இல் அது யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லப்படபோதும், அதன் பின்னரும் இடைவெளிவிட்டு இப்போது மீண்டும் புதிய சுதந்திரன் என்கிற பெயரில் வெளியிடபட்டுவருகிறபோதும் அது தமிழரசுக் கட்சியின் பத்திரிகையாக எங்கும் குறிப்புகளைக் காணக் கிடைக்காது. ஆனால் 2018 ஆம் ஆண்டு அதன் மீள்தொடக்க விழாவில் உரையாற்றிய அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ விபரங்களை அறிய விரும்பினால் அதற்குத தான் இந்தப் பத்திரிகை என்றார். ஆனால் அப்போதும் அப்பத்திரிகையில் அது தமிழரசுக் கட்சியின் பத்திரிகை என்கிற எந்தக் குறிப்புகளும் காணக் கிடைக்காது.
நடேசய்யரின் மறைவு செல்வநாயகம், ஜி.ஜிபொன்னம்பலம் ஆகிய தலைவர்களுக்கு பெரிய இழப்பையும், ஏமாற்றத்தையும் தந்த நிகழ்வு. அடுத்த ஆண்டே பிரஜாவுரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக குரல்கொடுத்த முக்கிய தலைவராக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இருந்தார்.
அப்போது நடேசய்யரும் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு பாராளுமன்றத்தில் ஒரு அரசியல் தோழனாக மட்டுமன்றி அதற்கெதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஊடகப்பீரங்கியாகவும் நடேசய்யர் இருந்திருப்பார்.
சுதந்திரன் எங்கே?
சுதந்திரன் பத்திரிகையின் ஆரம்ப இதழ்கள் இலங்கையின் பிரதான ஆவணக் காப்பகமான சுவடிகூடத் திணைக்களத்தில் இன்று இல்லை. 1947 ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து தான் அங்கிருந்து பெற முடிகிறது. அதற்கு முந்திய நான்கு மாத பத்திரிகைகள் அங்கே இல்லை என்கிறார்கள். 1947 யூன் தொடக்கம் செப்டம்பர் வரையான சுதந்திரன் இதழ்கள் மாத்திரம் இல்லாமல் போனதன் மர்மத்தை அறியமுடியவில்லை.
1998 இல் சாரல் நாடன் வெளியிட்ட “பத்திரிகையாளர் நடேசய்யர்” என்கிற நூலில் சில மேற்கோள்களைக் காட்டுகிறார். அவர் ஆரம்ப ‘சுதந்திரன்’ இதழ்களை சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து பார்வையிட்டதாக அதில் குறிப்பிடுகிறார். அப்படியாயின் இப்போது மட்டும் இல்லை என்றால் அவற்றுக்கு நேர்ந்த கதி என்ன?
சுதந்திரன் பத்திரிகையின் தோற்றத்திலும் அதனை சவால் மிகுந்த இக்கட்டான சூழலில் வளர்த்தெடுத்ததிலும் நடேசய்யரின் வகிபாகம் பெரியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழர் போராட்ட வரலாற்று பதிவுகளில் நடேசய்யரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது.
நடேசய்யர் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை வாழவில்லை. அவர் அதற்கு முன்னர் மறைந்துவிட்டார். ஆனால் அவர் ஒரு சுதந்திரத்துக்கான சுதந்திரனாக வாழ்ந்து மடிந்தார்.
சுதந்திரனை அறிந்தவர்கள் நடேசய்யரை மறவாதிருப்பார்களாக.
திரு. நடேசய்யரின் மறைவு குறித்து 1947 நவம்பர் 8 - சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் அவரின் மறைவு பற்றி எழுதப்பட்டிருந்த குறிப்பு இதுஇலங்கையில் எட்டு லடசம் இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எட்டில் ஏழு பங்கினர் தோட்டத் தொழிலாளர்கள் இத்தோட்டத் தொழிலாளர்களுக்குப் போதிய படிப்பில்லை. போதிய வருமானம் கிடையாது. அதுவுமல்லாமல் திரு. நடேசய்யர் இலங்கைக்கு வந்த காலத்தில், தக்க காரணம் இல்லாமல் ஒரு தோட்டத் தொழிலாளி வேலைக்குப் போகாமல் இருந்தால் அது கிரிமினல் குற்றம். அதற்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை கூட உண்டு தோட்டம் விட்டுத் தப்பி ஓடினால் தண்டனை. தப்பி ஓடிய தொழிலாளிக்குச் சோறுபோட்டு வீட்டில் வைத்திருந்தால் அதுவும் குற்றம் அதற்கும் தணடனை, முதலாளிமார்கள் இந்தியத் தொழிலாளர்களை ஆடுமாடுகள் போல துண்டு மூலம் விற்று வாங்கி அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கினார்கள். இது ஒரு நூற்றாண்டு வரையில நடந்துவந்த சம்பவமாகும் திரு. நடேசய்யர் இதை நிவர்த்திக்கும் பணியில் ஈடுபட்டார். தோட்டத் தொழிலாளியும் மனிதர்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அவர்களிடம் அடிமைப்புத்தி அகல வேண்டும் என்று பிரசாரஞ் செய்தார். அரசாங்கத்துடனும் வாதாடினார். இதன்பயனாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் செய்யப்பட்டன. இத்தொழிலாளர் சார்பாக அவர் செய்துள்ள சேவைபை மதிப்பிடுவது எளிதல்ல. அவர்கள் இவரை ''காந்தி' நடேசய்யர் என்று அழைப்பார்கள். அப்பெயர் ஒன்றே இவரின் சேவா பக்குவத்தை வெளிப்படுத்துகின்றது.
கரந்தி நடேசய்யரின் பொது ஜனசேவை அத்துடன் நின்றுவிடவில்லை அரசியலிலும் தமிழ் மக்களுக்காக உழைத்திருக்கிறார். சட்டசபை, அரசாங்க சபையாகியவற்றிலும் இருந்து தொண்டுகள் ஆற்றியிருக்கிறார். சமீபத்தில் சோல்பரித்திட்டப்படி வழக்கப்பட்ட வெள்ளையறிக்கையானது அரசாங்க சபையில் விவாதிக்கப்பட்டபோது, தமிழன் ஆண்மை உடையவன், அடிமையாக இருக்க விரும்பான் என்பதை வெளிப்படையாகக் காட்டியவர் இலங்கைக் காந்திதான். தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் யாவரும் தேனீர் விருந்தருந்தி திரு. சேனநாயக்காவுக்கு அடிமையானார்கள். ஒரு இந்திய நியமன அங்கத்தவர் சபைக் கூட்டம் நடைபெறும்வரைக்கும் மதில் மேல் பூனையாக இருந்தார். அவ்வங்கத்தவரையும் வெள்ளையறிக்கைக்கு விரோதமாக தன் கொள்கையை நிலைநாட்டுவண்ணம் வாக்களிப்பித்தவர் திரு. நடேசய்யரே!
இலங்கையில் முதன்முதலாக தினசரி தமிழ்ப்பத்திரிகை ஒன்றை வெளியிட்டவரும் இவரே. இன்று இலக்கையிலும், இந்தியாவிலும் அவரிடம் பத்திரிகைத்தொழில் பயின்றவர்கள் அநேகருண்டு. இலங்கையிலுள்ள தமிழருக்கென ஒரு பத்திரிகை இல்லாததையிட்டு வருந்தி எங்கள் "சுதந்திரன்' பத்திரிகையை தமிழ்ப் பெரியார்களைக் கொண்டு வெளிவரச் செய்த முக்கியகர்தாவு திரு. நடைசய்யர் தான்.
காந்தி நடேசய்யர் இலங்கைத் தமிழரின் ஜீவநாதியாகவுள்ளவர். அவர் இதயத்தில் தமிழ்குருதி துள்ளிக் குதித்தோடியது. ஆண்மமையிலும், அறிவிலும் முதிர்ந்த பெரியார். விழிப்புள்ள வர். விடாமுயற்சி மிகுந்தவர். சேவா பக்குவம் பெற்றவர் ஏழை எளியோரிடம் பரிவும், பாசமும் கொண்டவர். தோட்டத் தொழிலாளர் நலனையே கனவிலும் கருதி உழைத்த பெரியார். தமிழன் என்றால் ஆண்மையுடன் முன்னேறு' என்பதை இலட்சியமாகக் கொண்டவர். இத்தகைய பெரியார் நேற்று அதிகாலையில் இவ்வுலக வாழ்வை நீத்து அவ்வுலகவாழ்வை எய்தியுள்ளார். இலங்கையிலுள்ள எல்லாத் தமிழ் மக்களுக்கும் ஓர் நெருக்கடியான காலத்தில் அவரை இழக்க நேரிட்டது துர்லபம். அளப்பரும் நஷ்டமுமாகும் மண்ணிற் பிறந்தவர் இறப்பது திண்ணம்; நாமென் செய்வது அவரது பிரிவாற்றால் வருந்தும் மனைவியாருக்கும், சுற்றமித்திரருக்கும் எமது அநுதாபம் உரித்தாகுக. அவரது ஆன்மா சாந்தியடைக.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...